போரின்போது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு இலங்கை அரசை பொறுப்புக்கூற வைக்கும் விவகாரம் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் முடங்கிக் கிடக்கும் வரை தமிழர்களுக்கு ஒருபோதுமே நீதி கிடைக்காது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருக்கிறார்.
திருகோணமலை நகரில் 2006 முற்பகுதியில் படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களுக்காக நீதி கோரிப் போராடிய (அந்த மாணவர்களில் ஒருவரின் தந்தையான) வைத்திய கலாநிதி மனோகரன் அண்மையில் லண்டனில் மரணமடைந்தார்.
அவருக்கான அஞ்சலி நிகழ்வு ஒன்று ‘ கானல் நீதி ‘ என்ற தொனிப்பொருளில் யாழ். நகர் தந்தை செல்வா கலையரங்கில் கடந்த வாரம் ‘மக்கள் செயல்’ என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிபோதே பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தமதுரையில் கூறியதாவது –
வைத்திய கலாநிதி மனோகரன் அவர்களின் நீதிக்கான போராட்டத்தை மதித்து அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்த ‘மக்கள் செயல்’ அமைப்புக்கு முதலில் எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். மனோகரன் அவரது மகனோடு சேர்த்து திட்டமிட்டுக்கொலை செய்ப்பட்ட ஐந்து மாணவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற தாகத்துடன் லண்டனில் இருந்து பல தடவைகள் தொடர்பு கொண்டார். ஆனால், என்னுடன் பேசத் தொடங்கி ஒரு சில நிமிடங்களுக்குள் அவர் அழத்தொடங்கிவிடுவார். தொடர்ந்து பேசமுடியாமல் தொலைபேசியை வைத்துவிடுவார்.
மனோகரனின் வேண்டுகோளின் பிரகாரம் சர்வதேச மன்னிப்புச் சபையின் ஏற்பாட்டில் ஜெனீவாவில் அவருடன் ஒரு நாள் மூன்று மணித்தியாலங்கள் நேரடியாகப் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த சந்திப்பிலும் கூட அவர் அரைமணி நேரம் அழுதார். அதற்கு மேலும் அழமுடியாத நிலை ஏற்பட்ட பிறகுதான் ஏதோ ஒரு வகையில் நாங்கள் நீதி சம்பந்தமாகப் பேசக்கூடியதாக இருந்தது. மனோகரனின் மகனினதும் மற்றைய நான்கு மாணவர்களினதும் மரணங்கள் வீண்போகாத வகையில் அவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கு தனிப்பட்ட முறையில் நானும் எங்களுடைய அமைப்பும் விட்டுக் கொடுக்காமல் பாடுபடுவோம் என்ற உறுதிமொழியை அந்தச் சந்தர்ப்பத்தில் வழங்கினேன். அதை மாத்திரமே அந்த கட்டத்தில் என்னால் செய்யக்கூடியதாக இருந்தது.
நீதியை அடைவதற்கான அணுகுமுறைகளைப் பற்றி மனோகரனுடன் பேசியபோது அது தொடர்பிலான எமது பார்வையைப் பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. எமது இனம் நீதியைப் பெறுவதற்காக நாம் பயணம் செய்ய வேண்டிய பாதை, கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் தொடர்பாக இந்த நிகழ்வில் நான் பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.
எனக்கு முன்னதாக உரையாற்றிய பலர் இலங்கையில் தமிழர்களுக்கு இடம்பெற்றது இன அழிப்பு என்பதை பல தடவைகள் குறிப்பிட்டார்கள். அது முற்றிலும் உண்மை. இந்தக் கருத்தை 2009 மே 18ஆம் திகதிக்கு பிற்பாடு தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்ற ஒரு நபராக என்னையே நான் பார்க்கிறேன். அந்த நேரத்தில் நான் சார்ந்திருந்த அரசியல் அணியான தமிழ் தேசிய கூட்டமைப்பு எனது கருத்துக்களை ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து 2010ஆம் ஆண்டில் நாம் வெளியேறினோம். அதற்குப் பின்னரும் தொடர்ச்சியாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு மேடையிலும் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு ஏற்பட்டது இன அழிப்பு என்பதை ஆணித்தரமாக நாம் கூறிவந்திருக்கிறோம். தமிழ் அரசியல் தலைவர்கள் அல்லது தமிழ்க் கட்சிகள் தமிழ் இனத்துக்கு நடந்தது வெறுமனே போர்க் குற்றமும் மனித குலத்துக்கு எதிரான குற்றமுமே என்று வலியுறுத்துகிறார்கள் என்று பொதுப்படையாகக் கூறுவது தவறு. ஒரு சிலர் அந்த வகையாகச் செயற்பட்டிருக்கலாம். ஆனால், அனைவரும் அவ்வாறு செயற்பட்டார்கள் என்று கூறுவது முற்றிலும் தவறு.
