Photo, TAMILGUARDIAN
தையிட்டியில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் திஸ்ஸ ராஜமகா விகாரையை அகற்றக் கோரி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார். தொடக்கத்தில் – இரண்டு ஆண்டுகளுக்கு முன் – கஜேந்திரகுமாருக்கு நெருக்கமான பத்து இருபது பேருடன், சிறிய வட்டத்திலிருந்த போராட்டம் இப்பொழுது ஈ.பி.டி.பியினர் உட்படப் பல்வேறு தரப்பினர் கலந்து கொள்கின்ற அளவுக்குச் சற்றுப் பெரிய வட்டமொன்றாக விரிந்துள்ளது.
ஆனாலும் இந்தப் போராட்டம் வெற்றியளிக்குமா? இது புதிய அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுக்குமா? இந்தப் போராட்டத்தைத் தேசிய மக்கள் சக்தி எப்படிக் கையாளப்போகிறது? வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதற்கு இது உதவுமா? இந்தப் போராட்டத்துக்கு இலங்கை தமிழரசுக் கட்சி உட்பட ஏனைய தரப்பின் முழுமையான ஆதரவு கிட்டுமா? மத விவகாரத்துடன் இந்த விடயம் இணைந்துள்ளதால், தேசிய ஒருமைப்பாட்டை இது நெருக்கடிக்குள்ளாக்குமா? அந்த வகையில் உணர்ச்சிகரமான எதிர்விளைவுகளை உண்டாக்குமா? என்று பல கேள்விகளை இது எழுப்புகிறது.
முதலில் இதொரு சட்டப் பிரச்சினையாகும். எப்படியென்றால் –
- இந்த விகாரை அமைந்துள்ள காணி தனிப்பட்ட உரிமையாளர்களுக்குச் சொந்தமானது.அதாவது மக்களுடைய வாழிடமாகும்.ஆகவே, அவர்களுடைய காணியில் அவர்களுடைய அனுமதியைக் கோராமல் விகாரையை அமைத்தது தவறு. பௌத்த அடையாளங்கள், தொன்மையான எச்சங்கள் அங்கே இருப்பதாக விகாரையை அமைக்கும் தரப்பு வாதிட்டால், ஏற்கனவே அதற்குரிய ஆதாரங்களை முன்வைத்து, வர்த்தமானி அறிவித்தலைச் செய்து, காணி உரிமையாளர்களிடமிருந்து காணியை அரசாங்கத்தின் மூலமாகப் பொறுப்பேற்றிருக்க வேண்டும். அதற்குப் பின் உரிய முறைப்படி அரசாங்கம் காணியை விகாரை அமைக்கின்ற தரப்புக்கு விதிமுறைப்படி வழங்கியிருக்க வேண்டும். இதெல்லாம் விதிமுறைகளின்படி நடந்திருந்தால்தான் சட்டத்துக்குட்பட்டதாக இருந்திருக்கும். ஆனால், இவை எதுவுமே நடக்கவில்லை.
- அப்படித்தான் அரசாங்கம் முறைப்படி நடந்து விகாரையை அமைப்பதற்கான அனுமதியைக் கொடுத்திருந்தாலும் அதற்குப் பின், விகாரையை அமைப்பதற்கான அனுமதியை குறித்த பிரதேசத்துக்குரிய பிரதேச சபையிடமோ, நகரசபையிடமோ குறித்த தரப்புப் பெற்றிருக்க வேண்டும்.அப்படி எதுவும் நடக்கவில்லை.
- இந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் நல்லாட்சிக் காலத்திலிருந்தே விவாதிக்கப்பட்டுள்ளது.ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்தின்படி குறித்த விகாரையைக் கட்டும் பணிகள் நிறுத்தப்பட வேண்டும் என்றே வலியுறுத்தப்பட்டுள்ளது.அதையும் மீறியே விகாரையின் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆகவே, இங்கும் அரசாங்கத்தின் நடைமுறை விதிகள் மதிக்கப்படாமல் மீறப்பட்டுள்ளன. அதாவது, ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்களை நாட்டின் உயர் பீடத்தினர் மதிக்காமல் மீறி நடப்பதென்பது, அதனுடைய இயங்கு திறனையும் அடிப்படையையும் செயலிழக்க வைப்பதாகும். இது தற்போதைய ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்களுக்கு முரணான – மீறிய – செயல்கள் தொடர்ந்தும் நடப்பதற்கான முன்மாதிரியை இது உருவாக்குவதாகவே அமையும்.
