Photo, BLOOMBERG

“வரிகளை அறிமுகம் செய்து வைத்தல் அல்லது அவற்றை உயர்த்துதல் என்பவற்றிலும், இழக்கப்பட்ட அரச வருவாயை மீளப்பெற்றுக் கொள்ளும் விடயத்திலும் தொடர்ச்சியாக நிலவி வந்த செயல் முடக்க நிலை பொருளாதாரத்தின் மீது மிக மோசமான ஒரு தாக்கத்தை எடுத்து வந்ததுடன், அது ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீதும் ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்திருப்பதை பார்க்க முடிகிறது.” –  இலங்கை உயர் நீதிமன்றம்

இலங்கையின் பொருளாதார அழிவுக்கு ராஜபக்‌ஷர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்ற விடயம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் உசிதமான ஒரு தருணத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது. தொடர்ச்சியாக நிலவி வந்த அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்து, ஓரளவுக்கு மீண்டும் சகஜ நிலை திரும்பிய நிலையில் உருவாக்கப்பட்டிருந்த நம்பிக்கை உணர்வு மீண்டும் மங்கிச் சென்றுள்ளது. பொருளாதாரத்தின் முன்னோக்கிய நகர்வு இப்பொழுது ஸ்தம்பிதமடைந்திருக்கிறது; ஆளுகை துறையின் பல கூறுகள் தொடர்பாக நிலவி வந்த செயல் முடக்கம் மற்றும் உதாசீனம் என்பவற்றுக்கூடாக உருவாக்கப்பட்ட பல்வேறு கோளாறுகளின் கூட்டு இந்நிலைமையை எடுத்து வந்திருக்கிறது. ஜனாதிபதி இப்பொழுது எதனைச் சொல்கிறாரோ அதனைச் செய்வதில்லை; அத்துடன், நாடாளுமன்றம் புத்திசுவாதீனமற்றவர்களைக் கொண்ட ஒரு பாலர் பாடசாலை போல செயற்பட்டு வருகிறது. அங்கு இடம்பெறும் பெரும்பாலான விவாதங்கள் ஒருவர் மீது ஒருவர் சேறு பூசும் வன்முறையுடன் கூடிய போட்டிகளாக தரம் தாழ்ந்துள்ளன.

நாட்டில் மிக மோசமான பொருள் தட்டுப்பாடுகள் நிலவி வந்த மாதங்களில் இருந்து வந்ததைப் போல இப்பொழுது பொருளாதாரத் துன்பம் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் ஒரு பிரச்சினையாக  காணப்படவில்லை. இன்றைய நிலையில் வருமான உழைப்புப் பிரிவில் மிகத் தாழ்ந்த மட்டத்தில் இருந்து வருபவர்களே அந்தத் துன்பத்தை அனுபவித்து வருகின்றார்கள். 2022ஆம் ஆண்டில் எரிபொருள் கியூ வரிசைகள் மற்றும் மின் வெட்டுக்கள் என்பவற்றின் பாதிப்புக்களை பொதுவாக நாட்டு மக்கள் அனைவரும் எதிர்கொண்டார்கள். அது மக்களுக்கு மத்தியில் ஒருபோதும் இருந்திராத விதத்திலான ஒரு தோழமை உணர்வை உருவாக்கியது. கோல்பேஸ் திடலிலும், நாட்டின் பல்வேறு இடங்களிலும் செல்வந்தர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் வறியவர்களும் தோளோடு தோள் நின்று, ஒன்றாக இணைந்து தமது பொதுவான இழப்புக்களுக்கெதிராக குரல் கொடுத்தார்கள். அவ்விதம் கூட்டாக இணைந்து செயற்பட வேண்டும் என்ற அந்த உணர்வு இப்பொழுது மங்கிப் போயிருக்கின்றது. எந்தவித தோழமை உணர்வையும் இப்பொழுது பார்க்க முடியவில்லை. கோபம் மட்டுமே எஞ்சியிருக்கின்றது. இலங்கை மக்களில் சுமார் அரைவாசிப் பகுதியினர் எந்த ஒரு நம்பிக்கையும் இல்லாமல் துன்பம் அனுபவித்து வருவதுடன், அது நாட்டு மக்கள் அனைவருக்குமான ஒரு பாரிய அபசகுனமாக இருந்து வருகின்றது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஐ.நா. அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் (UNDP) ஒரு மதிப்பீட்டாய்வின் முடிவுகள் அரசியல்வாதிகளின் வர்க்கம், தேசிய நிறுவனங்கள் மற்றும் அரசாட்சி  என்பன தொடர்பாக பொதுமக்கள் எந்த அளவுக்கு நம்பிக்கை இழந்துள்ளார்கள் என்பதனை எடுத்துக் காட்டுகின்றன. இந்தப் பொதுவான அதிருப்தி உணர்வுக்கு இரண்டு விடயங்கள் விதிவிலக்காக இருந்து வருவதுடன், அதில் ஒன்று நீதித்துறையாகும். பதிலளித்தவர்களில் 40% நீதித்துறையின் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். இந்த வாரம் வழங்கப்பட்ட உயர் நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு அவ்விதம் பொதுமக்கள் நீதித்துறையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை சரியானதுதான் என்பதனைக் காட்டுகின்றது. நாட்டில் பொதுவாக நிலவி வரும் பின்தங்கிய நிலையிலிருந்து நீதித்துறை முற்றாக விடுபடாதிருந்த போதிலும், அது இன்னமும் முடிவடையவில்லை. அது பிரச்சினையின் ஒரு பாகமாக இருந்து வருவதைப் பார்க்கிலும், தீர்வின் ஒரு பாகமாக இருந்து வருகின்றது.

