Photo, SELVARAJA RAJASEGAR

அறிமுகம்

கடந்த ஆண்டு முழுவதும் ‘மலையகம் 200’ என்ற தொனிப்பொருளில் பல்வேறு நிகழ்வுகள் பல்வேறு பிரதேசங்களில் (வடக்கு கிழக்கு உட்பட) இடம்பெற்றன. அவை கண்காட்சி, ஊர்வலங்கள், கலை நிகழ்ச்சிகள், ஆய்வு மாநாடுகள், அரசியல் கூட்டங்கள், பாத யாத்திரை, புத்தக வெளியீடு என பல வடிவங்களில் இடம்பெற்றன. சில நிகழ்வுகள் இந்தியாவிலும் இடம்பெற்றன. கடந்த ஆண்டில் மாத்திரம் சுமார் இருபது நூல்கள் பல தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் தமிழில் பத்து நூல்கள் மலையக மக்களின் சமூக, பொருளாதார நிலைமைகளை ஆராய்கின்றன. இதில் இந்தியாவில் வெளியிடப்பட்ட இரண்டு நூல்களும் அடங்கும். ஆங்கிலத்தில் ஒரே ஒரு நூல் மாத்திரமே வெளியிடப்பட்டது. இதற்கப்பால் பத்துக்கு மேற்பட்ட  கவிதை, நாவல்கள், சிறுகதைகள் வெளியிடப்பட்டன. மேலும், மலையக ஆளுமைகள் தொடர்பான இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டதுடன், பல சஞ்சிகைகள் மலையகம் 200 என்ற பெயரில் சிறப்பு மலர்களாக வெளியிடப்பட்டன. அவற்றில் கனடாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் தாய் வீடு, தாயகம் மற்றும் ஜீவநதி என்பவற்றினைக் குறிப்பிட முடியும். அத்துடன், கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் ஐந்து ஆய்வறிக்கைகளை (போக்குவரத்து, சுகாதாரம், வீடமைப்பு, வறுமை என்பவை தொடர்பாக) வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டில் சில பதிப்பு முயற்சிகளும் இடம்பெற்றன. அந்தவகையில் கலாநிதி பெ. சரவணக்குமார் மற்றும் எம்.எம்.ஜெயசீலன் ஆகியோர் கோ.நடேசையர் மற்றும் மீனாட்சியம்மாள் ஆகியோரின் வெளியீடுகளை பதிப்பித்துள்ளார்கள்.

இவை இச்சமூகத்தில் எழுச்சிபெற்று வரும் வெளியீட்டுக் கலாசாரத்தினையும், அறிவு சார்ந்த தேடலையும் ஆய்வு குறித்த ஆர்வத்தினையும் காட்டுகின்றன. சில நூல்கள் ஆய்வுக்குரிய பண்புகளைக் கொண்டுள்ளன. இன்னும் சில நூல்கள் வெளிவரவிருக்கின்றன. குறிப்பாக கட்டுரையாசிரியர் மற்றும் பேராசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் 18 ஆய்வு கட்டுரைகள் அடங்கிய நூல் ஒன்றினை தொகுத்து வருகின்றார்கள். அது இவ்வருடம் வெளியிடப்படும். மலையகம் 200 நிகழ்வுகளின் வரிசையில் முதல் முதலாக இடம்பெற்றது ஆய்வு முறையியல் தொடர்பான மூன்று நாள் பயிற்சிப் பட்டறையாகும். இது 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7,8 மற்றும் 9ஆம் திகதிகளில் கண்டியில் அமைந்துள்ள மகாவெளி ரீச் ஹாட்டலில் இடம்பெற்றது. இதன் மூலம் மலையகத்தைச் சேர்ந்த ஆய்வு மற்றும் எழுத்துத் துறையில் ஆர்வம் உள்ள 30 பேர் வெவ்வேறு பின்புலத்தினைக் கொண்ட வளவாளர்களால் பயிற்றப்பட்டார்கள். அதன் வெளியீடாகவே இத்தொகுப்பு நூல் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எவ்வாறாயினும், இக்கட்டுரையின் நோக்கம் மலையகம் 200 நிகழ்வுகள் பற்றி பேசுவதல்ல. மாறாக 200 வருட வரலாற்றைக் கொண்ட மலையக சமூகத்தில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றம் என்ன என்பது தொடர்பாக சுருக்கமாக கலந்துரையாடுவதாகும். மலையகம் 200 என்று சொல்வது சரியா என்ற விவாதம் ஒருபுறம் இடம்பெறும் நிலையில் இக்கட்டுரை மலையக சமூகத்தில் எழுச்சிப்பெற்றுள்ள அடுக்கமைவு அல்லது படையாக்கம் (social stratification) தொடர்பாக ஆராய்கின்றது. மலையக சமூகத்தின் வளர்ச்சிப்போ க்கினை, இயங்குத்தன்மையினை நீண்டகாலமாக அவதானித்த ஒருவன் என்ற வகையில் அது பற்றி சில விடயங்களை பதிவிட முற்படுகின்றேன். ஒரு தொழிலாளர் வர்க்க சமூகத்தில் எழுச்சிப்பெற்றுள்ள வேறுப்பட்ட சமூகப் பிரிவினரையே இங்கு அடையாளப்படுத்த முற்படுகின்றேன். இது முதலாவது முயற்சியல்ல என்பதனையும் பதிவிடுவது பொருத்தமாகும். அந்த வகையில் மலையக சமூகத்தின் அடுக்கமைவு தொடர்பாக இரண்டு வெளிநாட்டு ஆய்வாளர்கள் ஆழமாக ஆய்வுகளை செய்துள்ளார்கள். இதில் இந்திய நாட்டைச் சேர்ந்த ஆர்.ஜெயராமன் என்பவரின் சாதிய முறை மற்றும் பொருந்தோட்ட மக்களின் சமூகக் கட்டமைப்பு தொடர்பான ஆய்வும் (1975), நோர்வே நாட்டைச் சேரந்த ஒட்வர் ஒலூப் என்பவரின் கொத்தடிமை (பிணைக்கப்பட்ட) தொழிலாளர்கள் (1994) என்ற ஆய்வும் குறிப்பிடத்தக்கவையாகும். மேலும் பேராசிரியர் சந்திரபோஸ் அவர்கள் மலையகத் தமிழரின் சமூக படையாக்கம் என்ற தலைப்பில் 1996ஆம் ஆண்டு ஆய்வு கட்டுரையொன்றினை எழுதினார். இவை இச்சமூகத்தின் அடுக்கமைவு தொடர்பாக மிகவும் பயனுள்ள தகவல்களை வழங்குகின்றன. ஆயினும், இவை மிக நீண்ட காலத்திற்கு முன்னர் வெளியிடப்பட்டவை. இன்று இச்சமூகத்தில் கணிசமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதற்கு 2003ஆம் ஆண்டு குடியுரிமைப் பிரச்சினை முற்றாகத் தீர்க்கப்பட்டமை பெரியளவிலான தாக்கத்தினைச் செழுத்தியுள்ளது போல் தென்படுகின்றது. மேலும், மலையக மக்கள் ஒரு பக்கம் தொழிலாளர் வர்க்க பரம்பரை, இன்னொரு பக்கம் இனத்துவ சிறுபான்மை மக்கள். ஆகவே, இவர்களின் பிரச்சினைகளை வர்க்க ரீதியாகவும் இனத்துவ ரீதியாகவும் அணுகுவது அவசியமாகும்.

