படம் | AP Photo, Dhaka Tribune

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் வட மாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோருக்கிடையே இடம்பெற்ற சந்திப்பு எதற்காக என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் இந்த முரண்பாடுகள் ஒவ்வொருவருக்கும் இடையேயான தாழ்வுச் சிக்கல் தற்போதைய அரசியல் சூழலில் தேவைதான என்ற கேள்விகள் எழுகின்றன. விக்னேஸ்வரனையும் அவர் சார்ந்த அணியினரையும் ஆதரிக்க ஒரு குழுவினரும் சம்பந்தனையும் அவர் சார்ந்த செயற்பாட்டாளர்களையும் ஆதரிக்க வேறு ஒரு பிரிவினரும் இருக்கின்றனர்.

உறுப்பினர்களில் மாற்றமில்லை

ஆனால், 60 ஆண்டுகால அரசியல் போராட்டம் ஒன்றை சந்தித்து இன்றுவரை சரியான தீர்வு இன்றி தோல்வியடைந்த சமூகமாக அல்லது எந்தவகையான போராட்டத்திலும் வெற்றிபெற முடியாத இனமாக இருக்கும் இந்த சூழலில் இந்த முரண்பாடுகள் தமிழர்களின் அரசியல் கோரிக்கையை மலினப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இந்த முரண்பாட்டின் பின்னணியில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவைக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே என்ன வித்தியாசங்கள் இருக்கின்றன? இருதரப்பு உறுப்பினர்களிலிலும் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், பேரவை, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கான எதிர்ப்பு அரசியல் நடத்தால் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரு தேசிய இயக்கமாகவும் அமுக்கக்குழு போன்று செயற்பட வேண்டும் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்த உறுப்பினர்களில் சிலர் தமிழ் மக்கள் பேரவையிலும் இருக்கின்றனர். புதியவர்கள் என்று யாரும் இல்லை. அப்படி இருந்தாலும் அந்த புதியவர்களும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆதரரித்தவர்கள்தான். ஆனாலும், புதிய பரம்பரையில் உருவான இளைஞர்கள் பேரவைக்குத்தான் ஆதரவை தெரிவிக்கின்றனர். பட்டறிவின் அடிப்படையில் பேரவை செயற்பட வேண்டும் என்றும் இளைஞர்கள் விரும்புகின்றனர்.

என்ன பேசினார்கள்?

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற சந்திப்பில் சம்பந்தன் விக்னேஸ்வரனின் அரசியல் நியாயப்பாடுகள் மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான பேச்சுக்களில் உள்ள அசமந்தப்போக்குகள் பற்றிய குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகின்றது. அதுமாத்திரமல்ல, தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் தமிழ் மக்களின் அதிகமானவர்களின் விருப்பம் என்பதையும் குறிப்பாக அது அவர்களின் ஜனநாயக உரிமை என்பதையும் சம்பந்தன் ஏற்றுக்கொண்டதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், விக்னேஸ்வரனைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தை ஏற்றுக்கொள்வது என்பதை விட நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு – கிழக்கு மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் தமிழ் மக்கள் சார்ந்த அரசியல் விடயங்களை ஒரு சில உறுப்பினர்களின் கைகளில் விட்டுள்ளது என்பதையும், ஏனைய உறுப்பினர்களை மதித்து செல்லாத போக்கை கடைப்பிடிக்கின்றது என்ற குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தார் என அறியமுடிகின்றது. ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவை ஏற்படுத்தக் கூடாது என்று சம்பந்தன் அழுத்திக் கூறியதாகவும், பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், ஆனால், ஒருமித்த குரலாக செயற்படுவதற்கு கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையிலும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையிலும் சம்பந்தன் இடமளிக்க வேண்டும் என்ற கருத்துக்களை விக்னேஸ்வரன் கூறியிருக்கின்றார்.

பிரித்தாளும் தந்திரம்

முடிவு எடுக்கும் அதிகாரம் யார் கையில் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சில மூத்த உறுப்பினர்கள் சம்பந்தனை வழிநடத்தி வருகின்றனர். தமிழரசுக் கட்சி சார்ந்த எவரிடமும் தமிழ் மக்கள் சார்ந்த முடிவு எடுக்கும் அதிகாரம் இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் அசையாத கருத்து. அந்த கருத்தின் அடிப்படையில்தான் தமிழரசுக் கட்சியின் சில மூத்த உறுப்பினர்கள் செயற்பட்டு வந்தனர். ஆனாலும், அந்தக் கட்சியில் உள்ள வேறு சில உறுப்பினர்கள் கட்சி அரசியல் என்பதை விட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பதை பல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயற்படுகின்றனர்.