இந்தத் தீர்ப்பு தொடர்பாக ராஜபக்‌ஷர்கள் காட்டியிருக்கும் எதிர்வினை, இலங்கையில் இடம்பெற்ற பாரிய அழிவிலிருந்து அவர்கள் எந்த ஒரு பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதனை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. தாம் எந்த ஒரு தவறையும் செய்திருப்பதாக அவர்கள் நம்பவில்லை. எனவே, தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என அவர்கள் நினைக்கவில்லை. இழந்திருக்கும் மாயக் கவர்ச்சியை மீளப் பெற்றுக் கொள்வதற்காக மேலோட்டமாக ஒரு சில சிறு சிறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட முடியும். ஓரளவுக்கு அந்த இயல்பிலான பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட முடியும். ஆனால், அவர்களுக்கு மத்தியில் கணிசமான அளவிலான, உண்மையான மாற்றங்கள் எவையும் ஏற்படப்போவதில்லை. தாம் எந்த விதத்திலும் தவறிழைக்கவில்லை என்ற விடயத்தையும், தாம் தவறு செய்யக்கூடியவர்கள் அல்ல என்ற விடயத்தையும் ராஜபக்‌ஷர்களும், அவர்களுடைய ஆதரவாளர்களும் உறுதியாக நம்புகிறார்கள். அவர்களுடைய உலகக் கண்ணோட்டத்தைப் பொறுத்தவரையில், கோட்டபாய ராஜபக்‌ஷவின் ஒரேயொரு பிரச்சினை அவர் பதவியை விட்டு விலகி ஓடியமைதான்.

இந்தத் தீர்ப்பின் பிரகாரம், பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டவர்கள், அதனை நிகழ்த்தியிருப்பவர்களிடம் நட்டஈடு கோரி, அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்பது ஒரு சில சட்ட வல்லுநர்களின் அபிப்பிராயமாகும். இந்த நெருக்கடியினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பிரிவினர் நீதிமன்றங்களில் வழக்குகளைத் தாக்கல் செய்யும் ஆற்றல் இல்லாதவர்களாக தமது நாளாந்த வாழ்க்கைப் போராட்டங்களில் மூழ்கிப் போயிருக்கிறார்கள். இவ்விதம் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு, குறிப்பாக, அதன் காரணமாக தமது அன்புக்குரியவர்களை அல்லது வாழ்வாதாரங்களை இழந்திருப்பவர்களுக்கு உதவும் விடயத்தில் அரசியல் எதிர்கட்சிகளும், சிவில் சமூக அமைப்புக்களும் தலையீடுகளை மேற்கொள்ள முடியும். ராஜபக்‌ஷர்களை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லவும் முடியும். ஆனால், அத்தரப்புக்கள் அவ்வாறு செய்யுமா? உயர் நீதிமன்றம் இத்தீர்ப்பில் பின்வருமாறு குறிப்பிடுகின்றது: “தன்னிச்சையான, பகுத்தறிவுக்கு ஒவ்வாத மற்றும் வெளிப்படையான விதத்தில் மேற்கொள்ளப்பட்ட நியாயமற்ற முடிவுகள் மற்றும் மிகக் குறைந்த அளவிலான வழிமுறைகள் என்பவற்றின் காரணமாக தொடர்ச்சியாக நிலவி வந்த செயல் முடக்கம் அழிவுகரமான பின்விளைவுகள் தோன்றுவதற்கு பாரிய அளவிலான பங்களிப்பை வழங்கியிருந்தது.” அத்தகைய தன்னிச்சையான, பகுத்தறிவுக்கு ஒவ்வாத மற்றும் நியாயமற்ற முடிவுகளை எடுத்த நபர்களுக்கு எதிராக பெருந்தொகையான வழக்குகளைத் தாக்கல் செய்வதன் மூலம் தற்போதைய மற்றும் எதிர்கால கொள்கை உருவாக்குபவர்களுக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் ஒரு செய்தியை அனுப்பி வைக்க முடியும். அதாவது, சமுதாயத்துக்கு பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுவது இறுதியில் தனிப்பட்ட முறையில் நிதியிழப்புக்களுக்கு வழிகோல முடியும் என்ற விதத்தில் அந்தச் செய்தி அவர்களுக்கு அனுப்பப்பட முடியும்.

