Photo, Al Jazeera
ஒரு சில சமூகங்களின் வரலாறுகள் மௌனிக்கப்பட்டு, அவர்களுடைய அடையாளங்கள் ஒடுக்கப்படுவது மிக மோசமான அடக்குமுறையின் அடையாளமாக இருந்து வருகின்றது. முதலில் கோப்பித் தோட்டங்களிலும், அதனையடுத்து தேயிலைப் பெருந்தோட்டங்களிலும் வேலை செய்வதற்கென பிரிட்டிஷ் ஆட்சியாளர்களினால் ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பல்லாயிரக்கணக்கான மலையகத் தமிழர்கள் இடம்பெயர்ந்த நிலையில் 1960கள் தொடக்கம் 1980கள் வரையில் வட பிரதேசத்திற்குச் சென்றார்கள். அவர்களுடைய பிரஜா உரிமை பறிக்கப்பட்டமை சுதந்திரத்தின் பின்னர் நமது நாடு நிகழ்த்திய பெரும் கொடுமையான சம்பவமாகும். அதனையடுத்து இக்குடித்தொகையினரின் பெரும் எண்ணிக்கையினர் பலவந்தமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். தென்னிலங்கையில் இந்த மக்களை இலக்காகக் கொண்டு காலத்திற்கு காலம் தோன்றிய கலவரங்கள், அவர்களில் பெரும்பாலானவர்கள் வட புலத்தில் அகதிகளாக தஞ்சம் புகுவதற்கு நிர்ப்பந்தித்திருந்தன.
வட புலத்தில் அவர்கள் வாழும் வாழ்க்கை அவர்களுடைய கடந்த காலத்திலும் பார்க்க மோசமானதாக அல்லது மிகவும் துயரார்ந்த ஒரு வாழ்க்கையாக இருந்து வருகின்றது. வன்னிப் பிரதேசத்தின் பண்ணைகளில் அவர்கள் கொத்தடிமைகளாக சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், ஆயுதப் போராட்டத்தில் வன்முறைக்கு எதிரான ஒரு தடுப்பு அரணாக எல்லைக் கிராமங்களில் குடியமர்த்தப்பட்டிருந்தார்கள். உள்நாட்டுப் போரின் போது அத்தகைய மலையத் தமிழர்களின் பிள்ளைகள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் முதலில் தோட்டாக்களை எதிர்கொள்ளும் படையணியினராக பயன்படுத்தப்பட்டிருந்தார்கள். இதுவரையில் அந்த மக்கள் காணி உரிமை அற்றவர்களாக, கொடூரமான சுரண்டல் மற்றும் வறுமை என்பவற்றுக்கு உள்ளாக்கப்பட்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள்.
இலங்கையின் பெருந்தோட்டங்களில் மலையகத் தழிழர்களின் வரலாறுகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் என்பன அவர்களுடைய நீண்ட போராட்டங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் இயக்கங்கள், அறிவுப்புலம் சார்ந்த எழுத்துக்கள், துல்லியமான சித்தரிப்புக்களுடன் கூடிய திரைப்படங்கள் மற்றும் ஆராய்ச்சி என்பவற்றுக்கு ஊடாக எழுச்சியடைந்து வந்துள்ளன. ஆனால், வட பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்து சென்ற மலையகத் தமிழர்களின் துயர வாழ்க்கை பெருமளவுக்கு மௌனிக்கப்பட்டதாவே இருந்து வருகின்றது. வடக்கில் செயற்பட்டு வரும் ஒரு சில மலையகத் தமிழ் செயற்பாட்டாளர்களின் துணிகரமான குரல்கள் மற்றும் முன்முயற்சிகள் என்பன, இந்த நிலைமை தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு எம்மில் ஒரு சிலரைத் தூண்டியுள்ளன. திடசங்கற்பத்துடன் செயற்பட்டு வரும் அத்தகைய பரப்புரையாளர்களுடன் நடத்திய சம்பாஷைணைகளிலிருந்து தோன்றிய ஒரு சில பூர்வாங்க கருத்துக்களை நான் இங்கு பதிவு செய்கின்றேன். அச்செயற்பாட்டாளர்களை மௌனிக்கச் செய்வதற்கென பலம் வாய்ந்த தரப்புக்கள் அழுத்தங்களைப் பிரயோகித்து வரும் நிலைக்கு மத்தியிலும் கூட, அவர்கள் தமது சமூகத்தின் அக்கறைகள் குறித்து குரல் எழுப்பி வருகின்றார்கள்.
