படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையதளம்
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரோனி பிளேயர், கடந்த ஐந்து மாதத்திற்குள் இலங்கைக்கான இரண்டாவது பயணத்தை மேற்கொண்டுள்ளார். தனது முதலாவது பயணத்தின் போது இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒகஸ்ட் 24ஆம் திகதி சந்தித்த ரோனி பிளேயர், தனது இரண்டாவது பயணத்தின் போது இராஜவரோதயம் சம்பந்தனை கடந்த ஜனவரி 3ஆம் திகதி சந்தித்துள்ளார்.
சர்வதேச ரீதியில் இலங்கை தொடர்பாக நிலவும் தவறான எண்ணங்களை களைவதற்கு தான் உதவத் தயார் என மைத்திரிபாலவுடனான சந்திப்பில் ரோனி பிளேயர் தெரிவித்திருந்தார். போர்க்குற்றச் சாட்டும், பொறுப்புக்கூறல் தொடர்பான விடயங்களும் இன்றுவரை இலங்கையை சர்வதேச கவனத்திற்குள் வைத்துள்ளன. அவ்வாறாயின், இவற்றை ரோனி பிளேயர் சர்வதேச ரீதியில் நிலவும் தவறான எண்ணங்கள் என கருதுகிறாரா? அத்துடன், இலங்கையை போர்க்குற்றச்சாட்டுக்களிலிருந்து மீட்கப்போகிறாரா என்ற கேள்விகள் இத்தருணத்தில் எழுவது தவிர்க்கப்பட முடியாதது. இதேவேளை, ரோனி பிளேயரை இலங்கைக்கு அழைத்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் போர்க்குற்றச்சாட்டுக்களிலிருந்து இலங்கையை காப்பாற்றும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டு வருவது கவனிக்கத்தக்கது. மைத்திரிபாலவுடனான சந்திப்புக்கு அடுத்த நாள், ரோனி பிளேயர் காலஞ்சென்ற லக்ஸ்மன் கதிர்காமரின் பத்தாவது ஆண்டு நினைவுப் பேருரையை ஆற்றியிருந்தார். இந்தப் பத்தி எழுதப்படும் பொழுது, பொருளாதார மாநாட்டில் பங்கெடுப்பதற்காக இரண்டாவது தடவையாக இலங்கை வந்தடைந்துள்ள ரோனி பிளேயர் சம்பந்தனை சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில், இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம், பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு, நிலங்கள் மீளக் கையளிப்பு மற்றும் மீள்குடியேற்றம் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பணியகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ரோனி பிளேயர் தற்போது பிரித்தானிய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. மாறாக, தனது தனிப்பட்ட அமைப்பான ரோனி பிளேயர் ப்பெய்த் நிறுவகத்தின் (Tony Blair Faith Foundation) சார்பாகவே இலங்கைடனான உறவைப் பேணுகிறார். அவரது முன்னுக்குப் பின் முரணான செயற்பாடுகளால் ரொனி பிளேயர் சர்வதேச ரீதியில் சர்ச்சைகளுக்குள்ளானவர்.
சம்பந்தனுடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடிய ரோனி பிளேயர், கசகஸ்தான் பாதுகாப்புப் படைகள் மேற்கொண்ட பொதுமக்கள் படுகொலை ஒன்றினை எவ்வாறு கையாளலாம் என்பது தொடர்பாக கசகஸ்தான் அரசாங்கத்துக்கு பொதுசன உறவு தொடர்பாக ஆலோசனை வழங்கியவர். இதனால், இவர் கடும் விமர்சனத்துக்கும் உள்ளாகியிருந்தார்.
அத்துடன், 2007இல் அமெரிக்கா, ரஷ்யா, ஐ.நா. மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் மத்திய கிழக்குக்கான தூதராக நியமிக்கப்பட்ட ரோனி பிளேயர், 2015இல் அப்பதவியை துறப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார். இஸ்ரேலுக்கு சார்பாக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டும், முகமட் அபாசின் போட்டியாளரும் பலஸ்தீனத்தின் எதிர்கால தலைவராக வருவதற்கு விருப்பம் கொண்டு புகலிடத்தில் இருந்து செயற்பட்டு வருபவருமான மொகமட் டஹ்லனுடனான ரோனி பிளேயரின தொடர்பும் ரோனி பிளேயரின் நடுநிலைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கியது. இதனால், 2015ல் ரோனி பிளேயர் தனது பதவியை துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
1999 மார்ச் 24 தொடக்கம் யூன் 10ஆம் திகதி வரை சேர்பியா மீது மேற்கொள்ளப்பட்ட நேட்டோ (NATO) விமானத் தாக்குதல்களின் பின்னணியில் ரோனி பிளேயர் முக்கிய பங்குவகித்தார். நேட்டோ குண்டுத் தாக்குதல்களால் சேர்பியாவின் உட்கட்டமைப்பு வசதிகள் சின்னாபின்னமானதுடன் சேர்பியா பேரழிவைச் சந்தித்தது. இதன் விளைவாக, கொசோவோவில் சேர்பியா படைகள் மேற்கொண்டுவந்த இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதுடன், ஐ.நா. அமைதி காக்கும் படை கொசோவோவில் நிலைநிறுத்தப்பட்டது. அத்துடன், கொசோவோ சுதந்திர தேசமாக மலர்வதற்கு அடித்தளமிடப்பட்டது.
