Photo, President’s Media Division

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் பல அம்சங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. ஒரு தசாப்த காலத்திற்குள்  நான்கு தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்த ஒரு இந்திய பிரதமராக மாத்திரமல்ல, ஒரேயொரு வெளிநாட்டுத் தலைவராகவும் மோடியே விளங்குகிறார். கடந்தவார விஜயத்துக்கு முன்னதாக அவர் மூன்று தடவைகள் இலங்கைக்கு வந்திருந்தார்.

2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் மோடி இலங்கைக்கு மேற்கொண்ட மூன்று நாள் விஜயம் 28 வருடங்களுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவரின் இலங்கைக்கான முதலாவது இரு தரப்பு விஜயமாக அமைந்தது (அதற்கு முதல் இறுதியாக இருதரப்பு விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு வந்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியே ஆவார். இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக அவர் வந்தார்). தனது முதலாவது விஜயத்தின் போது இலங்கை நாடாளுமன்றத்திலும் மோடி உரையாற்றினார்.

அடுத்ததாக அவர் 2017 மே மாதத்தில் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச வெசாக் தினக் கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராக மோடி  கலந்து கொண்டார். 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு ஆறு வாரங்கள் கழித்து ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் மோடி மீண்டும் இலங்கைக்கு  வந்தார். தாக்குதல்கள் இடம்பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றான கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தை பார்வையிட்டதுடன் அவர் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இலங்கைக்கு தனது நாட்டின் ஒருமைப்பாட்டையும் வெளிக்காட்டினார். அவரின் அந்த மூன்று விஜயங்களும் முன்னாள்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலத்திலேயே இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக மூன்று தடவைகள் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டதால் மோடியால் அடுத்தடுத்து நான்கு தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்யக்கூடியதாக இருந்தது. மூன்று வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட முன்னென்றும் இல்லாத பொருளாதார நெருக்கடியை அடுத்து மூண்ட மக்கள் கிளர்ச்சிக்குப் பிறகு பெருமளவுக்கு மாற்றமடைந்த அரசியல் சூழ்நிலையில் இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக இடதுசாரி அரசியல் கட்சி ஒன்று, அதுவும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இரு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட ஒரு கட்சி அதிகாரத்துக்கு வந்திருக்கும் பின்புலத்தில் விஜயம் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு தலைவராக மோடி விளங்குகிறார்.

மோடியின் கடந்த வாரத்தைய விஜயம் குறித்து கருத்துக்களை வெளியிட்ட அரசியல் அவதானிகள் பலரும் ஊடகங்களும் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ அரசியல் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) இந்திய விரோத கடந்த காலத்தை நினைவுபடுத்துவதற்கு தவறவில்லை. 1987 ஜூலை இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதை அடுத்து ஜே.வி.பி. மிகவும் தீவிரமான இந்திய விரோத பிரசாரத்துடன் அதன் இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சியை முன்னெடுத்த காலப் பகுதியில் பல்கலைக்கழக மாணவனாக அந்த இயக்கத்தில் இணைந்து செயற்படத் தொடங்கிய ஜனாதிபதி திசாநாயக்க தற்போது ஒரு இந்திய பிரதமரை வரவேற்கிறார்  என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து தனியாக இயங்குவோரின் முன்னரங்க சோசலிஸ்ட் கட்சி, 54 வருடங்களுக்கு முன்னர் ஜே.வி.பியின் முதலாவது ஆயுதக் கிளர்ச்சி தொடங்கிய அதே தினத்தில் (ஏப்ரல் 5) ஜனாதிபதி திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ‘விஸ்தரிப்புவாத’ இந்தியாவின் பிரதமருக்கு செங்கம்பள வரவேற்பு அளிப்பதாக குற்றஞ்சாட்டியதையும் காணக்கூடியதாக இருந்தது.

