Photo, COLOMBO TELEGRAPH

லங்கா சமசமாஜ கட்சியின் 90 வருடங்களை நிறைவு செய்திருக்கும் வேளையில் (18 டிசம்பர் 2025) இந்த கட்டுரை அரசியலமைப்பு விவகாரங்களில் அதன் நிலைப்பாடுகளை நினைவுமீட்டுகிறது.

சமசமாஜ கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது அதற்கு இரண்டு குறிக்கோள்கள் இருந்தன. இலங்கைக்கு முழுமையான அரசியல் சுதந்திரத்தைப் பெறுவதும் சோசலிச சமுதாயம் ஒன்றைக் கட்டியெழுப்புவதுமே அந்த குறிக்கோள்கள். இவற்றில் முதலாவது குறிக்கோள் இரண்டு கட்டங்களில் சாதிக்கப்பட்டது. சமசமாஜ கட்சி அதன் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தின் ஊடாக 1948ஆம் ஆண்டில் பாதியான சுதந்திரத்தை இலங்கை பெறுவதற்கு நேரடியாக உதவியது. பிறகு 1972ஆம் ஆண்டில் முழுமையான அரசியல் சுதந்திரத்தை பெறுவதற்கு கட்சி பங்களிப்புச் செய்தது. இரண்டாவது குறிக்கோள் ஒரு தொலைவிலான இலக்காகவே தொடர்ந்தும் இருந்து வருகிறது.

குடியுரிமைச் சட்டம்

சுதந்திரத்துக்கு பிறகு இரண்டாவது வருடமே மலையகத் தமிழ்ச் சமூகத்துக்கு குடியுரிமையையும் வாக்குரிமையையும் நிராகரிப்பதற்கு டி.எஸ். சேனநாயக்க அரசாங்கம் சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியது. 1947 பொதுத்தேர்தலில் மலையக தமிழர்களில் (பிரிட்டிஷ் குடிமக்களாக) பலர் இடதுசாரிகளுக்கு குறிப்பாக சமசமாஜ கட்சிக்கு சார்பானவர்களாக இருந்தனர்.

அந்தத் தேர்தலில் இலங்கை இந்திய காங்கிரஸ் ஏழு ஆசனங்களைக் கைப்பற்றியது. தோட்டத் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் பெருமளவில் வாழ்ந்த பகுதிகளில் அவர்களின் ஆதரவுடன் பல இடதுசாரி வேட்பாளர்களும் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகினர்.

இடதுசாரிகளுக்கு தோட்டத் தொழிலாளர்கள் ஆதரவு வழங்குவதன் விளைவாக நீண்டகால நோக்கில் தங்களுக்கு நேரக்கூடிய ஆபத்தை உணர்ந்த இலங்கை முதலாளி வர்க்கம் மலையக தமிழ் மக்களில் இலட்சக்கணக்கானவர்களின் குடியுரிமையை நிராகரிப்பதற்கு வழிசெய்யக்கூடிய முறையில் குடியுரிமைச் சட்டத்தில் (Citizenship Act) ‘குடிமக்கள்’ (Citizen) என்ற பதம் வரைவிலக்கணம் செய்யப்படுவதை உறுதி செய்துகொண்டது. அதன் விளைவாக அந்த மக்கள் தங்களின் வாக்குரிமையையும் இழந்தார்கள். அந்த நேரத்தில் சமசமாஜ கட்சி தலைமையிலான இடதுசாரிகள் அந்தச் சட்டத்தை எதிர்த்தார்கள்.

அந்த நேரத்தில் அரசாங்கத்தின் பங்காளியாக இருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த அதேவேளை, தங்களது சகோதரர்களான மலையகத் தமிழ்ச் சமூகத்தைப் பாதுகாப்பதில் தமிழ்த் தலைவர்களுக்கு இருந்த இயலாமை கொழும்பு அரசாங்கம் ஒன்றில் பங்காளியாக இருப்பதன் மூலம் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எந்த நன்மையையும் கொண்டுவராது என்பதை வெளிக்காட்டியதாக எஸ்.ஜே.வி. செல்வநாயகம் கூறினார்.

சிறுபான்மைச் சமூகங்கள் வாழ்கின்ற பிராந்தியங்களில் சுயாட்சி தேவையாக இருக்கிறது என்ற பாடத்தை இதில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வாதிட்ட செல்வநாயகம் இலங்கை தமிழரசு கட்சியை (Federal Party) ஆரம்பித்தார்.

