தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) நீக்குவதற்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிப்பதற்கும் தனது 2024 தேர்தல் அறிக்கையின் ஊடாக (ஆங்கிலப் பதிப்பின் 4.9 சரத்து, 129ஆம் பக்கம்) வாக்குறுதி அளித்திருந்தது. அந்த இரு வாக்குறுதிகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதுடன், தேர்தலில் பிரதானமாக அமைந்த இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான எந்தவொரு விருப்பமும் தெரிவதாக இல்லை.
அதற்குப் பதிலாக, NPP அரசாங்கமானது பலரை PTA சட்டத்தின் கீழ் கைதுசெய்வதற்கும், நடைமுறையிலுள்ள சாதாரண சட்டங்களின் கீழ் விசாரணை செய்யவோ அல்லது வழக்குத் தொடரவோ கூடிய குற்றங்களுக்காகவும், தாம் நீக்குவதாக வாக்குறுதியளித்த அதே சட்டத்தை வெட்கமின்றிப் பயன்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விடவும் மிகக் கடுமையான விதிகளைக் கொண்ட “அரசைப் பாதுகாக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை” (Protection of the State from Terrorism Act – PSTA) கொண்டு வருவதற்கும் அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
செய்த மற்றும் செய்யத்தவறியவை?
இலங்கையர்களை அச்சுறுத்துவதற்காக அனைத்து அரசாங்கங்களும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தின. நானும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன், அதன் விளைவாக எனது கருத்துச் சுதந்திரம் மற்றும் நடமாடும் சுதந்திரத்திற்கு நீதிமன்றக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு, எனது மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்படுவதையும் நான் எதிர்கொள்ள நேரிட்டது. எனது வழக்கு சுமார் 5 ஆண்டுகள் வரை நீடித்ததுடன், நான் விடுவிக்கப்பட்ட பின்னரும் கூட சமூக மற்றும் அரசியல் ரீதியான அவதூறுகளுக்கும் இழிவுபடுத்தல்களுக்கும் உள்ளானேன்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான முறையில் தடுத்துவைக்கப்பட்டவர்களில் என்னைப்போன்ற மனித உரிமை ஆர்வலர்கள், மாணவர் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், ஒரு சட்டத்தரணி, ஒரு கத்தோலிக்க மதகுரு மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் உள்ளடங்குகின்றனர். அதிகாரத்திலுள்ள அரசாங்கங்களை விமர்சிப்பது, சவால் விடுப்பது, கேள்வி எழுப்புவது மற்றும் உயிர் பிழைத்தவர்கள் அல்லது உரிமைகள் மீறப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதுமே நாம் செய்த குற்றமாக இருந்தது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் நபர்களாக இருப்பது, இச்சட்டம் இன சிறுபான்மையினரை எவ்வாறு சமமற்ற முறையில் பாதிக்கிறது என்பதைக் காட்டுகின்றது.
நாட்டின் பிரஜைகளை நீண்டகாலம் தடுத்து வைப்பதற்கும், சித்திரவதை செய்வதற்கும் மற்றும் அவர்களின் சுதந்திரமான கருத்து வெளிப்பாட்டைத் தடுப்பதற்கும் ஒரு அனுமதிப் பத்திரமாகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மாறியுள்ளது. இச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த, குற்றவாளிகள் என உறுதிப்படுத்தப்படாத சில கைதிகள் விடுவிக்கப்படுவதற்கு 15 ஆண்டுகள் போன்ற நீண்ட காலம் எடுத்துள்ளது. சிலர் முறையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாமலேயே விடுவிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது அந்த நபர்களினதும் அவர்களது குடும்பத்தினரினதும் வாழ்க்கையைச் சீர்குலைத்துள்ளது. எவ்வாறாயினும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினால் தமது உரிமைகள் மீறப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித நட்டஈடும் வழங்கப்படவில்லை. நீண்டகாலத் தடுப்புக்காவலினால் ஏற்பட்ட சித்திரவதைகள், நோய்கள், மன உளைச்சல், அவதூறு மற்றும் வாழ்வாதார இழப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக ஒரு அங்கீகாரமோ, மன்னிப்புக் கோரலோ அல்லது நிதி ரீதியான இழப்பீடோ பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கவில்லை.
