Photo, SELVARAJA RAJASEGAR
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்த சிலோனில், அதன் அக்கால பிரதான ஏற்றுமதிப் பயிரான கோப்பியில் பரவிய தீவிரமான நோய் அப்பயிர்ச் செய்கையை முற்றாக அழித்தது. பிரித்தானியர்கள் அப்பயிருக்கு பதிலாக தேயிலைச் செய்கையை விரைவாக அறிமுகப்படுத்தினர். தேயிலைச் செய்கைக்கு தொழிலாளர் படை அதிகம் தேவைப்பட்ட பயிர்ச்செய்கை என்பதால், பயிரை உருவாக்கவும் கொழுந்துகளைப் பறிக்கவும் தேவையான தொழிலாளர் படையை கண்டறிய வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டது.
அண்டைய தேசமான இந்தியாவின் தெற்கு பகுதியில் அதிகமாகவும் செலவு குறைவாகவும் காணப்பட்ட தொழிலாளர்களை ‘இறக்குமதி’ செய்ததன் மூலம் இத்தேவையை அவர்களால் பூர்த்தி செய்ய முடிந்தது. தற்போது தமிழ்நாடு என அழைக்கப்படும் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் மத்தியில் இலங்கையில் அமையப் போகும் சிறந்த வாழ்வு பற்றிய கதைகள் பரப்பப்பட்டன. வேலைவாய்ப்பு முகவர்கள் அல்லது ‘பணிக்கு ஆட்சேர்ப்போர்’ சிலோனுக்கான பயணத்தை மேற்கொள்ள இலட்சக்கணக்கான மக்களை இணங்க வைத்தனர்.
மிகவும் கடினமாக அமைந்த அந்த யாத்திரைக்கு அம்மக்கள் பாரிய விலையை கொடுக்க நேரிட்டது. தலைமன்னாரில் தரையிறங்கிய அம்மக்கள் மத்திய மலைநாட்டில் உள்ள பெருந்தோட்டங்களுக்கு கால்நடையாகவே அழைத்துச் செல்லப்பட்டனர். மலேரியா, பாம்புக் கடி அல்லது தீவிர களைப்பு காரணமாக பலர் இறக்க நேரிட்டது. தலைமன்னாரில் தரையிறங்கிய மக்களில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இவ்வாறு இறக்க நேரிட்டது என சில மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. பெருந்தோட்டங்களை சென்றடைந்த பின்னர் அம்மக்கள் மிகவும் செலவு குறைந்த வகையில் அடுத்தடுத்ததாக அமைக்கப்பட்ட லயன் அறைகளில் குடியமர்த்தப்பட்டனர். காற்றோட்டம் அற்ற, குழாய் நீர் வசதியோ அல்லது மலசலகூட வசதியோ அற்ற அந்த சிறிய ஒற்றை அறையில் முழுக் குடும்பமும் வசிக்கும் நிலை உருவாக்கப்பட்டது. இவ்வாறுதான் அன்று சிலோன் என அழைக்கப்பட்ட தற்போதைய இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களின் கதை ஆரம்பமானது.
இந்திய வம்சாவளி பெருந்தோட்ட தொழிலாளர்களின் சனத்தொகை பன்மடங்காக அதிகரித்த அதேவேளை அவர்கள் சுரண்டப்படுவதும் இன்று வரை தொடர்கின்றது. அவர்கள் வாழும் நிலைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததுடன் தொடர்ச்சியாக அவர்கள் மிகவும் குறைந்த வேதனத்தையே பெற்று வருகின்றனர். அச்சமயம் நாட்டில் செயற்பட்ட பிரதான சிங்கள அரசியல் தலைவர்களான D.B. ஜெயதிலக்க, D.S. சேனாநாயக்க மற்றும் E.W. பெரேரா அத்துடன் தமிழ் அரசியல் தலைவர்களான பொன்னம்பலம் அருணாச்சலம் ஆகியோர் சிலோன் தேசிய காங்கிரஸினை உருவாக்கி பிரித்தானியருடன் சுதந்திரத்துக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இக்காலகட்டத்தில், கறுப்புத் தங்கம் என அறியப்படும் நாட்டின் பிரதான பொருளாதார உற்பத்தியான தேயிலையை உற்பத்தி செய்த இந்திய வம்சாவளித் தமிழர்கள் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக மறக்கப்பட்ட மக்களாகவே காணப்பட்டனர்.
