பட மூலம், இணையம்
பேரினவாதத்தின் கோரத் தாண்டவம் இன அழிப்பு என்பதை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை முழு உலகத்திற்கும் வெளிப்படுத்தியது. 2009இல் அவலக் குரல் ஆகாயத்தை எட்டி முள்ளிவாய்க்காலும் நந்திக்கடலும் இரத்தக் காடாகியபோதும் அதன் வெறி அடங்காத இனவாத தாண்டவம் இன்றும் தொடர்கிறது. அத்தோடு கடந்த 10 வருடங்களாக தமிழர்களும் முழு உலகமும் இலங்கையின் ஆட்சியாளர்களால் ஏமாற்றப்படுகின்றனர் என்பதுவே உண்மை.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வீதிகளை புனரமைத்து, மின்சார வசதிகளை ஏற்படுத்தி மக்கள் சுதந்திரமாக வடக்கிற்கும் தெற்கிற்கும் போய் வருகிறார்கள் என்றதோடு, வட மாகாண தேர்தலை நடாத்தி நாட்டில் முழுமையான ஜனநாயகம் மலர்ந்துவிட்டது என சர்வதேசத்திற்கு அறிவித்தனர்.
தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் என்பது வீதிச் சோதனை இல்லா பிரயான வசதியோ, மாகாண சபை ஆட்சி அதிகாரமோ அல்ல. இவை இரண்டும் இல்லாதபோதும், அடிப்படை தேவைகள் இன்றி அல்லற்பட்டபோதும் சுதந்திரக் காற்றை சுகமாய் அனுபவித்தனர்.
அக்காலத்தல் தமிழர் தாயகத்தின் எல்லை வரையப்பட்டிருந்ததோடு வெளி உலக அரசியல், பொருளாதார, இராணுவ ஆதிக்க சக்திகள் நாட்டின் எல்லைக்கு அப்பாலேயே நின்றனர்.
இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் தமிழர்கள் தமது அரசியல் தலைவிதியை தாமே தீர்மானிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாக முழு தமிழர்களையும் பயங்கரவாதிகளாக்கி படுகொலை திட்டம் தீட்டி வழிநடத்தினார்கள்.
சர்வதேச ஆதரவு சக்திகளாலும் அயலக உறவு சக்திகளையும் ஒன்றிணைத்து ஐக்கிய நாடுகள் சபை அதன் அமைதிப் படை, மனித உரிமை ஆணையகம் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்க இந்நூற்றாண்டில் உலகின் முதலாவது இன அழிப்புடனான இனப் படுகொலை இலங்கை முள்ளிவாய்க்காலில் அறங்கேற்றப்பட்டது.
கடந்த 2009 வரை இலங்கையில் எல்லைக்கும் அப்பால் நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மேற்குலக அரசியல், பொருளாதார, இராணுவ ஆக்கிரமிப்பு சக்திகள் தமது வரைபடத்திற்குள் முழு இலங்கையை உட்படுத்தியது மட்டுமல்ல, இலங்கையை யார் ஆளவேண்டும் என அவர்களே தீர்மானிக்கும் சக்திகளாகிவிட்டனர்.
தமிழர்களை அழித்தொழித்து அவல வாழ்விற்குள் தள்ளி வெற்றி என தேசிய கொடி ஏற்றப்பட்ட 2009 மே 18ஆம் திகதி ஆதிக்க சக்திகளின் வெற்றிக் கொடிகள் சுதந்திரமாக பறக்கத் தொடங்கிவிட்டன.
