படம் | JERA Photo, COLOMBOMIRROR | யாழ்ப்பாணம், கிராஞ்சி பகுதியில் கடந்த 25 வருடங்களாக வலிகாமத்திலிருந்து இடம்பெயர்ந்து தனியார் காணிகளில் வாழ்ந்துவரும் அகதிச் சிறுவர்கள்.

அவர்களுடைய சாதாரண பொழுதுகளில் அவர்களோடு நாங்கள் நின்றிருக்கிறோம். தாங்கள் படும் துன்பங்களையும் துயரங்களையும் எங்களோடு அவர்கள் பகிர்ந்திருக்கிறார்கள். அந்த நலன்புரி முகாம்களுக்குள் உள் நுழையும்போதே மூச்சு எடுக்க முடியாத ஒரு அந்தர நிலை தோன்றும். வேர்த்துக் கொட்டும். வெயில் காலப் பொழுதுகளில் அவர்களோடு பேசிக்கொண்டிருப்போம். வீட்டுக் கூரையின் துவாரங்களுக்கூடாக உள்நுழையும் சூரியக் கதிர்கள் எங்கள் கண்களை கூசச்செய்யும். நகர்ந்திருந்து அவர்கள் சொல்லும் எல்லாவற்றையும் ஆவலுடன் கேட்டுக் கொண்டிருப்போம்.

அவர்களுடைய பேச்சுக்களில் நவரசங்களும் புகுந்து விளையாடும். அவர்கள் தங்களுடைய சொந்த மண்ணைப்பற்றியும் அம்மண்ணில் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை பற்றியும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் சந்தோசத்தில் திளைப்பார்கள். கண்கள் பளிச்சிடும். உற்சாக மிகுதி அவர்களிடம் தோன்றும். பாடசாலை, தொழில், காதல், உறவுகள் என அவர்களுடைய கதைகளில் பட்டாம் பூச்சிகள் பறக்கும். இருபத்தைந்து வருடத்திற்கு முற்பட்ட கால வாழ்க்கையிலிருந்து நிகழ்காலத்திற்கு மீளும் ஒவ்வொரு கணமும் ஏக்கம் நிறைந்த கண்களுடன் ஏமாற்றங்கள் நிறைந்த வாழ்க்கை முறை பற்றி புலம்புவார்கள். அந்தக்கணங்களில் எல்லாம் அவர்களுடைய அந்த வாழ்க்கைக்கு யார் காரணம் என்று நினைக்கிறார்களோ அவர்களை திட்டித்தீர்ப்பார்கள்.

ஒரு பரப்பு காணிக்குள் குறைந்தது மூன்று குடிசைகள். ஐம்பது குடும்பங்களுக்கு ஒரு மலசலகூடம். நூற்றி ஐம்பது குடும்பங்கள் கொண்ட ஒரு நலன்புரி முகாமில் இரண்டு குழாய்க்கிணறுகள். இவைதான் நலன்புரி முகாமில் மக்களுக்காகச் செய்யப்பட்டுள்ள அடிப்படை நலன்கள்? குழாய்க்கிணற்றிலிருந்து அடித்து எடுத்துச்செல்லப்படும் தண்ணீரை அளவில் பெரிதான ஒரு பிளாஸ்ரிக் பாத்திரத்தில் நிரப்பி விட்டு சுற்றிக்கட்டப்பட்ட சீலையின் மறைப்புக்குள் ஒளிந்து கொண்டு குளிக்கும் பெண்கள், சிரம பரிகாரம் செய்ய பொதுமலசலகூடங்களின் அருகே வரிசையில் சிரமங்களுடன் காத்திருக்கும் மக்கள். இவை யாவும் அம்மக்களின் துன்பங்களை வெளிப்படுத்தும் படிமங்கள்.

“எங்கட காணியள் பொன் விளையிற பூமி தம்பி. சும்மா ஒரு கொட்டை கொடியை நட்டாலும் காய்ச்சுக் கொட்டும். நாங்கள் வீட்டு வளவுக்கையே எங்கடை கறிக்கு தேவையான காய், பிஞ்சுகளை பிடுங்கிறனாங்கள். இப்ப எதுக்கு எடுத்தாலும் காசு. தொழிலும் அதிகம் இல்லை. அங்கை எண்டால் விடிய நாலு மணியில இருந்து வேலை இருக்கும். கடற்கரைப் பக்கம் போனால் மீன் சுமக்கிறது, மீன் வெட்டிறது, மீன் பொறுக்கிறது என்று ஏராளமான வேலைகள். ஆம்பிளையளை விட பொம்பிளையளுக்கு வேலை கூட இருந்தது. அதைவிட தோட்டங்களில ஊரிப்பட்ட வேலை தம்பி. இப்ப நாங்கள் ஒரு தரித்திர வாழ்க்கை வாழுற” – இது ஒரு வயோதிபத் தாயின் ஆதங்கம்.