மலையக சமூகம் குடியுரிமையினைப் பெற்றுக்கொண்ட பின்னர் ஒரு வகையான மேல் நோக்கிய நகர்வினை படிப்படியாக அடைந்து வருகின்றது. அந்த வகையில் இன்று இச்சமூகத்தில் நாம் பல வகையான பிரிவினரை அல்லது அடுக்கமைவினை அடையாளம் காண முடியும். இந்த வகைப்பாட்டினை வர்க்கம், தொழில், வருமானம், கல்வி, வாழ்விடம் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்வதே நோக்கமாகும். வேறு வகையில் கூறுவதாயின், இக்கட்டுரை மலையக சமூகத்தினை புதியதொரு அடுக்கமைவுக்கு உட்படுத்த முற்படுகின்றது.

சமூக அடுக்கமைவு

முதலில் சமூக அடுக்கமைவு என்றால் என்ன என்பது பற்றிய புரிதல் அவசியமாகும். ஒரு சமூகத்தில் வாழும் மக்களை செல்வம், வருமானம், கல்வி, குடும்பப் பின்னணி மற்றும் அதிகாரம் என்ற அடிப்படையில் வகைப்படுத்துவதாகும். சில ஆய்வாளர்கள் இதனை ஒரு சமூகத்தில் நிலவும் வளங்களின் சமமற்ற பங்கீட்டின் அடிப்படையில் அங்கு வாழும் மக்களை வகைப்படுத்துவது என குறிப்பிடுகின்றார்கள் (Budowski & Tillmann, 2014; Grusky, 2001, 2014;Hout and Diprete, 2006). இத்தகைய சமூக அடுக்கமைவு நிலைபெறுவதற்கு சட்டத்தன்மை அவசியமாகும். அந்த சட்டத்தன்மையினை ஏற்படுத்த தொடர்ச்சியான கலந்துரையாடல், விவாதங்கள் மாற்று சிந்தனைகள், பொது உடன்பாடு அல்லது கருத்தொருமைப்பாடு அவசியமாகும். வேறு வகையில் கூறுவதாயின், அச்சமூகத்தினைச் சேர்ந்த மக்கள் இத்தகைய வகைப்பாட்டுடன் உடன்படும் போது அதற்கு சட்டத்தன்மை கிடைக்கின்றது (Johnson, 2013; Sorensen, 1986). மனித வரலாறு என்பது வேறுபட்ட அளவிலான சமூக அசமத்துவம், அநீதி மற்றும் வறுமை என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள வேறுபட்ட சமூக அடுக்கமைப்புடன் நெருங்கிய தொடர்புபட்டதாகும். சமூக விஞ்ஞானிகள் மத்தியில் சமூக அடுக்கமைவு தொடர்பான வகைப்பாடு குறித்த பொது உடன்பாடு இல்லை என சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஆயினும், பொதுவில் ஐந்து வகையான அடுக்கமைப்பு பயன்படுத்துவதாக வாதிடுகின்றார்கள். அவை முறையே I. பழங்கால அல்லது ஆதிகால சமூகம் (primitive society), II.அடிமை சமூகம் (slave), III. சாதி மைய சமூகம் (caste based society), IV.மானிய முறை (feudal society) மற்றும் V.வர்க்க முறை (class system)  சமூகம் ஆகும் (Kerbo, 2000, 2003). அந்த வகையில் மலையக சமூகத்துடன் அடிமை முறை, நிலமானிய முறை, சாதியம் மற்றும் வர்க்க முறைமை என்பன பெரிதும் தொடர்புடையதாகக் காணப்படுகின்றன. இவற்றினை இச்சமூகத்தில் எழுச்சிப்பெற்றுள்ள சமூக மாற்றத்தினை விளங்கிக் கொள்வதற்குப் பயன்படுத்தலாம். அறிமுகப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள கடந்த கால ஆய்வுகளில் மலையக சமூகத்தின் அடுக்கமைவினை விளங்கிக்கொள்ள சாதி மிக முக்கியமான அளவுகோலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் இன்று இச்சமூகத்தில் சாதியம் பெரியளவிலான பேசுப்பொருளாக தென்படவில்லை. ஆகவே, இக்கட்டுரையில் வர்க்க முறைமை மற்றும் கல்வி, தொழில் ஆகியன பிரதான அளவுகோளாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு இறக்குமதி செய்யப்பட்ட தொழிலாளர் வகுப்பில் இருந்து மேற்கிளம்பியுள்ள பிரிவினர் குறித்தே இங்கு ஆராயப்படுகின்றது.

சமூக அடுக்கமைவு என்ற எண்ணக்கரு சமூகவியலில் மிக முக்கியமான ஒன்றாகும். இதனை எல்லா சமூகங்களிலும் அடையாளம் காண முடியும். இதற்கு அடிப்படையாக அமைவது சமூக நகர்வாகும். கார்ல் மார்க்ஸ், மெக்ஸ் வெபர் மற்றும் எமில் டேர்க்கைம் இச்சிந்தனையினை முன்வைத்தவர்களில் முன்னோடிகள் ஆகும்.  சமூக – பொருளாதார நிலையே சமூக அடுக்கமைவுக்கான பிரதான அளவுகோல் என இவர்கள் வாதிடுகின்றார்கள். ஐரோப்பாவில் தொழிலை அடிப்படையாகக் கொண்ட சமூக வகுப்பு என்பது அடுக்கமைவுக்கான பிரதான அளவுகோளாக காணப்படுகின்றது. மாறாக, வட அமெரிக்காவில் சமூக – பொருளாதார அந்தஸ்து பிரதான அளவுகோளாக உள்ளது. அதில் கல்வியும் தொழிலும் கவனத்தில் கொள்ளப்படுகின்றது. கல்வி என்பது மேல் நோக்கிய சமூக நகர்வுக்கு வித்திடுவதுடன் மறுபுறமாக சமூக அசமத்துவத்திற்கு வழி செய்கின்றது எனவும் வாதிடப்படுகின்றது. குறிப்பாக தரமான கல்வியினைப் பெற முடியாத பிரிவினரால் சமூக – பொருளாதார தடைகளை உடைத்துக் கொண்டு மேல் நோக்கி செல்ல முடியாமையினால் ஏற்படும் அசமத்துவத்தினை இது குறித்து நிற்கின்றது (Kerbo, 2000; Grusky, 2014; Lenski, 1966). அதுவே சரியாக மலையக சமூகத்திற்கு நடந்தது. இலவசக் கல்விக்கான வாய்ப்பு உரிமை மறுக்கப்பட்டமையினால் கடந்த எட்டு தசாப்தங்களுக்கு மேலாக மலையக மக்கள் அனுபவிக்கும் அசமத்துவம் மற்றும் பாகுபாடுகள் இதனை மேலும் விளக்குகின்றன. இன்று கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் கூட, அவை தேசிய வளர்ச்சி குறிகாட்டிகளுடன் ஒப்பிடும் போது பெரிதாக மகிழ்ச்சியடைய முடியாது. சமூக நகர்வு என்பது இயல்பான தோற்றம். தனிநபர் ஒவ்வொருவரும் பிரத்தியேகப் பண்புகள், திறமைகள், சமூக வகிபங்கு என்பவற்றினைக் கொண்டுள்ளனர். அவை தனி மனித நகர்வில் செல்வாக்குச் செலுத்துகின்றன (Kerbo, 2000). அந்த வகையில் எல்லா சமூகத்திலும் சமூகக் கட்டமைப்பொன்று காணப்படுகின்றது என்பதனை நாம் மனங்கொள்ள வேண்டும்.

