Photo,

சட்டப் பகுப்பாய்வின் சுருக்கம்[i]

பின்னணி

மார்ச் 2023 இல் இலங்கை அரசாங்கம் 1978ஆம் ஆண்டின் பயங்கரவாத தடைச் சட்டத்தை (PTA) இரத்துச் செய்யும் நோக்கில், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைபு ஒன்றை வர்த்தமானியில் வெளியிட்டது. கொவிட்-19 தொற்று நோய் மற்றும் அண்மைய பொருளாதார, அரசியல் நெருக்கடி காரணமாக பயங்கரவாத தடைச் சட்டத்தை சீர்த்திருத்துமாறு சர்வதேச செயற்பாட்டாளர்களிடம் இருந்து இலங்கை மேலதிக அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றது. பயங்கவாதத்தை முறியடித்தல் என்ற பெயரில் இலங்கையின் அதிகார தரப்புகள் வழமையாக உரிமைகளை துஷ்பிரயோகம் செய்வதை இலகுபடுத்தும் கொடுமையான சட்டமொன்றாக பயங்கரவாத தடைச் சட்டம் அமைந்துள்ளது.[ii]

பொதுவாக நோக்கும் வேளை, புதிய சட்டமூலம் 2018ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிரச்சினைக்குரிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைபுக்கு மிகவும் ஒத்ததாகவே காணப்படுவதுடன் அதில் காணப்படும் பல பிரச்சினைகள் இதிலும் காணப்படுகின்றன. சட்டத்தின் தக்கவாறான நடைமுறை தொடர்பில் சில வழிமுறை முன்னேற்றங்கள் காணப்படுகின்ற போதும், இவை சட்டமூலத்தின் பிரச்சினைக்குரிய ஏற்பாடுகளை கருத்திற் கொள்ளும் வேளை அம்மேம்பாடுகள் மிகவும் சிறியனவாகவே அமைந்துள்ளன. இந்தப் பிரச்சினைக்குரிய ஏற்பாடுகள் மனித உரிமை மீறல்கள் தொடர்ச்சியாக இடம்பெற வழிவகுப்பனவாகவே உள்ளன. மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டமூலத்தின் வரைபு பொது மற்றும் சிவில் சமூக நிறுவனங்கள் அதிக ஆலோசனைகள் எவையும் பெறப்படாமல் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிகின்றது. சட்டமூலத்தைச் சூழ உரையாடல்கள் காணப்படாத நிலை அரசாங்கம் தனது பயங்கரவாத முறியடிப்பு சட்டத்தை சீர்த்திருத்துவதில் தீவிர அக்கறை கொண்டுள்ளது என்ற நம்பிக்கையை ஊட்டுவதாக அமைந்திருக்கவில்லை.

சர்வதேச சட்டங்களின் கீழ் மனித உரிமைகள், குடியியல் சுதந்திரங்கள், அத்துடன் மிகவும் குறிப்பிட்ட வகையில் ஒன்று சேர – ஒருங்கிணைய மற்றும் வெளிப்படுத்துவதற்குள்ள சுதந்திரங்களைப் பாதுகாக்க இலங்கை கொண்டுள்ள கடப்பாடுகளுக்கு இணங்கியொழுக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தவறியுள்ளது.

தற்போதைய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் பிரச்சினைக்குரிய அம்சங்கள்

1. பயங்கரவாதத்துக்கு வழங்கப்பட்டுள்ள தெளிவற்ற வரைவிலக்கணங்கள் குடியியல் சுதந்திரங்களை மட்டுப்படுத்துவதுடன் எதேச்சையான அமுல்படுத்தலுக்கு வழிவகுக்கின்றன.

பயங்கரவாதத்துக்கு வழங்கப்பட்டுள்ள வரைவிலக்கணம் தேவைக்கு அதிகமாக பரந்த மொழிநடையில் காணப்படுவதுடன் அதில் சட்ட ரீதியான மற்றும் பயங்கரவாத தன்மையற்ற பல செயற்பாடுகள் இவ்வரைவிலக்கணத்துக்குள் உள்ளடங்குகின்றன. சொத்துச் சேதம், களவு, அத்துடன் இணையத்தளங்களில் தலையீடுகளை மேற்கொள்ளல் போன்ற சிறு குற்றங்களும் உறுப்புரை 3 இற்குள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன் “ஒரு சட்டமுறையற்ற கூட்டத்தின் உறுப்பினர் ஒருவராக இருத்தல்” என்பதும் இதில் உள்ளடங்குகின்றது, இதற்கு நோக்கம் தேவைப்படுத்தப்பட்டுள்ளது. உறுப்புரை 10 “பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை” குற்றமாக்கியுள்ளது. சட்டமூலத்தின் 11ஆம் உறுப்புரை பயங்கரவாத வெளியீடுகளைப் பரப்புவதை குற்றமாக்குகின்றது. இதில் வெளியீடுகளை விநியோகித்தல், கொடுத்தல், விற்றல், இரவலாக வழங்குதல், விற்பனைக்காக வழங்குதல், அவ்வாறான வெளியீடுகளை ஏனையோர் வாசிப்பதை, செவிமடுப்பதை அல்லது பார்ப்பதை இயலுமாக்கும் சேவைகளை வழங்குதல், அந்த உள்ளடக்கங்களை இலத்திரனியல் முறையில் அனுப்புதல் அல்லது பொதுமக்களை பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் வெளியீடு ஒன்றை வைத்திருத்தல் என்பனவும் உள்ளடங்குகின்றன.

