Photo, VOPP
என்பது வயதான கோபால் சந்தானம், ஒரு மலையகத் தமிழர், 1945ஆம்ஆம் ஆண்டு காலி மாவட்டத்தின் பத்தேகம பிரிவில் உள்ள ஹம்மெலியவத்தை என்ற தோட்டத்தில் பிறந்தார். அவர் தனது 14 வயதிலிருந்து தோட்டத்தில் வேலை செய்யத் தொடங்கினார், 77 வயது வரை தொடர்ந்து வேலை செய்து வந்தார். அவரது பெற்றோர் அந்தத் தோட்டத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், தோட்டம் விற்கப்பட்ட பிறகு இப்போது அவருக்கு பெற்றோரின் கல்லறைக்குக் கூட சென்று பார்ப்பதற்கு அனுமதியில்லை. அவர் ஒருபோதும் பாடசாலைக்கும் சென்றதில்லை.
அவரது மனைவி தெக்கமலை தங்கை, 1949ஆம் ஆண்டு முதல் ஹம்மெலியவத்தை தோட்டத்தில்தான் வசித்து வருகிறார். அவரும் தோட்டத்தில் வேலை செய்தார். 1980-களில் நடந்த கலவரங்களை அவர் நினைவு கூருகிறார், அப்போது தோட்டங்களில் உள்ள தமிழர்கள் தாக்கப்பட்டனர் மற்றும் அவர்களின் உடமைகள் அழிக்கப்பட்டன. இது அவரும் மற்றவர்களும் வேறொரு பகுதிக்கு இடம்பெயர்வதற்கும் ஒளிந்து கொள்வதற்கும் வழிவகுத்தது. திரும்பிய பிறகு, இடிந்து விழுந்த ‘லயன்’ அறைகளை சரிசெய்ய உரிமையாளர் விருப்பமில்லாமல் இருந்ததால் அவரும் அவரது சகோதரர்களும் மீண்டும் இடம்பெயர்ந்தனர். இருப்பினும், தோட்ட உரிமையாளர் அவரது பெற்றோரை அவர்களுடன் இடம்பெயர்வதை விரும்பவில்லை. சிறிது காலம் வேறொரு இடத்திற்கு இடம்பெயர்ந்திருந்த அவர்கள் பிறகு மீண்டும் ஹம்மெலியவத்தை தோட்டத்திற்கே திரும்பினர்.
அவர்களின் மகள் வள்ளியம்மா தனது 12 வயதில் தேயிலை இலைகளைப் பறிக்கத் தொடங்கினார். அவர் சிறுவயதில் இருந்தபோது, தானும் மற்ற தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளும் தோட்ட உரிமையாளரின் மகளுடன் சென்று விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள், அவர்கள் செல்லாவிட்டால் தாக்கப்படுவார்கள் என்று அவர் நினைவு கூருகிறார். தனது பெற்றோர் முன்னிலையில் குறைந்தது இரண்டு முறையாவது தாக்கப்பட்டதை அவர் நினைவு கூருகிறார். உரிமையாளர்கள் ‘வரெங்’ (வா) மற்றும் ‘பலயங்’ (போ) போன்ற இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தினர். தானும் மற்ற குழந்தைகளும் தோட்ட உரிமையாளரின் உறவினர்கள் வீடுகளுக்கு வேலைக்காரர்களாக அனுப்பப்பட்டதை அவர் நினைவு கூருகிறார். தானும், தனது குடும்பமும் மற்றும் தோட்டத்தில் உள்ள மற்றவர்களும் இரண்டு முறை இடம்பெயர்ந்ததாக அவர் கூறினார். முதலாவது – 1980களில் கலவரங்கள் காரணமாக இருந்தது. அவர்கள் ஆரம்பத்தில் தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களில் ஒளிந்திருந்தனர், மேலும் குண்டர்கள் அவர்களின் லயன் அறைகளை ஆக்கிரமித்து அவரது தாத்தாவிடம் இருந்த பித்தளைப் பாத்திரங்களை கொள்ளையடித்ததால் பயத்தில் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர், 1990களில், லயன் அறைகள் வாழ முடியாத நிலைக்கு ஆனதாலும், தோட்ட உரிமையாளர் புதுப்பித்தல் பணிகளைச் செய்ய விருப்பமில்லாததாலும் அவர்கள் மீண்டும் இடம்பெயர்ந்தனர்.
