Photo, SHABEER MOHAMED

திருகோணமலையில் கடந்த வாரம் புத்தர் சிலை தொடர்பாக மூண்ட சர்ச்சையை கையாளுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்  கடைப்பிடித்த அணுகுமுறையும் அதற்கு  எதிரணி அரசியல் கட்சிகள் வெளிக்காட்டிய எதிர்வினையும் இதுகாலவரையில் இனவாத மற்றும் மதவாத அரசியலின் விளைவாக நாடும் மக்களும் அனுபவித்த அவலங்களில் இருந்து தென்னிலங்கை அரசியல் சமுதாயம் எந்தவிதமான படிப்பினையையும் பெறவில்லை என்பதை பிரகாசமாக வெளிக்காட்டியிருக்கிறது.

இலங்கையில் இனவாதமும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலையெடுக்க ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு எதிர்நோக்கக்கூடிய சவால்களையும் அரசியலில் மீண்டெழுவதற்கு எதிரணிக் கட்சிகள் பெரும்பான்மை இனவாத அணிதிரட்டலை செய்வதற்கு கிடைக்கக்கூடிய எந்தவொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தத் தவறப்போவதில்லை என்பதையும் திருகோணமலை சம்பவம் எமக்கு உணர்த்தியது.

திருகோணமலை கடற்கரையோரமாக அமைந்திருக்கும் ஸ்ரீ சம்புத்த போதி ரஜமகா விகாரை வளாகத்தில் நவம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை இரவோடிரவாக வைக்கப்பட்ட புத்தர்சிலையை பிக்குமாரின் எதிர்ப்புக்கு மத்தியில் பொலிஸார் அகற்றினர் என்ற போதிலும், மறுநாள் திங்கட்கிழமை நண்பகல் அந்த சிலை அதே இடத்தில் பொலிஸாரின் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு பௌத்த மத நிகழ்வுகள் இடம்பெற்றன.

இரவில் புத்தர் சிலைக்கு எவராவது சேதம் விழைவித்துவிடக்கூடும் என்ற காரணத்தினாலேயே பாதுகாப்பு கருதி அதை அகற்றியதாகவும் மீண்டும் அதே இடத்தில் அந்தச் சிலை வைக்கப்படும் என்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் அன்றைய தினம் முன்கூட்டியே அறிவித்திருந்தார்.

புத்தர் சிலை அகற்றப்பட்ட வேளையில் விகாரை வளாகத்தில் இடம்பெற்ற குழப்பநிலையைப் பயன்படுத்தி இலங்கையில் பௌத்த மதத்துக்குப் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது என்பதைப் போன்று எதிரணி கட்சிகள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஆவேசமாகக் குரலெழுப்பின. இந்து அல்லது கிறிஸ்துவ சிலை ஒன்று அது வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து பொலிஸாரினால் அகற்றப்பட்டிருந்தால் இத்தகைய அமர்க்களம் ஏற்பட்டிருக்குமா என்ற கேள்விக்கான பதிலை நாம் சொல்லித்தான் எவரும் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை.

நாடாளுமன்றத்தில் நவம்பர் 18ஆம் திகதி திருகோணமலை சம்பவங்கள் குறித்து பேசிய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க மத வழிபாட்டுத் தலத்தை அமைப்பது தொடர்பிலானதாக இந்த சர்ச்சை தோன்றுகின்ற போதிலும், வேறு கதையும் அதற்குள் இருப்பதாகக் கூறினார். சம்பவங்கள் குறித்து பாதுகாப்புச் செயலாளரிடம் அறிக்கை ஒன்றைக் கோரியிருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை நியாயப்படுத்துவதற்கு வேறு எந்த விவகாரமும் கிடைக்கவில்லை என்பதால் எதிரணியினர் இனவாதத்தை தூண்டிவிடுவதற்கு புத்தர் சிலை சர்ச்சையைப் பயன்படுத்துவதில் நாட்டம் காட்டுகிறார்கள் என்றும் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார். அவரைப் பொறுத்தவரை, நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்திருக்கும் நிலையில், அந்த சர்ச்சை முடிவுக்கு வந்துவிட்டது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என்று தாங்கள் கருதுகின்ற இடங்களில் மாத்திரமல்ல, பெளத்தர்கள் வசிக்காத இடங்களிலும் கூட பிக்குமாரில் ஒரு பிரிவினர் புத்தர் சிலைகளை இரவோடிரவாகக் கொண்டுவந்து வைப்பதும் பிறகு படிப்படியாக அரசாங்கங்களின் அனுசரணையுடன் விகாரைகளை கட்டியெழுப்புவதும் புதிய ஒரு விடயம் அல்ல. சம்பந்தப்பட்ட பகுதிகளின் மக்களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்புகின்ற வேளைகளில் அரச இயந்திரம் சட்டவிரோதமானது என்று அந்த மக்கள் குற்றம்சாட்டுகின்ற நடவடிக்கைகளுக்கு துணைபோவதே நடைமுறையாக இருந்துவருகிறது.

