Photo, Adaderana

“படுபாதாளத்தை நோக்கிச் செல்லும் அந்தக் குறுகிய வழி; தொடர்ந்து வாருங்கள். தூக்கத்தில் என்னால் அதனைக் கண்டுபிடிக்க முடியும் – பிரெச்ட்  (War Primer)

டெர்ரி பிரட்சேட்ரின் சிறிய தெய்வங்களில், ஒரு தெய்வம் ஓர் ஆமையாக மாற்றப்படுகின்றது. ஒம்னியா பெரும் தெய்வமான Om இன் பண்ணையாள்;. பழக்கத்தின் காரணமாக அல்லது தெய்வத்தின் மனிதக் காவலர்கள் மீது கொண்டிருக்கும் அச்சம் காரணமாக அனைவரும் அத் தெய்வத்தை வழிபடுகிறார்கள். ஆனால், அதன் மீது நம்பிக்கை வைத்திருக்கவில்லை. நம்பிக்கை குறையும் பொழுது தெய்வங்கள் மங்கிச் செல்கின்றன. அந்த நம்பிக்கையை மீளத் தூண்டுவதற்கென Om தெய்வம் அநேகமாக எந்தக் காரியத்தை செய்யவும் தயார்.

ராஜபக்‌ஷாக்களைப் போல.

கோட்டபாய ராஜபக்‌ஷவின் அமோக வெற்றியின் இரண்டு ஆண்டுகளின் பின்னர்,  கனகச்சிதமாக காரியங்களை முடிப்பவர் என அறியப்பட்ட அவர் இப்பொழுது பெருமளவுக்கு ஒரு கோமாளியைப் போல காட்சியளிக்கிறார். குடும்பக் கம்பனி இப்பொழுது சிக்கலில் அகப்பட்டுக் கொண்டிருப்பதுடன், சுகாதாரக் கொள்கை நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு புதிய கருத்துக் கணிப்பு எடுத்துக்காட்டுவதைப் போல, அவர்களது ஆதரவுத் தளம் சிதைவடைந்து  வருகின்றது.

வேட்பாளர் கோட்டபாயவுக்கு 2019 இலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 2020ஆம் ஆண்டிலும் வாக்களித்த இலங்கையர்களில் மூன்றில் ஒரு பங்கினார்  – 33 வீதமானோர் –  கோட்டபாய ராஜபக்‌ஷவுக்கு  இனிமேலும் வாக்களிக்கப் போவதில்லை எனச் சொல்கிறார்கள்.

இந்த வியாதி ஆழமாக வேரூன்றிச் செல்கிறது. இந்த ஆய்வின் ஏனைய முடிவுகள் அமைப்பு சார்ந்த ஒரு நம்பிக்கை நெருக்கடி நிலவுவதனை சுட்டிக்காட்டுகின்றன. இலங்கையர்களில் கால்வாசிப் பகுதிக்கும் மேற்பட்டவர்கள் (27 வீதத்தினர்) நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல விரும்புகின்றார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் மற்றும் படித்தவர்கள் ஆவார்கள். நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல விரும்புபவர்களில் 48 வீதத்தினர்  18  வயதிற்கும் 29 வயதிற்கும் இடைப்பட்ட வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்; 53 வீதமான  பட்டதாரிகளாக அல்லது அதற்கு மேல் படித்தவர்களாக இருந்து வருகின்றார்கள். ராஜபக்‌ஷாக்கள் மீதான மயக்கம் தெளிந்திருக்கும் நிலை, இலங்கையின் எதிர்காலம் குறித்த ஒரு பொதுவான நம்பிக்கையீனமாக  மாறி வருகின்றது.