மக்களின் தொடர்ச்சியான அறியாமை

பைபிளின் பிரகாரம், ஆதாம் மற்றும் ஏவாள் ஆகியோர் அறிவு மரத்திலிருந்து பழத்தை உட்கொள்ளும் வரையில் களங்கமற்ற நிலையில் இருந்தார்கள். இலங்கையைப் பொறுத்தவரையில் வாக்காளர்கள் நிரந்தர அறியாமையில் வாழ்ந்து வருகின்றனர். வாழ்நாள் முழுவதும் ஒன்றும் தெரியாதவர்களாக இருந்து வருகின்றனர். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னரும் அவர்களுக்கு அதீத நம்பிக்கை ஊட்டப்படுகின்றது; தேர்தலை உடனடுத்து நாட்டில் ஒரு பெரும் சுபீட்ச நிலை உருவாகியிருப்பதான உணர்வு தோன்றுகிறது. அதையடுத்து ஏமாற்றம், விரக்தி மற்றும் கோபம் என்பன உருவாகின்றன. அதன் பின்னர் அடுத்த மீட்பருக்கான தேடல் ஆரம்பமாகின்றது. எங்கு தவறு நடந்திருக்கின்றது, ஏன் அவ்விதம் ஒரு தவறு நடந்தது என்பது குறித்த எத்தகைய பகுப்பாய்வுகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது எந்த ஒரு தலைவரோ எவ்வளவுதான் பரிபூரண நிலையில் இருந்து வந்தாலும் கூட,  அவரால் அனைத்தையும் பெற்றுத் தரவோ அல்லது எல்லோரையும் திருப்திபடுத்தவோ முடியாது என்ற விடயத்தை எவரும் உணர்வதில்லை; அல்லது எந்தவொரு தலைவரோ அல்லது கட்சியோ வாக்காளர்களின் கற்பித உலகத்திலிருந்து எல்லோருக்கும் எல்லாவற்றையும் பெற்றுத்தர முடியாது என்பது குறித்த விளக்கமும் இருந்து வரவில்லை. வாக்காளர்களாகிய நாங்கள் கடந்த முறை எதிர்கொண்ட ஏமாற்றத்தில் தள்ளாடி, அடுத்த தடவை சித்தப்பிரமையில் அருவருப்பூட்டும் விதத்தில் இன்னொருவரின் பின்னால் செல்கிறோம். ஒருபோதும் முடிவடையாத இந்த விளையாட்டில் மீட்பும், குப்புற தள்ளிவிடுவதும் என்பன முட்டாள்தனமான ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக இருந்து வருகின்றன.

அதனையடுத்து நாட்டில் இடம்பெறும் ஜனரஞ்சகமான உரையாடல்களில் இதுவரையில் இல்லாத எதிர்முரண்கள் முட்டி மோதுகின்றன. சுதந்திரத்துக்குப் பிற்பட்ட இலங்கையின் வரலாறு மீட்புக்கான எத்தகைய அடையாளங்களும் இல்லாத விதத்தில் குற்றச் செயல்கள் மற்றும் தவறுகள் என்பவற்றின் சலிப்பூட்டும் ஒரு வரலாறாக இருந்து வந்துள்ளது என அடிக்கடி முன்வைக்கப்பட்டு வரும் கூற்றை நோக்குவோம். இதன் மூலம் அனுமானிக்கப்படும் வெளிப்படையான முடிவு, காலனித்துவ ஆட்சிக் காலம் ஒரு சிறந்த காலப் பிரிவாக இருந்து வந்தது என்பதும், பிரிட்டிஷ் பிரஜைகள் என்ற முறையில் நாங்கள் சிறப்பாக வாழ்ந்து வந்தோம் என்பதுமாகும். அது எவ்வாறிருந்தபோதிலும், சுதந்திரத்துக்குப் பின்னர் நம்மை ஆண்ட அனைத்துத் தலைவர்களும் எம்மால் தெரிவு தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் ஆவார்கள். அவ்விதம் நாங்கள் தொடர்ச்சியாக மோசமான நபர்களைத் தெரிவு செய்திருக்கும் விடயம் சிந்திக்கத் தெரிந்த மனிதர்கள் என்ற முறையில் எம்மைப் பற்றி சொல்வது என்ன? எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நாங்கள் தவறு விட்டிருப்பது ஏன்? எப்பொழுதும் ஏமாற்றப்பட்டிருப்பது ஏன்? இந்தத் தவறுகளிலிருந்து நாங்கள் ஒருபோதும் பாடங்களைக் கற்றுக் கொள்ளாதிருந்தது ஏன்? அடுத்த தடவை நாங்கள் சரியாகச் செய்வோம் எனத் தொடர்ந்தும் நம்பிக்கையுடன் இருந்து வந்திருப்பது ஏன்?

