Photo, TAMIL GUARDIAN
நாம் முக்கியமான நிகழ்வுகளை கௌரவத்தின் அடையாளமாக அனுசரிக்கிறோம். ஆனால் குடும்ப உறுப்பினரொருவர் காணாமல் போன குடும்பங்களுக்கு அது ஒரு கொண்டாட்டமாகவோ அல்லது நினைவேந்தலாகவோ அமைவதில்லை. அது காணாமல்போன நபர்களைப் பற்றி ஏதேனும் தகவல் கிடைக்கும் வரை அல்லது கிடைக்காத வரை காத்திருக்கும் மற்றொரு வேதனைமிக்க ஆண்டின் தொடக்கமே ஆகும். இதனைக் கையாள்வது மிகவும் கடினமான மன அழுத்தத்தையும் வேதனையையும் தரும் ஒரு செயலாகும். அதை நான் அறிவேன்; ஏனெனில் 1990 செப்டம்பர் 5ஆம் திகதி வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக அகதிகள் முகாமில் இருந்து ஆயுதப்படைகளால் 158 பேர் அழைத்துச் செல்லப்பட்டனர். 36 ஆண்டுகளுக்குப் பிறகும் அவர்களைப் பற்றிய ஏதேனும் தகவல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நாம் இன்னமும் காத்திருக்கிறோம். அந்தக் குடும்பங்கள் ஆண்டுதோறும் சந்தித்து, தங்களது துயரங்களையும் அனுபவங்களையும் பகிர்வதோடு, 36 ஆண்டுகளாகத் தொடரும் தங்களது நிலைமை குறித்துப் பதிலைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கின்றனர். அவர்கள் யாரிடமிருந்தாவது ஏதேனும் தகவல் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், காணாமல்போனவர்கள் காணாமலேயே போய்விட்டனர்; அதேபோல் அவர்களின் உரிமைகளும் நிகழ்ச்சி நிரலில் இருந்து காணாமல் போய்விட்டன. நீதித்துறை என்பது ஆட்சியின் ஒரு அங்கமாக இருக்கும் ஒரு ஜனநாயக நாட்டில், இது தொடர்பான நீதியும் காணாமல் போயுள்ளதாகவே தோன்றுகிறது.
யாழ்ப்பாணத்தின் ‘காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம்’ கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக காணாமல் போனவர்களுக்காகத் தமது போராட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. அதேவேளை தேசிய மட்டத்திலான அமைப்புகளும் பல்வேறு சம்பவங்கள் குறித்துக் கவனம் செலுத்தி, ஒரு ஜனநாயக நாட்டில் பதிலளிக்கப்பட வேண்டிய கொள்கை சார்ந்த விடயமாக இதனில் கூட்டாகத் தலையிட்டுள்ளன. இருப்பினும் எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவங்களின் போது, இதற்காகப் போராட்டம் நடத்திய நபர்களை அதிகாரிகள் ‘மோசமாக’ நடத்தியிருந்தனர். இது வெறும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பிரச்சினையா அல்லது மக்கள் நினைவில் வைத்திருக்க முயலும் ஒரு விடயத்தை அதிகாரிகள் மறந்துவிட நினைக்கும் போது ஏற்படும் கோபத்தின் அடையாளமா? நிதி முறைகேடுகள், மோசடிகள், தவறான நிர்வாகம் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபரின் சம்பவத்தில் ‘நடவடிக்கை எடுக்காமை’ ஆகியவை பாரிய குற்றமாகக் கருதப்படக்கூடிய ஒரு நாட்டிற்கு, காணாமல்போன மக்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தை ஒரு முக்கியமான பிரச்சினையாகக் கருத முடியாமல் போயுள்ளது.
நடவடிக்கை எடுக்காமை தொடர்பாக அரசாங்கமோ அல்லது அதன் உறுப்பினர்களோ பொறுப்புக் கூறப்பட வேண்டியவர்கள் என்று கருதப்பட முடியாமா? காணாமலாக்கப்படுதல்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் நபர்களின் பெயர்கள்/ பதவிகள் கூடக் குறிப்பிடப்பட்ட போதிலும் (உதாரணமாக கிழக்கில் காணாமல் போனோர் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழு), நமக்குத் தெரிந்தவரையில் யாரிடமும் விசாரணையோ அல்லது எந்தவொரு நீதிமன்ற விசாரணைக்கான அழைப்போ விடுக்கப்படவில்லை என்பது அவதானிக்கப்படுகிறது. இது எதை உணர்த்துகிறது? ஏற்பதோ அல்லது நிராகரிப்பதோ ஆகிய இரண்டுமே, காணாமலாக்கப்பட்ட குடிமக்களான தங்களது உறவினர்களைப் பற்றி வினா எழுப்பும் இந்தக் குடிமக்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். தற்போதைய ஆட்சியாளர்கள் மோதல் காலத்தில் இடம்பெற்ற காணாமலாக்கப்படுதல் பற்றி நன்கு அறிந்தவர்கள்; தங்களது போராட்டக் காலத்திலும் பல பகுதிகளில் இத்தகைய சூழ்நிலைகளை அவர்கள் எதிர்கொண்டுள்ளனர். எனவே, காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினையை இவ்வாறு புறக்கணிப்பது ஒரு யதார்த்தமான அணுகுமுறையை விட வெறும் சந்தர்ப்பவாதம் என்றே காட்டுகிறது.
