பட மூலம், Economist 

ஆகஸட் 5ஆம் திகதியன்று நடைபெற்ற பொதுத் தேர்தல் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி, ராஜபக்‌ஷ குடும்பம் மற்றும் நாட்டின் பெரும்பான்மைச் சமூகத்தின் மேல் மற்றும் சாதாரணம் என இரு வகுப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள பௌத்த தேசியவாதிகள் ஆகியோருக்கு ஓர் அற்புதமான வெற்றியைக் கொண்டதாக அமைந்தது. சில அரசியல் கட்சிகளால் தேர்தலில் நிறுத்தப்பட்ட சில வேட்பாளர்களின் ஊழல் மற்றும் குற்றவியல் சார்ந்த செயற்பாடுகள் குறித்து பல குற்றச்சாட்டுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் கூட, அவர்களில் பலரை வாக்காளர்கள் தேர்தலில் வெற்றி பெறச் செய்தனர். நாட்டில் ஊழல்கள் மற்றும் குற்ற நடவடிக்கைகளை வெளிப்படுத்துவதில் அறியப்பட்ட, நம்பிக்கைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதற்கு தங்கள் தகுதிகளை வெளிக்காட்டிய வேறு சில வேட்பாளர்கள், தெரிவு செய்யப்படாமல் போனது, கவலைக்குரியது. அதேசமயம், 2015 ஆட்சியின் போது கொள்ளையடிக்கும் மன்னர்களாக நம்பிக்கைக்குரிய வகையில் குற்றம் சாட்டப்பட்ட சில வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டமை ஆறுதலளிப்பதாக நோக்கப்படுகிறது.

பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பரப்புரைகளைத் திட்டமிட்டோர்கள் தாங்கள் எதிர்பார்த்த பெறுபேறுகளை சந்தேகமின்றி அடைந்தனர். எனது கண்ணோட்டத்தில், இந்த அளவிலான பெரும் வெற்றி நாட்டுக்கும் அதன் மக்களின் நன்மைகளுக்காக உபயோகிக்கப்படக்கூடிய ஒரு சிறந்த வாய்ப்பினையே அளிக்கின்றது. ஜனநாயக நிறுவனங்கள் இராணுவமயப்படுத்தல் தொடருதல், சிறுபான்மையினரின் கரிசனைகள் அலட்சியப்படுத்தப்படுதல், சட்டவாட்சியின் செல்லரித்தல் மற்றும் குறைந்த வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் என்பவை அநேகமாக நடக்கக்கூடிய ஒரு கூடுதல் கவலை தரும் நிலைமையையும் கூட அது கொண்டு வருகிறது. அரசாங்கம் அதன் சிறந்தவற்றை அல்லது அதன் மோசமானவற்றை செயற்படுத்தக்கூடிய ஓர் புதிய அத்தியாயாத்தையும் இந்த வெற்றி திறந்துள்ளது எனலாம்.

சிறந்த சம்பவச் சூழ்நிலை

இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர், “புதிய ஆட்சி, மக்களின் கருத்துகள் மற்றும் அபிப்பிராயங்களை மதிக்குமெனவும், ஓர் அரசாங்கத்தை அமைத்த பின் மக்களின் தேவைகளைத் தொடர்ந்து பிரதிபலிக்குமெனவும்” சில நாட்களுக்கு முன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் அவர்கள் பெற்ற அதிக பெரும்பான்மையுடன், சமூகத்தின் நன்னிலைகளுக்குத் தேவையானவற்றை செய்யாதிருப்பதற்கு எந்தவித சாக்குப்போக்கையும் கொண்டிருக்க முடியாது. யுத்த மூலோபாயம் ஒன்றை முழுமையான அடிப்படையாகக் கொண்ட தமிழ் தீவிரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு ராஜபக்‌ஷ ஆட்சி போரை முன்னெடுத்த போது, அந்த அணுகுமுறையை நாங்கள் விமர்சித்தோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ ரீதியான தோல்வியின் பின்னர், தமிழ் தேசிய பிரச்சினைக்கு ஒரு நீதியான தீர்வை உருவாக்கி அதன் மூலம் சிவில் யுத்தம் ஏற்படுத்திய பிரச்சினைகளுக்கு கவனம் செலுத்துவதற்கு அரசு ஒரு தனித்துவமான வாய்ப்பைக் கொண்டிருந்தது. இப்பொழுதும் கூட அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படாது உள்ளதுடன் அவை மோசமடைந்து கொண்டும் வருகின்றன. வரலாற்று ரீதியான ஒரு வாய்ப்பு தவறவிடப்பட்டது. இது நேர்மை மற்றும் இராஜதந்திரத்துடன் கையாளப்படுத்தப்பட்டிருக்குமாயின், மஹிந்த ராஜபக்‌ஷ ஒரு நோபல் பரிசு வென்றவராக வரும் சாத்தியத்துடன், ஒரு நீண்ட காலத்துக்கு மஹிந்த அரசு அதிகாரத்தில் இருந்திருப்பதற்கான ஒரு வழியையும் அது சமைத்திருக்கும்.