பயங்கரவாதத்தை முறியடிக்கும் வேளை மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் இது பற்றி மேலும் குறிப்பிடுகையில், “வரைவிலக்கணங்கள் [பயங்கரவாதத்தின்] தெளிவற்றதாக, துல்லியமற்றதாக அல்லது தேவைக்கதிகமாக பரந்தனவாகக் காணப்படும் வேளை அவை சிவில் சமூகத்தை இலக்கு வைக்க, மனித உரிமைப் பாதுகாவலர்களை, வலைப்பதிவாளர்களை மற்றும் ஊடகவியலாளர்களை மௌனமாக்க பயன்படுத்தப்படலாம். மேலும், சிறுபான்மை, மத, தொழிலாளர் மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் அமைதியான நடவடிக்கைகளைக் குற்றமாக்கவும் பயன்படுத்தப்படலாம்[iii] என்று கூறுகின்றார். சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பயங்கரவாதத்தின் வரைவிலக்கணங்களில் சாத்தியமான குற்றங்கள் மரணத்தை அல்லது தீவிர உடற்காயத்தை ஏற்படுத்தும் மேலதிக நோக்கத்துடன் இணைக்கப்பட்டனவாகக் காணப்படுகின்றன.[iv]

இந்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில செயல்கள் மற்றும் வரைவிலக்கணங்கள் என்பன சட்டரீதியான பயங்கரவாதக் குற்றைங்களாக இருந்த போதும், சிறியன தொடக்கம் தீவிரமான குற்றங்களை ஒரே வாக்கியத்தில் உள்ளடக்கி குற்றங்களின் குழுவாக ஒன்றிணைத்திருப்பது சட்டத்தினை எதேச்சையாக பயன்படுத்தும் நிலையை உருவாக்கி இருப்பதுடன் அது துஷ்பிரயோகத்துக்கு வழி வகுக்கும். உதாரணமாக “இணையத்தளம் ஒன்றில் தலையீடுகளை மேற்கொள்வது” என்பது “படுகொலை” அல்லது “பணயக் கைதிகளை பிடித்தல்” என்பதன் தீவிரத்தன்மையின் அளவுடன் ஒத்திசையாததாகும். அதேபோன்று, உறுப்புரை 10 இல் பயங்கரவாதத்தை ஊக்குவித்தல் என்பதன் மொழிநடை மிகவும் தெளிவற்றதாகக் காணப்படுகின்றது. அத்துடன், இது சட்டரீதியாக உள்ள சுதந்திர வெளிப்படுத்தலில் தீவிரமான மட்டுப்பாடுகளை ஏற்படுத்த வழிவகுக்கும். குறிப்பாக, ஊடகவியலாளர்கள், ஊடகம் மற்றும் ஏனைய கருத்து தெரிவிப்போரின் சுதந்திரமான வெளிப்படுத்தலை இது பாதிக்கும். இதேபோன்ற தெளிவற்ற மொழிநடையை இலங்கையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேசச் சமவாயச் (ICCPR) சர்வதே சட்டத்திலும் இவ்வாறான தெளிவற்ற மொழிநடை காணப்படுவதுடன் அச்சட்டம் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தவர்களின் சுதந்திர வெளிப்படுத்தலை மட்டுப்படுத்த பிரயோகிக்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இச்சட்டமூலம் சட்டமாக இயற்றப்படும் வேளை, சுதந்திர வெளிப்படுத்தல் மற்றும் அமைதியாக ஒன்று கூடலுக்கான சுதந்திரங்கள் என்பவற்றின் மீறலுக்கும் அத்துடன் பேச்சு, பொதுமக்கள் பங்கேற்பு, ஆர்ப்பாட்ட செயற்பாடுகள் மற்றும் சட்டமுறையான ஏனைய குடியியல் செயற்பாடுகள் என்பன தீங்கான வகையில் பாதிக்கப்படவும் வழிவகுக்கும்.

