Photo, AP Photo/Eranga Jayawardena
வரலாற்றை நோக்கினால் சட்ட ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் இன, மதக் குழுக்களுக்கு இணக்கமாகவே இலங்கை செயற்பட்டு வருகின்றது. அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 9 இன் கீழ் பௌத்த மதத்திற்கு “முதன்மையான இடம்” அளிக்கப்பட்டாலும், உறுப்புரைகள் 10 மற்றும் 14(1)(உ) ஊடாக மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்திற்கான உரிமை பாதுகாக்கப்படுகின்றது. இலங்கை உச்ச நீதிமன்றம் மத சுதந்திரத்தை முழுமையான உரிமையாக அடையாளம் கண்டுள்ளது (உறுப்புரை 10). மேலும், பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும் கூட அனைவருக்கும் சமத்துவத்தையும் மத சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. மத சுதந்திரத்திற்கு அரசியலமைப்பு உத்தரவாதம் காணப்படுகின்றபோதும், தேசியப் பாதுகாப்பு, பொது ஒழுங்கு, பொது சுகாதாரம், ஒழுக்கம் அல்லது மற்றவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் போன்றவை காரணமாக ஒருவர் தனது மதத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமானது (உறுப்புரை 14(1)(உ) பல சட்டக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுகின்றது.
இருப்பினும், நீண்டகாலமாக நிலவிவரும் பல்வேறு போக்குகள் தொடர்ந்தும் மத சுதந்திரத்தைக் குறைத்து மதிப்பிட்டு, சட்டக் கொள்கை, அரச நடவடிக்கை என இரண்டையும் கையாள்கின்றன. சமூகத்தின் பிரச்சினைகளைத் தமது நன்மைக்காகப் பயன்படுத்தும் அரசியல் மற்றும் மத ரீதியான கடும்போக்குவாதக் குழுக்கள் மற்றும் அதிகரித்து வரும் மத உணர்வுகள் போன்றவை அதேயளவு தாக்கம் செலுத்தும் ஏனைய காரணிகளாக உள்ளன. தீவிர தேசியவாத பௌத்த இயக்கங்கள், சுவிசேஷ அமைப்புடன் அடையாளம் காணப்படும் குறிப்பிட்ட கிறிஸ்தவக் குழுக்களின் நடைமுறைகள், தீவிர இஸ்லாமிய மற்றும் இந்து குழுக்கள் மத சுதந்திரத்தையும் பன்மைத்துவத்தையும் குறைத்து மதிப்பிடும் சூழலுக்குக் காரணமாகின்றன. அரச மற்றும் அரசு சாரா பங்காளர்களிடையே வேரூன்றிக் காணப்படும் இத்தகைய போக்குகளின் வடிவங்கள் குறித்த “இலங்கையில் மத சுதந்திரத்தின் நிலைப்பாடு: ஆண்டறிக்கை 2024” என்ற தலைப்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக் கூட்டணியின் அண்மைய அறிக்கையின் முடிவுகளை இக்கட்டுரை சுருக்கமாக முன்வைக்கின்றது. மேலும், இலங்கையில் மத சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கான சூழலை ஆதரிக்கும் அல்லது குறைத்து மதிப்பிடும் சம்பவங்களையும் முன்னேற்றங்களையும் இக்கட்டுரை ஆராய்கின்றது. 2024 முதல் 2025 வரை இடம்பெற்ற முன்னேற்றங்களில் கவனம் செலுத்தும் அதேநேரம் எதிர்காலத்திற்கான கண்ணோட்டத்தையும் தருகின்றது.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மத சுதந்திரத்திற்கு முன்னுரிமை அளித்து, அதன் பாதுகாப்பை நிர்வாகம் மற்றும் கொள்கை முடிவுகளில் ஒருங்கிணைப்பதற்கு முந்தைய நிர்வாகங்களுடன் ஒப்பிடும்போது அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிகின்றது. தீவிரமான குழுக்களால் முன்வைக்கப்படும் தவறான மத விளக்கங்களுக்கு எதிரான ஆலோசனைக் குழுக்களை புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் ஊடாக 2025 அக்டோபரில் அரசாங்கம் நியமித்தது. “நான்கு முக்கிய மதங்கள் பற்றிய திரிவுபடுத்தப்பட்ட மற்றும் தவறாக வழிநடத்தப்படும் கருத்துகளைப் பரப்புவது குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு” பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறான சமீபத்திய முன்னேற்றங்களின் பின்னணியில், தற்போதைய இந்த அரசியல் சூழல் இவ்வாறான விவாதங்களை முன்னெடுப்பதற்குப் பொருத்தமானதாகவும் நேரத்திற்கேற்றதாகவும் உள்ளது என்ற புரிதலுடன் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