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட இடத்திலேயே மீண்டும் பொலிஸாரின் உதவியுடன் அது கொண்டு வந்து வைக்கப்பட்ட சம்பவத்தையும் அதற்கு அரசாங்கத் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தையும் மேற்கூறிய வழமையான நடைமுறையே தொடருகின்றது என்பதற்கான சான்றாக ஏன் கருதமுடியாது என்பதற்கு ஜனாதிபதியும் அரசாங்கத் தலைவர்களும் மாத்திரமே பதில் கூறவேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச உட்பட எதிரணி அரசியல்வாதிகள் புத்தர் சிலை சர்ச்சை தொடர்பாக கருத்து வெளியிட்டபோது இலங்கையின் அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முதன்மையான முன்னுரிமை கொடுக்கப்பட்டிருப்பதை அடிக்கடி சுட்டிக்காட்டியதை காணக்கூடியதாக இருந்தது.

ஆனால், அந்த முன்னுரிமையைப் பிக்குமாரில் ஒரு பிரிவினர் அல்லது மதவாத அடிப்படையில் சமூகங்களுக்கு இடையில் குரோதங்களை ஏற்படுத்த முயற்சிக்கும் சக்திகள் தங்களின் சட்டவிரோதமான அல்லது பௌத்த தர்மத்துக்கு மாறான நடவடிக்கைகளை நியாயப்படுத்த தவறான முறையில் கேடயமாகப் பயன்படுத்துவதை எவ்வாறு அனுமதிக்க முடியும்? தாங்கள் எதைச் செய்தாலும் அரசாங்கம் தட்டிக்கேட்க முடியாது என்ற எண்ணத்தை மகாசங்கத்தின் ஒரு கணிசமான பிரிவினர் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெளத்த மதத்துடன் தொடர்புடைய சகல பணிகளையும் முன்னெடுப்பதில் பிக்குமாருக்கு இருக்கும் சுதந்திரத்தில் தலையீடு செய்வதற்கு எவருக்கும் உரிமை கிடையாது என்று கூறும் பிரேமதாச பௌத்த மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணான அடாத்தான நடவடிக்கைகளில் பிக்குமாரில் சில பிரிவினர் ஈடுபட்ட எத்தனை சம்பவங்களை பகிரங்கமாக கண்டனம் செய்தார் என்ற கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை.

பௌத்த மதத்துக்கு அரசியலமைப்பு வழங்கியிருக்கும் முன்னுரிமையை சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விடுக்கக்கூடிய வகையிலான நடவடிக்கைகளுக்கு பிக்குமாரில் ஒரு பிரிவினர் பயன்படுத்துகிறார்கள் என்பது வெளிப்படையானது.

கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வன்முறைகளுக்கு தலைமை தாங்கியவர் என்று அறியப்பட்ட பிரச்சினைக்குரிய  பிக்கு ஒருவர்  புத்தர் சிலை சர்ச்சைக்குப் பிறகு கடந்த வாரம் திருகோணமலைக்கு சென்று சமூகங்களுக்கு இடையில் குரோதங்களை தூண்டும் வகையில் பேசியிருப்பதுடன் அரசாங்கத்துக்கு சவாலும் விடுத்திருக்கிறார். இஸ்லாமிய மதத்தை நிந்தனை செய்யும் விதத்தில் பேசியதாக நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்ட அவர் திருகோணமலை சர்ச்சையில் தன்னை ஈடுபடுத்துவதில் வலிந்து நாட்டம் காட்டுகிறார்.

பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்கள் இத்தகைய பிக்குமாரின் முறைகேடான செயற்பாடுகளை ஆதரிப்பதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அவற்றை அவர்கள் எதிர்ப்பதுமில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. கெடுதி செய்பவர்களினால் அல்ல, அந்த கெடுதியை தடுக்க எதையும் செய்யாமல் இருப்பவர்களினாலேயே உலகம் ஆபத்தானதாக இருக்கிறது என்ற அறிவியல் மேதை அல்பேர்ட் அயன்ஸ்டீனின் கூற்று நினைவுக்கு வருகிறது. கெட்டவர்களின் வெறுப்புப் பேச்சுக்களுக்கும் செயல்களுக்காகவும் மாத்திரமல்ல, நல்லவர்களின் மௌனத்துக்காகவும் இந்த தலைமுறையில் நாம் பச்சாதபப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று அமெரிக்க கறுப்பின தலைவர் மார்டின் லூதர் கிங் கூறினார்.

சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் இலங்கைக்கு ஒன்றும் புதியதல்ல. அது இலங்கையின் பெரும்பான்மை இனவாத அரசியலுடன் சமாந்தரமாக வளர்ச்சி கண்ட அருவருக்கத்தக்க ஒரு போக்காகும். ஆனால், சகல சமூகங்களுக்கும் அழிவை ஏற்படுத்திய மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போருக்குப் பின்னரும் கூட, தென்னிலங்கை அரசியல் சமுதாயம் சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை ஏற்றுக்கொள்ளத் தவறுவதே பெரும் கவலைக்குரியதாக இருக்கிறது.

அரசியலில் பெரும் செல்வாக்கைச் செலுத்துவதற்கு பௌத்த மதகுருமார் நாட்டம் காட்டுவதே இலங்கையில் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காணமுடியாமல் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். பிக்குமார் நேரடியாக அரசியலில் ஈடுபட்டு தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள். அவர்களின் செயல்கள் புத்தபெருமானின் அடிப்படைப் போதனைகளுக்கு முரணானதாக இருந்தாலும் கூட, நேரடி அரசியலில் ஈடுபடுவதில் இருந்து அவர்களை தடுக்க மகாநாயக்கர்களினால் கூட முடியாமல் இருக்கிறது. இலங்கையில் பௌத்தம் நடைமுறையில் ஒரு அரசியல் மதமாக மாற்றப்பட்டுவிட்டது.

தென்னிலங்கை அரசியல் வரலாற்றில் பெளத்த மதகுருமாரின் செல்வாக்கு பெருமளவுக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கிறது. இன்று தமிழர்களின் அரசியலிலும் முன்னென்றும் இல்லாத வகையில் மதவாதம் ஊடுருவுகின்ற போக்கை  காணக்கூடியதாக இருக்கிறது. இந்தியாவின் ‘இந்துத்வா’ அரசியலின் செல்வாக்கே இதற்கு காரணம் எனலாம். சிங்களவர்களாக இருந்தாலென்ன, தமிழர்களாக இருந்தாலென்ன இலங்கைச் சமூகம் அரசியலில் இருந்து மதத்தைப் பிரிக்காவிட்டால் இலங்கைக்கு எதிர்காலம் இல்லை.

ஜனாதிபதி திசநாயக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் வெறுமனே சகல குடிமக்களையும் சமத்துவமாக நடத்துவதே தங்களின் கொள்கை என்று கூறிக்கொண்டிருந்தால் மாத்திரம் போதாது. கடந்த காலத்தில் அரசாங்கங்கள் கடைப்பிடித்த பாகுபாடான கொள்கைகள் மற்றும் அடக்குமுறைகளின் விளைவாக சிறுபான்மைச் சமூகங்கள் அனுபவிக்கின்ற பிரத்தியேகமான பிரச்சினைகளை போக்குவதற்கு நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறை காட்டினால் மாத்திரமே சமத்துவமான குடிமக்கள் என்ற உணர்வை அந்த மக்கள் மத்தியில் படிப்படியாக ஏற்படுத்த முடியும்.

சாந்தமே உருவான புத்தர் சிலையை ஆக்கிரமிப்பின் ஒரு கருவியாக சிறுபான்மைச் சமூகங்கள் நோக்குகின்ற துரதிர்ஷ்டவசமான நிலைவரத்தை மாற்றியமைக்க வேண்டியதும் அரசாங்கம் தீர்வுகாண வேண்டிய அந்த பிரத்தியேகமான பிரச்சினைகளில் ஒன்று.

அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரங்களுக்கு இனவாதத்தையும் மதவாதத்தையும் பயன்படுத்துவதில் எதிரணி கட்சிகள் கொண்டிருக்கும் நாட்டத்தை திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை வெளிக்காட்டியிருக்கிறது. தங்களது தவறான ஆட்சிமுறையையும் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களையும் மறைப்பதற்காக பெரும்பான்மை இனவாத அணிதிரட்டலை தீவிரமாக முன்னெடுத்த முன்னைய ஆட்சியாளர்கள் பொருளாதார ரீதியில் நாட்டை வங்குரோத்து அடையச் செய்ததை நாட்டு மக்கள் மறந்துவிடக்கூடாது. மீண்டும் அத்தகைய அணிதிரட்டலை அனுமதித்தால் தொடர்ந்தும் அதே பிரச்சினைகளுடனேயே இலங்கையர்கள் வாழவேண்டியிருக்கும்.

வீரகத்தி தனபாலசிங்கம்