Photo, Selvaraja Rajasegar
முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்து பதினேழு ஆண்டுகள் கழிந்த பின்னரும், நினைவுகூரல் அவசியமாகவே உள்ளது. ஆனால், ஆழ்ந்த அக ஆய்வு (reflection) இல்லாத நினைவுகூரல் ஒரு அர்த்தமற்ற சடங்காக மாறும் அபாயம் உள்ளது. அரசியல் தெளிவற்ற சடங்கு, அரசியல் தேக்கநிலையை ஏற்படுத்தும் ஆபத்தையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு வைகாசி மாதமும், எம்மை, எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு மீண்டும் அழைத்து செல்கிறது. கேட்டுக் கேட்டு புளித்துப்போன வார்த்தைகளை மீண்டும் ஒருமுறை செவிமடுக்கிறோம், காலாவதியான வாக்குறுதிகளை மீண்டும் நினைவுகூருகிறோம், எம் உயிர் திருகி நிற்கும் வலியை மீண்டும் ஒருமுறை வாழ்கிறோம். ஆயினும், முடிவற்ற இச்சித்திரவதைக்கு மத்தியில், கடினமான, ஆனால் அவசியமான கேள்வி ஒன்றினைக் கேட்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்: பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு, எமது மக்களுக்கு, எமது இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைப்பதற்கான முயற்சிகளில் நாம் சிறிதளவேனும் முன்னேற்றம் அடைந்துள்ளோமா? அல்லது நினைவுகூரலினை நீதிக்கோரிக்கைக்கான அணுகுமுறையாகக் கட்டியமைக்காது, வெறும் சம்பிரதாயமாக மாற்றிவிட்டோமா?
இக்கேள்வி நினைவுகூரலின் நியாயத்தன்மையை கேள்விக்குட்படுத்துவதாக அடையாளப்படுத்தப்பட்டுவிடக்கூடாது. 26 வருட கால ஆயுதப்போராட்டத்தின் போது, குறிப்பாக ஆயுதப்போராட்டத்தின் இறுதிக்கட்டத்தின் போது எமக்கு ஏற்பட்ட துன்பத்தினதும் இழப்பினதும் அளவையோ அல்லது அதன் தீவிரத்தையோ இக்கேள்வி உதாசீனம் செய்யவில்லை. எமக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கான நீதி என்பது சமரசம் செய்ய முடியாத ஒன்றாகும். பொறுப்புக்கூறல், கௌரவம் மற்றும் உண்மைக்கான கோரிக்கை என்பன ஒரு இனமாக தார்மீக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எமக்குள்ள உரிமை. அந்நிலைப்பாட்டிலிருந்து நாம் எப்போதும் விலகிச்செல்லக்கூடாது.
ஆனால், தமிழர்களுக்கான நீதிப் பிரச்சினை 2009இல் தொடங்கவில்லை. அது, திட்டமிட்ட அரசியல் புறக்கணிப்பின் ஆரம்பமாக அமைந்த இலங்கை குடியுரிமைச் சட்டம் தொடக்கம் இன்றைய அரசியல் கட்டமைப்பு வரை நீண்டுள்ளது. சுதந்திரமடைந்ததிலிருந்து தமிழர்களை இலக்குவைத்து நிகழ்த்தப்பட்ட அரசியல், கலாசார, வரலாற்று, பௌதீக வன்முறைகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத “நிகழ்வுகள்” அல்ல; மாறாக, பல தசாப்தங்களாக நீடித்து வருகின்ற நன்கு திட்டமிடப்பட்ட, கட்டமைப்பு ரீதியான புறக்கணிப்பின் பல்வேறு அத்தியாயங்கள். முள்ளிவாய்க்கால் அவலம் என்பது எமது நீதிக்கோரிக்கையின் ஆரம்பப்புள்ளி அல்ல, மாறாக, எமது நியாயமான கோரிக்கைகள் காலகாலமாக உதாசீனம் செய்யப்பட்டதனால் ஏற்பட்ட பேரழிவின் அடையாளம்.
இந்த வரலாற்றுப் புரிதல் முக்கியமானது, ஏனெனில், இது நீதியைப் பற்றிய எமது அணுகுமுறையினை தீர்மானிக்கிறது.
