Photo, WASHINTON POST

காசாவில் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஓர் இனவழிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என பாலஸ்தீன மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். உலகம் கண்ணுற்ற இனவழிப்புக்களின் பட்டியலில் காசா இனவழிப்பும் சேர்ந்துகொண்டுள்ளது. முன்னைய காலங்களில் இடம்பெற்ற இனவழிப்புக்கள் போல் அன்றி காசா இனவழிப்பு டிஜிட்டல் யுகத்துக்குரியது. இனவழிப்புக் காட்சிகள் எம்முன்னே சமூக ஊடகங்கள் வாயிலாகவும், இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாகவும், கிட்டத்தட்ட நேரடி ஒளிபரப்புக்களாகத் தோன்றுகின்றன.

உலகின் பெரும்பான்மையான மக்களும், நாடுகளும் இந்த இனவழிப்புக்கு எதிரானவர்களாக இருந்தும், எம்மால் ஏன் இந்த இனவழிப்பினைத் தடுத்து நிறுத்த முடியவில்லை? எமது குரல்கள் இந்த இனவழிப்புக்கு எதிராக ஓங்கி ஒலித்துக் கொண்டிருப்பினும், உலகின் பல பாகங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் இஸ்ரேலுக்கு எதிராகப் போராட்டங்களிலே ஈடுபட்டாலும், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இருக்கும் நாடுகளிலே மிகப் பெரும்பான்மையான நாடுகள் இந்தப் படுகொலையினை எதிர்த்த போதிலும் ஏன் இந்த இனவழிப்புத் தொடர்கிறது?

அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு வழங்கி வரும் ஆதரவு, குறிப்பாக அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் தனது வீட்டோ அதிகாரத்தினைத் தொடர்ந்தும் பயன்படுத்துகின்றமை இஸ்ரேலின் இனவழிப்புச் செயன்முறைக்கு மிகப் பெரிய உந்துசக்தியாக அமைந்திருக்கிறது. இந்த நாடுகளினால் தொடர்ந்தும் பெரும்பான்மையான உலக மக்களின் குரலினையும் நீதிக்கான வேட்கையினையும் உதாசீனம் செய்ய முடிகிறது எனில், இந்த அரசுகள் ஏனைய அரசுகளை விடப் பலம் பொருந்திய அரசுகளாக, அதாவது பேரரசுகளாக இருக்கின்றன என்றே நாம் கருத வேண்டும் என ஜோஸ் மனுவேல் பராற்றோ காசா பற்றிய தன்னுடைய சமீபத்திய கட்டுரை ஒன்றிலே குறிப்பிடுகிறார். எனவே, காலனிய நீக்கம் இடம்பெற்று, இன்று நாம் சுதந்திர நாடுகளாக இருக்கிறோம் என எம்மைக் கருதிக் கொண்டாலும், பேரரசுகளின் பிடி தொடர்ந்தும் ஒரு வகையிலே இவ்வுலகிலே நிலைபெற்றிருப்பதனையே காசா இனப்படுகொலை வெளிக்கொண்டு வருகிறது.

