Photo, Selvaraja Rajasegar
கடந்த இரு தசாப்த காலத்தின் போது பெருந்தோட்ட (கைத்தொழில்) துறை இலங்கையில் பாரியளவிலான தாக்கங்களை எதிர்கொண்டு வந்துள்ளது. ஊழியர் படை பங்கேற்பில் ஏற்பட்ட குறைவு, மோசமான சமூக நலன்புரிச் சேவைகள், உற்பத்தித்திறனில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் பெருந்தோட்டங்களில் தோட்டம் சாராத பயிர்களின் சாகுபடியில் ஏற்பட்ட தீவிர அதிகரிப்பு என்பவற்றை இது உள்ளடக்குகின்றது. தற்பொழுது இலங்கையின் மலையகத் தமிழர்களின் (இந்திய வம்சாவளி தமிழர்களின்) குடித்தொகை 1.5 மில்லியனாகும். இவர்களில் சுமார் 139,000 பேர் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களாக தேயிலைத் தோட்டங்களில் வசித்து வருகின்றனர். இந்தப் போக்கு தோட்டமல்லாத துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர் வகையினரின் தீவிரமான அதிகரிப்பை சுட்டிக் காட்டுவது மட்டுமன்றி, இந்தச் சமூகப் பிரிவினர் எதிர்கொண்டு வரும் மிகவும் ஆபத்தான பிரச்சினைகளையும் எடுத்துக் காட்டுகின்றது. தனியார்மயப்படுத்தப்பட்ட பெருந்தோட்ட முகாமைத்துவத்தினாலும், அரசுக்குச் சொந்தமான (மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் போன்ற) கம்பனிகளினாலும் மற்றும் அரச நிறுவனங்களாலும் நலன்புரிச் சேவைகள் (உதாரணமாக, சமுர்த்தி போன்ற) சமூகப் பாதுகாப்பு பயன்கள் மற்றும் ஏனைய பொருள்சார் ஆதாயங்கள் என்பவற்றை வழங்குவதில் இப்பிரிவினர் புறமொதுக்கப்பட்டு வரும் விடயம் அவதானிக்கப்பட்டுள்ளது. தோட்டம் சாராத தொழிலாளர்களின் கணிசமான எண்ணிக்கையினர் அருகிலுள்ள கிராமங்கள், மரக்கறித் தோட்டங்கள், கட்டுமான வேலைத்தலங்கள், உப நகர பிரதேசங்கள் என்பவற்றுக்கு நாள் கூலி அடிப்படையில் வேலை செய்வதற்கு புலம்பெயர் தொழிலாளர்களாக சென்று வருவதுடன், பல்வேறு வகைகளிலான தற்காலிக தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 50,000 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கொழும்பில் பல்வேறு துறைகளிலும் வேலை செய்து வருவதுடன், அவர்கள் செட்டியார் தெரு, பிரதான வீதி மற்றும் மத்திய கொழும்பின் பல இடங்களையும் உள்ளடக்கிய விதத்தில் புறக்கோட்டை பிரதேசம் என்பவற்றின் நாளாந்த வியாபாரம் மற்றும் வணிகச் செயற்பாடுகளில் மீது ஒரு செல்வாக்கைச் செலுத்தி வருகின்றனர். ‘கொழும்பில் மலையக இளைஞர்கள் இல்லாதிருந்தால் கொழும்பு வணிகத் துறை ஸ்தம்பிதமடைந்துவிடும்” என மக்கள் மத்தியில் பரவலாக அடிபடும் ஒரு வார்த்தையாகும்.