கடந்த காலங்களில், மூன்றிலிரண்டு அல்லது அதை விட அதிகமான பெரும்பான்மையுடன் வாக்காளர்களால் வெவ்வேறுபட்ட அரசியல் சக்திகள் அதிகாரத்திற்குக் கொண்டு வரப்பட்ட சமயங்களில் இலங்கை அத்தகைய பல வாய்ப்புகளைக் கொண்டிருந்தது. திரு.எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க, திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் ஜே.ஆர். ஜயவர்த்தன போன்ற அனைவரும் இந்த வாய்ப்புகளைக் கொண்டிருந்தனர். ஆனாலும், தங்களது அரசியல் பிரிவுகளின் கட்சி சார்ந்த நலன்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதன் மூலமாக மட்டும் அடைய முடியுமான அதிகாரத்தில் தொடர்ந்திருக்கும் அவர்களின் சுயநலம் சார்ந்த விருப்பின் காரணமாக, அவர்கள் அந்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப செயலாற்றவில்லை. அநேகமான சமயம், ஓர் ஒற்றைக் கலாச்சார ஒற்றையாட்சியின் தெளிவற்ற நோக்கு மற்றும் அவர்களின் சொந்த ஊழல் மிக்க நிதிசார் நலன்கள் என்பவற்றுக்கு அப்பால் இந்தப் அரசியல் பிரிவுகளால் பார்ப்பதற்கு முடியவில்லை.

கொள்கை உருவாக்கம் தொடர்பில் – நாடாளுமன்றத்தைக் கட்டமைக்கும் கட்சிகளாக, சிறுபான்மைக் கட்சிகளின் தயவிலேயே இலங்கை அரசாங்கம் உள்ளது என்ற கருத்தின் அடிப்படையிலேயே இலங்கை பொதுஜன பெரமுனவின் பிரச்சாரம் அமைந்திருந்தது. உண்மையில், 1956 இலிருந்து 2015 வரை, அரசாங்கங்களின் கட்டமைக்கும் கட்சிகளாக, சிறுபான்மைக் கட்சிகள் முக்கியமான கொள்கைகளைத் தீர்மானிப்பதில் எந்தப் பிரதான வகிபாகத்தையும் வகிக்கவில்லை. இதை விட, சுமார் 60 வருடங்களாக சிறுபான்மைக் கட்சிகள் எழுப்பிய எண்ணற்ற பல விடயங்கள் மீது கவனம் செலுத்துவதற்கு ஆக்கபூர்வமான தீர்வுகள் முன்மொழியப்படவுமில்லை அல்லது அமுல்படுத்தப்படவும் இல்லை. இலங்கை பொதுஜன பெரமுனக் கட்சி ‘இனவாதிகள்’ என அடையாளம் கண்ட சக்திகளிலிருந்து புதிய அரசாங்கம் தற்போது விடுபட்டுள்ளபடியால், சிறுபான்மையினருடன் அதிகாரப் பகிர்வு விடயங்களை உறுதியான முறையில் கவனம் செலுத்துவதற்கும் மற்றும் அனைவருக்குமாக ஒரு சிறந்த நாட்டை உருவாக்குவதற்கும் மற்றொரு பெரும் வாய்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது.