காலனியத்தின் முடிவினை 20ஆம் நூற்றாண்டுக்குரிய ஒன்று என்றும், முன்னர் பேரரசுகளின் பிடியில் இருந்த பிராந்தியங்கள் தமக்கென அரசியல் இறைமையினைப் பெற்றுக்கொண்ட ஒரு நிகழ்வு எனவும் நாம் விளங்கி வைத்திருக்கிறோம். ஆனால் அரசியல், பொருளாதார ரீதியாகக் காலனிய நீக்கம் நடைபெறாமையே காசா இனவழிப்புக்கான முக்கியமான காரணிகளில் ஒன்றாக அமைகிறது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் 1940களின் பிற்பகுதியில் இருந்து ஆசிய, ஆபிரிக்கப் பிராந்தியங்களிலே பல காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெற ஆரம்பித்தன. ஒரு பக்கம் அரசியல் சுதந்திரத்தினையும், அரசியல் இறைமையினையும் பெற்றவர்களாக நாம் எம்மை விளங்கிக் கொண்டிருந்த ஒரு காலப் பகுதியிலேயே இஸ்ரேல் என்ற அரசு தோற்றம் பெற்றது. குடியேற்றவாதக் காலனித்துவத்தின் ஊடாக பாலஸ்தீன நிலப் பரப்பினை ஆக்கிரமித்த சியனிஸ சக்திகள் பாலஸ்தீன மக்களை அவர்களது வாழிடங்களில் இருந்து வெளியேற்றி இஸ்ரேலினை சியனிஸத்தின் அரசாக உருவாக்கினார்கள். இதற்கு அன்றைய பிரித்தானியப் பேரரசினதும், அமெரிக்காவினதும் முழுமையான ஆதரவு கிடைத்திருந்தது. நாம் காலனித்துவ நீக்கத்துக்குரிய காலம் எனக் கருதிய காலத்திலே பேரரசுகளின் துணையுடன் இஸ்ரேலின் ஆதிக்கமிக்க‌ உருவாக்கம் நிகழ்ந்தமை அன்றைய காலம் உண்மையிலேயே காலனிய நீக்கத்துக்குரிய காலம் தானா என்ற கேள்வியினை நாம் கேட்க வேண்டியதன் முக்கியத்துவத்தினை எமக்கு உணர்த்துகிறது.

1940களின் பிற்பகுதியில் ஒரு பக்கத்திலே காலனிய நீக்கம் என்ற பெயரிலே புதிய அரசுகளின் தோற்றம் இடம்பெற்றாலும், மறுபுறத்திலே ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச நாணய நிதியம் போன்ற‌ நாடு கடந்த சர்வதேச நிறுவனங்களும் ஏகாதிபத்திய நிகழ்ச்சிநிரலுக்கு அமைய‌ அரசியல் பொருளாதாரக் காரணங்களுக்காக‌ உருவாக்கப்பட்டன என்பதனை நாம் இங்கு மீட்டிப் பார்ப்பது அவசியம். உதாரணமாக: உலக யுத்தத்தில் வென்ற தரப்புக்களும், புதிய மற்றும் பழைய பேரரசுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலினை உருவாக்கி அதிலே தமக்குத் தாமே நிரந்தர உறுப்புரிமையினையும், வீட்டோ அதிகாரத்தினையும் வழங்கித் தம்மைப் பலப்படுத்திக் கொண்டன. எல்லா நாடுகளும் அரசியல் இறைமையினைக் கொண்டிருந்தாலும் ஐ​.நாவின் பாதுகாப்புக் கவுன்சில் போன்ற அமைப்புக்கள் ஒரு சில நாடுகள் பேரரசுகள் போலவும், ஏனைய நாடுகளின் விடயங்களைத் தீர்மானிக்கும் சக்திகளாகவும் தொழிற்பட்டன என்கிறார் ஜோஸ் மனுவேல் பராற்றோ.