மூன்று சாட்சியங்கள்
சர்வதேச அரங்கில் என்னுடைய பங்கிற்கு நான் தனிப்பட்ட முறையில் மூன்று இடங்களில் சாட்சியங்களை வழங்கியிருக்கிறேன். முதலாவதாக, ஜேர்மன் நகரான பிறேமனில் இருந்த மக்கள் தீர்ப்பாயத்துக்குச் சென்று நான் சாட்சியம் அளித்தேன். பிறேமன் தீர்ப்பாயம் ஈழத் தமிழச்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக ஆராய்ந்த இரண்டாவது தீர்ப்பாயமாகும்.
முதலாவது தீர்ப்பாயம் அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் இருந்தது. இரண்டாவது பிறேமன். எனது நினைவு சரியாக இருந்தால் மூன்றாவது தீர்ப்பாயம் ஜேர்மனின் பேர்லினில் நடைபெற்றது என்று நம்புகிறேன். முதலாவது தீர்ப்பாயத்தில் போர்க்குற்றங்களும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களையுமே ஆராய்ந்து அவை இடம்பெற்றதை உறுதிப்படுத்தியது. இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக அந்தத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கவில்லை. போர்க் குற்றங்களும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுமே இழைக்கப்பட்டன என்ற அந்த முடிவில் இலங்கை அரசு மீது மாத்திரமல்ல, சர்வதேச வல்லரசுகள் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.
அந்தத் தீர்ப்பாயத்துக்குப் பொறுப்பாக இருந்த விராஜ் மெண்டிஸ் மற்றும் பாசண போன்றவர்கள் எனக்கு நன்கு பரிச்சயமானவர்கள். அதற்கு சாட்சியமளிக்க நான் அழைக்கப்படவில்லை. அந்தத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வழங்கப்பட்டபோது அது ஒரு தவறு என்று அவர்களிடம் உடனடியாகவே நான் கூறினேன். இலங்கையில் இடம்பெற்றது இன அழிப்பு என்பதால், போர்க் குற்றங்களையும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை அல்ல, இன அழிப்பே இடம்பெற்றது என்பதையே நாம் நிரூபிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக நான் கூறினேன். போர்க் குற்றங்களையும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களையும் விசாரணை செய்வதற்கு சர்வதேச நாடுகள் இருக்கின்றன என்பதையும் நான் அவர்களுக்கு சுட்டிக் காட்டினேன்.
அந்த வேளையில் அவர்கள் எனக்கு ஆறுதல்கூறி, இரண்டாம் கட்டமாக தாங்கள் இன அழிப்பு என்ற விடயத்தையும் அதில் சர்வதேசத்தின் பங்கையும் ஆராய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அந்தக் கட்டத்தில் சாட்சியம் வழங்க என்னைக் கட்டாயம் அழைப்பதாகவும் உறுதியளித்தனர்.
அந்த உறுதிமொழியின் பிரகாரம் அவர்கள் பிறேமனுக்கு என்னை அழைத்து சாட்சியம் அளிப்பதற்கு வாய்ப்பை வழங்கினார்கள். தமிழ் மக்களுக்கு நடந்தது இன அழிப்பு என்பது பிறேமன் தீர்ப்பாயத்தில் நிரூபிக்கப்பட்டது. அதற்கு பிறகு ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் பிரகாரம் முதலில் இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக விசாரணையும் (OHCHR Investigation on Sri Lanka – OISL) பிறகு இலங்கை பொறுப்புக்கூறலுக்கான செயற்திட்டமும் (Office for Sri Lanka Accountability Project – OSLAP) உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் உருவாக்கப்பட்டன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களையும் குறிப்பாக அந்த பேரவையூடாக பொறுப்புக்கூறலை அடையலாம் என்ற கருத்தையும் நிராகரித்து கடுமையாக விமர்சிக்கின்ற ஒரு தரப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி விளங்குகிறது. மனித உரிமைகள் பேரவையில் 2012ஆம் ஆண்டு தொடக்கம் நிறைவேற்றப்பட்டு வருகின்ற தீர்மானங்கள் அனைத்துமே சர்வதேச வல்லரசுகளின் பூகோள அரசியல் நலன்களை அடைவதற்கான மாத்திரம் இருக்கின்றனவே தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொறுப்புக்கூறலையும் நீதியையும் வழங்கக்கூடியவை அல்ல என்பதை நாம் ஆணித்தரமாகக் கூறிவருகிறோம். மனித உரிமைகள் பேரவைக்குச் சென்று அங்கு இடம்பெறுகின்ற பகிரங்க அமர்வுகளில் உரையாற்றி எமது நிலைப்பாட்டைப் பதிவுசெய்கின்ற பணிகளில் நான் ஈடுபட்டு வந்திருக்கிறேன்.