பெருந்தொற்று ஒரு பங்களிப்புக் காரணியாகும். ஆனால், அடிச்சரடாக ஓடிக் கொண்டிருக்கும்  அதிருப்திக்கான  பிரதான காரணம் பொருளாதாரமாகும். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 72 சதவீதத்தினர் பொதுவான பொருளாதார நிலைமைகள் இன்னும் ஒரு வருட காலத்தில் மேலும் மோசமடைய முடியும் என எதிர்பார்க்கின்றார்கள். அதிருப்தியடைந்திருக்கும் கோட்டபாய/ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வாக்காளர்களில்  66 வீதத்தினரும் இவ்விதம் நம்புகிறார்கள். ராஜபக்‌ஷாக்களுக்கு இன்னமும் விசுவாசமாக இருந்து வருபவர்களில் 59 வீதத்தினர் ஒரு வருட காலத்தில் பொருளாதார நிலைமைகள்  மேலும் மோசமடையும் என எதிர்பார்க்கிறார்கள். ராஜபக்‌ஷ விசுவாசிகளில் 25 வீதத்தினர் மட்டுமே அடுத்துவரும் ஆண்டில் பொருளாதார நிலை விருத்தியடையும் என நம்புகிறார்கள்.

முன்னைய வருடத்துடன் ஒப்பிட்டு நோக்கும் பொழுது, தமது குடும்பப் பொருளாதார நிலைமை மோசமடைந்திருப்பதாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 65 வீதத்தினர் கூறுகிறார்கள். அதிருப்தியடைந்திருக்கும் கோட்டபாய/ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வாக்காளர்களில் 66 வீதத்தினர்  இதே மாதிரியான ஒரு வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளனர். ராஜபக்‌ஷாக்களுக்கு இன்னமும் விசுவாசமாக இருப்பவர்களில் 56 வீதத்தினர் தமது குடும்பப் பொருளாதார நிலைமைகள் சீரழிந்திருப்பதாக சொன்னார்கள்; 11 வீதத்தினர் மட்டுமே தமது தனிப்பட்ட பொருளாதாரத்தில் ஒரு விருத்தி நிலைமை ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர் (முழுமையான அறிக்கை).

தாய் நாடு, இனம் மற்றும் சமயம் குறித்த பாடலை ராஜபக்‌ஷாக்கள் இசைத்து வருகிறார்கள். ஆனால், அவர்களுடைய உண்மையான குறிக்கோள்கள் குடும்ப மற்றும் சுயநலன் சார்ந்த குறிக்கோள்களாக இருந்து வருகின்றன. தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கவேண்டுமென்றும், தமது குடும்ப ஆட்சியை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றார்கள். சீர்குலைந்து வரும் பிரபல்யம் மற்றும் அருகி வரும் வாய்ப்புக்கள் என்பவற்றுக்கு குடும்பக் கம்பனி எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றது என்பது, அடுத்த மூன்று ஆண்டுகளின் குரலையும், தொனியையும், வடிவத்தையும்  நிர்ணயிக்கும்.

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ செயலணி வடக்கில் அதன் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. இறந்தவர்கனை நினைவு கூருவதிலும், காணாமற் போயிருப்பவர்களை தேடிக் கொண்டிருப்பதிலும் பார்க்க மிக முக்கியமான கரிசனைகள் இருந்து வருகின்றன என அந்தச் செயலணி பிரகடனம் செய்கின்றது. களனிப் பாலத்தை திறந்து வைத்து, ஜனாதிபதி ஆற்றிய உரையுடன் இதனைப் பொருத்திப் பார்க்கும் பொழுது, இனவாதம் மற்றும் அடக்குமுறை என்பன ராஜபக்‌ஷாக்களின் பிழைப்புவாத உத்தியின் மூலைக் கற்களாக இருப்பது தெரிய வருகின்றது.

இலங்கை ஒரு நாடாளுமன்ற முறையைக் கொண்டிருந்தால் 2024ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓர் அரசாங்க மாற்றத்தை மேற்கொண்டிருக்க முடியும். ஆகக் குறைந்தது நாடு படுபாதாளத்தை நோக்கிச் செல்வதனை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். நிறைவேற்று ஜனாதிபதி முறை இந்தச் சாத்தியப்பாட்டை இல்லாது செய்வதுடன், விசேடமாக 20ஆவது திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களை மீள எடுத்து வந்ததனை அடுத்து இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. வன்மத்துடன் கூடிய ஆட்சியாளர்களின் இந்தத் தகுதியீனம் காரணமாக நாடு இன்னும் மூன்று வருடங்கள் துன்பப்பட வேண்டியிருக்கும்.

