சுமார் 40 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் சித்திரவதைக்கு உட்படுத்துவதற்கும், பாலியல் துன்புறுத்தல்களுக்கும், வலுக்கட்டாயமாக ஆட்களைக் காணாமல் ஆக்குவதற்கும், நீண்டகாலம் ஆட்களைத்  தடுப்புக் காவலில் வைப்பதற்கும் வழங்கப்படும் ஓர் அனுமதிப்பத்திரமாகப் பயங்கரவாதத் தடைச் சட்டம் (Prevention of Terrorism Act – PTA) பயன்படுத்தப்படுகிறது. பயங்கரவாதம் தொடர்பாக, ஒரு சாதாரண சந்தேக நபர் மாத்திரமல்லாமல் ஊடகவியலாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் என்போர் இச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டதோடு, அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும், விமர்சன ரீதியான கருத்துக்களை ஒடுக்குவதற்கும், இச்சட்டம் மிக மோசமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிராக, இது அநேகமான சந்தர்ப்பங்களில் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய அரசு பதவிக்கு வந்த பின்னர், இவ்வொடுக்குமுறை ரீதியான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகவும், சர்வதேச ரீதியாக சிறந்த நடைமுறைக்கு ஏற்பவும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு சட்டத்தை சமர்ப்பிப்பதாகவே பல்வேறு சந்தர்ப்பங்களில் உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. இதன் விளைவாகவே, கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒன்று வரையப்பட்டது. இவ்வரைவு ஆங்கிலத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டம் (Counter Terrorism Act – CTA) எனப் பெயரிடப்பட்டது. சிங்கள மொழியில் பழைய பெயரில் பயங்கரவாதத் தடைச் சட்டம் என அறிமுகப்படுத்தப்பட்டு, வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பிடப்பட்டுள்ளமை ஒரு வகையில் கேளிக்கூத்தாகும்.

“பயங்கரவாதம் என அறிமுகப்படுத்தப்படும் தவறுகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதற்கு சுமார் 14 சட்டங்கள் – தண்டனைச் சட்டக் கோவையின் 6 வாசகங்கள் உட்பட சுமார் 20 சட்டங்கள் இலங்கைச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதேசமயம், அவசரகால நிலைமையின் கீழ் செயற்படுவதற்கு ஜனாதிபதிக்கு அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தும் அதிகாரமும் உண்டு. நிலைமை இவ்வாறு இருக்கையில், பயங்கரவாதம் தொடர்பாக தனியான விசேட சட்டத்தின் அவசியம், வெறுமனே சிறுபான்மை சமூகங்கள் அரசுக்கு எதிராக முன்வைக்கும் விமர்சன ரீதியான கருத்துக்களை ஒடுக்குவதாகவே அமையும். ஆகவே, பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு ஏற்கனவே உள்ள சட்டங்கள் போதுமானவை என்பது எமது கருத்தாகும்.”

முன்னைய பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டது போலவே, இப்புதிய சட்ட மூலமும் சாதாரண மக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும் எதிராக தொந்தரவுகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் பயன்படுத்துவதற்கு அவசியமான வாய்ப்புக்களை முறையே வழங்கியுள்ளன.

இச்சட்டத்தில் பரந்துபட்ட தெளிவின்மை காணப்படுகிறது. பயங்கரவாதம் என்பதற்கு வரைவிலக்கணமாக கருதக்கூடிய தவறுகள் பற்றி சரியான விளக்கம் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக இச்சட்டத்தைப் பயன்படுத்தி, அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம் மற்றும் ஒரு சங்கத்தை உருவாக்கும் சுதந்திரம் என்பன மட்டுப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. அடிப்படை மனித உரிமைகள் கூட நல்லெண்ணத்தோடு அமுல்படுத்தியிருந்தால் மாத்திரமே பயங்கரவாத செயலாகக் கருதப்படமாட்டாது.

