Photo, AP, Eranga Jayawardena photo

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) செப்டெம்பர் அமர்வுக்கு சற்று முந்திய காலப் பிரிவின் போது உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை ஒன்றை (TRC) ஸ்தாபிப்பதற்கான யோசனை ஒன்றை இலங்கை அரசாங்கம் முன்வைத்திருந்தது. அரசாங்கம் சரியாக ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கடப்பாட்டை மேற்கொண்டிருந்த நிலையில் ஒரு விதத்தில் இது ஒரு புதிய விடயமாக இருந்து வரவில்லை. உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1 இன் ஒரு பாகமாக இலங்கை அரசாங்கம் ஏற்கனவே இணங்கியிருக்கும் நிலைமாறு கால நீதி மற்றும் மனித உரிமைகள் என்பன தொடர்பான பல வழிமுறைகளில் ஒன்றாகும். இலங்கை 2015 செப்டெம்பர் மாதம் இந்தத் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியது.

நீண்டகாலமாக தீர்த்து வைக்கப்படாதிருக்கும் மனக்குறைகளைக் கவனத்தில் எடுப்பதற்கென உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவது பெருமளவுக்கு சவால் மிக்க ஒரு பணியாகும். மிக மோசமாக நேரடியாக பாதிக்கப்பட்டிருப்பவர்களின் திட்டவட்டமான தேவைகள் மற்றும் அபிலாசைகள் என்பவற்றை சரிவர அறிந்து, சமூகங்களுக்கு இடையில் ஏற்றுக்கொள்ளும் தன்மை மற்றும் புரிந்துணர்வு என்பவற்றை ஏற்படுத்துவதுடன் இது சம்பந்தப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் வாதிடப்படும் விதத்தில், இந்தப் பொறிமுறையின் வடிவமைப்பு மற்றும் அது செயல்படும் விதத்தை எடுத்துக் காட்டும் திட்டத்தின் தயாரிப்பு என்பவற்றை இயலச் செய்வதற்கென கலந்தாலோசனை அணுகுமுறை ஒன்றை பின்பற்றுவது இச்செயற்பாட்டின் ஒரு முதன்மையான கருவியாக இருந்து வரும்.

நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனை செயலணி (CTF)

இது தொடர்பாக நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனை செயலணியின் அறிக்கைகள் இதற்கான சிந்தனைக்கு ஒரு பயனுள்ள துவக்கப் புள்ளியை வழங்குகின்றன. பொது மக்களின் கருத்துக்களை – குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களை – கண்டறிந்து கொள்வதற்கென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அரசாங்கத்தினால் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஸ்தாபிக்கப்பட்டது. பரிந்துரைகளை சேகரிப்பதற்கென CTF செயலணி பல முறைமைகளைப் பயன்படுத்தியது. 15 உள்ளூர் வலயக் கமிட்டிகள் உருவாக்கப்பட்டமை அதன் முக்கியமான கருவிகளில் ஒன்றாகும். இக்கமிட்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக் கூட்டங்களை நடத்தியதுடன், பாதிக்கப்பட்டவர்களின் திட்டவட்டமான பிரிவினருடன் இலக்குக்குழு கலந்துரையாடல்களையும் நடத்தியது. இது உயரளவிலான பிரதிநிதித்துவம் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஆகிய தரப்புக்களை உள்வாங்குதல் என்பவற்றில் கணிசமான ஒரு சாதனையை எடுத்துக் காட்டியது. வன்முறை மற்றும் நாட்டில் இடம்பெற்ற பாரிய அளவிலான மோதல்கள் என்பவற்றின் விளைவாகத் தோன்றி மிக மோசமான பாதிப்புக்களுக்கு எதிர்வினையாற்றுவதற்கான இலங்கை அரசின் முயற்சிகளை இது எடுத்துக் காட்டியது. எவ்வாறிருப்பினும், இச்செயலணியின் அறிக்கைகளில் உள்ளடக்கப்பட்டிருந்த கண்ணோட்டங்கள் மற்றும் பரிந்துரைகள் என்பவற்றை போதியளவில் பரிசீலனை செய்வதற்கு ஒன்றன்பின் ஒன்றாக வந்த அரசாங்கங்கள் தவறியிருக்கும் விடயம், அண்மைய வருடங்களில் ஸ்தாபிக்கப்பட்ட நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகள் மீதான பொது மக்களின் நம்பிக்கையை மேலும் சீர்குலைத்துள்ளது.

இறுதி அறிக்கையில் உள்ளக்கப்பட்டிருக்கும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (TRC) தொடர்பான அத்தியாயம், பொது மக்களால் எழுப்பப்பட்டிருந்த பன்முகப்பட்ட கண்ணோட்டங்களைத் தொகுத்து முன்வைத்திருந்தது. இவை இத்தகைய ஆணைக்குழுவொன்றின் ஆணையாளர்கள் மற்றும் ஆளணியினர் ஆகியோருக்குத் தேவைப்படும் திறன் தொகுதி மற்றும் அனுபவங்கள் என்பன தொடக்கம் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் மற்றும் மோதல்கள் என்பன வரையில் பரந்த வீச்சில் இருந்து வந்தன. ஒரு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு எவ்வாறு செயற்பட வேண்டும், அத்தகைய ஒரு ஆணைக்குழு செய்றபட முடியுமா என்ற கண்ணோட்டத்தில் ஊடாக சிந்திப்பவர்களுக்கு முக்கியமான கண்ணோட்டங்களை இது வழங்கியது. இந்தக் கட்டுரையில் மிக முக்கியமான ஒரு கேள்வி தொடர்பாக நான் கவனம் செலுத்துகிறேன்: “உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிப்பதன் நோக்கம் என்ன?” உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான சட்ட மூலம் அடுத்து வரும் மாதங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்தால், அத்தகைய ஒரு பொறிமுறை ஏன் தேவைப்படும் மற்றும் அது எவ்வாறு செயற்பட முடியும் என்பது குறித்து விவாதிப்பதும், சிந்திப்பதும் முக்கியமாகும். உண்மை மற்றும் நல்லிணிக்க செயலணியின் அறிக்கைகளிலிருந்து விடயங்களைப் பெற்றுக் கொள்ளும் அதே வேளையில், CTF செயன்முறையின் ஒரு பாகமாக இருந்து வந்த பொது மக்களுடனான சந்திப்புக்கள் குறித்த எனது சொந்த அவதானிப்புக்களையும் நான் முன்வைக்கின்றேன். இந்தச் செயன்முறையில் நானும் சம்பந்தப்பட்டிருந்ததுடன், மனித உரிமை மீறல்களை எதிர்கொண்டிருந்தவர்களுடன் தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தேன்.