அறிவிழந்த மகான்கள்

அதனை காலகட்டத்தின் அடையாளமாகச் சொல்லலாம். எரிவாயு இல்லாமல் நீங்கள் ஐந்து உணவுகளைச் சமைக்க முடியும் – ஜனரஞ்சகமான வாழ்க்கைப் பாணி இணையதளம் ஒன்றில் அண்மையில் வெளிவந்த கட்டுரையின் ஒரு தலைப்பு. மற்றொரு இணையதளம் வாவனல்ல பன்சலை ஒன்றைச் சேர்ந்த தலைமைப் பிக்கு ஒருவர் எரிவாயு வாங்குவதற்கான வரிசையில் காத்திருக்கும் புகைப்படத்தை பிரசுரித்திருந்தது. எரிவாயு சிலிண்டரைப் பெற்றுக்கொள்வதற்காக இது தன்னுடைய நான்காவது முயற்சி என அந்தப் பிக்கு கூறியிருந்தார்.

“மன்னர்களின் பெருமிதம் மனிதகுலத்தை குழப்பத்திற்குள் தள்ளி விடுகின்றது” என Commonsense நூலில் தோமஸ் பெயின் எழுதினார். 2021ஆம் ஆண்டின் இலங்கை இதற்கான தலைசிறந்த ஓர் உதாரணத்தை வழங்குகின்றது. உலகளாவிய ரீதியில் முதன்மை ஸ்தானத்தை பெற்றுக்கொள்வதற்கான பேராவலுடன் இருக்கும் கோட்டபாய ராஜபக்‌ஷ, ஒரு சாகுபடி பருவத்திலிருந்து அடுத்த சாகுபடி பருவத்திற்குள் இலங்கையின் விவசாயத் துறையை முழுமையாக சேதன விவசாய முறையாக மாற்றியமைப்பதற்கு தீர்மானித்தார். தனது வரலாற்றுச் சாதனைக்காக வாஷிங்டனிலும், லண்டனிலும் புகழாரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர் கனவு கண்டாரா? ஐ.நா. காலநிலை உச்சி மாநாட்டில் முதன்மை உரையை நிகழ்த்த வேண்டுமென்றும், உலக வல்லரசுகளுக்கு அவர்களுடைய பொருளாதாரங்களை ஒரேயடியாக பசுமைப் பொருளாதாரங்களாக மாற்றியமைப்பது எப்படி என ஆலோசனை வழங்க வேண்டுமென்றும் அவர் கனவு கண்டாரா? எது எப்படியிருந்த போதிலும், விளக்கமற்ற நிலையில் முன்னெடுக்கப்பட்ட அவருடைய அபிலாசைக்கு அடுத்து வரும் ஆண்டுகளின் போது நாடு ஒரு பெரிய விலையை செலுத்த வேண்டி நேரிடும்.

நாட்டின் விவசாயக் காணிகள் நெடுகிலும் பேரழிவுகள் ஏற்பட்டிருக்கும் நிலையில், சூறாவளி கோட்டபாய, இப்பொழுது உதட்டை பிதுக்கிக் கொண்டு தணிந்து போயிருக்கின்றது. மானியங்கள் இல்லாத விதத்தில் இரசாயன உர வகைகளை இறக்குமதி செய்வதற்குத் தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. சர்வதேச ரீதியில் நாளுக்கு நாள் துரித கதியில்  உயர்ந்து வரும் உர விலைகளின் பின்னணியில், இந்தப் புதிய முடிவு சிறிய விவசாயிகள் மட்டுமன்றி, நடுத்தர மட்ட விவசாயிகளினதும் கூட கொள்வனவுச் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்து வர முடியும். எனவே, இந்த நெருக்கடி தொடர்ந்து நிலவிவரும் தமது வாழ்வாதாரத்தைக் கைவிடுவதற்கும், உயிர்வாழ்வதற்காக தமது காணிகளை விற்பனை செய்வதற்கும் பல விவசாயிகள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள். கிராமிய வறுமை, நிலமற்ற நிலை, வேலையில்லாத் திண்டாட்டம் என்பவற்றின் அதிகரிப்பு மற்றும் நகர்ப்புறங்களை நோக்கிய அதிகளவிலான குடிபெயர்வு என்பவற்றின் விளைவாக நாட்டிலிருந்து வெளியேறிச் செல்ல விரும்புபவர்களின் எண்ணிக்கையில் மேலும் ஓர் அதிகரிப்பு ஏற்பட முடியும்.