மலையக சமூகத்தில் எழுச்சிப்பெற்றுள்ள சமூக அடுக்கமைவு

இன்று மலையக சமூகத்தில் பல்வேறு வடிவிலான அடுக்கமைவினை அவதானிக்க முடியும். முதலாவதாக தேயிலை மற்றும் இறப்பு தோட்டங்களில் நிரந்தரமாக தொழில் செய்யும் பிரிவினரைக் குறிப்பிட முடியும். இவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக வீழ்ச்சியடைந்து இன்று சுமார் 1,40,000 பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் மாத்திரமே காணப்படுகின்றார்கள். இதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. குறிப்பாக கல்வியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், தொழில் ரீதியான நகரத்தை நோக்கிய புலம்பெயர்வு, மாற்று வாழ்வாதாரத்துக்கான தேடல், தோட்டத்தொழிலில் வழங்கப்படும் குறைந்த சம்பளம், மரபு ரீதியான தொழில் நடைமுறைகள், அதிகார இடைவெளி, தொழில் கௌரவம் போன்ற பல காரணிகள் இன்றைய இளம் தலைமுறையினரை இத்துறையில் இருந்து தூரப்படுத்தியுள்ளது. இப்பிரிவினரை ஏழை தொழிலாளர் வர்க்கம் (working poor) என்று அடையாளப்படுத்த முடியும். இவர்களின் சமூகப் பொருளாதார நிலை மிக மோசமாகக் காணப்படுவதுடன், இவர்களின் வாழ்க்கை தொழிற்சங்க அரசியல் சம்பள அதிகரிப்புப் போராட்டம் என தொடர்கின்றது.

அந்தவகையில் இன்று தோட்டங்களில் தொழில் செய்யும் பிரிவினரை விட தொழில் செய்யாத பிரிவினரின் எண்ணிக்கை மிக அதிகமாக காணப்படுகின்றது. இவர்களின் தொகை அண்ணளவாக 550,000- 600,000 லட்சமாகக் காணப்படுகின்றது. இவர்களில் முதியவர்கள், இளைஞர்கள், பாடசாலை செல்வோர், பெண்கள், சிறுவர்கள் என பலர் அடங்குவர். இதில் 50 சதவீதமானவர்கள் தமது குடியிருப்புகளை தோட்டங்களில் வைத்துக்கொண்டு வாழ்வாதாரத்தினை தோட்டங்களிலும் (விவசாயம்) மற்றும் தோட்டங்களை அண்டிய நகரங்களிலும் கிராமங்களிலும் தொழில் செய்து வருகின்றார்கள் (நாற்கூலித்தொழில், கடைகள், கட்டுமானத்துறை, உணவகங்கள், மரக்கரித் தோட்டங்கள் என). இவர்களின் மாத வருமானம் சுமார் 25, 000 – 40,000 மாகவே காணப்படுகின்றது. ஆகவே, இவர்களை கீழ் வர்க்க மக்களாக குறிப்பிடலாம் (lower class). ஆகவே, இதன் மூலம் வெளிப்படுவது யாதெனில் பெருந்தோட்டத்தில் குடியிருப்புகளை வைத்துக்கொண்டு வாழும் மலையக மக்களின் தொகை சுமார் 740,000 காணப்படுகின்றது. இதில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிங்களவர்களும் முஸ்லிம்களும் அடங்குவர். அந்தவகையில் தோட்டத்தொழில் துறையினை சாராது பெருந்தோட்டக்கட்டமைப்புக்குள் வாழும் பிரிவினரின் தொகை மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. இவர்கள் மத்தியில் காணியுரிமைக்கான கோரிக்கைளும் தாகமும் மிக அதிகமாகக் காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. காரணம் நிரந்தர வாழ்வாதாரத்துக்கான வேட்கையாகும் – இது நீண்ட காலத்தில் மிகவும் ஒழுங்குப்படுத்தப்பட்ட தொடர் போராட்டங்களுக்கு வழிசெய்யும். அதற்கு தற்போதைய பொருளாதார சுமை மற்றும் அதனோடு ஒட்டிய பிரச்சினைகள் தூண்டுதல் அளிக்கும்.

தோட்டங்களில் தொழில் செய்யாத பிரிவினரில் சுமார் 100,000 பேர் (அண்மைய கணக்கெடுப்பொன்றிற்கமைய) தோட்டங்களில் தற்காலிக தொழிலாளர்களாக, நாற் சம்பளத்தினை மாத்திரம் பெற்று தொழில் செய்து வருகின்றார்கள் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் சுமார் 50,000 பேர் தோட்டங்களில் இருந்து ஓய்வுப்பெற்ற மிகுந்த அனுபமுள்ள தொழிலாளர்கள். இவர்களில் பலர்  தாம் வாழும் தோட்டங்களுக்கு அண்மையில் அமைந்துள்ள வேறு தோட்டங்களுக்கும் நாற் சம்பளத்துக்காக தொழிலுக்குச் செல்கின்றார்கள். பிறிதொரு பகுதியினர் இளம் வயது தொழிலாளர்கள் – இவர்கள் குடும்ப பொருப்புகளின் காரணமாக தோட்டங்களைவிட்டு வெளியில் சென்று தொழில் செய்ய முடியாத காரணத்தால் தற்காலிக, பதிவு செய்யப்படாத தொழிலாளர்களாக காணப்படுகின்றார்கள். இவர்களுக்கும் சம்பளத்தினை தவிர வேறு எந்த நன்மைகளும் கிடைப்பதில்லை. தோட்டக்கம்பனிகளுக்கு இது கொள்ளை இலாபமாக அமைந்துள்ளதுடன், இதன் காரணமாக தொழிற்சங்க அழுத்தங்கள் மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை என்பன பெரியளவில் குறைவடைந்துள்ளன. இவை பெருந்தோட்டக் கட்டமைப்பில் நாம் அவதானிக்கக் கூடிய சில முக்கியமான மாற்றங்களாகும். இவர்களில் அதிக எண்ணிக்கையினருக்கு நிர்ணயிக்கப்பட்ட 1000 ரூபா சம்பளம் வழங்கப்படுவதில்லை. இதில் ஓய்வுப்பெற்ற தொழிலாளர்களே அதிகம் அடங்குவர்.