ஆக மொத்தத்தில் மூன்று இடங்களில் சட்டத்துக்கு முரணான முறையில் விகாரை அமைக்கப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகிறது. என்பதால், இதற்கான பொறுப்பை அரசாங்கமும் விகாரையை அமைத்த தரப்பினரும் ஏற்க வேண்டும். பொறுப்பை ஏற்றுக் கொள்வதென்பது, அதற்கான நிவாரணத்தை அளித்தலாக இருக்கவேண்டும். அத்துடன், தமது தவறுக்காக தண்டனையைப் பெற வேண்டும்.
ஏனென்றால், அரசாங்கமானது எப்போதும் சட்டத்தையும் அதன் விதிகளையும் மதித்து நடந்து தன்னை முன்னுதாரணமாக்க வேண்டும். அப்போதுதான் மக்களும் அதைப் பின்தொடர்வர். அரசாங்கமே அதை மீறினால் மக்களும் அதை மீறவே முயற்சிப்பர்.
அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழி.
இங்கே அடிப்படைப் பிரச்சினைகளாக இருப்பது –
- யுத்தகாலத்தில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தனியாருக்குச் சொந்தமான(மக்களின் குடியிருப்பு மற்றும் பயிர்ச்செய்கைக்கான) காணிகள், யுத்தம் முடிந்து15 ஆண்டுகளுக்குப் பின்னரும் மக்களிடம் மீளளிக்கப்படவில்லை. இன்னும் அவை படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள பாதுகாப்பு வலயங்களாகவே உள்ளன. இந்த நிலை வடக்குக் கிழக்கு முழுவதிலும் உண்டு.
- பாதுகாப்பு வலயங்களாக இருப்பதால்தான் அவற்றில் இவ்வாறான பிரச்சினைகள் உருவாகின்றன.வடக்குக் கிழக்கில் இதற்குப் பல உதாரணங்கள் உண்டு.யுத்தம் முடிந்து, விடுதலைப் புலிகள் முற்றாகவே அழித்தொழிக்கப்பட்ட பின்னர், எதற்காகப் படையினர் தனியார் காணிகளில் நிலை கொண்டிருக்க வேண்டும்? எதற்காக படை வலயங்கள் இன்னும் இருக்கின்றன? பாதுகாப்புத் தரப்பினருக்கு இன்னமும் அச்சமும் சந்தேகமும் பதற்றமும் நீங்கவில்லை என்றால், அவர்கள் தனியார் காணிகளை விட்டு நீங்கி, அரச காணிகளில் நிலை கொள்ளலாம். அதுதான் இயல்பு நிலையை உருவாக்குவதற்கு வாய்ப்பாகும். அரசாங்கத்தின் கொள்கையும் நடவடிக்கையிலும் ஒன்று யுத்த காலத்திலிருந்து மக்களை அமைதிக்காலத்துக்கு, நம்பிக்கையான சூழலுக்கு, இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டு வருதலாகும். அப்படியிருக்கும்போது, அதற்கு மாறாக மக்களின் காணிகளில் படை வலயங்கள் தொடருமாக இருந்தால் அமைதியும் சந்தேகமும் நம்பிக்கையீனமும் பகையுணர்ச்சியுமே மேலோங்கும். அதுவே இங்கே நிகழ்கிறது. அதனுடைய அடையாளமே இந்தப் போராட்டமும் இப்போது உருவாகியுள்ள நெருக்கடிச் சூழலுமாகும். இதைக் கவனப்படுத்த வேண்டிய பொறுப்பு சமாதான விரும்பிகள் அனைவருக்கும் உரியது. கூடவே தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்கள் அனைத்துக்கும் அனைத்து அரசியற் கட்சிகளுக்கும் உண்டு.