இறுதிக் கட்டத்தில் விடுதலை புலிகளின் வேண்டுகோள்
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் 2014 அல்லது 2015ஆம் ஆண்டில் இலங்கையின் பொறுப்புக்கூறலுக்கான செயற்திட்டத்தை உருவாக்கியபோது அந்தத் தீர்மானங்களில் இருந்த சகல பலவீனங்களுக்கு மத்தியிலும் ஏதோ ஒருவகையில் சர்வதேச அரங்கில் உத்தியோகபூர்வமாக பல்தேசிய அரங்கில் சாட்சியங்களையும் தகவல்களையும் சேகரிப்பதற்கான ஏற்பாடாக அந்தச் செயற்திட்டத்தைக் கருதி அதற்கு நான் சாட்சியமளித்தேன். நானாக கேட்டுத்தான் அவ்வாறு செய்தேன். மூன்று தளங்களில் நான் சாட்சியங்களை வழங்கினேன்.
போரின் இறுதிக் கட்டங்களில் குறிப்பாக 2009 மே 16ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை விடுதலை புலிகள் இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன், சமாதானச் செயலகத்துக்குப் பொறுப்பாக இருந்த புலித்தேவன், அப்போது கடைசிக்கட்டத்தில் வெளிவிவகார இராஜதந்திர விவகாரங்களை கையாளுவதற்காக நியமிக்கப்பட்ட கே.பி. என்று அழைக்கப்படும் பத்மநாதனும் என்னுடன் தொடர்புகொண்டு பேசினர்.
போரைத் தொடர அனுமதித்தால் தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு இலட்சம் மக்களில் கணிசமான பிரிவினர் அழிந்துபோவார்கள் என்பதால் போரை நிறுத்துவதற்கும் தங்களது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து மக்களை வெளியில் கொண்டுவருவதற்கும் அரசாங்கத்துடன் பேசி ஒரு பொறிமுறையை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் அதற்கு தாங்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் என்னிடம் கூறினர்.
அந்த வேளையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அணிசேரா நாடுகளின் மகாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜோர்தான் நாட்டுக்குச் சென்றிருந்ததால் அவரது சகோதரர் பசில் ராஜபக்ஷவுடன் தொடர்பு கொண்டு அந்த ஏற்பாடுகளைச் செய்யுமாறு அவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நான் பசில் ராஜபக்ஷவுடன் தொடர்புகொண்டு பேசினேன்.
மே 17ஆம் திகதி மகிந்த ராஜபக்ஷ நாடு திரும்பிய உடனடியாக தேசிய பாதுகாப்புச்சபை கூட்டம் நடைபெறும் என்றும் எனக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் காணப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அந்த கூட்டத்தில் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் பசில் ராஜபக்ஷவும் நானும் கத்தோலிக்க ஆயர்கள் கிங்ஸ்லி சுவாமிபிள்ளை, இராயப்பு யோசப் ஆகியோரின் மத்தியஸ்தத்துடன் வன்னிக்குச் செல்வது என்றும் அப்போது விடுதலை புலிகளின் சார்பில் நடேசன் வெளியில் வந்து மக்களைப் பாதுகாப்பாக கொண்டுவருவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பது என்றும் இணக்கம் காணப்பட்டது. மே 16 ஆம் திகதி இரவு 8 மணியளவில் இது இடம்பெற்றது.
