படம் | DBSjeyaraj

தமிழ் தேசிய அரசியல் உரையாடலில் அடிக்கடி எட்டிப்பார்க்கும் சொல்தான் கையாளல் என்பது. எங்களுடைய நலனை முன்னிறுத்தி இந்தியாவை அல்லது சவுத் புளொக்கை கையாள வேண்டும், அமெரிக்காவை கையாள வேண்டும் அல்லது மேற்குலகை கையாள வேண்டும் என்றவாறான சொற் தொடர்களை அடிக்கடி அரசியல் பத்திகளில் கண்டிருப்பீர்கள். ஆனால், திரும்பிப் பார்க்கும்போது, இந்தச் சொல்லைத் தொடர்ந்தும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தகுதி நமக்கு இருக்கிறதா என்னும் கேள்வியே எழுகிறது. இது ஒரு சுய விமர்சனம் சார்ந்த கேள்விதான். அதேவேளை, இப்பத்தி ஒரு விடயத்தையும் அழுத்தி உரைக்க முயல்கிறது. அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் அப்படியெல்லாம் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி, இந்தியாவையோ அல்லது அமெரிக்காவையோ கையாளவும் முடியாது (இது கூட்டமைப்புக்கு மட்டுமல்ல ஏனைய தமிழ்த் தரப்பினருக்கும் பொருந்தும்). ஏனெனில், கூட்டமைப்பால் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் சொந்த மக்களின், சிதறிய அங்கமான புலம்பெயர் சமூகத்தையே நேர்த்தியாக கையாள முடியவில்லை. தன்னுடைய சொந்த சமூகத்தையே கையாள முடியாத ஒரு தலைமையினால் எவ்வாறு வெளியாரை கையாள முடியும்?

இப்படியொரு தலைப்பு தொடர்பில் இப்பத்தியாளர் எழுந்தமானமாக வந்துவிடவில்லை. மாறாக, ஜரோப்பிய புலம்பெயர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன் உரையாடிய அனுபவத்தின் விளைவாகவே, இவ்வாறானதொரு கேள்வி எழுந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் புலம்பெயர் சமூகம் என்பது அவர்களுக்கானதொரு பின்தளமாக மட்டுமே இருந்தது. அதாவது, களத்திலிருந்த தலைமையின் உத்தரவுகளை நிறைவேற்றும் ஒரு சமூகமாகவே புலம்பெயர் சமூகத்தின் பொறுப்பு வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால், 2009இற்குப் பின்னரான சூழலில் பெருமளவிற்கு புலம்பெயர் சமூகம் குழுக்களாக சிதறியதுடன் செயலளவிலும் வீழ்ச்சிடைந்தது. இதில் புலம்பெயயர் சமூகத்தின் அணுகுமுறைகள் தொடர்பிலும் விமர்சனங்கள் உண்டு. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி பெருமளவிற்கு புலம்பெயர் சமூகத்தை வீரியமிளக்கச் செய்தது என்பதே உண்மை. 2009இற்குப் பின்னர் களத்திற்கும் புலத்திற்குமான அரசியல் மற்றும் சமூக ஊடாட்டங்கள் பெருமளவிற்கு வீழ்ச்சிகண்டன. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் தமிழ் தேசிய அரசியலை கையாளுவதற்கான மக்கள் ஆணையைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புலம்பெயர் சமூகத்துடன் காத்திரமான உரையாடல் எதனையும் செய்திருக்கவில்லை. மேலும், அதற்கான முயற்சிகள் எவற்றையும் நேர்மையாக முன்னெடுக்கவும் இல்லை.

