Photo, Tamil Guardian
அரசியல் கட்சிகளின் கூட்டணிகள் உருவாகுவதற்கு அரசியல் நிர்ப்பந்தங்களே காரணம். இலங்கை தமிழரசு கட்சிக்கு அவ்வாறு எத்தகைய நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டதோ தெரியவில்லை. மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதற்கு அதன் தலைவர்கள் கடந்த வாரம் விருப்பத்தை வெளிப்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது.
வவுனியா நகரில் நவம்பர் 5ஆம் திகதி தமிழரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்கள் மத்தியில் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் சகிதம் உரையாற்றிய பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு தங்களது கட்சியின் நிலைப்பாட்டை தெரியப்படுத்தியிருப்பதாகவும் அவர்கள் அதற்கு இணங்கி வந்தால் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படமுடியும் என்றும் கூறினார்.
அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டம் மீதான விவாதத்தில் தமிழரசு கட்சியின் நாடாளுமன்றக்குழு எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது குறித்தும் வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் மத்திய குழு கூட்டத்தில் பிரதானமாக ஆராயப்பட்டது என்று கூறிய சுமந்திரன் முதன்மையான தமிழ் அரசியல் கட்சி என்ற வகையில் தமிழரசு கட்சி மற்றைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு அழைப்பு விடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளான தமீழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) ஆகியவையும் வேறு சில குழுக்களுமே ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியாக மூன்று வருடங்களுக்கும் அதிகமான காலமாக இயங்கிவருகின்றன. அவற்றின் தலைவர்களை நோக்கியே சுமந்திரன் இந்த அழைப்பை விடுத்திருக்கிறார்.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுடன் தலைவர் சிவஞானமும் தானும் ஏற்கெனவே கலந்துரையாடியிருப்பதாகவும் தாங்கள் தெரிவித்த நிலைப்பாடுகளை அவர்கள் ஏற்றுக் கொண்டால் முன்னரைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறிய சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடனும் இது தொடர்பாக பேசலாமா என்று மத்திய குழுவில் ஆராயப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த அழைப்பை உடனடியாகவே வரவேற்ற ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் மீண்டும் இணைந்து செயற்படுவதற்கு தமிழரசு கட்சி முன்வைத்திருக்கும் முன்னிபந்தனைகள் எவை என்று தங்களுக்குத் தெரியவில்லை என்றும் இரு தரப்பினரும் இதுவரையில் உத்தியோகபூர்வமாக எந்தவிதமான பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என்றும் குறிப்பிட்டார். பேச்சுவார்த்தைக்கு முன்னதாக நிபந்தனைகளை விதிப்பது ஏற்புடைதல்ல என்றும் அவர் கூறினார்.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய அமைப்பாக இயங்கி வருகிறது. தனியான யாப்பையும் சின்னத்தையும் கொண்டிருக்கும் அந்தக் கூட்டணி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் இருக்கிறது. அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் ஏற்கெனவே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையில் அந்தக் கூட்டணி செயற்பட்டு வருகிறது.
ஆனால், அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் மாகாண சபைகள் முறைமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கொண்டிருக்கும் நிலைப்பாடு காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அசௌகரியத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. தமிழரசு கட்சியின் அழைப்பை பிரேமச்சந்திரன் வரவேற்றிருப்பது இரு தரப்பினருக்கும் இடையிலான புரிந்துணர்வை மேலும் கேள்விக்கு உள்ளாக்குகிறது.
அதேவேளை, இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைக்கு தமிழரசு கட்சி முன்னிபந்தனைகளை விதிப்பது ஏற்புடையது அல்ல என்று கூறிய பிரேமச்சந்திரன் எதிர்கால தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது குறித்து தெரிவித்த கருத்துக்கள் உண்மையில் முன்னிபந்தனைகள் போன்றே அமைந்திருக்கின்றன. முன்னைய கூட்டமைப்பில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் அந்தக் கருத்துக்களை அவர் முன்வைத்திருக்கிறார் என்பது வெளிப்படையானது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகவோ அல்லது எந்தவிதமான யாப்பையும் கொண்டதாகவோ இருக்கவில்லை. மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்க வேண்டுமானால் அதற்கென்று தனியான யாப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதுடன் அங்கத்துவ கட்சிகளின் தனித்துவத்தைப் பேணக்கூடியதாக இருக்க வேண்டும். தங்களை முதன்மையான அல்லது தலைமைத்துவ கட்சி என்று தமிழரசு கட்சி அழைத்துக்கொள்வதாக இருந்தாலும் கூட, சகல அங்கத்துவக் கட்சிகளையும் அரவணைத்து மெய்யாகவே புரிந்துணர்வுடன் கூட்டாகச் செயற்படுகின்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரேமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்கள் மகாநாட்டில் தெரிவித்தார்.
