படம் | Selvaraja Rajasegar Photo

யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பகுதியில் தற்கொலை குண்டுதாரி பயன்படுத்தும் அங்கி மற்றும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வெடிப் பொருட்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டமை, அண்மைக்கால சுமூக நிலையில் ஒரு திடீர் பதற்றநிலையை தோற்றுவித்திருக்கிறது. வெளியாகியிருக்கும் செய்திகளின் படி, இது தொடர்பில் ஒரு முன்னைநாள் விடுதலைப் புலி உறுப்பினர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் இது தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்ட வேண்டுமென்று கூறியிருக்கும் கோட்டாபய ராஜபக்‌ஷ, புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாத விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஒரு அச்சுறுத்தலாக உருவாகக் கூடுமென்று அரசாங்கத்தை எச்சரித்திருக்கின்றார். இது தொடர்பில் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் கேள்வி எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையென்று பாதுகாப்புச் செயலர் கருணாரத்ன தெரிவித்திருக்கின்றார். இதேவேளை, இது தொடர்பில் பேசியிருக்கும் யாழ். படைகளின் தலைமைக கட்டளைத் தளபதி மகேஸ் சேனநாயக்க, எதையும் எதிர்கொள்ளக் கூடிய தயார் நிலையில் இராணுவம் இருப்பதாகவும், வடக்கின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இராணுவம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

நடைபெற்றிருப்பது ஒரு சம்பவம். பின்னர் வெளிவந்த கருத்துக்கள் அனைத்தும் அதனை வைத்துக்கொண்டு பின்னப்பட்டவை. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்றால் அவ்வாறானதொரு அச்சுறுத்தலை யாரால் விடுக்க முடியும்? கோட்டாபயவின் அபிப்பிராயப்படி, புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாத விடுதலைப் புலி உறுப்பினர்களால் அவ்வாறானதொரு அச்சுறுத்தலாக உருவெடுக்கக் கூடியவர்கள். கோட்டாபயவின் கருத்தை ஒரு வாதத்திற்காக சரியென்று எடுத்துக்கொண்டாலும் கூட, இந்த இடத்தில் இன்னொரு உப கேள்விக்கும் இடமுண்டு. அதாவது, புனர்வாழ்வுக்கு உட்படாத விடுதலைப் புலி உறுப்பினர்கள், ஒரு சரியான வழிகாட்டலின்றி இவ்வாறானதொரு தாக்குதல் நடவடிக்கையை திட்டமிட முடியுமா? இவ்வாறான உரையாடல்கள் அனைத்தும் இறுதியில் எங்கு முற்றுப் பெறுகின்றதென்றால், விடுதலைப் புலிகள் மீளவும் ஒரு அச்சுறுத்தும் சக்தியாக மேலெழும் நிலையில் இருக்கின்றனர். எனவே, அதனை சமாளிக்கக் கூடிய வகையில் இராணுவம் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்பதிலாகும். மேற்படி சம்பவத்தையடுத்து, வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றுதல் மற்றும் இராணுவத்தை குறைத்தல் போன்ற வாதங்கள் சிறிது காலத்திற்கு வலுவிழக்கலாம்.

ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இலங்கையின் உள்ளக நிலைமைகள் வலுவாக இல்லை. எப்போதும் எதுவும் நிகழலாம் என்னும் நிலைமைதான் காணப்படுகிறது. இதற்கான காரணம் ஆட்சி மாற்றத்தின் உள்ளாந்த பண்பாகவே இருக்கிறது. பலரும் எதிர்பார்த்தது போன்று ஆட்சி மாற்றத்தின் பின்னரும் கூட மஹிந்த ராஜபக்‌ஷவின் செல்வாக்கை பெருமளவிற்கு சிதைக்க முடியவில்லை. இன்றும் ஒப்பீட்டளவில் அதிகமான மக்களை வீதிக்கு கொண்டுவரக்கூடிய ஆற்றல் மஹிந்த தரப்பிடமே காணப்படுகிறது. ஒப்பீட்டளவில் தமிழ் எதிர்பாளர்களும், இந்திய எதிர்பாளர்களும் மஹிந்தவின் பக்கமாகவே சென்று கொண்டிருக்கின்றனர். இவ்வாறான நிலைமைகள் தொடர்ந்தும் கொழும்பை ஒருவித பதற்ற நிலையிலேயே வைத்திருக்கிறது. இவ்வாறானதொரு சூழலில்தான் மேற்படி சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது. உண்மையிலேயே விடுதலைப் புலிகள் மீளவும் ஒருங்கிணையக் கூடிய ஆற்றலுடன் இருக்கின்றனரா? இப்போதும் இதற்கு ஆம் என்று பதிலளிப்பவர்கள் இருக்கின்றனர். அவ்வாறானவர்கள் வெளியிடப்படும் செய்திகளுக்கு பொறுப்புச் சொல்லவேண்டிய கடப்பாடற்ற இணையங்களால் வழிநடத்தப்படுவர்கள். இவ்வாறானவர்களே ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் இறந்தபோதும், அந்த உண்மையை மறைத்து, மக்களை புனைவுகளை நம்பும்படி நிர்பந்தித்தனர். இறுதியில் இவ்வாறான புனைவுகள் அனைத்தும் இலங்கையின் புலனாய்வுத் துறையினருக்கே பயன்பட்டன. இன்றும் கூட, பொட்டு அம்மானின் உடல் கண்டெடுக்கப்படவில்லை. எனவே, அவர் இருக்கின்றார் என்று தர்க்கம் செய்வோர் உண்டு. இப்படியான வாதங்களும் இறுதியில் இலங்கை அரசுக்குத்தான் சேவம் செய்கிறதே ஒழிய, தமிழ் மக்களுக்கல்ல. இப்படியானவர்களுக்கு இப்பத்தி சுட்டிக்காட்டக் கூடியது ஒன்றே. அதவாது, பொட்டு அம்மான் உயிரோடு இல்லை என்பதில் ஒரு துளியளவு கூட சந்தேகம் இருந்திருந்தால், வரதராஜப் பெருமாள் வடக்கு கிழக்கில் சாதாரணமாக பொது மக்கள் பயன்படுத்தும் பேருந்துகளில் பயணம் செய்து கொண்டிருப்பாரா? டக்களஸ் தேவானந்தா தன்னுடன் இருந்த ஆட்களை எல்லாம் அனுப்பிவிட்டு இப்படி தனியாக திரிந்து கொண்டிருப்பாரா? கொழும்பில் பல முக்கிய இடங்களில் விதிக்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்புக்களை எல்லாம் நீக்கிவிட்டு, இலங்கை இராணுவ திட்டமிடலாளர்கள் ஓய்வாக இருப்பார்களா? சிந்திக்கும் ஆற்றல் ஒன்றுதான் மனிதர்களை ஏனையவற்றிலிருந்து வேறுபடுத்துவதாக நம்பப்படுகிறது.

மேற்படி கேள்விகளிலிருந்தே விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி சாத்தியமா அல்லது இல்லையா என்னும் கேள்விக்கு பதில் காணலாம். பிரபாகரன் தலைமையில் இருந்த விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி என்பது ஒரு போதுமே சாத்தியமற்ற ஒன்று. ஏனெனில், விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது பிரபாகரனின் அமைப்பு. அவரது விருப்பு வெறுப்புக்கள், கோபங்கள் மற்றும் தீர்மானங்களால் இயங்கிய அமைப்பு. குமரன் பத்மநாதன் (கே.பி.) ஒரு நோர்காணிலில் குறிப்பிட்டது போன்று, பிரபாகரன் விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் ஆத்மா. இப்பொழுது விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது வெறுமனே உச்சரிக்கும் ஒரு விடயம் மட்டுமே. 2009இற்குப் பின்னர் பெருமளவிற்கு பிரபாகரனும் விடுதலைப் புலிகள் அமைப்பும் பலரது சொந்த நலன்களுக்கும், தேர்தல் அரசியலுக்குமே பயன்பட்டிருந்தன. அதனை பயன்படுத்தி தங்களின் சுய லாபங்களை பெருக்கிக் கொள்வதில் பலருக்கும் தயக்கமும் இருக்கவில்லை. தமிழர் தரப்பிற்கே அந்த தயக்கம் இல்லாத போது அதனை தென்னிலங்கை சக்திகள் மத்தியில் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