வாக்காளர்கள் தொடர்ச்சியாக அறியாமையில் இருப்பது, பிள்ளைப் பருவத்திற்கேயுரிய தற்காலிக இயல்பிலான அப்பாவித்தனம் அல்ல. நாங்கள் நிரந்தரமான மனநோய் கூறொன்றைக் கொண்டிருப்பதனையே அது காட்டுகின்றது. வாக்காளர்கள் என்ற முறையில் நாங்கள் அறிவு மரத்திலிருந்து தொடர்ந்து வேண்டுமென்றே எம்மை விலக்கி வைத்துக் கொள்கிறோம். நாங்கள் நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஆட்களுக்கு வாக்களிக்கின்றோம். சான்று அதில் எத்தகைய பாத்திரத்தையும் வகித்து வரவில்லை. உண்மை என்ற விடயத்துக்கு அதில் எந்த இடமுமில்லை; பிரசாரம் போதுமானது; போலி வார்த்தை ஜாலங்கள் போதுமானவையாகும்; ஒரு சில தலைவர்கள் அசல் வெள்ளை நிறத்திலும் பார்க்க தம்மை வெள்ளையாகக் காட்டிக் கொள்வதில் வல்லவர்கள். எல்லாக் கனவுகளையும் அவர்கள் நனவாக்குவார்கள். 2019ஆம் ஆண்டில் கோட்டபாய ராஜபக்‌ஷ அந்த மனிதராக இருந்து வந்தார். காரியங்களை நிகழ்த்தக் கூடிய ஒரு கதாநாயகனாக அவர் தெரிந்தார். அவரும், அவருடைய சகோதரர்களும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்க வேண்டியவர்களாக இருந்து வருகின்றார்கள். ஆனால், அவர்கள் அதிகாரத்தை வலிந்து கைப்பற்றிக் கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, சுமார் 6.9 மில்லியன் இலங்கை மக்களால் சுதந்திரமாக அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு வாக்களித்தவர்கள் அனைவருமே சிங்களவர்கள்; அதிலும் பெரும்பாலானவர்கள் சிங்கள பௌத்தர்கள். இரசாயன உர வகையிலிருந்து இயற்கை உர வகைக்கான மாபெரும் நிலைமாற்றம் தொடர்பான கட்டளையை கோட்டபாய ராஜபக்‌ஷ 2022 ஜனவரி மாதத்தில் வெளியிட்டார். அச்சந்தர்ப்பத்திலும் கூட, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச அல்லது அநுரகுமார திசாநாயக்க ஆகியோரைப் பார்க்கிலும் அவர் இலங்கையில் ஜனரஞ்சகமானவராக இருந்து வந்தார். 2022 ஜனவரி மாதத்தில் ஒரு தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் கணிசமான அளவிலான ஒரு பெரும்பான்மையுடன் அவர் வெற்றியீட்டியிருப்பார்.

கோட்டபாய ராஜபக்‌ஷவின் சிறுமதி மற்றும் எந்த ஒரு விடயம் குறித்தும் போதியளவில் விளக்கமற்ற நிலை என்பவற்றுக்கு மத்தியிலும் கூட, சுமார் ஏழு மில்லியன் இலங்கையர்கள் அவருக்கு வாக்களித்தது ஏன்? மரக்கறிகளை கொள்வனவு செய்வது போன்ற தமது நாளாந்த நடவடிக்கைகளில் நுணுக்கமான விதத்தில் தமது புத்திசாலித்தனத்தைக் காட்டும் சுமார் ஏழு மில்லியன் இலங்கையர்கள் ராஜபக்‌ஷவுக்கு வாக்களிக்கும் போது மட்டும் அந்த விமர்சனபூர்வமான சிந்தனையைப் பயன்படுத்தாதிருந்தது ஏன்? நாங்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றோம் என்ற நிரந்தரமான ஒப்பாரியில் பிரயோசனமில்லை. அத்தகைய மோசடிப் பேர்வழிகளால் நாங்கள் ஏமாற்றப்பட்டது ஏன்? அந்தக் கேள்வியை நேரடியாக எதிர்கொண்டு, அது குறித்து நாங்கள் சிந்தித்துப் பார்த்தாலேயொழிய, 2024 இலும் அதற்கு அப்பாலும் இதே தவறை நாங்கள் இழைக்க மாட்டோம் என்பது என்ன நிச்சயம் இருக்கிறது? கானல் நீர் குறித்து நாங்கள் தெரிந்து கொள்ள மறுத்தால், அதனைப் பின்தொடர்ந்து செல்வதை எவ்வாறு தவிர்த்துக் கொள்ள முடியும்?