கொழும்பின் வணிகம் மற்றும் ஏனைய வியாபாரத் துறைகளுக்கான அவர்களுடைய ஊழியப் பங்களிப்பினை இது எடுத்துக் காட்டுகின்றது. ஆனால், அவர்கள் பெருமளவுக்கு சுரண்டப்பட்டு வருவதுடன், பல துறைகளில் குறைந்த சம்பளத்தையே பெற்று வருகின்றார்கள். எவ்வாறிருப்பினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (80%) பொது முடக்கம் மற்றும் பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் என்பவற்றையடுத்து தமது தோட்டங்களுக்கு திரும்பிச் சென்றுள்ளார்கள். தோட்டத் தொழிலாளர் அல்லாத வகையைச் சேர்ந்தவர்களில் 30-40% வேலையற்றவர்களாக இருந்து வருவதுடன், அவர்கள் பெருமளவுக்கு மற்றவர்கள் மீது தங்கியிருந்து வருபவர்களாகவும் உள்ளனர். கொவிட்-19 பெருந்தொற்று பரவலையடுத்து அவர்கள் பொருளாதார நெருக்கடிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதுடன், தமது பிள்ளைகளுக்கு உணவூட்டும் விடயத்திலும், ஒன்லைன் கல்வியை பெற்றுக் கொடுப்பதிலும், அவர்களுடைய ஏனைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி வைப்பதிலும் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றார்கள். கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களைச் சேர்ந்த அரசுக்குச் சொந்தமான தோட்டங்களில் இந்த நிலைமை மிக மோசமாக இருந்து வருவதனை அவதானிக்க முடியும். எனவே, இத்தோட்டங்களில் வாழ்ந்து வரும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் குறித்த புரிந்துணர்வொன்றை முன்வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
1972 – 1975 காலப் பிரிவின் போது, பிரிட்டிஷ் கம்பனிகளுக்குச் சொந்தமான பெருந்தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டதுடன், அப்பெருந்தோட்டங்களின் முகாமைத்துவம் அரசுக்குச் சொந்தமான அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்திடமும் (SPC), மலைநாட்டுத் தோட்ட அபிவிருத்திச் சபை (USAWASAMA) மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை (JEDB) என்ற இரு நிறுவனங்களிடமும் ஒப்படைக்கப்பட்டது. இந்த மூன்று நிறுவனங்களும் நாட்டின் பெருந்தோட்ட விவசாயத்தின் சுமார் 35 சதவீதத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. துரதிர்ஷ்டவசமாக, இந்த நிர்வாக கட்டமைப்பு வலுவானதாக இருந்து வரவில்லை. சுமார் 29,500 ஹெக்டயார் மொத்த பரப்பளவைக் கொண்ட 107 தோட்டங்களை முகாமைத்துவம் செய்து வந்த உஸவஸம செயல்திறன் இன்மையின் அடிப்படையில் 1977 இன் முடிவின் போது கலைக்கப்பட்டதுடன், அதன் சொத்துக்கள் இலங்கை பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை என்பவற்றுக்கு மத்தியில் மீள் பகிர்வு செய்யப்பட்டன.
மோசமான நிர்வாகம், குறைந்த சம்பளம் மற்றும் பொருளாதார சிரமங்கள்
தனியார்மயமாக்கல் இடம்பெற்ற காலப் பிரிவின் போது, மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை (JEDB) மற்றும் இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் (SLSPC) ஆகியன மொத்தம் 12,335 ஹெக்டயார் தேயிலைக் காணிகளை வைத்திருந்தன. இப்பொழுது இந்த தேயிலைக் காணிகளின் பரப்பளவு மொத்தம் 6,995 ஹெக்டயார்களாக 43.27 சதவீதம் (2018 ஆம் ஆண்டில்) குறைவடைந்துள்ளது. இதன் விளைவாக தோட்டங்களில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்திருப்பதுடன், அது மறுபுறத்தில் ஒன்றில் அவர்கள் தோட்டங்களை விட்டு வெளியேறுவதற்கு அல்லது பட்டினி, தொடர்ச்சியான வறுமை மற்றும் விரக்தி என்பவற்றுடன் தொடர்ந்து தோட்டங்களில் வாழ்ந்து வருவதற்கு அவர்களை நிர்ப்பந்தித்தது. அதற்கு மாறான விதத்தில், கைவிடப்பட்ட காணிகளிலும் கூட தொழிலாளர்கள் ஏதேனும் வருமானம் உருவாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு தோட்ட முகாமைத்துவம் அனுமதி வழங்குவதில்லை. கொவிட் பரவலையடுத்து கொழும்பிலிருந்து தோட்டங்களுக்கு திரும்பி