படம் | Getty Images, ITNNEWS
புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பாக அரசாங்கம் தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. இனப்பிரச்சினை தீவுக்கான யோசனைகள் அதில் உள்ளடக்கப்பட வேண்டும் அல்லது அது குறித்த சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விட எதிர்காலத்தில் இலங்கை அரசு என்ற கட்டமைப்புக்குப் பாதிப்பில்லாத வகையில் புதிய யாப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுகின்றார் என்பதையே அவருடைய நகர்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் கொழும்புக்கு விஜயம் செய்தபோது பல சந்திப்புக்களில் ஈடுபட்டார். முக்கியமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடனான சந்திப்பின்போது சமந்தா பவர் இலங்கையின் எதிர்கால அமைதி குறித்து பேசியிருக்கின்றார். அந்த இடத்திலேதான் புதிய அரசியலமைப்பு தொடர்பான பேச்சை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளக்கியுள்ளார். ஆனால், இனப்பிரச்சினை தீர்வுக்கான நிரந்தர அரசியல் தீர்வு என்ற பேச்சை விட புதிய யாப்பின் மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு வந்து விடும் என்ற நம்பிக்கையை ரணில் விக்கிரமசிங்க கூறியதுடன், அந்த விடயத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைக்கும் என்ற செய்தியையும் சொல்லியிருப்பதாகத் தகவல்.
ஆகவே, சமந்தா பவரின் வருகையுடன் இரண்டு விடயங்கள் தெளிவாகியுள்ளன. ஒன்று, தமிழ் மக்கள் எதிர்ப்பார்க்கும் வடக்கு – கிழக்கு மாகாணம் இணைந்த சமஸ்டி ஆட்சி முறையிலான தீர்வு இல்லை என்பது. இரண்டாவது, சிங்கள அரசியல் கட்சிகளை திருப்திப்படுத்தி தமது புவிசார் அரசியல் பொருளாதார நலன்களை முன்கொண்டு செல்லும் அமெரிக்காவின் திட்டம். இந்த இரு விடயங்களும் தமிழ்த் தரப்பினுடைய அரசியல் நியாயப்பாடுகள் நல்லாட்சி அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்ற முடிவுக்கு வரலாம். அதாவது, முந்தவரை அரசாங்கத்துடனும் நடைமுறை அரசியல் யாப்பில் உள்ள சட்ட திட்டங்களுடனும் இணைந்து போக வேண்டும் என்ற செய்தியை சமந்தா பவர் மூலமாக ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களுக்குச் சொல்லியிருக்கின்றார் என்றும் கூறலாம்.
மங்கள சமரவீர நண்பனா?
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்த சமந்தா பவர், அரசாங்கத்துடன் இணங்கிச் செல்ல வேண்டும் என்று ஆலோசனை கூறியிருக்கின்றார். அதேவேளை, வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தனது நண்பன் என்றும், புரிந்து செயற்படும் ஒருவர் என்றும் தனது ருவிட்டர் தளத்தில் கூறியிருக்கின்றார். ஏனைய அரசியல் கட்சிகளும் சமாதானத்தை விரும்புவதாகவும் சமந்தா பவர் செய்தியாளர்களிடம் கூறியிருக்கின்றார். ஆக, தமிழ்த் தரப்பு மாத்திரமே தற்போது பிரச்சினை என்ற தொனியில் அவருடைய பேச்சுகள் அமைந்துள்ளன. ஆகவே, 30 ஆண்டுகால அஹிம்சை போராட்டமும் அதற்கு அடுத்த 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டமும் தேவையற்றவை, 60 ஆண்டுகால அரசியல் போராட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கருத்தின் அடிப்படையில் அமெரிக்கா செயற்படுகின்றது என்று கூறலாம். அத்துடன், இனப்படுகொலை என்ற விடயத்தை மூடிமறைக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு உள்ளது என்பதையும் சமந்தா பவருடைய வருகை நிரூபித்துள்ளது.