அவர்களின் வெற்றி சர்வதேச பயங்கரவாதிகளின் பிடிக்குள் நாட்டை தள்ளிவிட்டது. அதன் அடையாளமே உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பும் 250க்கும் அதிகமான அப்பாவிகளின் உயிர் பலியுமாகும். 2009 முள்ளிவாய்க்காலிலும், நந்திகடலிலும் கரைபுரண்டோடிய இரத்தத்திற்கு யார் சொந்தக்காரர்களோ அவர்களே கிறிஸ்தவ ஆலயங்களில் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி பல பீடங்களை கழுவிச் சென்ற இரத்தத்திற்கும் சொந்தக்காரர்களாவர். கொலையாளிகள் என ISIS ஐ மட்டும் சொல்லக்கூடாது. ஆக்கிரமிப்பு சக்திகளே பயங்கரவாதிகள். இவர்களால் உருவாக்கப்பட்டுள்ள அரசியல், பொருளாதார, இராணுவ முன்னெடுப்பு கொள்கைகளே பயங்கரவாதம். இதனால் பலியானோர் அடிமட்ட அப்பாவிகளே.
கடந்த 2014இல் மஹிந்தவுடன் அப்பம் சாப்பிட்டுவிட்டு அடுத்த நாளே வெளியேறிய மைத்திரி 2015இல் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று அதே ஆண்டில் வடக்கில் தமிழ் மக்களோடு பொங்கல் விழாவில் பொங்கலும் உண்டவர். அதே துரோகத்தை தமிழ் மக்களுக்கும் தமது ஆட்சிக் காலம் முழுவதும் இழைத்துள்ளார்.
மைத்திரியின் புதிய வருகையோடு தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பிர்ச்னைகளான அரசியல் தீர்வு, காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி, அரசியல் கைதிகளின் விடுதலை, யுத்த குற்றங்கள் தொடர்பிலான விசாரணை, இராணுவம் கையகப்படுத்திய காணி விடுவிப்பு, இராணுவ பிரசன்னம் என்பவற்றிற்கு தீர்வு கிட்டும் என எதிர்பார்க்கப்பட்டாலும் அவையெல்லாம் தீர்க்கப்படாத பிரச்சினைகளாயின. இனப்படுகொலை நிகழ்ந்து 10ஆவது ஆண்டிலும் இது தொடர்கின்றது.
தமிழ் மக்கள் விரும்பும் அரசியல் தீர்வு கிடைக்கக்கூடாது என்பதில் மைத்திரி, மஹிந்த, ரணில் மூவரும் ஒத்த கருத்துடையவர்களாகவே இருக்கிறார்கள். தமக்கிடையே அதிகாரம் தொடர்பில் மோதிக்கொண்டாலும் தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் சமாந்தர பாதையிலேயே பயணிக்கின்றனர். இனவாத நோக்கிலேயே சிந்திக்கின்றனர்.
அத்தோடு, தமிழரின் தாயக அரசியல் கோட்பாட்டை வடக்கு தீபகட்பத்திற்கு மட்டும் முடக்கி அழிக்கும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வன்னி பெரு நிலப்பரப்பையும் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிழக்கையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கில் நகர்வுகளை மேற்கொள்கின்றனர். இந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மேற் கூறிய பிரதேசங்களை பிரித்து அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இனவாத குடியேற்றங்களை ஏற்படுத்தவும், ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் மகாவலி அபிவிருத்தி சபை செயற்பாடுகளை பருத்தித்துறை வரை விரிவுபடுத்தவும் செயற்திட்டம் வரையப்பட்டுள்ளது.
இது அடிப்படையில் தமிழரின் இன பரம்பலை சிதைத்து, கலாசாரத்தை அழித்து வேற்று இன, மத, மொழி, அரசியல் ஆதிக்கத்தை வேரூன்றச் செய்யும் இன அழிப்பு நடவடிக்கை செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கான திட்டத்தையே கடந்த பத்தாண்டு காலமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக ஆயுத யுத்தம் முடிவுற்று ஒரு தசாப்தம் முடிவடைகின்ற நிலையிலும் இராணுவத்தை குறைக்கமாட்டேன் என அரசு விடாப்பிடியாக உள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தமிழர்களின் ஒரு சாரார், “வடக்கில் குவிந்திருக்கும் படையினரை வேறு பிரதேசங்களுக்கும் சமமாக பகிர்ந்திருந்தால் புலனாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நாட்டைப் பாதுகாத்திருக்கலாம்” எனக் கூறுகையில் இன்னுமொரு தரப்பினர் “இராணுவம் வேண்டும்” என்று கேட்கும் மன நிலைக்குள் தள்ளியிருப்பது தமிழர்கள் அரசியலையும் இருப்பையும் பாதிக்கும் என்பது அவர்கள் அறியாததா? இவர்களும் முன்னர் “இராணுவம் வேண்டாம்” என கோஷம் எழுப்பியவர்களே. யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிக் கொட்டிக் கொண்டதற்கு ஒப்பானது இந்தக் கூற்று.