TRC மாதிரியின் பொருத்தப்பாடு

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முறை பற்றி 1990களில் உலகளாவிய ஒரு தோற்றப்பாடு உருவாகியது. பாரியளவிலான மோதல்கள் மற்றும் அல்லது இராணுவ ஆட்சிகள் என்பவற்றிலிருந்து மீண்டு வரும் நிலைமாறு கால சமூகங்களில் இந்நிலைமை காணப்பட்டது. இலத்தீன் அமெரிக்காவே உயரளவிலான TRC வகை கட்டமைப்புக்களை கொண்டிருந்த பிராந்தியமாக இருந்து வந்தது. எனினும், தென்னாபிரிக்காவே இந்த வகையைச் சேர்ந்த பொறிமுறைக்கான மிகச் சிறந்த குறியீடாக உள்ளது. எவ்வாறிருப்பினும், தென்னாபிரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு செயற்பட்ட விதம் மற்றும் அது உதாசீனம் செய்திருந்த விடயங்கள் என்பன தொடர்பாக கணிசமான அளவில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும், பாரியளவிலான அத்துமீறல்கள் நீதித் துறையையும் மேவிச் சென்றிருக்கும் பின்புலங்களில் நிலைமாறு கால நீதிக் கருவிப் பொதியின் முதன்மையான ஒரு கூறாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மாதிரி நோக்கப்படுகிறது; ஆழமாக வேரூன்றியிருக்கும் மனக்குறைகள் பிளவுண்ட ஓர் அரசியல் முறைமை உதாசீனம் செய்யப்படுகின்றன சமூகத்தில் நிலவி வரும் பாரிய பிளவுகள் நிச்சயமற்ற நிலை மற்றும் எதிர்கால வன்முறை என்பன மீண்டும் இடம்பெறும் அச்சுறுத்தலை எடுத்து வருகின்றன. பல்வேறு வகைகளைச் சேர்ந்த மோதல்களையும், வேறுபட்ட விளைவுகளை எதிர்கொண்டிருக்கும் சமூகங்களையும் கவனத்தில் எடுப்பதற்கென பன்முகப் பின்புலங்களில் TRC மாதிரி பின்பற்றப்பட்டுள்ளது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றின் அடிப்படை நோக்கம் அதன் அமர்வுகளுக்கு ஊடாக உண்மையை கண்டறிவதாகும். இந்த அமர்வுகளில் பாதிக்கப்பட்டவர்கள், சமூகத் தலைவர்கள் மட்டுமன்றி குற்றம்சாட்டப்பட்டிருக்கும் குற்றச் செயல்களை நிகழ்த்தியவர்களும் கூட சான்றுகளை முன்வைக்கிறார்கள்; அது ‘உண்மைகளை’ மக்கள் பகிரங்கமாக செவிமடுத்து, அங்கீகரிப்பதற்கும் (அத்துமீறல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களை குறிப்பிட்டு, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல்களுடன்) பிரசுரிக்கப்பட வேண்டிய ஓர் இறுதி அறிக்கையை தயாரிப்பதற்கும் வாய்ப்பளிக்கின்றது. இந்த இறுதி அறிக்கை அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பான பரிந்துரைகளை கொண்டிருக்கும். ஒவ்வொரு பின்புலத்திலும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுக்களின் பணிப்பாணைகள் மற்றும் அணுகுமுறைகள் என்பன வேறுபட முடியும். ஆனால், இந்த ஆணைக்குழுக்களின் ஒட்டுமொத்த செயற்பாட்டு அனுமானம், திட்டவட்டமான குற்றச் செயல்கள் மற்றும் அத்துமீறல்கள் என்பன தொடர்பான விசாரணைகளும், உண்மையை கூறுவதும் வரலாற்று ரீதியான தெளிவுபடுத்தல், புரிந்துணர்வு, குணப்படுத்தல் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை மேம்படுத்த முடியும் என்பதாகும்.