வரலாற்று ரீதியாக முன்னைய அனைத்து நிகழ்வுகளுக்கும் எதிராக, இதுவே சாத்தியமான மிகச் சிறந்த சூழ்நிலை என நான் நம்புகிறேன்.

மோசமான சம்பவச் சூழ்நிலை

தேர்தலில், பொதுஜன பெரமுனக் கட்சித் தலைமைத்துவத்தின் கோரிக்கை, நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதிக்கிடையில் அதிகாரத் தொடர்புகளை மீளொழுங்கு செய்வதற்குத் தங்களுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையைத் தருவதற்கானதாக இருந்தது. எனினும், தற்போதுள்ள அரசியலமைப்பு ஏற்பாடுகளின் கீழ், சகோதரர்களான கோட்டபாய மற்றும் மஹிந்த ஆகியோர் தங்களுக்கிடையில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் முழுமையான அதிகாரங்களைத் தொடர்ந்தும் அனுபவிக்கின்றனர். எதிர்காலத்தில் எத்தகைய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், இரண்டு சகோதரர்களுக்கும் இடையில் பகிர்ந்து கொள்ளப்படும் அரசியலமைப்பின் முழுமையான அதிகாரங்கள் அப்படியே இருக்கும். அவர்களது நடவடிக்கைகளை ஆராய்ந்து பார்க்கும் நாடாளுமன்றம் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் கட்டுப்பாடுகளும் சமனிலைகளும் மாத்திரமே மாற்றியமைக்கப்படுவதற்கு திறந்து விடப்பட்டுள்ளன.

பொதுஜன பெரமுனக் கட்சியும் ராஜபக்‌ஷக்களும் ‘இனவாதிகள்’ என்று அடையாளம் காணுகின்ற சிறுபான்மைக் கட்சிகள் எனக் குறிப்பிடப்படுபவையின் தயவில் இல்லாததும் மற்றும் ஓர் அபரிமிதமான பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டும், தங்களது நீண்டகால அரசியல் நோக்கங்களை தடையில்லாது மேற்கொள்வதற்கு, இப்போது அவர்கள் ஒரு வாய்ப்பைக் கொண்டுள்ளனர்.  அரசியலமைப்பைத் திருத்துவதற்கு அவர்கள் முன்மொழிவது 13ஆவது மற்றும் 19ஆவது திருத்தங்களை இல்லாதொழிப்பாகும். இந்தப் பாதுகாப்பு முறைகளை நிராகரிப்பது என்பது அந்தத் திருத்தங்களின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட ஆட்சியின் அதிகாரப் பகிர்வுத் தன்மையை இல்லாது ஒழிக்கும் என்பதுடன் ஆட்சியின் செய்முறைகளை ஆராய்ந்து பார்ப்பதற்கு ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன நிறுவனங்களையும் பலவீனப்படுத்தும்.

நீண்டகாலமாக இருந்து வந்த சில அடிப்படைப் பிரச்சினைகளைக் கவனத்தில் கொள்ளும் நோக்கோடு இந்தத் திருத்தங்கள் அங்கீகரிக்கப்பட்டன. எவ்வாறாயினும், அந்த நோக்கம், சட்டமூலம் அங்கீகாரத்திற்காக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பாகவே, அது  வரையப்படும் கட்டத்திலிருந்தே வேண்டுமென்றே நீர்த்துப் போகச் செய்யப்பட்டது. அந்த நீர்த்துப் போதலுக்கு பொறுப்பாக இருந்த சிலர் பின்னர் பொதுஜன பெரமுனைக் கட்சியின் தலைவர்களாக வந்தனர், ஏனையவர்கள் ஐக்கிய மக்கள் சக்தி போன்ற கட்சிகளின் பதவிகளில் இணைந்து கொண்டனர்.