வன்முறையின் வரலாறு
வட பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்து சென்ற மலையகத் தமிழர்களின் சமூக வாழ்க்கையை வன்முறையின் ஒரு வரலாறாக மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அவர்களுடைய ஊழியத்தைச் சுரண்டும் கட்டமைப்பு ரீதியான வன்முறை மற்றும் அரச சேவைகளிலிருந்து அவர்கள் சமூக ரீதியில் புறமொதுக்கப்பட்டிருக்கும் நிலை, அதேபோல போரினால் ஏற்பட்ட மரணங்கள் மற்றும் பட்டினி என்பவற்றை உள்ளடக்கிய அவர்கள் அனுபவித்த உடல் ரீதியான துன்பங்கள் என்பன வட புலத்திலும், ஒட்டுமொத்தமான நாட்டிலும் ஓர் அழியாக் கறையை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் துன்பகரமான பின்புலம் வரலாற்று ரீதியாக அவர்கள் எதிர்கொண்ட அத்துமீறல்களுடன் இணைந்திருக்கின்றது. தமிழ் தேசியவாத அரசியல் பெருந்திட்டத்தின் உருவாக்கத்தின் போது, இச்சமூகப் பிரிவினரின் குரல்கள் மற்றும் கதையாடல்கள் என்பன மௌனிக்கச் செய்யப்பட்டிருந்தன. மேலும், நாட்டில் போருக்குப் பின்னர் சகஜ நிலைமையை கொண்டுவருவதற்கும், அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்குமென அரசினாலும், உதவி வழங்கும் அமைப்புக்களினாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் மலையகத் தமிழ் சமூகத்தினர் வறுமையில் வாடி வரும் யதார்த்தத்தை பார்க்க மறுக்கின்றன.
“அவர்களுடைய அடையாளம் ஒடுக்கப்பட்டிருப்பதன் ஒரு பாகமாக, உத்தியோகபூர்வமான பதிவுகள் இல்லாதிருக்கின்ற போதிலும், கிளிநொச்சி மாவட்டத்தின் குடித்தொகையில் அரைவாசிப் பகுதியினர் மலையகத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்டவர்களாக இருகின்றார்கள் என சமூகத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.”
மலையகத் தமிழர்களின் வயது முதிர்ந்தவர்கள் இடம்பெயர்வு குறித்த தமது கடந்த கால கதையைக் கூறுகின்றனர். ஆனால், அதேவேளையில் உரத்துப் பேசுவதற்கு அவர்கள் தயங்கி வரும் காரணத்தினால் உடைந்த குரலில், தட்டுத்தடுமாறியவர்களாக அதனைச் சொல்கிறார்கள். தமது துயரம் தோய்ந்த வாழ்க்கை குறித்து கதைப்பது சிரமமானதாக இருப்பதை அவர்கள் உணர்கின்றார்கள்: ஒரு சிறு தொகைக் கூலிக்கென பண்ணைகளில் மேற்கொள்ளும் கடும் உழைப்பு, தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் உணவூட்ட முடியாத நிலை, வாழ்வதற்கென பாரிய அபாயங்களுக்கு மத்தியில் கொட்டில்களை அமைப்பதற்கு காடுகளை துப்பரவு செய்தமை, பின்னர் போர் காரணமாக மீண்டும் மீண்டும் இடம்பெயர நேரிட்டமை என அனைத்தும் இதில் அடங்குகின்றன. அவர்களுடைய உழைப்பினால் ஈட்டிக் கொண்டிருந்த சிறு சொத்துக்களும் நீர்மூலமாக்கப்பட்டிருந்தன.
