Photo, AP Photo/Eranga Jayawardena

இன்றைய மலையக மக்களின் முன்னோர்கள் தென்னிந்தியாவிலிருந்து (இன்றைய தமிழ் நாடு) இலங்கைக்கு வருகையில் அவர்கள் ஒரு போதும் அடிமைகளாகவோ அல்லது அரை அடிமைகளாக வரவில்லை. மாறாக சுயமாக இலங்கைக்கு வந்தவர்களும், கங்காணிகளினால் அழைத்து வரப்பட்டவர்களும் ஒப்பந்தம் செய்தே தோட்டங்களில் பணியாற்றச் சென்றுள்ளனர். தோட்டங்களுக்குச் செல்ல முன் தமக்கு  எவ்வளவு சம்பளம் வழங்கப்படும், வீடு மற்றும் சுகநல வசதிகள்  என்பன எவ்வாறு வழங்கப்படும் என்பதனை உறுதிசெய்துக் கொண்ட பின்னரே தமிழ் நாட்டிலிருந்து  கங்காணிகளுடன் புறப்பட்டுள்ளனர். அதேவேளை, சுயமாக வந்தவர்கள் கண்டியை அல்லது குருணாகலை வந்தடைந்தவுடன் தம்மை வந்து சந்திக்கும் தோட்டத்துரைமாறுடன் மேற்கூறியவைப் பற்றி பேரம் பேசியே தோட்டங்களுக்குச் சென்றுள்ளனர். நாளடைவில் எழுத்து மூல வாக்குறுதிகளின் அடிப்படையிலும் தோட்டங்களில் பணிபுரியச் சென்றுள்ளனர். ஆனால், தோட்டங்களுக்குச் சென்ற பின் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முறிக்கப்பட்டு வெள்ளைத் துரைமாரினாலும் கங்காணிகளினாலும் கொத்தடிமைகளாக நடாத்தப்பட்டு சித்திரவதைக்கும்   ஆளாகினர். இத்துன்புறுத்தல் தொடர்பில் குரல் எழுப்பப்பட்டுள்ளதுடன் அவர்களது அவல நிலையைப் பார்த்து பிரித்தானிய அரசு பல கட்டளைச் சட்டங்களை  கோப்பி காலம் முதலே சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.  (An Ordinance to consolidate and amend the Law relating to Servants, Labourers, and Journey men Artificers, under Contracts for Hire and Service – No.11 of 1865, An Ordinance to provide for the Medical; Wants of the Coffee Districts. No. 14 of 1872, An Ordinance amending the Law relating to Indian Coolies employed on Ceylon Estate . No 13 -1889, An Ordinance to provide for the Medical Wants of  immigrant labourers in certain planting districts- No.17 – 1880,Medical Wants Ordinance Consolidation  No. 7-1912.  Maternity Benefits Ordinance .No.32-1939) என்பன அவற்றுள் சிலவாகும். தொழில் உரிமை சம்பளம், சுக நலம் தொடர்பில் கட்டளைச் சட்டங்கள் ஆரம்ப காலம் முதலே பிறப்பிக்கப்பட்டபோதிலும் தொழிலாளர் மத்தியில் நிலவிய கல்வியறிவின்மை மற்றும் அறியாமை என்பன சட்டங்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தவில்லை. கோ. நடசேய்யர் 1931இல் தொழிற்சங்கத்தை உருவாக்கும் வரை சட்டங்களைப்பற்றி பெரிதும் அறியாதிருந்துள்ளனர். 1935ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை சமசமாஜக் கட்சி தோட்டத் தொழிலாளர்களை தமது தொழிற்சங்கத்தின் கீழ் அணிதிரட்டியப் பின்னரே தோட்டத் தொழிலாளர்கள் தம் தொழில் உரிமைகளைப் பற்றி பெரிதும் அறிந்துக் கொண்டனர். மேற்கூறப்பட்ட   இக்கட்டளைச் சட்டங்கள் இன்றும் வலுவுள்ளதாகவே இருக்கின்றன.

இப்பின்புலத்தில் இலங்கை சுதந்திரம் பெற்றவுடன் தொழிலாளர்களின் நிலையை நோக்கின், 1948இல் இலங்கை அரசாங்கம் பிரஜா உரிமை சட்டத்தை அறிமுகப்படுத்தியதுடன் அரசாங்கம் முன்னெடுத்த அபிவிருத்தி சமூக நல மற்றும் உட்கட்டமைப்புத் திட்டங்களை அனுபவிக்கும் உரிமையை அவர்கள் இழந்தனர். ஆனால், சுதந்திரத்திற்குப் பின் நாட்டின் ஆட்சி பீடமேறிய அரசாங்கங்கள் நாட்டின் தொழிலாளர்களின் உரிமைக்காக அறிமுகப்படுத்திய அனைத்து தொழிற்சட்டங்களிலும் தோட்டத் தொழிலாளார்கள் உள்வாங்கப்பட்டனர். (Industrial dispute Act no. 43 of 1950, Shop and Office Employees Act 19 of 1954, Employees Provident Fund Act No 15 of 1958, The Termination of Employment of Workmen Act no 45 of 1971, Employees Trust Fund Act No. 46 of 1980) உள்ளிட்ட அனைத்து தொழிற் சட்டங்களிலும் தோட்டத் தொழிலாளர்களர் உள்வாங்கப்பட்டனர்.