ஒரு முறையான மற்றும் கவனமான செய்முறையைப் பின்பற்றுவதன் மூலம் அத்தகைய குறைபாடுகள் மீது கவனம் செலுத்துவதற்கு புதிய நாடாளுமன்றம் வாய்ப்பைக் கொண்டுள்ளது. இந்தக் குறைபாடுகள் மீது கவனம் செலுத்துவதற்கு என்னமாதிரியான புதிய அரசியலமைப்பு ஏற்பாடுகள் மற்றும் பொறிமுறைகள் முன்மொழியப்படும்? புதிய ஏற்பாடுகளும் பொறிமுறைகளும் ஜனநாயக ஆட்சி முறையில் தேவையான கட்டுப்பாடுகள் மற்றும் சமனிலைகளை வலுப்படுத்துமா? அன்றேல், ஒரு கூடுதல் சர்வாதிகார ஆட்சி முறைக்கான அவர்களின் தேடலில் கட்டுப்பாடுகளும் சமனிலைகளும் மற்றும் ஆராய்தலும் மேலும் தடைகளுக்குள்ளாகுமா? புதிய ஏற்பாடுகள் மற்றும் பொறிமுறைகள் மக்களுடன் கலந்தாலோசித்து முடிவுசெய்யப்படுமா? இது தொடர்பில் அரசாங்கம் என்ன செய்வதற்கு பிரேரிக்கிறதென்பதை நாங்கள் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இலங்கை பொதுஜன பெரமுனக் கட்சியின் தவிசாளர், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தச் செய்முறையும் “மிகுந்த யோசனை மற்றும் கவனத்தின் பின்னர் மாத்திரமே மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 19070களை நாங்கள் திரும்பிப் பார்க்கையில், 1972 இன் அரசியலமைப்பு மற்றும் 1978 இன் அரசியலமைப்பும் எந்தக் கலந்தாலோசனையும் இல்லாமல் மக்கள் மீது திணிக்கப்பட்டன. அரசியலமைப்பு ஆக்கும் செய்முறை பங்குபற்றுதலோ அல்லது உள்ளடக்கி இணைந்தாகவோ ஒரு போதும் இருந்ததில்லை. அதனால், அந்த இரண்டு அரசியலமைப்புளும் இலங்கை மக்கள் அனைவரினதும் கண்ணோட்டங்களை பிரதிபலித்தன எனக் கருதப்பட முடியாது. எங்களது சமுதாயத்தின் பிரிவுற்ற தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகள் என்பவற்றுக்கான கேள்விகளின் பின்னணியில், ஓர் உள்ளிணைந்ததான அரசியலமைப்புச் சீர்திருத்தம் மாத்திரமே எங்களது சமூகங்களை ஒன்றாகக் கொண்டு வருவதற்கு உதவும். ஒரு பங்குபற்றுதல் செய்முறை ஊடாக பன்முகத் தன்மையான  பிரஜைகள் மத்தியில் கருத்தொருமித்தலைக் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய சூழ்நிலையை பயன் படுத்தப்படுவதற்கு முடியும். அத்தகையதொரு செய்முறை, கூருணர்வுடன் கையாளப்படின், சம்பந்தப​பட்ட அனைத்து தரப்புகளுக்கும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஓர் அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வழியை அது வகுக்கும்.

ஆட்சியாளர்களின் அதிகாரம் முக்கியமானதாக வரும் பொழுது தார்மீக ஒழுக்கங்கள் வீழ்ச்சியுறுகின்றன என்ற கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்வோமாயின், நாங்கள் வேறுபட்டதொரு நிலையினை எதிர் கொள்கிறோம். அதிகாரம் அதிகரிக்கும் போது தார்மீக ஒழுங்குநெறிகள் வீழ்ச்சியுறுகின்றன என்பது துரதிர்ஷ்டவசமான ஒரு கோட்பாட்டு மாதிரியாகும். முன்னைய ராஜபக்‌ஷ ஆட்சி போன்று இலங்கையின் ஆட்சிகள் துஷ்பிரயோகம், ஊழல், குற்றத்தன்மை மற்றும் எதேச்சாதிகாரம் என்பவற்றுக்கான குற்றச்சாட்டுகளுடன் கறைபடிந்துள்ளன. புதிய அரசாங்கம் ஒரு கூடுதலான சமூக நீதி, ஒரு சமுதாயம் முழுவதற்கும் பொருளாதார ரீதியாக நியாயமான நிலைமை என்பவற்றை விநியோகிக்கவில்லையாயின், அது அவர்களின் தொலைநோக்கு, கொள்கைக் கட்டமைப்புகள் மற்றும் இருக்கின்ற பிரச்சினைகளுக்கு கவனம் செலுத்துகின்ற ஐக்கிய நாட்டிற்கு இட்டுச் செல்லும் நடவடிக்கை, நிகழ்ச்சித்திட்டங்கள் இல்லாத தன்மையையே சுட்டிக்காட்டும்.

