Photo, Selvaraja Rajasegar
இலங்கையில் உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பின்னரும் நிகழ்ந்த பாலியல் வன்முறைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் (OHCHR) இந்த வருடத்தின் தொடக்கத்தில் வெளியிட்ட புதிய அறிக்கை போரின் மிகவும் அதிர்ச்சிகரமான விளைவுகளில் ஒன்றின் மீது கவனத்தை ஈர்க்கச் செய்திருக்கிறது.
2009ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த அந்தப் போரில் தப்பிப்பிழைத்த பலர் இன்னும் தீராத உடல் காயங்கள், மலட்டுத்தன்மை, உளவியல் பிரச்சினைகள் மற்றும் தற்கொலை எண்ணங்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.
இலங்கையிலிருந்து நான் செய்திகளை வழங்கிய அனுபவம் எனக்கு மீண்டும் மீண்டும் கற்பித்த ஒரு விடயம், ஒரு போரை அத்தனை எளிதாக நாம் கடந்து சென்றுவிட முடியாது. அது தப்பிப் பிழைத்தவர்களின் உடல்களிலும் மனங்களிலும் வாழ்கிறது; அவர்கள் குணமடைய போராடும் ஒவ்வொரு நாளும் அவர்களின் நினைவுகளில் அது மீண்டும் மீண்டும் மேலெழுகிறது என்பதேயாகும்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடுத்திருக்கும் சட்டவிரோதப் போர் மற்றும் ஈரானின் பதிலடித் தாக்குதல்கள் தொடர்பான தினசரி செய்திகளை அவதானிக்க நாம் சிரமப்படுகின்ற வேளையில், ஒன்று மட்டும் நிச்சயம், இந்த உலகம் முழுவதுமே போரின் முடிவின் செய்திக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.
வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் முதல், எரிபொருள் அல்லது எரிவாயுவை வாங்குவதற்கு வசதியற்ற குடும்பங்கள், மின்சாரக் கட்டணத்தை திடீரென உயர்த்த நிர்ப்பந்திக்கப்படுகின்ற அளவுக்கு பாரிய நிதி நெருக்கடியில் உள்ள அரசாங்கங்கள் வரை என நம் அனைவரினதும் நலன்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றது. அதிகார வெறி கொண்ட இரு மனிதர்களின் விருப்பத்தால் தொடங்கப்பட்ட ஒரு போரிலிருந்து அனைவரும் விரைவான நிம்மதியை எதிர்பார்க்கிறார்கள்.
மேற்கு ஆசியாவில் பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டணியின் வான் வழித் தாக்குதலுடன் தொடங்கிய தற்போதைய மோதல் ஒரு மாதத்தைக் கடந்துவிட்டது. இது நம் காலத்தின் பல போர்களில் ஒன்று.
2022ஆம் ஆண்டில் ரஷ்யாவின் ஊடுருவலையைடுத்து தொடங்கிய உக்ரைன் போர் இந்த ஆண்டு பெப்ரவரியில் ஐந்தாவது ஆண்டில் கால்பதித்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, காசாவில் பாலஸ்தீனியர்களைக் கொல்வதை இஸ்ரேல் நிறுத்தவில்லை – அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேவேளை, மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேறிகள் பாலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களைத் தொடர்கின்றனர்.
மேலும், இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக மோதலில் சிக்கியிருக்கும் சூடான், ஒரு பாரதூரமான மனிதாபிமானப் பேரழிவை எதிர்நோக்கி நிற்கிறது. இந்த ஆண்டு அங்கு 3 கோடி 37 இலட்சம் மக்களுக்கு உதவி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நேரடியாக நடக்கும் ஒரு போரின் தகவல்கள் இயல்பாகவே நம் கவனத்தை ஈர்க்கின்றன. அவை வாழ்வா சாவா என்பது பற்றியவை என்பதால் அவசரமானவையாகத் தோன்றுகின்றன. இரக்கமற்ற தலைவர்கள் தங்கள் அதிகாரத்தை கொலை செய்வதற்கான உரிமமாக தவறாகக் கருதும்போது, உலகம் உண்மையிலேயே ஆபத்தான இடமாக மாறுகிறது; இது வெகு தொலைவில் இருக்கும் நம்மைக் கூட பதற்றத்துடன் தகவல்களைத் தேடியறிய வைக்கிறது.
தற்போது நடந்து வரும் போர்கள் நிறுத்தப்பட வேண்டும். போர்க் களத்தில் ஒரு போர் முடிவுக்கு வருவது என்பது வலிமிகுந்த, சவாலான, பெரும்பாலும் குழப்பமான ஒரு மீட்சிப் பாதையின் ஆரம்பம் மட்டுமே என்பதை நாம் உணரும்போது, அதன் அவசரம் இன்னும் அதிகமாகிறது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை வெறும் எண்களாகச் சுருக்குவது, போரின் அழிவையோ அல்லது வன்முறை ஏற்படுத்தும் நீண்டகால பாதிப்பையோ முழுமையாக வெளிப்படுத்துவதில்லை.
இலங்கையில் அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டுப் போர் முடிவடைந்து அடுத்த மாதத்துடன் 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இலங்கை சுமார் மூன்று தசாப்தங்களாக போரை எதிர்கொண்டது. போரின் பாதிப்பை அதிகம் சுமந்த தமிழர்கள், குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்கள், “போர் முடிந்திருக்கலாம், ஆனால் இன்னும் முரண்பாடுகள் தீரவில்லை” என்று கூறியவண்ணம் இருக்கிறார்கள். அது அகலாத துயரமாகவும் மன உளைச்சலாகவும், இராணுவத்திடமிருந்து தங்கள் நிலங்களை மீட்டெடுப்பதற்கான போராட்டமாகவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடும் தொடர் முயற்சியாகவும் சிதைந்த பொருளாதாரத்தில் உயிர்வாழ்வதற்கான போராட்டமாகவும், தங்களுக்குத் தாங்களே ஒரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள முடியுமா என்ற அச்சமாகவும் வெளிப்படுகிறது.
நாடற்றவர்களாக மாற்றப்பட்டு, கண்ணியம் பறிக்கப்பட்ட ஒரு அகதியின் வாழ்வில், போர் என்பது கடந்த கால நிகழ்வு அல்ல; அது நிகழ்காலத்தின் ஒரு தொடர்ச்சியான கருப்பொருள். தப்பிப் பிழைத்தவர்கள் உயிருடன் இருப்பதற்காக நன்றியுடையவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுவதையோ அல்லது அதற்கும் மேலாக, மனிதர்களாகக் கூட மதிக்கப்படாத நிலையையோ எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
கொழும்பில் எனக்கு முன்னர் ‘தி இந்து’ வுக்காக பணியாற்றிய செய்தியாளர்கள் 1980 களில் இலங்கை உள்நாட்டுப் போரைச் செய்தியாக்கத் தொடங்கினர். நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் நானும் அதைச் செய்தியாக்குவதை நிறுத்தவில்லை.
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட இறுதிப் போர் நடந்த இடமான முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர் சுந்தரம் அனோஜன் சமீபத்தில் ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் “எனது வாழ்க்கையை நான் போருக்கு முன்னரானதாகவும் பின்னரானதாகவும் இரண்டு கட்டங்களாகப் பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
ஒரு போர் வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றியமைக்கிறது. அது பேரழிவின் தடயங்களை விட்டுச் செல்கிறது, அதன் பின்விளைவுகள் தப்பிப் பிழைத்தவர்களை நீண்டகாலத்திற்கு அச்சுறுத்துகின்றன. போர் என்பது ஒன்றும் காணொளி விளையாட்டு (Video game) அல்ல.
மீரா ஸ்ரீநிவாசன்
The long and lingering shadow of war என்ற தலைப்பில் ‘தி இந்து’ தளத்தில் வௌிவந்த கட்டுரையின் தமிழாக்கம். தமிழாக்கம் செய்தவர்: வீ. தனபாலசிங்கம்