Photo, Anura Kumara Dissanayake FB page
ஒரு நாட்டில் ஏதேனும் ஒரு சட்டத்தை இயற்றும்போது, மனித உரிமைகள் உள்ளிட்ட ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதும் அவற்றை மேம்படுத்துவதும் ஒரு நாகரீகமடைந்த அரசின் முதன்மைப் பொறுப்பாகும். அதுமட்டுமன்றி, அனைத்து மனித உரிமைகளுக்கும் கருத்துச் சுதந்திரமே அடிப்படை என்பதை ஒரு அரசு நினைவில் கொள்ள வேண்டிய முதல் கோட்பாடாகும்.
இருப்பினும், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தால் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட புதிய “அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை” (PSTB) ஆய்வு செய்யும்போது, முதல் வரைவோடு ஒப்பிடுகையில் சில தொழில்நுட்பத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ள போதிலும், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமைகளுக்கு நிலவிய கடுமையான சவால்களும் அச்சுறுத்தல்களும் அப்படியே நீடிப்பது தெரியவருகிறது.
அரசாங்கத்திற்கு “அநீதியான முறையில் அழுத்தமளித்தல்”
குறிப்பாக, இச்சட்டமூலத்தின் 3(1)(ஆ) பிரிவின் கீழ், ‘அரசியல் அல்லது கருத்தியல் நோக்கத்திற்காக’ “அரசாங்கம் அல்லது சர்வதேச அமைப்பு ஒன்றுக்கு அநீதியான முறையில் அழுத்தம் கொடுக்கும்” நோக்கில் செய்யப்படும் செயல்கள் பயங்கரவாதக் குற்றங்களாகச் சித்திரிக்கப்படுகின்றன.
மேலும், 3(2)(எ) பிரிவின் மூலம் “மின்சார, டிஜிட்டல் அல்லது கம்பியுடைய/ கம்பியற்ற தகவல் தொடர்பு முறைமைக்குக் கடுமையான இடையூறுகளை ஏற்படுத்துதல்” என்பதும் பயங்கரவாதக் குற்றத்தின் விளைவாக உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அரசாங்கத்தின் சட்டங்கள் அல்லது கொள்கைகளை மாற்றுமாறு கோரி சமூக ஊடகங்கள் வழியே முன்னெடுக்கப்படும் Online Campaigns, Online Petitions போன்ற செயல்கள் “அரசாங்கத்திற்கு அநீதியான முறையில் அழுத்தம் கொடுப்பதாகவும்”, டிஜிட்டல் வெளியில் ஒன்றுகூடுவது “தகவல் தொடர்பு முறைமைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும்” வியாக்கியானம் செய்யப்படும் அபாயம் உருவாக்கப்பட்டுள்ளது.
15 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் டிஜிட்டல் அடக்குமுறை
அதுமட்டுமன்றி, 9ஆம் பிரிவின் மூலம், பயங்கரவாதக் குற்றத்தைச் செய்ய மக்களை நேரடியாகவோ அல்லது ” மறைமுகமாகவோ தூண்டும்” எண்ணத்துடன் அல்லது அறிந்துகொண்டு கருத்துக்களை வெளியிடுதல், பேசுதல், ஏதேனும் சைகையை வெளியிடுதல் அல்லது காட்சி வடிவில் சித்தரித்தல் 15 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றமாக மாற்றப்பட்டுள்ளது.
“மறைமுகமாகத் தூண்டுதல்” என்பதன் சட்ட எல்லைகள் தெளிவற்றதாகவும் பரந்ததாகவும் இருப்பதால், சமூக ஊடகங்களில் பயன்படுத்தப்படும் Posters, மீம்கள் (Memes), நகைச்சுவைப் படைப்புகள், டிக்டொக் (TikTok) வீடியோக்கள் மற்றும் அரசியல் நையாண்டிகள் கூட பயங்கரவாதத்திற்கு மறைமுகமாகத் தூண்டுவதாக அர்த்தப்படுத்தப்பட்டு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் ஆபத்து உள்ளது.
சமூக ஊடகக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள்
சமூக ஊடகத் தளங்களில் தகவல்களைப் பகிர்வது தொடர்பாகவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 10ஆம் பிரிவின் கீழ், ‘பயங்கரவாத வெளியீடு’ ஒன்றை விநியோகித்தல், புழக்கத்தில் விடுதல், வைத்திருத்தல் அல்லது அத்தகைய வெளியீட்டைப் பெறுவதற்கு/ வாசிப்பதற்கு வசதி செய்யும் சேவையை வழங்குதல் குற்றமாக்கப்பட்டுள்ளது.
அமைப்புகளுக்குத் தடை விதிக்கும் அதிகாரம்
மேலும், 59ஆம் பிரிவின் மூலம் அமைப்புகளுக்குத் தடை விதிக்கவும், அவற்றின் நோக்கங்களை “Online பதிவுகள் உட்பட” பிரச்சாரம் செய்வதைத் தடை செய்யவும் ஜனாதிபதிக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, Facebook, X (Twitter), WhatsApp போன்ற சமூக ஊடகத் தளங்களில் உணர்வுபூர்வமான அறிக்கை அல்லது துண்டுப்பிரசுரம் ஒன்றைப் பகிர்வது (Share), Retweet செய்வது அல்லது Forward செய்வது “வெளியீட்டைப் புழக்கத்தில் விடுவதாகவும்”, ஒரு இணையதளம் அல்லது பதிவின் URL இணைப்பை (Link) வழங்குவது “வசதி செய்யும் சேவையாகவும்” வியாக்கியானம் செய்யப்படலாம். இதன் மூலம் நிறைவேற்று அதிகாரங்கள் வழியாக Online ஊடகவியலைத் தணிக்கை செய்வதற்கான வாய்ப்பு அரசாங்கத்திற்குச் சட்டப்பூர்வமாக உருவாகிறது.