இவ்வாறான பின்னணி ஒன்றில்தான், ஒரு நாட்டுப்பற்றாளராக, சுதந்திர போராட்ட வீரராக மற்றும் தொழிலாளர்களின் தலைவராக பெரி சுந்தரம் என பிரசித்தமாக அறியப்படும் பெரியண்ணன் சுந்தரத்தின் எழுச்சி ஆரம்பமானது. இவ்வளர்ச்சி இந்திய வம்சாவளி மக்களின், குறிப்பாக தமிழ் தொழிலாளர்களின் அங்கீகாரம் பெற்ற தலைவராக பெருந்தோட்டங்கள் மற்றும் சிலோன் முழுவதும் வருவதற்கு வழிவகுத்தது.
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கல்வியாளர் மற்றும் பாரிஸ்டரான பெரி சுந்தரம் மடுல்கெல்ல நெலும்மலை தோட்டத்தின் தலைமை கங்காணியின் மகனாவார். குடும்ப ஆதரவு மற்றும் அவரது சொந்த முன்னெடுப்பு என்பவற்றைன் ஊடாக அவர் கண்டி திரித்துவக் கல்லூரி மற்றும் புனித தோமஸ் கல்லூரி அத்துடன் கொழும்பு சட்டக் கல்லூரி என்பவற்றில் தனது கல்வியைப் பெற்றார். அதன் பின்னர் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் மற்றும் கிறேஸ் இன் ஆகியவற்றில் தனது உயர்கல்வியைப் பூர்த்தி செய்தார். இக்கல்விப் பின்புலம் அக்காலகட்டத்தில் சிலோன் தேசிய காங்கிரஸின் உருவாக்க உறுப்பினராக தேசிய தலைமைத்துவத்துக்கு தகுதி வாய்ந்தவராக மாற்றியதுடன் தலைவராக ஏற்கப்படுவதற்கும் வழி சமைத்தது.
1919 இல், இலங்கையின் முதலாவது தொழிற்சங்கமான ‘சிலோன் தொழிலாளர் நலன்புரி லீக்’ அமைப்பின் ஸ்தாபகராகவும் அதன் செயலாளராகவும் கடமையாற்றியதுடன் சிலோன் தொழிலாளர் சம்மேளனத்தின் ஸ்தாபகராகவும் செயலாளராகவும் செயற்பட்டார். அதனையடுத்து, 1931ஆம் ஆண்டில் இடம்பெற்ற முதலாவது அரச பேரவைத் தேர்தலில் ஹட்டன் ஆசனத்துக்காக போட்டியின்றி தெரிவானதுடன் சிலோனின் முதலாவது தொழிற்துறை மற்றும் வர்த்தக அமைச்சராக சேவை புரிந்தார். இதன் போது, தொழிலாளர்கள் சுரண்டல் மற்றும் நியாயமற்ற தொழிலாளர் நடைமுறைகளில் இருந்து சட்ட ரீதியாக பாதுகாக்கப்பட அவசியமான சட்டச் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். தொழிற்சங்கங்கள், தொழிலாளர் நட்டஈடு மற்றும் ஆகக் குறைந்த சம்பளம் என்பன தொடர்புபட்ட கட்டளைச் சட்டங்கள் போன்ற முக்கிய சட்டமியற்றல்களுக்கும் மூலகாரணமாக திகழ்ந்தார்.