வந்திருக்கும் இளைஞர்கள் கைவிடப்பட்டிருக்கும் காணிகளை தமது வாழ்வாதாரங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கென தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்கள். ஆனால், அத்தகைய முயற்சிகள் அனைத்தும் தோட்ட முகாமைத்துவத்தினால் திட்டமிட்ட விதத்தில் முறியடிக்கப்பட்டு வந்துள்ளன. நாட்டின் பெருந்தோட்ட அமைப்பின் வகைப்படுத்தலின் கீழ் வரும் ஏனைய தோட்டங்களிலும் இந்த நிலைமை பொதுவாக நிலவி வருகின்றது. தோட்டங்களின் மோசமான முகாமைத்துவம் காரணமாக தொழிலாளர்களுக்கு வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டு வருகின்றது. எனவே, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் ஏனைய வடிவங்களிலான பொருளாதார மற்றும் சமூக அழுத்தங்கள் என்பவற்றின் காரணமாக அவர்களால் தொடர்ந்தும் இந்தத் துறை மீது தங்கியிருக்க முடியாதுள்ளது. தோட்ட வேலையிலிருந்து அவர்களுக்கு கிடைக்கும் வருமானம் தமது மாதாந்த செலவுகளை ஈடு செய்து கொள்வதற்கு போதியதாக இல்லாதிருந்து வருவதே இதற்கான பிரதான காரணமாகும். இப்பொழுது அவர்கள் முகக் கவசம், சனிடைசர், ஒன்லைன் கல்விக்கான கையடக்கத் தொலைபேசி இன்டர்நெட் வசதி என்பவற்றுக்கென மேலதிக பணத் தொகைகளை செலவிட வேண்டியுள்ளது. பெருந்தொற்று காலப் பிரிவின் போது தொழிலாளர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவிகள் என்பவற்றை வழங்குவதற்கு முகாமைத்துவம் முன்வரவில்லை. பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டிருந்த உலகளாவிய பொருளாதார நெருக்கடி கால கட்டத்தின் போதும் தொடர்ச்சியாக செயற்பட்டு, ஏற்றுமதி வருமானத்திற்கு பங்களிப்புச் செய்த இலங்கையின் ஒரு சில துறைகளில் இத்துறையும் ஒன்றாக இருந்து வருகின்றது என்ற விடயம் குறித்து அறிந்திருந்த போதிலும், இந்நிலைமை காணப்படுகின்றது. மார்க்சிஸ்ட்டுகள் அவதானித்திருப்பதை போல இந்தத் துறையில் தற்பொழுது நிலவி வரும் சம்பள மாதிரி இன்னமும் ஒரு பிழைப்பூதிய மட்டத்திலேயே நிலவி வருகிறது என்றும், பெருமளவுக்கு பாரம்பரியமானதாக இருந்து வருகின்றது என்றும் வாதிட முடியும்.
மாதமொன்றுக்கு சராசரியாக 16 நாட்கள் வேலை கிடைத்த போதிலும் அவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் 12,000 ரூபாவுக்கு மேல் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அநேகமாக இல்லை என்றே கூற வேண்டும். இதன் காரணமாக அவர்கள் தமது வறுமையை போக்கிக் கொள்வதற்காகவும், ஏனைய நாளாந்த தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் வாழ்வாதாரங்களை தேடி வெளியிடங்களுக்குச் செல்லும் ஒரு நிலைமை தோன்றியுள்ளது. அரசுக்குச் சொந்தமான இந்தத் தோட்டங்களில் வசித்து வரும் பிள்ளைகளை பொறுத்தவரையில் பாடசாலை இடைவிலகல் முக்கியமான ஒரு பிரச்சினையாக இருந்து வருகின்றது என்ற விடயத்தையும் இங்கு குறிப்பிடுதல் வேண்டும். பெற்றோர் தமது குறைந்த சம்பளங்கள் மற்றும் தொடர்ச்சியான வறுமை என்பவற்றின் காரணமாக பிள்ளைகளின் கல்விச் செலவுகளை மேற்கொள்ளக் கூடிய நிலையில் இருந்து வரவில்லை. இத்தோட்டங்களில் கடந்த பத்து வருட காலத்தின் போது இப்போக்கு கணிசமான அளவில் அதிகரித்து வந்துள்ளது. தோராயமாக 30 – 40 சதவீதம் தொழிலாளர்கள் இக்காலப் பிரிவின் போது தோட்ட வேலையை விட்டுச் சென்றுள்ளார்கள். உதாரணமாக, மூன்று பிரிவுகளுடன் ஆயிரம் பேர் குடித்தொகையை கொண்டிருக்கும் கண்டியைச் சேர்ந்த ஒரு தோட்டத்தில் இப்பொழுது 150 – 200 பேர் மட்டுமே வேலை செய்து வரும் விடயம் தெரியவந்துள்ளது. ஏனையவர்கள் தோட்டத்தில் வேலை செய்யாத தொழிலாளர்களாக இருந்து வருவதுடன், பெரும்பாலானவர்கள்; வருமானத்துக்கென வெளி வேலைகளைச் செய்து வருகின்றனர். பெருந்தொற்றுக்குப் பின்னர் வெளி வேலைகளுக்குப் போக முடியாத நிலை இருந்து வருவதுடன், அத்தகைய வேலைகள் மிகவும் குறைந்த மட்டத்திலேயே கிடைக்கின்றன.