தெரிவு செய்த ஒரு சிலதைத் தவிர, புதிய ஆட்சியிலுள்ள தேசியவாத தீவிரவாதப் போக்கு கொண்டவர்கள் நீதி, ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பங்கள் மீது எதிர்மறையான வகையில் செல்வாக்கு செலுத்த முடியும். இது, கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டவாறு ஊழல் நடவடிக்கைளின் அதிகரிப்பு, நீதி மற்றும் நாடாளுமன்றச் செய்முறைகளை அதிகாரமற்றதாக்குதல், சட்டவாக்கப் பொறுப்புகளை அலட்சியம் செய்தல், பெரும்பான்மை சமூகங்களைச் சாராதவர்களை ஓரங்கட்டுதல், கொள்கை மற்றும் தீர்மானம் மேற்கொள்ளுதலில் இன-மத பாரபட்சம், வெளிநாட்டு விரோத கொள்கை நிலைகளைக் கடைப்பிடித்தல் மற்றும் அடக்குமுறை சட்டம்/ அரசியலமைப்பு ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துதல் என்பவற்றுக்கு இட்டுச் செல்லலாம். ஏமாற்றமடைந்த வாக்காளர்களால் எதிர்ப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்கள் அங்கு இருக்க முடியுமென்பதுடன் தங்களால் அதிகாரத்திற்கு கொண்டு வரப்பட்டவர்கள் குறித்து அவர்கள் மீளவும் சிந்திப்பதற்கு நிர்ப்பந்திக்கப்படுவர். சிலாபம் மற்றும் ரத்துபஸ்வல ஆகிய இடங்களில் முன்னர் நிகழ்ந்த இரத்தம் சிந்துதல் நிலைக்கும் கூட இது இட்டுச் செல்ல முடியும். கடந்தவற்றிலிருந்து விடுபடுவதற்கு பதில், இது சமத்துவம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை ஒரு புதிய பலத்துடன் மீண்டும் மீண்டும் கோரும் தவிர்க்க முடியாத ஒரு நிலைமையையே வலுப்படுத்தும்.

புத்திஜீவிகள் மற்றும் சாதாரணமானவர்களிற்கிடையிலான இடைவெளி

தேர்தல் பெறுபேறுகள், நாட்டிலுள்ள புத்திஜீவிகள் மற்றும் சாதாரணமான மக்கள் ஆகியோருக்கிடையிலான வர்க்க பேதத்தையும் கூட பிரதிபலித்தன. தேசிய மக்கள் சக்தி கட்சிக்கான (தே.ம.ச) மற்றும் அதைப் போன்ற ஏனைய கட்சிகளுக்கான குறைந்த வாக்குவீதம் கீழ் மட்டத்திலுள்ள மக்கள் மற்றும் புத்திஜீவிகள் ஆகியோருக்கிடையிலான சிந்தனை மாதிரிகளின் பொருத்தமின்மையை பிரதிபலித்தன. கீழ் மட்டத்தில் பாரம்பரிய நிறுவன ரீதியான வடிவ மாதிரிகளின் அவசியம் முக்கியத்துவத்திற்குரியதாக நோக்கப்படவில்லை. அநேகம் தொழில்சார்தகைமையாளர்களைக் கொண்ட நகர புத்திஜீவிகள், நல்லாட்சி, சட்டவாட்சி, சிலரின் இலாபத்திறனை அதிகரிப்பதற்கு உதவும் ஒரு பொருளாதார மாதிரி என்பவற்றுக்கான ஓர் ஆட்சியை விரும்பினர்.