ஜே.வி.பி. இந்திய விரோத கடந்த காலத்தைக் கொண்டிருக்கிறது என்பது உண்மையே. ஆனால், அந்த கட்சியினர் கடந்தகால கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் பெருமளவுக்கு கைவிட்டு சமகால உள்நாட்டு மற்றும் சர்வதேச புவிசார் அரசியல் நிவைரங்களுக்கு இசைவான முறையில் தங்களை தகவமைத்துக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? இந்திய விரோதக் கொள்கைகளை ஜே.வி.பி. தொடர்ந்தும் உறுதியாக கடைப்பிடித்திருக்க வேண்டும் என்பதா அதன் கடந்த காலத்தை நினைவுபடுத்தி விமர்சனங்களை முன்வைப்பவர்களின் விருப்பம்?

ஜே.வி.பி.யின் கடந்த காலத்தைப் பற்றி இந்தியாவே கவலைப்படாத நிலையில் அத்தகைய விமர்சனங்கள் அர்த்தமற்றவையாகி விடுகின்றன. அண்மைக் காலத்தில் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை வளர்ப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயற்படும் ஒரு இலங்கை அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அடையாளம் காணப்படுவது முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு அம்சமாகும்.

ஜே.வி.பியின் ஆதிக்கத்தில் உள்ள அரசாங்கம் ஒன்று புதுடில்லியுடன் நட்பார்வமில்லாத ஒரு உறவுமுறையையே கொண்டிருக்கும் என்றும் இந்தியாவுக்கு பாதகமான முறையில் சீனாவுடனான உறவுகளுக்கே அது கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் ஒரு எண்ணம் பரவலாக இருந்தது. இந்தியாவின் பாதுகாப்பு அக்கறைகளில் தேசிய மக்கள் சக்தி பெருமளவுக்கு உணர்திறனை வெளிக்காட்டாமல் போகக்கூடும் என எதிர்பார்த்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அவை எல்லாவற்றையும் ஜனாதிபதி திசாநாயக்கவின் அரசாங்கம் அதன் செயற்பாடுகள் மூலம் பொய்யாக்கிவிட்டது.

பிரதமர் மோடியின்  விஜயம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் நெருக்கமானவையாக இருப்பதையும் புதுடில்லியுடன் உறவுகளை மேம்படுத்துவதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கருத்தூன்றிய அக்கறையுடன் செயற்படுவதையும் தெளிவாக வெளிக்காட்டியிருக்கிறது. வெளிநாட்டு தலைவர்களுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கும் அதியுயர் கௌரவ விருதான ‘ஸ்ரீலங்கா மித்ர விபூஷண’ மோடிக்கு வழங்கப்பட்டிருப்பதையும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதையும் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நெருக்கமான உறவுகளுக்கு சான்றாக இந்தியாவின் முக்கியமான சில தேசியப் பத்திரிகைகள் ஆசிரிய தலையங்கங்களில் சுட்டிக்காட்டியிருந்தன.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை கடந்த வெள்ளிக்கிழமை (11/4) “மோடியின் விஜயம் புதுடில்லிக்கு நெருக்கமாக கொழும்பை கொண்டுவந்திருக்கிறது” என்ற தலைப்பில் தீட்டியிருக்கும் ஆசிரிய தலையங்கத்தில் “பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் மூலோபாய நம்பிக்கையை வலுப்படுத்தியிருப்பதுடன் ஒத்துழைப்பை மேலும் வளர்த்து இரு நாடுகளுக்கும் இடையில் தீர்வுகாணப்படாமல் இருக்கும் பிரச்சினைகளை கையாளுவதற்கான அரங்கை அமைத்துக் கொடுத்திருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறது.