இவ்வாறானதொரு சூழலில்தான் அண்மைக் காலத்தில் உலகத் தமிழர் பேரவையுடன் கூட்டமைப்பும், கூட்டமைப்பின் ஊடாக தற்போதைய அரசாங்கமும் ஒரு உரையாடலை செய்ய முயல்கிறது. ஆனால், அதுவும் கூட ஒரு மூடிய அறை உரையாடலாகவே இருக்கிறது. உலகத் தமிழர் பேரவையுடனான கூட்டமைப்பினதும், அரசாங்கத்தினதும் ஊடாட்டத்தை புலம்பெயர் சூழலிலுள்ள பலரும் தவறான ஒன்றாகப் பார்க்கவில்லை. ஆனால், அது ஒரு மூடிய அறை விவகாரமாக இருப்பது தொடர்பிலேயே விசனப்படுகின்றனர். அது பலருக்கும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நேர்மையான அணுகுமுறைகளே அவசியம். உண்மையில் உலகத் தமிழர் பேரவை புலம்பெயர் சமூகத்தில் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய ஒரு பலமான அமைப்பும் அல்ல. ஆனால், அரசாங்கத்திற்கும் உலகத் தமிழர் பேரவைக்குமான தொடர்புகளை அரசியல் ரீதியாக நோக்கினால், குறியீட்டு ரீதியான முக்கியத்துவம் உடையவை. பொதுவாக அரசுகளுக்கு ஒரு அமைப்பின் பலத்தை விடவும் அதனுடனான தொடர்புகளின் வழியாக கிடைக்கும் குறியீட்டு அரசியல் பெறுமதியே முக்கியமானது. அந்த வகையிலேயே அடிக்கடி அரசாங்கம் புலம்பெயர் சமூகத்துடன் தாம் ஊடாட்டத்திலிருப்பதான ஒரு தகவலை சொல்லி வருகிறது. ஆட்சி மாற்றத்தின் பின்னரான சூழலில் இலங்கைக்குள் மக்கள் ஆணையைப் பெற்ற கூட்டமைப்பை ஒரு எதிர்ப்பற்ற எதிர்க்கட்சியாக மாற்றுவதில் வெற்றி பெற்றிருக்கும் அரசாங்கம், புலம்பெயர் சூழலிலும், அவ்வாறானதொரு சூழலை உருவாக்க முயல்கிறது. அதற்கான முதல் தெரிவே உலகத் தமிழர் பேரவை. ஆனால், இதன் தார்ப்பரியத்தை உலகத் தமிழர் பேரவையின் முக்கியஸ்தர்களாக அறியப்படுவர்கள் எந்தளவு தூரம் விளங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதற்கான பதில் அவர்களிடமே! எதிர்ப்பற்ற எதிர்த் தரப்பு என்றால் என்ன? ஒரு அரசியல் எதிரணியாக தங்களை அடையாளப்படுத்துவது, ஆனால் அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் அனைத்துடனும் ஒத்தோடுவது, மக்களுக்காகப் பேசுவதாகச் சொல்லது, ஆனால், மக்களின் நலனை முன்னிறுத்தி அரசாங்கத்தை உறுதியுடன் அணுகாது விடுவது. சம்பந்தனது அண்மைக்கால அணுமுறைகளை உற்று நோக்கினால் இதனை தெளிவாக ஒருவரால் விளங்கிக் கொள்ள முடியும். தமிழ் மக்கள் தொடர்பான பல்வேறு முடிவுகளையும் தேசிய அரசாங்கமே (எனப்படும்) முன்னெடுத்து வருகிறது. ஏனெனில், அரசாங்கத்துடன் தமிழ் மக்களில் நலன்சார்ந்து எந்தவொரு உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தையையும் சம்பந்தன் மேற்கொள்ளவில்லை. இதனால், எல்லோரும் ஒன்று போலான ஒரு காட்சியே மேலோங்கியிருக்கிறது. இதனால், அரசாங்கம் எதிர்ப்பற்ற வகையில் தனது நிகழ்ச்சிநிரலை அமுல்படுத்தி வருகிறது. பிறிதொரு வகையில் நோக்கினால், அரசாங்கத்தை பொறுத்தவரையில் உண்மையான அரசியல் எதிரணி மஹிந்தவும் அவருடன் இருக்கின்ற தரப்பினருமே தவிர கூட்டமைப்பு அல்ல. இதனைத்தான் நான் மேலே குறிப்பிட்டேன், அரசாங்கம் கூட்டமைப்பை ஒரு எதிர்ப்பற்ற எதிரணியாக முடக்குவதில் வெற்றிபெற்றிருக்கிறது என்று. புலம்பெயர் சூழலிலுள்ள முன்னணி அமைப்புக்களையும் அவ்வாறானதொரு பெயரளவு எதிர்த்தரப்பாக மாற்றுவதே அரசாங்கத்தின் இலக்கு. அதாவது, பெயரளவில் எதிரணி.