அவ்வகையில் குடியுரிமையற்றோராக இருந்த போதிலும் நாட்டின் ஏனைய தொழிலாளர்களைப் போல் தொழிலாளர் உரிமைகளை அனுபவிக்கும் வாய்ப்பினைப் பெற்றிருந்தனர். ஆட்சி பீடத்தில் அமர்ந்த அரசாங்கங்கள் தொழில் உரிமைகளை அனுபவிக்க வாய்ப்புகளை அளித்த போதிலும் சமூக நல உரிமையை அனுபவிக்க வாய்ப்பு வழங்கவில்லை. ஆயினும், 1988ஆம் ஆண்டு முதல் இந்நிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டது. இம்மக்களது சமூக நல மேம்பாட்டில் ஒரளவு கவனம் செலுத்த அரசாங்கங்கள் முன்வந்தன. அதற்கு காரணம் யாதெனில், 1977ஆம் ஆண்டு முதல் இவர்களில் ஒரு பிரிவினர் வாக்களராக உருவானதுடன் 1988ஆம் ஆண்டளவில் இவர்களது வாக்கு பலம் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தக்கூடியதாக இருந்தமையாகும். 1994 ஆண்டு ஆட்சியிலிருந்த ஜே.ஆரின் அரசாங்கம் இம்மக்களின் வாக்கு பலத்தினை கருத்திற்கொண்டு எதிர்வரும் தேர்தலில் அவர்களது வாக்குகளைப் பெறும் வகையில் அவர்களது எரியும் பிரச்சினையான வீட்டுப் பிரச்சினையை தீர்க்கும் வகையில் அவர்களது இருப்பிடங்களை அவர்களுக்கே சொந்தமாக்குவதாக போலி உறுதிப்பத்திரங்களை வழங்கியது. இதனை நம்பி தேர்தலின் போது இம்மக்களில் பெரும்பான்மையானோர் ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களித்தனர். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் தோல்வியடைந்தது.

தேர்தலின் பின் ஆட்சிப்பீடத்தைக் கைப்பற்ற பெரும்பான்மையான ஆசனங்களைப் பெற்ற திருமதி சந்தரிக்கா பண்டாரநாயக்க ஆட்சி அமைப்பதற்கு மலையகத்தில் வெற்றியீட்டிய சௌம்ய மூர்த்தி தொண்டமான் மற்றும் பி. சந்திசேகரன் ஆகியோரின் ஆதரவு தேவைப்பட்டது. அதன் விளைவாக இரு அமைச்சுகளை மலையக மக்களின் மேம்பாட்டிற்காக சந்திரிக்கா பண்டாரநாயக்க உருவாக்கிக் கொடுத்தார். இது மலையக மக்களது வரலாற்றில் ஒரு மைக்கல்லாக அமைந்தது. அமைச்சுகளை வழங்கிய சந்திரிக்கா பண்டாரநாயக்க போதியளவு நிதியினை அவ்வமைச்சுகளுக்கு  வழங்கவில்லை. சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் உபாயத்தையே அவருக்குப் பின்னர் ஆட்சி பீடமேறிய அரசாங்கங்களும் பின்பற்றின.

சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் பின் ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் முறையே Estate Community Development – Six Year Development Programe -2000-2005, 2006-2015 National Plan of Action For Social Development of the Plantation Community, 2006-2015, Ten year National Action Plan for Social Development of Plantation sector, 2016-2020, Five year National Action Plan for Social, Development of Plantation Setor எனும் திட்டங்களை சிவில் அமைப்புகளின் பங்களிப்புடன் முன்வைத்தன.

மேற்கூறப்பட்ட அனைத்து திட்டங்களும் முறையாக அமுல்படுத்தப்பட்டிருக்குமாயின் தோட்ட வாழ் மலையக மக்கள் சமூக பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியில் பாரிய வளர்ச்சியினைக் கொண்டிருப்பர். ஆனால், நடந்தது என்னவெனில் இவ்வனைத்துத் திட்டங்களும் உரிய காலத்தில் முறையாக அமுல்படுத்த ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அதனால் அனைத்து திட்டங்களும் முழுமைப் பெறவில்லை. மாறாக அவ்வப்போது சிறு சிறு திட்டங்களை குறிப்பாக சிறுசிறு வீட்டுத்திட்டங்களை அமுல்படுத்தி வந்தன.

