Photo, AP Photo
உலக நாடுகளின் மாந்தர்கள் இனம்,மதம், மொழி, சாதி பால், நிறம் மற்றும் அரசியல் நிலைப்பாடு என்ற வேறுபாடின்றி மனித உரிமைகளை சமமாக அனுபவிப்பதை உறுதிசெய்யும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை சாசனத்தை 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி பிரகடனப்படுத்தியது. ஆனால், இனம், மதம், மொழி, சாதி, பால் மற்றும் நிறம் காரணமாக உலகின் பல நாடுகளில் சிறுபான்மை இனங்களும், இனக் குழுக்களும், பாரபட்சத்திற்கும், பாகுபாடிற்கும், அந்நியமாக்களுக்கும் தொடர்ந்து முகம் கொடுத்து வந்தனர். தொடரும் பாரபட்சம், ஒதுக்கல் என்பவற்றினை நீக்க அழுத்தம் கொடுக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை 1965 இல் அனைத்துலக இனப்பாகுபாட்டை ஒழிக்கும் சமவாயத்தைப் (International Convention of the Elimination of All Forms of Racial Discrimination) பிரகடனப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து 1966 இல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் பற்றிய சமவாயத்தை (International Convention on Economic, Social and Cultural Rights) பிரகடனப்படுத்தியது. அதனையடுத்து 1966ஆம் ஆண்டு டிசம்பரில் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் (International Convention on Civil and Political Rights) சமவாயத்தை பிரகடனப்படுத்தியது.
இவ்வனைத்து சமவாயங்களிலும் இலங்கை கைச்சாத்திட்ட போதிலும் 1948ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரசாவுரிமை சட்டத்தின் மூலம் நாடற்றவராக்கப்பட்ட மலையக மக்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் ஆட்சி பீடமேறிய அரசாங்கங்கள் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக 1964ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் படி 325,000 பேருக்கு இலங்கை பிரசாவுரிமை வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்தது. அதுவும் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்த ஏழு பேர் இந்தியா சென்றவுடனேயே இலங்கை குடியுரிமைக்கு விண்ணப்பித்த நான்கு பேருக்கு குடியுரிமை வழங்கியது. இப்பின்புலத்தில் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தினால் பிரசாவுரிமைப் பெற்றோர் 1997ஆம் ஆண்டு நடைப்பெற்ற பொதுத்தேர்தலின் போது நுவரெலியா தேர்தல் தொகுதியின் சார்பாக ஒருவரைத் தெரிவு செய்யும் வாய்ப்பினைப் பெற்றதுடன் 1947ஆம் ஆண்டின் பின்னர் முதன் முதலாக காலஞ் சென்ற திரு. சௌம்ய மூர்த்தி தொண்டமானை வெற்றிப் பெறச் செய்து நடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர். இவரது நாடாளுமன்றப் பிரசன்னத்துடன் மலையக மக்களின் நாடற்ற மற்றும் சமூக பொருளாதார, அரசியல் பிரச்சினைகள் நாடாளுமன்றத்தில் 1952ஆம் ஆண்டின் பின் ஒலிக்கத் தொடங்கியது.
1978 ஆண்டு முதல் ஜே.ஆர். அரசாங்கத்தில் அமைச்சராகிய திரு. சௌம்ய மூர்த்தி தொண்டமான் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் படி இந்திய குடியுரிமைப் பெற்ற ஏழு பேர் இந்தியா சென்றவுடனேயே இலங்கை குடியுரிமைக்கு விண்ணப்பத்தவர்களில் நால்வருக்கு குடியுரிமை வழங்கப்படும் என்ற பொறிமுறையை நிறுத்தும் படி ஜே.ஆர்.ரிடம் கோரினார். திரு. சௌம்ய மூர்த்தி தொண்டமானின் கோரிக்கையை ஏற்ற ஜே.ஆர். இன் அரசாங்கம் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்த ஏழு பேர் இந்தியா செல்லும் வரை காத்திருக்காமல் இலங்கை குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு குடியுரிமை வழங்க ஆரம்பித்தது. அதேபோல் சிறிமா பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்து தோட்டம் வழங்கும் கொடுப்பனவுகளைப் பெற்ற பின் வசதியின்மையின்மைக் காரணமாக இந்தியாவிற்கு செல்லாது இருந்தவர்களை பச்சை வேனை அனுப்பி சிறைப் பிடித்து கொம்பனி தெரு முகாமில் அடைத்து பின்னர் இந்தியாவிற்கு அனுப்பும் செயல்முறையை நிறுத்தும் படி கோரினார். ஜே.ஆர். இன் அரசாங்கம் அக்கோரிக்கையையேற்று அச்செயற்பாட்டையும் நிறுத்தியது.