அரசியல் சூழலை மேம்படுத்துதல்
ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின்போது பௌத்த மதத்தின் பங்கு குறித்த அரசியல் செய்திகளில் NPP கொண்டிருந்த மாற்று நிலைப்பாடுதான் அதன் மீதான நம்பிக்கை அதிகரிக்கக் காரணமான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். தேர்தலில் ஆதரவைப் பெறுவதற்காக பெரும்பாலும் சிறுபான்மை சமூகங்களின் நலன்களில் கவனம் செலுத்தாமல், மத அடையாளங்களில் பெரிதும் நம்பியிருந்த முந்தைய தேர்தல் பிரச்சாரங்களைப் போலல்லாமல், NPP இன் 2024 பிரச்சாரம் அத்தகைய விமர்சனப் போக்கிலிருந்து விலகிக் காணப்பட்டது. இது அனைவரையும் உள்ளடக்கிய, வரவேற்கத்தக்க அரசியல் கலாச்சாரத்தை நோக்கிய சாதகமான மாற்றத்தைக் குறிக்கின்றது. ஒரு காலத்தில் தேர்தலின்போது வாக்காளர்களைக் கவர்ந்த பிளவை ஏற்படுத்தும் சொற்பிரயோகங்கள் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2024 இல் பெருமளவில் குறைந்து போயிருந்தன.
இந்த மாற்றம் மத சுதந்திரத்திற்கு மிகவும் உகந்த சூழலுக்கான தொனியை அமைக்க உதவியுள்ளதுடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) போன்ற முக்கிய அரச நிறுவனங்கள் சுயாதீனமாகச் செயல்படவும் பயனுள்ள தலையீடுகளை மேற்கொள்ளவும் உதவுகின்றது. HRCSL மத சுதந்திரம் தொடர்பான பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்திவருவதுடன் மத சுதந்திரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அரச தலையீடுகளையும் கண்காணித்து வருகின்றது. உதாரணமாக, 2024 ஜூன் மாதம் திருகோணமலை சாஹிரா கல்லூரியில் காதுகளை மூடும் வகையில் ஆடை அணிந்திருந்தமை காரணமாக 70 மாணவர்களின் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டதை ஆணைக்குழு விசாரித்தது. கண்காணிப்பாளர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டமை விசாரணையில் தெரியவர முடிவுகளை நிறுத்தி வைக்கும் முடிவு நியாயமற்றது எனத் தெரிவித்தது. மார்ச் 2018 இல் இடம்பெற்ற திகன கலவரம் தொடர்பான விசாரணை குறித்த அறிக்கையையும் 2025 செப்டம்பரில் HRCSL வெளியிட்டது. அந்த நேரத்தில் சமூக ஊடகங்கள் குறிப்பாக/ பேஸ்புக் மூலம் பரப்பப்பட்ட தவறான தகவலும் வெறுப்புப் பேச்சும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வன்முறையைத் தீவிரப்படுத்தியதில் கொண்டிருந்த பங்கினை இந்த அறிக்கை விரிவாகக் குறிப்பிட்டுள்ளது.
சட்டங்கள், கொள்கைகள் மற்றும் மத சுதந்திரம்
நாட்டின் நிர்வாகத்துடன் தொடர்புடைய பல முக்கிய சட்டங்கள் மத சுதந்திரத்தைப் பாதிக்கின்றன அல்லது அதனால் பாதிக்கப்படுகின்றன. அத்துடன், ஏனைய அடிப்படை உரிமைகளிலும் இவை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இத்தாக்கத்தை சட்டம் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது அல்லது அந்தச் சட்டத்தின் விதிகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதில் காணலாம்.
தண்டனைச் சட்டக்கோவை, 2007ஆம் ஆண்டின் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை சட்டம் (ICCPR சட்டம்), 1979ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA), மற்றும் சமீபத்திய 2024 ஆம் ஆண்டின் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் (OSA) ஆகியவை அத்தகைய சட்டங்களின் ஒரு தொகுப்பாகும். இச்சட்டங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதாகத் தோன்றினாலும், அவற்றில் உபயோகிக்கப்பட்டுள்ள பரவலான மற்றும் தெளிவற்ற சொற்கள் அவற்றைத் தவறாகப் பயன்படுத்த வழிவகுத்துள்ளன. பெரும்பாலும் சிறுபான்மை சமூகங்களை அநியாயமாகக் குறிவைக்கும் முறையில் அமைகின்றன.
சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையை இலங்கை அங்கீகரித்துடன், தேசியச் சட்டத்தில் இன்னும் அங்கீகரிக்கப்படாத சில ICCPR பிரிவுகளுக்கு உள்நாட்டு சட்டரீதியான அமல்படுத்தலை வழங்கும் நோக்கில் ICCPR சட்டத்தையும் இயற்றியது. தண்டனைச் சட்டக்கோவை மற்றும் ICCPR சட்டத்தில் உள்ள விதிகள் மதத்தை அவமதிப்பதாகக் கருதக்கூடிய வெளிப்பாடுகளைக் குற்றமாக்குவதன் மூலம் மத உணர்வுக்கு சிறப்பு பாதுகாப்பை வழங்குகின்றன என விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவை “நிந்தனைக்கு எதிரான நடைமுறைத் தடையை” உருவாக்குவதாக விபரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய கட்டுப்பாடுகளின் பரந்த நோக்கம், தேவை மற்றும் விகிதாசாரத்தின் சர்வதேச அளவுகோல்களைப் பூர்த்திசெய்யாமல் அளவுக்கு மீறிய தணிக்கையை ஏற்படுத்தும் ஆபத்தை விளைவிக்கின்றது. 2024 மே மாதத்தில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ICCPR சட்டத்தின் பிரிவு 3 இன் தவறான பயன்பாட்டைச் சுட்டிக்காட்டியது. திருகோணமலையில் நினைவேந்தல் நிகழ்வொன்றில் ஈடுபட்டதற்காக நான்கு பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டது மற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக அதன் பயன்பாட்டைச் சுட்டிக்காட்டியது. ICCPR சட்டத்தின் தவறான பயன்பாடு குறித்த நிலைப்பாட்டை ஆணைக்குழு மீண்டும் 2025 மே மாதம் வலியுறுத்தியது. மே மாதத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் அமைதியான நினைவேந்தல் நிகழ்வுகளை குற்றமாக்குவதையோ தடுப்பதையோ பொலிஸார் நிறுத்த வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக அவற்றை அரசியலமைப்பு மற்றும் இழப்பீட்டுச் சட்டத்தின் கீழ் தமிழ் சமூகத்திற்குக் கிடைக்க வேண்டிய சட்டப்பூர்வ உரிமைகளாக முறையாக அங்கீகரித்து பாதுகாக்க வேண்டும் என்றும் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்தது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் OSA ஆகியவை குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பிற்போக்குத்தனமான விதிகளைக் கொண்டிருப்பதாகவும் இன – மதக் குழுக்களைத் தேர்ந்தெடுத்துக் குறிவைப்பதாகவும் நீண்ட காலமாக விமர்சிக்கப்படுகின்றது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதற்கான அரசாங்க உறுதிமொழிகள் இருந்தபோதிலும், அது கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தப்படுவதாக 2025 ஆகஸ்ட் மாதம் ஐ. நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது குறிப்பிட்டார். அதைத் தற்காலிகமாக தடைசெய்யுமாறும் அவர் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார். அதற்கு முன்னர், 2025 ஏப்ரல் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் OSA ஆகிய இரு சட்டங்கள் குறித்து கவலைகளை எழுப்பியிருந்தது. இச்சட்டங்கள் வர்த்தகத்துடன் தொடர்புடைய முடிவுகளில் கவனத்தில் கொள்ளப்படுகின்றன என்பதையும், குறிப்பாக GSP+ வரிச்சலுகை திட்டத்தில் தொடர்ந்து தகுதி பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்திருந்தது. அதிகரித்து வரும் சர்வதேச அழுத்தத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, NPP அரசாங்கம் செப்டம்பர் 2025 இல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு நாடாளுமன்றத்திலும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்விலும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.
ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தாலும் இதேபோன்ற கேள்விகள் எழுந்துள்ளன. OSA இன் பிரிவு 16 இல் மத உணர்வுகளைச் சீற்றப்படுத்தும் நோக்கத்துடன் ஒரு குழுவின் மத நம்பிக்கைகளை அவமதிக்கும் அல்லது அவமதிக்க முயற்சிக்கும் எந்தவொரு தவறான அறிக்கையையும் ஒன்லைனில் வெளியிடுவது குற்றமாக வரையறுக்கப்படுகின்றது. ஆயினும், அந்த நோக்கம் எவ்வாறு நிரூபிக்கப்படும் என்பதற்கான தெளிவான அளவுகோல்களைச் சட்டம் வழங்கவில்லை. அதேபோன்று, பிரிவு 15, தவறான அறிக்கைகள் மூலம் சட்டபூர்வமான மதக் கூட்டங்களுக்கு இடையூறு விளைவிப்பதைக் குற்றமாகக் கருதுகின்றது. இவ்வாறு தெளிவில்லாமல், மிகவும் விரிவாக எழுதப்பட்ட விதிகள், சட்டபூர்வமான கருத்து வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. பிரிவு 16 ஐ ரத்து செய்வது உட்பட சட்டத்தில் திருத்தங்களை NPP அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 2025 இல் பொதுமக்களின் ஆலோசனைக்காக OSA ஐ முன்வைத்துள்ளமை அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையைக் குறிக்கின்றது.
பாலின சமத்துவச் சட்டமூலத்தின் சிறப்புத் தீர்மானம் கடந்த ஆண்டு நிகழ்ந்த மற்றொரு முக்கியமான முன்னேற்றம் ஆகும். மத சுதந்திரம் அல்லது நம்பிக்கையை மேம்படுத்துவதாகக் கூறப்படும் சில விதிகள் மற்றும் கொள்கைகள் சில நேரங்களில் கருத்துச் சுதந்திரம் மற்றும் பாலின சமத்துவம் போன்ற பிற உரிமைகளை மீறுவதற்கு எவ்வாறு பங்களித்துள்ளன என்பதை இது நிரூபித்தது. இந்தச் சட்டமூலம் ஏப்ரல் 17, 2024 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சட்டமூலத்தில் மதம் வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இது வேகமாக மத சுதந்திரம் குறித்த விவாதங்களின் மையப் புள்ளியாக மாறியது. இது இயற்றப்பட்டால், மதப் பணிகளில் இணைய விரும்புவோரின் சேர்க்கையில் மத நிறுவனங்கள் (சாசனம், மடங்கள், பிக்கு பல்கலைக்கழகங்கள், பிரிவேனாக்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் உட்பட) பாலின அடிப்படையிலான அளவுகோல்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் என்று மனுதாரர்கள் வாதிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பாலினத்திற்கு அப்பாற்பட்டு, ஓரினச்சேர்க்கையைக் குற்றமற்றதாக்குதல் மற்றும் ஒரே பாலினத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்குதல் போன்ற தொடர்புடைய பிரச்சினைகளுக்கும் நீட்டிக்கப்பட்டது. இந்தச் சட்டமூலம் ஏற்கனவேயுள்ள மத போதனைகள் மற்றும் நடைமுறைகளுடன் முரண்படும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இறுதியில், இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பின் உறுப்புரை 10 (சிந்தனை, மனசாட்சி மற்றும் மத சுதந்திரம்) மற்றும் உறுப்புரை 14(1)(உ) (மதம் அல்லது நம்பிக்கையின் வெளிப்பாடு) ஆகியவற்றை மீறுவதாகக் கூறியது. பௌத்தத்தைப் பொறுத்தவரை, “முதன்மையான இடம்” என்று கூறும் உறுப்புரை 9 ஐ மீறுவதாக நீதிமன்றம் மேலும் கண்டறிந்தது.