இந்த வாரம் உயர் நீதிமன்றம் மற்றொரு நிர்ணயகரமான தீர்ப்பை வழங்கியது. அதாவது, 2020ஆம் ஆண்டில் ரம்ஸி ராஸிக் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்தமை அரசியல் யாப்புக்கு முரணானது என அது கூறியது. ஓய்வு பெற்ற அரச ஊழியரும், சமூக ஊடகச் செயற்பாட்டாளருமான ராஸிக், பெருந்தொற்று தொடர்பாக முஸ்லிம்கள் மீது பழியைச் சுமத்தும் ராஜபக்‌ஷர்களின் ஆசீர்வாதத்துடனான ஒரு பிரசார இயக்கம் தொடர்பாக 2020 ஏப்ரல் தொடக்கத்தில் பேஸ்புக் பதிவொன்றை இட்டிருந்தார். அனைத்து இலங்கை மக்களின் சார்பிலும் இந்தக் காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய பொய்களை முஸ்லிம்கள் எதிர்கொள்ள வேண்டும் என ராஸிக் எழுதினார். நீதிக்கான எழுதுகோலினாலும், விசைப் பலகையினாலும் நீதி மற்றும் ஜனநாயகம் என்பவற்றுக்கென முன்னெடுக்கப்படும் கருத்தியல் ரீதியான ஒரு ஜிகாத் ஆக (போராட்டத்தை) அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

மிகவும் விரிவான வாதங்களுடன், சிறப்பான விதத்தில் எழுதப்பட்டிருக்கும் இந்தத் தீர்ப்பு அசல் சிங்கள பேஸ்புக் பதிவின் ஒரு பிரதியையும் உள்ளடக்குகின்றது. இந்தப் பதிவு பயங்கரவாத இயல்பினைக் கொண்டது என ஒருவர் எவ்வாறு கருதியிருக்க முடியும் என்பதனைப் புரிந்துகொள்வது கடினமானதாகும். பல்வேறு வாக்குமூலங்களில் வெளியிடப்பட்டிருக்கும் விபரங்கள், திரு. ராஸிக்கின் கைதும், அவரை ஓர் ஆபத்தான ஆளாக சித்தரிக்கும் நிலையும் பரவலான விதத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் முஸ்லிம் எதிர்ப்புப் பிரசார இயக்கமொன்றின் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது என்பதனை காட்டுகிறது. அந்த முஸ்லிம் எதிர்ப்பு இயக்கம் ராஜபக்‌ஷர்களுக்கு கணிசமான அளவிலான அரசியல் – தேர்தல் இலாபங்களை ஈட்டிக் கொடுத்திருக்கின்றது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சுட்டிக் காட்டுவதைப் போல ராஸிக்கின் குற்றச்செயல் தொடர்பாக “முதலில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து தகவல்களைப் பெற்றுக் கொண்டது.” இந்தத் தகவலை வழங்கியவர் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவின் இராணுவச் சேவைகள் உதவியாளர் (நான்காவது பிரதிவாதி). “உண்மையிலேயே இந்த ‘B’ அறிக்கையின் பிரகாரம் (மூன்றாவது பிரதிவாதியான) MGLS ஹேமச்சந்திர ‘முறைப்பாட்டாளராக’ இருந்து வந்தார். அவர் 2020 ஏப்ரல் 6ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்வைத்த முறைப்பாடே இந்த புலனாய்வைத் தூண்டியிருந்தது….”