அது மட்டுமல்ல கடந்த பத்தாண்டுகளில் தமிழர்களின் நில மீட்புக்கான போராட்டம், காணாமலாக்கப்பட்ட உறவுகளின் நீதி தேடலுக்கான போராட்டம் என்பன தனித் தனி குழுக்களின் போராட்டமாக்கப்பட்டுள்ளன. அரசு சார்பற்ற அமைப்புக்களும் தனி நபரகளும் இப்போராட்டங்களை விலைக்குவாங்கி போராட்டங்களை கொச்சைப்படுத்தியுள்ளமை முள்ளிவாய்க்கால் அவலத்தைவிட பேரவலமாகும்.
தமிழர்களோடு பொங்கல் உண்ட மைத்திரி, “யுத்த குற்றங்கள் ஒன்றும் நடக்கவில்லை. இது விடயமாக எந்த ஒரு இராணுவத்தையும் நீதிமன்றில் நிறுத்த இடம்கொடுக்க மாட்டேன். அரசியல்கைதிகள் என எவரும் இலங்கையில் இல்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்ளே சிறைகளில் உள்ளனர். இராணுவத்தை விலக்கிக்கொள்ள மாட்டேன்” என்று குறிப்பிடுகிறார்.
அதற்குத் துணையாக ரணில் அமைதி காக்கின்றார். இவையெல்லாம் அறிந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசிற்கு முண்டுகொடுத்துக் கொண்டிருப்பது முள்ளிவாய்க்கால் அவலத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டிருக்கும் அரசியல் அவலமாகும்.
இவை எல்லாவற்றையும் விட தொடர் வறுமை மற்றும் பிரச்சினைகள் தீர்க்கப்படாததன் காரணமாக மக்கள் அரசியலில் இருந்தும், பொது தொடர் போராட்டங்களில் இருந்தும் விலகி நிற்கின்றனர். தேர்தல் அரசியலோடு தம்மை கட்டுப்படுத்திக் கொண்டு மக்கள் சக்தியுடனான அரசியல் மற்றும் அரசியல் உரிமை போராட்டங்களிலிருந்து தூர விலக உள்ளனர் அல்லது தூரமாக்கப்பட்டுள்ளனர். இது முள்ளிவாய்க்கால் அவலத்தின் உச்சம்.
மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதான மக்களின் வெறுப்பு, கோபம் என்பவற்றோடு 2009ஆம் ஆண்டைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் சக்தியின் வெற்றிடத்தை தமிழ் மக்கள் பேரவை நிரப்பும் என மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். வடக்கிலும், கிழக்கிலும் பேரவை நிகழ்த்திய இரு பெரும் பேரணிகளில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தினர்.
பேரவையின் தலைமைக் குழுவில் இருந்த முன்னாள் முதலமைச்சர் வட மாகாண சபை பதவி கலைந்ததைத் தொடர்ந்து தமிழ் மக்கள் கூட்டணி எனும் தனி கட்சி ஆரம்பித்ததைத் தொடர்ந்து தமிழ் மக்கள் பேரவை பெயர் பலகையில் மாத்திரமே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலைமைக்கு முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு காரணமான அயலக சக்திகளும் காரணமென கூறப்படுகின்றது.
