Photos, @garikaalan

“இன்றைக்குக் கூட, உதாரணமாக கிளிநொச்சியில் சில கிராமங்களுக்குப் போனால், அங்கு வசிக்கும் மலையகத் தமிழ் மக்களுக்கு சரியான உறுதிக் காணிகள் இல்லை, விவசாயக் காணிகள் இல்லை. ஏதாவதொரு வகையில் விவசாயக் காணியொன்றைக் கைப்பற்றி குடியேறியிருந்தாலும் அங்கு நீப்பாசன வசதியில்லை. பல கிராமங்களில் அவர்கள் குளத்துக்கு அண்மையில் வசித்து வருகிறார்கள். ஆனால், அந்தக் குளத்திலிருந்து வரும் நீர் அந்த மக்களுடைய காணிகளுக்குச் சென்றடைவதில்லை. அவற்றைத் தாண்டி வேறொரு விவசாயக் காணிக்குப்போகிற ஒரு நிலைமைதான் காணப்படுகிறது.

இப்படியான நிலையில் வடக்கில் வாழ்ந்துவரும் மலையக மக்களின் துயர வரலாறு எங்கும் பதிவுசெய்யப்படவில்லை. அதுமட்டுமன்றி, அந்த வரலாறு மெளனிக்கப்பட்டுமுள்ளது. நாங்கள் எல்லோரும் தமிழர்கள் என்று கூறி, பொதுவான அபிலாஷை​களை முன்வைப்பவர்கள், வடக்கில் வாழும் மலையக மக்களின் காணி சார்ந்த பிரச்சினைகள், கல்வி சார்ந்த பிரச்சினைகள், வேலைவாய்ப்பு போன்றவற்றில் முன்னேற்றத்தைக் கொண்டுவர அக்கறை காட்டவில்லை” – என்று கூறுகிறார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர்.

வடக்கில் வாழும் மலையக மக்கள் தொடர்பாக ஆய்வொன்றை மேற்கொண்டுவரும் அகிலன் கதிர்காமர், அது தொடர்பாக மாற்றத்துடன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். முழுமையான நேர்க்காணலை கீழே பார்க்கலாம்.