Photo, Antoine Jonquière, px3

சமீபத்தில் நான் காரைநகரில் உள்ள ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் வாழும் கிராமமொன்றில் அமைந்துள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றிற்குச் சென்றிருந்தேன். வட யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் தீவின் களப்புப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தச் கடலோரக் கிராமத்திற்குச் செல்லும் வீதி மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததால், அங்கு செல்வது மிகவும் கடினமாக இருந்தது.

அந்தப் பாடசாலையில் கல்வி பயிலும் நூற்றுக்கும் சற்று அதிகமான மாணவர்கள் நடந்தே வரும் தூரத்தில் தான் வசிக்கின்றனர். மாணவர்களின் கல்வி மற்றும் சுகாதாரம் குறித்து அதிபருடன் உரையாடத் தொடங்கிய போது, பாடசாலை மற்றும் மாணவர்களின் தேவைகள் மட்டுமன்றி, அச் சமூகத்தைச் சூழ்ந்துள்ள சமூக, பொருளாதார சவால்கள் குறித்தும் அதிபர் தெளிவான புரிதலைக் கொண்டிருந்தமை வெளிப்பட்டது. கிராமத்திற்கான போக்குவரத்து வசதியின்மை, குடும்பங்களுக்கான வாழ்வாதார வாய்ப்புகளின்மை மற்றும் இளைஞர்களின் இருண்ட எதிர்காலம் வரை இச்சமூகம் சந்திக்கும் சமூக விலக்கல் அவரை மிகவும் கவலையடையச் செய்திருந்தது.

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக நான் அவ்வப்போது இந்தக் கிராமத்திற்குச் சென்று வருகிறேன். 2010களின் தொடக்கத்தில், போருக்குப் பிந்தைய மீள்குடியேற்றத்தைத் தொடர்ந்து திருச்சபையால் நடாத்தப்பட்ட மாலை நேர வகுப்புகளைப் பார்வையிடுமாறு ஒரு மதகுரு விடுத்த அழைப்பின் பேரிலேயே எனது முதல் பயணம் அமைந்தது. அப்போதே அதன் பின்னணியில் இருந்த சாதியக் கட்டமைப்பு தெளிவாகத் தெரிந்தது. மாணவர்கள் இரண்டாம் நிலைப் பாடசாலைக்குச் செல்வதற்கான பஸ் சேவை தடைப்பட்டிருந்தது, போருக்குப் பிந்தைய வீட்டுத்திட்டங்கள் முழுமையடையாமல் இருந்தன. மேலும், உள்ளூர் அரச நிர்வாகமும் கிராமத்திற்குத் தேவையான பொதுச் சேவைகளை வழங்க முன்வரவில்லை. வறுமை மிகவும் அதிகமாக இருந்ததுடன், முதிர்ந்த பிள்ளைகள் கூலி வேலைகளைத் தேடிச் சென்றனர். அந்த மாலை நேர வகுப்பு குறித்து அதிபரிடம் கேட்டபோது, அந்த மதகுரு இடமாற்றம் பெற்ற பிறகு அது இயங்காமல் போய்விட்டதாகக் கூறினார்.

இக்கிராமத்தின் அவலநிலை, யாழ்ப்பாணத்தில் சாதிய உறவுகள் தொடர்ந்து நீடிக்கும் பெரிய கேள்வியை எனக்கு நினைவூட்டியது. உண்மையில், சாதியானது ஏனைய சமூகக் கட்டமைப்புகளைப் போலவே காலப்போக்கில் வெவ்வேறு வடிவங்களை எடுத்தாலும், அது ஒடுக்குமுறைக்கும் விலக்கலுக்கும் ஒரு ஆதாரமாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. 2009இல் போர் முடிவடைந்த பின்னரான ஆண்டுகளில் சாதிய உறவுகள் இரகசியமாகத் தொடர்ந்தாலும், சமீப காலத்தில் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இது ஒடுக்கப்பட்ட சாதி கிராமங்களின் பொருளாதாரப் பின்தங்கிய நிலையிலும், சமூக நிறுவனங்களில் காணப்படும் பாகுபாட்டிலும் மிகவும் தெளிவாகத் தெரிகிறது.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, 1966 அக்டோபரில், யாழ்ப்பாணத்தில் எழுந்த ஒரு மகத்தான இயக்கம் தீண்டாமையை வீழ்த்தியது. அந்தச் சக்திவாய்ந்த சாதி எதிர்ப்புப் போராட்டமும், அதன் அணிதிரட்டல் பாரம்பரியமும், பின்னர் ஒடுக்கப்பட்ட சாதி கள்ளுச் சீவும் தொழிலாளர்களுக்காக உருவான கூட்டுறவுச் சங்கங்களும் இளைஞர்களின் பங்கு மற்றும் சமூக மாற்றத்திற்கு பல பாடங்களைக் கொண்டுள்ளன. சுமார் மூன்று தசாப்த கால ஆயுத மோதலாலும், ஒன்றரை தசாப்தத்திற்கும் மேலாக நலிவடைந்த மீட்சியினாலும் பேரழிவிற்குள்ளான யாழ்ப்பாணத்தில் இன்று சமூக மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் என்ன? 1960களின் காலகட்டத்திற்கு மீண்டு சென்று, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் எவ்வாறு சாதிய உறவுகளில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தன என்பதைச் சிந்தித்து, இன்றைய யாழ்பாணச் சமூகத்தில் சாதிய ஒடுக்குமுறை மற்றும் விலக்கலை எதிர்கொள்வதற்கான உத்திகளை பரிசீலிக்க முற்படுகிறேன்.

