“அரசாங்கமும் ஜனாதிபதியும் முன்வைத்த கொள்கைகள் மற்றும் கடைசியாக நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் – பெருந்தோட்டங்களை மறுசீரமைக்கிறோம் என்ற பெயரிலே மீளவும் அதனை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து கம்பனிகளிடம் ஒப்படைக்கும் ஒரு திட்டத்தினையும் மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவதற்கான ஒரு திட்டத்தினையும் கொண்டிருக்கிறதே தவிர தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரயோசனமாக இருக்கக்கூடிய எந்த ஒரு மறுசீரமைப்பையும் பெருந்தோட்டத்தில் நடைமுறைப்படுத்துவதை காணமுடிவதில்லை. எனவே, இதுவும் கொள்கை முன்வைப்புக்கும் நடைமுறைக்கும் ஒவ்வாத ஒரு விடயமாக இருக்கிறது.
2050 இலங்கை எப்படி இருக்கவேண்டும் என்று ஒரு கொள்கைத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. அது 2019 வெளியிடப்பட்டுமிருக்கிறது. அதில், 2050ஆம் ஆண்டு பெருந்தோட்டங்கள் 1% மாக மாறும் அல்லது மாற்றப்படவேண்டும் என்பதே அவர்களது திட்டம். சுதந்திரத்தின் பின்னர் 100%மாக இருந்த பெருந்தோட்டத்துறை 2050ஆம் ஆண்டு 1%மாக மாற்றுவதற்கான திட்டம் கவனமாக செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் போக்கினை அவதானிக்கின்றபோது அவை சிறுதோட்டங்களாக மாற்றப்படுகின்றன என்பதையும் அந்த சிறுதோட்டங்களில் தோட்டத் தொழிலாளர்கள் விலக்கப்படுகிறார்கள் அல்லது சேர்க்கப்படுவதில்லை என்பதையும் உணரமுடிகிறது.”
இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவிக்கிறார்.
கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்று 2 வருடங்களானதை முன்னிட்டு ‘மாற்றம்’ பல்வேறு தரப்பினரிடம் நேர்காணல் மேற்கொண்டுவருகிறது. அவற்றின் தொடர்ச்சியாக இன்று மயில்வாகனம் திலகராஜின் நேர்க்காணல் வெளியாகிறது. முழுமையான நேர்க்காணலை கீழே பார்க்கவும்.