மற்றைய சமூகங்களை அல்லது மதங்களை ஆட்படுத்தாத எந்தவொரு தகுதியீனத்துக்கும் அல்லது கட்டுப்பாட்டுக்கும் வேறு எந்தவொரு சமூகத்தை சேர்ந்தவர்களையும் ஆட்படுத்தக்கூடிய சட்டம் கொண்டுவர முடியாது என்று 1947 அரசியலமைப்பின் 29 சரத்து பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திய போதிலும், இலங்கையின் உயர்நீதிமன்றமோ அல்லது அன்று அதியுயர்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றமான இங்கிலாந்தின் பிறிவி கவுன்சிலோ (Privy Council) மலையகத் தமிழ்ச் சமூகத்துக்கு எந்த நிவாரணத்தையும் வழங்கவில்லை.

மொழிச் சமத்துவமும் இனப்பிரச்சினையும்

சிங்கள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் சமத்துவ அந்தஸ்தை வழங்குவதற்கு முன்னர் இணங்கிக்கொண்ட ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் 1955ஆம் ஆண்டில் தங்களது நிலைப்பாடுகளை மாற்றி சிங்களத்தை மாத்திரம் அரசகரும மொழியாக்குவதை ஆதரித்தன. அதைக் கடுமையாக எதிர்த்த சமசமாஜ கட்சி மொழிகளின் சமத்துவத்துக்காக உறுதியாகக் குரல் கொடுத்தது. அதற்கு முன்னதாக, பௌத்த பிக்குகள் குழுவொன்று கலாநிதி என்.எம். பெரேராவை சந்தித்து சிங்களத்தை மாத்திரம் அரசகரும மொழியாக்குவதற்கு இணங்கினால் அவரைப் பிரதமராக்குவதற்கு தயாராக இருப்பதாக கூறியது. ஆனால், அவர் அதை அடியோடு மறுத்துவிட்டார்.

“ஒரு மொழி, இரு நாடுகள்; இரு மொழிகள், ஒரு நாடு” என்ற கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வாவின் பிரபல்யமான எச்சரிக்கையை இலங்கை கவனத்தில் எடுத்திருந்தால், பிரிவினைவாதப் போரை தவிர்த்திருக்கலாம். சந்தர்ப்பவாத அரசியலைச் செய்வதற்கு இடதுசாரிகள் மறுத்ததால், அவர்கள் மக்களின் ஆதரவை இழந்தார்கள்.

1956ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அரசகரும மொழிச் சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றிய அன்றைய பாணதுறை உறுப்பினர் லெஸ்லி குணவர்தன பின்வருமாறு எச்சரிக்கை செய்தார்.

“நான் குறிப்பிடுகின்ற ஆபத்து இனக்கலவரங்கள் மூளக்கூடிய சாத்தியங்கள் மாத்திரமல்ல, நாடு பிளவடையக்கூடிய பேராபத்து இருக்கிறது. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பிரதானமாக தமிழ்பேசும் மக்களே வாழ்கிறார்கள் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். தங்களுக்கு  பாரதூரமானதும் திருத்தியமைக்க முடியாததுமான அநீதி இழைக்கப்படுவதாக அந்த மக்கள் உணருவார்களாக இருந்தால், நாட்டின் ஏனைய பாகங்களில் இருந்து பிரிந்து செல்வதற்குக் கூட அவர்கள் தீர்மானிக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. உண்மையில், ஏற்கெனவே தமிழ்பேசும் மக்கள் மத்தியில் ஒரு பிரிவினரிடம் பிரிவினையை வெளிப்படையாக நியாயப்படுத்தும் அபிப்பிராயம் நிலவுகிறது.”

1956ஆம் ஆண்டில் சிங்களம் மாத்திரமே அரசகரும மொழியாக்கப்பட்ட பிறகு 1987ஆம் ஆண்டில் இரு மொழிகளுமே அரசகரும மொழிகளாக முறைப்படியாக அங்கீகரிக்கப்பட்டதும் வரலாற்றின் ஒரு முரண்நகையாகும்.

1972 குடியரசு அரசியலமைப்பு

பிரிட்டனுடனான அரசியல் உறவுகளை முறித்துக்கொண்ட 1972ஆம் ஆண்டின் அரசியலமைப்பை வரைவதில் கொல்வினின் பங்களிப்பு பாரியது. நாடாளுமன்ற முறைமையைப் பேணிப்பாதுகாத்ததும் அடிப்படை உரிமைகளை அங்கீகரித்ததும் சமூகநீதியை ஆதரிக்கும் அரச கொள்கையை வழிநடத்தும் கோட்பாடுகளை சேர்த்துக்கொண்டதும் அந்த அரசியலமைப்பின் மேலதிக சாதனைகளாகும். அது பலவீனங்களையும் குறைபாடுகளையும் கொண்டிருந்தது. ஆனால், அவற்றுக்கான முழுப்பொறுப்பையும் கொல்வின் மீது சுமத்தும் எந்த முயற்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.