இந்த முயற்சிகளை நான் செய்துகொண்டிருந்த அதேவேளை, அதற்கு முன்னதாக வேறு பலர் ஊடாகவும் இத்தகைய முயற்சிகளை விடுதலை புலிகள் முன்னெடுத்துக் கொண்டிருந்தார்கள். போரைத் தொடர அனுமதித்தால் அந்த மக்கள் அழிக்கப்படுவார்கள் என்பதை போரின் இறுதிக்கட்டங்களில் தெளிவாக உணர்ந்த நிலையிலேயே விடுதலை புலிகள் அந்த முயற்சிகளை முன்னெடுத்தனர். என்னோடு மிகவும் கடைசிக்கட்டத்திலேயே அவர்கள் தொடர்பு கொண்டனர். நான் ஒரு அரசியல்வாதி என்பதால் அந்த முயற்சிகளில் அரசியல் கலப்பு இருக்கக்கூடாது என்பதற்காக என்னுடன் தொடர்புகொள்வதை இறுதிவரை அவர்கள் தவிர்த்தனர். ஏற்கனவே மேற்கொண்ட சகல முயற்சிகளும் தோல்லிவியடைந்த நிலையிலேயே அவர்கள் என்னிடம் கேட்டார்கள்.
விடுதலை புலிகள் தங்களது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்த இரு இலட்சத்துக்கும் ஒன்றரை இலட்சத்துக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான மக்களை பாதுகாப்பாக வெளியில் கொண்டு வருவதற்கு முயற்சிகளை முன்னெடுத்த தருணத்தில் இருந்து – மக்களைக் காப்பாற்றுவதற்காக போரை நிறுத்துவதற்குத் தயார் என்று அவர்கள் அறிவித்த தருணத்துக்குப் பிறகு ஏற்பட்ட ஒவ்வொரு உயிரிழப்பும், அந்த மக்களை அதாவது தமிழர்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிப்பதற்கு மேற்கொள்ளப்பட நடவடிக்கைகளின் விளைவானதே என்பது நிரூபிக்கப்படும். இதுவே நான் வழங்கிய சாட்சியம்.
கடைசிக்கட்டத்தில் என்னிடம் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு பொறுப்பு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நான் என்னாலியன்ற முயற்சிகளைச் செய்து அரசாங்கம் கொள்கையளவில் இணக்கப்பாட்டுக்கு வந்தபோதிலும் கூட அதற்குப் பிறகு தொடர்ச்சியாக கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் தாக்குதல்களை நடத்தி படையினர் அந்த மக்களை திட்டமிட்டு அழித்தார்கள்.
மனித உரிமைகள் பேரவையில் வல்லரசுகளின் நலன்கள்
போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சுமார் 4 இலட்சத்து 20 ஆயிரம் மக்கள் இருந்தார்கள். இறுதிக்கட்டத்தில் வெளியில் வந்த மக்களின் எண்ணிக்கை மூன்றரை இலட்சம் அளவில்தான் இருந்தது. குறைந்தது ஒரு இலட்சம் உயிர்களுக்கு இன்று பொறுப்புக்கூற வேண்டியிருக்கிறது. போரின் இறுதிக் கட்டத்தில் நான் விடுதலை புலிகளுடன் பேசியபோது எனக்கு கூறப்பட்ட விபரங்களின் பிரகாரம் (மே 16ஆம் திகதி இயக்கம் என்னுடன் தொடர்பு கொண்டபோது) ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்ததாகவே தெரியவந்தது.
நாங்களும் அந்த மக்களின் எண்ணிக்கை தொடர்பில் விபரங்களைப் பேணிவந்தோம். அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது அவர்கள் கூறிய எண்ணிக்கை சரியாகவே இருந்தது. பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் நாம் ஏற்கனவே கண்டிருந்த இணக்கப்பாட்டினால் எந்த பிரயோசனமும் இல்லை என்பது தெளிவாகத் தெரியவந்தபோது மே 17ஆம் திகதி இந்தியாவில் இருந்த சம்பந்தனுடன் தொடர்புகொண்டு விடயங்களை தெளிவாகக் கூறினேன். அப்போது மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்தியாவிலேயே இருந்தனர். அந்த விபரங்களை கொழும்பில் உள்ள அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் இந்திய தூதரகங்களுக்கு தெரியப்படுத்துமாறு சம்பந்தன் என்னிடம் கேட்டுக்கொண்டார். மூன்று தூதரகங்களுக்கும் நான் விபரங்களைக் கூறினேன்.
மே 17ஆம் திகதி நான் தங்களுக்கு கூறிய விபரங்களை அன்று கொழும்பில் அமெரிக்கத் தூதுவராக இருந்த றொபேர்ட் பிளேக் வாஷிங்டனுக்கு கேபிளில் அனுப்பியிருந்தார். விக்கிலீக்ஸை எடுத்துப் பார்த்தால் நான் கூறிய விடயங்களை அறிந்துகொள்ள முடியும்.
இன்று (6 அக்டேபர் 2025) ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படவிருக்கிறது. அந்தத் தீர்மானம் முழுக்க முழுக்க அரசியல் அடிப்படையிலானது. ஐக்கிய நாடுகளின் கட்டமைப்புகளில் மனித உரிமைகள் பேரவையே மிகவும் பெருமளவுக்கு அரசியல் சார்ந்ததாக இருக்கிறது. பேரவை வல்லாதிக்க அரசுகளின் பூகோள அரசியல் நலன்களுக்குள் சிக்குண்டிருக்கின்ற ஒரு கட்டமைப்பு என்பது எல்லோருக்கும் தெரியும்.
இன அழிப்பு
தமிழர்களுக்கு நடந்ததை வெறுமனே போர்க்குற்றங்கள் என்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்று சுருக்குகின்றவையாகவே ஜெனீவா செயன்முறைகள் அமைந்திருக்கின்றன. இலங்கையின் அரசியல் சீனா சார்ந்த போக்கில் சென்று கொண்டிருந்ததால் அதன் உள் அரசியலைக் கையாளுவதற்கு கருவிகள் அவசியம் என்ற அடிப்படையிலேயே 2012ஆம் ஆண்டால் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தப் பேரவையில் தீர்மானம் இருக்கின்ற வரைக்கும், பொறுப்புக்கூறல் விவகாரம் ஜெனீவாவில் மூடக்கப்பட்டிருக்கின்ற வரைக்கும் அது வெறுமனே வல்லரசுகளின் குறிப்பாக மேற்குலக மற்றும் இந்திய வல்லரசுகளின் கருவியாக மாத்திரமே தமிழர்களின் இன அழிப்பும் போர்க் குற்றமும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும் பயன்படுத்தப்படும்.
மனித உரிமைகள் பேரவையில் 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டுவரை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோது அவற்றினால் பிரயோசனம் இல்லை என்ற நாம் கூறிய வேளையில் அந்த தீர்மானங்களை பெரியளவில் ஆதரித்த அரசியல் தலைவர்கள் மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருப்பதால்தான் ஒன்றும் நடக்கவில்லை, அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்படுகின்றபோது எல்லாம் சரியாக நடக்கும் என்று கூறினார்கள்.
2015ஆம் ஆண்டிலும் அதுவே நடந்தது. நல்லாட்சி என்ற பெயரில் ஆட்சிமாற்றம் இடம்பெற்றது. அப்போது “இது நல்ல ஆட்சி, எங்களுக்கு சார்பான ஆட்சி, அந்த ஆட்சியிடம் பொறுப்புக்கூறலை பெரியளவில் முன்னெடுக்குமாறு கேட்டால் சிங்கள மக்கள் கோபிப்பார்கள், நல்ல ஆட்சி கவிழ்ந்தால் மீண்டும் ராஜபக்ஷ பதவிக்கு வந்துவிடுவார், இந்தப் படகை நாங்கள் ஆட்டக்கூடாது. நாங்கள் கவனமாக, அமைதியாக இருக்க வேண்டும்” என்று அதே தரப்பினர் எங்களிடம் கூறினார்கள். இவ்வாறு கூறி இருவருட காலநீடிப்பை பல தடவைகள் கொடுத்தார்கள்.
எம்மைப் போன்ற தரப்புகள் இதை அம்பலப்படுத்தி வந்தாலும் கூட பொறுப்புக்கூறலை முடக்கிவைத்திருக்கின்ற தரப்பு என்று இப்போது சிலர் திடீரென்று கிளம்பி எங்களைக் குற்றஞ்சாட்டுகிறார்கள். அவ்வாறு ஒரு கருத்துருவாக்கத்தை அவர்கள் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். மனித உரிமைகள் பேரவைக்குள் பொறுப்புக்கூறல் முடக்கப்பட்டிருக்கின்ற வரைக்கும் தமிழின அழிப்பு வெறுமனே சர்வதேச வல்லரசுகளின் கருவியாக மாத்திரமே பயன்படுத்தப்படும் என்பதை நாம் தெட்டத் தெளிவாகச் சொல்கிறோம்.
இலங்கை பொறுப்புக்கூறலுக்கான செயற்திட்டத்துக்கு நான் வழங்கியது உண்மையிலேயே சாட்சியம் அல்ல. நான் என்னுடைய வாக்குமூலத்தையே நான் அவர்களிடம் கொடுத்தேன். அதை பொறுப்புக்கூறல் செயற்திட்டம் ஒரு தகவலாக மாத்திரமே உள்வாங்கிக்கொண்டது. நீதிமன்றத்தில் நான் சொல்லக்கூடிய தகவல்கள், கருத்துக்கள் அங்கு பதிவு செய்யப்படவில்லை. இந்த குறைபாட்டை ஜெனீவா அமர்வுகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக தமிழரசு கட்சியைத் தவிர அனைத்து தமிழ்க் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புக்களும் கலந்துகொண்ட கூட்டத்தில் நான் சுட்டிக்காட்டினேன்.
நாங்கள் கொடுக்கும் சாட்சியங்கள் நீதிமன்றத்தில் பயன்படுத்தக்கூடிய சாட்சியங்களாக சேகரிக்கப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கையாக இருந்தது. அவ்வாறான சாட்சியங்களாக சேகரிக்க வேண்டும் என்ற பரிந்துரையை நாம் வலியுறுத்தியபோது இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக விசாரணை பொறிமுறையும் (OISL) இலங்கை பொறுப்புக்கூறலுக்கான செயற்திட்டமும் (OSLAP) சட்டரீதியாக நிபுணத்துவம் பெற்ற பலரைக் கொண்டிருந்த போதிலும் பத்து வருடங்களாக அதைச் சேகரிக்காமல் இருக்கிறார்களாக இருந்தால் அந்த இரு பொறிமுறைகளிடமும் அதை தொடர்ந்தும் கேட்பதில் அர்த்தமில்லை. ஏனென்றால் அவர்கள் அதைச் செய்யப் போவதில்லை.
அதனால் பொறுப்புக்கூறல் விவகாரத்தை ஒரு நீதிமன்ற விசாரணைக்கு இட்டுச் செல்வதற்கு அழுத்தத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி நாங்கள் அதற்கு இணக்கினோம். துரதிர்ஷ்டவசமாக, இந்த முடிவுகளையும் கூட கணிசமானவர்கள் நடந்த விடயங்களை திசை திருப்பி அந்த முயற்சியை கொச்சைப்படுத்த முயன்றார்கள்.
நாம் இன அழிப்பை வலியுறுத்தவில்லை என்று விமர்சிக்கிறார்கள். எழுத்துமூலமாக நாம் கொடுத்ததில் இன அழிப்பு தெளிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அது மாத்திரமல்ல, நாம் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற கட்டமைப்பை (International Criminal Court – CCC) வலியுறுத்துகிறோமே தவிர, சர்வதேச நீதிமன்றத்தை (International Court of Justice – ICJ) வலியுறுத்தவில்லை என்றும் கூறினார்கள். அது தவறு. நாங்கள் இரண்டையும் வலியுறுத்தினோம்.
சில உண்மைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால், கட்சிகள் இல்லாத ஒரு கட்டமைப்பை உருவாக்க உத்தேசிக்கின்றபோது, அந்த பொதுக் கட்டமைப்புக்கள் முடிவெடுக்கின்றபோது உண்மைகளையும் ஆழமான சில விடயங்களையும் விளங்கிக்கொண்டு நாம் பேசவேண்டும்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தனி நபர்களையே விசாரிக்கலாம் என்பது முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களில் ஒன்று. அது உண்மைதான். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் ஒரு அரசை விசாரிக்க முடியாது. அது உண்மை. சர்வதேச நீதிமன்றம் ஒரு அரசை நீதிமன்றத்தில் நிறுத்தக்கூடிய கட்டமைப்பு ஆகும். இன்று இருக்கக்கூடிய கட்டமைப்புகளில் ஒரு அரசை நீதிமன்றத்தில் நிறுத்தக்கூடியது சர்வதேச நீதிமன்றம் மாத்திரமே. ஆனால், சர்வதேச நீதிமன்றத்தில் ஒரு அரசினாலேயே வழக்கைத் தாக்கல் செய்யமுடியும். நாங்கள் சர்வதேச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி”இதோ பாருங்கள், இலங்கைக்கு எதிராக எங்களிடம் சாட்சியம் இருக்கிறது. அதை ஏற்றுக்கொண்டு வழக்கைப் போடுங்கள்” என்று கேட்கமுடியாது.
நான் 25 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன். எனது அறிவுக்கு எட்டிய வரையில் இன்றைய சூழ்நிலையில் இலங்கை அரசை நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்துவதற்கு எந்தவொரு அரசும் தயாராக இல்லை. ஆனால், அதற்காக எதிர்காலத்தில் எந்தவொரு அரசும் அவ்வாறு செய்யமாட்டார்கள் என்று நான் கூறவரவில்லை.
மாற்றுவழி
ஆனால், இலங்கையை நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்துவதற்கு அந்தத் தரப்புகளுக்கு நாம் அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். அழுத்தங்களை எங்கே கொடுக்கலாம்? இன்று இருக்கக்கூடிய சர்வதேச கட்டமைப்புகளை வைத்துக்கொண்டு இலங்கை அரசு மீது குற்றஞ்சாட்டி அதை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு எவ்வகையான அழுத்தத்தைக் கொடுக்கலாம் என்று நாம் சிந்திக்கின்றபோது எமது அறிவுக்கு எட்டியவரையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்தான் கண்ணுக்குத் தெரிகிறது.
சர்வதேச நியாயாதிக்கத்தைப் பயன்படுத்தி மற்றைய நாடுகள் வழக்கு தொடுக்கின்ற விவகாரத்தைப் பொறுத்தவரை, அந்த நாடுகள் அதை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே அது நடைபெறும். அமெரிக்காவை எடுத்துக்கொண்டால், தனிநபர்களுக்கு எதிராக குற்றஞ்சுமத்தி நீதிமன்றங்களில் வழக்கை தொடுத்தபோது அமெரிக்க அரசாங்கமே இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளை (அவர்களுக்கு இராஜதந்திர விதிவிலக்கு இருக்கிறது என்று கூறி) காப்பாற்றுகின்ற நிலைமையை காணக்கூடியதாக இருக்கிறது.
அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களமே இலங்கை அரசு சார்பாக வந்து பேசியது. அந்த அரசாங்கம் விரும்பிச் செயற்பாட்டில் இறங்காத பட்சத்தில் சர்வதேச நீதிமன்றம் போன்று எமக்கு பெரியளவில் உதவப்போவதில்லை. ஏனென்றால், அரசாங்கங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் அரசியல் அடிப்படையிலேயே அமையும். அதனால் சர்வதேச அரங்கில் நாம் அழுத்தங்களைப் பிரயோகிக்கக்கூடிய இடமாக எமது கண்ணுக்கு முன்னால் தெரிவது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மாத்திரமே. அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஆனால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் செயற்பாடுகளை எடுத்துப்பார்த்தால், அது 2002ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டதற்குப் பிறகு றோம் சாசனத்தில் கைச்சாத்திடாத நாடுகளையும் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற தரப்புகளையும் ஏதோ ஒரு வகையில் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டதை காணமுடிகிறது. இதற்கு சிறந்த உதாரணம் மியன்மார்.
றோம் சாசனத்தில் கைச்சாத்திடாத நாடுகளை (பூகோள அரசியல் காரணங்களுக்காக) சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிப்பதாக இருந்தால், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் ஊடாக தீர்மானத்தை நிறைவேற்றி சர்வதேச குற்றவியல் நிதிமன்றத்துக்கு பாரப்படுத்துகின்ற செயலில் இறங்க வேண்டும் என்ற ஒரு நியதி இருக்கிறது. றோம் சாசனத்தில் கைச்சாத்திடாத நாடுகளை அல்லது நபர்களை பாதுகாப்புச் சபையின் தீர்மானம் ஊடாக பாரப்படுத்தி விசாரித்தால் ஒழிய மற்றும்படி விசாரிக்க முடியாத ஒரு தடை இருக்கிறது என்பதை உணர்ந்த அவர்கள் விசாரணைகளை விரிவுபடுத்துவதற்கு தங்களது நியாயாதிக்கத்தை ஏதோ ஒரு வகையில் விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டார்கள். மியன்மார் விவகாரத்தில் நடந்தது இதுவே.
ரோஹிங்கியா மக்களுக்கு எதியராக மியன்மார் அரசு இழைக்கின்ற குற்றங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை செய்கின்ற நிலைமை இன்று ஏற்பட்டிருக்கிறது. அது பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தின் ஊடாக நடந்த காரியம் அல்ல. மியன்மாரும் இலங்கையைப் போன்று றோம் சாசனத்தில் கைச்சாத்திடவில்லை. மியன்மார் விவகாரத்தில் பாதுகாப்புச் சபைக்கு போயிருந்தால், சீனா போன்ற நாடுகள் அவற்றின் ரத்து அதிகாரத்தை (வீட்டோ) பயன்படுத்தியிருக்கும் என்பதால் அது சாத்தியமில்லாத பாதை என்று கருதி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத்தொடுநர்கள் வேறு வழிகளைத் தேடினார்கள்.