தற்போதைய போக்கு அரச பெருந்தோட்டங்களுக்கு பாரதூரமான ஒரு அச்சுறுத்தலை விடுத்து வருவது மட்டுமன்றி, அவற்றின் மீது தங்கியிருந்து வரும் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதித்து வருகின்றது. எண்ணிக்கை சிறியதாக இருந்து வந்தாலும் கூட, இத்தோட்டங்களில் உற்பத்தித் திறன் மோசமாக இருந்து வரும் நிலை காரணமாக தொடர்ச்சியாக இலாப இழப்புக்கள் ஏற்பட்டு வருவதுடன், நலன்புரிச் சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இத்தோட்டங்களை தற்காலிக தொழிலாளர்களைக் கொண்டு பராமரித்து வருவதற்கு முகாமைத்துவம் விரும்பும் காரணத்தினால் தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்களாக தெரிவு செய்யும் நடைமுறையை இப்பொழுது நிறுத்தியிருக்கின்றார்கள். தற்காலிக தொழிலாளர்களை வைத்திருப்பது நிர்வாகச் செலவுகளை குறைத்துக் கொள்வதற்கு உதவுவது இதற்கான காரணமாகும். வணிகச் செயற்பாடுகள் மற்றும் சுற்றுலா என்பவற்றுக்கென காணிகளை அத்துமீறி கையகப்படுத்தும் நிலைமையும் அதிகரித்து வருகின்றது. மோசமான பராமரிப்பு மற்றும் பாரிய அளவிலான காணிகள் பயன்படுத்தப்படாதிருக்கும் நிலை என்பன காரணமாக வெளி ஆட்கள் பல்வேறு நோக்கங்களுக்காக தோட்டக் காணிகளை பிடித்து வைத்துள்ளனர். ஆனால், உரிமைகளைக் கொண்டிருக்கும் இந்நாட்டின் பிரஜைகள் என்ற முறையில் தோட்டத் தொழிலாளர்கள் காணிகளைப் பெற்றுக் கொள்வதற்கான உரித்தினைப் பெற்றிருந்த போதிலும், பல தசாப்தகாலமாக அவர்களுக்கு இந்த உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. செல்வாக்கு மிக்க உள்ளூர் நபர்கள் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் இத்தோட்டங்களில் ஊடுருவும் ஒரு போக்கு நிலவி வருவதுடன், அத்தகைய போக்குகளை தடுத்து நிறுத்துவதற்கென தோட்ட முகாமைத்துவத்தினாலோ அல்லது உயர்மட்ட நிர்வாக தரப்புக்களினாலோ எத்தகைய கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை (ஆளும் கட்சி எதுவாக இருந்து வந்தாலும்). ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் அரசுக்குச் சொந்தமான பெருந்தோட்டங்களில் இருக்கும் பயன்படுத்தப்படாத காணிகளை சுற்றுலாத் துறையையும் உள்ளடக்கிய விதத்தில் பல்வேறு நோக்கங்களுக்கென கையகப்படுத்திக் கொள்ளும் விடயத்தில் பெருமளவுக்கு ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.
