நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசியப் பேரவை தூதுக் குழுவினர் தன்னைச் சந்தித்த ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்ராலின் இலங்கை தமிழர்களின் மனக்குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய அரசியலமைப்புச் செயன்முறையை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுப்பதற்கு இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
தன்னைச் சந்தித்த இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் தற்போது தங்களது நாட்டில் முன்னெடுக்கப்படும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தமிழர்களுக்கு தோற்றுவிக்கப்போகும் ‘பாரதூரமான ஆபத்துக்களை’ சுட்டிக் காட்டியதாக கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் முதலமைச்சர், சிறுபான்மை இனத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன் பன்முகத்தன்மை மற்றும் சமத்துவ கோட்பாடுகளைப் பேணிப்பாதுகாக்கவும் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்கும் கூட்டாட்சி ஏற்பாடுகளை புதிய அரசியலமைப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
அத்தகையதொரு அணுகுமுறையை புதுடில்லி கடைப்பிடித்தால் அது பிராந்திய அமைதியை உத்தரவாதம் செய்யும் நாடு என்ற இந்தியாவின் வகிபாகத்தை கௌரவிப்பதாக மாத்திரமல்ல, கூட்டாட்சியையும் மொழி மற்றும் இனத்துவ சிறுபான்மையினங்களையும் பாதுகாக்கும் இந்தியாவின் அரசியலமைப்பு விழுமியங்களுக்கு இசைவானதாகவும் அமையும் என்று கூறியிருக்கும் ஸ்ராலின், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பது என்ற போர்வையில் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் முயற்சிகளை துரிதப்படுத்தியிருக்கின்றது என்றும் உத்தேச கட்டமைப்பு அரசியல் சுயாட்சிக்கான தமிழர்களின் அபிலாசைகளை அலட்சியம் செய்வதன் மூலம் அவர்கள் மேலும் ஓரங்கட்டப்பட்டக்கூடிய அச்சுறுத்தலை தோற்றுவிக்கும் ஒற்றையாட்சி முறையை (ஏக்கியராஜ்ய) வலுப்படுத்துவதாக தோன்றுகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தியாவின் அனுசரணையுடன் 1985 ஓகஸ்டில் பூட்டானில் அன்றைய இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்க் கட்சிகள் மற்றும் ஆயுதப்போராட்ட இயக்கங்களுக்கும் இடையில் ஏற்பாடு செய்யப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தமிழ்ப் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட ‘திம்புக் கோட்பாடுகள்’ தற்போதைய பின்புலத்தில் தொடர்ந்தும் பொருத்தமானவையாக இருப்பதாக தன்னைச் சந்தித்த தமிழ்த் தலைவர்கள் வலியுறுத்தியதை பிரதமர் மோடிக்கு சுட்டிக் காட்டியிருக்கும் முதலமைச்சர் அந்தக் கோட்பாடுகளில் அடங்கியிருக்கும் அம்சங்களை உள்ளடக்காமல் கொண்டுவரப்படும் எந்தவொரு புதிய அரசியலமைப்பும் அநீதி மற்றும் உறுதிப்பாடின்மையை தொடரச் செய்யும் என்பதுடன் மீண்டும் மோதல்களுக்கும் மனிதாபிமான நெருக்கடிக்கும் வழிவகுக்கும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.
1987 இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கை உட்பட வரலாற்று ரீதியாக இலங்கையுடன் கொண்டிருக்கும் நட்புறவின் காரணமாக இலங்கையில் அமைதிக்கும் நீதிக்குமாக நீண்டகால அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய தார்மீகக் கடமையை இந்தியா கொண்டிருக்கிறது என்றும் ஸ்டாலின் எழுதியிருக்கிறார்.