- யுத்தத்திற்குப் பிறகு மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆட்சி என15 ஆண்டுகள் கடந்துள்ளது.இப்பொழுது அநுர குமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக் காலம். எல்லா ஆட்சிக்காலத்திலும் அமைதி, நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, சமாதானம் பற்றிப் பேசப்படுகிறது. ஆயிரம் வார்த்தைகளை விட, நூறு பிரகடனங்களை விட, ஒரு செயல் போதும் நம்பிக்கையை உருவாக்குவதற்கு. அதையே அரசாங்கம் செய்ய வேண்டும். ஆம், அநுரவின் (தேசிய மக்கள் சக்தி) அரசாங்கம் செய்ய வேண்டும். இது மாற்று அரசாங்கம். மக்களுடைய ஆட்சி. மக்களுக்கான ஆளும்தரப்பு என்பதால், அதற்கமைய துணிகரமாக – மாற்று நடவடிக்கையாக – அமைதிக்கான, இயல்புச் சூழலின் உருவாக்கத்துக்கான வழிகளை உருவாக்க வேண்டும். இல்லையென்றால், முந்திய ஆட்சிக்கும் இப்போதுள்ள ஆட்சிக்கும் இடையில் என்ன வேறுபாடு? என்ற கேள்வியே மக்களிடம் எழும்.
- ஆகவே, அரசாங்கத்தின் பாதுகாப்புக் கொள்கை தொடர்பாக விஞ்ஞான பூர்வமான நிலைப்பாடு இங்கே முக்கியமாகிறது.இது தனியே பாதுகாப்பு அமைச்சின் தீர்மானமாக மட்டும் அமையாது.அரசியற் தரப்புடன் இணைந்த தீர்மானமாக இருக்க வேண்டும். ஏனென்றால், அரசியல் நெருக்கடிகளே (அரசியற் தவறுகளே) பாதுகாப்பு நெருக்கடிகளை – பாதுகாப்புப் பிரச்சினைகளை – பாதுகாப்பு அச்சுறுத்தல்களை உருவாக்கியது. ஆகவே, அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காணும்போது, அதற்கான சூழலை உருவாக்கும்போது, அரசியற் தவறுகளைச் சீராக்கும்போது பாதுகாப்புப் பிரச்சினைகள் இல்லாதொழிந்து விடும். எனவே, இதைக் குறித்து அரசாங்கம் (ஜனாதிபதி) ஆழமாகச் சிந்திக்க வேண்டும். சரியாகச் சிந்தித்துச் செயற்பட்டால், தேவையற்ற பாதுகாப்புச் செலவீனமும் குறையும் இந்த மாதிரிப் போராட்டங்களும் அரசியல் நெருக்கடிகளும் உருவாகாது.
- வடக்குக் கிழக்கில் படைகள் தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பதும் படை வலயங்கள் தொடர்ந்தும் இருப்பதும் வடக்குக் கிழக்கு வாழ் மக்களுக்கு மட்டுமல்ல, முழு இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்துகிறது.இன்னும் வடக்குக் கிழக்குப் பிரதேசங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்ற உணர்வே சிங்கள மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஏற்படுகிறது.அது அரசாங்கத்தின் தோல்வியையே குறிக்கிறது. அதாவது இலங்கை இன்னும் முழுமையான அமைதிக்குத் திரும்பவில்லை என்பதோடு, போரில் இன்னும் அரசுக்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. பாதி வெற்றியையே படைத்தரப்பு பெற்றுள்ளது. இன்னமும் அது தன்னுடைய அச்ச நிலையிலிருந்து மீளவில்லை. அதனால்தான் இந்தப் பாதுகாப்பு வலயங்களும் படைக்குவிப்புமாகும் என்பதாக.