2. இடங்கள், வீதிகளை மூடவும், ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த, நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, ஒன்று கூடல்கள், பேரணிகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளைத் தடைசெய்ய பொலிஸ் அல்லது ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள தேவைக்கதிகமான பரந்த அதிகாரங்கள் ஒன்றுகூடும் சுதந்திரத்தை மீறும் விதத்தில் உள்ளன.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் நீதவானின் அனுமதியுடன் வீதிகளை மூடுதல், பொதுப் போக்குவரத்து முறைமையை இடை நிறுத்துதல், மக்கள் ஒன்று திரளல், ஒன்றுகூடல்கள், பேரணிகள் மற்றும் நடைபவனிகளை முன் தடுத்தல் அத்துடன் பயங்கரவாத அச்சுறுத்தல் ஒன்று காணப்படுகின்றது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மக்களை “எந்தவொரு குறிப்பிட்ட செயற்பாட்டிலும்” ஈடுபடுவதில் இருந்து முன் தடுத்தல் ஆகிய விடயங்களை மேற்கொள்வதை பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் உறுப்புரை 61 அனுமதிக்கின்றது. இவ்வாறான மட்டுப்பாடுகள் இராணுவச் சட்ட அமுலாக்கம் அல்லது அவசரகால நிலைக்கு அதிகம் ஒத்தவையாகக் காணப்படுகின்றன, இவை உண்மையில் சமாதான மேம்பாட்டில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

இதன் போது, உரிமைகள் அடிக்கடி மீறப்படுகின்றன. இந்நடவடிக்கை பயங்கரவாத செயற்பாட்டை முன் தடுக்கும் நியாயமான நடவடிக்கைகள் என்பதை விட மேற்குறிப்பிட்ட நிலையினையே ஏற்படுத்துகின்றன. இவை மிகவும் பரந்தனவாகக் காணப்படுவதுடன் சாத்தியமான தீங்கை எது உருவாக்குகின்றது என்பதை தீர்மானிப்பதற்கு உள்ளூர் சட்ட அமுலாக்கத்துக்கு மிகவும் அதிகமான அதிகாரத்தைப் பகிர்கின்றன. இவ்வாறான விகிதசமமற்ற கட்டுப்பாடுகள் சமாதானத்தை ஊக்குவிப்பதில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். அமைதியான ஒன்றுகூடல் குடியியல் விவகாரங்களில் பொது மக்கள் பங்கேற்பை ஏற்படுத்துவதுடன் உரையாடல்கள் உருவாக வழிவகுக்கின்றது. இவ்விடயங்கள் ஊடாக வன்முறை தீவிரமயமாதலை முறியடிப்பதில் முக்கிய வகிபாகம் ஒன்றைக் கொண்டிருக்கிறது. இவ்வகிபாகம் சர்வதேச அமைப்புகளின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.[v]

3. பாரிய அளவில் தகவல் சேகரிப்பது அந்தரங்கம் மற்றும் வெளிப்படுத்தல் சுதந்திரம் போன்ற உரிமைகள் மீறப்பட வழிவகுக்கலாம்.

சட்ட அமுலாக்கத்துறை மின்னஞ்சல் மற்றும் ஏனைய தொடர்பாடல்களை உளவு பார்க்க, தேட மற்றும் கைப்பற்ற பரந்த அதிகாரங்களை அத்துறைக்கு உறுப்புரை 66 வழங்குகின்றது. தரவுகள் ஒட்டுமொத்தமாக உளவு பார்க்கப்படும் நிலைக்கு வழிவகுப்பதோடு சுதந்திர வெளிப்படுத்தல் மற்றும் அந்தரங்கத்துக்கான உரிமை என்பவற்றை மீறுவதாக இது அமைகின்றது. இவ்வாறான பரந்த தகவல் சேகரிப்பு அதிகாரங்கள், நீதவான் ஒருவரின் அனுமதி தேவைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையிலும், வெளிப்படுத்தல் சுதந்திரம் மீதும் அந்தரங்கத்துக்கான உரிமை என்பவற்றில் அனுமதிக்க முடியாத மட்டுப்பாடுகளுக்கு வழிவகுக்கின்றது.[vi] பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிட அல்லது பொதுமக்கள் ஒழுங்கைப் பேண இவ்வகையான தலையீடுகள் அவசியமானவை என அரசாங்கங்கள் வாதிடலாம் என்ற போதும், அந்தரங்கம் மற்றும் வெளிப்படுத்தல் சுதந்திரம் என்பவற்றுக்கு ஏற்படுத்தப்படும் தனித்துவம் மிக்க அச்சுறுத்தலைக் கருதும் வேளை இவ்வாறான தலையீடுகள் தேவையற்றனவாக காணப்படுகின்றன.[vii] மாறாக, சர்வதேச சட்டத்தின் கீழ், இவ்வகையான உளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இயலுமை மற்றும் உளவின் மூலம் கிடைக்கும் விடயங்களுக்கான அணுகல் என்பன தனித்துவம் மிக்க அதிகாரத் தரப்புக்கு ஒதுக்கப்பட வேண்டும். அத்துடன் பெறப்பட்ட தரவுகளை சேமிக்க மற்றும் பயன்படுத்த கடுமையான விதிகள் மற்றும் எல்லைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். வரையப்பட்டுள்ள வகையில், இந்தச் சட்டமூலத்தின் உளவு பார்த்தல் ஏற்பாடுகள் இவ்விடயங்களைப் பூர்த்தி செய்யும் சாத்தியம் அற்ற நிலையை ஏற்படுத்தும்.