இச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட நபர் உடல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாக்கப்படாத வகையில் பேணப்படுவது கட்டாயப்படுத்தப்படவில்லை. கைது செய்யப்படும் நபர், கைது செய்யப்படுவதற்கான காரணமும் அதற்கு ஏற்புடைய ஏனைய தகவல்களையும் அறிவித்தல் கட்டாயமாக்கப்படவில்லை. பின்னர் இவ்வாறு செய்வதற்கான காலச் சட்டகம் வழங்கப்படவும் இல்லை. குடும்ப உறுப்பினர்கள் கைதுசெய்யப்படும்போது அந்த இடத்தில் பிரசன்னமாக இருந்தாலும் கைது செய்யப்பட்டமைக்கான விவரங்களை அவர்களுக்கு அறிவிப்பதற்குக் கூட 24 மணித்தியாலங்கள் வழங்கப்படவில்லை. குடும்பத்திலுள்ளோர் கைதுசெய்யப்படக்கூடிய வேறு சந்தர்ப்பங்களில் அவ்விடத்தில் இருந்தவர் அல்லது அவர்கள் கைது செய்யப்பட்டமையை அறிவிப்பது கட்டாயப்படுத்தப்படவில்லை. அதே சமயம் பெண் சந்தேக நபர்கள் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட வேண்டுமெனவும் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படும் போது கட்டாயமாக ஒரு பெண் உத்தியோகத்தர் அவ்விடத்தில்  பிரசன்னமாக இருத்தல் வேண்டுமென்பதும் அத்தியாவசியப்படுத்தப்படவில்லை.

பொலிஸார் தாக்கல் செய்த தடுத்து வைக்கும் கட்டளைக்கு நீதவானின் அங்கீகாரம் பெறல் வேண்டும். அதே சமயம், ஒரு நபர் இரண்டு வாரங்கள் வரை தடுத்து வைப்பதைத் தீர்மானிப்பவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார். மேலும், இத்தகைய தடுத்துவைக்கும் கட்டளையை, 8 வாரங்கள் வரை நீடிப்பதை  நீதவான் அங்கீகரிக்க முடியும். பொலிஸார் கைதுசெய்தமை தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அறிவிப்பதற்கு 22 மணித்தியாலங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவருடைய வழக்கு ஒரு வருடத்தை விட அதிக காலகட்டத்திற்கு இழுபட்டுக்கொண்டு போனால் மாத்திரமே சந்தேக நபருக்கு பிணை வழங்கப்படும். தடுத்து வைக்கப்பட்டிருப்பவரின் சட்டத்தரணி மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அமைவிடத்திற்கு பிரவேசிப்பதாயின் அந்த நிலையத்திற்குப் பொறுப்பான அரச அதிகாரியின் முன்னங்கீகாரத்தைப் பெறுதல் வேண்டும். அமைச்சர் ஒருவர் தீர்மானிக்கும் அமைவிடத்தில் மற்றும் நிலைமைகளின் கீழேயே முடிவு எடுக்கப்படுகிறது. இத்தகைய தடுத்து வைத்தலுக்கு எதிராக ‘மீளாய்வுக் குழுவிடம்’ மேன்முறையீடு செய்ய முடியும். எனினும் இம்மீளாய்வுக்குழு அமைச்சர், அமைச்சுச் செயலாளர், அமைச்சரினால் நியமிக்கப்படும் மேலும் இருவரை உள்ளடக்கியதாக அமையும். சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிரணி அரசியல்வாதிகளுக்கும் எதிராக ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகளும் பொலிஸாரும் பயங்கவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தும் எமது வரலாற்றைக் பின்னோக்கிப் பார்க்கையில், இச்சட்டத்தின் மூலம் அமைச்சருக்கும் பொலிஸாருக்கும் வழங்கப்பட்டுள்ள அதிகாரம் ஒரு நரியிடம் கோழிக் குஞ்சுகளை ஒப்படைப்பதற்கு ஈடாகும் என்ற கருத்து எமக்கு  மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இச்சட்டத்தின் மூலம் தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் உடலில் ஏதாவது காயங்கள் உண்டா என பரிசீலனை செய்வதற்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, அவர் அத்தகைய காயங்களை அவதானித்தாரேயாயின், ஒரு சட்ட வைத்திய அதிகாரியிடம் தடுப்புக் காவலில் வைத்திருப்பவரை ஒப்படைத்து, சட்ட வைத்திய அறிக்கையைப் பெற வேண்டும். நீதவான் அல்லது மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தியோகத்தர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு வருகை தரும் சந்தர்ப்பத்தில் தடுத்து வைக்கப்பட்டவர் மனிதாபிமானம் அற்ற கவனிப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பின், அவர்கள் சிறைச்சாலை கண்காணிப்பு உத்தியோகத்தருக்கு அல்லது பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்தல் வேண்டும். இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுத்து ஏற்புடைய மனிதாபிமான நிலைமைகளை வழங்குமாறு நிர்ப்பந்திக்க முடியாது. சந்தேக நபர்கள் தடுப்புக் காவலில் இருக்கும்போது, துன்புறுத்தல்கள் இடம்பெறுமாயின் அல்லது  பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுவார்களேயாயின், முன்னைய  பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அதற்கான ஏற்பாடுகள் இருந்தன. ஆனால்,உத்தேச புதிய சட்டம்  நிலைமைகளை மேலும் மோசமாக்கலாம்.