எப்படியிருப்பினும், இச்சட்டம் நடைமுறையிலிருந்த காலப்பகுதி முழுவதும் இடம்பெற்ற பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பதற்குப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தவறிவிட்டது. அதற்குப் பதிலாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னரான யுத்த காலத்திலும் அதன் பின்னரும் அளுத்கம மற்றும் திகன போன்ற பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளின் போதும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போதும் வன்முறைகள் பாரியளவில் தீவிரமடைந்தன.
பயங்கரவாதச் சட்டங்கள் நமக்குத் தேவையா?
பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு பாரிய அதிகாரங்கள் உள்ளன. அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி தேவைப்படுவது, நிறைவேற்று அதிகாரத்தின் சமநிலையைப் பேணுவதாகக் கருதலாம். இலங்கையில் பயங்கரவாதம் தொடர்பான சட்ட விதிகளைக் கொண்ட 15 சட்டங்கள் இருப்பதாக முன்னைய கட்டுரையொன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்வாறு இருந்தும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) என ஒரு தனிச் சட்டக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரத்திற்கு அசாதாரணமான மற்றும் அதீத அதிகாரங்களை வழங்குவதும், நீதிமன்றத்தின் பங்களிப்பையும் அரசினால் முன்னெடுக்கப்படும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்தும் திறனையும் பலவீனப்படுத்துவதுமே இதன் அடிப்படை அம்சமாகும்.
இதுவரை இருந்த அரசாங்கங்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கு மறுத்துவிட்டன. அதற்குப் பதிலாக, அதனைத் திருத்துவதற்கு அல்லது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA) மற்றும் எதிர்ப்புப் பயங்கரவாதச் சட்டம் (CTA) போன்ற சட்டங்களைக் கொண்டு வந்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக அவற்றை ஈடுசெய்ய முயற்சித்தன. ஆனால், அத்தகைய சட்டங்களின் தேவை குறித்த எந்தவொரு தர்க்கரீதியான விளக்கத்தையும் அந்த அரசாங்கங்கள் முன்வைக்கவில்லை.
பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு அல்லது அதற்குப் பதிலளிப்பதற்குத் தற்போதைய சட்ட அமைப்பில் ஏதேனும் இடைவெளிகள் காணப்பட்டால், அவை பொதுமக்களுக்குச் சுட்டிக்காட்டப்பட வேண்டும். அது மிகவும் அவசியமெனில், அதற்காகத் தண்டனைச் சட்டக்கோவை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை ஆகியவற்றைத் திருத்த முடியும். எவ்வாறாயினும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், எதிர்க்கட்சிக் குழுக்கள், அறிஞர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், மனநல நிபுணர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் விசேட நடைமுறைகள் போன்ற சர்வதேச நிபுணர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்த பின்னரே இதனைச் செய்ய வேண்டும்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (Anti – Terrorism Act), பயங்கரவாத தடைச் சட்டம் (Counter Terrorism Act) மற்றும் அரசைப் பாதுகாக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PSTA) ஆகியவை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) விடச் சிறந்தவை எனச் சிலர் வாதிடுகின்றனர். ஆனால், எந்தவொரு சட்டமூலத்தையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துடன் ஒப்பிடுவது என்பது அடிப்படையிலேயே ஒரு குழப்பமான அணுகுமுறையாகும். எந்தவொரு ஒப்பீடும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான மனித உரிமைத் தரநிலைகள் மற்றும் நடைமுறைகளுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டுமே தவிர, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்ற அபாயகரமான விதிகளைக் கொண்ட ஒரு சட்டத்துடன் அல்ல. PTA உடன் இவ்வாறான ஒப்பீடுகளைச் செய்வதன் மூலம், தரம் மற்றும் அளவுகோல்கள் கடுமையாகக் கீழ்மட்டத்திற்குத் தள்ளப்படுகின்றன. PSTA சட்டத்தின் சில விதிகள் PTA சட்டத்தை விடச் சிறந்ததாக இருந்தாலும், PTA-வை விடவும் தீங்கு விளைவிக்கும் பல விதிகள் PSTA-வில் காணப்படுகின்றன. அடிப்படையாக, NPP அரசாங்கமானது PTA சட்டத்திலுள்ள அடக்குமுறை அம்சங்களை அதன் சொல்லமைப்பிலும் நோக்கத்திலும் அவ்வாறே பேணி வருகின்றது. PSTA சட்டமூலத்தைக் கவனமாக வாசிக்கும்போது, அது குடிமக்களை, குறிப்பாக விமர்சகர்களை இலக்கு வைத்து அரச பயங்கரவாதத்திற்குத் துணைபோகும் ஒரு சட்டமூலம் என்பது தெளிவாகின்றது.