4. நிறுவனங்களைத் தடை செய்தல், தனி நபர்களுக்கு கட்டுப்பாட்டு ஆணைகள் பிறப்பிக்கப்படல், சொத்துக்களை பறிமுதல் செய்தல் மற்றும் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தல் என்பனவற்றுக்கான இயலுமை, ஒருங்கிணைவதற்கான சுதந்திரம் மற்றும் ஏனைய உரிமைகளை தடுப்பனவாக உள்ளது.

வெறுமனே நியாயமான சந்தேகம் மற்றும் சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தேவைக்கு அதிகமாக பரந்த பயங்கரவாதக் குற்றங்கள் என்பவற்றின் அடிப்படையில், நிறுவனங்களை காலவரையறையற்ற வகையில் கூட ஜனாதிபதி தடைசெய்வதை பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல வரைபின் 82ஆவது உறுப்புரை அனுமதிக்கின்றது. அதேபோன்று, தனி நபர் ஒருவர் ஏனையோருடன் தொடர்பாட அல்லது இணைந்து கொள்ள கொண்டுள்ள உரிமையை ஜனாதிபதி தடுப்பதை உறுப்புரை 83 அனுமதிக்கின்றது. மேலும், தனி நபர் ஒருவர் தனது வதிவிடத்துக்கு வெளியே, வெளிநாடுகளுக்கு, இலங்கைக்குள் அவரின் பணித்தளத்துக்கு பயணம் செய்யும் உரிமையை இது மேலும் குறிப்பிடத்தக்க வகையில் மட்டுப்படுத்துகின்றது. மேலும் இது அத்தனி நபர் ஏனையோருடன் ஒருங்கிணைவதை மற்றும் தொடர்பாடுவதையும் மட்டுப்படுத்துகின்றது. இவை அனைத்தும் பொலிஸ்மா அதிபர் வழங்கும் பரிந்துரையின் அடிப்படையில் மேற்கொள்ள முடியும்.

இந்த ஏற்பாடுகளின் கீழ், இலங்கை அரசாங்கத்தை விமர்சிக்கும் நிறுவனம் ஒன்று அல்லது அதன் நேசத் தரப்புகள் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுத்துகின்றன எனச் சித்தரிக்கப்பட்டு இந்தச் சட்டமூலத்தின் நிபந்தனைகளை மீறுகின்றன எனத் தண்டிக்கப்படலாம். சட்டமுறையான சிவில் சமூக நிறுவனங்கள், அரசியல் எதிர்க்கட்சிகள், தொழிலாளர் தரப்புகள், மனித உரிமைகள் அல்லது சிறுபான்மைக் குழுக்கள், ஊடகம் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்கும் ஏனைய குழுக்கள் இந்தப் பரந்த மொழிநடையின் கீழ் தடை செய்யப்படும் அபாயத்தில் உள்ளன.

5. மரண தண்டனை, வருட சிறைத் தண்டனைகள் மற்றும் பாரிய தண்டபணங்கள் உள்ளடங்கலாக தீவிரமான தண்டனைகளை இந்தச் சட்டமூலம் உள்ளடக்கியுள்ளது. இவை அபாயகரமானவை மற்றும் நியாயப்படுத்தப்பட முடியாதவை.