சர்வதேச நீதிக் கட்டமைப்புக்குரிய ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் சர்வதேச நீதிமன்றம் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்றவற்றினால் கூட காசா இனவழிப்பினை நிறுத்தவோ, அதற்குப் பொறுப்பானோரினைத் தண்டிக்கவோ முடியவில்லை. அவை ஏகாதிபத்தியத்திற்கு முண்டு கொடுக்கும் வகையிலேயே தொடர்ந்தும் தொழிற்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்தினைப் போலவே 1940களிலே பேரரசுகள் தமது காலனிகளுக்கு அரசியல் இறைமையினை வழங்க முற்பட்ட வேளையில் உருவாக்கப்பட்ட மற்றொரு அமைப்பே சர்வதேச நாணய நிதியம். சர்வதேச நாணய நிதியம் அமெரிக்காவின் பொருளாதார‌ ஆதிக்கத்தினை பிரித்தானியாவின் உதவியுடன் முன்னெடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாக இருக்கிறது என ரிச்சாட் பீட் என்ற அறிஞர் குறிப்பிடுகிறார். நிதியத்திலே மேற்கொள்ளப்பட்டும் தீர்மானங்கள் தொடர்பிலே வாக்கெடுப்பு மேற்கொள்கையில் அமெரிக்காவின் நிலைப்பாடுகள் வெல்லக்கூடிய வகையிலே அந்த அமைப்பு உருவாக்கப்பட்டது எனவும் அவர் கூறுகிறார். இது காலனியாதிக்கத்தின் முடிவு என்று சொல்லப்பட்ட ஒரு காலப் பகுதியில் மேலைத்தேய நாடுகள், பொருளாதார நீதியின் அடிப்படையில் தாம் மேற்கொண்ட சுரண்டல்களுக்கான தீர்வாக‌ வள, நிதி மீள்பகிர்வினை மேற்கொள்ளாது, தற்போதைய தென் பூகோள நாடுகளைத் தொடர்ந்தும் பொருளாதார ரீதியில் தங்கியிருக்கச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட அமைப்பே. இலங்கை உட்பட தென் பூகோளத்தின் பல நாடுகளும் இன்று சர்வதேச நாணய நிதியத்தின் பிடியில் அகப்பட்டிருப்பதனை நாம் காண்கிறோம். அவற்றின் பொருளாதார நெருக்குதல்களினாலும், நிபந்தனைகளினாலும் உள்ளூர் மக்கள் தொடர்ந்தும் பாரிய பொருளாதாரப் பாதிப்புக்களை அனுபவிக்கிறார்கள்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை, சர்வதேச நாணய நிதியம் போன்றன நாம் தொடர்ந்தும் காலனியத்தின் பிடியில் இருப்பதனையே காட்டுகின்றன. அவற்றினை உலக சமாதானத்தினை உருவாக்குவதற்கான‌ அமைப்புக்களாகவும், நாடுகளுக்கு இடையில் கூட்டுறவினை உருவாக்கும் அமைப்புக்களாகவும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கும் அமைப்புக்களாகவும் காண்பிக்கும் முயற்சிகள், கதையாடல்கள் குறித்து நாம் மிகவும் விழிப்புடன் இருப்பது அவசியம். இவை அரசியல் நீக்கம் செய்யப்பட்ட கருத்தாடல்கள். இவை ஏகாதிபத்தியத்திற்கு வெள்ளைப் பூச்சிடும் அறிவுருவாக்கச் செயன்முறைகளே. காசாவில் இடம்பெறும் இனவழிப்பாக இருக்கலாம்; இலங்கை போன்ற நாடுகள் எதிர்கொள்ளும் கடன் பிரச்சினைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்படும் நவதாராளவாத ரீதியான‌ தீர்வுகளாக இருக்கலாம்; இவை தொடரும் காலனியத்தின் வடிவங்களாகப் பார்க்கப்பட வேண்டியவை. காலனிய நீக்கம் அரசியல், பொருளாதார நீதியின் அடிப்படையில் நடைபெறவில்லை என்பதனையும், நாடுகளுக்கு இடையிலான சமத்துவத்தின் அடிப்படையில் நடைபெறவில்லை என்பதனையும் இவை எமக்கு உணர்த்துகின்றன.

