Photo, AP Photo/Eranga Jayawardena

இலங்கையின் தேர்தல் வரலாற்றைப் பொறுத்தவரை நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடியை உருவாக்கிவிட்டது எனலாம். அதிகமான உள்ளூராட்சி  மன்றங்களில் தனிக் கட்சியொன்று அதிகளவு ஆசனங்களைப் பெற்றிருந்த போதிலும் ஆட்சியமைப்பதற்கான பலத்தினை தனியொரு கட்சி கொண்டிருக்கவில்லை. இவ்வாறானதொரு நெருக்கடியை இலங்கை அரசியற் கட்சிகள் ஒருபோதும் சந்தித்ததில்லை. அதனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது கடுமையாக எதிரெதிர் பிரச்சாரத்தை மேற்கொண்ட கட்சிகள் செய்ய வழியில்லாது தமக்கிடையே நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒப்பந்தங்களை மேற்கொண்டு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளன. சந்தர்ப்பத்திகேற்றவாறு கூட்டிணைந்தும் பிரிந்தும் செயற்படும் கலாசாரத்தைக் கொண்ட  முதலாளித்துவக் கட்சிகளுக்கு இதுவொரு முக்கிய பிரச்சினையாக எழாவிட்டாலும் கொள்கை பிடிப்புடன் எக்கட்சியுடனும் கூட்டுச் சேரமாட்டோம் எனக்கூறி வந்த ஆளும் தேசிய மக்கள் சக்தி – (ஜேவிபி) க்கு இது ஒரு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியதை அவதானிக்க முடிந்தது. எனினும், எதிரணி கட்சிகளுடன் எழுத்து மூல ஒப்பந்தம் ஒன்றினைச் செய்யாமல் மறைமுகமாக வாய்மூல ஒப்பந்தம் செய்தமை மூலம் பல உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இடதுசாரி கொள்கைக் பிடிப்புள்ள கட்சியொன்று முதலாளித்துவ நாடாளுமன்ற அரசியலில் களம் இறங்கினால் இறுக்கமான கொள்கையை கைவிட நேரிடும் என்பதற்கு நடந்து முடிந்த தேர்தல் நல்ல உதாரணமாகும்.

இப்பின்புலத்தில் மலையக உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக தாம் தொடர்ந்து எதிர்த்து வந்த இலங்கை தொழிலாளர் காங்கிரசினதும் ஐக்கிய மக்கள் சக்தியினதும் உறுப்பினர்களது ஆதரவைப்பெற்று ஏழு உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளதுடன் சில உள்ளூராட்சி மன்றங்களின் துணை தவிசாளர் பதவிகளையும் பெற்றுள்ளது.

இவ்விடத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் தமிழ் முற்போக்கு கூட்டணியும் வடக்கின் தமிழரசு மற்றும் கிழக்கின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகள் கடைப்பிடித்த மூலோபாயத்தைக் கடைப்பிடித்திருந்தால் மலையகத்தின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தமிழ் கட்சிகள் கைப்பற்றியிருக்கலாம் எனக் கருதத் தோன்றுகின்றது.

கொள்கைப் பிடிப்புள்ள ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தி இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் இணக்கப்பாட்டிற்கு வரமுடியுமாயின் ஏன் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு இடையில் ஒரு இணக்கப்பாட்டினை ஏற்படுத்திக் கொள்ள முடியாது போய்விட்டது என்ற கேள்வி எழுகின்றது.

இவ்விடத்திலேயே மறைந்த சௌமிய மூர்த்தி தொண்டமானின் அரசியல் சாணக்கியம் முக்கியத்துவம் பெறுகின்றது. 1947ஆம் ஆண்டின் பின்னர் 1977ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கால் பதித்த சௌமிய மூர்த்தி தொண்டமான் நாடாளுமன்றம் சென்றது முதல் ஜே.ஆரின். தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிமா பண்டாரநாயக்கவின்  சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன மலையகத்தில் அரசியல் ஆளுமையை செலுத்த முனைந்த போதெல்லாம் அதற்கு இடமளிக்காது தனது தலைமையின் கீழேயே அக்கட்சிகள் மலையக அரசியல் களத்தில் பதிக்க வேண்டும் என்ற மூலோபாயத்தை இறக்கும் வரை பேணி வந்தார். அதனாலேயே தேசிய ஊடகங்கள் அவரை இலங்கை அரசியலின் கிங் மேக்கர் என அடையாளப்படுத்தியது. அவரது உபாயத்தினை​வடக்கின் தமிழரசுக் கட்சியும் கிழக்கின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் கடைப்பிடித்துள்ளமையை அடையாளம் காண முடிகின்றது. தமிழ் மக்கள் செறிவாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களின் உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை தமிழரசிற்கும் அதேபோல் முஸ்லிம்கள் வாழும் பிரதேச சபைகள் பலவற்றின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரசுக்கும் தனித்து கைப்பற்ற முடியாமற் போய்விட்டது.