தொல்பொருள் பாதுகாப்பிடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சர்ச்சைகள்
அண்மைக் காலங்களில் வவுனியாவில் உள்ள வெடுக்குநாரி மற்றும் முல்லைத்தீவில் உள்ள குருந்தூர்மலை போன்ற மதத் தலங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் உள்ளூர் இந்து சமூகங்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன. 2018ஆம் ஆண்டில் இந்த இரண்டு இடங்களும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகக் குறிப்பிடப்பட்டதுடன், அடுத்தடுத்த ஆண்டுகளில் தொல்பொருள் திணைக்களம், இராணுவம் மற்றும் பௌத்தத் துறவிகள் ஆகியோரின் செயல்பாடுகள் இங்கு அதிகரித்தன. தொல்பொருள் கட்டளைச் சட்டம் மற்றும் தொடர்புடைய சட்டங்கள் இது போன்ற சந்தர்ப்பங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் பயன்படுத்தப்பட்டன. அவை சிறுபான்மை சமூகங்களைக் குறிவைத்து மத சுதந்திரப் பாதுகாப்பைக் குறைத்து மதிப்பிடுகின்றன. வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள காணிகள் அல்லது கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் தொடர்பான பல விதிகள், குறிப்பாக 1940 ஆம் ஆண்டின் 9 ஆம் இல. தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) பிரிவுகள் 6, 8, 18 மற்றும் 31 ஆகியவை இன – தேசியவாத நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுக்க இலக்கு வைக்கப்பட்ட முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மார்ச் 2024 இல் வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளில் ஈடுபட முயன்ற பல இந்து பக்தர்கள் மற்றும் பூசாரிகள் கைது செய்யப்பட்டனர். இது அந்த இடத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி, போராட்டங்களுக்கு வழிவகுத்தது. ஜூன் 2025 இல் ஒரு முக்கியமான நீதிமன்றத் தீர்ப்பில், குருந்தூர்மலையைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை முல்லைத்தீவு நீதிமன்றம் விடுவித்தது. வழக்கு விசாரணையின் போது, சர்ச்சைக்குரிய காணி தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமானது என்று அறிவித்து எந்த வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பதை அரசாங்கம் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகின்றது. இதன் விளைவாக, விவசாயிகள் மீதான வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டு, அவர்கள் விடுவிக்கப்பட்டனர். பல ஆண்டுகளாக அரசாங்கத்தின் ஆதரவுடன் அந்தப் பகுதியில் தொல்பொருள் தளமாகக் கருதி செயல்பாடுகள் இடம்பெற்று வந்தபோதிலும், சட்டப்பூர்வ அறிவிப்பு இல்லாததால் சர்ச்சைக்குரிய நிலத்தின் குறைந்தபட்சம் ஒரு பகுதிக்கேனும் திணைக்களத்திடம் முறையான உரிமை இல்லை.
இதேபோன்று, அம்பாறையில் உள்ள முள்ளிக்குளம் மலையில் தொல்பொருள் திணைக்களம் 1940ஆம் ஆண்டின் 9ஆம் இல. தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) 15 மற்றும் 16ஆம் பிரிவுகளைப் பயன்படுத்தி நிலத்தை தொல்பொருள் தளமாகக் கோரியது. இதன் மூலம் உள்ளூர் முஸ்லிம் சமூகம் மீண்டும் அப்பகுதியில் விவசாயத்தைத் தொடங்குவதைத் தடுத்தது. தொல்பொருள் கட்டளைச் சட்டத்திற்கு கூடுதலாக நகர்ப்புற மேம்பாட்டுப் பகுதிகளை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கும் 1946ஆம் ஆண்டின் 13ஆம் இல. நகர மற்றும் கிராமிய நிர்மாணக் கட்டளைச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) பிரிவு 6(2) வடக்கு மற்றும் கிழக்கில் புத்த விகாரைகளைக் நிர்மாணிப்பதற்கு உதவும் வகையில் “புனிதப் பகுதிகள்” என்று அறிவிக்கத் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற சூழ்நிலைகளில், இந்த மாகாணங்களில் உள்ள உள்ளூர் நீதிமன்றங்கள், சில சமயங்களில் இத்தகைய இன – தேசியவாத உந்துதல்களைத் தடுக்க முயற்சித்துள்ளன. இருப்பினும், நீதித்துறை அதன் பங்கை நிறைவேற்றினாலும் கூட அமுலாக்கம் நிச்சயமற்றதாகவே உள்ளது. நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணிப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவது அரச இயந்திரத்தைப் பொறுத்தது ஆகும். இது பெரும்பாலும் பௌத்த மதகுருமார்கள் மற்றும் இராணுவத்துடன் நெருங்கிய இணக்கத்துடன் செயல்படுகின்றது. இக்குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு அப்பால், 1950ஆம் ஆண்டின் 9ஆம் இல. காணி கையகப்படுத்தல் சட்டம், உயர் பாதுகாப்பு வலயங்களை அறிவிக்க அனுமதிக்கும் அவசரகால விதிமுறைகள், 1979ஆம் ஆண்டின் 23ஆம் இல. மகாவலி அதிகாரசபை சட்டம் மற்றும் 2005ஆம் ஆண்டின் 38ஆம் இல. சுற்றுலாச் சட்டம் போன்ற காணி தொடர்பான சட்டங்களும் இம்முயற்சிகளுக்கு துணையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து நிலம் கையகப்படுத்தலுக்கான பொதுவான கட்டமைப்பை உருவாக்குவதுடன், அரசாங்கம் தன்னிச்சையாக முடிவெடுக்கும் வகையில் அதிக அதிகாரத்தை வழங்குவதுடன் மக்களுக்கு குறைவான அதிகாரத்தை வழங்கி சமமற்ற நிலையைத் தோற்றுவிக்கின்றது.
