நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ பொறுப்புக்கூறவேண்டுமென்பதால் அவர் உடனடியாக பதவிவிலகவேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் எதிர்ப்புகளை வெளியிட்டுவந்ததன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் சனிக்கிழமை கொழும்பு காலி முகத்திடலில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டனர்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவை பதவிவிலகுமாறு கோஷங்களை எழுப்பிய வண்ணம் வயது வித்தியாசம் பாராமல் பேரணியாக காலிமுகத்திடலை வந்தடைந்த மக்கள்  ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு இந்நேரம் வரை மழையையும் பாராமல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ராஜபக்‌ஷக்களை கடுமையாக விமர்சித்து கோஷங்களை எழுப்பினர். ‘திருடர்கள்’, “எங்களுடைய பண​த்தைத் தந்துவிட்டு வீட்டுக்குச் செல்லுங்கள்”, “உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் குழந்தைகளைக் கொண்டு அதிகாரத்துக்கு வந்தவர்கள்”, “சால்வையாளார்கள் கொலையாளிகள்”, “கொள்ளையடித்த பணத்தை தந்துவிட்டுப் போ” போன்ற பதாதைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

அதேபோல, “போர்க்குற்றவாளி”, “2009 வடக்கில் உங்களிடம் சரணடைந்தவர்கள் எங்கே?”, “காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான நீதி எங்கே” போன்ற பதாதைகளையும் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.

நேற்றைய போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் ருவிட்டர் பதிவுகளையும் கீழே காணலாம்.