விடுதலைப் புலிகளின் மீளெழுச்சி தொடர்பில் பேசும் ஒரு சிலர், ஒருவேளை குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்படாமல் இருந்திருந்தால், புலம்பெயர் சூழலில் ஒரு, வேறு விதமான அமைப்பாக்கம் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். அது கூட விடுதலைப் புலிகளின் மீளெழுச்சி அல்ல, மாறாக முன்னைய தவறுகளை கழைந்து, புதிய சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ளும் ஒரு முயற்சியாக இருந்திருக்கலாம். தன்னை அடிக்கடி பிரக்டிக்கல் மேன் (Practical Man) என்று கூறும் குமரன் பத்மநாதனிடம், அதற்குரிய தகுதி இருந்ததாகவே சிலர் கூறுகின்றனர். ஆனால், 2009இல் பிரபாகரனை இல்லாதொழிக்கும் இறுதி யுத்தத்தில் வெற்றியீட்டிய கொழும்பின் இராணுவத் தலைமை, குமரன் பத்மநாதனை கைதுசெய்யும் முயற்சியிலும் வெற்றியீட்டியதன் மூலம் இலங்கைக்கு வெளியிலும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முடக்குவதில் பாரிய வெற்றியீட்டியது. இதன் பின்னர் விடுதலைப் புலிகள் சிதறடிக்கப்பட்ட ஒரு அமைப்பேயன்றி மீளவும் ஒருங்கிணையக் கூடிய அமைப்பாக இருந்திருக்கவில்லை. அவ்வாறு அனைவரையும் ஒருங்கிணைக்கக் கூடிய தலைமையும் புலத்தில் இருந்திருக்கவில்லை. 2009இற்கு பின்னர் பலரும் முழுநேர அரசியலிருந்து முற்றிலுமாகவே ஒதுங்கிக் கொண்டனர். அதுவரை அரசியல் மிருகங்களாக இருந்த அவர்கள், பின்னர் முற்றிலும் குடும்ப மிருகங்களாக தங்களை சுருங்கிக் கொண்டனர். ஆனால், இவ்வாறு சிதறடிக்கப்பட்டவர்களின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரே தொடர்ந்தும் ஆங்காங்கே புலிக்கொடியோடு நிற்கின்றனர். இதனை ஒரு உணர்வுசார்ந்த விடயமாகவே இப்பத்தி பார்க்கிறது. ஆனால், இவ்வாறான நடவடிக்கைகள் களத்திலோ அல்லது புலத்திலோ எவ்விதமான காத்திரமான தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. மேலும், அரசியலை வெறும் உணர்வுபூர்வமாக அணுகுவதை எப்போதுமே இப்பத்தி வரவேற்றதும் இல்லை, ஆதரித்ததும் இல்லை.