இந்த நடவடிக்கை சமூக மட்டத்தில் சாதகமான குழுக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. அங்கு சிறுபான்மை மதக் குழுக்களுக்கு எதிரான விரோதம் பெரும்பாலும் உள்ளூர்வாசிகளால் தூண்டப்பட்டு, மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ அரச அதிகாரிகளால் ஆதரிக்கப்படுகின்றது. சுவிசேஷ மற்றும் சுயாதீன தேவாலயங்கள், அதேபோன்று இந்து சமூகங்கள் அடிக்கடி இலக்கு வைக்கப்படுகின்றன. மத வழிபாட்டுத் தலங்களைப் பதிவு செய்வதைச் சுற்றியுள்ள தெளிவின்மை அதிருப்திக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இலங்கைச் சட்டம் அத்தகைய பதிவைக் கட்டாயப்படுத்தவில்லை என்றாலும், ஒன்றுகூடுவதைத் தடுக்க உள்ளூர் அதிகாரிகள் தெளிவற்ற வரையறுக்கப்பட்ட விதிகளைப் பயன்படுத்தியுள்ளனர். புத்த சாசனம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள், 2008, 2011 (2012 இல் ரத்து செய்யப்பட்டது) மற்றும் 2022 இல் புதிய மதத் தலங்களை நிர்மாணிப்பதற்கு அமைச்சின் ஒப்புதல் தேவை என்பதை அறிமுகப்படுத்தின. இந்தச் சுற்றறிக்கைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அமுலாக்கம் பெரும்பாலும் கிறிஸ்தவர்களையும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிக்கும் உரிமையையும் கட்டுப்படுத்தியுள்ளது.
இலங்கையில் நிறுவப்பட்ட சபாத் இல்லம் எனப்படும் யூத மத நிலையங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. அவை சர்ச்சையில் சிக்கியிருந்தாலும், அரசாங்கத்தின் பாதுகாப்பால் அவை பயனடைந்துள்ளன. அண்மையில் சுதந்திர பாலஸ்தீன இயக்கத்தின் உறுப்பினர்கள் துன்புறுத்தப்பட்டதுடன் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சூழலில் இது நிகழ்ந்துள்ளது. மேலும் ‘இஸ்ரேலுக்கு எதிரானது’ எனக் கருதப்படும் செயற்பாடுகளில் ஈடுபட்ட பிரஜைகளுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் இந்து தேசியவாதக் குழுக்களின் செயல்பாடுகள்
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தேசிய அளவில் சிங்கள – பௌத்த தேசியவாத விமர்சனங்கள் குறைந்துள்ள நிலையில், அடிமட்ட அளவில் இந்து கடும்போக்கு குழுக்களின் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதிலும் போராட்டங்களை ஏற்பாடு செய்வதிலும் சிவசேனை மற்றும் ருத்ர சேனா போன்ற அமைப்புகள் தீவிர பங்காற்றியுள்ளன. இக்குழுக்கள் பெரும்பாலும் கட்டாய மதமாற்றம் மற்றும் பசுவதை தொடர்பான பிரச்சினைகளில் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் குறிவைக்கின்றன. இக்குழுக்கள் இந்து வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பில் பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலமும், இந்து இளைஞர்களுடன் கூட்டங்களை நடத்துவதன் மூலமும் உள்ளூர் மக்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கின்றன.
ஊடகங்களில் பிரிவினைவாத விமர்சனங்கள்
கடந்த ஆண்டில் ஊடகங்களில் பிரிவினைவாத விமர்சனம் வீழ்ச்சியின் அறிகுறிகளைக் காட்டியுள்ளது. குறிப்பாகத் தேர்தல்களின்போது இந்நிலைமை காணப்பட்டது. இது இன – மதக் குழுக்களைக் குறிவைக்கும் தீங்கு விளைவிக்கும் விமர்சனம் குறிப்பிடத்தக்களவில் குறைந்திருப்பதைப் பிரதிபலித்தது. இருப்பினும், இந்த ஒட்டுமொத்த சரிவுக்கு மத்தியில், குறிப்பாக முஸ்லிம்களைத் தொடர்ந்து குறிவைக்கும் நிலைப்பாடு தொடர்கின்றது. மதமாற்றம் மூலம் மக்கள் தொகை மாற்றம் குறித்த ஆழமான அச்சங்களைப் ஏற்படுத்தும் கதைகள், இஸ்லாமிய பழக்கவழக்கங்களை அரக்கத்தனமாகச் சித்தரித்தல் மற்றும் இஸ்லாத்தை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்துதல் போன்றவை மூலம் முஸ்லிம் சமூகத்தவர்கள் ஒன்லைனில் அதிகம் குறிவைக்கப்படுகின்றனர். இந்த விமர்சனம், காசா மீதான இஸ்ரேலின் போர் மற்றும் ரோஹிங்கியா அகதிகள் நெருக்கடி உள்ளிட்ட உலகளாவிய சம்பவங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை உள்ளூரில் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வைத் தூண்டின. 2024ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான ஒன்லைன் விமர்சனங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தன. வடக்கு மற்றும் கிழக்கில் வாக்களிக்கும் முறைகள் குறித்த விவாதங்கள் இன – மத அடிப்படையில் வேகமாக வடிவமைக்கப்பட்டன.