- யுத்தம் முடிந்த பின்னும் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து, அபகரித்து வைத்திருப்பது, மக்களுக்கு அரசாங்கம் இழைக்கின்ற அநீதி என்பதோடு, மீள் குடியேற்ற விதிகளுக்கு முரணானதுமாகும்.கூடவே அந்த மக்களை மீள் நிலைக்குத் திரும்பவிடாது, அவர்களுடைய கிராமங்களை மீளுயிர்ப்புச் செய்யவிடாது அரசே தடுப்பது, அரசியற் தவறாகும். அத்துடன், மக்களுடைய உரிமையை மறுதலிக்கும் ஒரு செயற்பாடுமாகும்.
இவ்வாறு பல விதமான அரசியற் தவறுகளின் கூட்டு விளைவாகவே தையிட்டி விகாரைப் பிரச்சினை உள்ளது. தையிட்டிப் பிரச்சினை மட்டுமல்ல, அதைப்போலுள்ள ஏனைய பல பிரச்சினைகளும் உள்ளன. இவற்றைத் தீர்ப்பதற்கு அரசியல் வழிமுறையே சரியானது. அரசியல் உபாயங்கள் பெருமளவுக்குக் கை கொடுக்காது. ஏன் அரசியல் உபாயங்கள் கைகொடுக்காது என்றால், எதன்பொருட்டும் அரசாங்கம் மக்களுடன் சூதாட முடியாது. சூதாடக் கூடாது.
இப்போதுள்ள சூழலில், இந்தப் பிரச்சினைக்கும் இது போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்குச் சில வழிமுறைகளே உண்டு.
இங்கே அரசாங்கம் தெளிவாகவும் வெளிப்படையாகவும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அதைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
- கடந்த காலத் தவறுகளைச் சீராக்கும் நடவடிக்கையின் ஓரம்சமாக இந்த விடயங்களைச் சட்ட விதிமுறைகளின்படி அணுகுவது, தீர்வு காண்பது.இதற்குத் தயக்கம் இருந்தால் அரசாங்கம் எதையுமே செய்ய முடியாது.தவறுகள், தவறுகள்தான்.
- இணக்கமான முறையில்சம்மந்தப்பட்ட தரப்புகளோடு (பாதிக்கப்பட்ட மக்களோடு) பேசி உடன்பாடு காண்பது. இனிமேல் இதுபோன்ற தவறுகள் மீள நிகழாமைக்கு உத்தரவாதமளிக்க வேண்டும். அதற்கான சட்ட உத்தரவாதத்தை அளிப்பது அவசியமாகும்.
- அல்லது, நாட்டிலே பாரபட்சமும் பிரிவினையும் நிச்சயமாக உண்டு.படைத்தரப்பின் மூலமாக ஒடுக்குமுறை மேற்கொள்ளப்படுகிறது.வடக்குக் கிழக்கு மக்களின் அனைத்து உரிமைகளையும் வாழ்வையும் தீர்மானிக்கும் பொறுப்பு படைத்தரப்புக்கும் பௌத்த மேலாதிக்க சக்திகளுக்குமே உண்டு என வெளிப்படையாகச் சொல்லிவிடுவது. அப்படிச் சொல்லிவிட்டால், பிரச்சினையே இல்லை. அதற்குப் பிறகு அங்குள்ள மக்கள் அதை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றிச் சிந்திப்பார்கள். இப்படிச் சமாதானத்தைப் பேசிக் கொண்டு, ஏமாற்றப்படும் சமாதானத்துக்குப் பின்னால் நிற்க வேண்டிய அவசியமிருக்காது.
தேசிய மக்கள் சக்திக்கு இதொரு சவாலான விடயமே. யாழ்ப்பாணம் உள்ளடங்கலாக வடக்குக் கிழக்கில் வரலாற்று வெற்றியைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி, உள்ளூராட்சி மன்றத்திலும் அந்த வெற்றியைப் பெறுவதற்கு வியூகங்களை வகுக்கிறது. அதற்கு இந்தப் போராட்டங்களும் இந்தப் பிரச்சினைகளும் நெருக்கடியைக் கொடுக்கின்றன. இன்னொரு பெரிய பிரச்சினை, இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதாகும். இவை இரண்டையும் அது எப்படிக் கையாளப்போகிறது?