இந்த மாதிரி பரந்த வீச்சிலான காரணங்களின் அடிப்படையில் விமர்சிக்கப்பட்டு வந்துள்ளது. நீதியுடன் சமரசம் செய்து கொள்ள வேண்டுமென அது கேட்டுக் கொள்வதனையும் இது உள்ளடக்குகின்றது. உண்மையைக் கூறுவதற்கு பதிலாக பாரதூரமான மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியிருப்பவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் போது குறிப்பாக இத்தகைய விமர்சனங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதாவது, விசாரணை நடத்தி, அத்தகைய குற்றச் செயல்களுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்க வேண்டும் என்ற விதத்தில் அரசுகள் கொண்டிருக்கும் சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கு இது முரணானதாக இருக்கின்றது எனக் கூறப்படுகின்றது. தனிப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுக்கள் திட்டவட்டமான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென்ற பணிப்பாணையைக் கொண்டிருந்தால் அவை திட்டவட்டமான மோதல்கள், பிரச்சினைகள் மற்றும் சமூகங்கள் என்பவற்றை புறமொதுக்கும் நிலை இது தொடர்பாக கருத்து  வேறுபாடு தோன்றும் மற்றொரு துறையாகும். அந்த விதத்தில், பல்வேறு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுக்களின் அணுகுமுறைகளை பரிசீலனை செய்தவற்கென ஓரளவுக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். பின்புலத்திற்கு பொருத்தமான விதத்தில் முன்னெடுப்பதற்கும், அனுசரித்துச் செல்வதற்கும் மட்டுமன்றி இலங்கையில் அத்தகைய ஒரு மாதிரி வினைத்திறன் மிக்கதாக இருக்குமா என்பதனை நிர்ணயித்துக் கொள்வதற்கும் அது தேவைப்படுகின்றது.

கலந்தாலோசணை செயலணியில் முன்வைக்கப்பட்ட ஒரு சில பரிந்துரைகள், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மாதிரியின் பொருத்தப்பாடு குறித்து பேசியிருந்தன: தென்னாபிரிக்க மாதிரி இலங்கையின் பின்புலத்திற்கு எவ்வாறு பொருத்தமானதாக இருக்க முடியும் என ஒரு சமர்ப்பணம் கேள்வி எழுப்பியிருந்தது. அதேவேளையில், உலகெங்கிலும் செயற்பட்டு வந்திருக்கும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுக்கள் மற்றும் அதனையொத்த தேசிய பொறிமுறைகள் என்பன குறித்த ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என ஏனைய சமர்ப்பணங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. சர்வதேச உதாரணங்கள் குறித்த ஒப்பீட்டு ரீதியான ஒரு சட்ட ஆய்வை மேற்கொள்வது மட்டும் இங்கு ஒரு சவாலாக இருந்து வரவில்லை; மாறாக, இலங்கை பின்புலத்தின் திட்டவட்டமான நிலவரங்களுடன் அவற்றை மதிப்பீடு செய்வதும் ஒரு சவாலாக இருக்கின்றது.

ஆணைக்குழுக்களின் சுமை மிக்க வரலாற்றுப் பாரம்பரியம்

மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கென ஒன்றன்பின் ஒன்றாக வந்த அரசாங்கங்களினால் உருவாக்கப்பட்ட பெருந்தொகையான ஆணைக்குழுக்களின் வரலாறு பல சமர்ப்பணங்களில் எடுத்துக்காட்டப்பட்டிருந்தது. முன்னைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை மீளாய்வு செய்து, அவற்றின் அமுலாக்கத்தை உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஒரு சில சமர்ப்பணங்கள் சுட்டிக்காட்டியிருந்த அதே வேளையில், ஏனைய சமர்ப்பணங்கள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாக கடுமையான ஆட்சேபணையை தெரிவித்திருந்தன. இந்தப் புதிய பொறிமுறை ஏனைய அரச ஆணைக்குழுக்களின் நீண்ட பட்டியலிலிருந்து வேறுபட்டதாக இருக்குமா என அவர்கள் கேள்விகளை எழுப்பியிருந்தார்கள். வட புலத்தைச் சேர்ந்த மூத்த பிரஜை ஒருவர் 1977இல் சன்சோனி ஆணைக்குழுவின் முன்னால் தான் சமர்ப்பணங்களை முன்வைத்திருந்ததாக குறிப்பிட்டு, ஒன்றன் பின் ஒன்றாக அமைக்கப்பட்ட பல ஆணைக்குழுக்கள் மற்றும் அமுல் செய்யப்படாத பரிந்துரைகள் என்பவற்றின் பின்னணியில், மற்றொரு ஆணைக்குழு ஏனைய ஆணைக்குழுக்களிலும் பார்க்க எதனை வித்தியாசமான விதத்தில் செய்யப் போகின்றது எனக் கேள்வி எழுப்பினார்.

கலந்தாலோசனை செயலணியின் பொதுக்கூட்டங்கள் நாட்டின் பல்வேறு பாகங்களில் இடம்பெற்ற பொழுது நானும் அக்கூட்டங்களில் பங்கேற்றேன். அவற்றில் சமூகமளித்திருந்தவர்கள் வெளிப்படுத்திய பெருமளவுக்கு பொதுவான ஓர் உணர்வு, அரசின் பன்முக முகவரகங்களுடன் செயற்படுதல் தொடர்பான ஒட்டுமொத்த அலுப்பு நிலை சம்பந்தப்பட்டதாகும். பொலிஸ் போன்ற நிரந்தர விசாரணை அமைப்புக்கள் தொடக்கம் அவ்வப்பொழுது தேவைக்கென அமைக்கப்படும் ஆணைக்குழுக்கள் வரை இவை அமைந்திருக்கின்றன. தமது இழப்பு குறித்தும் பதில்கள், நீதி மற்றும் ஏனைய வடிவங்களிலான நிவாரணங்கள் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் குறித்தும் பேசிய எண்ணற்ற குடும்ப உறுப்பினர்களின் கடும் துயரம், விரக்தி மற்றும் வேதனை என்பன எம்மை பாதிக்காமல் இருக்க முடியாது. 1989 -1990 காலப் பிரிவில் எம்பிலிபிட்டியவில் காணாமற் போன மாணவர்களின் குடும்பங்களைப் போன்ற பாதிக்கப்பட்ட ஒரு சிலர் எமக்குக் கிடைக்கும் உள்நாட்டு நிவாரண வழிமுறைகளை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்தச் சம்பவம் ஒரு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததுடன், சம்பவத்தை நிகழ்த்திய முதன்மையான நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதனை இந்தக் குடும்பங்களினால் இன்னமும் கண்டறிந்து கொள்ள முடியவில்லை. அவர்களுடைய உடல் எச்சங்கள் எங்கிருக்கின்றன என்பதனை அடையாளம் கண்டுகொள்வதும் இதில் அடங்குகின்றது. எனவே, அரசு ஏற்கனவே பெருந்தொகையான தகவல்களையும், ஆவணங்களையும் வைத்திருக்கும்  அத்தகைய ஒரு சம்பவம் தொடர்பாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்ன செய்ய முடியும்.

