Photo, Anura Kumara Dissanayake fb page

வரலாறு மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளபடி, பிரஜைகளின் நடத்தைகளைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகள், அரசியல் ரீதியான சட்டபூர்வத்தன்மையை வலுவிழக்கச் செய்து, அரசாங்கத்திற்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிவிடுகின்றன. சோவியத் ஒன்றியம் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். அடக்குமுறையானது பெரும்பாலும் கருத்து வேறுபாடுகளை ஒடுக்குவதை விட, சமூக இயக்கங்களையும் அரசியல் பங்கேற்பையும் ஊக்குவிக்கவே செய்கின்றது.

ஜனநாயகம் வெற்றியடையவும், நிலையான ஆட்சி வேரூன்றவும் வேண்டுமானால், அரசாங்க மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் பிரஜைகளை உள்வாங்கப்பட வேண்டும்; மக்கள் பங்கேற்பின் மூலம் இணக்கப்பாட்டை வளர்த்தெடுக்க வேண்டும். அத்துடன், காலாவதியான அடக்குமுறை நடவடிக்கைகளை விட, பரஸ்பர செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மக்களுக்கு எதிராக எடுக்கப்படும் பலவந்தமான நடவடிக்கைகள் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கும் அதேவேளை, மக்கள் இணக்கப்பாடும் பொறுப்புக்கூறலும் மாத்திரமே ஸ்திரத்தன்மையை பெற்றுத்தரும்.

2024 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது, தேசிய மக்கள் சக்தி (NPP) கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA – 1979) நீக்குவதாக உறுதியளித்தது. தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தின் “A Thriving Nation, A Beautiful Life” என்ற ஆங்கிலப் பிரதியின் 129ஆம் பக்கத்தில், “பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் நீக்குதல் மற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்களின் சிவில் உரிமைகளை உறுதிப்படுத்துதல்” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த குறிப்பிட்ட வாக்குறுதியை சிங்களப் பிரதியில் காண முடியவில்லை. இது தேசிய மக்கள் சக்தியும் அதன் சட்டக் குழுவும் விளக்கமளிக்க வேண்டிய ஒரு முரண்பாடாகும். இருப்பினும், இரண்டு பிரதிகளுமே நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறையை ஒழிப்பது பற்றி குறிப்பிடுகின்றன.

கடந்த 45 ஆண்டுகளாக, பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) பல இலங்கையர்களின், குறிப்பாக சிறுபான்மையின சமூகங்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளது. இது பொதுமக்களின் எதிர்ப்பு, அரசியல் இடையூறுகள் மற்றும் அரசியல் அதிகாரத்திற்கு எதிரான அச்சுறுத்தல்களை ‘அறிவிக்கப்படாத பயங்கரவாதச் செயல்களாக்க்’ கருதுகிறது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் இல்லாமலேயே, முந்தைய அரசாங்கங்கள் இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டன. பரந்த பயங்கரவாத எதிர்ப்பு விதிகள் சிவில் சமூகத்தின் கண்காணிப்பைக் கட்டுப்படுத்துவதோடு, அதிகாரப்பூர்வ ஊழலுக்கு வழிவகுக்கின்றன என்பதை அங்கீகரித்து, சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) கூட இந்தச் சட்டத்தை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன.

மக்கள் விடுதலை முன்னணி (JVP), தனது ஆரம்பகால கொள்கை பிரகடனத்தின் ‘அரசின் கட்டமைப்பு’ எனும் 14ஆவது பிரிவின் கீழ், அடக்குமுறை சட்டங்களை முழுமையாக ஒழிப்பதாக உறுதியளித்தது. இந்த அருவருப்பான சட்டத்தை இரத்துச் செய்யுமாறு அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களுக்கு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. பிரஜைகளுக்கு எதிராக மீண்டும் மீண்டும் தவறாகப் பயன்படுத்தப்பட்ட இந்த அபாயகரமான சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்பதே மக்களின் எளிய எதிர்பார்ப்பாக இருந்தது. ஒரு முற்போக்கான அரசாங்கம், போர் மற்றும் ஆயுத மோதல்களின் வடுக்களைக் கையாண்டு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இதுவே ஒரே வழியாகும்.

வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குதல்

“தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் தற்போது தனது தேர்தல் நேர்மை குறித்த ஒரு முக்கியமான சோதனையை எதிர்கொள்கிறது. NPP அளித்த பொருளாதார வாக்குறுதிகளைச் செயல்படுத்துவதில் தடைகள் ஏற்பட்டுள்ளன. முந்தைய ஆட்சியால் இயற்றப்பட்ட சட்டங்கள், எதிர்கால அரசாங்கங்களை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிக்கன நடவடிக்கைக் கட்டமைப்பிற்குள் பிணைத்துள்ளமை இதற்கு ஒரு காரணமாகும் (கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் மக்களுக்கு சில சலுகைகளை வழங்குவதற்காக NPP அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்ற போதிலும்). மேலும், பல்வேறு அரசியல் அபிலாஷைகள் மற்றும் ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாகவும் சில வாக்குறுதிகளின் முன்னுரிமைகள் மாற்றப்பட்டுள்ளன. இத்தகைய சூழல்களால் அல்லது வேறு காரணங்களால், நீண்ட காத்திருப்போ அல்லது பெரும் வளங்களோ தேவைப்படாத சில முக்கியமான விவகாரங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதாகத் தெரிகிறது.

எதிர்க்கட்சியில் இருந்தபோது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறியது போல, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) தொடர்வதற்கோ அல்லது அதற்குப் பதிலாக வேறொரு சட்டத்தைக் கொண்டு வருவதற்கோ எந்தவொரு நியாயமான காரணமும் இல்லை. எதிர்க்கட்சியில் இருந்து ஆட்சிக்கு வந்த பின்னர், அரச அடக்குமுறையின் தொடர்ச்சியான கருவியாக இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை வேறு வடிவத்தில் வைத்திருப்பதற்குத் தேவையான புதிதாக எதையாவது NPP கண்டறிந்துள்ளதா? எதுவாக இருந்தாலும், இது தேர்தல் வாக்குறுதி அல்ல.

PTA வை முழுமையாக ஒழிக்கவேண்டும் என்பதே தேர்தல் பிரச்சாரத்தின் போது இருந்த தெளிவான புரிதலாகும். பயங்கரவாதத் தாக்குதல்களைக் கையாளுவதற்குப் பதிலாக, சமூக – பொருளாதார அல்லது தேசிய ரீதியான குறைகளுக்குத் தீர்வு தேடுபவர்களுக்கு எதிராக பாரிய அளவில் அரச பயங்கரவாதத்தை தீவிரப்படுத்துவதன் மூலம் நிலைமையை மேலும் மோசமாக்குவதற்கு இச்சட்டம் பங்களிப்பு செய்துள்ளதாக இதனை ஒழிப்பதற்காகக் குரல் கொடுத்தவர்கள் நம்பியிருந்தனர்.

காரணம் எதுவாக இருந்தாலும், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் தான் ஒரு காலத்தில் எதிர்ப்புத் தெரிவித்த, முந்தைய அனைத்து அரசாங்கங்களின் பாதையையே பின்பற்றி, தற்போது தனது வாக்குறுதியிலிருந்து பின்வாங்குவது போல் தோன்றுகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) ஒழிப்பதற்குப் பதிலாக, சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளைப் பின்பற்றி, உலகளாவிய பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான ஒரு சட்டக் கட்டமைப்பைப் பரிந்துரைக்க அரசாங்கம் ஒரு குழுவை நியமித்துள்ளது. சர்வதேச மற்றும் உள்நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு இருக்கும் நிலையில், அரசாங்கம் இந்தச் சட்டத்தை நேரடியாக ரத்து செய்திருக்க வேண்டும்.