அரசியல் ரீதியில் இவற்றுக்கென செலுத்த வேண்டியிருக்கும் விலையின் பின்னணியில், ராஜபக்‌ஷகள் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஊதாரித்தனமான  செயல்களில் ஈடுபடுவதிலிருந்து தவிர்ந்து கொள்வார்களா? அநேகமாக அதற்கு வாய்ப்பில்லை (வரிகளைக் குறைப்பது தொடக்கம் உர நெருக்கடி வரையில் நிகழ்ந்த) தமது தவறுகளை அவர்கள் இன்னமும் ஏற்றுக்கொள்ளவில்லை. தமது சொந்த மனச்சாய்வுகள் மற்றும் அபிலாசைகள் என்பவற்றுக்கு எதிராக இருக்கக்கூடிய நிபுணர்களின் அபிப்பிராயங்களை அவர்கள் வெறுத்தொதுக்கி வருகின்றார்கள்.

சந்த ஹிரு சேய  நினைவுச் சின்ன அங்குரார்ப்பண வைபவத்தை இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டும். இந்தக் கருத்திட்டத்தின் குறியீடு மிகவும் வெளிப்படையானதாகும்.  துட்டகைமுனு மன்னன் எல்லாள மன்னனை தோற்கடித்து, ருவன்வெலி சாயவை நிர்மாணித்தான். மன்னர் மஹிந்த புலிகளை தோற்கடித்து, சந்த ஹிரு சேயவை நிர்மாணித்தார். வரலாற்றுப் புகழ் மிக்க அநுராதபுர நகரில் அமைந்திருக்கும் இந்த நினைவுச் சின்னம் ரட்ட (நாடு), ஜாத்திய (இனம்), ஆகம (மதம்) மற்றும் ஆளும் குடும்பம் என்பவற்றுக்கு இடையிலான இயல்பான பிணைப்பை சித்தரித்துக் காட்டுவதாகக் கருத முடியும்  (சிங்கள பௌத்த மேலாதிக்கம் மற்றும் ராஜபக்‌ஷ மேலாதிக்கம் என்பன மட்டும் இந்த நிகழ்வின்  போது காட்சிப்படுத்தப்பட்ட விடயங்களாக இருக்கவில்லை. தமது வாழ்க்கைத் துணைகளுக்கு தாழ்ந்த மட்டத்தில் கதிரைகள் வழங்கப்பட்டிருந்த அதே வேளையில், ஜனாதிபதியும், பிரதமரும் உயர்ந்த கதிரைகளில் அமர்ந்திருந்தார்கள். சிங்கள பௌத்த வெளிக்குள் பால்நிலை சமத்துவத்தையும் உள்ளடக்கிய விதத்தில் எந்தவொரு சமத்துவமும் ராஜபக்‌ஷ விழுமியங்களுக்கு அன்னியமானதாகும்).

முன்னைய தொல்பொருள் ஆணையாளரின் கருத்தின் பிரகாரம், தொல்லியல் ரீதியில் மிக முக்கியமானதாக இருந்து வரும் அந்த அமைவிடத்தில் சந்த ஹிரு சேய நினைவுச் சின்னம் ஒருபோதும் அமைக்கப்பட்டிருக்கக் கூடாது. இந்தக் கட்டடத்தை அந்த இடத்தில் நிர்மாணிக்க வேண்டாம் என அல்லது சிறிய அளவில் அதனை நிர்மாணிக்க வேண்டும் என அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் தான் கேட்டுக்கொண்டதாக அண்மையில் வழங்கிய ஒரு பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார். ஆனால், நிபுணத்துவ ஆலோசனை புறக்கணிக்கப்பட்ட நிலையில், அந்தக் கருத்திட்டத்திற்கான அனுமதியை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு எற்பட்டிருந்தது (எதிர்ப்புத் தெரிவித்து, ராஜினாமா செய்வதன் மூலம் ஆணையாளர் தனது தொழில் நாணயத்தை காத்துக் கொண்டிருக்க முடியும் என எவரும் நினைக்கலாம். ஆனால், அச்சம் என்பது மிகப் பெரிய நிர்ப்பந்தக் காரணியாக இருந்து வருகின்றது).

