Photo, Dr S. Jaishankar fb page
வழமை போன்றே வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் கடந்த வாரமும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை சந்திப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தின்போது மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்துவதுடன் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தன.
கடந்த மாதம் டித்வா சூறாவளியின் விளைவான பேரழிவில் இருந்து இலங்கை மீண்டெழுவதற்கான இந்தியாவின் உதவித்திட்டத்தை அறிவிப்பதற்காக ஜெய்சங்கர் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக கொழும்புக்கு ஒரு நாள் விஜயமாக கடந்த செவ்வாய்கிழமை வந்திருந்தார்.
இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவர்கள் இந்தியா இல்லத்தில் ஜெய்சங்கரை கூட்டாகச் சந்தித்துப் பேசினர். அவரிடம் கூறவேண்டிய விடயங்கள் குறித்து இந்தத் தலைவர்கள் முன்கூட்டியே தங்களுக்குள் வேறு ஒரு இடத்தில் கலந்தாலோசனை நடத்தியது இந்தத் தடவை வித்தியாசமான ஒரு அணுகுமுறையாக அமைந்திருந்தது. தங்களுக்குள் முரண்பாடுகள் இருக்கின்ற போதிலும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பேசும்போது தங்களுக்குள் ஒரு குறைந்தபட்ச புரிந்துணர்வாவது இருப்பது அவசியம் என்று இப்போது தமிழ் அரசியல்வாதிகள் சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றார்கள் போலும்.
இயற்கை அனர்த்தத்தினால் வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நிவாரண மற்றும் புனரமைப்புப் பணிகள் குறித்தும் இந்திய வெளியுறவு அமைச்சருடன் பேசிய இந்தத் தலைவர்கள் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கு இந்தியா இலங்கையை வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையே பிரதானமாக முன்வைத்தனர். அத்துடன், பிரதமர் மோடிக்கான கடிதம் ஒன்றையும் அவரிடம் இவர்கள் கையளித்தனர்.
மாகாண சபைகளை பற்றி வழமையாக அக்கறை காட்டாமல் இருந்துவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் மாகாண சபை தேர்தல்களை நடத்த வேண்டியது அவசியம் என்று ஏனைய தலைவர்களுடன் சேர்ந்து ஜெய்சங்கரிடம் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்புக்களை இடைநடுவில் நிறுத்திவிட்டு ஜெய்சங்கருடனான சந்திப்புக்காக அவர் அவசரமாக கொழும்பு திரும்பினார்.
மாகாண சபை தேர்தல்களை நடத்த வேண்டிய அவசியத்தை மற்றைய தமிழ் தலைவர்களுடன் சேர்ந்து இந்திய வெளியுறவு அமைச்சருக்கு கூறிய அதேவேளை கஜேந்திரகுமார் இலங்கையில் ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பரவலாக்கலை உருப்படியாகச் செய்வது சாத்தியமில்லை என்றும் அதனால் கூட்டாட்சி (Federal system) அடிப்படையிலான ஏற்பாடு மாத்திரமே இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமைய முடியும் என்றும் சுட்டிக்காட்டியதன் மூலமாக தன்னை மற்றையவர்களிடம் இருந்து வேறுபடுத்துவதில் அக்கறை காட்டினார்.
ஆனால், தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் உடனடியாகவே தாங்களும் இனப்பிரச்சினைக்கு நிலைபேறான அரசியல் தீர்வாக கூட்டாட்சி முறையே இருக்கமுடியும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருப்பதாகவும் தங்களைப் பொறுத்தவரை கூட்டாட்சி என்ற அடையாளப் பெயரில் அல்ல, அதிகாரங்களின் உள்ளடக்கத்திலேயே அக்கறை கொண்டிருப்பதாகவும் கூறினார்.
