படம் | Reuters/Dinuka Liyanawatte, English.RFI
நரேந்திர மோடி புதிய பிரதமராக பதவியேற்றதும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புதுடில்லிக்குச் சென்று சந்தித்தது. பல விடயங்களை பேசியதாகவும் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் நம்பிக்கை இருப்பதாகவும் சந்திப்பின் பின்னர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கூறியிருந்தனர். ஆனால், இன்று வரை எந்தவொரு நகர்வுகளையும் காணமுடியவில்லை. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதும் மூன்று தடவை சந்திப்பு இடம்பெற்றது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. மாறாக, வடக்கு கிழக்கு பகுதிகளில் 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு அரசிடம் இந்திய மத்திய அரசு நேரடியாக உதவியளித்தது. இதைவிட அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் எதுவும் இந்தச் சந்திப்புக்களினால் இடம்பெற்றதாக இல்லை. மாறாக ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற பேச்சுக்கள்தான் தற்போது காணமுடிகின்றது.
13ஆவது திருத்தம்
இந்தியாவின் அழுத்தங்களினால்தான் தேர்தல் நடத்தப்பட்டு இன்று வட மாகாண சபை இயங்குகின்றது என முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஞாபகமூட்டுகின்றார். ஆனால், மாகாண சபையின் செயற்பாட்டுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் விதிக்கப்படும் தடைகள் அல்லது ஜனாதிபதியின் நேரடியான அதிகாரங்களின் குறுக்கீடுகள் தொடர்பாக விக்னேஸ்வரன் இந்திய அரசுக்கு வெளிப்படுத்தினாரா என்பது சந்தேகமே. மாகாண சபையின் குறைபாடுகள் தொடர்பாக கூட்டமைப்பு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு பல தடவை கூறியது என்பது வேறு. ஆனால், 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான காலகட்டத்தல் அரசியல் தீர்வுக்கான ஆரம்பமாகக் கூறப்பட்டு புதிய நிர்வாகமாக அமைக்கப்பட்ட மாகாண சபை செயற்பட முடியாமல் உள்ளது என்ற தனது பார்வையை முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒழங்கு முறையாக வெளிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
ஏனெனில், அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, விக்னேஸ்வரன் விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர் அல்ல என்பதும் தமிழ்த் தேசியம், தமிழ் ஈழம் என்ற கோட்பாடுகளை ஏற்றுக் கொணடவர் அல்ல என்ற கருத்தும் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளிடம் உண்டு. இரண்டாவது, நடைமுறை அரசியலமைப்பில் உள்ள சட்டங்களை கூட அரசு உரிய முறையில் செயற்படுத்த அனுமதிக்கவில்லை என்பதை முதலமைச்சராகவும் முன்னாள் நீதியரசர் என்ற முறையிலும் சுட்டிக்காட்டும் போது அரசினுடைய இனவாத செயற்பாடுகளை வெளிப்படுத்த முடியும். இனப்பிரச்சினை வரலாறு என்பது 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னரானது அல்ல. 1948ஆம் ஆண்டில் இருந்து இனப்பிரச்சினையின் வரலாற்றை ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது. ஆகவே, 1948ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சோல்பரி அரசியலமைப்பில் இருந்து தற்போது நடைமுறையில் உள்ள இரண்டாம் குடியரசு அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தம் வரை தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளை விக்னேஸ்வரன் எடுத்துக் கூறும்போது அதற்கான பெறுமதி அதிகமாக இருக்கும்.
முதலமைச்சர் பதவி மாத்திரமல்ல
1920ஆம் ஆண்டு இலங்கைத் தேசிய இயக்கத்தின் பிளவுடன் இன முரண்பாடு தோன்றியதாக அரசியல் விஞ்ஞானத் துறை பேராசிரியர் ஏ.ஜே. வில்சன் தனது நூலில் கூறியுள்ளார். தந்தை செல்வா காலத்தில் நடத்தப்பட்ட அஹிம்சைப் போராட்டம் ஏன் தோல்வி கண்டது, அதன் பின்னர் இளைஞர்கள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள் என்பதை இதுவரை காலமும் தமிழ் அரசியல்வாதிகள் தான் கூறிவந்தனர். அதன்காரணத்தினால்தான் என்னவோ அவை தமிழ் இனவாத கருத்துக்களாக பார்க்கப்பட்டன. இன்றும் அவ்வாறான நிலைமைகள் தான் உண்டு. தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தற்போதைய அரசியல் செயற்பாடுகளையும் கூட புலிகளின் தொடர்ச்சியான அரசியலாகவே தென்பகுதி சிங்கள அரசியல் கட்சிகளும், ஏன் சர்வதேச சமூகமும் பார்க்கின்றது. ஆனால், புலிகள் இயக்கம் தோன்றுவதற்கு முன்னரே இருந்த இன முரண்பாடு ஆரம்பித்து விட்டது, தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது என்பதை அவர்கள் ஏற்பதாக இல்லை.