முன்னைய ஆணையாளர் குறிப்பிட்டதைப் போல,  இப்பொழுது மஹிந்த ராஜபக்‌ஷ ஓர் மன்னராக சித்தரிக்கப்பட்டு வருகின்றார். மன்னர்கள் தாம் தவறிழைக்க  முடியாதவர்கள் எனச் சிந்திக்கும் பழக்கத்தை கொண்டிருப்பவர்கள். எனவே, அந்த நிபுணத்துவ ஆலோசனையை உதாசீனம் செய்வது என்பது ராஜபக்‌ஷ அரசியல் இரத்தத்தில் ஊறிய ஒரு விடயமாகும். தமது சொந்த மகிமையை தேடிச் செல்லும் பயணத்தில் அவர்களைப் பொறுத்தவரையில் வரையறைகள் எதுவும் இருக்க முடியாது. எனவே, கடந்த இரண்டு வருடங்களில் இடம்பெற்று வந்திருக்கும் அபத்தத் தவறுகள் (மற்றும் முன்னைய ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் போது இடம்பெற்ற தவறுகள்) அடுத்த மூன்று ஆண்டுகளிலும் அதே விதத்தில் தொடர முடியும்.

மிகச் சிறந்த பாதுகாப்பு அரண்களைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டிலும் கூட, டொனல்ட் ட்ரம்ப் எடுத்துக் காட்டியதைப் போல, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் பெரு நாசத்தை விளைவிக்க முடியும். ஜனநாயகம் முழுமையாக வளர்ந்திராத மற்றும் வலுவான நிறுவனக் கட்டமைப்புக்கள் இல்லாத எமது நாட்டைப் போன்ற ஒரு நாட்டில் நிறைவேற்று ஜனாதிபதி ஒருவர் எடுத்து வரக்கூடிய தீங்கு அளவிட முடியாததாகும். இது பல ஆயிரம் ஆண்டுகள் நீடித்த எமது மன்னராட்சி முறை வரலாறு காரணமாக தீவிரமடைந்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற மன்னராட்சி, பிரான்சில் இடம்பெற்றதைப் போன்ற ஒரு மக்கள் கிளர்ச்சி மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்படவில்லை. வெளிநாட்டு ஆக்கிரமிப்பு  மற்றும் படையெடுப்பு என்பவற்றின் மூலமே அது முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ஒரு மன்னராக இருக்க வேண்டும் என்ற கூடா ஆசையும், பிரஜைகளை வெறும் வஸ்துக்களாக மாற்றியமைப்பதற்கான எண்ணமும் (அதாவது, சிந்தித்து, தெரிவுகளை மேற்கொள்ளும் பொறுப்பு பறிக்கப்பட்டவர்களாக மக்கள் இருந்து வரும் நிலை) அந்த வராலாற்றிலிருந்தே அநேகமாக தோன்றியிருக்க முடியும். எமது தற்போதைய ஜனநாயகம் குறித்த கவலையில் மன்னராட்சி இடம்பெற்ற கடந்த காலத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்ற கனவு எமக்கு தோன்றியுள்ளது. உண்மையிலேயே அதனை ஓர் இழந்த சொர்க்கமாக நாங்கள் தவறான விதத்தில் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். இதன் காரணமாக நாங்கள் அபிலாசை மிக்க தந்திரசாலிகளான அரசியல்வாதிகளின் பெரும் பிரகடனங்களுக்கு இரையாகி வருகின்றோம்.