ரவி செனவிரத்ன, ஷானி அபேசேகர மற்றும் நிசாந்த சில்வா போன்றவர்களின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த பேஸ்புக் பதிவை பார்வையிட்டு, அதன் தீங்கற்ற இயல்பை சரியாக புரிந்து கொண்டிருக்கும். அவர்கள் ஒரு அப்பாவி மனிதரை கைது செய்து, அவரை பல மாதங்கள் விளக்கமறியலில் வைத்திருக்க மாட்டார்கள். ராஜபக்‌ஷர்கள் அதிகாரத்துக்கு வந்தவுடனேயே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை தொழில்வாண்மையாளர்களிடமிருந்து விடுவித்து, ‘ஆமாம் சாமிகளின்’ கைகளில் ஒப்படைத்தமை குறித்து வியப்படைவதற்கு எதுவுமில்லை. வரி அடித்தளம், வெளிநாட்டு ஒதுக்குகள், இலங்கை ரூபா மற்றும் விவசாயம் என்பவற்றுக்கு அவர்கள் எதனைச் செய்தார்களோ, முதலில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தொடர்பாக அதே காரியத்தைச்  செய்தார்கள். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த புத்திசாலிகளான அந்தப் புலனாய்வு அதிகாரிகள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் முஸ்லிம் ஆதரவாளராக, தமிழ் ஆதரவாளராக இருந்து வந்தமை மற்றும் ஒருவர் இரகசியமாக தமிழராக இருந்து வந்தார் போன்ற குற்றச்சாட்டுக்களும் அடங்கும். இனவாதம் என்பது பெரும்பாலான விடயங்களை மூடி மறைப்பதற்கான விரிந்த ஒரு போர்வையாக இருந்து வருகின்றது.

ஜனநாயக ரீதியான அதிருப்திகள்

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் மதிப்பீட்டாய்வின் பிரகாரம், நாட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய நிறுவனம் நீதித்துறையாக இருந்து வரவில்லை; மாறாக, இராணுவமே அவ்விதம் மக்கள் நம்பிக்கையை வென்ற நிறுவனமாக இருந்து வருகின்றது. பதிலளித்தவர்களில் 60% இராணுவத்தின் மீது அவ்விதம் நம்பிக்கைக் கொண்டிருந்தனர். (13% அத்தகைய நம்பிக்கையிருக்கவில்லை; அதேவேளையில், 22% நடுநிலையாக இருந்து வந்ததுடன், 5% பதிலளிக்கவில்லை). இராணுவத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களில் பெரும்பாலானவர்கள் சிங்கள பௌத்தர்களாக இருந்து வருவார்கள் என்பதனையும், ‘நம்பிக்கை இல்லை’ என்று சொன்னவர்களிலும், நடுநிலை வகித்தவர்களிலும் பெரும்பாலானவர்கள் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருந்து வருவார்கள் என்ற விடயத்தையும் ஊகிப்பது கடினமானதல்ல. என்னவாக இருந்தாலும், இலங்கை இராணுவம் பெயரில் மட்டுமே இலங்கையாக இருந்து வருகின்றது. யதார்த்தத்தில் சிங்கள பௌத்த நலன்களுடன் பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு சிங்கள பௌத்த இராணுவமாகவே அது உள்ளது. குடிசனவியல் ரீதியில் பன்முக இயல்பைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் இவ்விதம் தனியொரு இனத்தைக் கொண்ட இராணுவம் இருந்து வருவது அபாயகரமானதாகும்.

இதனை (அதாவது, இராணுவம் பெருமளவுக்கு மக்கள் நம்பிக்கையை வென்ற நிறுவனமாக இருந்து வரும் விடயத்தை) ஏனையவற்றுடன் இணைத்துப் பார்க்கவும் – 69% நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கவில்லை. மிகப் பெருமளவில் 78% அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை வைத்திருக்கவில்லை – இப்போது இந்தச் சித்திரம் இருண்டதாக மாற்றமடைகிறது. நாடாளுமன்றம் வாக்காளர்களால் சுதந்திரமான விதத்திலும், நியாயமான விதத்திலும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருந்த போதிலும் அது வெறுக்கப்படுகின்றது. நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அருவருப்பு கொண்டிருக்கும் அதேவேளையில், அவர்களுக்கு வாக்களித்து வருகின்றோம். இராணுவத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றோம். நாட்டின் ஜனநாயகத்தின் ஆரோக்கிய நிலையின் மீது அது எந்த மாதிரியான ஒரு தாக்கத்தினை எடுத்து வரும் என்பதை ஊகிப்பது கடினமானதல்ல.