வள்ளியம்மாவின் மகள் செல்வராஜ் என்பவரை மணந்துள்ளார். செல்வராஜ் சுமார் 2007 முதல் 2023 வரை தோட்டத்தில் வேலை செய்தார், ஆனால் 2023 முதல் எந்த வேலையும் வழங்கப்படவில்லை.
பின்னணி
ஹம்மெலியவத்தை விலேகொடவத்தை என்றும் அழைக்கப்பட்டது. 77 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தத் தோட்டத்தில் தேயிலை மற்றும் ரப்பர் பயிரிடப்பட்டு வந்த போதிலும், சமீப ஆண்டுகளில் கருவா பயிரிடப்பட்டு வருகிறது. உரிமையாளர் இறந்தபோது அது அவரது மனைவியால் நிர்வகிக்கப்பட்டது, அவர் உள்ளூர் பாடசாலையில் ஆசிரியராகவும் அதிபராகவும் இருந்தார்.
அண்மைய வருடங்களில் தோட்டத்தைப் பார்த்துக்கொள்ள ஒரு வெளி பராமரிப்பாளர் பணியமர்த்தப்பட்டுள்ளார். மேலும் ஹம்மெலியவத்தை குடியிருப்பாளர்கள் அவருக்கு உரிமையாளர்களால் நிலமும் வீடும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். பராமரிப்பாளர் மரங்களை வெட்டுவது போன்ற தோட்டத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர் தங்களை தவறாக நடத்துவதாகவும் குடியிருப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு சந்தர்ப்பத்தில், பராமரிப்பாளர் (ஆண்) தோட்டத்தில் ஒரு பெண் குளிப்பதை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அவரது கணவர் அது பற்றி கேட்டபோது அவரை தாக்க முயன்றுள்ளார். ஏனைய குடியிருப்பாளர்கள் பராமரிப்பாளரை கட்டுப்படுத்த முயன்றுள்ளனர். இறுதியில் கணவர் கைது செய்யப்பட்டு சில நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். கணவருக்கு எதிரான வழக்கு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தோட்டத்தின் பெரும்பகுதி பல்வேறு கட்டங்களில் விற்கப்பட்டுள்ளது. தற்போது ஆறு ஏக்கர் மட்டுமே மீதமுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் மயானமாக இருந்த நிலத்தின் ஒரு பகுதியும் விற்கப்பட்டது. அங்கு அடக்கம் செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தவும் சடங்குகளைச் செய்யவும் மக்களுக்கு அனுமதி இல்லை. ஐந்து தலைமுறைகளில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஹம்மெலியவத்தை தோட்டத்தில் வசித்து வந்தன. ஆனால் தற்போது, குழந்தைகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் இரண்டு பேர் உட்பட 25 பேர் கொண்ட ஒன்பது குடும்பங்கள் மட்டுமே உள்ளன.
தொழிலாளர் உரிமைகள்
ஹம்மெலியவத்தை தோட்ட குடியிருப்பாளர்களின் நான்கு தலைமுறைகளில் உள்ள தொழிலாளர்களில் யாருக்கும் அவர்களின் வேலைவாய்ப்பு பற்றிய எந்த ஆவணங்களும் வழங்கப்படவில்லை, மேலும் சிலர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தோட்டத்தில் பணிபுரிந்த போதிலும், முதலாளிகள் EPF மற்றும் ETF சட்டரீதியான பங்களிப்புகள் செய்யப்படுவது பற்றி எந்தத் தகவலும் பெறவில்லை.
தோட்டத்தில் உள்ளவர்களுக்கு ஊதியம், பணமாக வழங்கப்படாமல், அருகிலுள்ள கடையில் இருந்து உலர் உணவுப் பொருட்களை வாங்க உரிமையாளரிடமிருந்து சீட்டுகளைப் பெற்றதை அவர்கள் நினைவு கூருகின்றனர். ஒரு கடையில் பணியமர்த்தப்பட்ட சிங்கள கிராமவாசி, கோபால் போன்றவர்கள் கடையில் இருந்து மளிகை பொருட்களை வாங்கியதையும், உரிமையாளர் அனுப்பிய சீட்டு மூலம் பணம் செலுத்தப்பட்டதையும் உறுதிப்படுத்துகிறார்.