ஆயினும், ஐ.நா. சபையின் மேற்குறிப்பிட்ட சமவாயங்களில் கைப்யொப்பமிட்ட இலங்கை அரசாங்கங்கள் 2003ஆம் ஆண்டு வரை மலையக மக்களில் ஒரு பிரிவினரை நாடற்றவராகவே வைத்திருந்தது. இன்னுமொரு வேடிக்கை என்னவெனில் இச்சமவாயங்களில் கையொப்பமிட்ட இலங்கை அரசாங்கம் 1972ஆம் ஆண்டு சோசலிச குடியரசு அரசியலமைப்பினை அறிமுகப்படுத்துகையில் அடிப்படை மனித உரிமைக்கு முக்கியத்துவம் அளித்து மனித உரிமைகள் எனும் உறுப்புரையை அரசியலமைப்பில் அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து 1978ஆம் ஆண்டு ஜனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பினை அறிமுகப்படுத்திய ஜே.ஆரின் அரசாங்கம் அரசியலமைப்பின் மூன்றாவது அத்தியாயமாக மனித உரிமையை உட்சேர்த்தது மட்டுமல்லாது; (உறுப்புரை 12. 2. இன் கீழ்) “இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியற் கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக அல்லது அத்தகைய காரணங்களுள் எந்த ஒன்று காரணமாகவும் எந்தப் பிரசையும் ஓரங்கட்டுதல் ஆகாது” குறிப்பிட்டுள்ளது.
ஆரசியலமைப்பின் எந்தவொரு பிரசையும் பாரபட்சத்திற்கும் ஒரங்கட்டலுக்கும் ஆளாகக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ள போதிலும் ஜே.ஆர். இன் அரசாங்கமும் அதன் பின் ஆட்சி பீடமேறிய அரசாங்கங்களும் பத்து லட்சம் மலையக மக்களின் பிரசாவுரிமைப் பிரச்சினைக்கு தீர்வுகாண அக்கறைக் காட்டவில்லை. 1985ஆம் ஆண்டு வட கிழக்கு மக்களின் அதிகாரப் பகிர்வுப் பிரச்சினையைத் தீர்க்க இந்திய அனுசரணையுடன் நடந்த திம்பு பேச்சுவார்த்தையின் போது மலையக மக்களுக்கு பிரசாவுரிமை வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை வடக்கின் போராளி அமைப்புகளும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் முன்வைத்தமையின் விளைவாக இலங்கை அரசாங்கம் இப்பிரச்சினையின் பால் கவனம் செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டது. இதேவேளை 1986ஆம் ஆண்டு, திரு. சௌமிய மூர்த்தி தொண்டமான் இந்தியாவிற்கு விண்ணப்பிக்காத அனைவருக்கும் பிரசாரிவுரிமை வழங்குக என “சாமி கும்பிடு” எனும் போராட்டத்தை முன்னெடுத்தமையினால் இலங்கை குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதை முன்னெடுத்தது. சத்தியக் கடதாசி ஒன்றினை வழங்குவதன் மூலம் பிராசவுரிமையைப் பெறும் வாய்ப்பினைப் பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இப்பின் புலத்தில் 1994ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டியப் பின் நடைபெற்ற பொதுதேர்தலில் அவர் பிரதிநிதித்துவம் செய்த சிறிலங்கா சுதந்திர கட்சி ஆட்சியமைக்க ஒரு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் தேவைப்பட்டதுடன் அத்தேர்தலில் மலையக மக்கள் முன்னணி சார்பாக வெற்றி பெற்ற பெ.சந்திரசேகரம் அரசாங்கத்துடன் இணையலானார். அவருக்கு சந்திரிக்காவின் அரசாங்கம் மலையக மக்களின் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தோட்ட வீடமைப்பு பிரதி அமைச்சு என்ற புதிய துணை அமைச்சினை உருவாக்கி வழங்கியது. ஆனால், பெருமளவு நிதி, வீடுகள் கட்ட ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில், மலையக மக்களின் சமூக பொருளாதார அபிவிருத்திக்காக தனியான அமைச்சு ஒன்று தேவையெனும் கருத்து வலுப்பெற்றதுடன் அதனையேற்ற சந்திரிக்கா பண்டராநாயக்க, தோட்ட உட்கட்ட அமைச்சு எனும் புதிய அமைச்சினை உருவாக்கி அதனை திரு. சௌம்ய மூர்த்தி தொண்டமானின் கீழிருந்த கால்நடை அமைச்சுடன் இணைத்து வழங்கலானார். இது மலையக மக்கள் பெற்ற பாரிய வெற்றியாக கருதப்பட்டது. இவ்வமைச்சின் மதியுரைக் குழுவில் சிவில் சமூகம் சார்பாக கட்டுரையாளரும் அங்கம் வகித்திருந்ததுடன் மலையக அபிவிருத்திக்கென பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வமைச்சின் மூலம் மலையக மக்களின் அனைத்து அடிப்படை பிரச்சினைகளும் விரைவில் தீர்க்கப்பட்டு சமூக, பொருளாதார ரீதியில் நாட்டின் ஏனைய மக்களுடன் சமநடை போட வாய்ப்பு ஏற்படும் எனக் கருதப்பட்டது. ஆனால், முன்வைக்கப்பட்ட திட்டங்களுக்காக போதிய நிதி ஒதுக்கீடு சந்திரிக்காவின் அரசாங்கம் முடிவுறும் வரையில் வழங்கவில்லை.