வடக்கிலிருந்து முன்வைக்கப்பட்ட ஒரு சமர்ப்பணம் குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்ட நபர்களின் குடும்பங்கள் “எத்தகைய பிரயோசனமும் இல்லாமல் தமது கதைகளை மீண்டும் மீண்டும் கூற வேண்டியிருப்பதால் தாம் அனுபவித்த கடும் மன அதிர்ச்சியை அவர்கள் மீண்டும் அனுபவிக்க வேண்டியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது. மீண்டும் கடும் மன அதிர்ச்சிக்கு உள்ளாக்கப்படுதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணர்வு  ரீதியான துன்பத்தையும், வேதனையையும் ஏற்படுத்துதல் என்பவற்றுடன் கூடிய ஆபத்துக்கு மேலதிகமாக, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு மத்தியில் அரசுக்கு எதிரான விரக்தி மற்றும் ஆத்திரம் என்பன தீவிரமடையக் கூடிய அச்சுறுத்தலும் காணப்படுகின்றது. தாம் அனுபவித்திருக்கும் அத்துமீறல்களுக்கு பொறுக்கூற வேண்டும் என்ற நிலை அவர்கள் மீது சுமத்தப்படுவதே இதற்கான காரணமாகும்.

விசாரணை ஆணைக்குழுக்கள் மற்றும் அவ்வவ்போதைய தேவைகளுக்கென அமைக்கப்படும் பொறிமுறைகள் என்பவற்றுடன் சம்பந்தப்படும் அனுபவங்கள், உண்மையை தேடும் பொறிமுறை தொடர்பான ஏமாற்றங்களையும், சந்தேகங்களையும் உருவாக்கியுள்ளன. பல்வேறு அரச முகவரகங்களிடம் தாம் பல தடவைகள் சாட்சியளித்திருப்பதாகவும் உண்மையை கண்டறிந்து கொள்வதற்கு எத்தகைய தொடர் நடவடிக்கையையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ஒரு சில சந்தர்ப்பங்களில் அரச அதிகாரிகள் குற்றச் செயல்களை இழைத்த நபர்களின் அடையாளத்தை பதிவு செய்வதற்கு மறுத்திருப்பதாக அல்லது ஒரு முறைப்பாட்டை ஏற்றுக்கொள்வதற்கு மறுத்திருப்பதாக அல்லது பாதிக்கப்பட்டவர்கள் துன்புறுத்தல் அல்லது பாலியல் இலஞ்சம் என்பவற்றுக்கு கூட ஆளாக்கப்பட்டிருப்பதாக ஒரு சிலர் தெரிவித்திருக்கிறார்கள்.

பல சமர்ப்பணங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் ஆகியோர் துன்புறுத்தல் அல்லது அச்சுறுத்தல் குறித்த அச்சமில்லாமல் சுதந்திரமான விதத்தில் பேசக்கூடிய சாதகமான ஒரு சூழலின் முக்கியத்துவம் குறித்து கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. சில சமர்ப்பணங்கள் துன்புறுத்தல் சம்பவங்களை சுட்டிக்காட்டியிருந்தன. அதாவது, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முறைப்பாடுகளை செய்திருந்தவர்கள், தமக்கு எதிராக குற்றச் செயல்களை இழைத்த நபர்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதற்குப் பதிலாக, தம்மைப் பற்றிய விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் நிலையை உணர்ந்திருந்தார்கள். இது உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தற்போதைய சூழ்நிலையில் நிச்சயமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் ஒரு சவாலாக இருக்கும். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் ஆகியோர் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் அறிக்கையிடப்பட்டிருக்கும் நிலையில், அவர்களுடைய பாதுகாப்பு உண்மையில் கரிசனைக்குரியவையாக இருந்து வரும். அறகலயவுடன் சம்பந்தப்பட்டவர்கள் தவிர, குறிப்பாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள்  மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் ஆகிய தரப்புக்கள் இத்தகைய சம்பவங்களை எதிர்கொண்டு வருகின்றன.