சுமார் 2007ஆம் ஆண்டில் கருவாப்பட்டை பயிரிடுவதற்கும், பராமரிப்பதற்கும், அறுவடை செய்வதற்கும் ஒரு நாளைக்கு சுமார் ரூ. 500 கொடுக்கப்பட்டதாக தொழிலாளர்கள் நினைவு கூர்கின்றனர். 2023ஆம் ஆண்டளவில், தினசரி ஊதியம் சுமார் ரூ. 1,500 ஆக உயர்ந்தது.
தொழிலாளர்கள் பல தசாப்தங்களாக தங்கள் உழைப்பை அளித்த போதிலும், தோட்ட நிர்வாகம் சமூக பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய பலன்களுக்கான அவர்களின் சட்டரீதியான உரிமைகளை உறுதி செய்யத் தவறிவிட்டது. குறிப்பாக வயதானவர்கள் நிதி நிலைத்தன்மை மற்றும் சுகாதார பராமரிப்பு அடிப்படையில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர். சுமார் 2005 முதல், ஒழுங்கற்ற வேலை மட்டுமே வழங்கப்படுவதால், மக்கள் ஏனைய வேலைகளை, குறிப்பாக சாதாரண கூலி வேலை மற்றும் தொழிற்சாலைகளில் வேலை தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், உரிமையாளர் இதனை எதிர்த்தே வந்துள்ளார்.
குறைந்தது இரண்டு தலைமுறையினர் பாடசாலைக்குச் செல்லவில்லை. ஆனால், உரிமையாளரின் மனைவி உள்ளூர் பாடசாலையில் ஆசிரியராகவும் அதிபராகவும் இருந்தபோது, தனது சொந்த தோட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்புகளை மறுத்து எதிர்த்து வந்துள்ளார்.
வீடுகள் மற்றும் பாதை
குடும்பங்கள் பழைய லயன் அறைகளில் வசிக்கின்றன, அவை மிகவும் பாழடைந்து, பாதுகாப்பற்றதாகவும், மனித வாழ்விற்கு தகுதியற்றதாகவும் உள்ளன. சுவர்களில் விரிசல்கள் பரவியுள்ளன, கூரைகள் உடைந்து மழைநீர் கசிகின்றன. மேலும், பல பகுதிகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. குறிப்பாக குழந்தைகளும் வயதானவர்களும் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர். ஏனெனில், பாதுகாப்பற்ற வீடுகள் சுகாதார சிக்கல்களின் கடுமையான அபாயங்களை, காயங்களை ஏற்படுத்துகின்றன.
பிரதான பாதையிலிருந்து வீடுகளுக்குச் செல்லும் குறுகிய, பராமரிக்கப்படாத வீதிகள் மோசமான நிலையில் உள்ளன. மழைக்காலத்தில் அது கிட்டத்தட்ட பயன்படுத்த முடியாதவையாக இருக்கிறது. சேறு நிறைந்து காணப்படுவதால் அடிப்படை நடமாட்டத்தைக் கூட ஆபத்தானதாக்குகிறது. ஆம்புலன்ஸ்கள் அல்லது பிற அவசர சேவைகள் அல்லது சைக்கிள் கூட லயன் அறைகளுக்கு அருகில் வர முடியாது. இது குடும்பங்களை அத்தியாவசிய சேவைகள் மற்றும் விரைவான மருத்துவ உதவியிலிருந்து தனிமைப்படுத்துகிறது. இது குடியிருப்பாளர்கள் அனுபவிக்கும் கைவிடப்பட்ட உணர்வை ஆழமாக்கியுள்ளது. ஏனைய சமூகத்திலிருந்து அவர்களை மேலும் ஓரங்கட்டுகிறது.
குடியிருப்பாளர்கள் இப்போது வசிக்கும் சிறிய பகுதி தோட்டத்தில் வாழக்கூடிய சில இடங்களில் ஒன்று என்று கூறுகின்றனர், ஏனெனில், மலையின் பெரும்பகுதி பாறையாகும்.