சர்வதேச சூழல்

சர்வதேச அளவில், பயங்கரவாதத்திலிருந்து அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படுவதாகக் கூறப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், பெரும்பாலும் அதற்கு நேர்மாறாகச் செயல்பட்டு, அதே உரிமைகளை மீறுவதோடு அவற்றைச் சீர்குலைக்கவும் செய்கின்றன. காஸாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மற்றும் இனப்படுகொலை இதற்குச் சிறந்த சமகால உதாரணமாகும். பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடுபவர்கள் பயங்கரவாதிகளாகக் கருதப்பட்டு, தாக்கப்படுகிறார்கள், கைது செய்யப்படுகிறார்கள் மற்றும் தடுத்து வைக்கப்படுகிறார்கள். ஆனால், நெதன்யாகுவின் பயங்கரவாதப் பிரச்சாரங்களை ஆதரிப்பவர்கள் எவ்வித விளைவுகளையும் எதிர்கொள்வதில்லை. ஆஸ்திரேலியாவில், ஹனுக்கா (Hanukkah) கொண்டாட்டத்தின் போது யூதர்கள் மீது நடாத்தப்பட்ட போண்டி பீச் (Bondi Beach) தாக்குதலுக்குப் பிறகு, எதிர்க்கட்சிகள் மற்றும் மறைமுக சியோனிச சக்திகளின் அழுத்தத்தினால், சியோனிசம் மற்றும் நெதன்யாகுவின் பயங்கரவாத ஆட்சியை விமர்சிப்பவர்களின் ஜனநாயக சுதந்திரத்தை மேலும் கட்டுப்படுத்த அரசாங்கம் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

அடக்குமுறை நடவடிக்கைகளை விட ஆலோசனை மற்றும் உரையாடல்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு சாதகமான சூழலை உருவாக்குவது, அமைதியான முறையில் மோதல்களைத் தீர்ப்பதற்கான ஒரு முக்கிய தூணாகக் கருதப்படுகிறது. இதுவே நிலையான உறுதிப்பாட்டை வளர்ப்பதோடு, அடிப்படை சமூக – பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது. அடக்குமுறைச் சட்டங்களை இயற்றுவதும் செயல்படுத்துவதும், இன்னும் கடுமையான சட்டங்களுக்கான தேவையையே உருவாக்குகின்றன. இது இறுதியில் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் நிகழ்ந்தது போன்ற வெடிப்புச் சூழல்களுக்கே வழிவகுக்கின்றன. ஏனெனில், இத்தகைய சட்டங்கள் எப்போதும் அடக்குமுறை, துஷ்பிரயோகம் மற்றும் தவறான பயன்பாடு ஆகிய நோக்கங்களுடனேயே உருவாக்கப்படுகின்றன. சமூகச் சுமைகளைக் களைவதும், வடுக்களைக் குணப்படுத்துவதும், பாலங்களை உருவாக்குவதுமே முற்போக்கான சமூகங்களுக்கான சிறந்த மாற்றாக எப்போதும் இருந்து வந்துள்ளன.

அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் (PSTA)

இந்தச் சூழலில்தான், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் (PTA) பதிலாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமான ‘அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டத்தை’ (PSTA) நாம் பரிசீலிக்க வேண்டும். தற்போது பரிசீலனையில் உள்ள மற்றும் பொதுமக்களின் கருத்துக்களுக்காகத் திறக்கப்பட்டுள்ள இந்த PSTA, மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு மேம்படுத்தப்பட்ட பதிப்பாக முன்வைக்கப்படுகிறது. இருப்பினும், PTA-வில் உள்ள மிகவும் கவலைக்குரிய அம்சங்களையும், முந்தைய அரசாங்கங்கள் 2018 இல் வர்த்தமானியில் வெளியிட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (CTA) மற்றும் 2023 மார்ச் மற்றும் செப்டெம்பரில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA) ஆகியவற்றின் கீழ் கொண்டுவர விரும்பிய விதிகளையும் இது அப்படியே கொண்டுள்ளது. CTA மற்றும் ATA ஆகிய இரண்டு சட்டமூலங்களுமே பரவலான விமர்சனங்களுக்கு உள்ளானதுடன், அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்தப் புதிய PSTA சட்டமூலமானது தேசிய மக்கள் சக்தி (NPP) மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைப் பிரதிபலிக்கவில்லை.