கலந்தாலோசனை செயலணி அறிக்கை குறிப்பிட்டிருப்பதைப் போல “இந்த முடிவுகள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படாமை மற்றும் தொடர் வழிமுறைகள் மேற்கொள்ளப்படாமை என்பவற்றின் பின்னணியில், விசாரணை ஆணைக்குழுக்களின் பெயர், தண்டனை விலக்குரிமை என்பதற்கு இணையானதாக இருந்து வருகின்றது.” போரின் முடிவை அடுத்து சரணடைந்தவர்களின் குடும்பங்களைப் போலவே, தமது அவலநிலை குறித்து கிஞ்சித்தும் பொருட்படுத்தாத ஓர் அரசை பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அது மட்டுமன்றி, அந்த மக்கள் நேரடியாக எதிர்கொண்டு அனுபவித்த “உண்மைகளை” மறுப்பதற்கும், உதாசீனம் செய்வதற்கும், அழித்து விடுவதற்கும் கூட அரசு முயன்று வருகின்றது. இந்த நிலையில், இந்தக் கலந்தாலோசனைகள் கூட சந்தேகத்துடனும், அரசின் மெத்தனத்தின் ஒரு பாகமாகவும் நோக்கப்பட்டு வந்தன. இந்த முறைமைசார்ந்த தோல்வியின் வரலாற்று மரபினையே உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அரசு இந்த மக்களின் வேதனை மற்றும் மன்றாட்டங்கள் என்பவற்றை செவிமடுத்துக் கேட்கும் முதல் தடவை இது என்பதைப் போல பாவனை செய்து, பாதிக்கப்பட்டவர்களை அழைத்து, தமது கருத்துக்களை கூறுமாறு கேட்டுக்கொள்ளும் சுதந்திரம் தனக்கிருக்கிறது என அந்த ஆணைக்குழு கருத முடியாது.

எதிர்ப்பு மற்றும் மீள் நோக்கம்

உண்மையை கண்டறியும் பொறிமுறை ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பாக கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்த பெருந்தொகையான சமர்ப்பணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இதற்கான நியாயப்படுத்தல் பல்வேறு வழிகளில் முன்வைக்கப்பட்டிருந்தன: மேலே எடுத்துக் காட்டப்பட்டதைப் போல, அத்தகைய ஒரு ஆணைக்குழு மெத்தனம் மற்றும் தண்டனை விலக்குரிமை என்பவற்றுக்கான ஒரு கருவியாக இருக்க முடியும் என்ற அச்சம் ஒரு சிலருக்கு மத்தியில் நிலவி வருகின்றது அவ்வாறான ஒரு ஆணைக்குழு தேசிய பாதுகாப்பை உதாசீனம் செய்து, வளர்ச்சியை சீர்குலைத்து, தற்பொழுது நிலவி வரும் இன உறவுகளை மேலும் மோசமாக்குவதுடன், பொது மக்களின் பணத்தை விரயம் செய்யும் ஒரு செயற்பாடாகவும் இருந்து வர முடியும் என ஏனைய சமர்ப்பணங்கள் எடுத்து விளக்கியுள்ளன. வட மேல் மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணம் என்பவற்றிலிருந்து முன்வைக்கப்பட்ட ஒரு சில சமர்ப்பணங்கள் இந்தப் பொறிமுறை நீதியை முன்னெடுக்கும் முயற்சிகளுடன் பிணைக்கப்பட்டிருக்கும் என்ற விதத்தில் அச்சத்தை தெரிவித்துள்ளன. நீதிக்கான போராட்டம் தொடர்பாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு எடுத்து வரக்கூடிய தாக்கங்கள் குறித்து அத்துமீறல்கள் தொடர்பாக நீதியை கோரி நிற்பவர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். சம்பவங்கள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான சான்றுகள் எவ்வாறு கையாளப்படப் போகின்றன மற்றும் அவை நீதிப் பொறிமுறைக்குள் அனுப்பி வைக்கப்படுமா என்ற விதத்தில் ஒரு சில சமர்ப்பணங்கள் கேள்விகளை எழுப்பியுள்ளன.

கலந்தாலோசனைகள் இடம்பெற்ற காலப் பிரிவின் மத்தியிலும் கூட பாதிக்கப்பட்டவர்கள் தாம் அனுபவித்த துன்பங்கள் தொடர்பாக பெருமளவுக்கு சான்றுகளை முன்வைப்பார்கள் என்ற விதத்தில் திட்டவட்டமான பரிந்துரைகளை முன்வைக்கமாட்டார்கள் என்ற விதத்திலும் ஓர்  எதிர்பார்ப்பு மனித உரிமைகள் குழுக்களுக்கு நிலவியது. அதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவர்கள் தாம் அனுபவிக்க நேரிட்ட முதன்மையான அத்துமீறல்களை எடுத்து விளக்குவதுடன் நின்று விடாது, நிவாரணம் கோரும் செயன்முறையின் போது அரசுடனான தமது அனுபவங்கள் குறித்த அடிப்படையில் யோசனைகளையும் முன்வைத்திருந்தார்கள். உதாரணமாக, ஒரு சில பாதிக்கப்பட்ட பெண்கள், பெண் அரச உத்தியோகத்தர்களுக்கான ஒரு கோட்டா இருந்து வர வேண்டும் என்ற விடயத்தையும், தாம் எதிர்கொண்ட பல்வேறு வடிவங்களிலான பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதற்கென திட்டவட்டமான பாலியல் துன்புறுத்தல் கொள்கை ஒன்று இருக்கவேண்டும் என்ற விடயத்தையும் வலியுறுத்தியிருந்தார்கள்.