குடியிருப்பு ஆதாரம் மற்றும் அருகிலுள்ள கிராமத்துடனான தொடர்புகள்
குடியிருப்பாளர்களின் பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் ஹம்மெலியவத்தை தோட்டத்தைப் பிறந்த இடமாகக் குறிப்பிடுகின்றன. அவர்கள் வாக்களித்ததாகவும் மின்சாரம் பெற்றதாகவும் குடியிருப்பாளர்கள் கூறினர். இவை இரண்டையும் ஒரு முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர் உறுதிப்படுத்தினார்.
அவர்கள் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த மக்களுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் சிங்களவர்கள். முன்னர் இந்தத் தோட்டத்தில் இன்னும் அதிகமான மக்கள் இருந்ததை சிங்கள மக்கள் நினைவு கூருகின்றனர். ஒரு கிராமவாசி கிராமத்தைச் சுற்றி ஒரு திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்ததையும், ஹம்மெலியவத்தையைச் சேர்ந்த சிலரும் அந்தத் திரைப்படத்தில் இருந்ததையும் நினைவு கூர்ந்தார்.
வெளியேற்றத்திற்கான அச்சங்கள்
ஜூலை 5, 2025 அன்று, தற்போதைய உரிமையாளரின் மகள் தோட்டத்திற்கு வருகை தந்து, மீதமுள்ள ஆறு ஏக்கர் நிலத்தை ஹோட்டல் கட்ட விரும்பும் ஒருவருக்கு விற்கத் திட்டமிட்டுள்ளதாக குடியிருப்பாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
உரிமையாளர் குடியிருப்பாளர்களை அக்டோபர் 5, 2025க்குள் – மூன்று மாதங்களுக்குள் ஹம்மெலியவத்தையை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார். வயதானவர்கள் முதியோர் இல்லத்திற்கு அனுப்பப்படுவார்கள், ஏனைய குடும்பங்களுக்கு அவர்கள் தோட்டத்தை விட்டு இடம்பெயர்ந்த பிறகு தலா ரூ. 200,000 வழங்கப்படும் என்று அவர் கூறினார். பின்னர், அவர் ஒரு குடியிருப்பாளரை அழைத்து, வயதானவர் தனது உறவினர்களுடன் சென்றால் அவருக்கு ரூ. 50,000 வழங்க முடியும் என்றும், மற்றவர்கள் தான் வழங்கும் ரூ. 200,000 கொண்டு வீடுகளைக் கட்ட முடியும் என்றும் தெரிவித்தார். உரிமையாளர் ஏனைய குடியிருப்பாளர்களின் தொலைபேசி எண்களையும் கேட்டுள்ளார். மேலும், காலி மாவட்டத்தின் வேறொரு பிரிவான ஹபராதுவவில் உள்ள மற்றொரு தோட்டத்திற்கு அவர்கள் இடம்பெயரலாம் என்று பரிந்துரைத்துள்ளார்.
எதிர்ப்பு
பல்வேறு மட்ட புறக்கணிப்பு, பாகுபாடு மற்றும் சுரண்டலை எதிர்கொண்டு 80 ஆண்டுகளுக்கும் மேலாகவும், ஐந்து தலைமுறைகளாக, மலையக மக்கள் இந்தத் தோட்டத்தில் வாழ்ந்து, பணியாற்றி, அதன் வளர்ச்சிக்கு தங்கள் உழைப்பை வழங்கி வந்துள்ளனர். அவர்கள் நிலம், போதுமான தரமான வீடுகள் மற்றும் துப்புரவு, வாகனங்கள் செல்வதற்கான பாதை, ஊதியம் வழங்காமை மற்றும் EPF/ETF போன்ற சட்டரீதியான உரிமைகள் மறுப்பு உட்பட தொழிலாளர் உரிமைகள் மற்றும் கல்வி ஆகியவற்றிற்கான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளனர். உரிமையாளர்கள், உரிமையாளர்களால் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் தற்போதைய பராமரிப்பாளர், பொலிஸாரால் கூட மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான நடத்தைக்கும், துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கல்களுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர். இப்போது அவர்கள் உடனடி வெளியேற்றத்தை எதிர்கொள்கின்றனர்.
ஆனால் முன்பு போல் அல்லாமல், அவர்கள் இப்போது ஒன்றுகூடி எதிர்க்கத் தயாராக உள்ளனர்.