மலையக மக்களின் சமூக ,பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கென திருமதி சந்திரிக்காவினால் உருவாக்கப்பட்ட உட்கட்டமைச்சு 2010 ஆண்டு வரை இயங்கி வந்ததுடன் அமைச்சிற்கான போதிய நிதி ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. ஒவ்வொரு வருடாந்த பட்ஜெட்டின் போதும் (பாதீடு) குறைந்தளவு நிதி ஒதுக்கீடே வழங்கப்பட்டது. இப்பிரச்சினை ஒரு புறமிருக்க 2010ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் தேசிய அபிவிருத்தி அமைச்சினைப் பொறுப்பேற்ற அமைச்சர் பசில் ராஜபக்ச தோட்ட உட்கட்டமைச்சு என்ற அமைச்சினை இல்லாதொழித்து தோட்ட உட்கட்டமைப்பிற்கான செயற்பாடுகளை அவரது அமைச்சின் கீழேயே மேற்கொண்டு வந்தார். அச்சந்தர்ப்பத்தில் கிடைத்ததும் இல்லாமற்போய்விட்டதே என்ற குரல் சிவில் சமூகம் மத்தியிலிருந்து எழுந்தது. இந்நிலையில், 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துடன் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான நல்ல அரசாங்கத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன், பழநி திகாம்பரம் மற்றும் இராதகிருஸ்ணன் முதலியோரின் வேண்டுகோளுக்கமைய புதிய கிராம அபிவிருத்தி மற்றும் உட்கட்ட அபிவிருத்தி அமைச்சு உருவாக்கப்பட்டு காணி உரித்துடனான வீடு வழங்கல் மற்றும் உட்கட்டமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், இவ்வமைச்சிற்கும் குறைந்தபட்ச நிதியே ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோட்டாபய மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்திலும் போதிய அளவு நிதி தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிற்கு வழங்கப்படவில்லை. வெறுமனே பெயரளவில் ஒரு அமைச்சினை வழங்கி சிறு தொகை நிதியையே ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் வழங்கி வந்துள்ளன.
இந்நிலையில், தற்போதைய அரசாங்கமும் மலையக மக்களின் அடிப்படை பிரச்சினையான வீடு உட்பட ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. பெருந்தோட்டத் துறை மற்றும் சமூக உட்கட்ட வசதிகள் அமைச்சின் பிரதான மூன்று குறிக்கோள்களாவன.
- தோட்டத்துறையின் ஒட்டுமொத்த உற்பத்தியை விருத்தி செய்தல் (To improve overall productivity of the plantation sector)
- தோட்ட உற்பத்திகளின் மூலம் ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல் (o increase export revenue from plantation products)
- பெருந்தோட்ட சமூகம் உட்பட பெறுமதி சங்கலியில் உள்ள அனைத்து பங்காளர்களின் சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்தல் (Uplifting the soci-.economic conditions of all stateholders in the value chain, including plantation community)
இதன்படி இன்றைய அரசாங்கம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் 200 ரூபா சம்பளக் கொடுப்பனவிற்காக இவ்வருட பாதீட்டில் (பட்ஜட்டில்) 5,000 மில்லியன் ரூபாக்களை ஒதுக்கியுள்ளதுடன் உடைந்த நிலையில் மோசமாகக் காணப்படும் லயன் வீடுகளை திருத்துவதற்காக 82.5 மில்லியன் ரூபாக்களை ஒதுக்கியுள்ளது. அத்துடன், கல்வி மற்றும் சமூக உட்கட்டமைப்பிற்காக இந்தியா வழங்கியுள்ள 508 மில்லியன் ரூபாக்களுடன் அரசாங்கம் 155 மில்லியன் ரூபாக்களை ஒதுக்கியுள்ளது.