தீர்மானிப்பவர்கள் யார்?
PSTA சட்டத்தின் ஊடாக பயங்கரவாதம் என்றால் என்ன, பயங்கரவாதி யார் மற்றும் அதற்கான தண்டனை என்ன என்பதை நிறைவேற்று அதிகாரத்தரப்பே (ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர், பொலிஸார், இராணுவம், கடலோர பாதுகாப்புப் படையினர்) தீர்மானிக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நீதிமன்றம் இத்தகைய நடவடிக்கைகளை மீறி தீர்ப்புகளை வழங்கினாலும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த நேரத்தில் ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதன் மூலம் ஏற்பட்ட சேதங்கள் மீள முடியாத அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். PTA மற்றும் PSTA சட்டங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெறுவதற்கோ அல்லது பொறுப்புக்கூற வேண்டியவர்களை சட்டரீதியாகப் பொறுப்புக்கூற வைப்பதற்கோ வழிவகை இல்லாமை நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.
PSTA சட்டமானது, நோக்கம் மற்றும் விளைவுகளின் அடிப்படையில் பரந்த அளவிலான குற்றங்களை பயங்கரவாதம் என வகைப்படுத்துகிறது. இவ்வாறு ஒரு செயல் பயங்கரவாதமாக இல்லாவிட்டாலும், அதன் விளைவுகளை பயங்கரவாதம் என வகைப்படுத்தும் அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்தரப்பிற்கு உள்ளது. இவ்வாறான பல குற்றங்கள் சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழ் வந்தாலும், அவற்றை PSTA சட்டத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம் சாதாரண குற்றங்களுக்காகவும் PSTA சட்டத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. PSTA சட்டத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரத்திற்கு வழங்கப்படும் எல்லையற்ற அதிகாரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. நடைமுறையில் இவை, நிறைவேற்று அதிகாரத்தரப்பு தாமாகவே பயங்கரவாதம் எனப் பெயரிடும் ஒரு செயலுக்கும், அவ்வாறு பெயரிடப்பட்ட ஒரு நபருக்கும் நடைமுறையில் வழங்கப்படும் தண்டனைகளாகும்.
- இராணுவம் மற்றும் கடலோர பாதுகாப்புப் படையினர் நபர்களைக் கைது செய்யவும், ஆவணங்கள் உள்ளிட்ட எதனையும் பொறுப்பேற்கவும் முடியும் (PTA இதற்கு இடமளிக்கவில்லை).
- பொலிஸாரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் நீதிமன்றத்தின் விருப்பம் ஏதுமின்றி ஒரு வருடம் வரை நபர்களைத் தடுத்து வைக்க முடியும் (நீதவான் இரண்டு மாதங்களுக்குப் பின்னரே விளக்கமறியலில் வைக்கவோ அல்லது பிணை வழங்கவோ முடியும்).
- பொலிஸாரும் நீதவானும் இணைந்து ஒரு நபரை வழக்கு விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை தடுத்து வைக்க முடியும். அதன் பின்னரும் கூட நீதவான் பிணை வழங்க முடியுமே தவிர, அந்த நபரை விடுவிக்க முடியாது.
- ஜனாதிபதி தனது விருப்பத்திற்கேற்ப, தற்போதுள்ள சிறைச்சாலை அமைப்புக்கு இணையாக தற்காலிக தடுப்பு மையங்களையும் நிபந்தனைகளையும் உருவாக்க முடியும்.
- ஒரு நபர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவும் தண்டனையை ஏற்கவும் கட்டாயப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களை சட்டமா அதிபர் உருவாக்க முடிதல் (வழக்கு விசாரணையின்றி குற்றவாளியாக்கப்படுதல் மற்றும் தண்டனை பெறுதல்).