மோடியின் விஜயத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். அந்த உடன்படிக்கையைப் பொறுத்தவரை, இலங்கை சுதந்திரமடைந்தபோது பிரிட்டனுடன் செய்துகொண்ட பாதுகாப்பு உடன்படிக்கைக்கு (அது பண்டாரநாயக்க ஆட்சியில் 1956ஆம் ஆண்டில் இரத்து செய்யப்பட்டது) பிறகு அதையொத்த உடன்படிக்கை ஒன்று முதன் முதலாக வெளிநாடு ஒன்றுடன் இலங்கை அரசாங்கத்தினால் செய்து கொள்ளப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் டிசம்பரில் ஜனாதிபதி திசாநாயக்க புதுடில்லிக்கு மேற்கொண்ட விஜயம் உட்பட முன்னைய சந்தர்ப்பங்களில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தே இந்தப் பாதுகாப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவது சாத்தியமாகியிருக்கிறது.

ஏற்கெனவே இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்புத்துறையில் நிலவும் ஒத்துழைப்பு செயற்பாடுகளை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுவருவதாக இந்த உடன்படிக்கை அமைந்திருக்கிறது என்று இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்றி கொழும்பில் ஊடகங்களிடம் கூறினார்.

இந்தியாவும் இலங்கையும் பொதுவான பாதுகாப்பு நலன்களைக் கொண்டிருப்பதுடன் அவற்றின் பாதுகாப்பு ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்ததாக மாத்திரமல்ல, பரஸ்பரம் தங்கியிருக்கிறது என்று கூறிய பிரதமர் மோடி இந்தியாவின் நலன்கள் மீது ஜனாதிபதி திசாநாயக்க கொண்டிருக்கும் அக்கறைக்காக நன்றியுடையவனாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, ஜனாதிபதி திசாநாயக்க முன்னைய சந்தர்ப்பங்களில் கூறியதைப் போன்று இந்தியாவின் பாதுகாப்புக்கும் பிராந்திய உறுதிப்பாட்டுக்கும் எதிராக இலங்கையின் பிராந்தியம் பயன்படுத்தப்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று மீண்டும் உறுதியளித்தார்.

சென்னை ‘தி இந்து’ பத்திரிகை ஏப்ரல் 8ஆம் திகதி அதன் ஆசிரிய தலையங்கத்தில்  பாதுகாப்புத் துறையில் குறிப்பிட்ட சில ஏற்பாடுகளை புரிந்துணர்வு உடன்படிக்கை இருதரப்பு அடிப்படையில் விதிமுறைப்படுத்தியிருக்கின்ற போதிலும், பாதுகாப்பு ஒத்துழைப்பில் கருத்தூன்றிய கவனத்துடன் செயற்படுவதில் மெய்யான அக்கறை கொண்டிருப்பதை நிரூபிக்க வேண்டியது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொறுப்பேயாகும் என்றும் திருகோணமலை துறைமுகமோ அல்லது இலங்கையின் வேறு எந்தத் துறைமுகமுமோ இந்தியாவுக்கு எதிராக மூன்றாவது நாடொன்றினால் பயன்படுத்தப்படுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று 1987ஆம் ஆண்டில் காணப்பட்ட புரிந்துணர்வு இந்தியாவின் ஐயுறவுகளை அகற்றுவதற்கு உதவவில்லை என்பதை இலங்கை உணர்ந்து கொள்வது அவசியம் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

பிரதமர் மோடியினதும் ஜனாதிபதி திசாநாயக்கவினதும் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு புறம்பாக மின்விநியோகம், சுகாதாரம், மருந்து உற்பத்தி, டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் கிழக்கு மாகாணத்துக்கான நலத்திட்டங்கள் தொடர்பாக வேறு ஆறு புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்தாகின. இந்த உடன்படிக்கைகளில் அடங்கியிருக்கும் ஏற்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகளினால் கிளப்பப்படும் சந்தேகங்களுக்கு கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பதிலளித்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் சகல உடன்படிக்கைகளும் அமைச்சரவையினாலும் சட்டமா அதிபரினாலும் அங்கீகரிக்கப்பட்டவையே என்றும் அவற்றில் எந்த ஒன்றுமே சட்டவிரோதமானவை அல்ல என்றும் கூறினார்.