ஜெய்சங்கருடனான சந்திப்புக்குப் பிறகு கஜேந்திரகுமார் கடந்த வாரம் நடத்திய செய்தியாளர்கள் மகாநாட்டில் தெரிவித்த கருத்துக்கள் மற்றைய தமிழ்க்கட்சிகளுக்கும் தனது கட்சிக்கும் இடையிலான கொள்கை வேறுபாட்டை விளக்கும் நோக்கில் அமைந்திருந்தன. தமிழரசு கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் மாகாண சபை தேர்தல்களிலும் 13ஆவது திருத்தத்தின் நடைமுறைப்படுத்தலிலும் அக்கறை செலுத்திய அதேவேளை கூட்டாட்சி முறையின் அடிப்படையிலான அரசியலமைப்பை இலங்கை அரசாங்கம் கொண்டுவருவதற்கு இந்தியா ஊக்கம் கொடுக்க வேண்டும் என்பதை ஜெய்சங்கரிடம் வலியுறுத்தியுறுத்துவதில் மாத்திரமே கவனம் செலுத்தியதாகக் கூறினார்.
பிரதமர் மோடிக்கான கடிதத்தின் உள்ளடக்கம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அது என்றைக்குமே தெரிய வராமலும் போகலாம் என்றும் கூட கஜேந்திரகுமார் செய்தியாளர்களிடம் கூறினார். அந்தக் கடிதத்தில் மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளடங்கியிருக்கிறதே தவிர, கூட்டாட்சிமுறை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று நம்பகமாகத் தெரியவருகிறது.
மாகாண சபை தேர்தல் தொடர்பிலான தமிழ்க் கட்சிகளின் வலியுறுத்தலோ அல்லது கூட்டாட்சி முறை பற்றிய நிலைப்பாடோ ஜெய்சங்கருக்கு புதியவை அல்ல. வெளியுறவு அமைச்சராக மாத்திரமல்ல, அதற்கு முன்னர் வெளியுறவு செயலாளராக பதவி வகித்த நாட்களிலும் அவர் இலங்கை தமிழ்க் கட்சிளுடன் பல தடவைகள் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறார். அவர் வெளியுறவு செயலாளராக இருந்தபோது கொழும்பில் தமிழ்க் கட்சிகளுடனான சந்திப்பு ஒன்றில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு குறித்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கவனத்துக்குக் கொண்டுவந்த சந்தர்ப்பத்தில் இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கைக்குப் பிறகு பெருமளவு நிகழ்வுகள் இடம்பெற்றுவிட்டன என்றும் மீண்டும் இரு மாகாணங்களின் இணைப்பு குறித்து கொழும்புடன் பேசக்கூடிய நிலையில் இந்தியா இல்லை என்றும் கூறியிருந்தார்.
வெளியுறவு அமைச்சராக வந்த பிறகு கொழும்பில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பு ஒன்றில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை தானும் மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக நடைமுறைப்படுத்தாமல் இருந்துவரும் இலங்கை அரசாங்கங்களிடம் கூட்டாட்சி கோரிக்கையை எவ்வாறு முன்வைக்க முடியும் என்று ஜெய்சங்கர் கேள்வியெழுப்பினார். கஜேந்திரகுமாரும் கலந்துகொண்ட அந்தச் சந்திப்பில் கூட்டாட்சி முறை குறித்து வாழ்நாள் பூராவும் பேசிக் கொண்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
கடந்த வாரத்தைய சந்திப்பில் அவர் கூட்டாட்சி முறையைப் பற்றி முன்னரைப் போன்று எதையும் கூறியதாக தெரியவரவில்லை. மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு கொழும்பை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்ற தமிழ்த் தலைவர்களின் வேண்டுகோளுக்கு கூட நேரடியான பதில் எதையும் அவர் கூறவில்லை என்று அதில் கலந்துகொண்ட தலைவர் ஒருவர் தெரிவித்த தகவல்களின் மூலம் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. பதிலாக, இயற்கை அனர்த்தம் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் சூழ்நிலையில் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தச் செய்வது என்று தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடமே ஜெய்சங்கர் ஆலோசனை கேட்கும் தொனியில் பேசியதாகவும் தெரிய வருகிறது.