பரந்த வரைவிலக்கணம்

ஒரு பயங்கரவாதச் சூழலை உருவாக்குதல், பொதுமக்களை அச்சுறுத்துதல், இலங்கை அரசாங்கத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு அரசாங்கத்தையோ ஒரு செயலைச் செய்யுமாறு அல்லது செய்யாதிருக்குமாறு வற்புறுத்துதல் அல்லது போரை பிரசாரம் செய்தல் அல்லது நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது இறையாண்மையை மீறுதல் போன்ற நோக்கங்களுடன் திட்டமிட்டுச் செய்யப்படும் செயல்களைப் ‘பயங்கரவாதக் குற்றம்’ என PSTA சட்டமூலம் வரைவிலக்கணப்படுத்துகிறது. முன்னரைப் போலவே, இந்த வரைவிலக்கணம் இப்போதும் ஆபத்தான முறையில் மிகப்பரந்ததாகவே உள்ளது. தற்போதைய அரசாங்கம் உட்பட எந்தவொரு அரசாங்கமும், நியாயமான பொது மக்கள் போராட்டங்கள், சிவில் சமூக நடவடிக்கைகள் மற்றும் தொழிற்சங்கச் செயல்பாடுகளைப் ‘பயங்கரவாதம்’ என முத்திரை குத்த இதைப் பயன்படுத்த முடியும். குறிப்பாக, ‘அரசாங்கத்தை வற்புறுத்தும்’ நோக்கம் ஒரு பயங்கரவாதக் குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் பயங்கரவாதமாகக் கருதப்படாது என்று ஒரு விலக்கு நிபந்தனை இருந்தபோதிலும், இந்த அரசாங்கமோ அல்லது எதிர்கால அரசாங்கங்களோ பொதுப் போராட்டங்களைப் பயங்கரவாதச் செயல்களாக முத்திரை குத்தக்கூடிய அபாயம் இன்னும் நீடிக்கவே செய்கிறது.

விசாரணையின்றி நீண்டகாலம் தடுத்து வைத்தல்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமிருந்து தடுப்புக் காவல் உத்தரவைப் பெறுவதன் மூலம், பொலிஸ் மா அதிபர் எவரையும் தடுத்து வைக்க முடியும். ஆரம்பத்தில் இரண்டு மாதங்களுக்கு, பின்னர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு ஆண்டு வரை இதை நீடிக்க முடியும். இது நீதித்துறை மேற்பார்வை குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது. இத்தகைய உத்தரவு அமுலில் இருக்கும்போது, ஒரு நீதவானால் பிணை வழங்கவோ அல்லது சந்தேக நபரை விடுதலை செய்யவோ முடியாது. மேலும், ‘நியாயமான சந்தேகத்தின்’ அடிப்படையில் நபர்களை நிறுத்தவும், சோதனை செய்யவும், கைது செய்யவும் மற்றும் பொருட்களைக் பறிமுதல் செய்யவும் இராணுவத்தினருக்கு இந்த சட்டமூலம் அதிகாரத்தை வழங்குகிறது. 1971 மற்றும் 1988-89 காலப்பகுதிகளில் இத்தகைய சட்டம் இருந்திருந்தால், அதன் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருந்திருக்கும் என்பதை ஒருவரால் கற்பனை செய்து மட்டுமே பார்க்க முடியும்.

நீதித்துறை மேற்பார்வை, மனிதாபிமான முறையிலான தடுப்புக்காவல் நிபந்தனைகள், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நீதித்துறை அதிகாரிகள் வந்து பார்வையிடுதல், தனிமனித ரகசியங்களுக்கு மதிப்பளித்தல் மற்றும் குடும்பத்தினர் மற்றும் சட்டத்தரணிகள் வந்து பார்ப்பதற்கான உரிமைகள் போன்ற சில ஏற்பாடுகள், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது போல் தோன்றுகின்றன. ஆனால் யதார்த்தத்தில், இத்தகைய பாதுகாப்புகளைப் பெற்றுக்கொள்வது கடினமானதாகும். அதிகார துஷ்பிரயோகம் குறித்து மீளாய்வு செய்ய உயர் நீதிமன்றத்தை நாடுவது என்பது எளிதான அல்லது மலிவான காரியம் அல்ல.