சேர்பியாவின் இன்றைய பிரதமராகத் திகழும் அலெச்சன்டர் வுசிக் (Aleksandar Vucic) நேட்டோ குண்டுத் தாக்குதலின்போது மிலோசெவிக் அரசாங்கத்தின் தகவல்துறை அமைச்சராக பணியாற்றியவர். 2005இல் இவரையும் ஆசிரியராக கொண்டு வெளியான English Gay Fart Tony Blair என்ற நூல் ரோனிய பிளேயரை கடுமையாக விமர்சித்தது.
சேர்பியா மீதான குண்டு தாக்குதல் இடம்பெற்று 16 ஆண்டுகளுக்குப் பிற்பாடு, சேர்பிய பிரதமர் அலெச்சன்டர் வுசிக்குக்கான ஆலோசகராக ரோனி பிளேயர் செயற்படுகிறார் என்று பெப்ரவரி 2015இல் உறுதிப்படுத்தப்பட்டது. சேர்பிய பிரதமருக்கான ஆலோசனையை தனது இன்னொரு அமைப்பான Tony Blair Associates ஊடாக ரோனி பிளேயர் மேற்கொள்கிறார். சுகாதாரம், சட்டத்தின் ஆட்சி, கல்வி, பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவை தொடர்பாகவே சேர்பிய பிரதமருக்கு ரோனி பிளேயர் ஆலோசனை வழங்குவார் என்று Tony Blair Associatesஐ மேற்கோள்காட்டி லண்டனைத் தளமாகக் கொண்ட “த ரெலிகிராப்” நாளிதழ் தகவல் வெளியிட்டது.
ஆயினும், காலப் போக்கில் சேர்பியாவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் கிடைப்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் துராநோக்குடன் மேற்கொள்ளப்படுவதாக சேர்பியா விவகாரங்களில் நிபுணத்துவமுடையவர்கள் தெரிவிக்கின்றனர்.
கோசோவோ போரின்போது அல்பானியாவுக்கு ஆதரவாக செயற்பட்ட ரோனி பிளேயர், 2013இல் அல்பானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு உடன்பட்டிருந்தார். இதேவேளை, கொசோவோவின் சுதந்திரத்துக்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரான ரோனி பிளேயரே காலப்போக்கில் கோசோவோவின் சுதந்திரம் இழக்கப்படுவதற்கு காரணமாக இருக்கப்போகிறார் என்ற செய்திகளும் சேர்பியாவில் உலாவுகிறது.
பூகோள அரசியல் போட்டியே கொசோவோ ஒரு சுதந்திர நாடாக உருவாகுவதற்கு உதவியது. சக்தி மிக்க நாடுகளின் நலன்கள் பூர்த்தியடைந்ததை அடுத்து கோசோவோவின் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இதனால், கோசோவோ தோல்வியடைந்த நாட்டின் நிலைக்கு மாறிவிட்டது. இதன் விளைவாக கோசோவோ பிரஜைகள் கோசோவோவை விட்டு வெளியேறி மேற்கு ஐரோப்பிய நாடுகளில் குடியேற ஆர்வம் காட்டுகிறார்கள். ஆயினும், சேர்பியா கடவுச் சீட்டுடன் ஒப்பிடுமிடத்து, கொசோவோ கடவுச்சீட்டுடன் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதோ அல்லது தற்காலிகமாக வாழ்வதோ இலகுவான விடயமல்ல.
கொசோவோ பிரஜைகளின் விருப்பத்தை அறிந்த கொண்ட சேர்பியா, கொசோவோ பிரஜைகளுக்கு சேர்பியா கடவுச்சீட்டு வழங்கத் தொடங்கியது. மேற்கு ஐரோப்பாவில் வாழ்வதை நோக்காகக் கொண்ட கொசோவோ பிரஜைகள் தயக்கமின்றி சேர்பியா கடவுச்சீட்டுக்களைப் பெற்று வருகின்றனர். இதனூடாக சேர்பிய கடவுச்சீட்டு பெறும் கொசோவோ பிரஜைகள் சட்டரீதியாக சேர்பிய பிரஜைகளாகக் கருதப்படுவார்கள். அதேவேளை, 2008 பெப்ரவரியில் சுதந்திரமடைந்த கோசோவோவை சேர்பியா ஒரு சுதந்திர நாடாக இன்று வரை அங்கீகரிக்கவில்லை. மாறாக, தனது நாட்டின் ஒரு பகுதியாகவே இன்றுவரை கருதுகிறது. கொசோவோ பிரஜைகள் சேர்பியா கடவுச்சீட்டு பெறுவதை ஊக்குவிக்கும் சேர்பியா, காலநீட்சியில் கொசோவோவில் ஒரு சர்வசன வாக்கெடுப்பை நடாத்த திட்டமிட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பின் ஊடாக கொசோவோவில் அதிக பெரும்பான்மையாக வசிப்பவர்கள் சேர்பிய பிரஜைகள் என்பதை வெளிப்படுத்துவதோடு, கொசோவோ தனிநாடாக தொடர்வதற்கான தகுதியை இழந்துள்ளது என நிரூபிக்க முயல்கிறது.