எனவே, ஆங்காங்கே இடம்பெறும் உதிரி சம்பவங்களை வைத்துக்கொண்டு விடுதலைப் புலிகள் மீளவும் ஒருங்கிணைகின்றனர் என்னும் வாதத்தின் பின்னால் நிச்சயம் ஒரு நிழச்சிநிரல் இல்லாமல் இருக்காது. அது நிச்சயம் தமிழ் மக்களின் நலன் சார்ந்த ஒன்றல்ல. இவ்வாறான கருத்துக்களை அந்தந்த தருணத்திலேயே எதிர்க்க வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு. எதைச் சொன்னாலும் அதற்கு பதிலளிக்காமல், பதிலளித்தால் ரணில் கோபிப்பாரோ, மைத்திரி மனம் நோவாரோ இந்திய தூதுவர் ஏதும் நினைப்பாரோ, அமெரிக்கத் தூதுவர் முகம் சுழிப்பாரோ என்று எண்ணிக் கொண்டிருப்பதற்காக தமிழ் மக்கள் கூட்டமைப்பை தலைமையாக தெரிவுசெய்யவில்லை. தமிழ் மக்கள் தங்களின் நலன்களை பேணிப் பாதுகாக்கவே கூட்டமைப்பை தெரிவு செய்திருக்கின்றனர். மேற்படி சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு இராணுவ நீக்கம் தொடர்பான விடயங்களை மஹிந்த தரப்பு எதிர்க்கும். ஏற்கனவே, மஹிந்த தரப்பின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து தேசிய பிரச்சினை விவகாரத்தை நிகழ்சி நிரலிலிருந்து நீக்கியது போன்று எதிர்காலத்தில் இராணுவக் குறைப்பு தொடர்பான விவகாரமும் கிடப்பில் போடப்படலாம். 2009இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் ஆய்வுசெய்த ஒரு இந்திய ஆய்வாளர் (Indian Defense Review author V.K. Shashikumar) அந்த வெற்றியில் செல்வாக்குச் செலுத்திய தலைமைத்துவம் சார்ந்த எட்டு காரணங்களை பட்டியிலிட்டிருந்தார். அவற்றில் ஒன்று அரசியல் பற்றுறுதி (political will) மற்றைய முழுமையான செயற்பாட்டு சுதந்திரம் (complete operational freedom) ஆனால், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்களையும் ஒரு சமதையான மக்கள் குழுமமாக நடத்துவதற்கான அரசியல் பொறிமுறைகளை ஏற்படுத்துவதில் அந்த பற்றுறுதியையும், முழுமையான செயற்பாட்டு சுதந்திரத்தையும் மஹிந்தவும் காண்பிக்கவில்லை, ஆட்சி மாற்றத்தின் பின்னரான தேசிய அரசாங்கம் எனப்படுவதும் காண்பிக்கவில்லை. விடுதலைப் புலிகளை வீழத்துவதற்கு ஆதரவளித்த சர்வதேச சக்திகளும் அதனைச் செய்ய முயற்சிக்கவில்லை. அவர்களது செயற்பாடுகள் பெருமளவிற்கு உதட்டளவு அழுத்தமாகவே இருக்கிறது.

இந்த நிலையில், ஒரு சாதாரண பாதிக்கப்பட்ட தமிழ் குடிமகனின் வெளிப்படுத்த முடியாத மன உணர்வின் ஆழத்தில் விடுதலைப் புலிகள் மாதிரி ஒன்று இருந்தால்தான் இவங்களை சமாளிக்கலாம் போல என்று எண்ணக் கூடியவாறான சூழலே இன்றும் நிலவுகிறது. ஏனெனில், விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிப்பதில் வெற்றியீட்டியவர்களால் அரசியல் ரீதியாக இன்னும் அவர்களை தோற்கடிக்க முடியவில்லை என்பதே உண்மை. விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியாக தோற்கடிக்க முடியாமையின் விளைவாகவே அவ்வப்போது விடுதலைப் புலிகள் அச்சுறுத்தலாக இருக்கின்றனர், அவர்கள் மீண்டெழுந்துவிடுவார்கள் என்றவாறான பூச்சாண்டிகளை பரப்ப வேண்டிய நிர்பந்தம் கொழும்பின் ஆட்சியாளர்களுக்கு ஏற்படுகின்றது. இந்த நிலையில், விடுதலைப் புலிகள் உறுதியுடன் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழீழ நிலைப்பாடு தொடர்ந்தும் உயிர்வாழ்வதற்கு யார் காரணம்? ஆட்சியாளர்களா அல்லது புலம்பெயர் சூழலில் உள்ளவர்களா? அந்த வகையில் தமிழீழத்தின் மீட்பர்களும், விடுதலைப் புலிகளின் மீட்பர்களும் தமிழ் மக்கள் அல்ல. மாறாக, கொழும்பின் விட்டுக்கொடுப்பற்ற, இப்போதும் இந்தத் தீவு சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்னும் மனோபாவத்தில் ஆட்சியதிகாரத்தைப் பகிர (கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வழங்கிய ஆணைக்கு அமைவாக) மறுக்கும் சிங்கள தேசியவாத சக்திகளுக்கே விடுதலைப் புலிகளின் மீளெழுச்சி தேவைப்படுகிறது.

தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.