பாக்குநீரிணை மீனவர் தகராறு

இது இவ்வாறிருக்க, கடந்த வாரத்தைய பேச்சுவார்த்தைகளின்போது இரு தரப்புகளுக்கும் இடையில் ஓரளவு முரண்பாடு வெளிக்காட்டப்பட்ட விவகாரம் என்றால் அது மீனவர் பிரச்சினையேயாகும். இரு தலைவர்களும்  மீனவர் பிரச்சினை குறித்து  தாங்கள் ஆராயந்ததாக அறிக்கைகளில் குறிப்பிட்டனர்.

மீனவர் பிரச்சினையில் மனிதாபிமான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது தொடர்பில் இலங்கை ஜனாதிபதியுடன் இணங்கிக்கொண்டதாகக் கூறிய பிரதமர் மோடி இந்திய மீனவர்களும் அவர்களின் படகுகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அதேவேளை, நிலைபேறான தீர்வொன்றைக் காண்பதற்கு ஒத்துழைப்பு அணுகுமுறை அவசியம் என்று  ஜனாதிபதி திசாநாயக்க வலியுறுத்தினார். இழுவைப் படகுகளினால் கடல்சார் சுற்றுச் சூழலுக்கு விழைவிக்கப்படுகின்ற சேதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறிய அவர் சட்டவிரோத மீன்பிடியை நிறுத்துவதற்கு உடனடியாக தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இலங்கையின் வட பகுதி மீனவர்களைப் பெரிதும் பாதிக்கின்ற மீனவர் பிரச்சினைக்குத் தீர்க்கமான தீர்வொன்றைக் காணுமுகமாக இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடைசெய்ய வேண்டும் என்று இந்திய பிரதமரிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டனர்.

கொழும்பில் செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய இந்திய வெளியுறவு செயலாளர் மீனவர் பிரச்சினை குறித்து இரு தரப்பினரும் கணிசமானளவுக்கு விரிவாக ஆராய்ந்ததாகவும் இது மீனவர்களின் அன்றாட வாழ்வாதாரத்துடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் அண்மைக்காலத்தில் எடுத்த குறிப்பிட்ட சில நடவடிக்கைகளை இலங்கையினால் மீள்பரிசீலனை செய்யமுடியும் என்று பிரதமர் மோடி பேச்சுக்களின்போது வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிப் பிரவேசித்து சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களைக் கைதுசெய்வதையும் அவர்களின் படகுகளை கைப்பற்றுவதையுமே இலங்கை மேற்கொண்ட – மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய அண்மைக்கால நடவடிக்கைகள் என்று மோடி கூறியிருக்கிறார் என்பது தெளிவானது.

இனப்பிரச்சினை

இதனிடையே, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நீண்டகாலமாக  சர்ச்சைக்குரியதாக இருந்துவந்த தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியா, இலங்கை அரசாங்கத்துக்கு அசௌகரியத்தைக் கொடுக்கக்கூடிய அணுகுமுறை எதையும் இனிமேல் கடைப்பிடிக்கப் போவதில்லை என்பதையும் பிரதமர் மோடியின் விஜயம் வெளிக்காட்டியிருக்கிறது.

இருதரப்பு உறவுகளுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்குள் தமிழர் பிரச்சினையை இந்தியா கொண்டுவருவதை கொழும்பு இனிமேலும் விரும்பவில்லை என்பது ஏற்கெனவே தெளிவாக வெளிக்காட்டப்பட்டிருக்கிறது. அண்மைய தசாப்தங்களாக இந்திய அரசாங்கங்களும் தமிழர் பிரச்சினையில் இலங்கையுடன் முரண்படக்கூடிய அணுகுமுறைகளை கடைப்பிடிப்பதை தவிர்த்து வந்திருக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்‌ஷ, கோட்டபாய ராஜபக்‌ஷ, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் புதுடில்லிக்கு மேற்கொண்ட விஜயங்களின்போது அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் மோடி கடந்த வருடம் டிசம்பரில் ஜனாதிபதி திசாநாயக்கவிடம் அவ்வாறு பிரத்தியேகமாக வலியுறுத்துவதை தவிர்த்தார். உள்நாட்டில் திசாநாயக்கவுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியதாக எதையும் சொல்லிவிடக்கூடாது என்பதில் மோடி எச்சரிக்கையாக இருக்கிறார் என்று தெரிகிறது.