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி அதிகாரங்கள்

அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தாமல், வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடை உத்தரவுகள் மற்றும் ஊரடங்குச் சட்ட உத்தரவுகளைப் பிறப்பிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடைக்கும். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எந்தவொரு இடத்தையும் “தடைசெய்யப்பட்ட பகுதி” என அறிவிக்க முடியும். அவ்வாறான இடத்தில் புகைப்படம் எடுப்பது அல்லது காணொளி எடுப்பது கூட மூன்று வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றமாக மாறும். ‘வழக்குத் தொடர்வதைத் தள்ளிவைத்தல்’ எனும் விதியின் கீழ், ஒருவரை விசாரணைக்கு உட்படுத்தாமல் ‘புனர்வாழ்வு’ அளிப்பதற்கு அரசாங்கத்திற்கு அனுமதி வழங்கும் ஏற்பாடுகள் ஆழமான கவலையை ஏற்படுத்துகின்றன; இது அடக்குமுறையை நுட்பமான முறையில் மீண்டும் அறிமுகப்படுத்துகிறது. ஒரு சந்தேக நபரை குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்ய முடிந்தால், அவருக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டாம் என்று ஒப்புக்கொண்டு, அவரை ஒரு ‘புனர்வாழ்வு’ திட்டத்திற்கு அனுப்ப சட்டமா அதிபரால் முடியும்.

கடுமையான தண்டனைகளும் கண்காணிப்பும்

அரசாங்கம் வரைவிலக்கணப்படுத்துவது போன்ற ஒரு “பயங்கரவாத அமைப்புடன்” தொடர்புகளைப் பேணுதல் அல்லது அரசாங்கம் அர்த்தப்படுத்துவது போன்ற “பயங்கரவாதப் பிரசுரங்களைப் பரப்புதல்” ஆகியவற்றுக்காக, ஒரு நபருக்கு மேல் நீதிமன்ற விசாரணையின் பின்னர் இருபது ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சிறைத்தண்டனையும் 15 மில்லியன் ரூபா வரை அபராதமும் விதிக்கப்படலாம். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நேரடி அல்லது மறைமுக நோக்கத்துடன் ‘கவனக்குறைவாக’ ஒரு அறிக்கையை விநியோகிப்பது உட்பட, எந்தவொரு பிரசுரத்தையும் விநியோகிப்பது, விற்பனை செய்வது அல்லது வைத்திருப்பது குற்றமாக்கப்பட்டுள்ளது.

இது டிஜிட்டல் சுதந்திரத்திற்கும் தனிமனித இரகசியத்திற்கும் (Privacy) கணிசமான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது. 11ஆவது சரத்து சில விதிவிலக்குகளை வழங்கிய போதிலும், கைதுகளை மேற்கொள்ளும் போது பொலிஸார் இத்தகைய விதிவிலக்குகளைப் புறக்கணிக்கும் விதத்தைக் கருத்தில் கொண்டால், இது நடைமுறையில் எவ்வாறு அமுல்படுத்தப்படும் என்பதை எவராலும் ஊகிக்க முடியும். இந்தச் சட்டமூலம் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக விரிவான அதிகாரங்களை வழங்குகிறது. Encrypted செய்யப்பட்ட டிஜிட்டல் தொடர்புகள் உட்பட எந்தவொரு தொடர்பாடலையும் இடையில் மறித்து அதன் குறியீடுகளை நீக்க​ (Decryption) முடியும். இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பலவீனமான தன்மையை நன்கு அறிந்த நிலையில், கைது செய்யப்பட்ட 24 மணித்தியாலங்களுக்குள் அது குறித்து அறிவிப்பதன் மூலம் அதிகார துஷ்பிரயோகத்தை எவ்வாறு தடுக்க முடியும் என்பது ஒரு நியாயமான கேள்வியாகவே உள்ளது.