குடித்தொகை மிகக் குறைவாக இருந்து வரும் வன்னிப் பிராந்தியத்தின் பாரிய நிலப்பரப்பு உள்ளூர் அதிகாரிகளினால் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றது. பண்ணைகளில் பயன்படுத்துவதற்கென தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் ஊழியர்களாக அவர்கள் இருக்கின்றமையே இதற்கான காரணமாகும். போர் முடிவடைந்து ஒரு தசாப்தத்தின் பின்னர் மலையகத் தமிழர்களின் நிலமற்ற நிலை இன்று வரை ஒரு பாரதூரமான பிரச்சினையாக இருந்து வருகின்றது.
அடையாளம் மற்றும் வாழ்வாதாரங்கள்
வட புலத்தில் வாழ்ந்து வரும் மலையகத் தமிழர்களின் இந்த அபாயகரமான, இக்கட்டான வாழ்க்கை ஒரு கொள்கை விடயமாக எழுப்பப்படாதிருப்பது ஏன்? பெருந்தோட்டங்களில் வாழ்ந்து, வேலை செய்து வருபவர்களின் நிலவரங்களும் அதே விதத்தில் மிக மோசமாக இருந்தாலும், அவர்களுடைய சம்பளப் போராட்டங்கள் மற்றும் பெருந்தோட்டப் பிள்ளைகளின் கல்வி எதிர்கொண்டு வரும் சவால்கள் போன்ற விடயங்கள் பொது வெளியில் கலந்துரையாடப்பட்டு வருகின்றன. பெருந்தோட்டங்களில் வாழ்ந்து வருபவர்கள் சுமார் ஒன்றரை நூற்றாண்டு காலத்திற்கு மேல் சுரண்டப்பட்டு வரும் அடிமை ஊழியப் படையாக இருந்து வரும் அதே வேளையில், குறிப்பிட்ட பூகோளப் பிராந்தியங்களில் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் என்பவற்றின் எழுச்சி, இயக்கங்களில் சேர்ந்து கொள்வதற்கும், அணி திரள்வதற்குமான வாய்ப்புக்களை அவர்களுக்கு வழங்கியிருப்பதுடன், அரச கொள்கைகளுக்கு சவால்களை விடுவதற்கான வழிகளையும் உருவாக்கிக் கொடுத்துள்ளன.
வட புலத்தில் இடப்பெயர்வு மற்றும் குடியேற்றங்கள் என்பன, இச்சமூகத்தை சீர்குலைத்த ஒழுங்கீனச் செயன்முறைகளுக்கு ஊடாக இடம்பெற்றிருப்பதுடன், மலையத் தமிழர்கள் என்ற முறையில் தமது கரிசனைகளை எழுப்புவதற்கான அவர்களுடைய ஆற்றலைக் கூட அவை உதாசீனம் செய்துள்ளன. இங்கு அவர்களுடைய அடையாளம் ஒடுக்கப்பட்டிருப்பது மிகவும் பாரதூரமான ஒரு பிரச்சினையாக இருக்கின்றது. “தமிழர் அபிலாசைகளை” பிரித்து, வேறுபடுத்தி நோக்க முடியாது என்பதே தமிழ்த் தேசியவாதிகளின் அரசியல் நிலைப்பாடாக இருக்கின்றது. பிராந்திய, சாதி, பால்நிலை