கிராமப்புற மூலதன திரட்சியும் எதிர்ப்பும்

வரலாற்று ரீதியாக, யாழ்ப்பாணம் அதிக மக்கள் தொகை கொண்ட சிறு விவசாய நிலங்களைக் கொண்ட தனித்துவமான சமூக மற்றும் பொருளாதார பண்புகளைக் கொண்டிருந்தது, அங்கு ஆதிக்க வெள்ளாள சாதியினரே எண்ணிக்கையிலும் பெரும்பான்மையாக இருந்தனர். இது ஒடுக்கப்பட்ட சாதியினர் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான வாய்ப்பைக் குறைவாகவே வழங்கியது. 1950களின் பிற்பகுதியில் இறக்குமதி மாற்றீட்டுக் கொள்கைகளுடன் கூடிய கிராமப்புற மூலதன திரட்சி, யாழ்ப்பாணத்தில் சிறிய நிலங்களில் பணப் பயிர்களுக்கான தீவிர விவசாயத்திற்கு வழிவகுத்தது. இத்தகைய மூலதனத் திரட்சியிலிருந்தே தங்களால் சிமெண்ட் வீடுகளைக் கட்ட முடிந்தது என்று பல சிறு விவசாயிகள் கூறுகின்றனர். இந்த சூழலில், நிலமற்ற ஒடுக்கப்பட்ட சாதியினரிடமிருந்து கூலி உழைப்புக்கான தேவை அதிகரித்ததோடு, அவர்களும் அதிக கூலி கோரத் தொடங்கியதால், மேல் சாதியினர் மேலும் ஒடுக்குமுறையைக் கையாண்டனர்.

இதற்கிடையில், சுதந்திரத்திற்குப் பிந்தைய தசாப்தங்களில், இடதுசாரி இயக்கம் யாழ்ப்பாணத்திற்குள் காலடி எடுத்து வைத்தது. 1960களின் சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள், என். சண்முகதாசன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு பெரிய போராட்டத்தை வடிவமைக்க ஒரு வாய்ப்பை வழங்கின. வீடமைப்பு மற்றும் மயானங்களுக்கான அணுகல் உள்ளிட்ட நிலம் சார்ந்த பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டிருந்த வேளையில், கம்யூனிஸ்ட் கட்சி தந்திரோபாயமாக சுயமரியாதை சார்ந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்த முடிவு செய்ததுடன், ஆலயப் பிரவேசம் மற்றும் தேநீர்க்கடைகளில் சமமான ஆசன வசதி ஆகியவற்றைக் கோரியது.

1966 அக்டோபரில் தொடங்கப்பட்ட இப் போராட்டம், இலங்கையின் சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாற்றில் முதல் ஆயுதப் போராட்டமாக இருக்கலாம்; இதில் நடந்த மோதல்கள் மற்றும் கொலைகளில் முப்பது பேர் வரை உயிரிழந்தனர். தெற்கில் 1971 மற்றும் 1988 ஆகிய ஆண்டுகளில் நடந்த இரு ஆயுதக் கிளர்ச்சிகளும், வடக்கில் சிவில் போராக மாறிய ஆயுதக் கிளர்ச்சியும் கடுமையான உயிர் இழப்புகளுக்கு வழிவகுத்த நிலையில், 1960களின் பிற்பகுதியில் நடந்த சாதி எதிர்ப்புப் போராட்டம் தீண்டாமையை ஏறக்குறைய ஒழித்த உறுதியான முடிவோடு நிறைவுற்றது.