ஒரு சிலர் மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை 30/1 இக்கு அப்பால் நிலைமாறு கால நீதி வழிமுறைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென எதிர்கால கற்பனை தோற்றப்பாடுகளை குறிப்பிட்டிருந்தார்கள். கலந்தாலோசனை செயலணி ‘நான்கு பொறிமுறைகளுக்கு அப்பால் நிலைமாறு நீதி’ என்ற தலைப்பில் ஓர் அத்தியாயத்தை முன்வைக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். வன்னி போன்ற இடங்களில் நடத்தப்பட்ட பொது மக்களின் சந்திப்புக்களின் போது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான பாரம்பரிய மாதிரி நிராகரிக்கப்பட்டதுடன், பொது மக்கள் விசாரணை மன்றம் ஒன்றுக்கான வேண்டுகோள் முன்வைப்பட்டிருந்தது. அத்தகைய சமர்ப்பணங்களில் பகிரங்கமாக சாட்சியமளித்தல் போன்ற உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஒரு சில அம்சங்களை கொண்டிருக்கும் பொறிமுறை குறித்து பாதிக்கப்பட்டவர்கள் உரையாடியிருக்கின்றார்கள். வழக்கு விசாரணை மற்றும் தண்டனை வழிமுறைகள் என்பவற்றையும் உள்ளடக்கிய நீதிக்கூறுகள்  தொடர்பாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விதத்தில் முன்வைக்கப்படும் வேண்டுகோள்

கலந்தாலோசனை செயலணியில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்ததற்கு மாறான விதத்தில், குறிப்பாக பெருமளவுக்கு நேரடியாக பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்தவர்கள் உண்மை கண்டறியப்பட வேண்டும் என்ற விதத்தில் உயர் அளவிலான கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்கள். முக்கியமாக காணாமல் போனவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆகியோரின் குடும்பங்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற கலந்தாலோசணைகளின் போது கணிசமான எண்ணிக்கையில் அவற்றில் பங்குபற்றியதுடன், தமது அன்புக்குரியர்களுக்கு என்ன நடந்துள்ளது என்பதனை தாம் தெரிந்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார்கள். ஒரு சிலரை பொறுத்தவரையில் உண்மையை அறிந்து கொள்ளும் உரிமை தமது முதன்மையானதும், அவசரமானதுமான கோரிக்கையாக இருந்தது. இந்தக் கேள்விக்கான பதில் தமக்குக் கிடைக்கும் வரையில் நட்டஈடு மற்றும் ஏனைய வடிவங்களிலான இழப்பீடுகள் என்ற எந்தக் கருத்தையும் தெரிவிப்பதற்கு அவர்கள் முன்வரவில்லை. அவ்விதம் வழங்கப்படும் இழப்பீடுகளை அவர்கள் ஏற்றுக் கொண்டால் உண்மை மற்றும் நீதி என்பவற்றை கண்டறிவதில் மக்கள் ஆர்வமற்றவர்களாக இருந்து வருகின்றார்கள் என அரசு அதற்கு வியாக்கியானம் வழங்க முடியும் என அவர்கள் அஞ்சுகிறார்கள்.

ஓர் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பல்வேறு நோக்களை நிறைவேற்றி வைக்க முடியும் என்ற விடயம் தொடர்பாக கவனத்தை ஈர்க்கும் விதத்தில் ஒரு சில சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன: உண்மையை நிலைநிறுத்துதல், மோதலுக்கான மூல காரணங்களை நிர்ணயித்தல், அத்துமீறல்களை நிகழ்த்தியிருப்பவர்களை அவற்றுக்குப் பொறுப்புக்கூற வைத்தல், வரலாறு குறித்த பன்முக கதையாடல்களை கட்டியெழுப்புதல், மீண்டும் அவ்விதம் நிகழாதிருப்பதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான பரிந்துரைகளை முன்வைத்தல், ஏனையவற்றுடன் அத்துமீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் என்பன தொடர்பாக நிவாரணங்களை கோருவதற்கான இயலுமையை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குதல்.

பல்வேறு சமூகங்களையும் சேர்ந்த பிரதிநிதிகள் வரலாற்று ரீதியான மனக்குறைகள் மற்றும் திட்டவட்டமான அத்துமீறல்கள் என்பன குறித்துப் பேசினார்கள்: உள்நாட்டுப் போரின் இறுதி மாதங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள், 1980 இன் பிற்பகுதிகளில் இடம்பெற்ற ஜே.வி.பி. கிளர்ச்சி, போர் இடம்பெற்ற காலப் பிரிவின் போது எல்லைக் கிராமங்கள், அகதிகள், ஊடகவியலாளர்கள், மாற்றுப் பாலீர்ப்பாளர் சமூகத்தினர் மற்றும் பெண்கள் குழுக்கள் போன்ற விடயங்களும் உண்மையை கண்டறியும் பொறிமுறையில் உள்ளடக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. பல்வேறு ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த போராளிகள், கலந்தாலோசனையில் ‘பாதிக்கப்பட்டவர்கள்’ தொடர்பாக உயர் அளவில் கவனஞ் செலுத்தப்பட்டிருந்தமை குறித்து எதிர்வினையாற்றியிருந்தார்கள். ஒரு இராணுவ உத்தியோகத்தர் இது “பெருமளவுக்கு பாதிக்கப்பட்டவர்களை மையமாக கொண்டுள்ளது; அது அவ்வாறிருத்தல் வேண்டும், ஆனால், எம்மைப் பற்றி ஒன்றுமில்லையே?” எனக் கேட்டார். தனிநபர் படுகொலைகளையும் உள்ளடக்கிய விதத்தில் திட்டவட்டமான சம்பவங்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் என ஒரு சில சமர்ப்பணங்களில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்ததுடன், மற்றும் சில சமர்ப்பணங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சிறுவர் ஆட்சேர்ப்பு போன்ற திட்டவட்டமான அத்துமீறல் வகைகள் குறித்து கண்டறியப்பட வேண்டும் என யோசனை தெரிவித்திருந்தன. அதே வேளையில், வேறு சில சமர்ப்பணங்கள் மலையகத் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் கட்டமைப்பு ரீதியான வன்முறை மற்றும் பாரபட்சம் போன்ற செயல்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தன.