இப்பின்புலத்தில் தேசிய மக்கள் சக்தி பல உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றக்கூடிய வாய்ப்பிருந்தது. இவ்வுபாயத்தை உணர்ந்த  தமிழரசுக் கட்சியும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் தமக்கு எதிராகப் போட்டியிட்ட கட்சிகளுடன் கலந்துரையாடி உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியைக் கைப்பற்றி தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியைத் தடுத்து நிறுத்தியுள்ளன.

எவ்வாறாயினும், இம்முறை மலையக பெருந்தோட்டக் குடியிறுப்புப் பகுதிகளில் பாரிய அபிவிருத்தி மாற்றத்தைக் உருவாக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதனை அடையாளம் காண முடிகின்றது.  நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இம்மக்களின் அபிவிருத்தி தொடர்பில் தொடர்ந்து உரையாற்றி வருகின்றமையுடன் சில தினங்களுக்கு முன்னரும் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் மலையக மக்களுக்கு காணி, வீடு மற்றும் பொது வசதிகளைப் பற்றி எடுத்துக் கூறி அவர்கள் புதிய வாழ்க்கை முறையொன்றினை அனுபவிக்கும் வகையில் அவர்களுக்கு காணி உட்பட உரிமைகளை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். மறுபுறம் தேசிய மக்கள் சக்தியின் வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற கொள்கைப் பிரகடனத்திலும் மலையக மக்களின் அபிவிருத்தி தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுடன் தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடம் ஏறுவதற்கு முன்பதாக மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் அட்டன் பிரகடனமொன்றையே வெளியிட்டது. எனவே, முன்னைய அரசாங்கங்கள் போலன்றி இவ்வரசாங்கம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் குறிப்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அழுத்திக் கூறி வருகின்றார். எனவே, எதிர்வரும் ஐந்து வருட காலத்திற்குள் பிரதேச சபைகள் மூலமாக பல அடிப்படை அபிவிருத்தித் திட்டங்களை தோட்டக் குடியிருப்புகளில் மேற்கொள்ளலாம்.

முதலாதாக, கடந்த ஆட்சிகளின் போது மேற்கொள்ளப்பட்டது போன்று இம்முறை பிரதேச சபைகளில் ஊழல்களை மேற்கொள்ள முடியாது. இரண்டாவதாக, தோட்ட முகாமைத்துவம் தோட்டங்களில் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்வதைத் தடுக்க முடியாது. ஏனெனில், நல்லாட்சி காலத்தில் பிரதேச சபையின் பிரிவு 33க்கு 2018ஆம் ஆண்டு 30 இலக்க திருத்தச் சட்டம் தோட்டக் குடியிறுப்புகளில் அபிவிருத்திகளை மேற்கொள்கையில் தோட்டக் கம்பனிகளின் அனுமதியைப் பெறுவதை இல்லாதொழித்துள்ளதுடன் மாறாக தோட்டக் கம்பனிகளுடன் கலந்தாலோசித்து (Consultation – சிங்களத்தில் விமசா எனக் குறிப்பிப்பட்டுள்ளது. சட்டச் சிக்கல் வரும் போது சிங்கள மொழி மூலமே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்) தோட்டக் குடியிருப்புப் பிரதேசங்களில் பிரதேச சபை நிதியைக் கொண்டு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளது.

2018 ஆண்டு இலக்கம் 30ஆவது சட்டத்தின் படி 1987ஆம் ஆண்டின் பிரதேச சபை சட்டத்தின் 19ஆம் பிரிவு பின்வருமாறு திருத்தப்பட்டுள்ளது

  1. “(XIV) எனும் பந்தியில், (கிராம வேலைகளை நிர்மாணிப்பதிலும் மாற்றுவதிலும்) என்னும் சொற்களுக்கு பதிலாக, (கிராம வேலைகளை அல்லது தோட்டக் குடியிருப்புகளை நிர்மாணிப்பதிலும் மாற்றுவதிலும்) என்னும் சொற்களை இடுவதன் மூலமும்;
  2. (XXII) எனும் பந்தியில் (தேர்ந்தெடுத்த கிராமங்களின் ஒருங்கிணைந்த அபிவிருத்தியிலும்) என்னும் சொற்களுக்க பதிலாக (தேர்ந்தெடுத்த கிராமங்கள், தோட்டக்குடியிருப்புகள் என்பவற்றின் ஒருங்கிணைந்த அபிவிருத்தியிலும்) என்னும் சொற்களை இடுவதன் மூலமும்,

