Photo, Groundviews
1990 அக்டோபர் மாதம் விடுதலை புலிகள் இயக்கம் வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்களை பலவந்தமாக அவர்களின் வீடுகள், காணிகளை விட்டு வெளியேற்றினார்கள். அதனால் அவர்கள் தமது சொத்துகள், நிலம், வீடுகள், உடமைகளை மற்றும் வாழ்வாதாரங்களை இழந்தனர். 2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின்போது சிலர் தமது இடங்களுக்கு திரும்பி வந்த பொழுதும், 2009 இல் யுத்தம் முடிந்த பின்னரே பலர் தாம் திரும்பிவருவது பாதுகாப்பானது என நினைத்து மீள்திரும்பத் தொடங்கினர்.
இவ்வாறு திரும்பிவரும் முஸ்லிம்கள் தாம் விட்டுச் சென்ற நிலம், வீடுகளை உரிமைகோருவதில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். உள்ளூர் அரச அதிகாரிகளால் வீட்டுத் திட்டங்கள் போன்ற மீள்குடியேற்ற உதவிகளில் இருந்து புறம் தள்ளப்படுவது தொடர்பாக முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் கேள்வி எழுப்பிக்கொண்டு இருக்கிறது. திரும்பிவரும் முஸ்லிம் சமூகத்தினால் எழுப்பப்படும் கோரிக்கைகள் சில நிலம் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான ஆய்வுகளுக்கு வித்திட்டபோதிலும், பல ஆய்வுகள் திரும்பிவரும் முஸ்லிம் மக்களின் வாழ்வாதாரம் தொடர்பான அறிவுசார் விடயங்களுக்குப் போதியளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. வாழ்வாதார பிரச்சினைகளை அணுகுவதற்கு அல்லது தீர்ப்பதற்குத் தேவையான கொள்கை மாற்றங்களைப் பற்றிய கருத்துகளிலும் கூட ஓர் ஆய்வு ரீதியான வறுமை நிலவுகிறது.
திரும்பிவரும் முஸ்லிம் மக்களின் வாழ்வாதார முயற்சிகள், அதில் அவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் கூட்டுறவு மூலம் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு எவ்வாறான உதவிகளை வழங்கமுடியும் என்பன பற்றிய ஆய்வில் மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேசத்தில் வசிக்கும் சில முஸ்லிம் மக்களுடன் இடம்பெற்ற ஆரம்பக்கட்ட கலந்துரையாடலின்போது பெற்றுக்கொண்ட தகவல்கள் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவிடுகிறோம்.
முசலிப்பிரதேசம், காணி, மற்றும் மீள்குடியேற்றம்
1990களில் விடுதலைப் புலிகளால் சுமார் 4000 முசலி வாழ் முஸ்லிம் குடும்பங்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அவ்வாறு வெளியேறியவர்களில் பெரும்பாலானோர் புத்தளத்திற்குச் சென்றனர். இரண்டு-மூன்று தலைமுறைக்கு மேலாக அகதிகளாக வாழ்ந்த குடும்பங்கள் இப்பொழுது சுமார் 12,000 குடும்பங்களாகப் பெருகி உள்ள நிலையில் அவர்கள் மீளக்குடியேற முசலியில் போதிய காணியில்லாத பிரச்சினையுள்ளது. இதனால், இருக்கும் காணிகளை பங்கிட எத்தனிக்கும்போது யாருக்கும் போதியளவு காணி கிடைக்காமல் போகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் சிலர் தமது விவசாயக்காணிகளில் குடியேற முற்பட்டபொழுது விவசாயத்திணைக்களத்திற்கும் அவ்வாறு குடியேற முயற்சித்த மக்களுக்குமிடையில் பிரச்சினைகள் தோன்றியுள்ளன. இவ்வாறான காணியின்மை பிரச்சினையால் பலர் முசலிக்கும் புத்தளத்திற்கும் போவதும் வருவதும் என்ற நிலையில் உள்ளனர்.