மத மாற்றங்கள் குறித்து தொடரும் விவாதம்
இலங்கையில் மதமாற்றம் குறித்து பேச்சிலும் விவாதத்திலும் இரண்டு முக்கியமான கண்ணோட்டங்கள் நீண்டகாலமாக உள்ளன. சமூக மட்டத்தில், மத மாற்றத்திற்கு எதிராக ஆழமாக வேரூன்றிய கலாச்சாரம் மற்றும் சமூகச் சார்பு உள்ளது. குறிப்பாக சில சுயாதீன அல்லது சுவிஷேச கிறிஸ்தவக் குழுக்கள் மதம் மாற்ற முயலும்போது இந்த எதிர்ப்பு மேலும் வலுப்பெறுகின்றது. பிப்ரவரி 2025 இல் NCEASL வெளியிட்ட அறிக்கையின்படி, நாடு முழுவதும் கிறிஸ்தவக் குழுக்களுக்கு எதிராக பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மத மாற்றம் அடிப்படையிலான அச்சங்கள் காரணமாக ஏற்பட்டவை. மதமாற்றம் பெரும்பாலும் கட்டாயப்படுத்தப்பட்டதாகவோ சூழ்ச்சியாகவோ சித்தரிக்கப்படுகின்றது. இது பயத்தை ஏற்படுத்துகின்றது. மத மாற்றம் தொடர்பான இலங்கையின் சட்டப் பாதுகாப்புகளும் தெளிவற்றவை. அரசியலமைப்பின் உறுப்புரை 14(1)(உ)இ தனிப்பட்ட முறையில் அல்லது பொதுவில், தனியாக அல்லது மற்றவர்களுடன் இணைந்து, வழிபாடு, அனுசரிப்பு மற்றும் கற்பித்தலில் ஒருவரின் மதம் அல்லது நம்பிக்கையை “வெளிப்படுத்தும் உரிமையை” உத்தரவாதம் செய்தாலும், இலங்கைச் சட்டம் ஒருவரின் மதம் அல்லது நம்பிக்கையை “பிரச்சாரம் செய்யும் உரிமையை” அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கவில்லை. இருப்பினும், கருவலகஸ்வெவ விதானலேகே ஸ்வர்ண மஞ்சுளா மற்றும் பலர் எதிர் புஷ்பகுமார, கெகிராவா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பலர் (2018) மற்றும் எம். ஏ. எஸ். கல்யாணி டி சில்வா மற்றும் பலர் எதிர் எஸ்.ஜே.பி. சுவாரிஸ் மற்றும் பலர் (2025) ஆகிய சமீபத்திய இரண்டு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பிரச்சாரம் செய்வது குற்றமாகக் கருதப்படமாட்டாது எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
மறுபுறம், சில சுவிசேஷ மற்றும் சுயாதீன கிறிஸ்தவ சமூகங்களிடம் காணப்படும் வற்புறுத்தலான மற்றும் கலாச்சார ரீதியாக உணர்ச்சியற்றதாகக் கருதப்படும் மதமாற்ற நடைமுறைகள் தொடர்ந்து பதற்றங்களைத் தூண்டுகின்றன. சில சந்தர்ப்பங்களில் ஏனைய மதக் குழுக்களுடன் சமூகங்களுக்கு இடையேயான மோதல்களையும் கிறிஸ்தவ சமூகத்திற்குள் சமூகங்களுக்கு உள்ளேயான மோதல்களையும் தூண்டுகின்றன. தேசிய சமாதானப் பேரவையின் 2024 கணக்கெடுப்பின்படி, அதில் பதிலளித்த பௌத்த, இந்து மற்றும் ரோமன் கத்தோலிக்கச் சமூகங்களைச் சேர்ந்தவர்களில் 50% அதிகமானோர் மதமாற்ற நடைமுறைக்கு முதன்மையாக சில கிறிஸ்தவக் குழுக்களே பொறுப்பு என்றும், இந்த நடைமுறை பெரும்பாலும் அவர்களின் மதத்தை எதிர்மறையாகப் பாதிக்கும் விதத்தில் நடைபெறுகின்றது என்றும் அடையாளம் காண்கின்றனர். அவர்களது பிரச்சார முறைகள் சமூகங்களுக்கு இடையேயான மற்றும் சமூகங்களுக்கு உள்ளேயான மோதலுக்கு வழிவகுக்கின்றது என்பதை இது குறிக்கின்றது.