இந்த வகையிலே தென் பூகோள நாடுகளுக்கு 20ஆம் நூற்றாண்டிலே கிடைத்த ‘அரசியல் இறைமையினை’ நாம் எவ்வாறு விளங்கிக் கொள்ளுவது என்ற கேள்வி எழுகிறது. காசாவின் இனப்படுகொலையினையும், இலங்கை போன்ற நாடுகள் எதிர்கொள்ளும் கடன் பிரச்சினை தொடர்பிலே சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் தீர்வுகளின் மூலம் எம் மீது ஏற்படுத்தப்படும் பிடியினையும் எடுத்து நோக்குகையில், நாம் அரசியல் இறைமை என்று கருதுகின்ற‌ விடயம் உள்ளடக்க ரீதியிலே பலமற்ற ஒரு கோது போன்றதாகவே இருக்கிறது என்பதனை உணர முடிகிறது. அதனை அரசியல் இறைமை என்பதற்குப் பதிலாகப் பேரரசுகளின் ஆட்சியின் புதிய வடிவம் அல்லது புதிய‌ தொழினுட்பம் என விளங்கிக்கொள்ளுவது கூடுதல் பொருத்தமாக இருக்கும்.

காலனிய நீக்கம் என்பது வெறுமனே எமக்கென ஒரு நாடாளுமன்றத்தினைக் கொண்டிருப்பதனையும், எமது ஆட்சியாளர்களை நாமே தேர்தல் மூலம் தெரிவு செய்வதுடன் நின்றுவிடக்கூடாது. அது காலனியத்தின் முன்னைய சுரண்டல்களுக்கும், அநியாயங்களுக்கும் வள, நிதி மீள்பகிர்வுடன் கூடிய நீதியினை வழங்க வேண்டும். உலகின் பெரும்பான்மையான மக்களின் போராட்டங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் செவிசாய்த்து சமகால சர்வதேச ஒழுங்கு காசா இனப் படுகொலையினை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அது வழி செய்திருக்க வேண்டும். இனப் படுகொலைக்குப் பொறுப்பானவர்கள் நீதியின் முன்னிறுத்தப்பட வழி செய்திருக்க வேண்டும். இவை எதுவுமே நடைபெறவில்லை என்பது காலனிய நீக்க அரசியலின் தோல்வியாகவே பார்க்கப்பட வேண்டும்.

இந்த அடிப்படையிலே இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள், இனவழிப்புச் செயன்முறைகளுக்கான சர்வதேச நீதி குறித்தும் நாம் சிந்திக்க வேண்டியது அவசியம். காலனியாதிக்கத்தின் நலன்களுக்காகச் செயற்படும் ஐக்கிய நாடுகள் அமையத்தின், குறிப்பாக அதன் பாதுகாப்புக் கவுன்சிலின் பக்கத்தில் இருந்து உண்மையிலேயே எமக்கு நீதி கிடைக்குமா? பேரரசுகளின் பிடியில் இருக்கும், பேரரசுகளின் ஒரு இயந்திரமாக இருக்கும் நிறுவனங்கள் தமது பொருளாதார, அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்தக் கூடிய மக்களாக எம்மைக் கருதினால் மாத்திரமே எம் மீது குறைந்தபட்சம் ஒரு போலிக் கரிசனையினையாவது காட்டும். இந்த நிறுவனங்கள் நீதியின் பாற்பட்டவை அல்ல. மாறாக காலனியத்தின் வடிவங்கள். எனவே இவற்றினைச் சீர்செய்து நீதிக்குரிய நிறுவனங்களாக நாம் மாற்றும் வரை இவற்றிடம் இருந்து நீதியினைப் பெறுவது கடினம்.

இந்த நிலைமைகள் வெளிப்படுத்தும் செய்தி என்னவெனில், அரசியல் இறைமை என்ற மாயைக்குள் மூழ்கி இருக்காமல் உலகின் மக்கள் காலனியாதிக்கத்தினை ஒரு தீவிரமான, சமகாலப் பிரச்சினையாக எடுத்து அதற்கெதிராகத் தொடர்ந்தும் குரல் கொடுக்கவும், போராடவும் வேண்டிய தேவை இருக்கிறது என்பதாகும்.

மகேந்திரன் திருவரங்கன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆங்கிலத் துறையிலே சிரேஸ்ட விரிவுரையாளாராகக் கடமையாற்றுகிறார்.