- ஜனாதிபதி எந்தவொரு அமைப்பையும் காலவரையறையின்றி தடை செய்ய முடியும்.
- பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எந்தவொரு இடத்தையும் தடைசெய்யப்பட்ட இடமாக அறிவிக்க முடியும்.
- நாட்டிற்குள் நடமாடுவதைக் கட்டுப்படுத்தவும், வெளிநாட்டுப் பயணங்களைக் கட்டுப்படுத்தவும், பெயரிடப்பட்ட நபர்களுடன் தொடர்புகொள்வதைத் தடுக்கவும், குற்றமொன்றுக்கு உடந்தையாக அமையலாம் எனக் கருதப்படும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கவும் பொலிஸார் நீதவானிடம் கோரிக்கை விடுக்க முடியும்.
நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தல்
தற்போது நடைமுறையிலுள்ள ஒரு சட்டத்தை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கு எமது அரசியலமைப்பு, பிரஜைகளுக்கு அனுமதி வழங்கவில்லை. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) போன்ற ஒரு சட்டம், அதன் சொல்லமைப்பிலும் சாராம்சத்திலும் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தையோ அல்லது சர்வதேச தரநிலைகளையோ மீறினாலும் கூட, அதனை நீதிமன்றத்தின் முன் சவாலுக்கு உட்படுத்த பிரஜைகளுக்கு வாய்ப்பு இல்லை. எவ்வாறாயினும், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒரு சட்டமூலத்தை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடியும். “அரசைப் பாதுகாக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்” (PSTA) இந்தத் தருணத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வரை அதனை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடியாது.
இதற்கு முன்னர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் திருத்தங்கள் மற்றும் அதற்குப் பதிலாகக் கொண்டுவரப்பட்ட சட்டமூலங்களை நானும் பாதிக்கப்பட்டவர்களும் மற்றும் சிலரும் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தினோம். நீதிமன்றத்தால் இங்கு செய்யக்கூடியவை மிகக் குறைவு என்பதும், இவற்றை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவது மிகவும் கடினமானது என்பதுமே எனது அனுபவமாகும். சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலமானது அரசியலமைப்பு விதிகளுக்கு முரணாக அமைகின்றதா என்பதைத் தீர்மானிப்பதற்கும், அவ்வாறு முரணாக அமைந்தால் அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் அல்லது சில சந்தர்ப்பங்களில் மக்கள் தீர்ப்பின் மூலம் (சர்வஜன வாக்கெடுப்பு) நிறைவேற்றப்பட வேண்டும் என அறிவுறுத்துவதற்கும் மாத்திரமே நீதிமன்றத்தின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்மானம் இங்கு நாடாளுமன்ற சபாநாயகருக்கே அறிவிக்கப்படும், எமது மனுதாரர்களுக்கு அல்ல. சில வருடங்களுக்கு முன்னர் நானும் மற்றும் சிலரும் நீதிமன்றத்தில் ஒரு சட்டமூலத்தைச் சவாலுக்கு உட்படுத்தியபோது, நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஒரு பெண் சட்டத்தரணி வெளியிட்ட Facebook பதிவின் மூலமே என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. அவர் தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினராவார்.