தேசிய மக்கள் சக்தியின் பிரதான அங்கத்துவக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா புதுடில்லிக்கு வரும்போது மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துவது குறித்தும் மாகாண சபைகள் முறைமையை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும் அவரிடம் வலியுறுத்திக்கூறுமாறு தமிழ் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கும் ஜெய்சங்கர் பதில் எதையும் கூறாமல் சகலவற்றையும் அவதானித்துக் கொண்டிருந்ததாக சந்திப்பில் கலந்துகொண்ட ஒரு தலைவர் கூறினார்.
சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதற்குப் பின்னரான 38 வருட காலத்தில் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இலங்கையை வழிக்குக் கொண்டுவர இந்தியாவினால் முடியவில்லை. பெருமளவுக்கு மாறிவிட்ட புவிசார் அரசியல் நிலைவரங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்தின் மீது இனப்பிரச்சினை விவகாரத்தில் எந்தவிதமான நெருக்குதலையும் கொடுப்பதற்கு மோடி அரசாங்கம் நாட்டம் காட்டும் என்று எதிர்பார்க்கவும் முடியாது.
ஆனால், மாகாண சபை தேர்தல்களை நடத்துவதுடன் இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டேயிருக்கும் என்பதை மாத்திரம் எதிர்பார்க்கலாம். அதுவும் குறிப்பாக, இயற்கை அனர்த்தத்தின் அழிவுகளில் இருந்து நாட்டை மீளக்கட்டியெழுப்புவதில் தீவிர கவனத்தை செலுத்துகின்ற ஒரு அரசாங்கத்திடம் மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று உடனடியாக கேட்பதற்கு மோடி அரசாங்கம் முன்வரும் என்றும் எதிர்பார்க்க முடியாது.
மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கத்தைக் கோரும் அரசியல் போராட்ட இயக்கம் ஒன்றை ஜனவரி முதல் முன்னெடுக்கப் போவதாக தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் சூறாவளிக்கு முன்னர் கூறியிருந்தார். மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் அக்கறையில்லாமல் இருந்துவரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவற்றை மேலும் பின்போடுவதற்கு சூறாவளியின் வடிவில் வசதியான சாட்டு ஒன்று கிடைத்திருக்கிறது.
இந்தியாவிடம் வேண்டுகோள் விடுப்பதை தவிர, தமிழ்க் கட்சிகளுக்கு வேறு மார்க்கமே இல்லை. ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வை முடக்காமல் கூட்டாட்சி அடிப்படையிலான தீர்வொன்றை புதிய அரசியலமைப்பின் மூலம் அறிமுகப்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு இந்தியாவைக் கொண்டு நெருக்குதல் கொடுப்பதற்கு தமிழக அரசியல் கட்சிகளின் உதவியை கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசியப் பேரவை நாடியிருக்கிறது.
தமிழகத்தில் இன்னமும் நான்கு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பிரசாரங்களில் மீண்டும் இலங்கை தமிழர் பிரச்சினையை முக்கியத்துவம் பெறச் செய்வதற்கான ஒரு முயற்சியாகவும் இதை சில அவதானிகள் கருதுகிறார்கள். மாகாண சபை தேர்தல் தொடக்கம் கூட்டாட்சிக் கோரிக்கை வரை இலங்கை தமிழர்களின் கதியை இந்தியாவின் காலடியில் சமர்ப்பித்துவிட்டு நிற்கின்றன தமிழ்க் கட்சிகள். இலங்கை அரசாங்கத்தை அசைப்பதற்காக இந்திய அரசாங்கத்தை முதலில் அசைப்பதே தற்போது பெரிய பிரச்சினையாக இருக்கிறது.
சமாதான உடன்படிக்கைக்கு பின்னரான காலப் பகுதியில் இந்தியாவைக் கையாளுவதில் தமிழர் தரப்பு இழைத்த மாபெரும் தவறையும் அதற்குக் காரணமான முக்கிய சக்திகளையும் பற்றிய தெளிவான விளக்கப்பாட்டை தமிழ்க் கட்சிகள் கொண்டிருப்பது அவசியம். மாகாண சபை முறைமையின் இன்றைய சீரழிவுக்கு தமிழர் தரப்பும் கணிசமானளவுக்கு காரணம் என்பதும் வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும்.
வீரகத்தி தனபாலசிங்கம்