அமுலில்  உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுதல், குறிப்பிட்ட அமைவிடங்களுக்குப் பிரவேசித்தல் மற்றும் பொருட்களை கைப்பற்றுதல் ஆகிய  நடவடிக்கைகளை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாத்திரமே  மேற்கொள்ள முடியும். ஆனால், புதிய சட்டத்தின் கீழ் முப்படையினருக்கும், கரையோரப் பாதுகாப்பு பிரிவினருக்கும் இவ் அதிகாரங்கள் கிடைக்கின்றன. அதேசமயம் பொலிஸார், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அவர்களது மனக்குறைகளை எடுத்துக்கூற சந்தர்ப்பம் வழங்காமல், ஒரு கூட்டத்தை, ஒரு பேரணியை அல்லது ஒரு செயற்பாட்டை நிறுத்துவதற்கு நீதவானிடம் கோரிக்கை விடுக்கலாம். மறுபுறம் ஏதாவது ஓர் அமைப்பை, பொது அமைவிடத்தை அல்லது வேறு ஓர் இடத்தைத் தடை செய்யப்பட்ட அமைவிடமாக கால வரையறையின்றி பிரகடனப்படுத்தும், கட்டளையை விடுப்பதற்கு முன்னர், அவ்விடயத்தைச் சவாலுக்கு உட்படுத்துவதற்கு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு வாய்ப்பு கிடைக்கமாட்டாது. அதேசமயம் அமைப்புக்களின் கூட்டங்கள், நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துவதைத் தடுத்தல், வங்கிக் கணக்குகள், வேறு நிதி வைப்புக்களை பயன்படுத்துதல் அல்லது அவற்றை ஈடுபடுத்துவதைத் தடை செய்தல், உடன்படிக்கைகளுக்கு வருவதை தடை செய்தல், நிதி சேகரித்தல், நிதி அளித்தல், சொத்துக்களை ஒப்படைப்பதை தடை செய்தல், நிதி அல்லது சொத்துக்களை ஒப்படைப்பதை தடை செய்தல்,  ஓர் அமைப்பின் சார்பில் அழுத்தங்களைப் பிரயோகித்தல், கோரிக்கைகளை முன்வைத்தல் என்பவற்றை தடுப்பதற்கு அமைச்சருக்கு அதிகாரம் உண்டு.

தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் வழங்கப்படாத, புதிய சட்டமூலத்தின் மூலம் ஒப்படைக்கப்படும் மேலதிக அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு உண்டு. உதாரணமாக, ஊரடங்குச் சட்டத்தை பிரகடனப்படுத்துவதற்கும், பொது மக்களின் ஒழுங்கைப் பேணுவதற்கு முப்படையினரை அழைப்பதற்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு  வழங்கப்பட்டுள்ளது.