அவர்கள் உள்ளூர் பௌத்த விகாரைக்குச் சென்று தங்கள் நிலைமையை தெரிவித்தனர். குடியிருப்பாளர்கள முகம்கொடுத்திருக்கும் பிரச்சினை குறித்து அனுதாபம் தெரிப்பதாகவும், அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் விகாரை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக உழைத்த மக்களுக்கு நிலம் அல்லது வீடுகள் ஏற்பாடு செய்யப்படாமல் வெளியேற்றப்பட்டால் அது பெரும் அநீதியாக இருக்கும் என்று விகாரை பிக்கு கூறியுள்ளார். “அவர்கள் எங்கே செல்வார்கள்? ரூ. 200,000 கொண்டு அவர்கள் என்ன செய்ய முடியும்?” என்று பிக்கு வினவியுள்ளார்.
கிராமத்தில் உள்ள சிங்களவர்களும், நீண்டகால தாங்கள் அறிந்தவர்கள் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்படவிருக்கின்ற செய்தியைக் கேட்டு கோபத்தை வெளிப்படுத்தினர். ஒரு உள்ளூர் பெண்கள் அமைப்பு வெளியேற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் கிராமவாசிகளுடன் சேர்ந்து போராட தயாராக இருப்பதாகக் கூறியது.
ஹம்மெலியவத்தைச் தோட்டத்தைச் சேர்ந்தவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சட்டத்தரணிகளிடம் உதவி மற்றும் ஆலோசனையைக் கேட்டது, அவர்கள் தோட்டத்திற்கு விஜயம் செய்து, அவர்களின் வாழ்க்கை நிலைமைகளைக் கவனித்து, அவர்களின் கதைகளைக் கேட்டனர். இதே குழுவினர் முன்னர் குருணாகல் மாவட்டத்தில் உள்ள ஆனந்தபுரத்தில் (முன்பு பத்தலகொட தோட்டம்) ஒரு மலையக சமூகத்தை சந்தித்தனர். அவர்கள் வெளியேற்றத்தை எதிர்கொண்டு வெற்றிகரமான சமூக போராட்டத்தை நடத்தி நிலம் மற்றும் வீடுகளைப் பெற முடிந்தது.
உடனடி வெளியேற்றத்திற்கான அச்சுறுத்தல்கள் தொடர்பாக தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு துணை அமைச்சர் மற்றும் தென் மாகாண ஆளுநரின் கவனத்திற்குக் குடியிருப்பாளர்கள் கொண்டு சென்றுள்ளனர். சமீபத்திய வெளியேற்ற அச்சுறுத்தல்களுக்கு முன்பே, அவர்கள் தங்கள் நிலைமையை பிரதமர் மற்றும் காலி மாவட்ட செயலாளரின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர்.
தோட்ட குடியிருப்புகள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் எண் 2, 1971, ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப்பட்ட பிறகும் தோட்ட குடியிருப்புகளில் வாழ உரிமை உண்டு என்றும், நீதிமன்ற உத்தரவு இல்லாமல் வெளியேற்றப்பட முடியாது என்றும் குறிப்பிடுகிறது.
ஒன்பது குடும்பங்கள் தங்கள் சூழ்நிலைகளை விளக்கி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதே தோட்டத்திற்குள் அல்லது அதன் நெருங்கிய சுற்றுப்புறத்தில் சட்டரீதியான பத்திரங்களுடன் 15 பேர்ச் நிலத்தையும், வீடு கட்ட உதவியையும் கோரி உரிமையாளருக்கு கோரிக்கைக் கடிதம் எழுதியுள்ளனர். இது அவர்களின் முன்னோர்கள் வாழ்ந்து உழைத்த இடத்தில் கண்ணியத்துடன் வாழ அவர்களுக்கு வழிவகுக்கும். நிலம் மற்றும் வீட்டு உரிமைகள் இல்லாமல், இந்த குடும்பங்கள் தங்கள் வீடுகளை மட்டுமல்ல, அவர்களின் கலாச்சார மற்றும் சமூக வேர்களையும் இழக்கும் அபாயத்தில் உள்ளன.
ருக்கி பெர்னாண்டோ
Hammeliyawatte: Decades of Exploitation and Imminent Eviction என்ற தலைப்பில் Groundviews தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.