1990 செப்டம்பர் 8ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை அகதிகள் முகாமில் அமைந்துள்ள எனது அலுவலகத்தில் வைத்து, முன்னாள் கிழக்கிலங்கை கட்டளைத் தளபதி ஜெனரல் ஜெரி டி சில்வா கூறிய, “அவர்கள் அனைவரும் எல்.டி.டி.ஈ, அவர்களைப் பற்றி கேட்க வேண்டாம்” என்ற வார்த்தைகள் இன்னமும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக, கௌரவ பாலகிட்னர் நீதிபதியின் தலைமையில் கிழக்கு மாகாணத்தில் காணாமல் போனோர் குறித்து நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும், இந்த நடவடிக்கை தொடர்பான சாட்சியத்தையோ அல்லது வாக்குமூலத்தையோ வழங்குவதற்கு அவர் ஒருபோதும் அழைக்கப்படவே இல்லை.
2008/09 ஆம் ஆண்டுகளில் நூற்றுக்கணக்கானோர் சரணடைவதைக் காண முடிந்தது. சிறைச்சாலைகள் மற்றும் தடுப்புக் காவலில் இருப்பவர்களின் புகைப்படங்களையும் ஆவணங்களையும் தொலைக்காட்சிகளில் காண முடிந்தது. ஆனால், இப்போது அவர்களைக் கைதுசெய்து வைத்திருந்ததாகக் கூட எவரும் ஒப்புக்கொள்வதாகத் தெரியவில்லை. கைது செய்யப்பட்டதன் பின்னர் தனது கணவர் காணாமல் போனதை எதிர்த்து நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தி இன்றும் போராடும் ஒருவர்தான் திருமதி அனந்தி சசிதரன். இன்னும் நூற்றுக்கணக்கானோரால் அவ்வாறு செய்ய முடியாவிட்டாலும், ஜனநாயகத்தின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்து பதில்களை எதிர்பார்த்து காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP) மற்றும் அரசு அலுவலகங்களின் முன் ஒன்று கூடுகின்றனர்.
நாட்டின் பல்வேறு பிரச்சினைகளுக்காக அரகலய மக்கள் போராட்டம் வெடித்தபோது, அது ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தையே மாற்றியமைக்கும் நிலைக்குப் பெருவாரியான வரவேற்பைப் பெற்றது. எவ்வாறாயினும், அந்தப் போராட்டத்தின் சாம்பலிலிருந்து அதிகாரத்திற்கு வந்தவர்களுக்கு, காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடும் மக்களின் போராட்டத்தை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் அவர்களை வெளிஏற்றுவதற்கு பொலிஸார் பயன்படுத்தப்பட்ட சம்பவத்தில் இதைத் தெளிவாகக் காண முடிந்தது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனநாயக அரசாங்கத்திடம் இருந்து தங்களது பிரச்சினைகளுக்குப் பதில்களை எதிர்பார்க்கும் இரண்டு வெவ்வேறு குழுக்கள் தொடர்பாக, அதுவும் குறிப்பாக முதல் ‘அரகலய’ போராட்டத்தின் கல்லறைகள் மீது இருந்து உருவானவர்களிடமிருந்து எவ்வளவு மாறுபட்ட அணுகுமுறையும் சூழலும் வெளிப்படுகிறது?
ஆனால், வரலாறு மிகவும் தெளிவானது, உண்மையான கொடுமைகளுக்கும் குற்றங்களுக்கும் காலப்போக்கில் பதில்கள் கிடைத்தே தீர்ந்துள்ளன. மக்களுக்கு அல்லது இனங்களுக்கு தங்களது உரிமைகள் மறுக்கப்படும்போதோ அல்லது அத்தகைய ‘குடிமக்கள்’ யாராக இருந்தாலும் அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தவறும்போதோ, உலகெங்கிலும் புதிய நாடுகள் கூட உருவெடுத்துள்ளன. காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை காற்றில் அடித்துச் செல்லப்பட்டுவிடும் என எதிர்பார்ப்பதை விட, அரசாங்கமும் அரசும் இதனைத் தீர்ப்பது அத்தியாவசியமானதும் அவசரமானதுமான விடயமாகும். ஏனெனில், மேலேயுள்ள தூசியை அகற்றி உண்மையான பூமியை வெளிக்கொணர்வதற்கு, மெல்லிய காற்று பல ஆண்டுகளில் சூறாவளியாக மாறுகிறது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.