நாடாளுமன்றத்தில் ஒரு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டால் அது குறித்து நாம் அறிந்திருக்க வேண்டும் என்பதுடன், அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் அந்தச் சட்டமூலத்தைச் சவாலுக்கு உட்படுத்தி மனுத்தாக்கல் செய்யப்பட வேண்டும். அதற்காக நாம் சட்டமூலத்தின் பிரதிகளைப் பெற்றுக்கொண்டு அதன் உள்ளடக்கங்களை ஆய்வு செய்து, அதற்குத் தகுதியான சட்டத்தரணிகளைத் தேடிக்கொள்ள வேண்டும். அதற்கான நிதியையும் திரட்ட வேண்டும். அர்ப்பணிப்புள்ள சட்டத்தரணிகள் ஆவணங்களைத் தயார் செய்து நீதிமன்றத்தில் இலவசமாகத் தோன்றும் போது கூட, ஆயிரக்கணக்கான அச்சுப் பிரதிகள் (Print-outs), நிழற்பிரதிகள் (Photocopies) மற்றும் ஆலோசனை வழங்கும் சட்ட நிபுணர்களுக்கான கொடுப்பனவுகள் போன்ற செலவுகளுக்காகப் பணம் அவசியமாகின்றது. மனு மற்றும் பல இணைப்புகளைக் கொண்ட இந்த ஆவணங்கள் மிகவும் சட்டரீதியானவையாகவும் ஆங்கில மொழியிலும் அமைந்திருக்கும் என்பதால், பல பிரஜைகள் அவற்றைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு காலமும் உதவியும் தேவைப்படுகின்றது. இதற்கு முன்னர் எமது சட்டத்தரணிகள் மனு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்களைத் தயாரிப்பதற்குத் தேவைப்படும் காலத்தையும் உழைப்பையும் நான் குறைவாகவே மதிப்பிட்டிருந்தேன். நாம் மனுத்தாக்கல் செய்யும் அதே நேரத்தில் அதன் பிரதியொன்றைச் சபாநாயகரிடமும் ஒப்படைக்க வேண்டும். சட்டமூலங்களை கொழும்பிலுள்ள உயர் நீதிமன்றத்தில் மாத்திரமே சவாலுக்கு உட்படுத்த முடியும் என்பதால், கொழும்புக்கு அப்பால் வசிக்கும் பிரஜைகள் இதில் பங்கெடுப்பது மேலும் கடினமாகின்றது. இவ்வாறான நிலையில், சட்டமூலங்களை நீதிமன்றத்தின் முன் சவாலுக்கு உட்படுத்துவதற்கான அரசியலமைப்பு உரிமையை நனவாக்குவது மிகவும் கடினமான ஒரு பணியாகும். அத்துடன், ஆங்கில மொழியில் தேர்ச்சி இல்லாத, கொழும்புக்குத் தொலைவில் வசிக்கும், சட்ட மற்றும் நிதி வசதிகள் தாராளமாகக் கிடைக்காத சாதாரண பிரஜைகளுக்கு இது இன்னும் கடினமானதாக அமைகின்றது.
சமூக அரசியல் ரீதியாக சவாலுக்கு உட்படுத்தல்
நீதிமன்ற மறுஆய்வின் எல்லைகள் மற்றும் நடைமுறைச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, PSTA சட்டமூலத்தைச் சவாலுக்கு உட்படுத்துவதானது அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே சமூக மற்றும் அரசியல் ரீதியான முன்னெடுப்புகளின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA) மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் (CTA) போன்ற சட்டங்களைக் கொண்டு வந்தபோது, அவற்றை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு அந்த அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுத்தது இவ்வாறான இயக்கங்களே என்று நான் நம்புகிறேன். தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க போன்ற முன்னணி NPP தலைவர்கள் இவ்வாறான இயக்கங்களின் ஒரு அங்கமாக இருந்தனர். எவ்வாறாயினும், PTA சட்டத்தை ரத்து செய்வதற்கு நாம் தவறியமையால், முன்மொழியப்பட்ட மாற்றுச் சட்டங்களை நீக்குவது அவ்வளவு அர்த்தமுள்ளதாக அமையவில்லை. எனவே, இப்போது PTA சட்டத்தை நீக்குவதற்கும், PSTA சட்டமூலத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்கும் நாம் கடும் அவதானம் செலுத்த வேண்டும். NPP தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி PTA சட்டத்தை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தில் ஒரு சாதாரண பெரும்பான்மை அதற்குப் போதுமானதாகும். அதேபோன்று PSTA சட்டமூலமும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், PTA சட்டத்தை மீண்டும் அவ்வாறானதொரு அபாயகரமான சட்டத்தினால் ஈடுசெய்வதைத் தவிர்க்க வேண்டும். NPP-க்குத் தமது வாக்குகளை வழங்கியவர்கள் இப்போது முன்வர வேண்டும் என்பதுடன், NPP வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுக்க வேண்டும்.
ருக்கி பெர்னாண்டோ
2026 ஜனவரி 30ஆம் திகதி ‘அனித்தா’ பத்திரிகையில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்