“நாங்கள் முகாமில இருக்கிறதால படுற கஸ்டம் ஒரு புறம். எங்கடை சமூகம் எங்களுக்கு செய்யிறது இன்னொரு புறம். என்ரை மகளுக்கு கலியாணம் பேசினாங்கள். அவையளும் எங்கடை சொந்தக்காரர்தான். அவையள் சீதனம் கேட்டவை. நாங்கள் மயிலிட்டியிலை இருக்கிற காணி தரலாம் எண்டு சொன்னனாங்கள். எங்களட்டை அது தானே கிடக்குது. ஆமிக்காரன ஹோட்டல் நடத்துற காணியளை உனக்கு விடுறன் எண்டு சொன்னவனே? என்று கேட்டுப் போட்டு கலியாணத்தை குழப்பிப் போட்டினம்” – இது தன் பெண் பிள்ளையை கரைசேர்க்கத் துடிக்கும் தாயின் குரல்.

யாழ்ப்பாணத்தில் நலன்புரி முகாமில் வாழ்வோரின் வாழ்க்கை முகாந்தரம் இப்படித்தான் இருக்கிறது. இதற்கு மேலும் அவர்களைப் பற்றி எழுதினால் இன்னொரு மறுபக்கம் வெளிக்கிழம்பும். அவை சண்டித்தனங்கள், சாதி அடக்கு முறைகள், பாலியல் பலாத்காரங்கள் என அவற்றின் பட்டியல் நீளும். அவற்றை எழுதினால் அது அவர்களுடைய சொந்த வாழ்வை விமர்சிப்பதாகி விடும். இப்பத்தியின் நோக்கம் அதுவல்ல. இப்பிரச்சினைகளுக்குரிய அடிப்படைக் காரணங்களை விளக்குவதே.

“எனக்கு மூன்று பிள்ளைகள். மூன்றும் பொம்பிளைப்பிள்ளையள். மூத்தவா இப்பதான் கலியாணம் செய்தவா. மருமகனின் குடும்பமும் எங்கடை நலன்புரி முகாமில தான் இருக்கினம். அவருடைய குடும்பமும் பெரிசு. எட்டுப் பேர். என்னுடைய அவாவும் கான்சர் வருத்தம் வந்து இறந்து போயிட்டா. இந்நிலையில என்னுடைய மூத்த மகளின் குடும்பமும் எங்களோடை தான் இருக்கினம். இந்த வீட்டில தான் (அவர் சுட்டிக்காட்டும் அந்த வீட்டை நான் அளவெடுக்க முயற்சிக்கிறேன். ஆக மிஞ்சிப் போனாலும் நீள அகலம் அடிக்கணக்கில் பத்துக்கு பத்தில் அடங்கிப் போய் விடும். அதற்குள்ளேயே அறை, வராந்தா, குசினியும் அடக்கம்). அவையள் கலியாணம் செய்த புதுசுதானே தம்பி. தங்கடை சந்தோசத்தை எல்லாம் அதுகள் துலைச்சுப் போடுதுகள். என்னுடைய மற்றப்பிள்ளையளுக்கு தாயுமில்லை, எவ்வளவு துன்பப்படுதுகள். மிச்சத்தை நீங்கள் புரிஞ்சு கொள்ளுங்கோ தம்பி. ஊருக்கு விட்டா கிடக்கிற காணியைப் பகிர்ந்து போட்டு மற்ற பிள்ளையளையும் கரை சேர்த்துப் போட்டு நிம்மதியாய் கண்ணை மூடியிடுவன்” – பெண் பிள்ளையளைப் பெற்ற பொறுப்போடு மனம் திறந்து பேசினார் ஒரு பெரியவர்.

கலந்துரையாடல் ஒன்றில் சட்டத்தரணி ஒருவர் சொன்னார், “ஆவா குழு அடிபட்ட வழக்கில பிடிபட்ட ஒரு தம்பி என்னட்டை வந்தவன். அவன்ரை வழக்கை நான்தான் நடத்துறன். அவனும் நலன்புரி முகாமிலதான் இருக்கிறான். அவனட்டை நான் கேட்டன், “ஏன்டா தம்பி அடிபடப் போனீர்?” என்று. அதுக்கு அவன் சொன்ன பதில், “வேலையில்லாமல் இருந்தனான். எங்களோடை வந்தால் ஆயிரம் ரூபா தரல்லாம் எண்டவங்கள். அதுதான் போனனான்” என்று சொன்னார். நான் திருப்பிக் கேட்டன், ஏன் நீர் கூலி வேலைக்கு போகலாம் தானே என்று. “எங்களை முகாம் பொடியள் எண்டு சொல்லி வேலைக்கு எடுக்கிறது குறைவு” என்று பதில் சொன்னார்.