கீழ் மற்றும் மேல் மத்தியத்தர வகுப்பு

கல்வி ரீதியான அடைவுகளின் காரணமாக எழுச்சிப்பெற்றுள்ள இரண்டு வகுப்புகளே இவையாகும். அந்தவகையில் கீழ் மத்தியத்தர வகுப்பில் ஆசிரியர்கள், அதிபர்கள், பொலிஸ் அதிகாரிகள், கிராம சேவகர்கள், சமுர்த்தி அதிகாரிகள், தாதியர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், அரச சார்பற்ற நிறுவனம், வங்கித் துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் இடைநிலை பதவி நிலைகளில் இருப்பவர்கள் அடங்குவர். இதில் சுமார் 14,000 ஆசிரியர்கள், 600க்கு மேற்பட்ட அதிபர்கள், 800 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனக் காணப்படுகின்றனர். இப்பிரிவினர் பெற்றுக்கொள்ளும் வேதனத்தினை அடிப்படையாகக் கொண்டு இவர்களை கீழ் மத்தியதர வகுப்பினர் என குறிப்பிட முடியும் (lower middle class). இவர்கள் ஒரு ஆதிக்கம் மிக்க சக்தியாக இச்சமூகத்தில் வளர்ச்சியடைந்துள்ளார்கள். இப்பிரிவினரின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதனை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகின்றது. இதற்கு பல்கலைக்கழக அனுமதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் (ஆண்டுக்கு சராசரியாக 700 பேர்) மற்றும் இரண்டாம் நிலைக் கல்வியில் ஏற்பட்டுள்ள விரிவாக்கம் என்பன காரணமாகும். சுமார் 9000 -10,000 பேர் இன்று மலையகத்தில் உயர் தரப்பரீட்சைக்கு தோற்றுகின்றார்கள். இப்பிரிவினரில் கணிசமானவர்கள் தோட்டக்கட்டமைப்புக்குள் தமது குடியிருப்புகளை வைத்திருப்பவர்களாகவும் (சுமார் 60%), ஏனையோர் தோட்டங்களைவிட்டு வெளியேறி நகரங்களையும் கிராமங்களையும் அண்டி தமது குடியிருப்புகளை அமைத்துக்கொண்டுள்ளார்கள். இதில் அதிக எண்ணிக்கையினர் வாடகை குடியிருப்புகளில் வாழந்து வருகின்றார்கள். ஆகவே, கல்வி கற்றவர்கள் படிப்படியாக தோட்டங்களை விட்டு வெளியேறுவது இன்னொரு போக்காகக் காணப்படுகின்றது. அதற்கு தொழில், வெளி உலகத் தொடர்பு, அந்தஸ்த்து  மற்றும் தமது பிள்ளைகளின் கல்வி போன்ற காரணிகளும் செல்வாக்கு செழுத்துகின்றன. இவர்களுக்கும் தோட்டக்கட்டமைப்பில் வாழும் மக்களுக்குமிடையிலான தொடர்பு குறைந்து செல்வதனையும் அவதானிக்க முடியும். இப்பிரிவினரில் உள்ளடக்க வேண்டிய இன்னொரு தரப்பினர் யார் எனில் 23 பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும், அரசுக்குச் சொந்தமாக தோட்டங்களில் (மொத்தமாக 423 தோட்டங்களில்) சுமார் பத்து மாவட்டங்களில் தோட்ட நிர்வாக பணிகளில் இருக்கும் (மேற்பார்வையாளர்கள், லிகிதர்கள், தொழிற்சாலை உத்தியோகத்தர்கள்) என்போர் ஆகும். இவர்களின் எண்ணிக்கை தொடர்பான சரியான தரவுகள் இல்லாவிட்டாலும், 2500 – 3000 என மதிப்பிட முடியும்.

அடுத்ததாக இச்சமூகத்தில் ஒரு சிறு எண்ணிக்கையில் எழுச்சிப்பெற்றுள்ள மேல் மத்தியத்தர வகுப்பினரை (upper middle class) அடையாளம் காண முடியும். இந்தப் பிரிவில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள், அரச நிர்வாகத்தில் உயர் பதவி நிலைகளில் இருப்பவர்கள் (இலங்கை நிர்வாக சேவை, திட்டமிடல் சேவை, கல்வி நிர்வாக சேவை, கணக்காளர் சேவை) வைத்தியர்கள், பொறியியலாளர்கள், வங்கித்துறை, தனியார் மற்றும் அரச சார்பற்ற துறைகளில் நிறைவேற்று பதவிகளில் இருப்பவர்கள் என்போரைக் குறிப்பிட முடியும். தோட்ட முகாமையாளர்களாக விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் வந்திருந்தாலும் அப்பதவிகள் இன்றும் 99% வேற்று சமூகத்தர்களாலேயே ஆதிக்கம் செழுத்தப்படுகின்றது. மேற்கூறிய பிரிவில் அடங்குவோரின் மொத்த எண்ணிக்கை 700 என மதிப்பிட முடியும். இச்சமூகத்தின் உண்மையான வளர்ச்சிக்கு இவ்வகுப்பினரின் பங்களிப்பு பெரிதும் அவசியமாகும். சமூக நிலை மாற்றத்தில் இவர்களுக்கும் பெரிய பொறுப்புண்டு. இப்பிரிவினரின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது இச்சமூகத்தில் மேல் நோக்கிய நகர்வு அதிகரிக்கும். இப்பிரிவினரில் 75%மானவர்கள் தோட்டங்களை விட்டு வெளியேறி தமது குடியிருப்புக்களை தாம் தொழில் செய்யும் இடங்களிலும் அல்லது நகரங்களிலும் அமைத்துக் கொண்டுள்ளார்கள். இவர்களுக்கும் தோட்ட சமூகத்துக்குமான தொடர்பு வேகமாகக் குறைவடைந்து செல்கின்றது. அந்தவகையில் கடந்த 200 ஆண்டுகளில் இச்சமூகத்தில் இருந்து உருவாகியுள்ள தொழில் வல்லுனர்களின் எண்ணிக்கை எவ்வளவு, அதனை எவ்வாறு அதிகரிப்பது மற்றும் அதற்கான உபாயங்கள், திட்டங்கள் என்ன என்பது பற்றியக் கலந்துரையாடல்கள் 200க்குப் பின்னரான மலையக சமூகத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் பிரதான அம்சமாக அமைய வேண்டும்.

வர்த்தக வகுப்பினர்

மலையகத்தில் எழுச்சிப் பெற்றுள்ள பிறிதொரு பிரிவினராக வர்த்தக சமூகத்தினரைக் குறிப்பிட முடியும். இந்த வர்த்தக சமூகத்தில் ஒரு பிரிவினர் மேல் மத்திய தர வர்க்கத்திற்குள்ளும் பிரிதொரு பிரிவினரை மேல் வர்க்கம் (upper class) அல்லது வர்த்தக உயர் குழாம் (business elites) எனவும் அடையாளப்படுத்த முடியும். இவ்வகைப்பாட்டினை இவர்களின் வியாபாரத்தின் அளவு, தன்மை, வீச்சு, அல்லது விரிவாக்கம், செல்வம், இலாபம் என்ற அடிப்படையில் வகைப்படுத்தலாம். கொழும்பு, கண்டி, பதுளை, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள நகரங்களில் இவர்கள் செல்வாக்கு மிக்க பிரிவினராக காணப்படுகின்றனர். அரசியல் ரீதியாகவும் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள். தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளுக்கு பிரசார நிதியினை வழங்கி அதன் ஊடாக அரசியல் செயற்பாடுகளில் ஆதிக்கம் செழுத்துகின்றார்கள். விசேடமாக கொழும்பில் செட்டியார்தெரு மற்றும் வேறு இடங்களில் ஒட்டுமொத்த வியாபாரமும் இவர்களின் ஆதிக்கத்திலேயே காணப்படுகின்றது. இவர்களின் குடியிருப்புகள் நகரங்களை மையப்படுத்தியதாகக் காணப்படுவதுடன், மலையக மக்களுக்கு ஒரு சில தொண்டு வேலைகளை செய்து வருகின்றார்கள். உதாரணமாக: மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தினைக் குறிப்பிட முடியும். எல்லா வர்த்தகர்களும் மலையக சமூகத்தின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்கின்றார்களா என்ற கேள்வியும் உண்டு. ஆயினும், சிலர் தனிப்பட்ட ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் பல வழிகளில் உதவி வருகின்றார்கள். இவர்களும் எண்ணிக்கையில் குறைந்தவர்கள் எனலாம். மேலும் மலையகப் பிரதேசங்களில் சிறு அளவிலான வியாபார செயற்பாடுகளில் ஈடுபடும், (உதாரணமாக, கம்பளை, நாவலப்பிட்டி, பசறை, புஸ்ஸல்லாவ, ஹட்டன், நுவரெலியா, கொட்டகலை, பண்டாரவளை, யட்டியன்தொட, பலாங்கொட) பெரும் எண்ணிக்கையிலான ஒரு வர்த்தக பிரிவினர் காணப்படுகின்றனர். இவர்களின் எண்ணிக்கை தொடர்பான சரியான கணக்கெடுப்பு இல்லை. இவர்களில் 90%மானவர்கள் தமது குடியிருப்புகளை நகரங்களை அண்டியே அமைத்துக்கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தககது. சுமார் 20,000 க்கு மேற்பட்ட குடும்பங்கள் இதில் அடங்கும்.