அதேவேளையில் மீளக்குடியேறி வரும் மக்கள் பலர், குறிப்பாக “பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள்” பல வகைகளில் புறம்தள்ளப்படுகிறார்கள். வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக்கொள்ள பூர்த்திசெய்யவேண்டிய நிபந்தனைகள் பலரின் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறில்லை. கிராம சேவையாளர் அனுமதி வழங்கினால் மட்டுமே அவர்களுக்கு வீட்டுத்திட்டங்கள் கிடைக்கும் என்ற நிலையில் அதற்காக அவர்கள் அந்தக் காணிகளில் சிறு குடிசைகளை அமைத்துத் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் “பெண்கள் தலைமை குடும்பத்தில்” இருப்போர் தாயும் பிள்ளையும் மாத்திரமே என்றால் வீட்டுத்திட்டம் கோரமுடியாத நிலை இருக்கிறது. அதேபோல் பிள்ளைகள் புத்தளத்தில் படிக்கிறார்கள் என்றால் அவர்களை அங்கேயே தனியாக விட்டுவிட்டு வந்து முசலியில் குடிசை அமைத்து வீட்டுத்திட்டம் கோருவதில் சிரமப்படுகிறார்கள். இவ்வாறான சூழ்நிலைகளில் மக்கள், குறிப்பாக பெண்கள், நிரந்தர குடியிருப்புகள் இல்லாது சிரமப்பட்டு வருகிறார்கள்.
முசலியில் முஸ்லிம் மக்களின் வாழ்வாதார முயற்சிகளும் அவற்றில் உள்ள சிக்கல்களும்
இடப்பெயர்விற்கு முன்னர் முசலிவாழ் முஸ்லிம் மக்கள் விவசாயம், மீன்பிடி, தும்புக் கைத்தொழில், கிடுகு பின்னல் போன்ற சிறு கைத்தொழில் முயற்சிகளிலும் காடு சார்ந்த தொழில்களான விறகு வெட்டி விற்றல், தேன் சேகரிப்பு போன்ற வாழ்வாதார முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். 20-30 வருடங்களுக்கு பின்னர் குடியேறிவரும் இரண்டாம் மூன்றாம் தலைமுறையினர் இவற்றை தொடர்ந்து செய்வதில் பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.
விவசாயம் செய்வோர் தற்போது மழையை நம்பி மட்டுமே விவசாய முயற்சிகளில் ஈடுபடுகின்றார்கள். போரின் பின்னர் அங்கிருக்கும் குளங்கள் திருத்தப்படாமையே இதற்கான காரணமாகும். மேலும், மேட்டு நில வேளாண்மைக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அவ்வாறான பயிர்செய்கை இவ்வளவு காலமும் இடம்பெறவில்லை. கடந்த வருடத்தில் இருந்து நீர்பாசன உத்தியோகத்தர்கள் சிலரின் வழிகாட்டலில் சிறுபோக விவாயப் பயிர்களான உளுந்து, பயறு என்பன விதைக்கப்பட்டுள்ளன. எனினும், உரிய நீர்ப்பாசன முறைமைகள் பல திருத்தப்படாமல் இருப்பதால், பலர் விவசாய நடவடிக்கைகளில் உரிய முறையில் ஈடுபட முடியாமல் உள்ளனர். அதோடு கால்நடை வளர்க்க மக்களிடையே ஆர்வமிருக்கின்ற போதிலும் அதனை பிரதானப்படுத்தி செய்வதில் மேய்ச்சல் நிலமின்மை மற்றும் பட்டிகள் அடைத்து வளர்க்க வசதியின்மையும் அவர்களை அந்த முயற்சியில் ஈடுபடுவதில் இருந்து தடுக்கின்றது.