புலம்பெயர் சூழலிலுள்ள அனைத்து முன்னணி அமைப்புக்களுமே இலங்கை அரச எதிர்ப்பை கொண்டவை. குறிப்பாக ராஜபக்‌ஷவின் காலத்தில் உலகத் தமிழர் பேரவை உட்பட அனைத்து அமைப்புக்களுமே இலங்கை அரசுக்கு சர்வதேசளவில் சவாலாக இருந்தவை. ஆனால், ஆட்சி மாற்றத்தின் பின்னர் கூட்டமைப்பு ஒரு எதிர்ப்பற்ற எதிரணியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட போது அந்த அலையுடன் சில புலம்பெயர் அமைப்புக்களும் உள்வாங்கப்பட்டன. இதில் உலகத் தமிழர் பேரவை மற்றும் கனடிய தமிழ் காங்கிரஸ் ஆகியவையே முக்கியமானவை. கூட்டமைப்புடன் முக்கியமாக, சம்பந்தன் அணியுடன் தொடர்புகளை பேணும் புலம்பெயர் குழுக்களாக இவர்களே இருக்கின்றனர். ஆனால், இதனைக் கொண்டு கூட்டமைப்பு புலம்பெயர் சமூகத்துடன் ஒரு ஆரோக்கியமான உரையாடலை மேற்கொள்கிறது என்னும் முடிவுக்கு வர முடியாது. உண்மையில் புலம்பெயர் சமூகத்துடன் ஒரு காத்திரமான ஊடாட்டத்தை கூட்டமைப்பு மேற்கொண்டிருக்க முடியும்,. ஆனால், அதனை செய்வதற்கு சம்பந்தன் முயற்சிக்கவில்லை. 2009இற்குப் பின்னரான கூட்டமைப்பு – புலம்பெயர் ஊடாட்டம் என்பது வெறுமனே தேர்தலுக்கு நிதி சேகரிக்கும் உறவேயன்றி, வட கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்திய ஒன்றாக இருந்திருக்கவில்லை. தேர்தலுக்காக புலம்பெயர் சமூகத்தை அணுகும் கூட்டமைப்பினர் இதுவரை மக்களின் நல்வாழ்வு திட்டங்களுக்காக, வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்காக புலம்பெயர் மக்களை ஒருபோதுமே அணுகியதில்லை. அண்மையில் கூட்டமைப்பின் உள் அரங்கில் விவாதிக்கப்பட்ட ஒரு முரண்பாட்டின் பின்னணியாகக் கூறப்பட்ட ஒரு விடயம் உங்களுக்கு நினைவிருக்குமாயின், இந்தப் பத்தி குறிப்பிட முயலும் விடயத்தை இலகுவா விளங்கிக்கொள்ள முடியும். தேர்தலின்போது நிதி சேகரிப்பிற்கு ஒருவர் போகாமையை பிறிதொருவர் ஒரு பிரதான குற்றமாக முன்னிறுத்தியிருந்தார். இதன் மூலம் புலப்படுவது என்ன? ஆனால், பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக நிதி கேட்டு, முன்னாள் போராளிகளின் வாழ்வுக்காக உதவி கேட்டு மற்றும் அபிவிருத்திக்கான முன்மொழிவுகளுடன் எந்தத் தலைவர் புலம்பெயர் சமூகத்திடம் இதுவரை சென்றிருக்கிறார்? ஒருவர் இருக்கின்றாரா?