இறுதியில், இந்த வெளியார் தரப்புக்கள் இத்தோட்டங்களின் மீது ஒரு பாரிய அழிவினை எடுத்து வர முடியும். இந்நிலை தோட்டங்களில் வசித்து வரும் சமூகத்தினர் மற்றும் வெளி ஆட்கள் ஆகிய தரப்புக்களுக்கிடையில் அநேகமாக ஒரு வன்முறையுடன் கூடிய மோதலில் முடிவடையக் கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக பேச்சு வார்த்தைகள் மூலம் ஒரு தீர்வை எட்டிக் கொள்ளும் விடயத்தில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய தேவை இருந்து வருகின்றது. இத்தோட்டங்களில் செயற்பட்டு வரும் தொழிற்சங்கங்கள் வலுவானவையாகவோ அல்லது செல்வாக்கு மிக்கவையாகவும் இருந்து வரவில்லை என்ற விடயமும் அவதானிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களில் அங்கத்தவர்கள் குறைவாக இருந்து வருவதும், தொழிற்சங்கங்களுக்கிடையில் நிலவும் பிளவுகளும் இதற்கு ஓரளவு காரணமாக இருந்து வருகின்றது. இது தொழிலாளர்களின் நிலைமைகள், பேரம் பேசும் சக்தி மற்றும் தொழில் உறவுகள் என்பவற்றின் மீது பாதகமான ஒரு தாக்கத்தை எடுத்து வந்துள்ளது. வலுவான மற்றும் வினைத்திறன் மிக்க தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் உரிமைகள், நலன்புரிச் சேவைகள் என்பவற்றை உறுதிப்படுத்திக் கொள்வதிலும், சிறந்த தொழில் உறவுகளைப் பராமரித்து வருவதிலும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும், வலுவான ஒரு தொழிற்சங்கம் தொழிலாளர்களின் உரிமைகளுக்கென போராடி, கோரிக்கைகளை முன்வைத்து, எதிர்ப்புக்களை தெரிவிக்க முடியும். எனினும், இத்தோட்டங்களில் செயற்பட்டு வரும் தொழிற்சங்கங்களின் செயல்திறனற்ற நிலை காரணமாக தொழிலாளர் உரிமைகள் இடையறாது மீறப்படும் ஒரு நிலையே காணப்படுகின்றது. குறிப்பாக, சம்பளம் தொடர்பான பிரச்சினைகள், ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) போன்ற சமூகப் பாதுகாப்பு கொடுப்பனவுகள், நாளாந்த வேலைக்கான தரநியமங்களை நிர்ணயித்தல், தேயிலை தோட்டத்தை துப்பரவு செய்தல் மற்றும் உரிய நேரத்தில் உர வகைகள் மற்றும் இரசாயனப் பொருட்கள் என்பவற்றை பயன்படுத்துதல் என்பவற்றில் இந்த நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. ஒரு சில சந்தர்ப்பங்களில் சம்பளங்கள் உரிய நேரத்தில் செலுத்தப்படுவதில்லை. நிர்வாக பலவீனம் காரணமாக ஒவ்வொரு மாதத்திலும் சம்பளம் வழங்குவதில் கணிசமான அளவில் தாமதங்கள் இடம்பெற்று வருகின்றன. ஊடகங்கள் அடிக்கடி சுட்டிக் காட்டி வரும் இங்குள்ள மற்றொரு முக்கியமான நிர்ணய காரணி, இத்தோட்டங்களில் வசித்து வரும் தொழிலாளர்கள் தமது ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதில்லை என்பதாகும். ஒரு சில தொழிலாளர்கள் தமது வாழ்நாளின் போது இந்த நிதியங்களை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது என்பது கவலைக்குரியதாகும்.
இது தொடர்பாக நீதிமன்றங்களில் பல வழக்குகள் விசாரணையிலிருந்து வருவதுடன், சிவில் சமூக குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் என்பன இந்த விடயத்தில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இத்தோட்டங்களை அரசாங்கம் முகாமைத்துவம் செய்து வருவதனால் சமூக பாதுகாப்பு கொடுப்பனவுகளுக்கான தொழிலாளர்களின் உரிமையை உத்தரவாதப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாக இருந்து வருகின்றது. பரவலான ஊழல், அரசியல் தலையீடு மற்றும் முகாமைத்துவத் திறன்கள் பலவீனமாக இருந்து வரும் நிலை என்பவற்றின் விளைவாக அரசுக்குச் சொந்தமான தோட்டங்களின் நிர்வாகம் மிக மோசமாக இருந்து வருகின்றது என்பதனையே இது எடுத்துக் காட்டுகின்றது. வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், குறைவான சம்பளம் மற்றும் சமூக பாதுகாப்புக்கள், உரிய ஊக்குவிப்புக்கள் இல்லாமை மற்றும் செயற்தூண்டல் இல்லாத நிலை மற்றும் மோசமான நிர்வாகம் ஆகிய அனைத்தும் உற்பத்தித் திறன் வெளியீடுகளிலும், அதேபோல பெருந்தோட்டங்களில் வசித்து வரும் மக்களின் வாழ்க்கை தரத்திலும் அழிவுகரமான ஒரு தாக்கத்தை எடுத்து வந்துள்ளன. இந்த நெருக்கடியை தீர்த்து வைப்பதற்கென சீர்த்திருத்தங்களை அமுல்செய்வதும், வலுவான ஒழுங்குவிதிகளை அமுல்செய்வதும் நிறுவன ரீதியான ஆற்றல் இல்லாத காரணத்தினால் மட்டுமன்றி, அரசியல் கடப்பாடு மற்றும் விருப்பு என்பன இல்லாத காரணத்தினாலும் இடையூறுகளை எதிர்கொண்டு வருகின்றது.