ஸ்டாலினின் இந்தக் கடிதத்தை இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வைக் காணும் முயற்சிகளில் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு தமிழ்நாடு மூலமாக நெருக்குதலை பிரயோகிப்பதற்கு தங்களால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்குக் கிடைத்த முக்கியமான ஆரம்பக்கட்ட வெற்றியாக தமிழ் தேசிய பேரவை கருதுகிறது. கடந்தவாரம் யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்த அரசியல் கருத்தரங்கில் கஜேந்திரகுமார் நிகழ்த்திய உரை இதை தெளிவாக உணர்த்துகிறது.
தங்களது தமிழ் தேசியவாத நிலைப்பாட்டுக்கு தமிழ்நாட்டில் ஆதரவு அலையொன்று ஏற்படும் என்பதில் நம்பிக்கையைக் கொண்டிருக்கும் கஜேந்திரகுமார், இலங்கை தமிழரசு கட்சியையும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியையும் இணைத்துக்கொண்டு இந்த முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்று கூறுகிறார். தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரைக்கும் அந்த இரு கட்சிகளும் தமிழ் தேசிய நிலைப்பாட்டுக்கு தமிழ்நாட்டின் ஆதரவைப் பெறுவதில் தவிர்க்க முடியாத சக்திகள் என்பது அவரது நிலைப்பாடாக இருக்கிறது.
தனியொரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கொண்ட தமிழ் தேசிய பேரவை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் மூலமாக இத்தகைய முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது என்றால், ஒற்றையாட்சியை நிராகரிக்கும் தமிழ் தேசியவாத நிலைப்பாட்டைக் கொண்ட ஏனைய தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கூட்டாக செயற்படும் பட்சத்தில் தமிழ்நாட்டில் ஆதரவு அலையை உருவாக்குவதில் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்த முடியும் என்பது அவரது நம்பிக்கையாக இருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு சென்று அரசியல் கட்சிகளை சந்தித்த பிறகு இதைக் கூறுகின்ற கஜேந்திரகுமார், முன்கூட்டியே தமிழரசு கட்சியுடனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடனும் கலந்தாலோசித்து ஒரு கூட்டு நிலைப்பாட்டை எடுப்பதற்கு ஏன் முயற்சிக்கவில்லை என்று தெரியவில்லை. தமிழ் தேசியவாத அணிகளைப் பொறுத்தவரை, அவர்கள் தாங்களாக ஒரு நிலைப்பாட்டை எடுத்த பிறகு மற்றைய அணியினர் தங்களுடன் இணைந்துசெயற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற வழமையான நடைமுறையின் தொடர்ச்சியாகவே இதை நோக்க வேண்டியிருக்கிறது.
தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியவாத கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்றென்றைக்குமே கானல் நீராகவே இருக்கும் போன்று தெரிகிறது.
தமிழ்நாட்டு முதலமைச்சர் தனது கடிதத்தில் ‘ஏக்கியராஜ்ய’ என்ற பதத்தைப் பயன்படுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது. 2015 – 2019 காலப்பகுதியில் அன்றைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைக்குப் பிறகு சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் இலங்கை அரசின் தன்மை ‘ஏக்கியராஜ்ய’ வாக அமையும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கைவிடப்பட்ட இடத்தில் இருந்து அந்த அரசியலமைப்புச் செயன்முறை முன்னெடுக்கப்பட்டு தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று அநுர குமார திசாநாயக்க 2024 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியதை அடிப்படையாக வைத்துக் கொண்டு கஜேந்திரகுமார் ‘ஏக்கியராஜ்ய’ அரசியலமைப்பை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொண்டுவந்துவிடும் என்று நம்புகிறார் போலும்.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதைக் குறிப்பிட்ட ஜனாதிபதி திசாநாயக்க பிறகு கடந்த ஒரு வருடத்துக்கும் அதிகமான காலமாக பதிய அரசியலமைப்பு குறித்து எதையும் பேசவில்லை. மூன்று வருடங்களுக்குப் பிறகு அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என்று பதவிக்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் கூறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது அதைப் பற்றி பெருமளவுக்கு மௌனத்தைச் சாதிக்கிறது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்து அண்மையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய புதிய அரசியலைமைப்பின் மூலமாக மாத்திரமே ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படும் என்று கூறினார். ஆனாலும், அவர் காலவரையறை எதையும் கூறவில்லை. இலங்கையில் நிலைவரம் இவ்வாறு இருக்கும்போது தமிழ்நாடு முதலமைச்சர் இலங்கையில் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் செயன்முறைகள் துரிதப்படுத்தப்படுவதாக கூறியிருக்கிறார். அதனால், இலங்கை அரசியல் நிலைவரம் தொடர்பான ஸ்ராலினின் புரிதல் குறித்து சந்தேகம் எழுகிறது.