பல ஆண்டுகளாக, சில தமிழ் (தேசிய) குழுக்கள், சர்வதேசப் பொறுப்புக்கூறலை நிச்சயம் நிகழக்கூடிய ஒன்றாகவே சித்தரித்து வருக்கின்றன. “சுயாதீனமான” மூன்றாம் தரப்பின் தலையீட்டின் மூலமான நீதி என்பது தாமதிக்கலாமே தவிர, சந்தேகத்திற்குரியதல்ல என்று இத்தரப்புகள் நடைமுறை சாத்தியதன்மையினை மறைத்து “தேர்தல்” அரசியல் செய்து வருகின்றன. இச்சித்தரிப்பு கணிசமான தமிழ் மக்களை “நீதிக்காக” காத்திருக்க வைத்துள்ளது. ஆனால், இக்காத்திருப்பு, தேசிய ரீதியில் நாம் ஒரு இனமாக முன்னெடுத்திருக்க வேண்டிய செயல்பாடுகளை மிக மோசமாக நலிவடைய வைத்துள்ளது. நீதிக்கான போராட்டம் என்பதனை “சர்வதேசம் தலையிடும் வரை காத்திருத்தல்” என்ற நிலைக்குக் மட்டுப்படுத்தியுள்ளது.
ஆயினும், சமகாலத்தில் பல பிராந்தியங்களில் இடம்பெற்றுவரும் (அரசியல்) நிகழ்வுகள் இதற்கு முரணாகக் காணப்படுகின்றன. மியான்மார் முதல் உக்ரைன் வரை, காசா முதல் ஈரான் வரை, சர்வதேசப் பொறுப்புக்கூறல் என்பது சட்டங்களையோ அல்லது தார்மீகக் கடமை என்பவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை, மாறாக, அது நாடுகளுக்கு இடையிலான அரசியல் உறவு, அரசியல் அணிசேர்வு, நாடுகளின், அணிகளின் நலன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது என்பதையே காட்டி நிற்கின்றன. சர்வதேச சட்டம் என்பது உலக அரசியல் அரங்கில் நிலவுகின்ற அதிகார இயக்கவியலுக்கு அமைவாக, பிராந்திய, உலக வல்லரசுகளின் தாளத்துக்கு ஆடுகின்ற கைப்பொம்மையின் நடனம் எப்போதும் இவ்வல்லரசுகளின் தாளத்துக்கு அமைவாகவே அமைகின்றது என்பதனை சுட்டிக்காட்டுகின்றன..
வல்லரசுகளின் கைப்பொம்மை என்று சர்வதேச சட்டத்தினை உருவகப்படுத்துவது (சர்வதேச) நீதிக்கு எதிரான வாதம் அல்ல. அது அரசியல் மாயைக்கு எதிரான வாதம். அம்புலியைக் காட்டி சோறு ஊட்டுகின்ற, (நடைமுறைச் சாத்தியமற்ற) சர்வதேச விசாரணையைக் கூறி வாக்கு சேகரிக்கின்ற தரப்பினருக்கு எதிரான குரல்.
எமக்கு இழைக்கப்பட்ட நீதிக்கான கோரிக்கை என்பது பேரம் பேச முடியாத ஒன்று. இருப்பினும், எமது இனத்தின் மீட்சிக்காக, தேசிய ரீதியிலான அழுத்தத்தினை உருவாக்காது, சக இலங்கையர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளாது, முற்றுமுழுதாக மூன்றாம் தரப்பிடம் தங்கியிருப்பது என்பது ஆரோக்கியமான உத்தியாக அமையாது.
எமது இனத்தின் நியாயமான போராட்டம் வெற்றியடையும் என்ற அரசியல் நம்பிக்கை நிரந்தரமாக வெளிநபர்களிடம் ஒப்படைக்கப்படும்போது, சமூகங்கள் தங்கள் சொந்த அரசியல் செயல்பாட்டின் மீதான கட்டுப்பாட்டை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்கின்றன. காலப்போக்கில், உத்திக்கு பதிலாக எதிர்பார்ப்புகளும், கட்டமைப்புத் திட்டமிடலுக்குப் பதிலாக வெறும் சம்பிரதாய நிகழ்வுகளுமே எமது போராட்டமாக திரிபடைந்துபோவதற்கான அபாயம் இருக்கின்றது. இது உணர்ச்சியின் தோல்வி அல்ல; இது அரசியல் வடிவமைப்பின் தோல்வி.
இதனை நீதிக்கான போராட்டத்தினை கைவிடுதல் என்று தவறாக அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது. மாறாக, எமது இனத்தின் இருப்புக்கு நீதி நிலைநாட்டப்படல் அவசியமானது என்பதனால், நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான உத்தியானது யதார்த்தத்தில் வேரூன்றியதாக இருக்கவேண்டும் என்பதனை சுட்டிக்காட்டுவதாகக் கொள்ளப்பட வேண்டும்.