ஜவஹர்லால் நேரு மற்றும் மகாத்மா காந்தி ஆகிய இந்திய தலைவர்களைச் சந்தித்த பெரி சுந்தரம், அவர்களின் பிரித்தானியருக்கு எதிரான போராட்டத்தால் கவரப்பட்டார். இந்திய வம்சாவழி மக்களின் முன்னேற்றம் மற்றும் நலன்களுக்காக செயற்படும் நிறுவனங்களை ஒருங்கிணைக்கலாம் என்ற ஆலோசனை அவருக்கு ஜவஹர்லால் நேருவால் வழங்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து அக்கால கட்டத்தில் பல்வேறுபட்ட இந்திய வம்சாவழி மக்களை பிரதிநிதித்துவம் செய்த, சிதறுண்டு காணப்பட்ட 25 நிறுவனங்களை ஒன்றிணைத்தார். 1939ஆம் ஆண்டு அவர் சிலோன் இந்திய காங்கிரஸை (CIC) உருவாக்குவதற்குரிய உந்து சக்தியாக இது அமைந்தது. ஒரு வருடத்தின் பின்னர் நாட்டின் மிகப்பெரும் பதிவு செய்யப்பட்ட தொழிற் சங்கமான CIC தொழிலாளர் ஒன்றியத்தை உருவாக்கினார். இதில் பெரும்பாலும் இந்திய வம்சாவழி பெருந்தோட்ட தொழிலாளர்கள் அங்கம் வகித்தனர். இவ்விரண்டு அமைப்புகளினதும் தலைவராக பெரி சுந்தரம் தெர்ந்தெடுக்கப்பட்டார்.
பெப்ரவரி 4, 1948 அன்று அமைதியான அதிகார மாற்றம் ஒன்றின் ஊடாக இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. எனினும் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 1948ஆம் ஆண்டின் சிலோன் குடியுரிமைச் சட்டம் மற்றும் 1949ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க இந்திய மற்றும் பாகிஸ்தான் வதிவிடவாசிகள் சட்டம் என்பவற்றின் ஊடாக இந்திய வம்சாவழியினருக்கு சிலோன் குடியுரிமை மறுக்கப்பட்டது.
50 களின் ஆரம்ப காலகட்டத்தில் CIC தொழிலாளர் ஒன்றியம் சிலோன் தொழிலாளர் காங்கிரஸ் (CWC) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதுடன் ‘நாடற்றவர்களாகக்’ காணப்பட்ட இந்திய வம்சாவழி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக பாடுபடும் தனது பணியினை தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்தது.
பெப்ரவரி 4, 1957 அன்று பெரி சுந்தரம் இயற்கை எய்தினார். எனினும், அதற்கு முன்னரே சௌமியமூர்த்தி தொண்டமானை இயலுமை மிக்க அடுத்த தலைவராக அவர் வளர்த்தெடுத்திருந்தார். தொண்டா என அறியப்பட்ட அவர் CWC இன் தலைமைத்துவத்துக்கு மிகவும் பொருத்தமானவராகக் காணப்பட்டார். ரம்பொட பெருந்தோட்டத்தின் தலைமை கங்காணியின் மகனான தொண்டமான் தன்னிடம் காணப்படாத நுணுக்கம் மற்றும் பேச்சுத்திறன் என்பவற்றை தனது நுட்பமான மனது மற்றும் அரசியல் நடைமுறைவாத உணர்வு என்பவற்றால் ஈடு செய்தார். அவை தொண்டமானை தனது சமூகத்தில் சிறப்பாக நிலைநிறுத்தின.
அதே நேரத்தில், தேசிய மட்டத்தில், நாடற்றவர்கள் என்ற பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. ஶ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம் அப்போதைய பிரதம மந்திரி ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க மற்றும் இந்திய பிரதமர் லால் பஹதூர் சாஸ்திரி ஆகியோரினால் ஒக்டோபர் 30, 1964 அன்று கைச்சாத்திடப்பட்டது. இவ்வொப்பந்தத்தின் மூலம் 300,000 இந்திய வம்சாவழியினருக்கு குடியுரிமை வழங்கப்பட்டதுடன் 525,000 பேர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப் பட்டனர். இருந்த போதும் இன்னும் 150,000 பேர் நாடற்றவர்களாகவே காணப்பட்டனர். ஒரு சில வாரங்களின் பின்னர், டிசம்பர் 3, 1964 அன்று, பத்திரிகை பேரவை சட்டமூலத்துக்கு வாக்களிக்க தொண்டமான் மறுத்ததன் மூலம் திருமதி பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தை கவிழ்த்தார்.