கேட்டபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதவியேற்பின் இரண்டாவது ஆண்டு நிறைவுடன் சமநிகழ்வாக இடம்பெறும் விதத்தில் புதிய களனிப் பாலத்தின் அங்குரார்ப்பண வைபவம் அநேகமாக திட்டமிடப்பட்டிருக்க முடியும். இந்தக் கோலாகலமான வைபவம் இடம்பெறுவதற்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னர், ஒரு பாலம் இல்லாத காரணத்தினால் கிண்ணியாவில் ஏற்பட்ட படகு விபத்தில் ஆறு மரணங்கள் (அவர்களில் நான்கு பேர் பிள்ளைகள்) நிகழ்ந்திருந்தன. அம்பாந்தோட்டையை ஒரு நவீன நகரமாக மாற்றியமைப்பதற்கு செலவிடப்பட்ட பல கோடிக்கணக்கான ரூபாக்கள் இலங்கை மக்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டிருந்தால் கிண்ணியா கடல் நீரேரிக்கு குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்னரேயே ஒரு பாலத்தை கட்டியிருக்க முடியும். அது படகுப் பயணத்திற்கான தேவையை இல்லாமல் ஆக்குவதன் மூலம் அந்தப் படகு அனர்த்தத்தை தவிர்த்திருக்க முடியும்.

தனது ஆட்சியின் கீழ் இருக்கும் மக்களின் மீது கரிசனை கொண்டிருக்கும் ஒரு அரசாங்கம், அதன் அபிவிருத்தி முன்னுரிமைகளை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துவதன் மூலம் இந்த அனர்த்தத்திற்கு எதிர்வினையாற்றியிருக்கும். ஆகக்குறைந்தது தனது மக்கள் நினைக்கும் விடயங்கள் குறித்து கரிசனை கொண்டிருக்கும் ஒரு அரசாங்கம், விபத்தில் மரணித்தவர்களை கிண்ணியா  மக்கள் நல்லடக்கம் செய்து கொண்டிருந்த வேளையில் இத்தகைய ஒரு பாரிய கொண்டாட்டத்தை நடத்தியிருக்கமாட்டாது. ஆனால், ராஜபக்‌ஷக்கள் களனிப் பாலம்  அங்குரார்ப்பண வைபவத்தை எத்தகைய மாற்றங்களும் இல்லாமல் அதே விதத்தில் நிறைவேற்றி வைத்தார்கள். அறிவுத்திறனும், சக மனிதர்கள் மீதான ஒத்துணர்வும் இல்லாதிருக்கும் நிலை, அடுத்த மூன்று ஆண்டுகளில் நாங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும் நரக வேதனை குறித்த மிக மோசமான ஓர் எச்சரிக்கையாகும்.

அசிங்கமான காட்சிகள்

ராஜபக்‌ஷக்கள் அரச குடும்பத்தின் பாத்திரத்தை வகித்து வரும் அதே வேளையில், கள மட்டத்தில் விநோதமான ஒரு சில சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.   ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வரும் மஹவ மற்றும் லாஹுகல ஆகிய இரண்டு பிரதேச சபைகளில் வரவுசெலவுத்திட்ட வாக்கெடுப்புக்கள் தோல்வியடைந்துள்ளன.  ஜாஎல நகர சபையிலும் கூட பெரும்பாலான உறுப்பினர்கள் வரவுசெலவுத்திட்டத்திற்கு தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள்.

புதிதாக அமைக்கப்பட்ட கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் ஈட்டிய வெற்றி எதிர்காலத்தை எடுத்துக் காட்டிய ஒரு சகுனமாக இருந்தது. அக்கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் உள்ளூராட்சி மன்றங்களின் வரவுசெலவுத்திட்டங்கள் தோல்வியடைந்து வரும் நிலை வெறுமனே ஒரு தற்செயல் நிகழ்வாக இருக்கின்றதா அல்லது ஒரு கெட்ட சகுனமாக உள்ளதா? எப்படியிருந்தாலும், குடும்ப கம்பனியின் ஆட்சியிலிருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்கு விரும்பும் அனைவருக்கும் அவை பெறுமதி மிக்க ஒரு படிப்பினையை வழங்குகின்றன. 2015ஆம் வருடத்தைப் போல, எதிர்க்கட்சி பரந்த அடிப்படையிலான ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கி, விரிவான ஒரு முகாமை தயார்படுத்தினால் மட்டுமே ராஜபக்‌ஷக்களை தோற்கடிக்க முடியும். சுகாதாரக் கொள்கை நிறுவனத்தின் ஆய்வின் பிரகாரம், மீண்டும் ஒரு முறை கோட்டபாய ராஜபக்‌ஷவுக்கு வாக்களிக்கப் போவதில்லை எனக் கூறியவர்களில் பெரும்பாலானவர்கள் 2024ஆம் ஆண்டில் ஒன்றில் வாக்களிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்வதாகக் கூறினார்கள் அல்லது அவர்களுடைய தெரிவு யாராக இருக்கும் என்ற கேள்விக்குப் பதிலளிக்க மறுப்புத் தெரிவித்திருந்தார்கள்.

