02 அக்டோபர் 2014, கொழும்பு, இலங்கை

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தால் நடாத்தப்படும் பிரஜைகளுக்கான ஊடகவியலை நோக்காகக் கொண்டு இயங்கும் மாற்றம் இணையதளம் ‘முடிவுறாத யுத்தம்’ என்ற தலைப்பில் இலங்கையில் முதல் தடவையாக, குறிப்பாக இணையதளத்துக்கு ஏற்ற வகையில் பிரஜைகள் ஊடகவியலை வலுப்படுத்தும் முகமாக நவீன முறையிலான  இணையதள சிறப்புப் பக்கமொன்றை வெளியிட்டுள்ளது.

இணையதளம் மூலம் நவீன முறையில் ஊடவியலை கையாளும் விருதுகள் வென்ற New York Times, Al Jazeera, The Global Mail மற்றும் ஏனைய முன்னணி தளங்களால் ஈர்க்கப்பட்டு இந்த ‘முடிவுறாத யுத்தம்’ பக்கம் அமைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு புதிய browser மூலமாகவும், smartphones மற்றும் tablets ஊடாகவும் இந்த சிறப்புப் பக்கத்தை பார்க்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பக்கம் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்வு: இறுதி யுத்தம் ஆரம்பமான 2007ஆம் ஆண்டுகாலப் பகுதியில் சம்பூர் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் தற்போதைய நிலை.

கடத்தல் காணாமல்போதல்: இலங்கையில் காணாமல்போனவர்களின் எண்ணிக்கை குறித்து சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ள கருத்துகள், இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, காணாமல் போனோரை தேடியறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள், அவற்றிடம் சாட்சியளித்தவர்களின் கருத்துகள் – செவ்விகள், யுத்தத்தின் இறுதி நாட்களில் இராணுவத்திடம் கையளித்த தனது மகன் குறித்து தாய் தெரிவிக்கும் கருத்துகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

காணி அபகரிப்பு: வலிகாமம் பகுதியில் இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள மக்களின் நிலம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வலிகாமம் பகுதி வாசியான பெண் ஒருவரின் ஆவணப்படமொன்றும் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும், வட மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் மூல ஆதாரத்துடன் முல்லைத்தீவில் மேற்கொள்ளப்படும் சிங்களமயமாக்கல் தொடர்பான தகவல்கள், கொக்கிளாய், கொக்குத் தொடுவாய் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் அபகரிக்கப்படுவது குறித்த செவ்வி ஒன்றும் சேர்க்கப்பட்டுள்ளது.

இராணுவமயமாக்கல்: வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கை குறித்து ஜனாதிபதி உட்பட அரச தரப்பினர் தெரிவித்துள்ள மாறுபட்ட கருத்துகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. மேலும், வடக்கில் உள்ள மக்களை இராணுவம் கண்காணித்து வருவது குறித்தும், சிவில் நிர்வாகம் ஈடுபடவேண்டிய அபிவிருத்தி நடவடிக்கையில் இராணுவம் ஈடுபடுவது குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி: அழகுபடுத்தல் (Beautification) எனக் கூறிக்கொண்டு கொழும்பில் உள்ள அப்பாவி மக்களது வீடுகள் அடியோடு பெயர்க்கப்படுவது குறித்து விரிவாக, மூல ஆதாரங்களுடன் அலசப்பட்டுள்ளது.

படங்கள், வீடியோ, கட்டுரைகள் போன்றவற்றின் உறுப்புரிமையை மாற்றம் தளம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘முடிவுறாத யுத்தம்’ சிறப்பு இணைய பக்கத்துக்குச் செல்ல இங்கே அழுத்தவும்.

Monitor 1