புதுடில்லியில் திசாநாயக்கவுடன் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் மகாநாட்டில் மோடி இலங்கை அரசாங்கம் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதுடன் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார். கடந்தவாரம் கொழும்பில் கூட்டு செய்தியாளர்கள் மகாநாட்டிலும் மோடி மீண்டும் அதையே கூறினார். 13ஆவது திருத்தம் பற்றி எதையும் அவர் கூறவில்லை.

“இலங்கை ஜனாதிபதியுடன் புனரமைப்பு மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக ஆராய்ந்தேன். சகல சமூகங்களையும் அரவணைக்கும் தனது அணுகுமுறையை எனக்கு அவர் விளக்கிக் கூறினார். இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் என்றும் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மற்றும் மாகாண சபை தேர்தல்களை நடத்துவது தொடர்பிலான கடப்பாட்டை நிறைவு செய்யும் என்றும் நாம் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம்” என்று மோடி கூறினார்.

ஜனாதிபதி திசாநாயக்க புதுடில்லியிலும் கொழும்பிலும் தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய பிரதமர் விடுத்த வேண்டுகோள்களுக்கு பதிலளிப்பதை தவிர்த்தார். உள்ளூராட்சித் தேர்தல்களுக்கு பிறகு மாகாண சபை தேர்தல்களை நடத்துவதாக மோடியிடம் திசாநாயக்க கூறியதாக தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி சில கொழும்பு பத்திரிகைகள் கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தன.

தமிழ்க்கட்சிகள் சந்திப்பு

இலங்கை தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகியவற்றின் தலைவர்கள் இந்திய பிரதமரைச் சந்தித்து தங்களது நிலைப்பாடுகளை எடுத்துக்கூறினர்.

அர்த்தமுடைய அதிகாரப் பரவலாக்களை நோக்கிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்தை இந்தியா ஊக்குவிக்க வேண்டும் என்று அவரிடம் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஜனாதிபதி திசாநாயக்க முன்னிலையில் தமிழர் பிரச்சினை தொடர்பாக கூறியதைத் தவிர வேறு எதையும் பிரதமர் மோடி தமிழ் அரசியல் தலைவர்களிடம் கூறியதாகத் தெரிய வரவில்லை.

ஆனால், தமிழர் பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு அனுசரணையாகச் செயற்படுவதில் இந்தியாவின் பாத்திரத்தையும் 1987 இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துவதற்கு தமிழ்க்கட்சிகளுக்கு மோடியின் விஜயம் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

மலையகக் கட்சிகள்

மலையக தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும் பிரதமர் மோடியைச் சந்தித்தனர். இந்தக் சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தாங்கள் இந்திய பிரதமரிடம் அரசியல் கோரிக்கை எதையும் முன்வைத்து அவர்களுக்கு சுமையை அதிகரிக்க விரும்பவில்லை என்றும் மலையக மக்களின் நல்வாழ்வுக்காக சமூக – பொருளாதார உதவிகளையே தற்போது இந்தியாவிடம் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளை முன்னெடுக்கும்போது மலையகக் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதை நோக்கிய யோசனைகளை முன்வைத்து பேச்சுவார்த்தைகளை நடத்தப்போவதாக மனோ கணேசன் குறிப்பிட்டார்.