இதனால்தான் விக்னேஸ்வரனின் தலைமையின் கீழ் அல்லது அவரை மையமாகக் கொண்டு வேறு ஒரு அமைப்பை உருவாக்கி செயற்பட வேண்டும் என்ற மாற்றுக் கருத்தையும் அவர்கள் கொண்டிருந்தனர். இந்த இடத்தில் சம்பந்தனின் அரசியல் அனுபவம் அல்லது அவருடைய தலைமைத்துவ பண்பு பலவீனமாகிவிட்டது என்ற முடிவுக்கு வரலாம். ஏனெனில், 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் என்பதை விட தமிழ் மக்களின் தலைவர் என்ற அந்தஸ்த்தை சம்பந்தன் இயல்பாகவே பெற்றுக்கொண்டார். தமிழ் மக்களில் யாரும் அவரை எதிர்க்கவில்லை.

எல்லோரும் ஏற்றுக்கொண்டனர்

வடக்கு – கிழக்கு மக்கள் மாத்திரமல்ல மலையகத் தமிழர்கள் கூட விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான காலகட்டத்தில் சம்பந்தனை தமது தலைவராக ஏற்றுக்கொண்டனர். சர்வதேச நாடுகள் கூட சம்பந்தனைத் தலைவராக மாத்திரமல்ல, தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை ஜனநாயக வழியில் பெற்றுக்கொள்ளக் கூடிய ஓர் சிறந்த இராஜதந்திரியாகவும் அங்கீகரித்தனர். ஆனால், சம்பந்தன் இந்த இடத்தில் தான் தமிழ் மக்களின் தலைவன் என்று கூறவிரும்பவில்லை. மாறாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் என்று மாத்திரமே அவர் கூறியிருக்கின்றார்.

அவ்வாறு தன்னை தமிழ் மக்களின் தலைவன் என்று கருதாமல் இருந்ததன் காரணமாகவே அவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியை மாத்திரம் வளர்த்தெடுக்கின்ற போக்கையும், இலங்கை அரசாங்கத்தின் சாதாரண நிகழ்ச்சி நிரலையும் ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் அவர் இருக்கின்றார் என சில விமர்சகர்கள் குற்றம் சுமத்தினர். விக்னேஸ்வரன் கூட கொழும்பு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குரியவர் என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் முன்னர் காணப்பட்டது. ஆனால், வட மாகாண சபையின் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் யாழ்ப்பாணத்தில் குடியிருக்க ஆரம்பித்த விக்னேஸ்வரன் 60 ஆண்டுகால அரசியல் போராட்டத்தின் உண்மைத் தன்மையை புரிந்துகொண்டார். அதனடிப்படையில் செயற்படவும் ஆரம்பித்தார்.

தேசியம் பற்றிய புரிதல்

ஆனால், இங்கு பிரச்சினை என்வென்றால் தேசியம் பற்றிய புரிதல்தான். விக்னேஸ்வரன் இதுவரையும் நேரடியாக தமிழ்த் தேசியம் என்று கூறவில்லை. ஆனாலும், இன அழிப்பு என்பதையும், வடக்கு – கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வுதான் சரியானது என்பதையும் அவர் வலியுறுத்த ஆரம்பித்துள்ளார். இந்த இடத்தில் தேசியம் பற்றி பேசுகின்ற தமிழர்கள் அவருடன் அணிசேர்ந்து கொண்டனர். தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கமும் அதன் பின்புலத்தில்தான் அமைந்தது என்றும் கூறலாம்.

ஆனால், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சில உறுப்பினர்கள் தேசியம் என்று கூறுவதை விட இலங்கைத் தேசியம் என்ற வரையறைக்குள் நின்றுகொண்டு இனப்பிரச்சினைக்கு தீர்வை காண முற்படுகின்றனர். இதுதான் முரண்பாடு. இது முரண்பாடு என்று சொல்வதை விட 60 ஆண்டுகால அரசியல் போராட்டத்தை காட்டிக்கொடுக்கும் செயற்பாடகவே பேரவை உறுப்பினர்கள் கருதுகின்றனர். விடுதலைப் புலிகளையும் அவர்கள் பேசிய தேசியத்தையும் முன்னொரு காலத்தில் நேரடியாக ஏற்றுக்கொள்ளாத விக்னேஸ்வரன் முதலமைச்சரான பின்னர் ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் சிந்தித்து தேசியம் அல்லாத வேறு சொற்பிரயோகங்கள் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண வேண்டும் என்று கூறுகின்ற அளவுக்கு சம்பந்தனிடம் அந்த ஞானம் இல்லாமல் போய்விட்டதுதான் வேதனை.