ஓர் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை வடிவமைக்க விரும்புபவர்கள், அத்தகைய ஒரு பொறிமுறையுடன் சம்பந்தப்படாத விதத்தில் உண்மையை கண்டறிவதற்கான கோரிக்கை இருந்து வருகின்றது என்ற தடுமாற்ற நிலையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான விமர்சனங்களை அலட்சியம் செய்யவதற்குப் பதிலாக, அந்த விடயங்களை கவனத்தில் எடுப்பதற்கு அவர்கள் முயற்சிக்க வேண்டும். குறிப்பாக (நான் பணியாற்றிய காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகத்தையும் உள்ளடக்கிய விதத்தில்) இதுவரையில் உண்மைய பெற்றுக்கொடுக்க முடியாதிருக்கும் நிலையும், கடந்த தசப்தங்களின் போது அரசினால் சேகரிக்கப்பட்டிருக்கும் பெருந்தொகையான சான்றுகள் மற்றும் ஆவணங்கள் என்பனவும், ஏற்கனவே அரசு வசம் இருந்து வரும் தகவல்களை ஒன்றாக தொகுப்பதற்குப் பதிலாக, மற்றொரு ஆணைக்குழுவுக் கூடாக பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தகவல்கள் கேசரிக்கப்பட வேண்டுமா என்ற பாரதூரமான கேள்வி எழுகின்றது.

ஓர் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்குவதற்கான திட்டவட்டமான சட்டவாக்கம், விசாரணை ஆணைக்குழுக்களிடமிருந்து கணிசமான அளவில் வேறுபட்டதாக இருந்து வர முடியும். எனினும், விசாரணை ஆணைக்குழுக்கள் எவ்வாறு செயற்பட்டு வந்துள்ளன, அவை எதிர்கொண்ட இடையூறுகள் எவை என்பன குறித்த கவனமான ஓர் ஆய்வு, தகவல்களை சேகரிப்பதிலும், விசாரணைகளை நடத்துவதிலும் நிலவி வரும் திட்டவட்டமான இடைவெளிகளை எடுத்துக் காட்ட முடியும். உண்மை மற்றும் நல்லிணக்க  ஆணைக்குழு சட்டத்தை தயாரிப்பவர்கள் அந்த இடைவெளிகளை கவனத்தில் எடுப்பது அவசியமாகும். அந்த விதத்தில் குறிப்பாக விசாரணை நடத்தும் அதிகாரம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு இணையான விதத்தில் அரசினால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அதன் பரிந்துரைகளை அமுல் செய்வதற்கான திட்டம் என்பவற்றை உள்ளடக்கிய விதத்தில் செயன்முறையின் ஒட்டுமொத்த வடிவமைப்பை நோக்கும் போது அது குறித்து ஆழமாக சிந்தித்து, திட்டங்களை உருவாக்க வேண்டியுள்ளது  என்ற விடயத்தை அறிய முடிகின்றது. முன்னைய விசாரணை ஆணைக்குழுக்களின் அனுபவத்திலிருந்து கிடைக்கும் முக்கியமான ஒரு பாடம், பாதிக்கப்பட்டவர்களினால் வழங்கப்பட்டிருக்கும் சான்று முடிவுகள் மற்றும் பரிந்துரைகள் என்பவற்றின் பலம் என்னவாக இருந்த போதிலும், அவற்றை அமுல் செய்வதற்கான அரசியல் விருப்பு குறைவாக இருந்து வருகின்றது என்பதாகும். எனவே, தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார கொந்தளிப்புச் சூழ்நிலையில், ஓர் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது தவிர அரசாங்கம் உண்மையில் வேறு சில விடயங்கள் தொடர்பாகவும் தன்னை அரப்பணித்துக் கொண்டுள்ளது. இந்தப் பின்னணியில், அவ்விதம் அமைக்கப்படும் ஆணைக்குழு இறுதியில் அதனை உருவாக்கிய அரசாங்கத்திடம் தனது கருத்துக்களை முன்வைப்பதற்கு போராட வேண்டி நேரிட முடியும்.

கலந்தாலோசனைகளின் குறியீட்டு ரீதியான மதிப்பு மற்றும் உண்மையான மதிப்பு

எனவே, யாருக்காக இந்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கப்படுகின்றது? வெறுமனே சர்வதேச அழுத்தங்களை சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் அவை உருவாக்கப்படுவதாக இருந்தால் அத்தகைய ஆணைக்குழுக்களை ஸ்தாபிப்பது அவ்வளவு சிரமமான காரியமாக இருக்கமாட்டாது: ஏனைய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுக்களின் அம்சங்களை இரவல் வாங்கி, ஒரு பிரேரணையை தயாரிக்கும் பணியை சட்டத்தரணிகளை குழுவொன்றிடம் ஒப்படைக்க முடியும். உள்நாட்டு சட்ட நடைமுறைகளுடன் இணைந்த விதத்தில் அவர்கள் அந்த பிரேரணையை தயாரித்து, அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள முடியும். அதனையடுத்து அரசுக்கு விசுவாசமான தனிநபர்களின் குழு ஒன்றை நியமனம் செய்ய முடியும். எவ்வாறிருப்பினும், இது கடந்த காலத் தவறுகள் மற்றும் தோல்விகள் என்பவற்றை மீண்டும் எடுத்து வருவதற்கான ஒரு வகை மாதிரியாகவே இருந்து வரும். எனினும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை அமைப்பதன் அபிலாசை விசாரணை ஆணைக்குழுக்கள் தொடர்பான இலங்கைக்கு மீண்டும் மீண்டும் நிகழ்த்திய பரீட்சார்த்தங்களிலிருந்து கற்றுக் கொள்வதும், பெருமளவுக்கு நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுடைய பிரச்சினைகளுக்கு எதிர்வினையாற்றுவதும், வேதனை மிகுந்த கடந்த காலத்தை சமாளிக்கக்கூடிய ஒரு செயன்முறையை உருவாக்குவதும். நியாயமான ஒரு நாட்டை கட்டியெழுப்பும் பொருட்டு இவற்றை தீர்த்து வைப்பதற்கான வழிமுறைகளுக்கு தன்னை அப்பணித்துக் கொள்வதும் இதன் அபிலாசையாக இருந்து வந்தால் அதற்கு வேறுபட்ட ஒரு பாதையே தேவைப்படுகின்றது.