1972 அரசியலமைப்பு தொடர்பாக கொல்வின் ஒரு சிறிய நூலை எழுதினார். அதில் அவர் பெளத்த மதத்துக்கு வழங்கப்பட்ட இடம் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டார்:

“மதசார்பற்ற அரசு ஒன்றிலேயே எனக்கு நம்பிக்கை. ஆனால், அரசியல் நிர்ணய சபைகளினால் (Constituent Assemblies) அரசியலமைப்புக்கள் கொண்டுவரப்படும் போது அவை அரசியலமைப்பு விவகார அமைச்சரினால் செய்யப்படுவதில்லை.”

அவர் கூறியதன் அர்த்தம் அரசியலயைப்பு வரைவுகளின் இறுதி விளைவுகள் அரசியல் நிர்ணய சபைக்குள் உள்ள அதிகாரச் சமநிலையை பிரதிபலிக்கின்றன என்பதேயாகும். அரசியலமைப்பு வரைவுக்கு பங்களிப்புச் செய்தவர் என்ற வகையில் இந்தக் கட்டுரையாளரின் அனுபவம் வரைவாளர்கள் ஒரு வகிபாகத்தைக் கொண்டிருக்கும் அதேவேளை, சச்ச்சைக்குரிய விவகாரங்களில் இறுதி விளைவு சம்பந்தப்பட்ட அரசியல் சக்திகளில் தங்கியிருப்பதுடன் அந்தச் சக்திகளின் கூட்டு விளைவுகளைப் பிரதிபலிக்கிறது.

பெரும்பான்மையானவர்களின் மதம் என்ற வகையில் பௌத்த மதத்துக்கு ‘உரித்தான இடம்’ (Rightful place) வழங்கப்பட வேண்டும் எனறுதான் அரசியல் நிர்ணயசபையினால் அங்கீகரிக்கப்பட்ட மூலமுதல் யோசனையில் உண்மையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான மதம் தொடர்பான உபகுழு அதை ‘முதன்மையான’ ( Foremost place) என்று மாற்றியது. பௌத்த மதத்தை முழுநிறைவான பாதுகாப்புடையதாக (Inviolable) பிரகடனப்படுத்திய 1815 கண்டி ஒப்பந்தத்தில் தனது மூதாதையர்களில் ஒருவர் கைச்சாத்திட்டிருந்தார் என்பது திருமதி பண்டாரநாயக்கவின் கருத்தில் செல்வாக்குச் செலுத்தியதாக நம்பப்படுகிறது. பௌத்த மதத்தின் சடங்குகளையும் வழிபாட்டுத் தலங்களையும் பேணிப்பாதுகாப்பதாக பிரிட்டிஷார் அந்த ஒப்பந்தத்தில் உறுதியளித்தனர்.

1972 அரசியலமைப்பை வரைந்த குழுவின் ஒரு உறுப்பினரான கலாநிதி நிஹால் ஜயவிக்கிரம எழுதியிருப்பதைப் போன்று கொல்வினால் தயாரிக்கப்பட்ட மூலமுதல் வரைவு இலங்கையை ஒரு ஒற்றையாட்சி (Unitary state) என்று வர்ணிக்கவில்லை. ஆனால், பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க தான் நாட்டை ‘ஒற்றையாட்சி அரசு’ என்று பிரகடனம் செய்வேண்டும் என்று முன்மொழிந்தார். உத்தேச அரசியலமைப்பு ஒற்றையாட்சி கட்டமைப்பை (Unitary structure) கொண்டிருக்கும் என்கிற அதேவேளை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கள் வடிவத்தில் கணிசமான அளவுக்கு மாறுபட முடியும் என்பதால் நெகிழ்ச்சித்தன்மை அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே கொல்வினின் கருத்தாக இருந்தது. என்றாலும், முன்மொழியப்பட்ட சொற்தொடர் அரசியலமைப்பின் இறுதிவரைவுக்குள் வந்து சேர்ந்துவிட்டது.

“உகந்த சிந்தனையின்றி செய்யப்பட்ட இந்த ஒற்றையாட்சி அரசு ஏற்பாடு முற்றிலும் அநாவசியமான ஒரு அணிகலனாகும். அது நாளடைவில் இந்த தீவில் ஒரேதன்மையான சிங்கள அரசை (Homogeneous Sinhala state )   நிறுவுவதில் நாட்டம் கொண்ட தனிநபர்களினதும் குழுக்களினதும் போர்குரலாக மாறுகின்ற நிலையை எட்டியது” என்று கலாநிதி ஜயவிக்கிரம தெரிவித்திருந்தார்.