சிவில் நடவடிக்கைகளைக் குற்றமாக்குதல்

கடந்த காலத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிகாரத்தில் இருந்திருந்தால், தற்போது ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தியினரால் ஏப்ரல் அல்லது நவம்பர் மாதங்களில் நினைவுகூரப்படும் “வீரர்களை” கொண்டாடும் எவரும் இந்த ஏற்பாடுகளின் கீழ் சிறையிலடைக்கப்பட்டிருப்பார்கள் அல்லது தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள். பரந்த வரைவிலக்கணங்கள் மூலம் தற்செயலாகவே சட்டபூர்வமான சிவில் நடவடிக்கைகள், ஊடகவியல் மற்றும் பொதுக் கலந்துரையாடல்கள் குற்றமாக்கப்படலாம் என்பதே பிரதான கவலையாக உள்ளது. புதிய சட்டமூலத்தின் கீழ், போராட்டத்தில் ஈடுபடும் நபர்களின் புகைப்படத்தைப் பிரசுரிக்கும் ஒருவர் கூட பயங்கரவாதியாக முத்திரை குத்தப்படலாம். 78ஆவது சரத்தானது மிகவும் பரந்த மற்றும் தெளிவற்ற வரைவிலக்கணமாக உள்ளது. அதன்படி, “நம்பகமான தகவல்” என்பது ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் மேற்கொள்ளும் சாதாரண செயற்பாடுகளைக் கூடக் குறிக்கலாம். அத்தகைய நடவடிக்கைகள் பாரிய குற்றங்களாக அர்த்தப்படுத்தப்படலாம்.

கட்டாயத் தகவல் வழங்கலும் நாட்டின் எல்லைக்கு அப்பாலான விரிவாக்கமும்

சட்டமூலத்தின் 15ஆவது சரத்தானது, பயங்கரவாதம் தொடர்பான தகவல்கள் அளிப்பதைக் கட்டாயமாக்குகிறது; இதனை மீறுபவர்கள் ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படலாம். நீதியை எதிர்பார்க்கும் மக்கள் மீது, குறிப்பாகப் பெரும்பான்மையினத்தைச் சேராத சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக இந்த ஏற்பாடுகள் கொடூரமான முறையில் பயன்படுத்தப்படுமா? தகவல் பெறுபவர்களைக் கூட அரசாங்கத்தின் உளவாளிகளாக மாறும்படி இது வற்புறுத்தக்கூடும்.

அதுமட்டுமன்றி, இந்தச் சட்டமூலமானது இலங்கையின் எல்லைகளுக்கு அப்பாலும் விரிவடைகிறது. பிரிவு 2(c)-இன் படி, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கும் இச்சட்டம் பொருந்தும் என்பது தெளிவாகிறது. தாய்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் புலம்பெயர் சமூகங்களுக்கு எதிராக PSTA ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படலாம். இதன் விளைவாக, வெளிநாட்டில் இருந்து சமூக ஊடகங்களில் இலங்கையின் நிகழ்வுகள் குறித்துக் கருத்துத் தெரிவிப்பது கூட சட்டவிரோதமான செயலாக மாறக்கூடும்.

முடிவுரை

மக்களை அல்ல, அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு கட்டமைப்பு

பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதம் சார்ந்த குற்றங்களைத் துஷ்பிரயோகம் செய்ய முடியாதபடி துல்லியமாக வரையறுக்கத் தவறியதன் மூலம், PTA, CTA மற்றும் ATA ஆகியவற்றில் இருந்த அதே சிக்கல்களையும் குறைபாடுகளையும் PSTA-வும் கொண்டுள்ளது. இதில் உள்ள விதிவிலக்கு சரத்துகள், ஏனைய வரையறைகளுடன் (அரசாங்கத்தை வற்புறுத்துதல் போன்றவை) முரண்படுவதோடு, நடைமுறைச் செயல்பாட்டின் போது அவை வலுவிழந்து போகும் அபாயத்தையும் கொண்டுள்ளன.