இந்தப் பின்னணியில், ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் இடதுசாரி நிதியமைச்சரான கலாநிதி என்.எம். பெரேரா 1972இல் பனை அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களை (PDCS) உருவாக்கி, கள்ளு உற்பத்தி மற்றும் விற்பனைக்கான ஏகபோக உரிமையை அவர்களுக்கு வழங்கினார். நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, சாதி எதிர்ப்பு இயக்கத்தில் இளைஞர்களாகப் பங்கேற்ற சிலரை நான் பேட்டி கண்டபோது, இப் போராட்டத்திற்குப் பிறகு அவர்களில் பலர் புதிதாக உருவாக்கப்பட்ட பனை அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் ஊழியர்களாக மாறியதை அறிந்தேன். இருப்பினும், சாதிய ஒடுக்குமுறையை எதிர்கொள்வதற்கான அந்த வேகம் இன, தேசியவாத அரசியலாலும் நீண்டகால மோதலாலும் நசுக்கப்பட்டு, சாதி எதிர்ப்புப் பணிகள் பின்னணிக்குத் தள்ளப்பட்டன.

நிலமும் உழைப்பும்

ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகு, காரைநகர் போன்ற கிராமங்களுக்கு எவ்வாறு மாற்றம் வரக்கூடும், அண்மையில் அந்தப் பாடசாலையில் பயின்ற இளைஞர்களுக்கான சாத்தியக்கூறுகள் என்ன? சில ஆண்டுகளுக்கு முன்பு, காரைநகரில் உள்ள மற்றொரு ஒடுக்கப்பட்ட சாதி கிராமத்திலும், அருகில் உள்ள வட்டுக் கோட்டையில் உள்ள ஒரு கிராமத்திலும் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன, அங்கு ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் காடையர்களைப் பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட சாதி மக்களை சிறுமைப்படுத்தியும் தாக்கியும் தங்களது அதிகாரத்தைக் காட்ட முனைந்தனர். நம்மில் பலர் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் அக் கிராமங்களில் நடந்த சில கலந்துரையாடல்களில் பங்கேற்ற போதிலும், பாதிக்கப்பட்டவர்கள் வழக்குகளைத் திரும்பப் பெற்றதால் சட்ட நடவடிக்கைகள் முன்னோக்கி நகரவில்லை.

பாடசாலை அதிபர் என்னிடம் கூறுகையில், தனது சமீபத்திய சவால் என்னவென்றால், தனது மாணவர்களின் தாயார்கள் பலர் கிராமத்தில் உள்ள புதிய கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நீண்ட நேரம் வேலை செய்யத் தொடங்கியுள்ளனர், இதனால் வீட்டில் பிள்ளைகளுக்குக் கிடைக்கும் கவனம் குறைந்து மாணவர்கள் பாடசாலைக்கு வராமல் இருப்பது அதிகரித்துள்ளது. குடும்பங்களுக்கு மேலதிக வருமானம் தேவைப்பட்டாலும், அவர்களின் பிள்ளைகளின் நலனுக்காக மேலதிக ஆதரவும் தேவைப்பட்டது.

ஒடுக்கப்பட்ட சாதி சமூகங்களைப் பொறுத்தவரை, அவர்களின் பிரச்சினைகள் நிலமின்மை மற்றும் கடலோர வளங்களுக்கான அணுகல் இல்லாமையிலிருந்து தொடங்குகின்றன, இது வாழ்வாதாரம் குறைவதற்கும், கூலி வேலைக்குச் செல்லும்போது சுரண்டல் வேலை நிலைமைகளுக்கும், பொதுச் சேவைகளைப் பெற முடியாமைக்கும் பெரும்பாலும் நேரடிப் பாகுபாட்டிற்கும் வழிவகுக்கிறது. வேலை வழங்குபவர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட ஆதிக்க சாதி அமைப்புகளால் அவர்கள் துன்புறுத்தலுக்கும் உள்ளாகிறார்கள்.

இதற்கிடையில், யாழ்ப்பாணம் சமூக மற்றும் அரசியல் மாற்றங்களையும் சந்தித்து வருகிறது. வன்முறைக் கும்பல்களின் சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான அவதூறுத் தாக்குதல்கள் உட்பட ஒரு நலிவடைந்த கலாச்சாரம் அதிகரித்து வருகிறது; உயர் கல்வி மற்றும் வெள்ளைச் சட்டை வேலைகளில் பெண்கள் சமூக ரீதியாக முன்னேறி வருகின்ற போதிலும் நிலைமை இதுவே. பெரும்பாலான இளம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன, மேலும் கூலி வேலைக்கான வாய்ப்புகளும் ஊதியமும் குறைவாகவே உள்ளன.