1972 அரசியலமைப்பில் சிங்களத்தையும் தமிழையும் அரச கருமமொழிகளாக்குவதற்கு தவறியது உண்மையில் இடதுசாரிகளுக்கு ஒரு தோல்வியேயாகும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீதிமன்றங்களில் தமிழை பயன்படுத்த அனுமதித்தமையும் நாட்டில் உள்ள எந்தவொரு நீதிமன்றத்திலும் தமிழ் மொழிபெயர்ப்புக்களை பெறுவதற்கான உரிமையை வழங்கியமையும் சிறிய சாதிப்புக்களேயாகும்.

அதிகாரப்பரவலாக்கம்

அரசியலமைப்பினால் உத்தரவாதப்படுத்தப்பட்ட நாடாளுமன்றப் பிரதிநிதித்துவமே தமிழர்களின் மூலமுதல் கோரிக்கையாக இருந்தது. அதை அடிப்படையில் அவர்கள் பிராந்திய சுயாட்சியை நாடுவதை விடவும் மத்தியில் அதிகாரத்தைப் பகிர்வதில் பெருமளவுக்கு விருப்பத்தைக் காட்டினார்கள். சமத்துவத்தின் ஊடாக இனங்களுக்கு இடையில் இணக்கத்தை உறுதிப்படுத்த முடியும் என்று இடதுசாரிகள் நம்பிக்கை கொண்டிருந்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

நெருக்கடி தீவிரமடைந்த பிறகு பிராந்திய சுயாட்சியே தீர்வாக அமையமுடியும் என்று நம்பிய என்.எம். பெரேரா தனது கட்டுரைத் தொகுப்பு நூல் ஒன்றில் பின்வருமாறு எழுதினார்:

“துரதிர்ஷ்டவசமாக, சிங்கள ஆதரவுத் தலைவர்கள் தடுமாற்றம் அடைந்த நிலையில், தனிநாடு ஒன்றைக் கோருவதில் இளம் தீவிரவாதிகள் முன்னோக்கிச் சென்றார்கள். இருபது வருடங்களுக்கு முன்னர் தமிழர்களை எதனால் திருப்திப்படுத்தக்கூடியதாக இருந்திருக்குமோ அதனால் அவர்களை இருபது வருடங்களுக்குப் பிறகு திருப்திப்படுத்த முடியாது. ஆரோக்கியமானதும் இணக்கப்போக்குடையதுமான உறவுகளை மீண்டும் ஏற்படுத்துவதாக இருந்தால், பிராந்திய சுயாட்சியின் வழியில் ஏனைய சலுகைகளை கொடுக்க வேண்டியிருக்கும்.”

என்.எம். பெரேராவின் மறைவுக்குப் பிறகு அவரின் ஆதரவாளர்கள் பிராந்திய சுயாட்சி யோசனையை (Regional self – government ) தொடர்ந்து ஆதரித்தனர். 1983 கறுப்பு ஜூலையின் வேதனையான அனுபவங்களுக்குப் பிறகு கூட்டப்பட்ட சர்வகட்சி மகாநாட்டில் கொல்வின், “இனப்பிரச்சினை என்பது வெறுமனே ஏதாவது ஒரு சமூகத்தின் பிரச்சினையல்ல, அது இலங்கையினதும் அரசினதும் பிரச்சினையாகும்” என்று பிரகடனம் செய்தார்.

இலங்கை தனியான ஒரு அரசுடன் கூடிய தனியான நாடாக தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்ற லங்கா சமசமாஜ கட்சியின் நிலைப்பாட்டை மீளவும் வலியுறுத்திய அதேவேளை, நிலத்தொடர்ச்சியான ஒரு பிராந்தியத்தில் கணிசமான எண்ணிக்கையில் தமிழர்கள் வாழ்கின்ற நிலையில், தற்போது ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்ற வடிவில் அரசினால் எந்தப் பயனும் இல்லை. அரசு, தேசம் மற்றும் அரசாங்கம் தொடர்பில் சமத்துவமான அந்தஸ்தை ஏற்படுத்துவதற்கு உதவுவதாக இருக்க வேண்டும். இடதுசாரிகள் கோட்பாட்டு அடிப்படையில் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை ஆதரித்தனர். அவ்வாறு செய்ததற்காக விஜய குமாரதுங்க உட்பட 200 க்கும் அதிகமான இடதுசாரிகள் தங்கள் உயிரைக்கொடுத்து விலையைச் செலுத்தினர். கொலைசெய்யப்பட்டவர்களில் 25 பேர் சமசமாஜிகள்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட சர்வகட்சி  பிரதிநிதித்துவக் குழுவுக்கு சமசமாஜ கட்சி அமைச்சரான திஸ்ஸ விதாரண தலைமை வகித்தார். அந்தக் குழு பிளவுபடாத நாட்டுக்குள் பரந்தளவிலான அதிகாரப்பரவலாக்தை செய்வதற்கான யோசனைகளை முன்வைத்தது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி ஒழிப்பு