எது எவ்வாறிருந்தாலும், இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து மீண்டும் அவர் அக்கறை காண்பிக்க தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அதேவேளை, தமிழ்நாடு சட்டசபை தேர்தல்கள் நெருங்கும் நிலையில், தனது மாநிலத்தின் மற்றைய அரசியல் கட்சிகள் இலங்கை தமிழர் பிரச்சினையை கையிலெடுப்பதற்கு முன்னதாக பிரதமருக்கு கடிதம் எழுதியதன் மூலம் ஸ்ராலின் முந்திக் கொண்டார் என்ற விமர்சனமும் உண்டு.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மைப் பலம் இருக்கின்ற போதிலும், அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்குக் கிடைத்த வாய்ப்பை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரயம் செய்கிறது என்ற அபிப்பிராயம் தற்போது அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக குரல்கொடுத்து வந்த ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசியலமைப்பு சீர்திருத்தங்களை தாமதமின்றி முன்னெடுத்திருக்க வேண்டும் என்பதே பரந்தளவில் சிவில் சமூக அமைப்புக்களின் கருத்தாக இருக்கிறது. புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கு சர்வஜன வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு அரசாங்கத்தின் பதவிக் காலத்தின் முதல் வருடங்களே பாதுகாப்பான காலப் பகுதியாகும்.
அரசியலமைப்பை மாற்றுவது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து உற்சாகமான பிரதிபலிப்பு வெளிப்படாமல் இருப்பது அரசியலமைப்பு ரீதியான அல்லது ஒரு கட்சி சர்வாதிகாரத்தை நிறுவும் திசையில் அது நகரத் தொடங்கியிருக்கிறது என்ற விமர்சனம் ஏற்கெனவே எதிரணியினால் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையின் முன்னணி அரசறிவியல் நிபுணர்களில் ஒருவரான பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒரு வருட ஆட்சி குறித்து அண்மையில் எழுதிய ஆய்வுக் கட்டுரை ஒன்றில் இந்த அரசியலமைப்பு மாற்ற விவகாரம் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்;
“இலங்கையின் அரசியல் புதிய வருடத்திலும் அதற்குப் பின்னரும் பெரும்பாலும் மிகவும் சர்ச்சைக்குரியதாகவும் பதற்றம் நிறைந்ததாகவும் இருக்கப்போகிறது என்பதற்கான சகல அறிகுறிகளும் தெரிகிறது. முக்கியமான எந்தவொரு அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கும் இது உண்மையில் நல்ல செய்தி அல்ல. நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை முன்னெடுப்பதை தாமதிப்பது தேசிய மக்கள் சக்தியின் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு குறிப்பாக, அதன் நம்பகத்தன்மைக்குப் பாதகமானது.
“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதுடன் நாடாளுமன்ற – அமைச்சரவை எதேச்சாதிகாரத்தை தடுப்பதற்கு அவசியமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய நாடாளுமன்ற ஜனநாயகத்தை கொண்டுவருவதற்கு தேசிய மக்கள் சக்தி தவறுமானால், இலங்கை ஜனநாயகத்தின் எதிர்காலத்துக்கு இன்னொரு மக்கள் கிளர்ச்சி தேவையாக இருக்கலாம்.”
வீரகத்தி தனபாலசிங்கம்