நாங்கள் தொடர்ந்தும் இராணுவத்தின் மீது காதல் கொண்டிருப்பது தற்போதைய நிதி நெருக்கடிக்கு இரண்டு வழிகளில் பங்களிப்புச் செய்துள்ளது. போருக்குப் பிற்பட்ட காலத்தில் பாதுகாப்புச் செலவுக்  குறைப்பை தடுத்துக் கொள்வதற்கு அது உதவியிருக்கின்றது. அனைத்து நியாயப்படுத்தல்களுக்கும் மாறான விதத்தில், போருக்குப் பிற்பட்ட காலத்தில் இலங்கையின் பாதுகாப்புச் செலவு உயர்ந்து சென்றிருக்கின்றது. இப்பொழுது நாங்கள் போர் இடம்பெற்ற காலத்தில் செலவிட்டதிலும் பார்க்க அதிக தொகையை இராணுவம் தொடர்பாக செலவிட்டு வருகின்றோம். அது 2019 இல் கோட்டபாய ராஜபக்‌ஷவின் அமோக வெற்றிக்கும் உதவியிருந்தது. முன்னைய இராணுவ அதிகாரியான அவர் போர் வீரர்களுக்குக் கிடைக்க வேண்டிய கௌரவத்தையும், பெருமிதத்தையும் மீண்டும் பெற்றுக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

மகா சங்கத்தினரை தவிர, இராணுவமே இலங்கையில் பெருமளவுக்கு முழுவதும் சிங்கள பௌத்த நிறுவனமொன்றாக இருந்து வருகின்றது. இராணுவத்தின் மீது மக்கள் காட்டியிருக்கும் உயரளவிலான நம்பிக்கை சிறந்த முகாமைத்துவம் அல்லது நிதி மதிநுட்பம் போன்ற விடயங்களிலிருந்து தோன்றவில்லை. மாறாக, அதனை தம்முடன் சேர்த்து அடையாளப்படுத்திக் கொள்ளும் நிலையிலிருந்து தோன்றுகிறது (இராணுவம் இலங்கையின் அறவே வெளிப்படைத்தன்மையற்ற நிறுவனமாக இருந்து வருகின்றது). அதே விதத்தில் இராணுவம் தவறிழைக்க முடியாது எனவும், ஊழல் அற்றது எனவும் நோக்கப்படுவதுடன், தற்போதைய ஒவ்வொரு அரசியல் மீட்பரும் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் புனிதப்படுத்தப்படுகின்றாரோ அதே நம்பிக்கையின் அடிப்படையிலேயே இராணுவமும் புனிதப்படுத்தப்படுகின்றது.

ஆறு நாள் போரில் இஸ்ரேல் ஈட்டிய அபார வெற்றி குறித்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின் எழுதும் போது நூலாசிரியரும், பத்தி எழுத்தாளருமான மெயர் ஷெலெவ் பாலஸ்தீன் பிரச்சினை தீர்க்கப்படாதிருக்கும் காரணத்தினாலேயே இஸ்ரேல் இப்போது ஒரு முட்டுச் சந்தில் நின்று கொண்டிருக்கிறது என விவரித்தார்: “நாற்பது ஆண்டுகள் கடந்து சென்றுள்ளன. இஸ்ரேல் உண்மையிலேயே மதி மயங்கியுள்ளது. நாடு ஒரே விடயத்திலேயே தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகின்றது: ஆக்கிரமிப்பு…. நாற்பது ஆண்டுகள் கடந்துள்ளன. 1948ஆம் ஆண்டில் இஸ்ரேல் எதனைச் சாதித்துக் கொள்ள விரும்பியதோ அவை அனைத்தையும் இப்பொழுது உதாசீனம் செய்துள்ளது: கல்வி, ஆராய்ச்சி, நலனோம்பல், சுகாதாரம்.” (Los Angelis Times 5.6.2007)

நாங்களும் கூட அதே மாதிரியானதொரு நிலையில் இருந்து வருகின்றோம். போர் தேசிய செல்வத்தின் பிரமாண்டமான ஓர் அளவை விழுங்கியிருக்கின்றது. போருக்குப் பிற்பட்ட காலத்தில் இதுவரையில் நாங்கள் கல்வி, சுகாதாரம், விவசாயம், கைத்தொழில், விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்ற எந்தவொரு துறையிலும் பார்க்க அதிக தொகையை பாதுகாப்புக்காக செலவிட்டு வந்திருக்கிறோம். அரச துறையின் சுமை குறித்து நாங்கள் புலம்பினாலும் கூட, அரச ஊழியர்களின் சம்பளச் செலவில் சுமார் அரைவாசிப் பகுதி இராணுவத்திற்காகச் செலவிடப்பட்டு வருகின்றது என்ற விடயம் குறித்து நாங்கள் ஒன்றும் கூறுவதில்லை. அரசுக்குச் சொந்தமான தொழில் முயற்சிகள் மித மிஞ்சிய அளவிலான ஊழியர்களைக் கொண்டிருந்தால் இராணுவமும் அதே விதத்திலேயே இருந்து வருகின்றது.

