Photo, TAMILGUARDIAN
கடந்த வருடத்தைய தேசிய தேர்தல் பிரசாரங்களில் வழங்கிய பெருவாரியான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தடுமாறும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது நாட்டு மக்களுக்கு அதிருப்தி ஏற்படத் தொடங்கியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக, பொருளாதார இடர்பாடுகளைத் தணிப்பதற்கு புதிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு பெரும் ஏமாற்றமாகப் போய்விட்டது.
மக்களின் அந்த உணர்வுகளைப் புரிந்துகொண்டவராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த வாரம் கொழும்பு காலிமுகத்திடலில் தேசிய மக்கள் சக்தியின் மேதினப் பேரணியில் உரையாற்றியபோது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு காலஅவகாசம் தருமாறு நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இலங்கையில் இன்று ஒரேயொரு அரசியல் சக்தியாக விளங்குவது தேசிய மக்கள் சக்தி மாத்திரமே என்று கூறியிருக்கும் ஜனாதிபதி நாட்டினதும் மக்களினதும் எதிர்காலம் தேசிய மக்கள் சக்தியிலேயே தங்கியிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் மீது வெறுப்பு வந்தாலும், மாற்றாக திரும்பிப் பார்ப்பதற்கு உருப்படியான ஒரு எதிர்க்கட்சி இன்று இல்லை என்பது உண்மையே.
பொருளாதார முனையில் வாக்குறுதிகளை அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாமல் இருக்கின்ற சூழ்நிலையை ஓரளவுக்கு விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது என்ற போதிலும், அரசியல் சீர்திருத்தங்களைப் பொறுத்தவரையிலும் கூட உருப்படியான முன்னோக்கிய நகர்வை அரசாங்கம் செய்யவில்லை. குறிப்பாக, நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக நடைமுறையில் இருந்துவரும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் விடயத்தில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் அணுகுமுறை கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
தேசிய மக்கள் சக்தி மாத்திரமல்ல, உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு பதவிக்கு வந்த சகல இலங்கை அரசாங்கங்களும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக சர்வதேச சமூகத்துககு உறுதியளித்தன. ஆனால், அந்த உறுதிமொழிகள் ஒருபோதும் காப்பாற்றப்படவில்லை. தொடர்ந்தும் அந்த சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இறுதியாக வாக்குறுதி அளித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அதை தற்போது பயன்படுத்துவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
இலங்கைக்கு தற்போது விஜயம் செய்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வர்த்தகச் சலுகை கண்காணிப்புக் குழு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதில் அரசாங்கம் காட்டிவரும் தாமதம் குறித்து விசனம் வெளியிட்டிருக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான புதியதொரு சட்டம் கொண்டுவரப்படும் வரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதை இடைநிறுத்தும் சாத்தியம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விசாரித்தபோது அது பற்றி ஆராய்வதில் அரசாங்கம் பெரிதாக அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை.
2004 சுனாமி இயற்கை அனர்த்தத்துக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை வழங்கியது. ஆனால், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிக்காட்டப்பட்ட அக்கறைகளை தொடர்ந்து 2010ஆம் ஆண்டில் இலங்கை அந்தச் சலுகையை இழக்க நேரிட்டது. நல்லாட்சி அரசாங்க காலத்தில் 2017ஆம் ஆண்டில் மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை இலங்கையினால் பெறக்கூடியதாக இருந்த போதிலும், 2021ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடாளுமன்றம் பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதையும் சட்டத்தின் ஆட்சி சீர்குலைவையும் சுட்டிக்காட்டி அந்தச் சலுகையை தொடர்ந்து இலங்கைக்கு வழங்குவதா இல்லையா என்று பரிசீலனை செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்தைக் கேட்டுக் கொண்டது.
தற்போது இலங்கை அனுபவித்துவரும் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை தொடர்பிலான ஒழுங்கு விதிகள் அடுத்த வருட இறுதியில் காலாவதியாகின்றன. 2027ஆம் ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வரவிருக்கும் திருத்தியமைக்கப்பட்ட பிரமாணங்களின் கீழ் அந்தச் சலுகைகளைப் பெறுவதற்கு இலங்கை மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதுடன் மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி தொடர்பிலான 27 சர்வதேச சமவாயங்களை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைக்கும் உள்ளாகும்.
தொடர்ந்தும் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை வழங்குவதுடன் தொடர்புடைய நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் இலங்கையில் முன்னேற்றம் இருக்கிறதா இல்லையா என்பதை ஆராய்ந்து நிலைவரம் பற்றிய ஒரு மதிப்பீட்டைச் செய்வதற்கே தற்போது ஐரோப்பிய ஒன்றியக் குழு இலங்கை வந்திருக்கிறது. தன்னைச் சந்தித்த அந்த குழுவிடம் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஊழலை ஒழித்து ஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்துவதற்கும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளை விளக்கிக் கூறியதாகவும் இலங்கையின் முன்னேற்றத்தை அவர்கள் மெச்சியதுடன் சீர்திருத்தங்களுக்குத் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக உறுதியளித்ததாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
அண்மைக் காலத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்ட சம்பவங்கள் குறித்து வெளியான விமர்சனங்களுக்கு ஏற்கெனவே பதிலளித்த வெளியுறவு அமைச்சர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என்பதில் தங்களது கட்சி உறுதியாக இருக்கின்ற போதிலும், சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடைய புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்படும் வரை தற்போதைய சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்தும் என்று கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
பயங்கரவாதத்தைக் கையாளுவதற்கு கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விடவும் வேறு பல சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன என்று தாங்கள் நெடுகவும் கூறிவந்ததை ஜே.வி.பி. தலைவர்கள் மறந்துவிட்டார்கள் போன்று தோன்றுகிறது.
இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கடந்தவாரம் ‘தி இந்து’ பத்திரிகையில் எழுதிய கட்டுரை ஒன்றில் பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பிலான ஜே.வி.பி.யின் இந்த முரண்பாடுகள் குறித்து தெளிவாகக் கூறியிருக்கிறார்.
“தேசிய மக்கள் சக்தி எதிரணியில் இருந்தபோது பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. இன்னொரு ‘மனிதாபிமானச் சட்டத்தினால்’ அதை பதிலீடு செய்வது குறித்து ஆராய்வதற்கான எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் இணைந்து கொள்வதற்கு தேசிய மக்கள் சக்தி உறுதியாக மறுத்தது.
“ஆனால், பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கு இன்னொரு சட்டத்தைக் கொண்டுவருவது குறித்து இந்த அரசாங்கமும் இப்போது பேசத் தொடக்கியிருக்கிறது. தற்போதைய சட்டத்தை நீக்குவதற்கான சாத்தியம் குறித்து ஆராய்வதற்கு குழு ஒன்றை நியமித்ததை தவிர, எந்தவொரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையையும் அரசாங்கம் இன்னமும் முன்னெடுக்கவில்லை. தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கத்தினால் நிறைவேற்றக்கூடியதாக இருக்குமா இல்லையா என்பதைப் பார்ப்பதற்கு பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம் ஒரு சிறந்த பரீட்சையாகும்” என்று சுமந்திரன் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ்த் தீவிரவாத இயக்கங்களை ஒடுக்குவதற்காக ஆரம்பத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்ட போதிலும், அதை சிங்களவர்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு அரசு தயங்கவில்லை என்றும் இரண்டாவது கிளர்ச்சிக்காலத்தில் (1987 – 1990) ஜே.வி.பி. அந்தச் சட்டத்தினால் படுமோசமாகப் பாதிக்கப்பட்டது என்ற காரணத்தால் அதை நீக்குவது குறித்து தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதியை பலரும் நம்பிக்கையுடன் நோக்கினார்கள் என்றும் சுமந்திரன் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
முன்னைய அரசாங்கங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்காமல் போன அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கு புதியதொரு சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்தளவுக்கு வெற்றி பெறக்கூடியதாக இருக்கும் என்பது குறித்து சந்தேகம் எழுகிறது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து பழக்கப்பட்டுவிட்ட பாதுகாப்புத் துறையின் இணக்கப்பாட்டை பெறாமல் அரசாங்கத்தினால் இந்த விடயத்தில் முன்னோக்கிச் செல்ல முடியுமா என்பதும் முக்கியமான ஒரு கேள்வி.
சர்வதேச சமூகத்துக்கு குறிப்பாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் வழங்கிய உறுதிமொழிகளை அடுத்து சர்வதேச நியமங்களுக்கு இசைவான முறையில் பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவரும் முயற்சியில் முதலில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதராகவும் பிறகு ஜனாதிபதியாகவும் கொண்ட இரு அரசாங்கங்கள் இறங்கின.
நல்லாட்சி அரசாங்கம் முன்வைத்த சட்டமூல வரைவு “Counter Terrorism Bill” என்றும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் அரசாங்கம் முன்வைத்த சட்டமூலம் “Anti – Terrorism Bill” என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டன. ஆனால், இரு சட்டமூலங்களுமே தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விடவும் மிகவும் கொடியவையாக இருந்தன என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச மற்றும் உள்நாட்டு மனித உரிமைகள் அமைப்புக்கள் அவற்றை நிராகரித்தன.
இலங்கையில் ‘சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரிவினரால்’ மிகவும் மோசமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுவந்த ஒரு சட்டம் என்றால் அது பயங்கரவாதத் தடைச் சட்டமேயாகும். இலங்கையின் சகல சமூகங்களுமே அதனால் படுமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு வருகின்ற அரசியல் எதிர்ப்புக்களை முறியடிப்பதற்கு வசதியான ஒரு கருவியாக அந்தச் சட்டம் இருந்து வந்திருப்பதால், முன்னைய ஆட்சியாளர்களை விடவும் வேறுபட்ட முறையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிந்திக்கத் தலைப்படுமா என்ற இன்னொரு கேள்வியும் இருக்கிறது.
இலங்கையில் இன்று ஒரு கொலையோ அல்லது கொலை முயற்சியோ இடம்பெறாமல் ஒரு நாள் கூட கடந்துபோவதாக இல்லை. திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் சட்டத்தின் ஆட்சிக்கு பெரும் சவாலாக விளங்குகின்றன. அதேவேளை, சர்வதேச நிலைவரத்தை நோக்கும்போது எல்லை கடந்த பயங்கரவாதம் இன்று ஒரு நிரந்தர தோற்றப்பாடாக மாறிவிட்டது. அதனால், பயங்கரவாதத்துக்கு எதிரான கடுமையான சட்டம் ஒன்று அவசியம் என்ற வாதத்தை முற்றாக நிராகரித்து விடவும் முடியாது. ஆனால், மனித உரிமைகளையும் அரசியல் சுதந்திரங்களையும் மதிக்கின்ற ஒரு பயங்கரவாத சட்டத்தை வரைவது என்பது ஒரு பிரமாண்டமான சவாலாகும். அது உண்மையில் சாத்தியமா? அத்தகைய ஒரு சட்டத்துக்கு உதாரணம் எங்கே இருக்கிறது?
வீரகத்தி தனபாலசிங்கம்