தொழில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு
தொழில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்பன ஒட்டுமொத்த பெருந் தோட்டத் துறையும் எதிர்கொண்டு வரும் ஒரு நிர்ணயகரமான பிரச்சினையாக இருந்து வருகின்றது. எவ்வாறிருப்பினும், மோசமான பராமரிப்பு காரணமாக அரசுக்குச் சொந்தமான தோட்டங்களில் இது ஒரு அழிவுகரமான ஒரு தாக்கத்தை எடுத்து வந்திருப்பது போல் தெரிகிறது. தேயிலை தோட்டங்கள் வர வர வேலை செய்வதற்கு பாதுகாப்பற்ற இடங்களாக மாறி வருகின்றன. தோட்டங்களில் பாம்புகள், சிறுத்தைகள் மற்றும் ஏனைய பூச்சிகள் என்பவற்றையும் உள்ளடக்கிய அபாயகரமான விலங்குகள் அவதானிக்கப்பட்டுள்ளன. அவை தொழிலாளர்கள் மீது கடும் பாதிப்பை எடுத்து வர முடியும். பாம்பு கடித்தவர்கள் மற்றும் சிறுத்தைகளால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நாங்கள் பார்க்க முடியும். இத்தாக்குதல்களின் பின்னர் அவர்கள் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக தோட்டத்தில் வேலை செய்வதை நிறுத்தி விடுகின்றார்கள். மே அல்லது ஜூன் மாதங்களின் போது தேன் பூச்சிகள் மற்றும் குளவிகள் என்பவற்றினால் தாக்கப்படுவது சாதாரணமாக இடம்பெறும் சம்பவங்களாகும். ஆனால், வேலையின் போது அத்தகைய தாக்குதல்களைத் தடுப்பதற்கு அவர்களிடம் எத்தகைய பாதுகாப்பு முறைகளும் இருந்து வரவில்லை. வேலை இடத்தில் விபத்துக்கள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் அல்லது வேலை நிலைமைகள் காரணமாக தொழிலாளர்கள் நோய்வாய்ப்படும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்றும், அதன் காரணமாக தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்ய முடியாத நிலையை அது ஏற்படுத்துகின்றது என்றும் அவர்கள் முறைப்பாடு செய்துள்ளார்கள். குறிப்பாக, குளவி தாக்குதல்கள் தோட்டங்களில் அடிக்கடி இடம்பெற்று வருவதுடன், 2020ஆம் ஆண்டின் போது இத்தகைய தாக்குதல்கள் காரணமாக கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஐந்து தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளார்கள். தோட்டங்களில் நிலவிவரும் சுகாதாரப் பராமரிப்பு முறை பலவீனமான ஒரு நிலையில் இருந்து வருவதனை இது ஓரளவுக்கு எடுத்துக் காட்டுகின்றது. இத்தகைய தாக்குதல்களுக்கு இரையாகுபவர்கள் தமது வேலைகளை இழப்பது மட்டுமன்றி, தொழில் பாதுகாப்பு இல்லாதவர்களாகவும் இருந்து வருகின்றார்கள் (பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள், JEDB மற்றும் SLSPC போன்ற) பெருந்தோட்ட கம்பனிகள் தற்போதைய ஊழியர் படையை அதே விதத்தில் தக்க வைத்துக்கொள்ளத் தவறியுள்ளன என ஒருவர் வாதிட முடியும். இது தொழிலாளர்கள் தோட்டத்தை விட்டு வெளியேறும் நிலையை மேலும் அதிகரிப்பதுடன், இறுதியில், ஒட்டுமொத்த பெருந்தோட்ட முறையும் சீர்குலைவதற்கு வலிகோலுகின்றது. மறுபுறத்தில், அது ஏற்கனவே வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்திற்கு பிரமாண்டமான ஒரு இழப்பினை எடுத்து வர முடியும்.