மற்றும் ஏனைய இனத்துவ சிறுபான்மை அடையாளங்களில் பாரியளவிலான வேறுபாடுகள் நிலவி வந்தபோதிலும் அவர்கள் அவ்விதம் கருதி வருகின்றனர். வட புல முஸ்லிம்கள் தொடர்பாகவும் அவர்கள் அதே நிலைப்பாட்டையே கொண்டிருந்தார்கள். இந்த அணுகுமுறை யாழ்ப்பாணத் தமிழ் மேட்டுக்குடியினரின் மேலாதிக்கத்தை வேரூன்றச் செய்யும் அதே வேளையில், விளிம்பு நிலைச் சமூகங்களின் வாழ்க்கையில் முற்போக்கான மாற்றங்களை எடுத்து வரும் சாத்தியப்பாடுகளையும் இந்தத் தமிழ்த் தேசியவாதிகள் உதாசீனம் செய்து வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மலையகத் தமிழர்கள் வாழும் கிராமங்கள் ஆங்காங்ககே சிதறுண்டு காணப்படுகின்றன: அம்பாள்புரம், கிருஷ்ணபுரம், மலையாளபுரம், சாந்தபுரம், ஸ்கந்தபுரம் மற்றும் யூனியன்குளம் என்பன ஆராய்ச்சிக்கென நான் விஜயம் செய்த கிராமங்கள் ஆகும். இந்தக் கிராமங்களில் பொதுவாக நிலவிவரும் ஒரு பண்புக்கூறு அங்கு வசித்து வரும் மக்களுக்கு விவசாயக் காணிகள் இல்லாதிருப்பதாகும். அவ்விதம் காணிகள் வைத்திருப்பவர்களுக்கு நீர்ப்பாசன வசதிகள் கிடைப்பதில்லை. உண்மையிலேயே, இத்தகைய கிராமங்களுக்கு அருகில் அமைந்திருக்கும் நீர் நிலைகளிலிருந்து பிரியும் நீர்ப்பாசனக் கால்வாய்களும் அவர்கள் வசித்து வரும் இடங்களை தவிர்த்துச் செல்கின்றன. இந்தக் கிராமங்களைச் சேர்ந்த தீவிரமான பரப்புரையாளர்கள் தமது காணிப் பிரச்சினைகளைத் தொடர்ந்து எழுப்பி வருவதுடன், இந்தப் பின்னணியில் அரசும், உள்ளூர் அதிகாரிகளும் காணி பகிர்ந்தளிப்பு செயன்முறைகளில் தம்மை வேண்டுமென்றே புறமொதுக்கியுள்ளதாகக் கூறுகின்றனர். தமது வீட்டுக் காணிகளுக்கு காணி உரித்தாவணங்களை வழங்க வேண்டுமென்ற அவர்களுடைய வேண்டுகோள்களும் கூட நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.
“இந்தத் துயரம் மிகுந்த சூழல் அவர்களுடைய வரலாறு அத்துமீறப்பட்டிருப்பதுடன் இணைந்த விதத்தில் இடம்பெற்றுள்ளது. மேலோட்டமான ஓர் ஒற்றுமையுடன் கூடிய தமிழ்த் தேசியவாத அரசியல் பெருந்திட்ட உருவாக்கத்தின் போது அவர்களுடைய குரல்களும், கதையாடல்களும் மௌனிக்கச் செய்யப்பட்டுள்ளன.”