கடந்த பல தசாப்தங்களாக, ஒரு இனமாக எமக்குக் கிடைத்த அனுபவம் ஒரு கடினமான உண்மையினை எமக்கு கூறியுள்ளன: உள்நாட்டு, புலம்பெயர் தமிழ் தரப்புகளால் வழங்கப்படும் “தவிர்க்க முடியாத சர்வதேசத் தலையீட்டை உறுதியளிக்கும்” அரசியல் வாக்குறுதிகள், நீதிக்கான மாற்று வழிகளைத் தேடுவதனைத் தாமதப்படுத்தக்கூடும் அல்லது முற்றாகவே தவிர்த்துவிடக்கூடும். சில சந்தர்ப்பங்களில், சர்வதேச தலையீட்டில் தங்கியிருத்தல் என்பது, அரசியல் இலாபங்களுக்காக மக்களைத் தொடர்ந்து அணிதிரட்டுவதற்கு சில தரப்பினருக்கு உதவினாலும், ஏனைய சந்தர்ப்பங்களில், எமது இனத்தின் இருப்பு, பாதுகாப்பு மற்றும் கௌரவத்திற்காக நீடித்த உள்ளக, மற்றும் அரசியலமைப்பு வழிமுறைகளைக் கட்டியெழுப்பும் கடினமான பணியை தாமதிக்கச்செய்கின்றன அல்லது முற்றாக அற்றுப்போகச்செய்கின்றன.
இங்குதான் நாம் ஒரு முக்கியமான விடயத்தினை விளக்கிக்கொள்ள வேண்டும். எமது இனத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கோருகின்ற போராட்டம் ஒருபோதும், எந்தவொரு காரணத்துக்காகவும் கைவிடப்படக்கூடாது. ஆனால், எமது இனத்தின் நலனை முன்னிறுத்தி நாம் கோருகின்ற நீதியைப் பெறுவதற்கான வழிமுறைகள் தொடர்பில் நாம் தொடர்ச்சியான மீள்-மதிப்பீட்டினை மேற்கொள்ள வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, நீதி என்பது குற்றவியல் பொறுப்புக்கூறலுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படுகின்ற ஒரு விடயம் அல்ல. தனிநபர் நீதி, அதாவது பாதிப்புக்குள்ளான ஒவ்வொருவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அதைப் பெறுவதற்கு முழு உரிமை உண்டு, மேலும் எந்தவொரு அர்த்தமுள்ள அரசியல் தீர்வினை அடைவதற்கும் இன்றியமையாத ஒரு அங்கமாக அது விளங்குகிறது. ஆனால், ஒரு இனத்துக்கான நீதி என்பது அத்துடன் முடிந்துவிட முடியாது என்பதோடு, உத்தரவாதமற்ற சர்வதேச தலையீட்டினை மட்டுமே சார்ந்திருப்பதாகவும் அமைய முடியாது.
நீதி என்பது, எமது ஒட்டுமொத்த இனக்குழுவிற்கும் பாதுகாப்பு, கௌரவம் மற்றும் அரசியல் உத்தரவாதம் ஆகியவற்றை வழங்கும் பரந்த கட்டமைப்பான கூட்டு நீதியையும் உள்ளதாக்கியது.
கூட்டு நீதி என்பது, எமது இனத்திற்கு பல தசாப்தங்களாக இழைக்கப்பட்ட அநீதிக்கும், துன்பங்களுக்கும் வழிவகுத்த கட்டமைப்புகளை மாற்றி, அவாறான ஒரு சூழ்நிலை மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்கின்ற கட்டமைப்புகளை எம்மையும் உள்வாங்கி உருவாக்குவதாகும். இதில் அரசியலமைப்புப் பாதுகாப்புகள், அர்த்தமுள்ள அரசியல் அதிகாரப் பகிர்வு, நிறுவனப் பொறுப்புக்கூறல், இராணுவமயமற்றதாக்குதல், மொழிச் சமத்துவம், நினைவுக்கூரும் உரிமைகள், பொருளாதார மீட்சி மற்றும் மீள நிகழாமைக்கான உத்தரவாதங்கள் ஆகியவை அடங்கும்.
அதாவது, நீதி என்பது கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கானது மட்டுமல்ல. மாறாக, எதிர்காலத்தில் எமது சமூகம் மீண்டுமொரு திட்டமிட்ட பாரபட்சத்திற்கு முகங்கொடுக்காமல் இருப்பதற்கான உத்தரவாதங்களைக் கொண்டமைந்த கட்டமைப்புகளை உருவாக்குவதனையும் குறிக்கின்றது.