இப்படி எல்லாம் துன்பப்படும் இவர்கள் யார்? யாழ்ப்பாணப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் விவசாயம், மீன்பிடி என்பவற்றில் மேலான வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய கிராமங்களின் சொந்தக்காரர்கள். அந்த இடங்களுக்கு பல கேந்திர முக்கியத்துவங்களும் உண்டு. அப்படியான பெருமையும் வளமும் மிக்க கிராமங்களில் வாழ்ந்ததற்காகவே சொந்த நாட்டில் நலன்புரி முகாம்களில் அகதி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். செல்வச் சீமான்களாய் பலருக்கு தொழில் கொடுத்த அவர்கள் இன்று பிழைக்க வழி தேடுகிறார்கள். யாழ்ப்பாணத்திற்கே சோறும் கறியும் போட்டவர்களின் பிள்ளைகள் இன்று ஒரு வேளை உணவுக்காக தவம் கிடக்கிறார்கள். எந்தவொரு கூட்டத்தை யார் நடத்தினாலும் குடும்ப அட்டைகளுடன் ஓடிவருதல் அவர்களுக்கு பழகிப் போச்சு. காத்திருத்தலின் வலியை அவர்களைவிட யாரும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

இவர்களுடைய சொந்தக்காணிகளுக்கு பதிலாக வேறிடங்களில் அவர்களை குடியமர்த்துவதற்கான வேலைத்திட்டங்களும் நடைபெற்றன. ஆனால், அவை வெற்றி பெறவில்லை. அதற்குரிய மிகப்பிரதானமான காரணம், அவர்களுடைய பாரம்பரியத் தொழிலுக்கும் அந்நிலப்பிரதேசங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்பதே. இவ்வாறு குடியேற்றப்பட்ட மக்களில் ஒரு தொகுதியினரை நான் சந்தித்தேன். அவர்கள் குட்டியப்புலம் பிள்ளையாங்காடு இந்து மயானக்காணியில் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அங்கே வசிப்பவர்களில் ஒருவர் நகைச்சுவையாக என்னிடம் ஒரு விடயத்தை கூறினார், “எல்லாரும் கடைசியாக போற இடத்திலதான் எங்களுடைய வாழ்க்கையே நடக்குது” என்று. இதை எப்படி விளங்கிக் கொள்வது. இந்த நகைச்சுவை வார்த்தைகளை அதன் உண்மை அர்த்தங்களோடு புரிந்து கொள்ளவேண்டியவர்கள் யார்?

இவ்வாறான நலன்புரி முகாம்களில் வாழ்வோரில் புதிதாக திருமணம் புரிவோர் அப்பிரதேச கிராம சேவையாளர்களினால் பதிவுசெய்ய மறுக்கப்படுகிறார்கள். அவர்கள் அதுக்கு சொல்லும் காரணம் “நீங்கள் புதுக்குடும்பம்தானே. வெளியிலை காணி வேண்டிப் போய் இருங்கோ” என்பதாகும். எப்ப எங்கடை காணியளை விடுவினம், பிள்ளையளுக்கு சீதனம் கொடுக்கலாம் என்ற ஏக்கக் குரல்கள் அவர்களுக்கு விளங்கவில்லையா? அல்லது விளங்காதது போல் நடிக்கிறார்களா என்று புரியவில்லை.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது அவர்கள் பட்ட துன்பம் சொல்லி முடியாது. அரசியல்வாதிகள் யாரும் வரவில்லையா என்று கேட்ட கேள்விக்கு அவர்கள் அளித்த பதில் குறிப்பிடத்தக்கது. “தேர்தல் நேரம் என்றால் வெள்ளத்தை விட உதவிகள் அதிகமாய் இருந்திருக்கும். இப்ப கிட்டடியில தேர்தல் இல்லையே. அதாலதான் கஸ்டத்தில பங்கு கொள்ள யாரும் இல்லை” என்றார்கள். இப்படி தமிழ் அரசியல்வாதிகள் விட்ட இடைவெளியைத்தான் மைத்திரி தனது யாழ். விஜயத்தின் போது இட்டு நிரப்பிக் கொண்டார். மக்கள் மனதில் ஓரளவு இடமும் பிடித்துக் கொண்டார். அவர் கொடுத்த ஆறுமாத கால அவகாசத்தை நம்பி நாட்களை எண்ணத் தொடங்கிவிட்டார்கள் நலன்புரி முகாம் மக்கள். இலங்கைத் தீவின் மாற்றம் இவர்களின் வாழ்வில் எதைத் தரப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

செந்தூரன்