அத்துடன்  3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 33ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:

பிரிவு (1) ஐ மீள இலக்கமிட்டதன் உடனடுத்து பின்னர் , பின்வரும் உட்பிரிவுகளை உட்புகுத்துவதன் மூலமும் “(2) பெருந்தோட்ட பிராந்தியங்களின் விடயத்தில், பிரதேச சபைகள் விசேட தீர்மானம் ஒன்றை சேர்த்துக் கொண்டதன் மேல், இயைபான தோட்டத்தின் நிர்வாக அதிகாரிகளுடனான கலந்தாலோசனையுடன், அந்தந்த பெருந்தோட்ட பிராந்தியங்களின் வதிவோரின் சேம நலனுக்கான அவசியமான வீதிகள், கிணறுகள் மற்றும் வேறு பொது வாழ் வசதிகளை அத்தகைய வதிவோருக்கு வசதியளிப்பதற்கு பிரதேச சபை நிதியத்தைப் பயன்படுத்தலாம்.

  1. (அ) (1) அல்லது (2) இன் கீழ் நிர்மாணிக்கப்பட்ட, பேணப்பட்ட அல்லது வசதிப்படுத்தப் பட்ட வீதிகளும், கிணறுகளும். பொது வாழ் வசதிகளும், தோதான ஒரு சாசனத்தின் மூலம் பிரதேச சபை குறித்தாக்கப்படுதல் வேண்டும் என்பதுடன் பொது வீதிகளாவும் கிணறுகளாகவும், பொது வாழ் வசதிகளாகவும் அமைத்துருவாக்கப்படுதலும் வேண்டும். (ஆ) பிரதேச சபையானது, விடயத்திற்கேற்ப தோட்டங்களின் அல்லது கைத் தொழில் முயற்சிகளின் சொந்தக்காரர்களை இயைபான தோட்டங்களின் நிர்வாக அதிகாரிகளை அல்லது அத்தகைய பெருந்தோட்ட பிராந்தியங்களின் வதிவோரை, பிரதேச சபையினால் அங்கீகரிக்கப்படக்கூடியவாறாக அத்தகைய வீதிகளின், கிணறுகளின் மற்றும் பொது வாழ் வசதிகளின் நிர்மாணம், பேணுகை அல்லது வசதிப்படுத்துகைக்கான செலவுகள் தொடர்பில் அத்தொகையை செலுத்தும்படி தேவைப்படுத்துல் வேண்டும் என்பதுடன் அத்தகைய எல்லா உதவித் தொகைகளும் நன்மைப் பெறுகின்ற அத்தகைய காணிகள் மற்றும் பெருந்தோட்ட பிராந்தியங்களின் மீது விதிக்கப்பட்ட விசேட வீத வரிகளாக கருதப்படுதல் வேண்டும்: அத்துடன் இச்சட்டத்தின் ஏற்பாடுகளின் விதிக்கப்பட்ட வீத வரியாக அவை அறவிடப்படற்பாலனவாதலும் வேண்டும்.

இதன்படி பார்க்கின் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் தோட்டக் குடியிருப்புப் பிரதேசங்களில் கணிசமான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. முன்பு போல் தோட்ட முகாமைத்துவத்தின் அனுமதியைப் பெறத் தேவையில்லை. மாறாக தாம் முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தோட்ட முகாமைத்தவத்துடன் கலந்தாலோசனை செய்யலாம். தோட்ட முகாமைத்துவம் மறுத்தாலும் மக்கள் நல மேம்பாட்டை முன்னிறுத்தி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும்.

பிரதேச சபையே கருவறை முதல் கல்லறை வரையிலான சேவைகளை வழங்கும் மக்கள் மன்றம் எனக் கூறப்படுகின்றது. இம்முறை பிரதேச சபையின் தவிசாளராக மற்றும் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்ட தமக்குக் கிடைக்கும் நிதியைக் கொண்டு சிறு வேலைத்திட்டங்களைத் தடையின்றி மேற்கொள்ளலாம். அவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒருபோதும் எதிர்வினையாற்றாது. எதிர்வினையாற்றின் அதனை மக்களறியச் செய்து உரிமையை வென்றெடுக்கலாம். எனவே, புதிய தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் இவற்றினைக் கருத்திற் கொண்டு செயற்படுவார்களாயின் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் பாரிய மாற்றத்தை மலையக குடியிருப்புப் பகுதிகளில் காணலாம்.

பெ.முத்துலிங்கம்