2009இற்கு பின்னரான சூழலில் புலம்பெயர் சமூகத்தைக் கையாள வேண்டிய முதன்மை பொறுப்பு கூட்டமைப்பையே சார்ந்திருந்தது. ஆனால், அதனை கூட்டமைப்பு நேர்த்தியாக செயற்படுத்த முயற்சிக்காத போதே, புலம்பெயர் சூழலிலுள்ள சில அமைப்புக்கள் மற்றும் குழுக்கள், வேறு தெரிவுகளை நோக்கிச் சிந்திக்கத் தலைப்பட்டன. புலம்பெயர் சூழலில் முன்வைக்கப்படும் அனைத்து நிலைப்பாடுகளுடன் கூட்டமைப்பால் இசைந்து போக முடியாது என்பதும் உண்மை. ஆனால், வட கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நல்வாழ்வு, அழிவுகளால் சிதைக்கப்பட்ட அவர்களது வாழ்வை மீளக் கட்டியெழுப்பும் திட்டங்கள் என்பவற்றில் அரசியல் முரண்பாடுகளைக் கடந்து ஒன்றிணையக் கூடிய புறச்சூழல் சிறப்பாகவே இருந்தது. ஆனால், கூட்டமைப்பு அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இன்றும் அதற்கான புறச்சூழல் புலம்பெயர் சூழலிருக்கிறது. ஆனால், அதனை திறமையாக கையாளும் ஆற்றல் கூட்டமைப்பின் தலைமையிடம் இருக்கிறதா என்பதே கேள்வி! உதாரணமாக இன்றும் சம்பந்தன் புலம்பெயர் சமூகத்தை நோக்கி தமிழ் மக்களின் அபிவிருத்தி தொடர்பில் அழைப்பு விடுவாராயின், பலர் செயலாற்றுவதற்கு முன்வருவார்கள். ஆனால், அது நிகழுமா? தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் திரும்பிப் பார்க்க ஆளற்று தொடரும் குறைபாடு ஒன்றிருக்கிறது. அதாவது, தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது எந்த மக்களுக்காக போராடுவதாக சொல்லப்படுகிறதோ, அந்த மக்களின் வாழ்வாதாரம், அபிவிருத்தி தொடர்பில் எவ்வித கரிசனையையும் எவரும் வெளிப்படுத்துவதில்லை. அப்படியொரு விடயம் இருப்பது பற்றிக் கூட எந்தவொரு தலைவரும் சிந்திப்பதாகக் கூட தெரியவில்லை. அதேவேளை, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் பிறிதொரு தவறான பார்வையும் கேட்பாரற்று தொடர்கிறது. அதாவது, அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டால், பொருளாதார மற்றும் ஏனைய பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும். இதுவும் ஒரு தவறான அரசியல் அணுகுமுறை. இது கம்யூனிசம் வந்துவிட்டால் பின்னர் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்தவிடும் என்று நம்பும் கம்யூனிசவாதிகளின் வாதத்திற்கு ஒப்பானது? சரி அப்படியொன்று வருமென்றால் கூட அது எப்போது வரும்? அது வரும் வரை மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு? தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உறுதிப்படுத்தப்பட்டு விட்டால் பல்வேறு பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்றே வைத்துக் கொண்டாலும் அது எப்போது உறுதிப்படுத்தப்படும்?

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் என்று வரையறுக்கப்பட்ட எவையும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அவற்றை உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. ஆனால், இதன்போது தமிழ் மக்கள் பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் மற்றும் சமூக ரீதியாகவும் மிகவும் மோசமான நிலையில் பின்நோக்கி தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்தக் காலத்தில் ஏனைய சமூகங்கள் பாரியளவில் முன்னேற்றமடைந்திருக்கின்றன. இந்த நிலைமையை இப்படியே தொடர அனுமதிப்பதா அல்லது உரிமைசார்ந்த விடயங்களை அழுத்திக் கொண்டு கூடவே வட கிழக்கை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவது தொடர்பிலும் சிந்திப்பதா? எது சரியான அணுகுமுறையாக இருக்கும்?

இன்று பாதிக்கப்பட்ட வட கிழக்கை அபிவிருத்தி நோக்கி நகர்த்துவதில் கூட்டமைப்பின் தலைமையிடம் இருக்கின்ற திட்டங்கள் என்ன? ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளக் கூடிய திட்டங்கள் தொடர்பில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் இருக்கின்ற திட்ட முன்மொழிவுகள் என்ன? உதாரணமாக திருகோணமலை மீன்பிடி, விவசாயம் மற்றும் உல்லாசப்பயணத் துறை தொடர்பில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களை கொண்டிருக்கும் ஒரு பகுதி. இது தொடர்பில் திருகோணமலை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருக்கின்ற திட்டங்கள் என்ன? புலம்பெயர் சமூகத்தையும் வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் இவ்வாறான திட்டங்களில் முதலீடு செய்யத் தூண்டும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? புலம்பெயர் சூழலிலுள்ளவர்கள் இது தொடர்பான முதலீடுகளை ஒழுங்கு செய்வதில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கின்றனர். ஆனால், அவர்கள் எல்லோரிடமும் ஒரு கேள்வி இருக்கிறது. அதாவது, புலம்பெயர் தமிழர்கள் முதலீடு செய்வதாயின் அதற்கான பாதுகாப்பு என்ன? இந்தப் பயத்தை போக்க வேண்டியது எவருடைய பொறுப்பு? மக்களின் நல்வாழ்வில், முன்னேற்றத்தில் அக்கறை இருப்பின் கூட்டமைப்பின் தலைவர்கள் மக்களின் அபிவிருத்தி குறித்து சிந்திப்பதை இனியும் பிற்போட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்? அவர்களுக்கு உண்மையிலேயே வட கிழக்கின் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் அக்கறையிருப்பின்?