இப்பின்புலத்திலேயே இடதுசாரி சிந்தனையைக் கொண்ட தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளது. தேசிய மக்கள் சக்தி மலையக மக்களது அபிவிருத்தி தொடர்பில் ஹட்டன் பிரகடனமொன்றினை தேர்தலுக்கு முன்னர் வெளியிட்ட போதிலும் ஆட்சியில் அமர்ந்தவுடன் இம்மக்களது  சமூக அபிவிருத்தி தொடர்பில் ஒரு முழுமையான வேலைத் திட்டத்தை  (Full-fledged Action Plan) இதுவரை முன்வைக்கவில்லை. மலையக மக்களுக்கான அபிவிருத்த வேலைத் திட்டத்தை சமர்ப்பிக்க புதிதாக ஆய்வு செய்யவோ அல்லது நிபுணர் குழுவினை நியமிக்கவோ தேவையேற்படாது. ஏனெனில், கடந்த அரசாங்களின் போது சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் மலையக சிவில் அமைப்புகளினதும் மலையக அரசியல் தலைவர்களினதும் பங்கேற்புடனே செய்யப்பட்டுள்ளது. அவற்றில் முன்வைக்கப்பட்ட திட்டங்களிலும் ஒரு திட்டமேனும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தேசிய மக்கள் சக்தி வெளியிட்ட வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற கொள்கைப் பிரகடனத்தில் மலையகம் தொடர்பில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது. “2023.10.15ஆம் திகதி கொண்டதாக தேசிய மக்கள் சக்தி வெளியிட்ட ஹட்டன் பிரகடனத்தில் குறிப்பிட்டவாறு மலையகத் தமிழ் மக்களின் அடையாளத்தையும் உரிமைகளையும் ஏற்றுக் கொண்டு அவர்களின் காணி, வீடமைப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற வசதிகளை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்” மற்றும் “மலையக தமிழ் சமுதாயத்தின் சம்பளத்தை வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற வகையில் அதிகரித்தல், மக்கள் கௌரவமான வருமானத்தினை பெறுவதற்குள்ள உரிமையை உறுதிப்படுத்தல்” என்ற இரு விடயங்களே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதுநாள் வரை இந்திய வீட்டுத் திட்டங்கள் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

மேலும் வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற கொள்கைப் பிரகடனத்தில் நாட்டு மக்களது சுகாதார பிரச்சினைப் பற்றி குறிப்பிடும் பகுதியில் மலையக மக்களது சுகாதாரப் பிரச்சினைப் பற்றி குறிப்பிடுகையில், “போசாக்குத் தரம், வாய்ச் சுகாதாரம், காசநோய்க் கட்டுப்பாடு, நிதிசார் எழுத்தறிவு, மதுசாரம், புகையிலை மற்றும் ஏனைய போதைப்பொருட்களை தடுத்தல், இளைஞர் சமுதாயத்தின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான விசேட நிகழ்ச்சித் திட்டங்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை மலையக மக்களுக்கு தேவையானதுதான். ஆனால், இவற்றினை விட மிக முக்கியமாக தேவைப்படுவது யாதெனில், ஏலவே பொதுச் சுகாதார சேவையின் கீழ் கொண்டுவரப்பட்ட தோட்ட வைத்தியசாலைகளை சிறப்பான வைத்திய சாலைகளாக மாற்றுவதுடன் எஞ்சியிருக்கும் வைத்திய சாலைகளையும் டிஸ் பென்சரிகளை ஆரம்ப வைத்திய சாலைகளாகவோ அல்லது மாவட்ட வைத்தியசாலைகளாக மாற்றுவதன் மூலமே இம்மக்கள் முழுமையான சுகாதாரத்தை பேண முடியும். இது போலவே அவர்களது வீடுகளுக்கான காணி மற்றும் வாழ்வாதாரத்திற்கான காணிப் பிரச்சினைகளும் எரியும் பிரச்சினையாக இருந்து வருகின்றது. வீட்டுப் பிரச்சினையைப் பொருத்த மட்டில் இந்திய வீடமைப்பு திட்டத்தையே இன்று அமுல்படுத்தி வருகின்றது. இந்த அரசாங்கமும் இலங்கை அரசாங்கத்தின் நிதியைக் கொண்டு நடைமுறைப்படுத்தும் திட்டத்தை இதுவரை முன்வைக்கவில்லை. அதுமட்டுமல்லாது ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்ட சுமார் 60 ஆயிரம் வீடுகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்குவதற்கு முயற்சி எடுப்பதனையும் காண முடியவில்லை.

இதனைக் கருத்திற்கொள்ளும் இவ்வரசாங்கமும் முன்னைய அரசாங்கங்கள் போல் காலத்தைக் கடத்தி மலையக தோட்ட வாழ் மக்களை ஏமாற்றி விடுவார்களோ என்ற சந்தேகம் எழுகின்றது. இதனைக் கருத்திற்கொள்ளும் போது மலையக சிவில் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் மலையக மக்களுக்கு வாக்குறுதி அளித்ததன்படி திட்டங்களை அமுல்படுத்தங்கள் என அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. மறுபுறம் நாடாளுமன்றத்திலிருக்கும் ஆளும் கட்சியின் மலையகப் பிரதிநிதிகள் இவ்விடயத்தின்பால் அக்கறை செலுத்த வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இல்லாவிடில் இவ்வரசாங்கத்திலும் மலையக மக்கள் வாக்குறுதி முறிவினையே எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவர்.

பெ.முத்துலிங்கம்