சமகால புவிசார் அரசியல் நிலைவரங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுவதில் ஜனாதிபதி திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தீவிரமான அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு அசௌகரியத்தைக் கொடுக்கக்கூடிய அணுகுமுறைகளைத் தவிர்த்து இந்தியாவின் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களைப் பேணிக்காப்பதில் மோடி அரசாங்கம் மிகுந்த நிதானத்துடன் செயற்படுகின்றது என்பதுமே தற்போதைய இந்திய – இலங்கை உறவுச் சமநிலையில் இருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடிய யதார்த்தமாகும்.

தேசிய மக்கள் சக்திக்கு சீனாவுடன் அரசியல் ரீதியில் என்னதான் நெருக்கம் இருந்தாலும், சீனாவையும் இந்தியாவையும் சமதூரத்தில் வைத்து உறவுகளைப் பேணவேண்டிய நிர்ப்பந்த நிலையில் அரசாங்கம் இருக்கிறது. இன்றைய புவிசார் அரசியல் நிலைவரங்களின் அடிப்படையில் நோக்கும்போது அரசாங்கம் ஒன்று அதிகாரத்தில் நீடிப்பதற்கு உள்நாட்டில் மக்களின் ஆதரவு மாத்திரமல்ல, சர்வதேச சமூகத்தின் வல்லாதிக்க நாடுகளின் ஆதரவும் அனுசரணையும் கூட அவசியமாகிறது. அதனால், ஜனாதிபதி திசாநாயக்க தனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டுக்கு அயல்நாடான இந்தியாவின் ஒத்துழைப்பின் அவசியத்தை நிச்சயமாக புரிந்துகொண்டிருப்பார் என்று நம்பலாம்.

மாறிவரும் மனோபாவம்

தேசிய மக்கள் சக்தி/ ஜே.வி.பியின் கடந்தகால இந்திய விரோத கொள்கைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தென்னிலங்கையில் இந்திய விரோத சிந்தனைகளிலும் ஒரு மாற்றத்துக்கு வழிவகுத்திருக்கிறது போன்று தெரிகிறது. இந்தியாவுடன் ஒத்துழைத்துச் செயற்படாவிட்டால் பொருளாதார நெருக்கடியில் இருந்து முழுமையாக மீட்சி பெறமுடியாது என்றும் கடந்தகால மனோபாவங்களை கைவிட்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியுடன் இலங்கை தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பரவலாக ஒரு எண்ணம் வளர ஆரம்பித்திருப்பதை உணரக்கூடியதாக இருக்கிறது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் பெருமளவுக்கு சுமூகமானவையாக இருக்கும் என்றும் பொருளாதார ஊடாட்டங்களுக்கும் வளர்ச்சிக்கும் ஏராளமான வாய்ப்புகள் இருக்கும் என்றும் முக்கியமான அரசியல் மற்றும் பொருளாதார நிபுணர்களும் அவதானிகளும் அபிப்பிராயம் வெளியிடுவதை காணக்கூடியதாக இருக்கிறது.

இந்தியாவுக்கு விரோதமான கொள்கையுடன் தொடங்கப்பட்ட ஒரு அரசியல் இயக்கத்தின் தலைமையின் கீழான ஆட்சியில் இந்தியாவுடனான உறவுகள் மற்றைய கட்சிகளின் அண்மைய ஆட்சிக் காலங்களில் இருந்ததையும் விட மிகவும் சுமுகமானதாகவும் நெருக்கமானதாகவும் இருக்கின்ற ஒரு சுவாரஸ்யமான அரசியல் நிலைவரத்தைக் காண்கிறோம்.

இதனிடையே ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தாங்கள் அல்ல இந்தியாதான் மாறியிருக்கிறது என்றும் இந்தியா முன்னரைப் போன்று இப்போது இல்லை என்பதாலேயே இரு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கைகளை செய்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது என்றும் கூறுகின்றார்.

வீரகத்தி தனபாலசிங்கம்