எவ்வாறாயினும், கிராமம் மற்றும் நகரம் ஆகிய இரண்டையும் சேர்ந்த, வேலைக்கு செல்லும் மக்கள், தங்கள் குடும்பங்களின் உயிர்வாழ்தலுக்கான இருப்பிடம் மற்றும் உணவு போன்ற அவர்களது அடிப்படைத் தேவைகளை திருப்தி செய்கின்ற, தொழில் வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்கும் ஓர் ஆட்சியைத் தெரிவு செய்வதற்கு விரும்பினர். எந்தவொரு அரசியல் மற்றும் பொருளாதார முன்னெடுப்புகளிலும், இந்த இரண்டு தேவைகளும் பூர்த்தி செய்யப்படுதல் வேண்டும். இது, இருக்கின்ற பிரச்சினைகளை அவற்றின் சான்றுகள் மற்றும் அவற்றுக்கான காரணிகளின் அடிப்படைகளை பகுத்தாராய்வதினால் மட்டுமே மேற்கொள்ளப்பட முடியும். கீழ் மட்டத்தில் இந்தப் பிரச்சினைகளைக் கவனத்தில் கொண்டால் மட்டுமே இந்தப் பிரச்சினைகள் கவனத்தில் கொள்ளப்படுவதற்கும் மற்றும் கொள்கைகள் உருவாக்கப்படுவதற்கும் முடியும். அன்றேல், குறைந்தது இரண்டு தசாப்தங்களுக்கான போக்கு இருந்தமை போல, முற்போக்கான கட்சிகளுக்கு தேர்தல் முடிவுகள் தொடரந்து கடினமானதாகவே இருக்கும்.

இலங்கையில் எழுத்தறிவுத் திறனின் உயர்ந்த வீதத்தை நாங்கள் அடிக்கடி உயர்வாகப் பேசுவோம், ஆனாலும் அது உண்மையில் வாசிப்பதற்கும் மற்றும் எழுதுவதற்கும் உண்மையான ஆற்றல் கொண்டவர்களையே குறிக்கக் காணப்படுகிறது. அத்தகையதொரு எழுத்தறிவு மட்டம் ஒரு சமூக மட்டத்தில், நீண்டகால சமதானம் மற்றும் சுபீட்சத்திற்கு அதன் இணைந்த அனுகூலங்களுடன் தனிக் கலாச்சார சமூகம் மற்றும் ஒரு பல் கலாச்சார சமூகம் என்பவற்றுக்கிடையிலான வேறுபாடுகளை விளங்கிக் கொள்வதற்கு அரசியல் ஒத்துணர்வை உருவாக்குவதில் அல்லது விருத்தி செய்வதில் ஒரு சமூக மட்டத்திலோ அல்லது தனிப்பட்ட மட்டத்திலோ புரிந்து கொள்ளும் ஆற்றலை அபிவிருத்தி செய்யவில்லை. கல்விச் செய்முறையில் விமர்சன ரீதியாக அலசிச் சிந்திக்கும் இயலுமையை மழுங்கடிக்கும் ஒரு போக்கினால் இந்நிலைமை ஏற்பட்டதா? மூன்றாம் கல்விக் கட்டமைப்பு இலங்கையில் நிலவும் சமூக-அரசியல் பிரச்சினைகளை கையாள்வதைக் கவனத்தில் கொள்கிறதா?