இத்தகைய ஆணைக்குழு ஒன்றை வடிவமைக்கும் செயன்முறை பொது மக்கள் – குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் – அந்தப் பொறிமுறையை அணுகி, அதனுடன் எவ்வாறு செயற்படுவார்கள் என்ற விடயத்தின் மீது செல்வாக்குச் செலுத்தும். இது தொடர்பாக கலந்தாலோசனை அணுகுமுறை ஒன்றை உறுதிப்படுத்திக் கொள்வது தவிர்க்க முடியாததாகும்.  அவ்வாறு செய்வது எதிர்கால உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றுக்கு குறியீட்டு ரீதியான மதிப்பினையும், அசல் மதிப்பினையும் வழங்க முடியும். கலந்தாலோசனைச் செயலணி அறிக்கைகள் பாதிக்கப்பட்ட சமூகங்களின் அனுபவங்களின் அடிப்படையில் முக்கியமான கண்ணோட்டங்கள் மற்றும் திட்டவட்டமான  யோசனைகள் என்பவற்றை வழங்கும் அதே வேளையில், இந்தக் கலந்தாலோசனைகள் இடம்பெற்று நீண்ட ஆறு ஆண்டுகள் கடந்து சென்றுள்ளன என்ற விடயத்தையும் நினைவுபடுத்திக் கொள்வது முக்கியமானதாகும். ஒரு சில நிலைமாறு கால நீதி வழிமுறைகள் அமுல் செய்யப்பட்ட போதிலும், அவை பொது மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி வைக்கவில்லை. குறிப்பாக காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி தொடர்பாக மக்களுடைய எதிர்பார்ப்புக்களை அவை நிறைவேற்றி வைக்கவில்லை. குறிப்பாக நீதி தொடர்பான கடப்பாடுகளை பொறுத்த வரையில் கணிசமான அளவிலான குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எவையும் ஏற்பட்டிருக்கவில்லை. குறியீட்டு ரீதியான சம்பவங்கள் தொடர்பாக எத்தகைய முக்கியமான வெற்றிகளை ஈட்டத் தவறியிருப்பது, உள்நாட்டு முறைகளுக்கு ஊடாக நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என்ற விடயத்தில் பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துள்ளது. உண்மை மற்றும் நல்லிக்கண ஆணைக்குழு குறித்த கருதுகோள் 2016ஆம் ஆண்டில் ஒரு நீதிப் பொறிமுறையையும் உள்ளடக்கிய விதத்தில் நான்கு பொறிமுறைகளில் ஒன்றாக முன்வைக்கப்பட்டிருந்தது. ஒரு நீதிப் பொறிமுறை இல்லாத உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, சர்வதேச சமூகம் மற்றும் இலங்கையின் பொது மக்கள் ஆகிய தரப்புக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கான இலங்கை அரசின் முயற்சிகளின் ஒரு பாகமாகவே நோக்கப்படுகின்றது.

இந்த உத்தேசப் பொறிமுறை சட்டபூர்வத் தன்மை, நம்பகத் தன்மை மற்றும் பொது மக்களின் நம்பிக்கை என்பவற்றை வெல்ல வேண்டுமானால் கலந்தாலோசனை மிக முக்கியமானதாகும். எவ்வாறிருப்பினும், கலந்தாலோசனைகள் வெறுமனே கண்துடைப்பு இயல்பிலான கலந்தாலோசனைகளாக இருந்துவரக் கூடாது. அவை கொழும்பு சிவில் சமூக ஆளுமைகளுடன் மட்டும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் நாடெங்கிலும் வாழ்ந்து வரும் சமூகத் தலைவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தக் கலந்தாலோசனைகள் ஓர் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு தேவை தானா என்ற கேள்விகளையும் உள்ளடக்கிய விதத்தில் கடினமான கேள்விகளை கவனத்தில் எடுப்பது அவசியமாகும். ஓர் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான தேவை தெளிவாக இருந்து வருகின்றது என அனுமானிப்பதற்குப் பதிலாக, உண்மையை கண்டறியும் விடயத்தில் ஓர் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வகிக்கக்கூடிய வகிபங்கினை மதிப்பிடுவதும், உண்மையை கண்டறியும் பாரிய செயன்முறைக்கு உதவுவதற்கென புறம்பாக எடுக்கப்பட வேண்டிய வழிமுறைகள் மற்றும் அதற்கு இணையான விதத்தில் எடுப்பட வேண்டிய வழிமுறைகள் மதிப்பிடுவதும் புத்திசாலித்தனமானதாக  இருந்து வரும்.

மிராக் ரஹீம்

நல்லிணக்கப் பொறிமுறைகள் குறித்த கலந்தாலோசனை செயலணியின் (2016) ஓர் உறுப்பினராகவும், காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஓர் ஆணையாளராகவும் (2018 -2021) இருந்து வந்துள்ளார். 

Does Sri Lanka Need a Truth and Reconciliation Mechanism? என்ற தலைப்பில் 26.11.2022 அன்று Groundviews தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.