இலங்கையைப் பொறுத்தவரை, தமிழர்களின் இனப்பிரச்சினை என்பது தனித்து அணுகப்படக்கூடிய பிரச்சினை அல்ல. மாறாக, அது நாட்டின் ஒட்டுமொத்த ஆளுகையில் காணப்படுகின்ற குறைபாடுகளுடனும், இடைவெளிகளுடனும் ஆழமாகப் பின்னிப்பிணைந்துள்ளது. 2022ஆம் ஆண்டின் நிகழ்வுகள் இதைத் தெளிவாக வெளிப்படுத்தின. 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினை வெறுமனே பொருளாதார முறைகேடாக அரசியல் தரப்புகள் உருவகப்படுத்தியிருந்தாலும், இனங்களுக்கிடையிலான, பிராந்தியங்களுக்கிடையிலான அதிகாரப்பகிர்வின்மை, பலவீனமான பொறுப்புக்கூறல் பொறிமுறை, அரசியல்மயமாக்கலினால் ஏற்பட்ட நிறுவனச் சிதைவு, நீண்டகால ஓரங்கட்டல் மற்றும் விடுபாட்டுரிமை ஆகியவற்றால் வலுவிழந்த ஓர் ஆட்சிமுறையின் வீழ்ச்சியாகவே அது அமைந்திருந்தது. ஒரு சமூகத்தின் அபிலாசைகளை அர்த்தமுள்ள வகையில் நிவர்த்தி செய்யத் தவறும் ஓர் அரசு, ஒரு நாட்டினுடைய அபிலாசைகளை சரியான முறையில் நிறைவேற்றுவது என்பது சாத்தியமற்ற ஒன்று.
ஆயினும், ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ள யதார்த்தத்தினையும் தாண்டி, சமூகங்களுக்கு இடையேயான அரசியல் கலந்துரையாடல் மட்டுப்படுத்தப்பட்டதாகவே அமைந்துள்ளது. சிங்கள/ தென்னிலங்கை அரசியல், பொறுப்புக்கூறல் மற்றும் கட்டமைப்புச் சீர்திருத்தம் தொடர்பான அர்த்தமுள்ள உரையாடலைத் தவிர்க்கிறது அல்லது எதிர்க்கிறது. அதேசமயம் தமிழ் அரசியல், தங்களுடைய நியாயமான அபிலாசைகளை, முழு நாட்டுக்கும் பயனளிக்கக்கூடிய விதத்தில் நீடித்து நிலைக்கக்கூடிய ஏற்பாடுகளாக தென்னிலங்கைக்கு அடையாளம் காட்டுவதில் தோல்வியடைந்துள்ளது.
இவ் இடைவெளி, அரசியல் மேடைப்பேச்சுகளை மட்டும் சார்ந்ததல்ல, இது கட்டமைப்பு ரீதியானது. பல தசாப்தங்களாக நீடிக்கும் முரண்பாடு, 26 வருட கால யுத்தம், அவநம்பிக்கை மற்றும் சமமற்ற அரசியல் களம் ஆகியவை (தமிழ், சிங்கள) இனங்களுக்கு இடையிலான மேற்கூறிய உரையாடலைக் கடினமாக்கியுள்ளன. இருப்பினும், இக்கடினமான சூழ்நிலை, அவ்வகையான உரையாடல்களுக்கான அவசியத்தை நீக்கப்போவதில்லை.
சமூகங்களுக்கு இடையே ஒரு அரசியல் பாலம் இல்லாமல், அரசியலமைப்பு ரீதியான தீர்வுகள் கோட்பாட்டளவில் சாத்தியமாக இருந்தாலும், நடைமுறையில் எட்ட முடியாதவையாகவே இருக்கின்றன.
அதேநேரத்தில், தமிழ் அரசியல் செயல்பாடானது, பரந்தளவிலான குடிமக்கள் அணிதிரட்டலையும் சமூகங்களுக்கிடையேயான உரையாடலையும் வளர்க்காமல், தேர்தல் பிரதிநிதித்துவத்திற்கும் சர்வதேச ஆதரவிற்கும் மிக அதிக முக்கியத்துவத்தை அளித்துள்ளது.