அந்தளவுக்கு ஜே.ஆர். காலத்தில் இருந்து இன்றைய மஹிந்த ராஜபக்ஷ அரசு வரை, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு தமிழர்களுடைய அரசியல் கோரிக்கைகள் பயங்கரவாதமாக சித்தரித்திருக்கப்பட்டு வந்துள்ளன. 1948இல் இருந்து இலங்கையின் வெளியுறவுக் கொள்கையும் அவ்வாறு அமைந்துள்ளது. ஆகவே, விக்னேஸ்வரனுக்கு பாரிய பொறுப்பு ஒன்று உள்ளது. வெறுமனே வட மாகாண சபையின் முதலமைச்சர் மாத்திரமல்ல, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கு வரலாற்று ரீதியாக இழைக்கப்பட்ட அநீதிகளை இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்குச் சொல்ல வேண்டிய ஒரு தேவை உள்ளது. சாதாரண தமிழ் தேசிய அரசியல்வாதி என்ற கருத்தில் இருந்து விலகி இலங்கையின் முன்னாள் நீதியரசர் என்ற முறையிலும், முதலமைச்சர் என்ற ரீதியிலும் இலங்கையின் அத்தனை அரசியலமைப்புச் சட்டங்களையும் நன்கு தெரிந்தவர் என்ற முறையில் விளக்கமளிக்கும்போது அது ஏற்புடையதாகவே அமையும். அதனை தமிழ் இனவாத கருத்து என்று யாரும் முத்திரை குத்த முடியாது. ஏனெனில், அரசியல் யாப்பு ரீதியாக தமிழ் மக்கள் எவ்வாறு பழிவாங்கப்பட்டிருக்கின்றனர் என்பதை ஒரு சட்டப் புலமையாளன் வியாக்கியானம் செய்தும்போது அதில் நியாயம் இருக்கும்.
சம்பந்தன் கூறியது
புலிகள் நிராகரித்தார்கள் என்பதை விட இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13ஆவது திருத்தச்சட்டம் அமையாது என 1987ஆம் ஆண்டு தமிழ் கட்சிகள் கூறியிருந்தன. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் கூட சொல்லியிருந்தார். விக்னேஸ்வரன் 2001ஆம் ஆண்டு நிதியரசராக பதவியேற்ற போது மாகாண சபை முறை தீர்வு அல்ல என்று சிறந்த விளக்கம் ஒன்றையும் கொடுத்திருந்தார். புலிகள் பயங்கரவாதிகள் என்றும் – பிரிவினையை கோருகின்றனர் என்றும் – குற்றம் சுமத்தப்பட்டது. அதனை இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் ஏற்றுக் கொண்டன. பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட காரணத்தின் அடிப்படையில் புலிகள் மீது இந்தியா 1992இல் தடை விதித்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா 1997இல் தடை வித்தது. பின்னர் இந்த நாடுகளை பின்பற்றி ஐரோப்பிய ஒன்றியம் 2002ஆம் ஆண்டு தடை வித்தது. ஆனால், ஒரு இயக்கம் மீது தடை விதிப்பதற்கான சரியான வழிமுறைகள் பின்பற்றப்படாமல் வெறுமனே ஏனைய நாடுகளை பின்பற்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் புலிகள் மீது தடை விதித்தமை தவறான முடிவு என ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் கூறியுள்ளது. அதனை மீளாய்வு செய்வதற்கான கால அவசகாசமும் ஒன்றிய நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை, காங்கிரஸ் அரசு புலிகள் விடயத்தில் தவறு செய்துவிட்டது என்று முன்னாள் அமைச்சர் நட்வர்சிங் தனது நூலில் குற்றம் சுமத்தியிருந்தார். ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா விட்ட பிழைகளை முன்னாள் இந்தியத் தூதுவர் தீக்சித் தனது நூலில் சுட்டிக்காட்டியிருந்தார். இவை சில உதாரணங்கள் மாத்திரமே.
எவ்வாறாயினும், தற்போது இறந்துபோன புலிகளை நியாயப்படுத்துவது அல்ல இங்கு பிரச்சினை. சோல்பரி அரசியலமைப்பில் இருந்து இன்றைய 13ஆவது திருத்தச்சட்டம் வரை தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது என்பதையும், அரசியலமைப்பில் ஜனநாயகத்திற்கு முரணான சரத்துகள் உள்ளன என்பதையும் வெளிப்படுத்தும் போது 60 ஆண்டுக்கும் மேலாக இலங்கையில் இன ஐக்கியம் ஏன் சீர்குலைந்தது என்ற கேள்விக்கு இயல்பாகவே விடை கிடைக்கும். அத்துடன், புலிகள் பயங்கரவாதிகள் என்று கூறி தட்டிக்கழித்த இலங்கை அரசு, மிதவாத போக்குடைய தமிழ் இனவாத அரசியலில் ஈடுபடாத விக்னேஸ்வரனுடன் கூட இணங்கிப் போக மறுப்பதன் பின்னணியும் புரிய ஆரம்பிக்கும்.
தினக்குரல் பத்திரிகைக்காக அ.நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.