படம் | SLGUARDIAN

சில தினங்களுக்கு முன்னர் ஜக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து அமெரிக்க உயர்மட்டத்தினர் பலர் இலங்கைக்கு விஜயம் செய்வது ஒரு சாதாரண விடயமாகிவிட்டது. இதன் உச்சமாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் விஜயம் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இலங்கைக்கு விஜயம் செய்யக் கூடுமென்னும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாயிருந்தன. நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்று புதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்னர் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஸா பிஸ்வால் தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர். இது இலங்கையின் மீது அமெரிக்கா எவ்வாறானதொரு ஆர்வத்தைக் கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக எடுத்தியம்பியது.

இதனைத் தொடர்ந்து தற்போது ஜக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவரின் விஜயம் நிகழ்ந்துள்ளது. சமந்தா பவர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமிற்கு நெருக்கமானவர். ஏனெனில், அவர் ஒபாமா செனட்டராக இருந்த காலத்தில் அவரது ஆலோசகராக செயற்பட்டவர், ஒபாவிற்கான தேர்தல் பிராச்சாரங்களில் ஈடுபட்டவர். இனப்படுகொலை பற்றிய விவகாரங்களில் நிபுணத்துவம் வாய்ந்த பவர் எழுதியிருக்கும் A Problem from Hell: America and the Age of Genocide என்னும் நூல் இவரது புலமைக்குச் சான்றாகக் கொள்ளப்படுகிறது. எனவே, இலங்கையில் பவரை சந்தித்தவர்கள் எவரும் இனப்படுகொலை தொடர்பில் அவருக்கு வகுப்பெடுத்திருக்க முடியாது, ஒருவேளை அவர் வகுப்பெடுத்திருக்கலாம். பவர், வழமைபோல் இலங்கையின் ஆட்சியாளர்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் கூடவே வடக்கு மாகாண சபை முதலமைச்சரையும் சந்தித்து, பல்வேறு விடயங்களை வழமைபோல், உரையாடிச் சென்றிருக்கிறார். பவருடனான சந்திப்பின்போது, எவ்வாறான விடயங்கள் பேசப்பட்டன? அவர் எவ்வாறான விடயங்களை தெரிவித்திருந்தார்? போன்ற விடயங்கள் ஆங்காங்கே துண்டுகளாக வெளிவந்திருக்கின்றன. சாரம்சத்தில், இலங்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை அவர் வரவேற்றிருக்கும் அதே வேளை, நிலுவையிலுள்ள விவாகரங்களிலும் அரசாங்கம் கவனம் கொள்ள வேண்டுமென்பதையும் அவர் வலியுறுத்திருக்கின்றார். ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது பவர் இராணுவ மறுசீரமைப்பு மற்றும் அதற்கான அமெரிக்க ஒத்துழைப்புகள் தொடர்பிலும் பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. பவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து தலைவர்களையும் உள்ளடக்கிய குழுவினரை சந்திருக்கின்றார். கூட்டமைப்புக்குள் நிலவும் கருத்து முரண்பாடுகளை விளங்கிக் கொண்டு அமெரிக்க தூதரகமே இவ்வாறானதொரு ஏற்பாட்டை செய்ததா? அல்லது சம்பந்தன் நிலைமைகளை விளங்கிக் கொண்டு இப்படியானதொரு ஏற்பாட்டை செய்தாரா? – தகவலை சரியாக அறியமுடியவில்லை. கூட்டமைப்பின் தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் கூட்டமைப்பின் சார்பில் வெளிவிவகாரங்களைக் கையாளும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை பவர் தனியாக சந்தித்து கலந்துரையாடியதாகவும் தகவல்கள் உண்டு. அமெரிக்க இராஜதந்திர வட்டாரங்களில் நம்பகத்தன்மையை வென்றிருக்கும் ஒருவராக சுமந்திரன் இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

இங்கு விடயம் எந்தவொரு தனிநபர்கள் பற்றியதல்ல. இன்று சமந்தா பவர் வந்து சென்றது போன்று, இதற்கு முன்னரும் பலர் வந்து சென்றிருக்கின்றனர். ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் செய்து சென்றிருக்கும் அமெரிக்க இராஜதந்திரிகள் கூறிச் செல்லும் ஒரு தெளிவான விடயம் இருக்கிறது. அதாவது, மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், இன்னும் சில முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டுமென்பதை ஏற்றுக் கொள்ளலாம் என்பதே அவர்கள் வெளிப்படுத்திநிற்கும் பொது அபிப்பிராயம். இதுவே இலங்கை தொடர்பான அமெரிக்க அவதானம். இந்த அவதானம் சரியானதே! ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து மேற்குலகம் அவ்வாறானதொரு அபிப்பிராயத்தையே கொண்டிருக்கிறது. தமிழ்ச் சூழலில் இதற்கு மாறான அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவோரை அவர்கள் சாதகமான தரப்புக்களாகவும் நோக்குவதில்லை.

இந்த புதிய நிலைமையை தமிழர் தரப்புகள் எவ்வாறு உற்றுநோக்குகின்றன? அண்மைக்காலமாக தமிழர் அரசியலில் இந்தியா இருக்கிறதா என்று ஒருவர் கேட்குமளவிற்கு அமெரிக்கா உச்சரிக்கப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் புலம்பெயர்ந்து வாழும் ஒரு பத்திரிகையாளர் என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, இப்ப கூட்டமைப்பார் கொஞ்சம் இந்தியாவிலிருந்து விலகித்தானே போறாங்கள். நிலைமைகளை பார்த்தால் அப்படித்தானே தெரியுது என்றார். உண்மையில் நிலைமைகளைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. ஆனால், அது ஒரு மேற்தோற்றம் என்பதே இப்பத்தியாளரின் துனிபு. சமந்தா பவர் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் புதுடில்லிக்குச் சென்று, அங்கு கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தார் என்பதை இந்த இடத்தில் நோக்கலாம். இந்தியாவை பொறுத்தவரையில், அது ஏற்கனவே தமிழர் விவகாரம் தொடர்பில் ஒரு தெளிவான எல்லைக் கோட்டை கீறியிருக்கிறது. அது தொடர்பில் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சவுத்புளொக் அதிகாரிகள் வலியுறுத்தத் தவறுவதில்லை. அதுதான் 1987 இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழான மாகாண சபை முறைமை. இதனைத் தாண்டியும் புதிய அரசாங்கத்தால் இலங்கைக்குள் ஒரு சிறந்த தீர்வுமுறையை காண முடியுமெனின், அதற்கும் இந்தியா ஒரு தடைக்கல்லாக இருக்கப் போவதில்லை. ஆனால், இந்தியா தொடர்பில் தெற்கின் கடும்போக்குவாதிகள் மத்தியில் ஏற்கனவே ஒரு அச்சம் நிலவுகின்றது. ஆட்சி மாற்றத்தின் பின்னால் இந்திய உளவுத்துறை இருந்ததான ஒரு கருத்தும், தெற்கின் சிங்கள தேசியவாத தரப்புக்கள் மத்தியில் நிலவுகின்றன. இவ்வாறானதொரு சூழலில் இந்தியா எட்ட இருப்பதை ஒரு உபாயமாக கருதியிருக்கலாம். ஆனால், இந்தியாவின் கரிசனைகளை மீறி அமெரிக்கா இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்ய முற்படும் என்னும் வாதம் வலுவற்றது. ஏனெனில், இன்றைய புதிய உலக ஒழுங்கில் அமெரிக்க – இந்திய இருதரப்பு ஒத்துழைப்பு என்பது முக்கியமானது. அமெரிக்க வெளிவிவகார ஆய்வாளர்களின் கருத்தில் இந்தியா என்பது அமெரிக்காவினால் தவிர்த்துச் செல்ல முடியாத, இன்றியமையாப் (An Indispensable Partners) பங்காளியாகும். இவ்வாறானதொரு சூழலில் இந்தியாவின் உடனடி அயல்நாடான இலங்கையின் மீதான அமெரிக்க கரிசனையும், இந்திய கரிசனையும் ஒரு புள்ளியில்தான் சந்திக்கும். ஒரு சில தமிழ் நோக்கர்களிடம் பிறிதொரு அபிப்பிராயம் நிலவுகிறது. கூட்டமைப்பிலுள்ள ஒரு சில அரசியல் தலைவர்களிடமும் அப்படியானதொரு கருத்துண்டு. அதாவது, அமெரிக்கா, இலங்கை விவகாரங்களில் அதிகம் ஆர்வம் காட்டுவதை இந்தியா ஒரு கட்டத்திற்கு மேல் விரும்பாது. இந்தியா தனித்து ஓடவே முயலும். இப்படியான தனித்த ஓட்டங்கள் ஒவ்வொரு பலம்பொருந்திய அதிகாரங்களுக்கும் உண்டு. எனவே, அப்படியொரு தனி ஓட்டம் இந்தியாவிற்கும் உண்டுதான். ஆனால், அப்படியானதொரு தனி ஓட்டத்தை தமிழர் தரப்பை கருத்தில் கொண்டுதான் செய்ய வேண்டுமென்பதில் என்ன கட்டாயம் உண்டு?