முன்னைய அரசாங்கங்கள் பின்பற்றிய அதே நடைமுறையையே இன்றைய அரசாங்கமும் பின்பற்றியுள்ளது. மலையக மக்களின் அபிவிருத்திக்கான தனியான அமைச்சு என்பது மலையக மக்களது அபிவிருத்தியை மேம்படுத்துவதற்குப் பதிலாக அவர்களது வசதியற்ற வாழ் நிலையை அதேநிலையில் வைத்திருக்கவே வாய்ப்பேற்படுத்தியுள்ளது. மறுபுறம் தனியான அமைச்சு ஒன்றை உருவாக்கியமையினால் இந்தளவு சிறு அபிவிருத்தியையேனும் பெற்றிருக்கின்றோம் என ஒரு சிலர் வாதிடலாம். ஆனால், இந்தளவு குறைவான நிதியைத் தொடர்ந்து வழங்குவார்களாயின் மலையக மக்கள் ஒரு வசதியான வாழ்கையை அனுபவிக்க இன்னும் எத்தனைத் தலைமுறையை கடக்க வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது.
மலையகத்திற்கென தனியான அமைச்சு என்ற ஒன்றை உருவாக்கி குறைந்த நிதி வழங்குவதற்கு பதிலாக நாட்டில் உருவாக்கப்படும் அனைத்து அமைச்சுகளிலும் மலையக மக்களின் விகிதாசாரத்திற்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்தால் மலையக மக்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளும் ஓரளவு பூர்த்தி செய்யவதற்கு வித்திடுமா என்ற கேள்வி எழுகின்றது. இன்றைய அரசாங்கம் கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமுக வலுப்படுத்தல் எனும் அமைச்சினை உருவாக்கியுள்ளது. இவ்வமைச்சிற்கு 837 பில்லியன் ரூபாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த பட்ஜெட்டில் 9.3% ஆகும். இதேபோல் மகளிர் சிறுவர் விவாகார அமைச்சு, இளைஞர் விவகார அமைச்சு உட்பட அனைத்து அமைச்சுகளுக்கும் போதிய நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அமைச்சுகளின் வேலைத்திட்டங்களில் மலையக மக்கள் உள்ளடக்கப்படவில்லை.
இவற்றிற்கு மேலாக மலையக மக்களுக்கென ஒரு அமைச்சு இருப்பதனால் அரச அதிகாரிகள் அமைச்சுகளின் கீழ் வரும் வேலைத்திட்டங்களை மலையக குடியிறுப்பு பகுதிகளுக்கு விரிவுபடுத்தவதில்லை. எனவே, மலையகத்திற்கென தனியான அமைச்சு என்பது எமக்கு பாரிய வாய்ப்பினைப் பெற்றுத்தராது என்பது வரலாற்று ரீதியாக நிரூபனமாகியுள்ளது. மலையகத்திற்கென தனியான அமைச்சு என்ற பெயரில் அனைத்து அரசாங்கங்களும் இம்மக்களை ஏமாற்றியுள்ளதுடன் ஏமாற்றியும் வருகின்றன. மலையக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றுவதற்கான உபகரணமே தோட்ட உட்கட்டமைச்சு. அனைத்துத் துறையிலும் பின்தங்கியுள்ள மலையக மக்களுக்கு தனியான அமைச்சு என்பது ஒரு கண்துடைப்பு செயல் என்பது வெள்ளிடைமலை. எனவே, மலையக மக்களுக்குத் தனியான அமைச்சு என்ற மாயையிலிருந்து வெளிவரவேண்டியுள்ளது. மாறாக அனைத்து அமைச்சுகளிலும் மலையக மக்களுக்கான வேலைத்திட்டங்களை உள்ளீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டியது காலத்தின் தேவையாக எழுந்துள்ளது. ஆகையால், சிவில் அமைப்புகளும் தொழிற்சங்க அரசியற் கட்சிகளும் தனியான அமைச்சு என்ற மாயையிலிருந்து விடுபட்டு அனைத்து அமைச்சுகளிலும் மலையக மக்களுக்கு ஒதுக்கீடு எனும் கோரிக்கையை முன்வைக்க வேண்டும். இல்லையெனில் மலையக மக்கள் ஏனைய மக்களுடன் சமநடை போட சில நூற்றாண்டுகள் செல்லும்.
பெ.முத்துலிங்கம்