பேரினவாத ஆட்சியாளர்கள் அரச பயங்கரவாதத்தை தமிழர்கள் மீது ஏவிவிட்டு ஆயுத கலாச்சாரத்தை பலவந்தமாக சுமத்தி பயங்கரவாத முத்திரை குத்தியதும், பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்தி ஆயிரக்கணக்கானோரை சித்திரவதைக்குள்ளாக்கி சிறைக்குள் தள்ளியதும், பாதுகாப்பென்றும் இராணுவப் படை முகாம் விஸ்தரிப்பென்றும் அரச மற்றும் தனியார் காணிகளைப் கையகப்படுத்தியதும், அதிகளவு படையினரை தமிழர் தாயகத்தில் நிலை நிறுத்தியதும், இனப்படுகொலை புரிந்து அகதியாக்கி அகதி முகாம்களில் தள்ளியதும், உறவுகளை வலிந்து காணாமலாக்கியதும், தமிர்களை அழித்து அவர்களின் அரசியல் எழுச்சியை அடக்கி ஒடுக்கும் நோக்கில் மட்டுமல்ல அரசியல் அனாதைகளாக வாழ வைக்கும் நோக்கிலாகும்.
படையினரைத் தொடர்ந்தும் தமிழர் தாயகத்தில் நிலைகொள்ளச் செய்திருக்கும் அரசு, அவர்களின் பாதுகாப்பில் நேரடியாகவும், பெளத்த அமைப்புக்கள் ஊடாக நேரடியாகவும் மறைமுகமாகவும் பெளத்த மயமாக்கலை தொடர்கிறது. படையினர் வசமிருக்கும் காணிகளை கடந்த டிசம்பருக்கு முன்னர் விடுவிப்பதாக கூறியும் முற்றுமுழுதாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளாதிருப்பதோடு மகாவலி அபிவிருத்தி வலயம், வன வள திணைக்களம், தொல் பொருளியல் திணைக்களம் என்பவற்றிற்கு ஊடாகவும் காணிகளை கையகப்படுத்த முனைவதையும் தொடர் செய்திகளாகப் பார்க்கிறோம்.
யுத்தத்தின் ஊடாக உடல் ஊனமுற்றவர்கள், விதவைகளாக்கப்பட்டோர், காணாமலாக்கப்டோரின் குடும்பங்கள், காணிகளை இழந்தோர், வறுமை, தொழிலின்மை என்பவற்றில் மூழ்கிய நிலையில் அவர்கள் மத்தியில் மீட்பர்களாக தம்மை அடையாளப்படுத்திய நுண்கடன் வழங்கும் கம்பனிகளின் சதியால் வறுமையும் விரக்தியும் தற்கொலையுமே அதிகரித்தது. இதுவும் இன அழிப்பின் மாற்று வடிவம்.
“யாழ். தீபகட்பத்தில் ஆவா குழுவினரை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் இராணுவ பிரிகேடியர் தலைமையில் உருவாக்கினார்” என இந்நாள் சுகாதார அமைச்சர் பகிரங்கமாக கூறியபோதும் அது தொடர்பான விசாரணையை நடாத்த அரசு துணியவில்லை.
யுத்த வடுக்களோடு அவலங்களை சுமந்து வலிகளோடு வாழ்விற்காகப் போராடும் மக்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட போராட்டங்கள், மக்களுக்கு தூரமாகி நிற்கும் அரசியல் காட்சிகள், நுண்கடன் கொலையாளிகள், நில ஆக்கிரமிப்பு, கலாச்சார சீரழிவு, பெளத்தமயமாக்கல் என முள்ளிவாய்க்கால அவலம் தொடர்கிறது.
வல்லரசுகளும் அவர்களின் போட்டி அரசியலும் ஜ.நாவின் பாராமுகமும், சர்வதேசத்தின் மனித உரிமை பார்வையும் தமிழர்களின் அவலத்துக்குப் பொறுப்பு கூறவேண்டும்
அருட்தந்தை மா. சத்திவேல்
போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு 5 வருடமானபோது ஆரம்பிக்கப்பட்ட ‘மாற்றம்’ தளம் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பாக இதுவரை பல கட்டுரைகளை வௌியிட்டு வந்துள்ளது. தெரிவுசெய்யப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும். 10 வருடத்தையொட்டி வௌியாகும் ஆக்கங்களை இங்கு கிளிக் செய்வதன் மூலம் பார்க்கலாம்.