அதே சமயம், புதிய சட்டத்தின் கீழ் பகிரங்கமாக மன்னிப்புக் கோருவதற்கும், புனர்வாழ்வு அளிக்கப்படுவதற்கும், சமூக சேவையில் ஈடுபடுத்துவதற்கும் அதிகாரம் உண்டு. இவற்றின் மூலம் இழைத்த குற்றத்திற்கு நஷ்ட ஈடு செலுத்துவது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இந்நிலைமையின் கீழ் வழக்கு விசாரணைகளுக்கு நீண்டகாலம் எடுக்கப்படுவதனால், சட்டத்தரணிகளின் கட்டணம் என்பன பாதிக்கப்பட்டோர் தாங்க முடியாத அளவு உயர்ந்து செல்கின்றது. எனவே, பலர் நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் தமது குற்றமற்ற தன்மையை நிரூபிப்பதற்கு கஷ்டப்படுவதற்குப் பதிலாக, குற்ற ஒப்புதலை ஏற்றுக்கொள்வதற்கு இடமுண்டு. இத்தகைய சந்தர்ப்பங்களில் குற்றப்பகர்வு பத்திரத்தின்படி சட்டமா அதிபர் குற்றச் சாட்டுக்களை வாபஸ் பெறும் போது, தண்டனைக்காக நீதிமன்ற அங்கீகாரத்தை கோரும் மேலதிக அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தை வரைந்து வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்ட பின்னர், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் இச்சட்டத்தின் மூலம் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக பிரகடனப்படுத்தி, உயர் நீதிமன்றத்தில் மனுக்களை சமர்ப்பித்ததோடு, உயர் நீதிமன்றம் மனுக்களைப் பொருட்படுத்தாமல் மரண தண்டனையை கொண்டுவருவதன் மூலம் அனைத்தும் ஏற்கனவே இருந்ததை விட மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாக இலங்கையின் பல்வேறு மாகாணங்களிலும் இடம்பெற்ற கலந்துரையாடல்களின்போது மதத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் பலர் வருகை தந்திருந்தனர். பல பெண்களின் குழுக்களினால் இக்கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இவற்றில் உருவாகிய முக்கியமான கருத்துக்களும் கோரிக்கைகளும் பின்வருமாறு: ஏற்கனவே அமுலில் உள்ள பயங்கரவாததத் தடைச் சட்டத்தை நீக்கவேண்டிய அதேவேளை புதியதோர் சட்டம் அவசியம் இல்லை என்பதாகும். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலில் பங்குபற்றிய 3 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியதாவது: இந்த வரைபை அவர்கள் எதிர்ப்பதாகக் குறிப்பிட்டனர். ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இது பற்றி தெளிவான ஒரு நிலைப்பாட்டை வெளியிடவில்லை. பழைய மற்றும் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கும் தெளிவான எதிர்ப்பை சுட்டிக்காட்டிய ஒரே அரசியற் கட்சி மக்கள் விடுதலை முன்னணி மாத்திரமே என்பதை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.

கடந்த 6ஆம் திகதி, இச்சட்டம் தொடர்பாக 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சுயாதீன சட்டத்தரணிகளுடன் இது பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது. அடுத்த கூட்டம் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி (நாளை) இடம்பெறவுள்ளது. அன்றைய திகதிக்கு முன்னர் இது பற்றிய எழுத்து மூலமான சமர்ப்பணங்களை வழங்குமாறு வருகை தந்தோரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. பெப்ரவரி 11ஆம் திகதி இது தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வெளிவிவகாரஅமைச்சர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்தும்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதை ஏற்றுக்கொண்டாலும், அத்தகைய ஒரு புதிய சட்டத்தின் தேவையை உறுதியான நிலைப்பாடாக முன்னெடுத்தார். அரச தரப்பினரினதும் சட்டத்தரணிகளினதும் சட்டமா அதிபர் திணைக்களத்தினதும் கருத்து பின்வருமாறு அமைந்துள்ளது, “புதிய சட்டம் அத்தியாவசியமானது – தற்போது சிறு சிறு மாற்றங்களை மாத்திரமே செய்ய முடியும்.”