வாக்காளர்கள் ஒரு அரசாங்கத்தை நிராகரிக்கிறார்கள். ஆனால், அவர்கள் எதிர்க்கட்சியை சூழ அணி திரளவில்லை. வாக்களிப்பிலிருந்து மக்கள் பாரிய எண்ணிக்கையில் தவிர்ந்து கொள்ளும் ஆபத்து, ராஜபக்‌ஷகளுக்கு சாதகமானதாக இருக்க முடியும்.  எதிர்க்கட்சியின் மோசமான செயற்பாட்டின் பின்னணியில் இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.

குறிப்பாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெறுப்பூட்டும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ரோகினி விஜயரத்ன எம்.பியை நோக்கி பெண்களை இழிவுபடுத்தி, அருவெறுப்பான விதத்தில் எதிர்வினையாற்றிய சந்தர்ப்பத்தில்,  அவரது கட்சியைச் சேர்ந்த ஒரு சிலர் வாய்மூடிச் சிரித்து, அதனை வரவேற்றார்கள். அதேவேளையில், எதிர்க்கட்சியின் தரப்பில் கடும் மௌனம் நிலவியது. அந்தத் தருணத்தில் பெண்களையும், நாடாளுமன்ற சம்பிரதாயத்தையும் இழிவுபடுத்தும் இந்தச் செயலைக் கண்டிப்பதற்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் எழுந்து நிற்கவில்லை. தன்னியல்பாக இடம்பெற்ற அந்தச் செயல் முடக்கம் எதிர்க்கட்சியில் என்ன தவறு இருந்து வருகின்றது என்பதனை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. அவர்களிடம் திடமான கொள்கைகளோ, கோட்பாடுகளோ, உணர்வுகளோ, ஒரு பிரச்சினை தொடர்பான அக்கறையோ இருந்து வரவில்லை.

அதனையடுத்து நாடாளுமன்றத்தில் ஒரு எதிர்ப்புச் செயற்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கட்சி பேதத்தை மிகவும் கவலைக்குரிய விதத்தில் எடுத்துக் காட்டும் விதத்தில் அது சமகி ஜனபல வேகய கட்சிக்கு மட்டும் வரையறுக்கப்பட்டிருந்தது. தனது எதிர்ப்பு நடவடிக்கை குறித்து சமகி ஜனபல வேகய  எதிர்த்தரப்பைச் சேர்ந்த ஏனைய கட்சிகளுக்கு தெரிவிக்கத் தவறியுள்ளதா? ஏனைய கட்சிகள் அதில் இணைந்துகொள்வதற்கு மறுப்புத் தெரிவித்தனவா? இதற்கான பதில் என்னவாக இருந்தபோதிலும், அரசாங்கம் தொடர்பாக அதிகரித்து வரும் எதிர்ப்பு, எதிர்க்கட்சிக்கான ஓர் ஆதரவாக ஏன் மாறவில்லை என்பதனை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

