“பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு அடையாளம் காணமுடியாத இடத்தில் என்னைத் தடுத்துவைத்து விசாரணை செய்யும்போது பல பேர் அந்த இடத்தில் இருப்பார்கள். ஒருவர் மாத்திரம் கேள்வி கேட்கும் நிலைமை அங்கு இருக்காது; பலரும் கேள்வி கேட்பார்கள். யார் எந்த சந்தர்ப்பத்தில் அடிப்பார் என்று தெரியாது. விசாரணை நடக்கும் போது பின்னுக்கிருந்தும் அடி விழும், முன்னுக்கிருந்தும் அடிவிழும், எந்த இடத்திலிருந்து அடிபார்கள் என்று தெரியாது. இப்படி ஒருநாள் விசாரணை நடந்துகொண்டிருந்த போது நான் எதிர்பார்க்காத சந்தர்ப்பத்தில் எனக்குப் பின்னாலிருந்து பெற்றோல் நிரப்பிய பொலிதீன் பையொன்றைக் கொண்டு என்னுடைய முகத்தை மூடினார்கள். அதன் பின்னர் மூச்சுத்திணறி அப்படியே மயங்கி விழுந்துவிட்டேன். ஒரு குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபோது அங்கு யாரும் இருக்கவில்லை. எனது கைகள், கால்கள் பிணைக்கப்பட்டிருந்தன.”

9 வருடங்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்து இறுதியில் நீதிமன்றின் ஊடாக விடுதலையாகி பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் பிரணவன் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) இவ்வாறு கூறுகிறார்.

முன்னாள் போராளியான பிரணவன் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வவுனியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். தன்னிடமோ அல்லது தன்னுடைய குடும்பத்தாரிடமோ எந்தவித அறிவிப்பையும் மேற்கொள்ளாமல் கடத்தல் பாணியில் சிவில் உடை தரித்தோர் தன்னைக் கைதுசெய்ததாக பிரணவன் குறிப்பிடுகிறார். ஜோசப் படை முகாமோ அல்லது அதற்கு அருகில் இருக்கும் ஏதேனும் தடுப்பு முகாமிலோ தான் உட்பட இன்னும் பலர் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டோம் என்றும் நிலக்கீழ் பங்கர்களில் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டோம் என்றும் கூறுகிறார்.

2013ஆம் ஆண்டு வரை தன்னுடைய ஆணுறுப்பிலிருந்து இரத்தம் வெளியேறியதாகவும் தலையில் கடுமையாக தாக்குதல் நடத்தியதன் காரணமாக இப்போதும் கூட வெய்யிலில் நடக்கமுடியாத ஒரு நிலை காணப்படுவதாகவும் குனிந்து ஏதாவது வேலை செய்தால் முதுகுப் பகுதி வீங்கி கழுத்தைக் கூட திருப்ப முடியாத நிலை காணப்படுவதாகவும் பிரணவன் குறிப்பிடுகிறார்.

9 வருடங்களின் பின்னர் விடுதலையானதும் சமூகத்தில் இணைந்து முன்னரைப் போன்று குடும்பத்துடன் வாழலாம் என்று நம்பிக்கையுடன் இருந்த பிரணவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர் என்ற காரணத்தினால் உறவினர்கள் கூட அவ்வளவாகப் பேசுவதில்லை அல்லது இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்காக வேலை செய்வதாக சந்தேகம் கொள்கிறார்கள். சிறையில் இருந்தபோதே குடும்பத்தை விட்டு நிரந்தரமாக பிரிந்திருக்கவேண்டிய ஒரு சூழல் தனக்கு ஏற்பட்டது என்று பிரணவன் கூறுகிறார்.

“பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டிருக்கும் வரையறையில்லாத அதிகாரங்களைக் கொண்டு பாதுகாப்புப் படையினர் பல்வேறு துஷ்பிரயோக நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்கள். கைதுசெய்யப்படுகிறவர்களை குற்றவாளிகளாக்கியே சமூகத்திற்கு அனுப்பவேண்டும் என்பதில் இந்தச் சட்டம் குறியாக இருக்கிறது. அதுமட்டுமல்லாம் தடுப்பில் இருக்கும் பெரும்பாலானவர்கள் விரும்பியோ விரும்பாமலோ குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியே வழக்குகளை எதிர்நோக்கி வருகிறார்கள்.” 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் பல்வேறு இன்னல்களை அனுபவித்த, இன்னும் அனுபவித்துவரும் பிரணவனின் கதையே இது.