சர்வதேசச் சட்டங்களுக்கு ஏற்புடையதாக பயங்கரவாத தடைச் சட்டத்தை சீர்த்திருத்துவதில் இருந்து நீண்டதூரம் விலகிச் சென்று, பயங்கரவாதத்துக்கெதிரான புதிய சட்ட மூல வரைபில் இலங்கை மரண தண்டனையை அறிமுகப்படுத்தியுள்ளது. மரண தண்டனை வாழும் உரிமையை மீறுவதாக அமைகின்றது என பல நாடுகள் கருதுவதற்கு ஏற்புடையாதாக இம்மரண தண்டனை அமுலாக்கம் இலங்கையில் பல ஆண்டுகளாக பிற்போடப்பட்டு வரும் நிலையில் புதிய சட்டமூலம் மரண தண்டனையை அறிமுகப்படுத்தியுள்ளது.[viii] மேலதிகமாக, இருபது வருட சிறைத்தண்டனை என்ற வடிவத்தில் பாரிய தண்டனைகளை குறிப்பிடுகின்றது. இவ்வாறான தீவிரமான தண்டனைகள் நியாயப்படுத்தப்பட முடியாதவை.

எதிர்கால பயங்கரவாத செயற்பாடுகளை வினைத்திறனுடன் தடுப்பதற்குப் பதிலாக, பல மிகையான ஏற்பாடுகளைக் கொண்ட இந்தச் சட்டமூலத்தில் கடுமையான தண்டனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இத்தண்டனைகள் வெளிப்படுத்தல், ஒன்று கூடுதல் மற்றும் ஒருங்கிணைதல் சுதந்திரங்களின் பிரயோகத்தின் மீதான தாக்கம் உள்ளடங்கலாக சட்டரீதியான மற்றும் அமைதியான சிவில் சமூக செயற்பாட்டில் தீங்கான தாக்கங்களை ஏற்படுத்தும் சாத்தியத்தைக் கொண்டுள்ளன. மேலும், இது சமூக முரண்பாடுகளை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும் சாத்தியத்தையும் ஏற்படுத்துகின்றது.

முடிவுரை

பயங்கரவாத எதிர்ப்புச் இந்த சட்டமூல வரைபு இயற்றப்படும் பட்சத்தில் சர்வதேசச் சட்டங்களின் கீழ் இலங்கை கொண்டுள்ள கடப்பாடுகளை மீறும் தன்மை மிக்கதாகக் காணப்படுகின்றது. அத்துடன், இதற்கு முன்னர் வரையப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் இருந்து மேம்பாடுகள் எவற்றையும் கொண்டிருக்கவில்லை. இலங்கையின் தேசிய பாதுகாப்புச் சட்டங்களை சீர்திருத்தும் நோக்கில் நன்னம்பிக்கையுடன் மேற்கொள்ளப்பட்ட விடயமாக இது தோன்றவில்லை. மேலும், எந்த ஒரு ஜனநாயக சீர்திருத்த முயற்சியும் சிவில் சமூகம் மற்றும் உள்ளூர் சமூக செயற்பாட்டாளர்கள் போன்ற பாதிக்கப்படும் பங்குதாரர்களுடனான ஆலோசனைச் செயற்பாட்டின் மூலமே ஆரம்பிக்கப்பட வேண்டும்.

[i] This legal analysis has been done by the International Center for Not-for-Profit Law (ICNL), an international organization that focuses on the legal framework for civil society and philanthropy. For a detailed analysis, please email [email protected].

[ii] Sri Lanka also committed to repeal the PTA and replace it with “anti-terrorism legislation in accordance with contemporary international best practices”[ii] under its 2015 co-sponsored UN Human Rights Council resolution.

[iii] UN Special Rapporteur on the promotion and protection of human rights and fundamental freedoms while countering terrorism, Report to the UNGA on the Promotion and protection of human rights and fundamental freedoms while countering terrorism, 18 Sept 2015, UN Doc A/70/371.

[iv] Id. at p. 6.

[v] See, e.g., Human Rights Council Resolution 30/15, Oct 12, 2015, UN Doc # A/HRC/RES/30/15, preamble; see also Martin Scheinin, Report of Special Rapporteur on the promotion and protection of human rights and fundamental freedoms while countering terrorism, para. 9, UN Doc. # A/61/267 (August 2006).

[vi] Frank La Rue, Report of the Special Rapporteur on the promotion and protection of the right to freedom of opinion and expression, para. 56, UN Doc. # A/HRC/23/40, (April 2013).

[vii] David Kaye, Report of the Special Rapporteur on the promotion and protection of the right to freedom of opinion and expression, para. 20, UN Doc. # A/71/373, (September 2016).

[viii] See, e.g., Death Penalty Information Center, https://deathpenaltyinfo.org/policy-issues/international:” More than 70% of the world’s countries have abolished capital punishment in law or practice.”