போருக்கு பிற்பட்ட சூழலில் கிராமிய பொருளாதாரம் அதிகரித்தளவில் பணமயமாகி வருவதுடன் இணைந்த விதத்தில் பிழைப்பூதிய வாழ்க்கை கடினமானதாக இருந்து வருவதுடன், விவசாயம் இயந்திரமயமாக்கப்பட்டு வரும் நிலையில் கிராமிய வாழ்வாதாரங்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றன. மக்கள் கடன் சுமையும் அதிகரித்து வந்துள்ளது. உண்மையிலேயே மலையகத் தமிழர்களை பொருளாதார ரீதியில் இன்னமும் இயங்கச் செய்து கொண்டிருப்பவை இராணுவ மயப்படுத்தப்பட்ட சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் (CSD) பண்ணைகள், அபாயகரமான கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள் மற்றும் ஆடைத் தொழில்துறை என அவர்கள் குறிப்பிடுகின்றனர். தமது இளம் தலைமுறையினரின் ஊழியத்தின் ஊடாக அத்தகைய வருமான மார்க்கங்களை கொண்டிருந்தாலும் கூட, அவ்வாறான தொழில்களின் வரையறைகளை பல சமூகத் தலைவர்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள் – அவை நிலைமாற்றப் பொருளாதார நிலையில் இருந்து வருபவையாகும். பிரதான தமிழ் அரசியல் மற்றும் அதன் புத்திஜீவிகள் தமிழர்களின் அபிலாசைகள் குறித்து வாய் கிழியப் பேசி வரும் அதே வேளையில், இந்தச் சமூகத்தினரின் பொருளாதார தடுமாற்ற நிலைக்கு ஒரு மாற்று வழியைக் கூட அவர்கள் முன்வைத்திருக்கவில்லை.
இயக்கங்கள் மற்றும் மாற்றுவழிகள்
ஒரு சில கிராமங்களில் உள்ளூர் செயற்பாட்டாளர்கள் மக்களை கணிசமான அளவில் அணிதிரட்டியிருப்பதன் காரணமாக காணிகளைப் பெற்றுக்கொள்ளும் விடயத்திலும், கிராமிய அபிவிருத்திச் சங்கங்கள், சனசமூக நிலையங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் போன்ற சமூக நிறுவனங்களில் கட்டுப்பாட்டை பெற்றுக்கொள்ளும் விடயத்திலும் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்றது. எவ்வாறிருப்பினும், மக்களை பேரளவில் அணிதிரட்டுவதற்கான அவர்களுடைய முயற்சிகள் இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகின்றன. அவர்களுடைய அடையாளங்கள் ஒடுக்கப்பட்டிருப்பதன் காரணமாக உத்தியோகபூர்வமான பதிவுகள் இல்லாதிருந்த போதிலும், கிளிநொச்சி மாவட்டத்தின் குடித்தொகையில் அரைவாசிப் பகுதியினர் மலையகத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள் என சமூகத் தலைவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்தப் பின்புலத்தில், காணி மற்றும் வாழ்வாதாரங்கள் என்பவற்றுக்கான போராட்டங்களின் ஊடாக சமூக மற்றும் அரசியல் இயக்கங்கள் எழுச்சியடைய வேண்டிய உண்மையான ஒரு தேவை நிலவி வருகின்றது. 2018 உள்ளூராட்சித் தேர்தல்களின் போது இச்சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஈட்டிய வெற்றியுடன் இணைந்த விதத்தில் அத்தகைய அதிர்வுகள் உணரப்பட்டிருந்தன. முற்போக்கு இயக்கங்கள் பெருந்தொகையான பிரச்சினைகளை கையில் எடுக்க வேண்டியுள்ளன. அவை காணி, நீர், வேலைவாய்ப்பு, கல்வி முன்னேற்றம் மற்றும் பெண்களின் வாழ்வாதாரங்கள் என்பவற்றையும் உள்ளடக்குகின்றன. இவை அனைத்துக்கும் வளங்கள், மீள்பகிர்வு மற்றும் சமூகத்தின் தலைமைத்துவம் என்பன தேவைப்படுகின்றன. அடுத்து வரும் வாரங்களிலும், மாதங்களிலும் இந்தப் பிரச்சினைகளில் ஒரு சில பிரச்சினைகள் குறித்து எழுதுவதற்கு நான் எதிர்பார்க்கின்றேன். வட புலத்தில் வாழ்ந்து வரும் மலையகத் தமிழர்களின் மௌனம் இப்பொழுது கலைந்து வருகின்றது; ஆனால், நாங்கள் அதற்கு செவிமடுக்கிறோமா?
அகிலன் கதிர்காமர்
Breaking the Silence: Hill Country Tamils in the North என்ற தலைப்பில் டெல்லி மிரர் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.