செயல்வாதமும் அரசியலும் ஒன்றல்ல. செயல்வாதம் நினைவுகளையும், தார்மீகத்தையும் முன்னிலைப்படுத்துகின்றது. ஆனால், அரசியலுக்குப் பேச்சுவார்த்தை, சமரசம், கூட்டணி அமைத்தல் மற்றும் நீடித்த நிறுவன ஈடுபாடு என்பன அவசியம். இவ்விரண்டையும் நாம் ஒன்றாகப்போட்டுக் குழப்பிக்கொள்ளக்கூடாது. அநேகமான சந்தர்ப்பங்களில், மேடைப்பேச்சுகளுக்கு (மட்டும்) பொருத்தமான வலுவான தார்மீகத் தெளிவுடனான செயல்வாதம், நேர்மறையான அரசியல் விளைவுகளை அடையத் தவறிவிடுகிறது.
இந்த இடைவெளியில், அரசியல் பொறுப்பு, அநேகமான சந்தர்ப்பங்களில், அரசியல் தலைவர்களிடமும் மூன்றாம்/ சர்வதேச தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுவிடுகிறது. காலப்போக்கில், இது குடிமக்களின் போராட்ட சிந்தனையை நலிவடையச்செய்து, நன்கு கட்டமைக்கப்பட்டு, தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டிய மக்கள் போராட்டத்தை பருவகால சடங்குகளாக மாற்றிவிடும். மூன்றாம்/ சர்வதேச தரப்பினருக்கான அரசியல் தலைவர்கள் காத்திருக்கும் நேரத்தில், சாதாரண மக்கள் மீதான பொருளாதார அழுத்தம் அதிகரிக்கின்றது. குடியகல்வு தீவிரமடைகிறது. சமூகக் கட்டமைப்புகள் பலவீனமடைகின்றன. அரசியல் நம்பிக்கையின்மை மற்றும் சோர்வு அதிகரிக்கிறது. ஆயினும், அரசியல் மேடைப்பேச்சுகள், மறுசீரமைப்பிற்குப் பதிலாக அரைத்த மாவையே அரைப்பதில் குறியாக இருக்கின்றன. இங்குதான் தீவிரமான மறுசிந்தனைக்கான தேவை அவசியமாகிறது.
நீதி என்பது பேரம் பேசக்கூடியதல்ல. அது, பல தசாப்தங்களுக்குப் புறக்கணிப்பு மற்றும் துன்பத்தை முகங்கொடுக்க சமூகத்தின் ஒரு அடிப்படைக் கோரிக்கையாகவே அமைகிறது. இருப்பினும், நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான வியூகமும் வழிமுறைகளும், பரிசீலனை, சரிசெய்தல் மற்றும் யதார்த்தவாதத்திற்கு உட்பட்டதாகவே இருக்கவேண்டும். தன்னைத் தகவமைத்துக் கொள்ளாத ஒரு அரசியல், தனது சொந்த இலக்குகளையே பலவீனப்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நிகழ்ந்து பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு, நினைவுகூருதல் என்பது மட்டும் எமக்குள்ள சவால் அல்ல. நினைவுகூருதல், மூன்றாம் தரப்பில்/ சர்வதேசத்தில் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்குவதாக அல்லாது, எமது (அரசியல்) செயல் திறனை வளர்க்கும் ஒரு உறுதியான அரசியல் திட்டமாக பரிணமிக்க முடியுமா என்பதுதான் எமக்குள்ள மிகப்பெரிய சவால்.
எமது இனத்தின் எதிர்காலம் வெளிப்புறத் (மூன்றாம் தரப்பில்/ சர்வதேச) தீர்வுகளில் மட்டும் சார்ந்திருக்க முடியாது. அது உள்நாட்டு அரசியல் கலந்துரையாடல், ஈடுபாடு, அரசியலமைப்புச் சிந்தனை மற்றும் சமூகங்களுக்கு இடையேயான தொடர்ச்சியான உரையாடல் ஆகியவற்றின் மூலமும் வடிவமைக்கப்பட வேண்டும்.
ஏனெனில் இறுதியில், நினைவுகூர்தல் நினைவுகளைப் பாதுகாக்கிறது. ஆனால், நினைவுகள் பாதுகாப்பிற்கு வழிவகுக்குமா அல்லது மீண்டும் ஒரு அழிவை நோக்கி இட்டுச்செல்லுமா என்பதை வியூகமே தீர்மானிக்கிறது.
நீதி என்பது பேரம் பேச முடியாத ஒன்று. ஆனால், நாம் அதை அணுகும் விதம், நேர்மையானதும் சில சமயங்களில் அசௌகரியமானதுமான மறுபரிசீலனைக்கு இடமளிப்பதாக அமைய வேண்டும்.
ஐங்கரன் குகதாசன்