கடற்தொழில் செய்த பலர் தாம் முதல் பாவித்த வாடிகளை மீளப்பெற முடியாமலும் உரிமைக்கோர முடியாமலும் இருக்கிறார்கள். இதனால், முசலியில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மீனவர்களுக்கிடையில் வாடி தொடர்பான பிரச்சினைகள் இருந்துவருகின்றன. அதே நேரத்தில் இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளின் வருகை மற்றும் செயற்பாடுகளால் பொருளாதார ரீதியில் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
கைத்தொழில் செயற்பாடுகள் வெளியேற்றத்திற்கு முன்னர் இருந்தபோதிலும் அவை அடுத்த சந்ததியினருக்கு கற்றுக்கொடுக்கப்படாத நிலையில் அவ்வாறான ஆற்றல்கள் இல்லாது போகின்றதுடன், அவற்றின் மூலம் பெறக்கூடிய வருமானங்களும் இல்லாது போகின்றன. அவ்வாறான கைத்தொழில் முயற்சிகளில் ஈடுபடுவோருக்கு அவற்றைச் சந்தைப்படுத்த வசதிகள் குறைவாக உள்ளன. மேலும் தற்போது காடுகள் வனப் பாதுகாப்பு என்ற பெயரில் அரசால் அபகரிக்கப்பட்டு இராணுவமயமாக்கப்பட்டதால் காட்டுத்தொழிலில் ஈடுபட்டோர் அவற்றில் ஈடுபடமுடியாமல் இருக்கிறார்கள். தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் அரசின் நில அபகரிப்புச் செயற்பாடுகளால் மக்கள் வசிக்கவும் காணியில்லாமல் காடு சார் வாழ்வாதார முயற்சிகளிலும் ஈடுபட முடியாமலுள்ளனர்.
மேலும், முஸ்லிம் மக்கள் தமது வாழ்வாதார முயற்சிகளில் ஈடுபடுவதற்குரிய நிதி வசதிகளும் அவற்றை வழங்கக்கூடிய அரச நிதி நிறுவனங்களும் இல்லை. மக்கள் வங்கி மட்டுமே அங்கு தொழிப்பட்டு வருகின்றது. கூட்டுறவு சங்கங்களோ கட்டடம் கட்டப்பட்ட நிலையில் தொழிற்படாமல் இருக்கின்றன. மேலும், அரசின் நிதி மற்றும் நிதியில்லா உதவிகளைப் பெற்றுக்கொள்வதிலும் பதிவுப்பிரச்சினைகளினைக் கிராம சேவையாளர்கள் முன்வைக்கின்றனர். அவர்களின் பதிவு முசலியில் இருந்தாலும் அவர்கள் புத்தளத்தில் வசித்த அல்லது வசிக்கும் காரணத்தைக்காட்டி அவர்களுக்கு கிடைக்கவேண்டிய உதவிகளும் கிடைக்காமல் போகின்றன.
மேலும், பலர் இங்கு நிரந்தரமாக திரும்பி வராமல் இருப்பதற்கு இங்கு இருக்கும் கல்வி நிலையும் உரிய வசதிகள் இல்லாத பாடசாலைகளும் ஒரு காரணமாகும். இங்கு இருக்கும் 25 பாடசாலைகளில் 10 பாடசாலைகளில் மட்டுமே க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர் தர வகுப்புக்கள் உள்ளன. அவற்றில் பல விஞ்ஞான கூடம் போன்ற பல உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருப்பதால் பலர் இங்கு வந்து தமது பிள்ளைகளைப் படிப்பிக்க விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள்.
முசலியில் வாழும் முஸ்லிம் மக்களின் பிரச்சனைகளை இனத்துவ ரீதியான ஒரு பார்வையால் மட்டும் பார்ப்பது என்பது குறுகிய வட்டத்தில் நின்று பார்ப்பது போன்ற ஒன்று. முசலியில் வசிக்கும் மக்களுக்கு அவர்களின் காணி மற்றும் வாழ்வாதார முயற்சிகளுக்குத் தேவையான வளங்களைப் பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சினைகள் இனத்துவத்துடன் சேர்ந்து வர்க்க நிலை மற்றும் பால்நிலை புறம்தள்ளலாக பார்க்கவேண்டியது அவசியம்.
சிறுபான்மையினருக்குள் இருக்கும் வர்க்கம் சார்ந்து, பால்நிலை சார்ந்து சிறுபான்மையாக்கப்பட்டவர்களின் குரல்களை செவிமடுத்து அவர்களின் அன்றாட வாழ்வாதார பிரச்சினைகளை விளங்கி அதற்கேற்ப அவர்கள் கோரும் தீர்வுகளை நோக்கி எப்பொழுது பயணிக்கபோகின்றோம்?
யதுர்ஷா உலகேந்திரன் (ஆய்வாளர்)
கலாநிதி மகேந்திரன் திருவரங்கன் (விரிவுரையாளர், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்)