செய்தி ஆதாரங்களின் இரகசியத்தன்மைக்கு அச்சுறுத்தல்
குறிப்பாக, ஊடக ஆதாரங்களின் இரகசியத்தன்மைக்கும் இச்சட்டமூலம் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. 15ஆம் பிரிவின் மூலம், வேறொருவர் குற்றஞ்செய்யத் தயாராகிறார் அல்லது செய்துள்ளார் என்பதை அறிந்துகொண்டு அதுகுறித்த தகவல்களைப் பொலிஸாருக்கு வழங்கத் தவறினால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இதனால், புலனாய்வு ஊடகவியலில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடக உள்ளடக்கப் படைப்பாளர்கள் (Content Creators) தங்களுக்குத் தகவல் வழங்குபவர்களின் (Whistleblowers) இரகசியத்தன்மையைப் பாதுகாக்க முடியாத நிலை ஏற்படும். இது நாட்டில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் ஊழல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் வாய்ப்பை முற்றாக மூடிவிடும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
72 மணிநேரத்திற்கு “தடைசெய்யப்பட்ட இடங்கள்”
மேலும், 51ஆம் பிரிவின் மூலம் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மற்றும் ஒன்றுகூடல்களைத் தடை செய்யப் பொலிஸாருக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் கருத்துச் சுதந்திரத்தின் ‘பௌதிக வெளி’ கட்டுப்படுத்தப்படும்.
அதை மேலும் விரிவாக்கி, பாதுகாப்புச் செயலாளருக்கு 72 மணிநேரத்திற்கு “தடைசெய்யப்பட்ட இடங்களை” அறிவிக்கவும், அங்குப் புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது தகவல்களைச் சேகரிப்பதைக் கட்டுப்படுத்தவும் 61ஆம் பிரிவு அதிகாரம் அளிக்கிறது.
அத்துடன், 74ஆம் பிரிவின் மூலம் பாதுகாப்புப் படையினரின் தகவல்கள், வாகனங்கள், பயணங்கள் மற்றும் விசாரணைகள் “இரசியத் தகவல்கள்” என வரையறுக்கப்பட்டுள்ளதால், புலனாய்வு ஊடகவியல் உட்பட தகவல் அறியும் அடிப்படை உரிமை இதனால் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டிஜிட்டல் சுய-தணிக்கை (Digital Self-Censorship)
சட்டமூலத்தில் உள்ள தெளிவற்ற மற்றும் பரந்த வரைவிலக்கணங்கள் காரணமாக, சமூக ஊடகப் பயனாளர்களும் ஊடகவியலாளர்களும் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்க்கும் “டிஜிட்டல் சுய-தணிக்கை” நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் எழுந்துள்ளது.
எனவே, ஆரம்ப வரைவோடு ஒப்பிடுகையில் வர்த்தமானி செய்யப்பட்டுள்ள சட்டமூலத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தாலும், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமைகளுக்கு எழும் கடுமையான அச்சுறுத்தல்கள் புதிய வரைவிலும் அப்படியே நீடிக்கின்றன.
இருப்பினும், கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்துச் செய்வதாகக் கூறிக்கொண்டு, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தால் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ‘அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்’ என்பது ஒரு ஜனநாயக நாட்டின் அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தை மிகக் கொடூரமாக ஒடுக்கும் ஒரு சட்ட முயற்சியாகும்.
அரசாங்கத்தின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளை எட்டும் இந்தத் தருணத்தில், இவ்வாறானதொரு சட்டத்தைக் கொண்டுவருவதன் மூலம், எவ்வளவு நலன்புரி அல்லது அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்துப் பேசினாலும், மாற்றுக்கருத்துக்கள் உள்ளிட்ட விமர்சனக் குரல்களுக்கு எவ்வித இடமும் அளிக்காத, ‘சீனப் பாணியிலான’ அரசு மாதிரியின் ஊடாக “டிஜிட்டல் சர்வாதிகாரத்தை” நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தியுள்ளமையையே காட்டுகிறது.
(குறிப்பு – இந்தக்கட்டுரையின் முதன்மை அவதானம் முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தின் மூலம் கருத்துச் சுதந்திரத்திற்கு ஏற்படும் கடுமையான அச்சுறுத்தல்களை ஆராய்வதாக அமைந்திருந்தாலும், முப்படை மற்றும் கடலோரப் படை அதிகாரிகளுக்குப் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது உட்படச் ஒட்டுமொத்த சிவில் வெளியின் சுதந்திரத்திற்கும் ஏற்படும் கடுமையான ஆபத்தும் இதில் அடங்கியுள்ளது என்பதை வலியுறுத்துகிறேன்.)
சம்பத் சமரகோன்
PSTA ගැසට්ටුව: අදහස් ප්රකාශ කිරීමේ නිදහසේ මළගමද? என்ற தலைப்பில் ‘vikalpa’ தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.