துரதிர்ஷ்டவசமாக, சமுதாய மேம்படுதல் மற்றும் வரவுள்ள தலைமுறைகளின் எதிர்காலம் என்பவற்றின் மீது தேசியவாத நோக்குக் கொண்ட புத்திஜீவிகளின் ஒரு வலுவான பிரிவினர் கவனம் செலுத்தாத ஓர் உலக போக்கு ஒன்று உள்ளது. பதிலுக்கு, இலங்கையிலுள்ள ‘வியத் மக’ மற்றும் அவர்களின் கூட்டுச்செயற்பாட்டாளர்கள் போன்ற அவ்வகையானவர்கள், குறுகியகால வலிறுத்தல்களுடன் சுய பேராசை கொண்ட தனிப்பட்ட ஆட்களை முன்னிறுத்துவதற்கு, மக்களை முட்டாள்களாக்குவதற்கான சிறந்த வழிமுறைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தக் காணப்பட்டனர். 1920களின் போது ஜேர்மனியிலும் கூட, இதனைப் போன்ற புத்திஜீவிக் குழுக்கள் ஹிட்லர் அதிகாரத்தைப் பெறுவதற்கும் மற்றும் அதனைப் பேணுவதற்கும் உதவிய வேளையில், ஊடகங்களும் அவ்வாறானதொரு பாத்திரத்தையே வகித்து ஹிட்லரின் நாசிசக் கண்ணோட்டங்களுக்கு மட்டுமே முக்கியத்துவத்தை வழங்கின.

சாதாரண மக்கள் ஒரு கூட்டத்தில் பங்குபற்றுவர், தலைவர்களின் உரைகளைச் செவிமடுத்து வீடுகளுக்குச் செல்வார்கள், பின்னர் வரப்பிரசாதம் கொண்டவர்கள் மற்றும் தீவிர தேசியவாதிகளின் நலன்களுக்கு பெரிதும் சேவையாற்றும் வெகுஜன ஊடகம் மற்றும் நிறுவனரீதியான வலையமைப்புகளின் அரசியல் மற்றும் கருத்துவாத செல்வாக்குகளினால் சிக்குப்பட வைக்கப்படுகின்றனர். அத்தகைய செலவாக்குகளை எதிர்த்து மக்களை ஒன்றுதிரட்டுவதற்கு கீழ் மட்டத்திலான நிறுவனரீதியான வலையமைப்புகளின்றி, தற்போதைய தேர்தலில் கண்டவாறு சமூக சிந்தனை உடைய புத்திஜீவிகளின் முயற்சிகள் தோல்வியுறும்.

மேலும், முன்னம் அரசியல் ரீதியாக ஆர்வம் கொண்ட சாதாரண மக்கள், அனைவரின் நன்மைக்குமாக கூட்டாக செயற்படுவதற்குப் பதில் தங்களை நம்ப வைப்பதற்கு முயலும் உயர் மட்டத் தலைவர்கள், புத்திஜீவிகள் அல்லது வெளியிலுள்ளவர்களை ஓர் அச்சுறுத்தலாக அனுமானித்திருக்கலாம். வலுவான ஊடகப் பிரச்சாரங்கள் மூலமாக அதிகளவில் தவறான தகவல்கள் கீழ் மட்டத்தில் மக்களுக்கு பரப்பப்பட்டதன் காரணமாக தேசியவாத புத்திஜீவிகளால் காண்பிக்கப்பட்ட தவறான வழிநடத்தல் நிலைப்பாடுகளை அம்பலப்படுத்துவது அதிகளவில் கடினமான விடயமாக இருந்துவந்தது. தேர்தல் பெறுபேறுகள் தேசியவாத புத்திஜீவிகளின் வெற்றியையும் மற்றும் சமூக சிந்தனை கொண்ட புத்திஜீவிகளின் கூடுதல் பன்மைத்துவம் சார்ந்த அணுகுமுறையின் குறிப்பிடத்தக்க தவறுதலையும் உறுதிப்படுத்துகின்றன.