தையிட்டிப் போராட்டத்தை நீடிக்க விடும் உபாயத்தைப் பின்பற்றினால், காணாலாக்கப்பட்டோரின் போராட்டத்தைப்போல, நாட்கள் நீளுமே தவிர, தீர்வு கிட்டாத – தீர்வு காணப்படாத ஒரு நிலையை ஏற்படுத்தலாம். அது போராடும் மக்களின் தீவிரத்தைக் குறைவாக்கி, அவர்களைக் களைப்படைய வைக்கும். அரசியற் கட்சிகள் ஓய்ந்து ஓரமாகி விடும் என அரசாங்கம் உபாயமாக யோசிக்கக் கூடும்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மூன்று வகையில் தன்னை முன்னிலைப்படுத்துவதற்குச் சமகாலத்தில் முயற்சிக்கிறார்.
- அரசியல் பேச்சுவார்த்தைகளில் தன்னுடைய தலைமைத்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்வது.இதற்காகவே அவர் ஏனைய கட்சிகளைக் கூட்டுச் சேர்ப்பதாகும்.
- தையிட்டிப் போராட்டத்தை முன்னெடுப்பதன் வழியாக மக்களுக்காகப் போராடும் தரப்பாகத் தன்னை மக்களிடம் காட்டிக் கொள்வது.இதிலும் தன்னையே தலைமைச் சக்தியாக நிரூபித்துக் கொள்வது.
- தேசிய மக்கள் சக்திக்கு வடக்கில் வலுத்திருக்கும் ஆதரவுத் தளத்தை நிர்மூலமாக்குவது.குறிப்பாக உள்ளூராட்சி மன்றுகளுக்கான தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை– செல்வாக்கை மட்டுப்படுத்துவது அல்லது இல்லாதொழிப்பது.
- இனப்பிரச்சினை, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் தேசிய ஒருமைப்பாட்டின் அடிப்படையில் தீர்வுகாணும்தேசிய மக்கள் சக்தியின் முயற்சியையும் நிகழ்ச்சி நிரலையும் நெருக்கடிக்குள்ளாக்குவது.
- தேசிய மக்கள் சக்தியின் வினைத்திறனைப் பரிசோதனைக்குள்ளாக்குவது.
- மெய்யான அர்த்தத்தில் மீள் குடியேற்றம், படை விலகல், படை ஆதிக்கக் குறைப்பு, அரசியல் தீர்வைக் குறித்த ஆர்வத்தைத் தூண்டுதல் போன்றவற்றை உந்தித் தள்ளுவது.
- பௌத்த மயமாக்கலை தடுத்து நிறுத்துதல்.
- வடக்கில் தெரிவுசெய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள், ஆதரவாளர்களுக்கும் நெருக்கடியை உருவாக்குதல்.அல்லது அவர்களைப் பொறுப்புக் கூற வைத்தல்.
எப்படியோ இந்த வாரங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமே முன்னிலை பெறும் அரசியல் அடையாளமாக வடக்கில் உள்ளார். அதைக் கடந்து செல்வது தேசிய மக்கள் சக்திக்கும் ஏனைய தமிழ்க் கட்சிகளுக்கும் முன்னுள்ள சவாலாகியுள்ளது.
கடந்த மாதம் வல்வெட்டித்துறையில் அநுரவுக்காக – அரசாங்கத்துக்கு ஆதரவாகத் திரண்டனர் மக்கள். இந்த மாதம் அதை அண்தித்த மயிலிட்டிக் கடற்கரையில் கஜேந்திரகுமாருக்கு ஆதரவாக – அரசாங்கத்துக்கு எதிராகத் திரள்கின்றனர் மக்கள். தமிழ் மக்கள் பிரித்தாளப்படுகிறார்களா? பிரிந்துள்ளனரா?
கருணாகரன்