1970 தொடக்கம் 1977 வரையான காலப்பகுதியில் மாத்திரம் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத தொண்டமான, வெற்றி பெறும் ஆட்சியாளர்களை முன் கூட்டியே துல்லியமாகக் கணித்து அவர்களை ஆதரிக்கும் திறனை கொண்டிருந்தார். 1999ஆம் இயற்கை எய்தும் வரை அவர் ஜே.ஆர். ஜெயவர்த்தன, ஆர். பிரேமதாச, மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் அமைச்சராகக் கடமையாற்றினார்.
ஜெயவர்த்தனவுடன் சிறந்த பணி உறவினை தொண்டமான் கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் நபர்கள் மற்றும் விடயங்களை துல்லியமாக எடைபோடும் திறமை மிக்கவர்களாகவும் பரஸ்பரம் மரியாதை வழங்குபவர்களாகவும் காணப்பட்டனர். ஜே.ஆர். அரச நாடாளுமன்ற உறுப்பினர் குழுவிடம் திகதியிடப்படாத இராஜினாமாக் கடிதங்களை கோரிய போது, அதனை வழங்க மறுத்த ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினராக தொண்டா மாத்திரமே இருந்தார். “நான் சிலோன் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர், நான் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் அல்ல என தொண்டா ஜே.ஆரிடம் கூறினார். பரவாயில்லை தொண்டா என்று கூறிய ஜே.ஆர் அவ்விடயத்தை அத்துடன் விட்டுவிட்டார்.
இவ்வாறான புரிதலே தொண்டா ஜே.ஆரின் அமைச்சரவையில் அங்கம் வகித்த நிலையிலும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கோரி CWC வேலை நிறுத்தங்களை மேற்கொண்டு அவற்றை பெற வழிவகுத்தது. இந்த உறவு எஞ்சிய அனைத்து இந்திய வம்சாவழி தோட்டத் தொழிலாளர்களுக்கும் குடியுரிமை வழங்க ஜே.ஆரை சம்மதிக்க வைக்க வைத்தது. அதன் பின்னர் பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இவ்விடயம் அமுலுக்கு வந்தது.
இந்த முக்கியத்துவம் மிக்க அடைவுக்கு மத்தியிலும் 200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்நாட்டுக்கு வந்த இந்திய வம்சாவழி பெருந்தோட்ட தொழிலாளர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இன்னும் உள்ளன. அவர்களின் சம்பளம் பெயரளவில் அதிகரித்த போதும், அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப அது அதிகரிக்கின்றதா என்ற கேள்விக்கு இன்னும் விடையில்லை. அவர்களின் வதிவிட நிலைகள் மிகவும் குறைந்த அளவிலேயே மேம்பாடு அடைந்துள்ளது.
CWC இன் தலைமைத்துவம் குடும்பச் சொத்து போன்று பரம்பரைகளுக்கு இடையே கைமாற்றப்படுகின்றது. தொண்டமானிடம் இருந்து அவரின் பேரனான ஆறுமுகத்துக்கு வழங்கப்பட்ட இத்தலைமைத்துவம் அவரது திடீர் மரணத்தின் பின்னர் அவரின் மகனான 28 வயது நிரம்பிய ஜீவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான எண்ணிக்கை கொண்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள், இந்நாட்டின் இரண்டாம் தரப் பிரஜைகளாக இல்லாமல் இருக்கலாம், எனினும் அவர்களின் சமூக பொருளாதார நிலைகள் இரண்டாம் தரத்திலேயே காணப்படுகின்றது. பெரி சுந்தரம் மற்றும் தொண்டாவின் காலத்தில் காணப்பட்ட நிலையை விட முற்றிலும் மாற்றமான நிலையில் தற்காலத்தில் காணப்படும் CWC தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது, ஏனெனில், இலங்கை குடிமக்களான இந்திய வம்சாவழியினர் இன்னும் தமது சுதந்திரத்தை பெறவில்லை.
ஜெயா பெரி சுந்தரம்
(கட்டுரை எழுத்தாளர் பெரியண்ணன் சுந்தரத்தின் மகனாகும், சட்டத்தரணியான இவர் CWC இன் முன்னாள் சிரேஷ்ட உப தலைவர் ஆவார். மேலும், இவர் இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன் ஆகிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.)
75th Independence: Lured by greener pastures, and then exploited என்ற தலைப்பில் ‘சண்டே ரைம்ஸ்’ தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.