இந்தச் சட்டமூலத்தின் தலைப்பு அதன் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. அதன் நோக்கம் அரசாங்கத்தையும் அதன் மூலம் அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியையும் பாதுகாப்பதாகும். சிவிலியன்களுக்கு எதிரான வன்முறைகளைப் பிரயோகித்தல் மற்றும் மனித உயிர்களைப் பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் மக்கள் மையப்படுத்தப்பட்ட ஒரு கட்டமைப்பு இதில் இல்லை. பல ஏற்பாடுகள் இந்த நோக்கங்களைச் சிதைக்கின்றன. அந்த ஏற்பாடுகள் நியாயமான விசாரணைக்கான உரிமை மற்றும் தன்னிச்சையான தடுப்புக்காவலில் இருந்து சுதந்திரம் பெறுதல் உள்ளிட்ட அரசியலமைப்பிலும் சர்வதேச மனித உரிமை ஆவணங்களிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு முரணாக அமைந்திருப்பதாகத் தெரிகிறது.

PTA சட்டத்தைப் போலவே, PSTA சட்டமும் ஜனாதிபதி, பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு போதிய ஆதாரங்கள் இன்றி நபர்களைத் தடுத்து வைக்கவும், தெளிவற்ற முறையில் வரைவிலக்கணப்படுத்தப்பட்ட பேச்சுகளைக் குற்றமாக்கவும், முறையான நீதித்துறை மேற்பார்வையின்றி கூட்டங்கள் மற்றும் அமைப்புகளைத் தன்னிச்சையாகத் தடை செய்யவும் விரிவான அதிகாரங்களை வழங்குகிறது. இது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது போன்ற குற்றங்களையும் உள்ளடக்கும் வகையில் பயங்கரவாதத்தின் வரைவிலக்கணத்தை விரிவுபடுத்துகிறது; அத்துடன், பேச்சுரிமை மற்றும் ஒன்றுகூடும் உரிமையைக் கட்டுப்படுத்துவதோடு, பிடியாணை இன்றி எவரையும் நிறுத்தவும், விசாரணை செய்யவும், சோதனையிடவும் மற்றும் கைதுசெய்யவும் பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அனுமதி அளிக்கிறது. மேலும், எந்தவொரு குற்றத்திற்காகவும் தண்டிக்கப்படாத நபர்கள் மீது ‘சுயவிருப்பின் பேரில்’ மேற்கொள்ளப்படும் ‘புனர்வாழ்வை’ திணிக்க சட்டமா அதிபருக்கு இது அதிகாரம் அளிக்கிறது.

இந்தத் திட்டமிடப்பட்ட சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், NPP அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்துச்செய்வதாக வழங்கிய வாக்குறுதியை மீறியுள்ளது அல்லது அது வழிதவறிச் சென்றுள்ளது. முன்னைய PTA சட்டத்தைப் போலவே, இந்தப் புதிய சட்டமூலமும் சிவில் ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை ஒடுக்கப் பயன்படுத்தப்படலாம்.

NPP கட்சியானது, எதிர்க்கட்சியில் இருந்த பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) அரச அடக்குமுறையின் ஒரு தொடர்ச்சியான கருவியாக வேறு வடிவில் வைத்திருப்பதை நியாயப்படுத்தும் வகையில் புதிதாக எதனையாவது கண்டறிந்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது. தமக்குக் கிடைத்த தேர்தல் ஆதரவு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச மற்றும் தேசிய மனித உரிமை அமைப்புகளின் ஒத்துழைப்புடன், அரசாங்கம் PTA சட்டத்தைத் திருத்துவதற்கான வழிகளைக் கண்டறிய ஒரு குழுவை நியமிப்பதற்குப் பதிலாக, அதனை முழுமையாக ரத்துச் செய்திருக்க வேண்டும்.

மக்கள் விரைவான சீர்திருத்தங்களை எதிர்பார்த்தனர். காலம் கடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக NPP கொண்டுள்ள அர்ப்பணிப்பு இப்போது சோதனைக்கு உள்ளாகியுள்ளது. அவர்கள் தமது பாதையிலிருந்து வழிதவறிச் சென்றுள்ளனரா என்பதற்கான விடை, அவர்கள் அடுத்து எடுக்கப்போகும் நடவடிக்கைகளின் மூலமே தீர்மானிக்கப்படும்.

லயனல் போபகே