இந்த சூழலில், தமிழ் புலம்பெயர் மக்களின் ஒரு பகுதியினரின் நிதியுதவியுடன் தமிழ் தேசியவாத அரசியல் பேச்சுகள் கொதிநிலையில் வைக்கப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைப் பொருட்படுத்தாததால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியவாதக் கட்சிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்த போதிலும், அவர்களின் பேச்சும் பார்வையும் மாறவில்லை. மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சிரமங்கள் குறித்து அவர்கள் பேசுவதற்கு எதுவுமில்லை, மேலும் சாதிய ஒடுக்குமுறை மற்றும் விலக்கல் விசயத்தில் அவர்கள் அமைதி காக்கிறார்கள் அல்லது உடந்தையாக இருக்கிறார்கள்.

என்ன செய்ய வேண்டும்?

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் வலுவான ஆணையைப் பெற்றது, வரவிருக்கும் ஆண்டுகளில் அவர்கள் சில உறுதியான மாற்றங்களை வழங்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் பிரதானமாக ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த நிலமற்ற மக்களுக்கு வீடமைப்பு மற்றும் நிலங்களை வழங்குவது ஒரு முன்னுரிமையாகும். ஆனால், யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான நிலங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் நிலங்களைக் கொள்முதல் செய்து மறு விநியோகம் செய்ய வேண்டி வரும்.

முறையான வேலை வாய்ப்புகள் உட்பட வேலை வாய்ப்புகளையே இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள், இதற்கு முதலீடுகள் தேவை. மேலும், பொருத்தமான பணி கலாச்சாரத்தை உருவாக்குவது உட்பட தொழிலாளர்களின் பேரம் பேசும் சக்தி குறைவாக உள்ள சூழலில், தொழிற்சங்கங்கள் இல்லாத நிலையில் தொழிலாளர்களை ஒழுங்கமைக்க வேண்டும். கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், சில அரசுக்குச் சொந்தமான தொழிற்சாலைகள் மற்றும் பெருமளவிலான ஒழுங்கமைக்கப்படாத கடைகள் மற்றும் சிறு வணிகங்களில் தொழிற்சங்கப் பணிகள் தேவையாக உள்ளன. பல தசாப்தங்களாகத் தொழிற்சங்க கலாச்சாரம் துடைத்தெறியப்பட்ட ஒரு சமூகத்தில், தொழிலாளர்களை ஒழுங்கமைப்பதிலும் தொழிலாளர் உரிமைகளை மேம்படுத்துவதிலும் சமூக ஆர்வலர்கள், நிறுவப்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் திணைக்களம் ஆகியவை ஆற்ற வேண்டிய பங்கு உள்ளது.

1970களில் இருந்த முற்போக்கு அரசாங்கம் பனை அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களை (PDCS) உருவாக்கியதன் மூலம் பரிசோதனை செய்தது, இது கள்ளுச் சீவும் தொழிலில் ஈடுபட்ட ஒடுக்கப்பட்ட சாதி சமூகத்தின் சமூக முன்னேற்றத்திற்கு ஒரு பெரிய வெற்றியைத் தந்தது. விவசாயத் தொழிலாளர்கள், பராமரிப்பாளர்கள், உணவகம் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் பல நாளாந்தக் கூலி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் அதிகமாகப் பணிபுரியும் யாழ்ப்பாணத்தின் முறைசாராத் துறையை ஒழுங்கமைக்க இதுவே சரியான நேரமாக இருக்கலாம். இத்தகைய தொழிலாளர்களை ஒழுங்கமைப்பதற்கான வளங்கள், தொழிலாளர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கான மையங்கள் உட்பட ஒரு தொடக்கமாக அமையலாம்.

தொழிற்சங்கம் மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் பாரம்பரியத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன. இன்று யாழ்ப்பாணத்தில் சாதிய ஒடுக்குமுறை மற்றும் விலக்கலை எதிர்கொள்வதற்கான உத்தியானது 1960களின் பிற்பகுதியில் நடந்த சாதி எதிர்ப்புப் போராட்டங்களிலிருந்து உத்வேகம் பெற வேண்டும். ஆனால், இளைஞர்கள் மற்றும் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தைச் சுற்றி தங்களை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கான இடங்களை உருவாக்குவதில் தொடங்க வேண்டும்.

அகிலன் கதிர்காமர்

Caste Oppression and Struggles in Jaffna என்ற தலைப்பில் ‘டெயிலிமிரர்’ பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.