காலஞ்சென்ற மூத்த தமிழ்த் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தலைமையில் 2001ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அமைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போர்க் காலத்தில் சுயாதீனமான முடிவுகளை எடுத்துச் செயற்பட முடியவில்லை. அதற்கான காரணம் புரிந்து கொள்ளக்கூடியதே. விடுதலை புலிகள் இயக்கமே இலங்கை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று நாடாளுமன்றத்திலும் வெளியுலகிலும் குரல் கொடுப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு இயக்கம் போன்றே கூட்டமைப்பு செயற்பட்டது.
உள்நாட்டுப்போரின் முடிவுக்குப் பிறகு தமிழ் மக்கள் மத்தியில் கட்டுறுதியான அரசியல் சமுதாயம் ஒன்று இல்லாத சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களின் பலம் பொருந்திய ஒரு ஜனநாயக அரசியல் இயக்கமாக கட்டியெழுப்புவதற்கு சம்பந்தன் உட்பட தமிழ் அரசியல்வாதிகள் தவறியது குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
கஜேந்திரகுமாரின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2010 ஏப்ரல் பொதுத்தேர்தலின்போது கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது. பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். 2015 ஆகஸ்ட் பொதுத் தேர்தலின்போது கூட்டமைப்பில் போட்டியிட்ட போதிலும், 2017ஆம் ஆண்டு அதிலிருந்து வெளியேறியது. இரு கட்சிகளும் வெளியேற்றத்துக்கான தங்கள் தரப்பு காரணங்களை முன்வைத்தன என்ற போதிலும், தேர்தல் அரசியலும் அதற்கு ஒருகாரணி.
கூட்டமைப்பில் இருந்து புளொட்டும் ரெலோவும் 2022ஆம் ஆண்டு வெளியேறின. உள்ளூராட்சி தேர்தல்கள் கலப்பு தேர்தல் முறையில் நடத்தப்படுவதன் காரணமாக கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டால் கணிசமான ஆசனங்களைக் கைப்பற்றலாம் என்றும் தேர்தலுக்கு பிறகு உள்ளூராட்சி சபைகளின் நிருவாகங்களை கூட்டாக அமைக்க அது வசதியாக இருக்கும் என்றும் தமிழரசு கட்சி முன்வைத்த யோசனையை அவ்விரு கட்சிகளும் ஆட்சேபித்தன.
ஆனால், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் அரசாங்க காலத்தில் உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெறவில்லை. இறுதியாக தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே கடந்த மேமாதத்தில் அந்த தேர்தல்களை நடத்தியது. பல்வேறு அணிகளாகப் பிரிந்து நின்று போட்டியிட்ட தமிழ்க் கட்சிகள் உள்ளூராட்சி நிர்வாகங்களை அமைப்பதில் வடக்கிலும் கிழக்கிலும் எவ்வாறு நடந்துகொண்டன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. தற்போது அரசாங்கம் மாகாண சபை தேர்தல்களை அடுத்த வருடத்தில் நடத்துமா இல்லையா என்ற கேள்வி எழுந்திருப்பதற்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மீண்டும் செயற்படுவதற்கான விருப்பத்தை தமிழரசு கட்சி வெளிப்படுத்தியிருக்கிறது.
சகல தமிழ்க் கட்சிகளையும் இணைத்து செயற்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியிருக்கும் சுமந்திரன் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ்க் கட்சிகள் ஒரே நிலைப்பாட்டை முன்வைக்குமா என்ற கேள்வி எழுந்திருப்பதாக கூறியிருக்கிறார். கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்திடம் தமிழரசு கட்சி முன்வைத்த யோசனையை மற்றைய தமிழ்க் கட்சிகளுக்கு காண்பிக்கத் தீர்மானித்திருப்பதாகவும் அந்த யோசனைகள் தொடர்பில் அவர்கள் இணங்கிவந்தால் அதை பொதுநிலைப்பாடாக அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க முடியும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
சகல தமிழ்க் கட்சிகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவருவது நடைமுறையில் ஒருபோதும் சாத்தியமில்லை. ஆனால், பெரும்பான்மையான கட்சிகளை அரவணைத்து மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்குவதாக இருந்தாலும் கூட, கடந்த காலத்தில் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகளை தோற்றுவித்த காரணிகள் மீண்டும் தலைகாட்டாமல் இருப்பதை உறுதி செய்வது முக்கியமானதாகும்.