காணாமலாக்கப்பட்டோர் உலகின் ஏதோவொரு பகுதியில் உயிரோடு வாழ்கிறார்கள் என்று நம்பும் பலரின் எண்ணத்திற்கு மதிப்பளித்து, அதுவே உண்மையாக வேண்டும் என்று பிராத்திக்கும் அதேவேளை, அவர்கள் கடைசியாகக் காணப்பட்ட இடங்களான காகித ஆலை முகாம் மற்றும் நாவலடி இராணுவச் சாவடியைச் சுற்றியுள்ள நிலப்பரப்பில், புதைக்கப்பட்ட இடங்களுக்கான ஏதேனும் அடையாளங்கள் உள்ளனவா என்று தேடுவதற்கான சரியான தருணம் இதுவாக இருக்கலாம். கைது செய்யப்பட்ட நாட்களை ஒட்டி அப்பகுதி மக்களின் கண்ணீரின் அடிப்படையில், இதுவரை அறியப்படாத ஆனால் தகவறிந்த மூலங்கள் வாயிலாக இதனை ஆராயலாம். அக்காலத்தில் இருந்த பலரால் மற்ற எவரையும் விடக் கூடுதல் தகவல்களை வெளிக்கொண்டுவர முடியும்; ஏதேனும் குற்றங்கள் நடந்திருப்பின், மனிதகுலத்திற்கு எதிராகச் செய்யப்பட்ட அந்தக் குற்ற உணர்ச்சியிலிருந்து தங்களது மனதை விடுவித்துக்கொள்ளவாவது அவர்கள் உண்மையைக் கூறலாம். நாங்கள் காத்திருக்கிறோம், இன்னமும் காத்திருப்போம்; ஏனெனில் நாங்கள் மறைந்து பல தசாப்தங்கள் கழிந்தாலும் கூட, முடிவு ஒரு பதிலுடன் கூடிய நேர்மறையான ஒன்றாகவே இருக்கும்.
மேற்பரப்பில் இருந்தோ அல்லது வான் வழியில் இருந்தோ குறிப்பிட்ட அளவிலான துல்லியத்துடன் பெரிய அளவிலான புதைக்கப்பட்ட இடங்களை கண்டறியும் திறன் நவீன தொழில்நுட்பத்திற்கு உள்ளது. இந்த ‘காணாமல் போதல்கள்’ குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் மீது எந்தவொரு தொடர் நடவடிக்கையும் காணப்படாத நிலையில், அரசு இவற்றை வழங்க முன்வரவில்லை எனில், தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குவதற்கு புலம்பெயர் சமூகம் எடுக்கக்கூடிய ஒரு மாற்று வழி இதுவாகும். தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், ஆணைக்குழுவின் இந்த முயற்சி வீணானதாகவே முடியும்.
வந்தாறுமூலையில் நிகழ்ந்த ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமலாக்கப்பதுதல் தொடர்பான ஏராளமான ஆவணங்கள், நேர்காணல்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் ஆகியவை சிதறிய நிலையில் தொகுக்கப்பட்டுள்ளன என்பது எனக்குத் தெரியும். இக்குற்றச் செயல்களுக்கு யார் பொறுப்பு என்பது குறித்த வெறும் ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்ற நிலையைத் தாண்டி, காணாமல் போனவர்களுக்கே உரிய உண்மையான சாட்சியமாக இக்கோப்பு அமைய வேண்டும். மேலும், தங்களது அன்புக்குரியவர்களின் வருகையை எதிர்பார்த்து, நம்பிக்கையுடனும் துயரத்துடனும் முப்பத்தாறு ஆண்டுகளைக் கடந்து காத்திருக்கும் மக்களுக்கு இது ஆறுதல் அளிப்பதாகவும் அமைகிறது. இது நம்பிக்கையின் ஒரு சிறப்பான பயணமாகும்.
“யாருக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் என்றாவது ஒரு நாள் உண்மை வெளிவரும், அது வரலாற்றை மாற்றியமைக்கும்” என்ற ஆழமான நம்பிக்கையே காலம் காலமாகப் பல்வேறு இனங்களின் துன்பங்களுக்குக் காரணமாக அமைந்திருக்கிறது. தங்களது அன்புக்குரியவர்களைத் தேடிப் பெரும் தைரியத்தைக் காட்டி, இன்னமும் காத்திருக்கத் துணியும் அனைவருக்கும், தங்களால் இயன்ற வழிகளில் தங்களது துயரைப் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன். அவர்களின் துயரைப் பகிர்ந்துகொள்ள நான் இன்னும் எவ்வளவு காலம் இருப்பேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால், எனது பிரார்த்தனைகள் தலைமுறைகள் கடந்தும் என்றென்றும் நிலைத்திருக்கும்.
பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம்
1990.09.05 அன்று வந்தாறுமூலை அகதிகள் முகாமின் பொறுப்பாளர்