Photo, UNITED NATION
1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம் மக்கள் பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து சொல்லல்லா துயரங்களை அனுபவித்தார்கள். திரும்பி வரும் முஸ்லிம் மக்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதார முயற்சிகளில் இருக்கும் சவால்களை ஆய்வு செய்யும் நாம் முள்ளியவளை பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் பெண்களுடன் கலந்துரையாடினோம். அவர்கள் எம்முடன் பகிர்ந்துகொண்ட அனுபவங்களையும் தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் பொருளாதார ரீதியில் அனுபவிக்கும் இன்னல்களையும் இங்கு நாம் பதிவிடுகிறோம்.
இடப்பெயர்வும் கல்வியும்
1990க்கு முதல் முல்லைத்தீவில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் விவசாயம், மீன்பிடி, தும்பு போன்ற கைத்தொழில்கள், விறகு வியாபாரம், மற்றும் பனை சார்ந்த உற்பத்திகளில் ஈடுபட்டு வந்தனர். தமது இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னர் பலர் புத்தளத்திற்கு இடம்பெயர்ந்தனர். அங்கு தாம் வசிக்க இடம் தேடி அலையும் வேளையில் தென்னம் தோப்புகள் மற்றும் வயல்களில் கூலிவேலைகள் மட்டுமே வருமானம் ஈட்டும் வழிகளாக இருந்தன. வீட்டின் ஆணின் கூலியை மட்டும் வைத்து குடும்பத்தை கொண்டு செல்லமுடியாத சூழ்நிலையில் பெண்களும் வெங்காய பயிர் செய்கையில் கூலியாக அல்லது கால் நடை வளர்ப்பு என்று தம்மால் முடிந்த வேலைகள் மூலம் சிறு பணம் சம்பாதிக்க முயற்சித்தனர்.
புத்தளத்தில் வசித்த பொழுது சிறுவர்களாகவும் சகோதரங்களுக்கு இடையே மூத்தவர்களாகவும் இருந்த பல பெண்கள் தமது கல்வியை இடை நிறுத்தி தமது சகோதரர்களை பராமரிக்கும் பணியை ஏற்றனர். இவர்களின் கல்வி நிலை சமூக, பொருளாதார, அரசியல் சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான சமூக முன்னேற்றமும் தடுக்கப்பட்டது. எம்முடன் கதைத்த சகோதரி பின்வருமாறு கூறினார்:
குடும்பத்திற்குத் தேவையான பொருளாதாரத்தை ஈட்டுவதற்கான தேவையிருந்தபடியால் பெரும்பாலான பெண்களும் சிறுவர்களும் – தமது கல்வியை முற்றும் முழுதாக கைவிட்டு, சிறுவர் தொழிலாளர்களாக – தோட்ட வேலைகளில் ஈடுபடவேண்டிவந்தது. பெண்பிள்ளைகளின் கல்வி கூடுதலாக பாதிக்கப்பட்டது எனலாம். புத்தளத்தில் எமக்கு, அகதிப்பிள்ளையளுக்கு, மாலை நேர பாடசாலையே இடம்பெற்றது. நேரம், தூரம், பாதுகாப்புப் பிரச்சினைகள் மற்றும் மாலையில் தாய்மார் கூலி வேலைக்கு சென்றால் வீட்டுப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு நடத்தவேண்டிய நிலமையும் அவர்களின் கல்வியை பாதித்தது.
இவ்வாறு சமூக முன்னேற்றத்தில் இருந்து பின் தள்ளப்பட்டபோதும் எம்முடன் கதைத்த பெண்கள் தமது சமூகத்தில் இருக்கும் இளையோர் கல்வியால் உயரவேண்டும் என்ற ஆசைகளை வெளிப்படுத்தினர்:
நான் படிப்பில நல்ல கெட்டித்தனம். எனக்கு நிறையப் படிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால், இடம்பெயர்ந்து போனதால் வீட்டிலும் கஷ்டம். எனக்கு என்னுடைய பிள்ளையளை நல்லாப் படிக்கவைக்க வேண்டுமென்று ஆசை. இப்ப என்னுடைய மூத்த மகள் படிச்சு பல்கலைக்கழகம் போயிட்டா. இந்த கொரோனாவால இப்ப வீட்டில Zoomல தான் படிக்கிறா… அவவிட்ட பக்கத்தில் இருக்கிற சின்னப்பிள்ளையளும் வந்து கேட்டுப்படிப்பினம். எங்களுடைய சமூகத்தில நிறைய பிள்ளையளிடம் தாங்கள் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருக்கு. ஆனால், அவர்களின் வீட்டில் இருக்கும் பொருளாதார கஷ்டம் காரணமாக தொடர்ந்து கற்பதில் சிக்கல் நிலை இருக்கு.
திடீர் என வெளியேற்றப்பட்ட பின்னணியும், அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகள் மற்றும் மீளக்குடியேறும் போது வாழ்வாதாரத்தை மீள உருவாக்க வேண்டிய நிலையும் வட மாகாண முஸ்லிம் மக்களின் கல்வியில் தொடர்ச்சியான தாக்கத்தினை செலுத்திவருகின்றது.
வாழ்வாதார முயற்சிகள்
தமது வாழ்வாதாரத்தை இழந்து இடம்பெயர்ந்த இடங்களில் வயல் மற்றும் தோட்டங்களில் கூலித்தொழிலும், வியாபாரமும் செய்து தமது குடும்பங்களையும் காப்பாற்றி வந்த மக்கள் இப்பொழுது முல்லைத்தீவு முள்ளியவளையில் மீளக்குடியேறிக்கொண்டிருக்கிறார்கள். எனினும், பலர் இன்றும் தமது தொழில்களை புத்தளத்தில் செய்துகொண்டிருப்பதால் முல்லைத்தீவுக்கும் புத்தளத்திற்கும் சென்றுவரும் சூழலில் இருக்கிறார்கள். முல்லைத்தீவிற்கே திரும்பிவந்தவர்கள் விவசாயம், மீன்பிடியில் ஈடுபட்டாலும் கூட பல சவால்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
விவசாயத்தை மேற்கொள்ளும் பெண்களுக்கு தமது குடியிருப்புக்கும் வயற்காணிகளுக்கும் இடையே உள்ள தூரம் மற்றும் போக்குவரத்து வசதியின்மை பெரும் தடையாக உள்ளது. மேலும் நிதி உதவியின்மையால் விவசாயத்திற்கு தேவையான கிணறுகள் மற்றும் மோட்டர் வசதிகளை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையில் உள்ளனர்.
விவசாயம் செய்யத்தேவையான வளப்பற்றாக்குறை பலரை கூலித்தொழிலுக்குள் தள்ளியுள்ள அதேநேரம் குடும்பத்திற்கு தனிநபர் வருமானம் போதாது என்ற நிலையில் முஸ்லிம் பெண்களும் வீட்டில் தையல், உணவு பொதிகள் தயாரித்தல், சிறு வணிகம், பாலர் பாடசாலையில் ஆசிரியராக பணிபுரிந்துவருகின்றனர். இவர்களது உழைப்பால் சமூகத்தில் இருக்கும் தமிழ் மக்களும் பயனயடைகிறார்கள்.
அண்ணியும் நானும் சேர்ந்துதான் உடுப்பு தைக்கிறனாங்கள். வாடிக்கையாளர்கள் என்று சொன்னா ஊரில் இருக்கிற பெரும்பாலானாக்கள் வாரவை. யுனிபோம் தைக்க மற்றது சீசன் நேரம் – தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல், ஹஜ் பெருநாள், நோம்பு காலம் – என்று சனம் வருவினம் உடுப்பு தைக்க…
சில பெண்தொழிலாளிகள் ஒரு கூட்டுறவு நிறுவனமொன்றை ஸ்தாபித்தபோதிலும் அவர்களால் தமது நேரத்தினை முழுதாக இந்த வேலைகளில் பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளனர். வீட்டுவேலைகளையும் கவனித்துக்கொண்டு வருமானம் பெறக்கூடிய பணிகளிலும் பயிற்சியைப்பெற்று அதை செய்வதற்கு போதிய குடும்ப, சமூக சூழ்நிலை அவர்களுக்கு இல்லாதுள்ளது. தொண்டு நிறுவனங்கள் ‘ஊக்குவிக்கும்’ நோக்கத்துடன் வழங்கும் தொழில்நுட்ப சாதனங்களை இயங்க வைக்கும் ஆற்றலை கற்று அதன் மூலம் தொழில் ஒன்றினை செய்வதற்குத் தேவையான நேரம் மற்றும் நிதிகள் போதாமை இருக்கின்றது. மேலும் அதில் நேரம் செலவிடுவதற்குப் பதில் தமக்கு தெரிந்த வேலைகளான ஆடு-மாடு வளர்ப்பு மற்றும் தோட்ட வேலைகளை தமது குடியிருப்பு காணிகளில் செய்வதற்கும் இடம்போதாமையாக உள்ளது.
மக்களை சுரண்டாமல் இவர்களுக்குத் தேவையான நிதியை வழங்கக்கூடிய நிறுவனங்களும் இங்கு குறைவாக இருக்கும் நேரத்தில் அரசின் நிதி அல்லது மானிய உதவிகளும் நிபந்தனைகள் மற்றும் இன பாகுபாடுகள் காரணமாக இந்தப் பெண்களுக்கு கிடைக்காமல் போகின்றதோடு அவ்வாறான செயற்பாடுகள் அங்கு வசிக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையே முரன்பாடுகளையும் தூண்டுகின்றன.
சகவாழ்வு
இன சுத்திகரிப்பால் பாதிக்கப்பட்டு தற்போது இன பாகுபாடுகளையும் எதிர்நோக்கும் வட மாகாண முஸ்லிம் பெண்கள் தாமாக முன்வந்து ஊரில் இருக்கும் தமிழ்ப் பெண்களுடன் இணைந்து வாழ்வாதார செயற்பாடுகளை முன்கொண்டுபோகிறார்கள். அவ்வாறான பெண்கள் சார் கூட்டுறவு முயற்சிகளும், முறைசாரா அபிவிருத்தி நிலையங்களும் உருவாக்கப்பட்டு தமக்குத் தேவையான உதவிகளையும் வாழ்வாதாரம் சார் அறிவுகளையும் இந்த இரு சமூக பெண்களும் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
சிறுபான்மையினருக்குள் சிறுபான்மையாக்கப்பட்ட இந்த முஸ்லிம் பெண்கள் தமது தொழில்களுக்குத் தேவையான நிதி மற்றும் சமூக உதவிகள் பலவற்றை தேடுகிறார்கள். விளிம்பு நிலையில் இருக்கும் பெண்கள் முன்செல்வதற்கான முயற்சிகளை ஊக்கப்படுத்தவும் அவர்களுக்கான ஒத்துழைப்பை வழங்கவேண்டியது வட சமூகத்தின் தார்மீக பொருப்பாகும். வடக்கு முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்தை நினைவுகூரும் நேரம், தமிழ் முஸ்லிம் இன ஒற்றுமை மற்றும் சகவாழ்வுக்கான அடித்தளத்தையும் நாம் தொடர்ந்து கட்டியெழுப்பவேண்டும்.
அகிலன் கதிர்காமர் (சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ்ப்பாண பல்கலைகழகம்)
யதுர்ஷா உலகேந்திரன் (ஆய்வாளர்)