ஏற்கனவே, அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் புதிய வரைவு ஆகிய இரண்டின் மூலம் தடுத்து வைக்கப்படுவோரின் உயிர்வாழ்வுக்கான பாதுகாப்பு, சுதந்திரம், உடல் உள நலத்திற்கான அச்சுறுத்தல் ஏற்படும் அதேவேளை, அடிப்படை மனித உரிமைகள் மட்டுப்படுத்தப்படுகின்றன. அதேசமயம் பரந்துபட்டதும் தெளிவற்றதுமான வரைவிலக்கணங்களின் மூலம், சட்ட ரீதியாக வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கும் ஜனநாயகப் பிரஜைகள் என்ற வகையில் செயற்படுவதும், பயங்கரவாத நடவடிக்கைகளாக மாறுகின்றன. அதேசமயம், இதன் மூலம் நீதிமன்ற மேற்பார்வையையும் தற்றுணிபையும் குறைக்கும், அமைச்சரினதும் பொலிஸாரினதும் ஆயுதப் படைகளினதும் கரையோரப் பாதுகாவலர்களினதும் தற்றுணிபுக்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அத்துமீறிய அதிகாரங்கள் அல்லது பாரிய அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. அடிப்படையில் பொலிஸாரும் அமைச்சரும் விசாரணையாளர்களும் நீதிபதிகளும உரிய வகிபாகத்தை மேற்கொள்கின்றனர்.

தேசிய பாதுகாப்பு, பயங்கரவாதம் ஆகிய சொற்களைப் பயன்படுத்தி, நீதிமன்றம் மேற்பார்வை செய்யாமல் இருப்பதற்கும் இச்சட்டத்தில் ஏற்பாடுகள் உண்டு. இதனூடாக சிவில் சமூக வாழ்க்கை இராணுவ மயமாக்கப்பட முடியும். அதேவேளை சட்டத்தின் ஆட்சியினூடாக நிர்வகிக்கப்படும் ஜனநாயக சமூகம் அமுலில் உள்ள ஒரு நாட்டிற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பை முன்னுரிமைப்படுத்தி அதிகாரபூர்வமான ஓர் ஆட்சியாக சமூகம் மாறக்கூடும். இது நல்லிணக்கத்திற்கு பாதகமாகவே அமையும். இதன் மூலம் அதிகாரத்திலுள்ளோருக்கு இனத்துவம், மொழி, மதம் மற்றும் அரசியல் கருத்திற்கு ஏற்ப தம்முடன் உடன்படாத குழுக்களை ஒடுக்குவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது. அது எதிர்கால நெருக்கடிக்கு (பயங்கரவாத்தை தடை செய்யும் சட்டத்தின் வரலாற்றை நோக்குகையில் இடம்பெற்றது போலவே) காரணமாக அமையலாம்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி அதற்கு ஒப்பான மற்றுமோர் சட்டத்துடன் தொடர்புபடுத்துவது எந்த வகையிலும் அவசியமில்லை. நாடாளுமன்றத்தின் மூலம் கட்டாயமாக பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். அதனைச் செய்ய முடியும். அமைச்சரவை புதிய சட்ட வரைவை வாபஸ் பெற வேண்டும் அல்லது நாடாளுமன்றத்தினாலேயே அது கட்டாயமாக தோல்விக்குட்படுத்தப்பட வேண்டும். தற்போது அமுலில் உள்ள சட்டங்களின் ஊடாக பயங்கரவாதம் என அடையாளப்படுத்தப்படும் தவறுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியும்.

 தமித் சந்திமால் மற்றும் ருக்கி பெர்னாண்டோ

 


(17.02.2019 அனித்தா’ வாராந்திர சிங்களப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்)