உற்பத்தித் திறனற்ற இந்தச் சுமையைக் குறைப்பதற்கு பாரதூரமான எத்தகைய முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை; இனிமேலும் மேற்கொள்ளப்பட மாட்டாது. ஏனென்றால், இராணுவம் பிரபல்யமாக இருந்து வரும் ஒரு நாட்டில் அவ்விதம் செய்வது தேர்தல் ரீதியில் பாதுகாப்பானதாக இருந்து வர முடியாது. ஜனாதிபதியாக வர விரும்பும் எந்தவொரு தலைவரும் ஆவேசமடைந்த புத்த பிக்குகள், போர் வீரர்கள் மற்றும் ஏனைய தேச பக்தர்கள் ஆகிய தரப்புக்களினால் தனக்கு ‘தேசத் துரோகி’ என்ற பட்டம் சூட்டப்படுவதை விரும்ப மாட்டார்கள். இராணுவச் செலவுகளை குறைப்பதாக ரணில் விக்ரமசிங்க வழங்கியிருக்கும் வாக்குறுதியை நாங்கள் கிஞ்சித்தும் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. அநுரகுமார திசாநாயக்க அல்லது சஜித் பிரேமதாச போன்றவர்களும் கூட இந்த விடயத்தில் உத்தமமானவர்கள் எனக் கூற முடியாது. இராணுவம் உண்மையான ஒரு புனிதப் பசுவாக இருப்பதுடன், மகாசங்கத்தினரும் கூட அதற்கு அஞ்சுகிறார்கள்.

நிதி நெருக்கடிக்கான தர்க்க ரீதியான முதன்மைத் தீர்வு ஆபத்தானது எனக் கருதி நிராகரிக்கப்படும் பொழுது, எஞ்சியிருப்பது வரிகளை உயர்த்துவது அல்லது சேமநலச் செலவுகளைக் குறைப்பது போன்ற நியாயமற்ற தெரிவுகளாகும். அத்தகைய வழிமுறைகள் பொருளாதார நெருக்கடியை எந்த விதத்திலும் தணிக்கப் போவதில்லை. அதே வேளையில், அவை பொதுமக்களின் துன்பத்தை தீவிரப்படுத்தி, அதற்கூடாக மக்களின் எதிர்ப்புக்களைத் தூண்ட முடியும். வாக்காளர்கள் சிவில் அரசியல்வாதிகள் மீது பழியைச் சுமத்தி வரும் அதேவேளையில், இராணுவத்தின் புகழ் மேலும் அதிகரிக்கும். எந்தவொரு ஜனநாயகத்தைப் பொறுத்தவரையிலும் இது ஒரு நல்ல விடயமல்ல.

ராஜபக்‌ஷ ஆட்சியின் கீழ் இலங்கையின் பொருளாதாரம் ஒரு சீட்டுக்கட்டைப் போல மெதுவாக வீழ்ச்சியடைந்த பொழுது, வாக்களிப்பதில் கடந்த காலத்தில் இடம்பெற்ற தவறுகளை பாரதூரமான விதத்தில் கவனத்திலெடுக்க வேண்டிய ஒரு சாத்தியப்பாடு நிலவியது. அதன் விளைவாக, எதிர்காலத்தில் மக்கள் மிகவும் நிதானத்துடன், புத்திசாலித்தனமாக வாக்களிக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால், அந்த நிலை ஒருபோதும் சாத்தியப்படவில்லை. வாக்களிப்பு என்ற விடயம் உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கொடுக்கல் வாங்கலுக்குப் பதிலாக இன்னமும் கூட ஓர் உணர்வு ரீதியான செயலாக, விருப்பு வெறுப்புக்களுடன் கூடிய ஓர் உறவாகவே அணுகப்பட்டு வருகின்றது. எமது வாக்குகளை அளிப்பது எப்படி என்ற விடயத்தைத் தீர்மானிப்பது தொடர்பாக வாக்காளர்களுக்கு அறிவூட்டும் ஒரு கொள்கையை நாங்கள் பின்பற்றினாலேயே ஒழிய, இந்த சாபத்திலிருந்து நாங்கள் ஒருபோதும் மீண்டு வர முடியாது. வாக்களிக்கும் பொழுது, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கென தவறிழைக்கக் கூடிய ஒரு தலைவரை/ அரசாங்கத்தை நாங்கள் கொள்வனவு செய்கின்றோம். அதனையடுத்து ஏனைய அனைத்தும் கானல் நீராகும்.

திஸரணி குணசேகர

Still, the Mirage என்ற தலைப்பில் Groundviews தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்