சமீபத்திய ஆய்வுகளும் அதைத் தொடர்ந்துவரும் முன்னேற்றங்களும் நேர்மறையான முன்னேற்றத்தைக் குறிப்பதுடன், தொடர்ந்து வரும் ஆண்டுகளில் மேலும் பல முன்னேற்றங்களுக்கான வாய்ப்பைச் சுட்டிக் காட்டினாலும் பல முக்கியப் பிரச்சினைகளுக்கும் போக்குகளுக்கும் மதச் சமூகங்கள் அரசாங்கம் மற்றும் சிவில் சமூகம் உள்ளிட்ட அனைத்து முக்கிய பங்குதாரர்களின் நெருக்கமான கவனம் தேவைப்படுகின்றது. மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தை மதிக்கும் பன்முகச் சூழலை ஊக்குவிப்பதற்கு சமூக உறுப்பினர்களிடையே நடத்தைகள் மற்றும் அணுகுமுறைகளை வளர்ப்பதில் மதத் தலைவர்கள், மத நிறுவனங்கள் மற்றும் மத அடிப்படையிலான அமைப்புகள் சமூக மட்டத்தில் தனித்துவமான நிலையில் உள்ளன. உதாரணமாக, கலாச்சார ரீதியாகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிபாட்டு நடைமுறைகளை ஊக்குவிப்பது சில மதக் குழுக்களின் சர்ச்சைக்குரிய பிரச்சார முறைகள் தொடர்பான கவலைகளைத் தீர்க்க உதவும். கூடுதலாக, ஏனைய மதக் குழுக்களைக் குறிவைக்கும் சித்தாந்தங்களுக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையை ஏற்றுக்கொள்வது சமூகத்தில் கடும்போக்கு மத அமைப்புகளின் எழுச்சியை ஊக்கப்படுத்தாது.
இனங்களுக்கு இடையேயான பதற்றங்களைத் தூண்டிவிட்ட நீண்டகால கவலைகளைத் தீர்க்க NPP விருப்பம் காட்டுவது ஊக்கமளிக்கின்றது. ஆனால், தொடர்ச்சியான சவால்களைத் தீர்க்க இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும். அனைத்து சமூகங்களுக்கும் மத சுதந்திரத்தை வலுப்படுத்துவதற்கு, குறிப்பாக சிறுபான்மையினரைக் குறிவைக்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படும் சட்டத்தைச் சீர்திருத்துவதில் முன்முயற்சியுடன் கூடிய நடவடிக்கை தேவைப்படும். இத்தகைய சீர்திருத்தங்கள் மாற்றத்திற்கான உத்வேகத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், பன்மைத்துவத்திற்கு உகந்த நீண்டகால அரசியல் சூழலை உருவாக்கவும் உதவும். சட்டங்களின் பிற்போக்கான பயன்பாடு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடவடிக்கைகளால் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அவை ஒரு முக்கியமான முன்னுதாரணத்தைத் தரும். கடந்த கால அரசாங்கங்களின் நடவடிக்கைகளால் பிளவு மற்றும் பாகுபாடு பெரும்பாலும் ஆழமாக வேரூன்றி சட்டபூர்வமாக்கப்பட்டுள்ள சமூக மட்டத்தில் இந்த நடவடிக்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியின் மத சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் இந்தப் போக்குகளை மாற்றியமைப்பது அவசியமாகும்.
2024 ஆம் ஆண்டில் இலங்கையில் மத சுதந்திரத்தின் நிலைப்பாடு மற்றும் 2025 ஆம் ஆண்டில் சமூக – அரசியல் முன்னேற்றங்கள் குறித்து இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக் கூட்டணி வெளியிட்ட அறிக்கையை இக்கட்டுரை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
ஜோவிட்டா அருளானந்தம்
யனித்ரா குமரகுரு
அம்மாரா நிலாப்தீன்