வர்த்தக வகுப்பில் இரு பிரிவினரை அவதானிக்க முடியும் – ஒன்று உயர் சாதி பின்புலத்தினைக்கொண்ட பரம்பரை பரம்பரையாக வர்த்தகத்தில் ஈடுபடும் செல்வந்தர்கள். இவர்கள் இந்தியாவுடன் மிக நெருங்கியத் தொடர்பினைக் கொண்டுள்ளதுடன், அங்கு வர்த்தகம் மற்றும் சொத்துக்களையும் கொண்டுள்ளார்கள். இவர்கள் இந்திய நலனை அதிகம் பிரநிதித்துவம் செய்யும் தரப்பாகவும் காணப்படுகின்றார்கள். இவர்கள் வர்த்தக உயர் குழாம் என்ற அந்தஸ்த்தினை தொடரந்தும் பேணி வருகின்றார்கள். பி.ஏ.காதர் மற்றும் பி.பி.தேவராஜ் போன்றோர் குறிப்பிடுவது போன்று 1920களில் ஒட்டுமொத்த கொழும்பு வர்த்தகமும் இந்தியத் தமிழர்களின் கட்டுப்பாட்டிலேயே காணப்பட்டுள்ளது. இது சிங்களவர்கள் மத்தியில் இந்திய எதிர்ப்புவாதம் மேற்கிளம்புவதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது. 1940 மற்றும் 50கள் ஆகும்போது இது உச்சத்தினைத் தொட்டது. இதன் பிரதிபலிப்புகள் சிங்கள சமூகத்திலும் ஆட்சியாளர்கள் மத்தியிலும் பல வடிவங்களில் வெளிப்பட்டது. அதன் உச்சமே குடியுரிமைச் சட்டம், வாக்குரிமைச் சட்டம் மற்றும் ஸ்ரீமா – சாஸ்த்ரி ஒப்பந்தம் என்பனவாகும். இச்சட்டங்கள் கொண்டுவரப்படுவதற்கு வேறு பல அரசியல் காரணிகளும் பெரியளவில் செல்வாக்கு செழுத்தியமையினையும் மறுதலிக்க முடியாது. இதன் விளைவாக இலட்சக்கணக்கான இந்திய தமிழ் வர்த்தகர்கள் பாதுகாப்பு காரணமாக தாயகம் திரும்பினார்கள். இதன் பின்னரேயே கொழும்பு மைய வர்த்தகம் ஏனைய சமூகத்தவர்களின் ஆதிக்கத்திற்கு உள்ளாகியது. தாயகம் திரும்பியோரில் 50% மேற்பட்டவர்கள் வர்த்தக பின்புலத்தைக்கொண்ட சமூகத்தில் செல்வாக்கு மிக்க, மேல் சாதியினைச் சேர்ந்த குடும்பங்களாகும். இதனால் ஏற்பட்ட சாதகமான விளைவு யாதெனில் மலையகத்தில் அதுவரை இறுக்கமாகக் காணப்பட்ட சாதிய முறை சிதைவடைந்தமையாகும். இன்றும் இந்நிலை தொடர்கின்றது. இலங்கைத் தமிழ்ச் சமூகத்துடனும் சிங்களச் சமூகத்துடனும் ஒப்பிட்டு நோக்கும் போது இதனை மேலும் விளங்கிக்கொள்ள முடியும்.

இதில் அடங்கும் இரண்டாவது வர்த்தக பிரிவினர் யாரெனில் 1970 மற்றும் 80களுக்குப் பின்னர் மலையகத்தில் இருந்து கொழும்பை நோக்கிச் சென்று வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபட்டு இன்று பெரும் வர்த்தகர்களாக எழுச்சிப்பெற்றுள்ள தரப்பினர். இவர்களில் உயர் சாதி மட்டுமன்றி, ஏனைய சாதிப் பின்புலத்தினைக் கொண்டவர்களும் காணப்படுகின்றார்கள். இப்பிரிவினருக்கும் மேலே குறிப்பிட்ட முதலாவது வர்த்தக வகுப்பினருக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை என சிலர் வாதிடுகின்றார்கள்.

வடக்கு கிழக்கிற்கு இடம்பெயர்ந்தோர்

அதேவேளை, நாட்டில் அவ்வப்போதும் தொடர்ச்சியாகவும் இடம்பெற்ற இன வன்முறையின் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து வாழும் ஒரு பிரிவினரும் இச்சமூகத்தில் காணப்படுகின்றனர். இவர்களின் தொகை வடக்கில், குறிப்பாக கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் சுமார் 1,50,000க்கு மேல் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் வடகிழக்கு சமூகத்துடன் ஒன்றிக்க முடியாது வாழ்ந்து வருகின்றனர். நிலவுரிமை என்பது தொடரும் போராட்டமாகவே உள்ளது. போர்க் காலங்களில் இவர்கள் எல்லைப்புற கிராமங்களிலேயே வாழ்ந்தார்கள். அத்துடன், தொடர்ந்தும் சமூக மற்றும் அரசு நிறுவனங்களில் பல்மட்ட பாகுபாடுகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இவர்கள் குறித்த ஆய்வுகள் ஒப்பீட்டளவில் குறைவாகும். இவர்களில் 75 சதவீதமானவர்கள் விவசாயம், நாள் கூலி, சிறு வியாபாரம் ஆகிய தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கும் ஒரு சிறு எண்ணிக்கையில் ஆசிரியர், அரச உத்தியோகம், தனியார் துறை தொழில் செய்வோர் என எழுச்சி பெற்றுள்ளார்கள். இவர்கள் கீழ் மத்தியத்தர வர்க்கத்தில் அடங்குவர். ஆயினும், இவர்களில் பெரும் பகுதியினர் (சுமார் 90 விகிதம்) மிகக் குறைந்த வேதனம் பெறும் கீழ் வர்க்க உழைக்கும் (working poor/lower class) ஏழைத் தொழிலாளர்களாகவே காணப்படுகின்றனர். அத்துடன், கிழக்கு மாகாணத்தில் சுமார் 40,000-50,000 பேர் மலையகத் தமிழர்கள் வாழ்கின்றார்கள் என மட்டக்களப்பில் அண்மையில் இடம்பெற்ற மலையகம் 200 நிகழ்வொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் பெருமளவில் உழைக்கும் தொழிலாளர்களாகவே காணப்படுகின்றனர் – சமூக ஒதுக்கல் மற்றும் பாகுபாடுகளுக்கும் (காணி, அரச சேவைகள், வீடு, வாழ்வாதரம் போன்ற விடயங்களில்) உள்ளாகியுள்ளனர். இங்கு குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு அம்சம் யாதெனில் வடக்கில் வாழும் மலையகத் தமிழர்கள் (குறிப்பாக கிளிநொச்சி மற்றும் வவுனியா) இன்றுவரையில் மாத்தளை மாவட்டத்துடன் நெருங்கியத் தொடர்பினைக் கொண்டிருப்பதனையும், மட்டக்களப்பில் வாழும் மலையகத் தமிழர்கள் பதுளை மாவட்டத்துடன் வர்த்தக, திருமண மற்றும் குடும்ப உறவுகளைப் பேணி வருவதனையும் அவதானிக்க முடியும்.

முறைசாரா தொழில் துறை

இன்னொரு முக்கியமான பிரிவினர்  பிரதான நகரங்களில் முறைசாரா தொழில் துறைகளில் தொழில் செய்யும் இளைஞர்கள், யுவதிகள் ஆகும். கொழும்பில் உள்ள ஆடைத்தொழிற்சாலை, கட்டுமானத்துறை, உணவகங்கள், கடைகள், தொழிற்சாலைகள், வீட்டு வேலை, முச்சக்கர வண்டி, சாரதிகள் என ஒரு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் உள்ளனர். இவர்கள் தொடர்பான சரியான புள்ளிவிபரங்கள் யாரிடமும் இல்லை. ஆயினும், சுமார் 100,000 பேர் வரையில் தொழில் செய்கின்றார்கள் என மதிப்பிடுகின்றோம்.  இவர்கள் மிகக் குறைந்த ஊதியத்திற்கு நாட்கூலிகளாக தொழில் செய்கின்றார்கள். சிலர் மாதச் சம்பளம் பெறும் தொழில்துறைகளில் உள்ளனர். அதிகமானோர் பாதுகாப்பற்ற தொழில்துறையில் இருப்பதுடன் மிக மோசமான தொழில் சுரண்டல், பாதுகாப்பற்ற தங்குமிடங்கள், உரிமை மறுப்பு, சுகாதாரப் பிரச்சினைகள், பாதுகாப்பின்மை, துஸ்பிரயோகம் போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு உள்ளாகி உள்ளனர். இது தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட தகவல்கள் பொதுவில் கிடைக்கக்கூடியதாக இல்லை. இவர்களின் 75%மானவர்கள் தொழில் திறன் எதுவும் இல்லாதவர்கள் ஆகும். மலிவு ஊழியம் என்று கூற முடியும். இவர்களின் சமூக – பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பாக எந்த ஆய்வுகளும் இதுவரையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆகவே, இப்பிரிவினர் தொடர்பாக பெரியளவிலான தகவல் திரட்டல் மற்றும் ஆய்வுகள் அவசியம். அது இப்பிரிவினர் எதிர்கொள்கின்ற அடிப்படையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவும்.

அத்துடன், மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து தொழிலுக்காக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பல இடங்களுக்கு சென்று (உதாரணம்: வத்தளை) பின்னர் அங்கு நிரந்தரமாகவே குடியேறியுள்ள பிறிதொரு பிரிவினரும் உள்ளனர் -இவர்களில் 80%மானவர்கள் உப நகரங்களில் வாழ்ந்து வருகின்றார்கள் (உதாரணமாக: மாளிகாவத்தை, கொடஹேன, தெமடகொட). இவர்களின் தொகை சுமார் 200,000க்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகின்றது. இவர்களில் 90%மானவர்கள் முறைசாரா தொழில்களிலேயே ஈடுபட்டுள்ளனர். இப்பிரிவினரில் அடக்கவேண்டிய இன்னொரு பகுதியினர் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் செய்யும் மலையகப் பெண்கள் ஆகும். இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஒரு விரிவான ஆய்வறிக்கையொன்று கொழும்பில் அமைந்துள்ள இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனத்தினால் 2022இல் வெளியிடப்பட்டுள்ளது. இது மூன்று மொழிகளிலும் கிடைக்கப்பெறுகின்றது. சுமார் 2500க்கு மேற்பட்ட மலையகப் பெண்கள் மத்தியக் கிழக்கு நாடுகளில் தொழில் செய்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

நகர சுத்திகரிப்புத் தொழில்

பிறிதொரு பிரிவினராக நகரச் சுத்திகரிப்பு தொழில்களில் ஈடுபட்டு வரும் மக்களைக் குறிப்பிட முடியும். இலங்கையின் பிரதான நகரங்களான கொழும்பு, கண்டி, மாத்தளை, பதுளை, கேகாலை, குருணாகல், இரத்தினபுரி மாத்திரமல்ல எண்ணற்ற சிறிய நகரங்களிலும் (கம்பளை, நாவலப்பிட்டி, கடுகண்ணாவ, குளியாப்பிட்டிய) இவர்கள் நகர சுத்திகரிப்பு தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றார்கள். இவர்களின் எண்ணிக்கை தொடர்பாக சரியான கணக்கெடுப்பு இல்லை. ஆயினும், கண்டி மற்றும் கொழும்பு போன்ற இடங்களில் செறிவாகவும் ஏனைய இடங்களில் பரந்தும் வாழ்கின்றார்கள். இவர்கள் இச்சமூத்தில் இருந்து முற்றாக ஒதுக்கப்பட்டவர்களாகக் காணப்படுவதுடன், மலையக மக்களின் சமூக -பொருளாதார, அரசியல் நிலை, அடையாளம் மற்றும் கலை கலாசாரம் தொடர்பான எந்த கலந்துரையாடல்களிலும், அபிவிருத்தி திட்டங்களிலும் இம்மக்கள் உள்வாங்கப்படுவதில்லை. இம்மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பான ஆய்வுகளோ அல்லது தரவுகளோ பெரியளவில் கிடைக்கக்கூடியதாக இல்லை. இவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் தமது அடையாளங்களை கலாசாரத்தினை இழந்து சிங்களவர்களாக முஸ்லிம்களாக மாறிவருவதுடன், மத மாற்றத்திற்கு அதிகம் உள்ளாகின்ற பிரிவினராகக் காணப்படுகின்றனர். இதற்கு வறுமை, இயலாமை, சமூக ஒதுக்கல், அங்கீகாரமின்மை, அதிகார மையங்களுடன் எத்தகைய தொடர்புமின்மை போன்ற பல காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. இவர்கள் தொடர்ந்தும் கீழ் வர்க்கமாகவும் உழைக்கும் ஏழை தொழிலாளர்களாகவும் கணிக்கப்படுகின்றார்கள் (lower class/working poor). இவர்கள் அனைவரும் இந்திய வம்சாவழி பூர்வீகத்தினைக் கொண்ட மலையகத் தமிழர்கள் ஆவர்.

மேற்கூறிய அடிப்படையிலேயே மலையக சமூகம் இன்று பல்வேறு அடுக்கமைவுக்கு உள்ளாகியுள்ளது. ஒரு தொழிலாளர் வர்க்கத்தில் இருந்து இத்தனை பிரிவினர்கள் எழுச்சிப் பெற்றிருப்பது குறிப்பிட்டு கூற வேண்டிய அம்சமாகும். மலையகச் சமூகம் என்பது மேற்கூறிய சகல அடுக்கமைவுகளையும் கொண்டதாகும். அரசாங்கக் கணக்கெடுப்பில் இச்சமூகத்தின் மொத்தத் தொகை எட்டரை லட்சம் என குறிப்பிடுகின்றது. ஆயிரக்கணக்கான மலையகத் தமிழர்கள் இலங்கை தமிழர்களாக பதிவு செய்தமையே இத்தகைய வீழ்ச்சிக்குக் காரணம் என சிலர் வாதிடுகின்றார்கள். அத்துடன், இவ்வீழ்ச்சிக்கு காலி, மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் வாழும் மலையக மக்களில் அதிக எண்ணிக்கையினர் தமது அடையாளங்களை முற்றாக இழந்து சிங்களவர்களாக மாறியுள்ளமையும் பங்களிப்பு செய்கின்றது என குறிப்பிடப்படுகின்றது. அது உண்மையும் கூட. சுமார் இதற்கு 30 ஆண்டுகால சிவில் யுத்தம், அதன் தாக்கம், பாதுகாப்பு கெடுபிடிகள் மற்றும் இன வன்முறைகள் என்பன காரணமாகும். போருக்குப் பின்னர் இந்நிலைமை சற்று மாறி இருந்தாலும், மனிதப் பாதுகாப்பு, சமூகப் பொருளாதார அரசியல் உரிமைகள் மிக மோசமான நிலையிலேயே காணப்படுகின்றது. தென்னிலங்கை மலையகத் தமிழர்களின் சமூக நிலை மத்திய மற்றும் ஊவா மாகாணத்தில் இருந்து பெரிதும் வேறுப்பட்டது. ஒரு பகுதியினர் கம்பனிகளுக்கு சொந்தமான தோட்டங்களிலும் பிறிதொரு பகுதியினர் தனி நபர்களுக்கு சொந்தமான சிறு உடைமைத் தோட்டங்களில் வார்த்தைகளால் சொல்ல முடியாத அடக்குமுறைக்கு ஆளாகி வருகின்றார்கள். இவர்களின் பிள்ளைகளில் கணிசமானவர்கள் சிங்களப் பாடசாலைக்குச் செல்வதனையும் சிங்களப் பெயர்களைக் கொண்டிருப்பதனையும் அவதானிக்க முடியும். இதில் கலப்புத் திருமணமும் அடங்கும். இதற்கு தொழில் வாய்ப்பு மற்றும் பாதுகாப்பு போன்ற காரணங்களை நியாயப்படுத்துகின்றார்கள். இவற்றைவிட முஸ்லிம் பாடசாலைக்குச் செல்லும் போக்கும் இப்பிரதேசங்களில் காணப்படுகின்றது. இது குறித்து பிரத்தியேகமான ஆய்வுகள் அவசியமாகும். காலி மாவட்டத்தில் சுமார் 60%மானவர்கள் சிங்களமயமாகியிருப்பதனையும் மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அது 25 -30%மாக காணப்படுவதனை அப்பிரதேசங்களில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு கூட்டங்கள் ஊடாகவும் எனைய மூலங்களில் இருந்தும் அறிய முடிகின்றது.

இதேபோன்றதொரு நிலைமையினை குருணாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் காண முடியும். இங்கு வாழும் மலையகத் தமிழர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் தமது அடையாளங்களை இழந்து சிங்களமயமாகியுள்ளார்கள். சிங்கள கலாசாரத்தினை தழுவியுள்ளார்கள். மலையக மக்கள் இம்மாவட்டங்களில் சிதைந்து காணப்படுகின்றார்கள். அதற்கு எண்ணிக்கையில் சிறுபான்மையாக வாழ்வது, அரசியல் பிரநிதித்துவமின்மை, சிங்கள கிராமங்களை அண்டி குடியிருப்புக்கள் காணப்படுதல், உளவியல் ரீதியான அச்ச உணர்வு, இனப்பதற்றம் போன்ற பல காரணிகள் செல்வாக்கு செழுத்துகின்றன. போருக்குப் பின்னர் இனப்பதற்றம் குறைவடைந்திருந்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் பாதுகாப்பற்ற உணர்வு தொடர்வதனை மக்கள் சந்திப்புகளின் ஊடாக அறிய முடிந்தது. களத்தரவுகளின் படி மொனராகலை மற்றும் குருணாகல் மாவட்டங்களில் சுமார் 25%மானவர்கள் சிங்களமயமாகியிருப்பதனை அறிய முடிந்தது. நகர்ப்புறங்களை அண்டி வாழும் மலையக மக்கள் மத்தியில் இப்போக்கு மிகவும் அதிகமாகும். இப்போக்கினை நகரச் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் மத்தியிலும் அவதானிக்க முடியும். ஆயினும், இன்றைய இளைஞர்கள் மத்தியில் தமிழர் என்ற உணர்வும் மலையக அடையாளம் தொடர்பான வேட்கையும்  தைரியமும் சற்று அதிகமாகவே காணப்படுகின்றது. கடந்த ஆண்டில் தெனியாயவில் கொண்டாடப்பட்ட மலையகம் 200 நிகழ்வு சிறந்த சான்றாதாரமாக அமைந்தது. இப்பிரதேசங்களில் உள்ள சிறிய மற்றும் பெரிய நகரங்களில் வர்த்தகச் செயற்பாடுகளிலும் ஈடுபடுவதற்கு மலையக இளைஞர்கள் முன்வந்துள்ளார்கள். பிறிதொரு விடயம் யாதெனில் இரத்தினபுரி மாவட்டத்தில் போர் முடிந்தப் பின்னரும் இன வன்முறைகள் தொடர்கின்றன, ஆனால், மேற்கூறிய மாவட்டங்களில் அப்படியான சம்பவங்கள் மிக மிகக் குறைவு அல்லது இல்லையென்றே கூற வேண்டும்.

இவற்றுக்கு மேலாக மேற்கூறிய மாவட்டங்களில் வாழும் மக்கள் மலையக அரசியல் அல்லது மரபு ரீதியான தொழிற்சங்க அரசியலில் இருந்து விடுபட்டவர்கள். இவர்கள் தேசிய அரசியலுடன் பிணைக்கப்பட்டுள்ளார்கள். பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கு வாக்களிப்பதும், தமது அடிப்படைப் பிரச்சினைகளுக்கு அவர்களை நாடுவதும், பொருள்சார்ந்த நன்மைகளைப் பெற்றுக்கொள்வதும் தொடர்கின்றது. ஆயினும், இம்மக்களின் உரிமை சார்ந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வினைத் தேடுவதற்கோ அல்லது மனிதப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்குவதற்கோ இவர்கள் முன்வருவதில்லை. பெரும்பான்மை அரசியல்வாதிகள் இம்மக்களை அனுதாபக்கண்ணோட்டத்தில் நோக்குவதுடன், கட்சி அரசியல் நலன்களை அடைந்துக்கொள்வதற்குப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துகின்றார்கள். இதனை இரத்தினபுரி மற்றும் கேகாலையிலும் அவதானிக்க முடியும். தென் மாகாணம், மொனராகலை மற்றும் குருணாகல் மாட்டங்களில் வாழும் மலையகத் தமிழர்களின் சமூகப் பொருளாதார, கலாசார மற்றும் அரசியல் நிலை தொடர்பாக பின்னர் விரிவான கட்டுரையொன்று எழுதப்படும்.

இவற்றுடன்,  குடித்தொகை வீழ்ச்சிக்கு பங்களிப்பு செய்யும் பிரிதொரு காரணம் மலையக மாவட்டங்களில் இடம்பெறும் மத மாற்றங்கள் – இது எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் நீண்ட காலத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். எவ்வாறாயினும் சரியான சனத்தொகை கணக்கெடுப்பு ஒன்றினை மேற்கொண்டால் மலையக மக்களின் சனத்தொகை சுமார் 13 லட்சமாக அல்லது அதற்கு சற்று அதிகமாக இருக்கும். இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளைப் பார்க்கும் போது அது மேலும் உறுதி செய்யப்படுகின்றது. இலங்கை குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் 1981 -2011 காலப்பகுதியில் மலையக மக்களின் சனத்தொகையில் 27% இயற்கை வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றது. அந்த அடிப்படையில் பார்க்கும் போதும் 1,300,000 – 1,350,000 என்ற மதிப்பீடு ஒத்து நிற்பதனை அவதானிக்க முடிகின்றது. பின்வரும் அட்டவணை மலையக சமூகத்தில் சனத்தொகைக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கால அடிப்படையில் எடுத்துக் காட்டுகின்றது.

அட்டவணை – 1 இந்திய வம்சாவழி மலையக தமிழ் மக்கள் (1911 – 2012)

வருடம் மக்கள் தொகை இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் வகிக்கும் %
1911 531,000 12.9
1921 602,000 13.4
1931 817,000 15.4
1946 780,000 11.7
1953 974,000 12.0
1963 1,123,000 10.6
1971 1,173,000 9.3
1981 818,000 5.5
2012 839,504 4.1

Source: 1911 முதல் 1981 ஆம் ஆண்டுவரையான தரவுகள். Dept.of.Census and Statistics General Report 1981, Vol.3 (1986) (Colombo), p.113, &  Census of Population and Housing Sri Lanka,  2012.

முடிவுரை

இக்கட்டுரையில் காட்டப்பட்டுள்ள பிரிவினர்கள் அல்லது அடுக்கமைவு தொடர்பாக ஆழமான விவாதங்கள் மற்றும் ஆய்வுகள் அவசியமாகும். அவை சமூகத்தின் வளர்ச்சிப்போக்கு மற்றும் பின்னடைவுகள் என்பவற்றினை விளங்கிக் கொள்ளவும் எதிர்காலம் தொடர்பாக சிந்திக்க, கொள்கைத் திட்டங்களை உருவாக்கவும் உதவும். அந்த வகையில், மலையக சமூகத்தின் அபிவிருத்திக்கு அல்லது நிலைமாற்றத்திற்கு எத்தகைய சமூக மாற்றம் தேவை என்பதனை விளங்கிக் கொள்ள இக்கட்டுரை உதவும். இக்கட்டுரை சரியான வகைப்பாட்டினை அல்லது சமூக அடுக்கமைவினை குறித்து சிந்திப்பதற்கான ஆரம்பத்தினை மாத்திரமே வழங்குவதுடன் இது குறித்த விமர்சனம் மற்றும் விவாதங்களுக்கான கதவினை திறந்து விட முற்படுகின்றது. மலையக சமூகத்தின் அடையாளம் தொடர்பாக மிக தீவிர கருத்தாடல்கள் இடம்பெறும் இச்சூழலில் இத்தகைய விவாதங்களும் அவசியமாகும். இக்கட்டுரையில் 1971 தொடக்கம் 1984 வரையில் தாயகம் திரும்பிய சுமார் 450,000 பேர் தொடர்பாக கலந்துரையாடப்படவில்லை. இவர்களும் இச்சமூகத்தின் ஒரு பகுதியினர் – இன்று தமிழ் நாட்டில் பெரும் எண்ணிக்கையிலும் வேறு மாநிலங்களில் ஒரு சிறு எண்ணிக்கையிலும் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களின் தற்போதைய சமூகப்பொருளாதார நிலை தொடர்பாக ஆய்வுகள் எதுவும் இடம்பெற்றதாக தெரியவில்லை. இலங்கை மலையகத் தமிழர்களின் சமூகப் பொருளாதார நிலையினை தாயகம் திரும்பிய சமூகத்துடன் ஒப்பிட்டு ஓர் ஆய்வு செய்யப்படுமாக இருந்தால் அது இவ்விரு சமூகங்களிலும் ஏற்பட்டுள்ள சமூக அசைவியக்கத்தினை புரிந்துக்கொள்வதற்கும் எதிர்காலவியல் நோக்கில் கொள்கைத் திட்டங்களை முன்மொழிய மற்றும் அது குறித்த பரப்புரைகளைக் கொள்கை வகுப்பாளர்கள் அல்லது அரசாங்க மட்டங்களில் இவ்விருச் சமூகமும் மேற்கொள்ள உதவும்.

சமூக அடுக்கமைவு தொடர்பாக இரண்டு பிரதான கோட்பாட்டு நோக்குகள் காணப்படுகின்றன. முதலாவது செயற்பாட்டு கோட்பாடுகள் (functional theories) அல்லது  மரபு ரீதியான கோட்பாடு என்று அழைக்கப்படுகின்றது.  இவர்கள் சமூக அடுக்கமைவு தவிர்க்க முடியாதது எனவும் அது பயனுள்ளது எனவும் வாதிடுகின்றார்கள். இரண்டாவது மோதல் கோட்பாடுகள் (conflict theories) இது தீவிர மார்க்ஸிய சிந்தனையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டது. இவர்கள் சமூக அடுக்கமைவு மற்றும் அதனால் ஏற்படுகின்ற அசமத்துவம் சவாலுக்கு உட்படுத்தக்கூடியது மட்டுமல்ல சவாலுக்கு உட்படுத்த வேண்டும் என வாதிடுகின்றார்கள். இதற்கு மார்க்ஸிய சிந்தனைகள் அடிப்படையாக அமைந்துள்ளன (டு Lenski, 1996).

இவ்விரண்டு கோட்பாடுகளையும் மலையக சமூகத்தின் அடுக்கமைவினை விளங்கிக் கொள்ள பயன்படுத்த முடியும். ஒரு புறம் சமூக அடுக்கமைவு மலையகத்தில் தவிர்க்க முடியாதது. அதற்கு இச்சமூகத்தின் வரலாற்று காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. மேல்நோக்கிய சமூக அசைவு, பின்னடைவுகள் மற்றும் வளர்ச்சி என பல அம்சங்கள் இடம்பெற்று வருகின்றன. ஆகவே, சமூக அடுக்கமைவு இச்சமூகத்தின் வளர்ச்சியினை மற்றும் பின்னடைவுகளை அடையாளம் காண உதவும். அதில் உள்ள மட்டுப்பாடுகள் அல்லது சவால்களை விளங்கிக் கொள்ள உதவும். மறுபுறமாக தீவிர மார்க்ஸியவாதிகள் குறிப்பிடுவதன் படி இத்தகைய அசமத்துவம், பாகுபாடுகள், அடக்குமுறை, சுரண்டல், அடிமைத்தனம் நிறைந்த சமூக கட்டமைப்பு மலையகத்தில் அதிகளவில் நிலவுவதனை அல்லது நிறுவனமயப்படுத்தப்பட்டிருப்பதனை ஒழிக்க வேண்டும். ஆகவே, இப்போக்கினை தொடர்ச்சியாக சவாலுக்கு உட்படுத்த வேண்டும். அதற்கு போராட்டங்கள், எதிர்ப்புக்கள், மக்கள் அணித்திரட்டல், கல்வியறிவு, உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அரசியல் – பொருளாதார நிலை குறித்த அடிப்படை அறிவு என்பன அவசியமாகும். இவை அதிகாரக் கட்டமைப்பினை அரசியல் மற்றும் வர்த்தக உயர் குழாமினரை எதிர்ப்பதற்கு, தமது உரிமைகளை, இருப்பினை மற்றும் அங்கீகாரத்தினை வென்றெடுப்பதற்கு உதவலாம்.

கலாநிதி இரா. ரமேஷ்
சிரேஷ்ட விரிவுரையாளர்,
பேராதனைப் பல்கலைக்கழகம்

References

Budowski, M., & Tillmann, R. (2021). Social stratification. In Encyclopedia of Quality of Life and Well-Being Research (pp. 1-4). Cham: Springer International Publishing.

DiPrete, T. A., & Eirich, G. M. (2006). Cumulative advantage as a mechanism for inequality: A review of theoretical and empirical developments. Annual Review of Sociology, 32, 271–297.

Grusky, D. B. (2001). The past, present, and future of social inequality. In D. B. Grusky (Ed.), Social stratification. Class, race, and gender in sociological perspective (pp. 3–51). Bouldner: Westview Press.

Grusky, D. B. (Ed.). (2014). Social stratification. Class, race, and gender in sociological perspective. London: Routledge.

Hout, M., & DiPrete, T. A. (2006). What we have learned: RC28’s contributions to knowledge about social stratification. Research in Social Stratification and Mobility, 24, 1–20.

Johnson, L. A. (2013). Social stratification. Biblical Theology Bulletin, 43(3), 155-168.

Kerbo, H. R. (2000). Social stratification and inequality: Class conflict in historical, comparative, and global perspective. Boston, MA: McGraw Hill.

Lenski Gerhard. (1966). Power and Privilege: A Theory of Social Stratification. New York, NY: McGraw Hill.

Sørensen, A. B. (1986). Theory and methodology in social stratification. In U. Himmelstrand (Ed.), The sociology of structure and action (pp. 69–95). London: Sage.