எதிர்காலம்

அரசியல் ரீதியான ஒரு பிடியைப் பெறுவதற்கு பன்மைத்துவம், பன்முகத்தன்மை, ஒப்புரவு, நியாயம் மற்றும் சமூக நீதி போன்றவற்றை மதிக்கும் அரசியல் சக்திகளின் மோசமான இந்தத் தோல்வி, எங்களை மீளச் சிந்திப்பதற்கு, மீளவும் மூலோபாயப்படுத்துவதற்கு, மீளவும் அணிதிரள்வதற்கு மற்றும் மீள்கட்டமைப்பதற்கும் நிர்ப்பந்திக்கிறது. அத்தகைய ஒரு முயற்சி அதற்காக வெறுமனே சிந்திப்பதினாலோ அல்லது சாய்வு நாற்காலியிலிருந்து தனியே விமர்சிப்பதினாலோ ஏற்பட முடியாது. எங்களது மிகவும் அவசரமான முன்னுரிமை கிராமம் மற்றும் நகரம் ஆகிய இரண்டினதும் வேலைக்குச் செல்லும் சாதாரண மக்களுடன் இணைப்பை ஏற்படுத்துவதாகும்; அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு, அவர்களை மிகவும் கரிசனப்படுத்தும் பிரச்சினைகள் பற்றி அறிந்து கொள்வதும், பின் அவர்களது வாழ்வுகளில் தாக்கங்களைக் கொண்டிருக்கும் பிரச்சினைகள் மீது சான்றுகளையும் அவர்களின் சம்மதத்துடன் இணங்கிக் கொண்ட தீர்வுகளையும் சமர்ப்பிப்பதாகவும் இருத்தல் வேண்டும்.

இது, முன்னைய அணுகுமுறைகளை கடுமையாக பரிசீலிப்பதற்கும் மற்றும் எதிர்காலத்திற்காக மீள் மூலோபாயப்படுத்துவதற்குமான வாய்ப்பை வழங்கும். அப்பொழுது மட்டுமே தனியே ஒரு சிலரை மட்டுமன்றி இலங்கைச் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்மையளிக்கும் சுபீட்சம், மனித உரிமைகள், சட்டவாட்சி மற்றும் நல்லாட்சி ஆகிய ஒரே இலக்குகளை அடைவதற்காக பல்வகையான வழிகளை மேற்கொள்ளும், அனைத்து ஆட்களையும் இணைத்து ஒரே பாதையில் பயணிப்பதற்கான ஒரு கூட்டணி நோக்கி நாங்கள் செயற்படுவதற்கு முடியும்.

சுதந்திரத்திற்குப் பின்னதான இலங்கையின் வரலாறு பல சந்தர்ப்பங்களில், மூன்றிலிரண்டு அல்லது அதிகமான பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவதைக் கண்டுள்ளது. இருந்தும் அவை தவறியதுடன், மோசமாகத் தவறி, மூன்று பெரும் கிளர்ச்சிகளுக்கு நாட்டை இட்டுச் சென்றன. அதன் பின்னர், அத்தகைய நிலைமைகளுக்கு இட்டுச் சென்ற ஆட்சிகளும் கூட தோற்கடிக்கப்பட்டன. புதிய அரசாங்கம் அனைவருக்குமாக சிறந்த வாய்ப்புகளையும் தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்கின்ற சட்ட அடிப்படையிலான ஒரு சமூகத்தையும் உருவாக்கி, ஒவ்வொருவரையும் கௌரவம் மற்றும் மரியாதையுடன் நடத்தி, ஓர் உத்தரவாதமளிக்கப்பட்ட குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்தி, மக்கள் தங்களது முழு ஆற்றலையும் அபிவிருத்தி செய்வதற்கு அவர்களை வலுப்படுத்துமாயின், அப்போது அத்தகைய நகர்வுகளுக்கு ஆதரவளிப்பதற்கான ஒரு கடமையும் பொறுப்பும் எங்களுக்கு உள்ளது.

அன்றேல், ஏமாற்றப்பட்ட வாக்காளர்கள் ஆட்சியாளர்களினால் வாக்குறுதியளிக்கப்பட்ட பலவற்றையும், குறிப்பாக சமூக-பொருளாதார நிலைமைகளிலான முன்னேற்றம் என்பவற்றைக் கோரி, ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஜனநாயக முறையில் வீதிகளில் இறங்கி போராடுவதற்கு அதிக காலமில்லை.

லயனல் போபகே

The Best and The Worst – 2020 General Elections என்ற தலைப்பில் கிறவுண்ட்விவ்ஸ் தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.