இதேவேளை, பொஸ்னியா மற்றும் ஹேர்சிகோவினாவில் அங்கு வாழும் இனங்களுக்கிடையில் பதற்றம் நீடிக்கிறது. சக்திமிக்க நாடுகளின் நலன்களுக்காக அவசர அவசரமாக ஒரு அரசியல் தீர்வுத் திட்டம் திணிக்கப்பட்டதன் தாக்கமே இது. காயத்தை குணமாக்கும் நோக்கோடு செய்யப்படாமல், மறைத்து கட்டும் நோக்கோடு செய்யப்பட்டதால் நல்லிணக்கத்துக்கான சந்தர்ப்பங்கள் பொஸ்னியா மற்றும் ஹேர்சிகோவினாவில் குறைந்தன. விளைவு, மோதுகைகளுக்கான தீர்வான டேற்றன் உடன்படிக்கை (Dayton Agreement) கைச்சாத்தாகி சுமார் இரு தசாப்தங்கள் ஆகியுள்ள நிலையிலும் முரண்பாடுகள் தொடர்கிறது. அதுமட்டுமன்றி, பொஸ்னியா மற்றும் ஹேர்சிகோவினாவில் வசிக்கும் சேர்பியர்கள், சேர்பியாவுடன் இணைவதற்கு முயன்று வருகிறார்கள். இதனை மறைமுகமாக ஊக்குவிக்கும் சேர்பியா, பொஸ்னியா மற்றும் ஹேர்சிகோவினாவில் வசிக்கும் சேர்பியர்களின் திட்டத்தை கணிசமான காலத்துக்கு பிற்போடுமாறு கோரியுள்ளது.
ஏனெனில், தற்போது கொசோவோவில் ஒரு சர்வசன வாக்கெடுப்பை நடாத்துவதும், பொஸ்னியா மற்றும் ஹேர்சிகோவினாவில் சேர்பியர்கள் வசிக்கும் பகுதியை சேர்பியாவோடு இணைப்பதும, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்பியாவுக்கான அங்கத்துவம் கிடைப்பதை பாதிக்கக்கூடும். ஆதலால்தான், நீண்டகால உத்திகளோடும், தந்திரோபாயங்களுடனும் சேர்பியா தனது நகர்வுகளை முன்னெடுக்கிறது. இவற்றிற்கான ஆலோசகராக ரோனி பிளேயர் திகழ்கிறார் என சேர்பியா தொடர்பான நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
சுமார் பதினேழு வருடங்கள் கழிந்த நிலையில், கீரியும் பாம்பும் போல் இருந்த ரோனி பிளேயரும் அன்று போர்க்குற்றவாளி எனக் கூறப்பட்டவரும் சேர்பியாவின் இன்றைய பிரதமராகத் திகழுபவருமான அலெச்சன்டர் வுசிக்கும் நல்லுறவை கட்டியெழுப்பியுள்ளனர். ஏதோ ஒரு வகையில் அன்று சேர்பியா அழிவடைவதற்கு காரணமாகவிருந்த ரோனிய பிளேயர் இன்று சேர்பியா வல்லமையோடு மீண்டும் நிமிர துணைபுரிகிறார். அதேவேளை, அன்று தனது பங்குடன் விடுதலையடைந்த கோசோவோவின் சுதந்திரம், எதிர்காலத்தில் இழக்கப்படும் ஆபத்தை நோக்கி செல்வதற்கு காரணமாக மாறிவருகிறார்.
இது அரசியலில், நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனுமில்லை. மாறாக, நலன் மட்டுமே நிரந்தரமானது என்பதை புலப்படுத்துவதோடு, நடைமுறை சாத்தியம், யதார்த்தம் போன்றவை நிலையற்றவை என்பதை நிரூபித்துள்ளது. ஆதலால், இதுதான் நடைமுறை சாத்தியம், யதார்த்தம் எனக் கூறிக் கிடைப்பதை பெற்றுக்கொள்வதையும் தருவதை வாங்கிக் கொள்வதையும் உடைய மனப்பாங்கை விடுத்து மக்களின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்கும் பொறிமுறைகளையும் தந்திரோபாயங்களையும் வகுத்து செயற்பட வேண்டும். அதுவே, ஒரு தேசத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் நிர்ணயிக்கும். அந்த வகையில், ரோனி பிளேயரின் பின்புலத்தையும் இலங்கை தொடர்பான அவரது நிகழ்ச்சி நிரலையும் புரிந்து, தமிழர் தேசத்தின் நலனுக்கு முன்னுரிமையளித்து செயற்படுமா தமிழர் தரப்பு?
நிர்மானுசன் பாலசுந்தரம்