மியன்மாரில் தங்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகளில் இருந்து தப்பியோடி ரோஹிங்கியா மக்கள் பெருமளவில் தஞ்சம் புகுந்திருக்கின்ற பங்களாதேஷ் றோம் சாசனத்தில் கைச்சாத்திட்டிருக்கின்ற காரணத்தினால் அந்த மக்களுக்கு எதிராக இழைக்கப்படுகின்ற இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு நியாயாதிக்கம் இருக்கிறது என்று கூறி மியன்மார் மீது விசாரணை செய்யப்படுகின்ற நிலைமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆகவே, எமக்கும் வேறு வழிகள் இருக்கின்றன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நாம் கணிசமான அழுத்தங்களைப் பிரயோகித்து விசாரணை நடத்தப்படுவதற்கான சூழ்நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும். ஆனால், அங்கு தனிநபர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றபோது அவர்கள் பாரிய குற்றங்களைச் செய்தார்கள் என்ற அடிப்படையில் நாடுகள் அழுத்தங்களைக் கொடுத்து விசாரணைகள் இடம்பெறக்கூடிய நிலையை உருவாக்கலாம். இத்தகைய அணுகுமுறையைத் தவிர்த்தால், நாங்கள் இலங்கை அரசுக்கு எதிராக வெறுமனே பொறுப்புக்கூறலை மற்றைய அரசுகளே முன்னெடுக்க வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கப் போகின்றோமே தவிர, வேறு ஒன்றும் நடக்கப்போவதில்லை. வல்லரசுகளுக்குத் தேவை ஏற்பட்டால் மாத்திரமே பொறுப்புக்கூறல் செயன்முறை முன்னெடுக்கப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
ஆகவே, மனோகரன் தனது மகனின் இழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற தாகத்தை தணிக்கும் முழுப்பொறுப்பையும் எம்மைப் போன்றவர்களின் கைகளில் ஒப்படைத்துச் சென்றிருக்கிறார். நாம் அதைச் சாதிப்பதாக இருந்தால், அவருடைய கனவை நனவாக்குவதாக இருந்தால் அரசியலுக்கு அப்பால் உண்மைகளைச் சரியாக விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லையானால் அந்தத் தாகம் வெறுமனே கனவாக மாத்திரமே நீடிக்க முடியும்.
எம்மைப் பொறுத்தவரையில், அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் பொறுப்புக்கூறல் விவகாரத்தைக் கையாளுவதற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அத்தகைய கட்டமைப்பை உருவாக்கும் முயற்சிக்கு நாம் பூரண ஒத்துழைப்பு நிச்சயமாக வழங்குவோம். ஆனால், அந்த முயற்சி மீண்டும் பொறுப்புக்கூறலை தொடர்ந்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் முடக்குவதாக இருக்குமானால் அதை நாம் கடுமையாக எதிர்ப்போம். தண்டிக்கப்பட வேண்டியவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது குறிக்கோள். அவர்களை நீதிமன்றங்களுக்கு முன்னால் கொண்டுபோவதே எமது இலட்சியமாக இருக்க வேண்டும்.
அதை விடுத்து மற்றைய அரசுகள் தமிழர்களுடைய இந்த விவகாரத்தைப் பேசிக்கொண்டிருக்கின்ற வரையில் குற்றங்களைப் புரிந்தவர்களை நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லும் காரியம் இடம்பெறாது. சர்வதேச அரசியலை தொடர்ச்சியாக படித்த மாணவன் என்கிற வகையில் ஒரு விடயத்தைக் கூறிவைக்க விரும்புகிறேன்.
தேவையற்ற அரங்கில் எமது விவகாரங்களை வலியுறுத்திக்கொண்டிருக்கும் வரை, இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை. அத்தகைய ஒரு தேயைற்ற – பயனற்ற அரங்கு ஒன்று எம் கண்முன்னால் இருக்கிறது என்றால் அது மனித உரிமைகள் பேரவைதான். அத்தகைய உண்மைகளை கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட கோணத்தில் ஏற்றுக்கொண்டு செயற்படுவதற்கு யார் முன்வந்தாலும் எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்று வாக்குறுதி வழங்குகிறேன்.”