பிரேமச்சந்திரன் தெரிவித்த கருத்துக்கள் குறித்து தமிழரசு கட்சியின் தலைவர்களிடமிருந்து உடனடியாக பிரதிபலிப்பு எதுவும் வரவில்லை. அவர்களும் கடந்த காலத்தின் கூட்டமைப்பு அனுபவங்களை கருத்தில் எடுத்து மீண்டும் அநாவசியமான முரண்பாடுகள் தோன்றாமல் இருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டியது அவசியமாகும். மற்றைய தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை, தமிழரசு கட்சி மேலாண்மை செலுத்தும் மனோபாவத்துடன் நடந்துகொள்கிறது என்பதே பிரதானமான முறைப்பாடாக இருந்து வந்தது.
எது எவ்வாறிருந்தாலும், மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதில் தமிழரசு கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் ஆர்வமும் அதற்கு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தரப்பில் இருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கும் நேர்மறையான பிரதிபலிப்பும் நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டியவை. ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் காலந்தாழ்த்தாமல் விரைவில் தொடங்க வேண்டும்.
தமிழ்க் கட்சிகள் பல்வேறு அணிகளாகச் சிதறியிருப்பதால் தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதற்கான அணுகுமுறைகளைப் பொறுத்தவரை ஒருமித்த நிலைப்பாடுகளை எடுக்க முடியாமல் இருக்கிறது என்று தமிழ் மக்கள் நீண்ட நாட்களாகவே கவலையடைந்திருக்கிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் தேசிய மக்கள் சக்திக்கு அவர்கள் பெருமளவில் வாக்களித்ததற்கான காரணங்களில் அதுவும் ஒன்று.
போரின் முடிவுக்குப் பின்னரான காலப்பகுதியில் சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலைவரங்கள் வேண்டி நிற்பதற்கு ஏற்றமுறையில் விவேகமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான அரசியல் அணுகுமுறைகளை கடைப்பிடிப்பதில் தமிழ்க் கட்சிகள் அக்கறை காட்டவில்லை என்பது தமிழ் மக்களின் முக்கியமான மனக்குறை. வெறுமனே ஒன்றிணைந்து செயற்படுவது மாத்திரம் போதுமானதல்ல. நீண்டகால அரசியல் இலக்குகளைப் பற்றி மாத்திரம் பேசிக் கொண்டிருக்காமல் தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளை கையாளுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
சுமந்திரன் கூறிய தகவல்களின் பிரகாரம் நோக்கும்போது தமிழ்க் கட்சிகள் ஒருங்கிணைந்து தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு யோசனையை முன்வைப்பதே மீண்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக செயற்பட வேண்டும் என்ற அக்கறையின் அடிப்படை நோக்கம் என்று தெரிகிறது. சகல தமிழ்க் கட்சிகளுமே ஒற்றையாட்சியை எதிர்ப்பதுடன் சமஷ்டி முறையின் அடிப்படையிலான அரசியல் தீர்வு ஒன்றையே தங்களது கொள்கையாகவும் கொண்டிருக்கின்றன. அதனால் ஒருமித்த நிலைப்பாட்டை முன்வைப்பதில் எந்த பிரச்சினையும் எழுவதற்கில்லை.
அரசாங்கம் புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை முன்னெடுக்கும்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனையை தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து முன்வைப்பதற்கு புறம்பாக, அதற்கு முன்னரான காலப்பகுதியில் இடைக்காலத் தீர்வு தொடர்பில் குறிப்பாக, மாகாண சபைகள் முறைமையை பயன்படுத்துவதிலும் கருத்தொருமிப்புடன் செயற்பட வேண்டும்.
மாகாண சபைகள் முறையைப் பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்க்கட்சிகள் பலவற்றின் மத்தியில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் அக்கறை மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற தமிழரசு கட்சியின் விருப்பத்துக்கு வலுச்சேர்ப்பதாக அமையும். மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்தவும் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்கக்கூடிய வெகுஜன ஜனநாயக அரசியல் இயக்கத்தை உடனடியாக முன்னெடுப்பது பரந்தளவில் தமிழ்க் கட்சிகளும் குழுக்களும் ஓரணியில் வருவதற்கு பெரும் உத்வேகத்தைக் கொடுக்கும். நடைமுறைச் சாத்தியமான இடைக்காலத் தீர்வுகளைப் பற்றி அக்கறைப்படாத எதிர்மறையான அரசியல் கலாசாரத்துக்கு தமிழர் அரசியல் சமுதாயம் விடைகொடுக்க வேண்டும்.
வீரகத்தி தனபாலசிங்கம்