“நான் வெளிநாட்டுக்கு போய்தான் இந்த வீட்ட கட்டினேன். லயத்துல எல்லாரும் இருக்க இடம் போதாது. கொஞ்சம் கொஞ்சமா காச சேர்த்து அனுப்ப கணவர்தான் வீட்ட கட்டி முடிச்சார். வீட்டு வேலையெல்லாம் முடிஞ்சிருச்சி, இன்னும் கொஞ்சம்தான் இருக்கு. நான் வெளிநாட்ல இருந்து வந்தவுடனே வீட்டுக்கு குடிபோயிரலாம்னு இருந்தோம். இப்படியாயிருச்சே…! இப்ப இந்த இடத்துக்கே வரக்கூடாதுனு சொல்றாங்க, ‘ஸ்லிப்’ போவும்னு சொல்றாங்க” என்கிறார் பதுளை, அக்கறதென்ன தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான எம். மணிமேகலை.
தித்வா அனர்த்தம் இடம்பெற்று 7 மாதங்கள் கடந்துள்ள போதிலும், இன்னும் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களிலேயே வாழ்ந்துவருகிறார்கள். முறையான அடிப்படை வசதிகள் இன்றி பாடசாலைகளிலும், அரச கட்டடங்களிலும் பல இன்னல்களுக்கு மத்தியில் இன்றுவரை அவர்கள் நாட்களைக் கடத்திவருகிறார்கள். இன்னும் பலரோ, ஆபத்து என்று தெரிந்தும் தங்களுக்கு மாற்று வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்து, மண்சரிவுக்குள் சிக்குண்ட அதே வீடுகளுக்கே மீண்டும் சென்று வாழ்ந்துவருகிறார்கள்.
மணிமேகலை தான் ஆசையுடன் கட்டிய வீட்டுக்குச் சென்று வாழ்வதற்கே விரும்பினாலும், தன் பிள்ளைகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அங்கு செல்வதைத் தவிர்த்து வருகிறார். ஆயினும், ஏழு மாதங்களாகத் தோட்ட மக்களுடன் தற்காலிகமாக வாழ்ந்துவரும் தேயிலைக் கொழுந்து சேகரிக்கும் (கொழுந்து மடுவம்) இடத்தில், ஒவ்வொரு நாளும் அந்த எண்ணம் தன்னுள் வந்துகொண்டிருப்பதாக மணிமேகலை கூறுகிறார்.
“இங்கு எங்களால் வாழ முடியாது. ஒவ்வொரு நாளும் நரகம் போலத்தான் இருக்கிறது. நாங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம் என்று தெரியுமா? எங்களுக்கு அந்த வாழ்க்கை மீண்டும் கிடைக்குமா?” என ஏமாற்றத்துடன் கேள்வி எழுப்புகிறார் மணிமேகலை.
மணிமேகலை வாழ்ந்துவரும் முகாம், அவர் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் தான் ஆசையாகக் கட்டிய வீட்டுக்குப் பதிலாக மாற்று வீடொன்றைப் பெற்றுக்கொள்வதில் தான் எதிநோக்கிவரும் சவால்களை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஆவணப்படத்தைக் கீழே காணலாம்.
ஆசிரியர் குறிப்பு: இந்த வீடியோக் காட்சிகள் கடந்த மார்ச் மாதம் பதிவுசெய்யப்பட்டவை. இருப்பினும், இந்த முகாம் (கொழுந்து மடுவம்) அந்த இடத்திலேயே இன்றுவரை செயற்பட்டு வருகிறது. மக்கள் முகம்கொடுத்துவரும் பிரச்சினைகளில் எந்தவித மாற்றமும் எற்படவில்லை.