தற்போதைய அரசியல் சூழலில் தென்பகுதி சிங்கள அரசியல் கட்சிகளை பொறுத்தவரை அரசியல் வேறுபாடுகளுக்கு மத்தியிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, படை உயர் அதிகாரிகள் ஆகியோரின் புலிகள் தொடர்பான வேலைத் திட்டங்களை தேசிய நடவடிக்கையாகக் கருதி நல்லாட்சி அரசாங்கம் செயற்பட வேண்டும் என்ற நோக்கம் உள்ளது. அத்துடன், சர்வதேச தலையீடுகளை முற்றாக தவிர்த்து போர்க்குற்ற விசாரணையையும் நிறுத்த வேண்டும் என்ற யோசனையும் சிங்கள அரசியல் கட்சிகளிடையே காணப்படுகின்றது. வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல புலிகள் தொடர்பான நிலைப்பாட்டில் மஹிந்த ராஜபக்ஷ பின்பற்றிய சில நடைமுறைகளை நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும் என்று உறுதியளித்துள்ளார்.
பௌத்த தேசியவாதம்
மஹிந்த ராஜபக்ஷவுடன் அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் போர்க்குற்ற விசாரணை மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் போன்ற விடயத்தில் சர்வதேச அணுகுமுறைகள் அவசியமற்றவை என்பதுதான் பௌத்த தேசியவாதத்தின் கருத்து. ஆகவே, அந்த கண்ணோட்டத்தில் புதிய அரசாங்கம் செயற்படவேண்டிய கட்டாய நிலைமை. இதன் காரணமாகவே ஜெனிவா மனித உரிமை பேரவையின் விசாரணைகளை முற்று முழுதாக நிறுத்தக் கூடிய வல்லமை புதிய அரசாங்கத்திடம் வலிந்து உருவாக்கப்பட்டது எனலாம். பௌத்த மதகுருமாரின் யோசனைகளை ஏற்று செயற்பட வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு உண்டு என வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர சமந்தா பவருடன் நடத்திய சந்திப்பில் கூறியிருக்கின்றார். அத்துடன், ஜெனீவா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை சர்வதேச ஆதரவு இன்றி நடைமுறைப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டிருக்கின்றார்.
அதேவேளை, ஜெனீவா மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகள் அல்லது வேறு சர்வதேச பொது அமைப்புகள் இனப்படுகொலை என்பதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், அந்த விடயத்தை எவ்வாறு நிறுத்துவது என்பது குறித்தும் அமைச்சர் மங்கள சமரவீர சமந்தா பவருடன் பேசியதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. ஆகவே, சமந்தா பவரின் வருகையின் பின்னர் இனப்படுகொலை என்பதை எற்றுக்கொள்ளத் தயாராகவுள்ள நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாடுகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டு வருவதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
புரிந்துகொண்ட சமந்தா பவர்
அதற்கு வசதியாக இனப்படுகொலை எனக் கூறி வரும் வட மாகாண சபையை கலைத்து புதிய தேர்தலை நடத்தி தமக்குச் சாதமான ஒருவரை முதலமைச்சராக நியமிப்பதற்கும் பிரதமர் முற்படுகின்றார் என்றும் அறிய முடிகின்றது. ஆனால், இந்த அணுகுமுறை சாத்தியப்படக்கூடியதல்ல. ஆனாலும், சம்பந்தன் – சுமந்திரன் ஆகியோர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் முக்கிய பங்காற்றுவதனால் அந்த இருவரின் ஆதரவின் மூலமாக மேற்படி அணுகுமுறையை நகர்த்தலாம் என்று பிரதமர் யோசிப்பதாகவும் தகவல். ஆகவே, முடிந்த வரை சர்வதேச நாடுகளுக்கு இலங்கைத் தேசியம் என்பதை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து நல்லாட்சி அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது என்பதையே சமீபகால நர்வுகள் கோடிகாட்டுகின்றன.
சர்வதே நாடுகள் இலங்கை என்ற சிறிய அரசை பிளவுபடுத்த முற்படுகின்றன என்பதுதான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குற்றச்சாட்டு. இனப்படுகொலை என்பதை அமெரிக்கா கூட தமக்குச் சாதகமாக பயன்படுத்தலாம் என்ற கருத்தை மஹிந்த ராஜபக்ஷ அணி ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் கூறி வருகின்றது. அதனை பௌத்த தேசியவாதமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால்தான் நல்லாட்சி அரசாங்கமும் பௌத்த தேசியவாதிகளை திருப்திப்படுத்த வேண்டிய கட்டாய நிலமைக்குள் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலைமையை அமெரிக்கா புரிந்து செயற்படுகின்றது என்பதையே சமந்தா பவருடைய கருத்துக்களும் கோடிட்டு காட்டுகின்றன.