எதிர்க்கட்சியின் பெரும் பகுதியினரதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்களினதும் சலுகைகளை விலக்கிக் கொள்ளப் போவதாக ஜனாதிபதி பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார். அதனை அவரால் செய்ய முடியாமல் போகும். ஆனால், பகிரங்மாக அவர் அவ்வாறு தெரிவித்திருப்பது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து, விழுமியங்களை மீறிச் செல்வதற்கான அவரின் புதிய விருப்பத்தினை எடுத்துக் காட்டுகின்றது. மிக அண்மையில் தடுப்புக் காவலில் இடம்பெற்ற மரணம் அரசாங்கத்தின் அராஜகச் செயற்பாடுகள் அதிகரித்து வருவதன் ஒரு அடையாளமாகும். சந்தேக நபரான எல்.எஸ். லசந்தவின் கொலை முன்னரேயே தெரிந்திருந்தது. வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் திட்டமிடப்பட்ட இந்தக் கொலை குறித்து எச்சரிக்கை விடுத்து, பொலிஸ் மா அதிபருக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பி வைத்திருந்தார். எனினும், அந்தக் கொலை நிகழ்ந்தது. அது அவ்விதம் நிகழ்ந்த முதல் கொலையும் அல்ல. மற்றொரு சந்தேக நபரான கொஸ்கொட தாரக்கவின் தாய் ஒரு சட்டத்தரணி ஊடாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு மே 12ஆம் திகதி அனுப்பி வைத்திருந்த கடிதத்தில் தனது மகனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட முடியும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியிருந்ததுடன், அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டிருந்தார். தாயார் அச்சமடைந்த விதத்திலேயே, ஆயுதங்களை காட்டுவதற்கு அழைத்துச் செல்லப்பட்ட பயணம் ஒன்றின் போது அடுத்த நாள் காலையில் அவர் கொல்லப்பட்டார்.

இந்த இரு சம்பவங்களும் சட்டத்தை தன்னிச்சையான விதத்தில் தனது கைகளில் எடுத்துக் கொள்வதற்கான அரசாங்கத்தின் விருப்பினை எடுத்துக் காட்டுகின்றன. அதன் பின்விளைவுகள் குறித்து அரசாங்கம் கிஞ்சித்தும் பொருட்படுத்தவில்லை என்பதனையும் அவை காட்டுகின்றன. (GSP வசதியைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அரசாங்கம்; ‘நல்ல பிள்ளையாக’ நடந்துகொள்ளும் ஒரு சூழ்நிலையிலேயே இவை அனைத்தும்  இடம்பெற்று வருகின்றன). இது  தமது சொந்த சட்டத்தை நிலைநாட்டுவதற்கான அதிகரித்த அளவிலான மக்களின் விருப்பினை பிரதிபலித்துக் காட்டுகின்றது. கிண்ணியா அனர்த்தத்தை அடுத்து அப்பிரதேசத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இதற்கான ஓர் உதாரணமாகும்.

எதிர்ப்புச் செயற்பாடுகள் வன்முறையாக மாறினால், ஏதோ ஒரு நியாயப்படுத்தலுடன்  ராஜபக்‌ஷக்கள் அதனை பாரியளவிலான அடக்குமுறையை  கட்டவிழ்த்து விடுவதற்கான ஒரு சாக்காகப் பயன்படுத்திக் கொள்வார்கள். அவர்கள் தமக்காக தாமே தோண்டியிருக்கும் மக்கள் வெறுப்பு என்ற படுகுழியிலிருந்து தம்மை மீட்டெடுப்பதற்கென விரும்பித் தெரிவு செய்து கொள்ளும் முறைகளாக சிங்கக் கொடி மற்றும் காவித் துணி என்பன இருந்து வரும். ஆனால், இனம் மற்றும் மதம் என்ற கோசம் தோல்வியடைந்தால், முஸ்லிம்/ தமிழ்/ கிறிஸ்தவ எதிரிகள் சிங்கள பௌத்தர்களைப் போதிய எண்ணிக்கையில் ஏமாற்ற முடியாமல் போனால், மக்களை சிறைப்படுத்துவதற்கும், பாரியளவிலான படுகொலைகளை நிகழ்த்துவதற்கும் ராஜபக்‌ஷக்கள் தயங்க மாட்டார்கள். அதிகாரத்தில் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கான அவர்களுடைய விருப்புக்கு எதிரில் நாடு, இனம் மற்றும் மதம் என்பனவும் கூட வெறுமனே பயனற்றவையாக இருந்து வர முடியும்.

திஸரணி குணசேகர

The Next Three Years என்ற தலைப்பில் கிறவுண்விவ்ஸ் தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.