சுகாதார சேவைகளின் விநியோகம்
தோட்ட முகாமைத்துவத்தினால் நிர்வகிக்கப்பட்டு வரும் சுகாதார சேவைகள் மிகவும் மோசமான நிலைமையில் இருந்து வருவதுடன், சுகாதாரத் துறையில் மருத்துவ உதவியாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் போக்கே நிலவி வருகின்றது. ஒரு சில தோட்டங்கள் அவசரகால மருத்துவ உதவி (Emergency Medical Assistance) மற்றும் அம்புலன்ஸ் வசதி என்பவற்றை கொண்டிருக்கவில்லை. பாம்புகள், குளவிகள் மற்றும் மூர்க்கமான விலங்குகள் போன்றவற்றினால் தொழிலாளர்கள் தாக்கப்படும் போது அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்குச் செல்வதற்கு அவர்கள் முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்த வேண்டியிருக்கின்றது. அத்தகைய தாக்குதல்களின் போது சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் ஒரு வார காலத்திற்கு மேல் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து வந்தாலும் கூட, மூன்று நாட்கள் மட்டுமே மருத்துவ லீவு வழங்கப்படுகின்றது. கொவிட்-19 பெருந்தொற்று சுகாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. பெருந்தோட்ட சுகாதார துறை அரச சுகாதார துறையுடன் பெரும்போக்குப்படுத்தப்பட்டிருக்கவில்லை அல்லது அது தேசிய சுகாதார கட்டமைப்புக்கு வெளியில் இருந்து வருகின்றது. கொவிட்-19 சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளும் விடயம், விழிப்புணர்வு கல்வி, சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் கொவிட் தொடர்பான வேறு பல விவகாரங்கள் என்பவற்றை அணுகும் விடயத்தில் பெருந்தோட்ட மக்கள் மிகவும் மோசமான ஒரு பலவீன நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். தோட்ட முகாமைத்துவம் அல்லது அரச சுகாதார திணைக்களங்கள் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அவர்களுக்கு கல்வியூட்டுவதற்கென எத்தகைய பயனுள்ள வழிமுறைகளையும் மேற்கொண்டிருக்கவில்லை. மிக முக்கியமாக பெருந்தொற்று காலப் பிரிவின் போது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் (PHI) மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) போன்றவர்களின் பிரசன்னம் தோட்டங்களில் மிக அரிதாகவே காணப்படுகின்றது. எனினும், இத்தோட்டங்கள் அரசாங்க நிறுவனங்களாலேயே முகாமைத்துவம் செய்யப்பட்டு வருகின்றன. தற்பொழுது நாளாந்த அடிப்படையில் பெருந்தோட்ட பிரதேசங்களில் கணிசமான எண்ணிக்கையிலான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதுடன், மரணங்களும் இடம்பெற்று வருகின்றன. விழிப்புணர்வின்மை, மோசமான சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் கண்காணிப்பு என்பனவற்றின் காரணமாக நோய் பரவல் உயர் மட்டத்தில் நிலவி வருகின்றது. மிக முக்கியமாக பெருந்தோட்டங்களில் நோய் காவி வைரஸ் மிக வேகமாக பரவி வருவதற்கு வீடமைப்பு மற்றும் சமூக கட்டமைப்பு என்பன முதன்மையான காரணங்களாக இருந்து வருகின்றன. தமக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது என்ற விடயத்தை அறியாதிருந்த நிலையில் வீட்டில் தங்கியிருந்த நபர்கள் மரணமடைந்திருக்கும் சம்பவங்களும் உள்ளன. இறுதியில் பீ.சி.ஆர். பரிசோதனைகளின் போது மட்டுமே அவர்களை தொற்று பாதித்திருந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சமூக நலன்புரிச் சேவைகளின் நிலை