கலாநிதி என்.எம். பெரேரா மகோன்னதமான நாடாளுமன்றவாதிகளில் ஒருவர் என்ற வகையிலும் உலகளாவிய நாடாளுமன்ற நடைமுறைகள் தொடர்பில் பிரத்தியேகமான அறிவைக் கொண்டிருந்தவர் என்ற வகையிலும் நாடாளுமன்ற முறைமையைப் பாதுகாப்பதற்காக உறுதியாகக் குரல் கொடுத்த ஒருவராக விளங்கியதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

1978 அரசியலமைப்பு தொடர்பாக எழுதிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூலில் அவர் இலங்கையில் கணிசமானளவுக்கு வெற்றிகரமானதாக நாடாளுமன்ற முறைமை முப்பது வருடங்களாக செயற்பட்டுவருகிறது என்றும் அதைக் கண்டு மேற்குலக அவதானிகள் பலரும் ஆச்சரியப்பட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இன்று அது நிறைவேற்று அதிகார  ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக குரல் கொடுப்பவர்களின் கைநூலாக விளங்குகிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பை இடதுசாரிகள் தடுமாற்றமின்றி தொடர்ச்சியாக ஆதரித்து வருகிறார்கள். அது தொடர்பிலான முயற்சிகளுக்கு லங்கா சமசமாஜ கட்சி முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பைச் செய்திருக்கிறது.

புதிய அரசியலமைப்பு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கும், மாகாணங்கள், மாவட்டங்கள் மற்றும் உள்ளூராட்சிகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்கும், ஆட்சிமுறையில் சகல சமூகங்களுக்கும் பங்கைக் கொடுக்கும் என்று தேசிய மக்கள் சக்தி அதன் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்திருந்தது. ஆனால், அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவது தொடர்பில் எந்தவிதமான தயாரிப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுவதாகத் தெரியவில்லை. அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்க வேண்டியது இடதுசாரிகளின் கடமையாகும்.

என்.எம். பெரேராவின் 120ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இவ்வருடம் ஜூன் 6ஆம் திகதி இந்த கட்டுரையாளர் ‘த ஐலண்ட்’ பத்திரிகையில் எழுதிய கட்டுரை ஒன்றில் பினவருமாறு குறிப்பிட்டிருந்தார்:

“இடதுசாரிகள் பலவீனமடைந்து சிதறுப்பட்டிருக்கக்கூடும். என்றாலும் ஒரு இடதுசாரி மாற்றுக்கான பொருத்தப்பாடும் தேவையும் தொடர்ந்து நிலைத்திருக்கிறது. மீண்டும் ஐக்கியப்பட்ட ஒரு கட்சியாக லங்கா சமசமாஜ கட்சியினால் அதன் 90ஆவது வருட நிறைவைக் கொண்டாடக்கூடியதாக இருந்திருக்குமானால், பலம்பொருந்தியதும் ஐக்கியப்பட்டதுமான இடதுசாரி இயக்கத்துக்கு வழிவகுக்க முடியும். அத்தகைய ஒரு முயற்சியே இடதுசாரி இயக்கத்தின் முன்னோடிகளான என்.எம். மற்றும் தலைவர்ளை கௌரவிப்பதற்கான சிறந்த வழியாக இருக்கும்.”

லங்கா சமசமாஜ கட்சியினதும் இடதுசாரி இயக்கத்தினதும் வரலாற்றை வெறுமனே பேசிக்கொண்டிருப்பது போதுமானதல்ல. இன்று தேவைப்படுவது செயற்பாடேயாகும். “இடதுசாரிச் செயற்பாட்டாளர்கள் இல்லாத கிரீடத்துக்காக சண்டை பிடிப்பதில் கெட்டிக்காரர்கள்” என்று பேர்னார்ட் சொய்சாவின் ஏளனமான கூற்றை தவறு என்று நிரூபிக்க வேண்டியது இடதுசாரிகளின் கடமையாகும்.

கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன