படம் | LAKRUWAN WANNIARACHCHI/ AFP, Stratfor
சில நாட்களாக தமிழ் அரசியல் கொஞ்சம் சூடுபிடித்திருக்கிறது. அந்தச் சூடு தணிந்தவிடாமலும் இருக்கிறது. இதற்கு காரணம் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியில் சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் நோக்கப்படுபவருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துகள் தொடர்பிலும் பின்னர், அதற்கு பதிலளிக்கும் வகையில் விக்னேஸ்வரன் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பதுமே மேற்படி சூடான தமிழ் அரசியலுக்குக் காரணம். இவ்வாறான வாதப்பிரதிவாதங்களால் தமிழ் மக்கள் அடையப்போகும் நன்மை என்ன என்பதற்கு அப்பால், இவ்வாறான உள்ளக வாதப்பிரதிவாதங்களின் இறுதி நன்மையை அறுவடைய செய்யப்போவது தென்னிலங்கை அரசியல் சக்திகள் என்பதே உண்மை. இந்தப் பத்தி எவர் மீதும் விரல் சுட்ட முயலவில்லை. மாறாக இடம்பெறும் வாதப்பிரதிவாதங்களையும் அதன் இறுதி விளைவையும் ஆராய முற்படுகின்றது.
முதலில் சுமந்திரன் கூறிய கருத்துகளை பார்ப்போம். சுமந்திரன், அண்மையில் அவுஸ்திரேலிய வானொலி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில், விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து இடைநிறுத்த வேண்டுமென்று தான் கட்சியிடம் வலியுறுத்தியிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். தனது வாதத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் சுமந்திரன் சில காரணங்களையும் குறிப்பிட்டிருந்தார். அதாவது, விக்னேஸ்வரன் கடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக செயற்படவில்லை என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கட்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார் என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த சுமந்திரன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தேர்தல் நிதி சேகரிப்பிற்காக கனடா செல்லுமாறு கட்சி விடுத்திருந்த கோரிக்கையையும், விக்னேஸ்வரன் நிராகரித்து செயற்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் விக்னேஸ்வரன் விரிவான பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். அதில் அவர் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசியிருக்கின்றார். குறிப்பாக தன்னை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்னும் சுமந்திரனின் கருத்துக்குப் பதிலளித்திருக்கும் அவர், இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள அனைத்து கட்சிகளும் அழைத்ததன் பேரிலேயே தான் அரசியலுக்குள் வந்ததாக குறிப்பிட்டிருக்கின்றார். மேலும், அனைத்து கட்சிகளின் ஆதரவுடனேயே கடந்த மாகாண சபைத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றதாகவும் பதலளித்திருக்கின்றார். இதன் மூலம் விக்னேஸ்வரன் ஒரு விடயத்தை தெளிவுபடுத்தியிருக்கின்றார் அதாவது, தமிழசு கட்சி சார்பில் சம்பந்தனோ அல்லது வேறு எவரோ தன்னை கட்டுப்படுத்த முடியாது.
ஆனால், சுமந்திரன் கூறும் விடயம் பிறிதொரு கோணத்தில் நோக்க வேண்டியது. இதனை நீதியரசரான விக்னேஸ்வரனும் நன்கு அறிவார். வடக்கு மாகாண சபை தேர்தலில் விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட போதிலும் கூட, சட்டரீதியாக அவர் தமிழரசு கட்சியின் கீழ்தான் போட்டியிட்டிருந்தார். எனவே, கட்சி என்று வரும்போது சட்டரீதியில் தமிழரசு கட்சியே முன்னுக்கு நிற்கும். இதனை கருத்தில் கொண்டுதான் சுமந்திரன் விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்குமாறு கட்சியிடம் வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டிருக்கின்றார். சுமந்திரன் கூறும் கட்சி கூட்டமைப்பல்ல, அது இலங்கை தமிழரசு கட்சி. இங்கு பிறிதொரு விடயத்தையும் கவனத்தில் கொள்ளலாம் அதாவது, தற்போது சுமந்திரன் மற்றும் விக்னேஸ்வரனுக்கு இடையில் இடம்பெறும் சொற்போர் தொடர்பில் மாவை கருத்து வெளியிட்டிருக்கின்றார். கட்சிக்குள் தீர்த்துக் கொள்ள வேண்டிய விவகாரத்தை பகிரங்கமாக விவாதிக்க வேண்டாமென்று வேண்டுகோள் விடுத்திருக்கும் மாவை, உள்முரண்பாடுகளை ஊடகங்களில் விவாதிக்கும் தருணம் இதுவல்ல என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால், இதிலுள்ள வேடிக்கை கடந்த ஜந்து வருடங்களாக கூட்டமைப்பின் உள்முரண்பாடுகள் பகிரங்க தளத்தில்தான் விவாதிக்கப்பட்டுவருகிறது என்பதே! மேலும், இன்று நிலைமைகள் மோசமடைவதால் அச்சத்தின் விளிம்பில் நிற்கும் மாவைதான், முதன் முதலாக விக்னேஸ்வரன் தொடர்பில் பகிரங்கமாக பேசியுமிருந்தார். இதன் பின்னர்தான் விக்னேஸ்வரனுக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைக்கும் இடையில் ஒரு இடைவெளி இருக்கிறது என்னும் தகவலை ஊடகங்கள் மோப்பம் பிடித்துக்கொண்டன.
இன்று அதே மாவை விடயங்களை கட்சிக்குள் பேசித்தீர்த்துக் கொள்ள முடியுமென்று அறிவுரை கூறுகின்றார். இது ஒரு சுடலைஞான அரசியல். உண்மையில் விடுதலைப் புலிகள் இருக்கும் வரையில் அவர்களது நிகழ்சிநிரலுக்குள் கரைந்துகிடந்த கூட்டமைப்பானது, 2009இற்குப் பின்னர் தங்களுக்குள் மோதிக் கொள்வதையே தங்களின் பிரதான அரசியல் இலக்காகக் கொண்டு செயற்பட்டது. இதன் விளைவாக பிரபாகரனால் வழிநடத்தப்பட்ட கூட்டமைப்பிற்குள் அதுவரை எந்த முரண்பாடுகளுமின்றியிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார். அப்போது மாவை, பிரச்சினைகளை கட்சிக்குள் பேசித் தீர்த்துக் கொள்வோம், நாங்கள் ஒன்றாக செயற்படுவோம் என்று கஜேந்திரகுமாரிடம் சொன்னதாகத் தகவலில்லை. பின்னர் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகள் ஒவ்வொரு தேர்தலின் போதும் ஆசன ஒதுக்கீடுகள் தொடங்கி, அரசியல் விடயங்கள் ஈறாக, ஒவ்வொரு விடயங்களிலும் பகிரங்க தளத்தில் முரண்பட்டுநின்ற போது ஒரு மூத்த தலைவர் என்னும் வகையில் அனைவரையும் ஒன்றுபடுத்தும் நோக்கில் கட்சிக்குள் மாவை ஒருபோதும் போராடியதில்லை. இப்படியான மாவை, இப்போது கடசி பற்றி பேசுவதை எவர் செவிசாய்ப்பார்? மாவையின் கருத்துக்களை சுமந்திரனோ அல்லது விக்னேஸ்வரனோ பொருட்படுத்தமாட்டார்கள் என்பதை மாவை நன்கறிந்திருந்தும் கூட, தான் கட்சியின் தலைவர் என்று அறியப்படுவதால் ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசியிருக்கிறார் போலும்.
விக்னேஸ்வரன் தற்போது வெளியிடடிருக்கும் அறிக்கையிலிருந்து அவர் தமிழரசு கட்சியின் தலைமையிலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டார் என்பது வெள்ளிடைமலை. எனவே, இனி அவர் இறங்கி வரப்போவதில்லை. இந்த நிலையில், தமிழரசு கட்சியால் செய்யக் கூடியது ஒன்றுதான். அதாவது, கூட்டமைப்பில் தமிழரசு கட்சிக்கு இருக்கும் சட்டரீதியான தகுதியை கொண்டு விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்குவதாக கட்சிக்குள் முடிவு எடுக்கலாம். ஆனால், அவ்வாறானதொரு முடிவுக்கு சம்பந்தன் ஆதரவளிப்பாரா என்பது சந்தேகமே! தனது அறிக்கையில் உட்கட்சி ஜனநாயகமே கட்சியை வளர்ச்சி பாதையில் இட்டுச் செல்லும் என்று குறிப்பிட்டிருக்கும் விக்னேஸ்வரன் ஒரு சிலரின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு தன்னால் கட்டுப்பட முடியாது, அவ்வாறு கட்டுப்பட்டுச் செல்வதானது தனக்கு வாக்களித்த மக்களுக்கு தீங்கு செய்வதாகிவிடும் என்பதுதான் விக்னேஸ்வரனின் நீண்ட பதிலின் சாரம். விக்னேஸ்வரன் முன்கொண்டு வந்திருக்கும் சில விடயங்கள் சுமந்திரன் மற்றும் சம்பந்தனை பொறுத்தவரையில் பாரதூரமானது. அரசியல் விவகாரம் தொடர்பில் அரசுடனான சிங்கப்பூர் பேச்சுவார்த்தை, ரணில் விக்கிரமசிங்கவுடனான தொடர்புகள் மற்றும் எவரது கருத்தறியாமல் சுமந்திரனால் தயாரிக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞானம், இப்படியான பல விடயங்கள் தொடர்பில் விக்னேஸ்வரன் எழுப்பியிருக்கும் கேள்வி, நிச்சயம், தமிழ் தரப்பினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும். இப்பத்தியாளருக்கு கிடைக்கும் தகவல்களின் படி, குறித்த அறிக்கைக்குப் பின்னர் விக்னேஸ்வரன் தொடர்பான மக்கள் அபிப்பிராயம் யாழ்ப்பாணத்தில் உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆக, மொத்தத்தில் விக்னேஸ்வரனின் மக்கள் செல்வாக்கு வடக்கில் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது.
ஆனால், இங்கு எழும் கேள்வி, விக்னேஸ்வரன் சில விடயங்கள் தொடர்பில் பகிரங்கமாகப் பேசுகின்றார். அவர் பேசுகின்ற விடயங்கள் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் தரப்பின் அரசியல் அணுகுமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகவே இருக்கிறது. ஆனால், விக்னேஸ்வரனின் நிலைப்பாடு தொடர்பில் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகள் எவ்வாறான கருத்தொற்றுமையை கொண்டிருக்கின்றன? விக்னேஸ்வரனின் தலைமையின் கீழ் ஒரு கூட்டமைப்பாக செயற்படும் எண்ணத்தை ஏனைய கட்சிகள் கொண்டிருக்கின்றனவா? நிலைமைகளை உற்றுநோக்கினால் ஏற்கனவே ஒரு கூட்டமைப்பாக இருந்தாலும் கூட கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளான புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ மற்றும் தமிழரசு கட்சியிலுள்ள அதிருப்தியாளர்கள் ஆகியோர் தமிழரசு கட்சியின் தலைமையுடன் கருத்தொற்றுமையை கொண்டிருக்கவில்லை. மாறாக கடுமையான முரண்பாடுகளையே கொண்டிருக்கின்றனர். இது ஒன்றும் இரகசியமுமல்ல. இந்த நிலையில், விக்னேஸ்வரனுடன் ஏனைய மூன்று கட்சிகளும் மேலும் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஓரணியில் நிற்குமா?
இப்படியான கேள்வி இன்று பலர் மத்தியில் எழுந்திருக்கிறது. சம்பந்தன் மற்றும் சுமந்திரன் தரப்பிற்கான மாற்று தலைமைத்துவம் ஒன்றை வழங்கும் எண்ணம் விக்னேஸ்வரனுக்கு இருக்கிறதா என்பதற்கு அப்பால், அவ்வாறானதொரு தலைமைத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்னும் ஒத்த கருத்துள்ள கட்சிகள் விக்னேஸ்வரனின் கீழ் அணிதிரள வாய்ப்பிருக்கிறதா? கூட்டமைப்பிலுள்ள மேற்குறிப்பிட்ட மூன்று கட்சிகளும் விக்னேஸ்வரன் – சுமந்திரன் முரண்பாடு தொடர்பில் பகிரங்கமாக இதுவரை எந்தவிதமான கருத்தினையும் தெரிவித்திருக்கவில்லை. ஆனால், கூட்டமைப்பிலுள்ள ஒரு சில கட்சிகள் விக்னேஸ்வரனுடன் சில விடயங்கள் தொடர்பில் உரையாடிவருவதாக தகவல்கள் உண்டு. ஆனால், இந்த விடயங்கள் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலின் போது வெளிப்படலாம் என்பதும் சிலரது கருத்து. உண்மையில் இந்த விடயங்களில் தலையீடு செய்ய வேண்டிய சம்பந்தன் அமைதியாக இருந்ததால், இனி தலையீடு செய்தாலும் பயனில்லை என்னும் நிலைமை தற்போது உருவாகிவிட்டது.
இதில் மாற்றம் இரண்டு நிலையில்தான் ஏற்பட முடியும். ஒன்றில், விக்னேஸ்வரன் தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து கீழறங்கி, சம்பந்தன் – சுமந்திரன் தரப்பிடம் பணிந்து போக வேண்டும் அல்லது சுமந்திரன் மற்றும் சம்பந்தன் ஆகியோர் விக்னேஸ்வரனுடன் ஒத்துப்போக வேண்டும். ஆனால், இவையிரண்டிற்கும் வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. எனவே, மூன்றாவது ஒரு நிலையிருக்கிறதென்றால் அது, விக்னேஸ்வரன் தலைமையின் கீழ் ஒரு புதிய கூட்டமைப்பு உருவாகுவதுதான். ஆனால், அப்படியொரு தலைமைத்துவத்தை வழங்க விக்னேஸ்வரன் தயார் நிலையில் இருக்கிறாரா என்பது ஒரு கேள்வி, அப்படியானதொரு எண்ணத்தில் அவரை பலப்படுத்தும் தயார் நிலையில் ஏனைய கட்சிகள் இருக்கின்றனவா என்பது இன்னொரு கேள்வி. ஆனால், இப்படியொரு நிலைமை உருப்பெறுமானால் தமிழ் அரசியல் போக்கில் எற்படும் ஒரு பெரும் உடைவாக அது அமையலாம். ஆனால், சம்பந்தன் தன்னுடைய ஒட்டுமொத்த ஆற்றலையும் பயன்படுத்தி இதனை தடுக்கவே முயற்சிப்பார். மேலும், இதற்காக அவர் சில சமரசங்களையும் மேற்கொள்ளக் கூடும். ஏனெனில், தற்போது இருக்கின்ற கூட்டமைப்பிலிருந்து ஏனைய கட்சிகளின் சார்பிலான ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விக்னேஸ்வரனது நிலைப்பாட்டுடன் இணைவார்களாயின், சம்பந்தன் கூட்டமைப்பின் தலைவர் பதவியை மட்டுமன்றி, எதிர்கட்சித் தலைவர் பதவியையும் இழக்க நேரிடும். இதனையெல்லாம் கணிக்காமல்தான் சுமந்திரன் விக்கியுடன் மோதுகின்றாரா அல்லது விளைவுகளை கணித்தே களமிறங்கியிருக்கிறாரா? அவ்வாறாயின் அவர் கணிக்கும் விளைவு என்ன? அனைத்துக்குமான பதில் விக்னேஸ்வரனின் உறுதியிலும் அவருக்கு ஏனைய கட்சிகள் கொடுக்கப்போகும் ஆதரவின் தன்மையிலும் தங்கியிருக்கிறது. இனி பதில் காலத்திடம்.