தமிழர் தரப்பின் பிரச்சினையை ஒரு வரியில் சொல்வதானால், எங்களிடம் கனவுகள் இருக்கின்றன. ஆனால், அதற்கான காரியங்கள் இல்லை. சர்வதேச விவகாரங்களை முழுநேரமாக கவனிப்பதற்கு எங்களிடம் சிந்தனையாளர் குழுமங்கள் இல்லை. இதன் காரணமாக அனைத்துக்கும் விளக்கமளிப்பவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களே காணப்படுகின்றனர். உண்மையில் 2009இற்கு பின்னரான காலம், அதன் பின்னர் மஹிந்தவின் ஆட்சிக்காலம், அதன் பின்னரான ஆட்சி மாற்றம் – இது ஒவ்வொன்றின் போதும் உலகம் இலங்கை தொடர்பில் எவ்வாறு எதிர்வினையாற்றியது? இப்படியான விடயங்கள் தொடர்பில் எங்கள் மத்தியில் ஆரோக்கியமான உரையாடல்கள் இல்லை. ஆட்களுமில்லை!

அண்மையில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் தேசிய நலன் (The National Interest) என்னும் சஞ்சிகை, அதன் 30ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு உலகளவில் இயங்கும் 25 முக்கியமான சிந்தனையாளர்களிடம் ஒரு கேள்வியை கேட்டு, அவர்கள் வழங்கிய பதில்களை தொகுத்து வெளியிட்டிருந்தது. அந்தக் கேள்வி இதுதான் – அமெரிக்க அதிகாரத்தின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? (What Should Be the Purpose of American Power?) இந்தக் கேள்விக்க்கான அனைத்து பதில்களும் ஒரு நாட்டை மையப்படுத்தியதாகவே இருந்தது. அந்த நாடு சீனாவாகும். சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்துவது எவ்வாறு அல்லது எழுச்சியடைந்துவரும் சீனாவுடன் எவ்வாறு உறவை ஏற்படுத்திக் கொள்வது? என்னும் பொருளிலேயே அனைவரும் பதலிளித்திருந்தனர். அந்த சீனாவை நோக்கி முற்றிலுமாக இலங்கை சாய்ந்துவிடக் கூடியதொரு சூழலில்தான் இலங்கையில் ஆட்சி மாற்றமொன்று ஏற்பட்டது. அவ்வாறானதொரு பின்புலத்தில் உலகில் எங்குமே நடந்திராத ஆச்சரியமாக எதிரும் புதிருமான இரண்டு பிரதான சிங்கள கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்திருக்கின்றன. எனவே, இப்படியொரு ஆட்சியை பலவீனப்படுத்தும் வகையில் அமெரிக்காவோ அல்லது இந்தியாவோ செயற்படுமா? சரி அப்படியே செயற்பட வேண்டுமாயின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களால் அவர்களது தேசிய நலனுக்கு கிடைக்கப் போகும் நன்மை என்ன? இந்த இடத்தில் இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது சமந்தா பவரின் இலங்கை விஜயம் தொடர்பில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அவ்வப்போது கருத்துத் தெரிவிக்கும் பேராசியிர் பிரான்சிஸ் போயல், சமந்தா, இனப்படுகொலை நாடான இலங்கையை புனரமைக்கும் (Rehabilitates Genocidal Sri Lanka) நோக்கில் விஜயம் செய்திருந்தாரா என்று விமர்சித்திருக்கின்றார். ஆனால் நான் மேலே குறிப்பிட்ட தகவல்களோடு ஒப்பிட்டு இதனை விளங்கிக் கொள்வதனால் போயல் ஏதோ சொல்கிறார் என்னும் நமட்டுச் சிரிப்புடன் உலகம் நகர்ந்துவிடும். எனவே, தற்போது தமிழர் தரப்பு இவ்வாறான விடயங்களை தொகுத்து எவ்வாறு உற்றுநோக்கப் போகிறது. உலக விடயங்களை வெறும் தனிநபர் வழிபாடுகளாலும் அல்லது தனிநபர் குரோதங்களாலும் எதிர்கொள்ள முடியாது. இது தொடர்பில் எமக்கு நல்ல படிப்பினையும் இருக்கிறது. எனவே, ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் சூழலை மிகுந்த நிதானத்துடன் கணிக்க வேண்டியது அவசியம்.