சமூக நலன்புரிச் சேவைகளின் விநியோகத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிரமான வீழ்ச்சி இச்சமூகத்தை மிக மோசமாகப் பாதித்து வரும் மற்றொரு பிரச்சினையாகும். அனைத்து நலன்புரிச் சேவைகளின் விநியோகங்களையும் முகாமைத்துவம் நிறுத்தியுள்ளது. தாம் நட்டத்தில் இயங்கி வருவதாகவும், அதன் காரணமாக நலன்புரிச் சேவைகளை தொடர்ந்து மேற்கொள்ள முடியாதிருப்பதாகவும் கூறி கம்பனிகள் இதனை நியாயப்படுத்துவதற்கு முயல்கின்றன. புதிய வீடமைப்புத் திட்டங்களும் கூட இந்தத் தோட்டங்களை போதியளவில் சென்றடைந்திருக்கவில்லை. கலாபொக்க தோட்டத்தின் நடுப் பிரிவு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) ஒரு அனர்த்த வலயமாக பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதுவரையில் அம்மக்களுக்கு பாதுகாப்பான இடங்களோ, காணிகளோ அல்லது புதிய வீடுகளோ வழங்கப்படவில்லை. பெருந்தோட்ட வீடமைப்பு அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் (PHDT) இத்தோட்டங்கள் அரசாங்க கண்காணிப்பின் கீழ் இருந்து வரும் காரணத்தினால் அவற்றில் எத்தகைய அபிவிருத்தித் திட்டங்களையும் மேற்கொள்வதில்லை. பொதுச் சுகாதாரம், கண்ணியமான வீடமைப்பு, சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் மற்றும் ஏனைய சமூக வசதிகள் என்பன இந்தத் தோட்டங்களில் மிக மோசமான நிலையிலேயே காணப்படுகின்றன. சிறுவர் அபிவிருத்தி நிலையம் (Child Development Centre) மிக மோசமான விதத்தில் அசுத்தமானதாகவும், அருவருக்கத்தக்கதாகவும் இருந்து வருகின்றது. எனவே, நோய்கள் தோன்றக்கூடிய அச்சம் மற்றும் பாதுகாப்பின்மை என்பன காரணமாக தொழிலாளர்கள் தமது பிள்ளைகளை அத்தகைய இடங்களுக்கு அனுப்பிவைக்க விரும்புவதில்லை. பெருந்தொற்று பரவலுடன் இணைந்த விதத்தில் இந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. தொழிலாளர்கள் மற்றும் தோட்டங்களில் வசித்து வரும் சமூகத்தினர் ஆகியோரின் நலன்புரிச் சேவைகளை விருத்தி செய்யும் விடயத்தில் முகாமைத்துவம் அறவே அக்கறை கொண்டிருக்கவில்லை. தற்போது இருக்கும் முறைமைகள், வளங்கள் மற்றும் நடைமுறைகள் என்பவற்றின் அடிப்படையில் அவர்கள் வெறுமனே இத்தோட்டங்களைப் பராமரித்து வருகின்றார்கள். ஆனால், அதே வேளையில், அவர்களுக்குரிய அனைத்துச் சலுகைகளையும் அனுபவித்து வருகின்றார்கள். தொழிலாளர்களுக்கான நலன்புரிச் சேவைகள் சிறந்த விதத்தில் பராமரிக்கப்பட்டு, விருத்தி செய்யப்பட்டால் அவர்கள் சுயவிருப்பிலான தலையீடுகளுக்கூடாக தமது சக்தியைப் பயன்படுத்தி, இந்தத் தோட்டங்களை சரியாக பராமரிப்பதற்கு பங்களிப்புச் செய்வார்கள் என்பதனை புரிந்து கொள்வது மிகவும் நிர்ணயகரமானதாகும். தொழிலாளர்களுக்கான நலன்புரிச் சேவைகள் உற்பத்தித் திறனை விருத்தி செய்யும் விடயத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றது என வாதிடப்படுகின்றது. சில சந்தர்ப்பங்களில் நேரடியான ஒரு தாக்கம் இல்லாதிருக்க முடியும். ஆனால், அது தொடர்ச்சியாக வேலைக்கு வருதல், தோட்ட அபிவிருத்திக்கு சுய விருப்பிலான பங்களிப்புக்கள், இலக்குகளை சாதித்துக் கொள்ளல், தொழிலாளர்களை தோட்டத்துக்குள்ளே தக்க வைத்துக் கொள்ளல் என்பவற்றையும் உள்ளடக்கிய விதத்தில் உற்பத்தித் திறன் மீது அது ஒரு மறைமுகமான தாக்கத்தை எடுத்து வர முடியும்.
மேலும், தோட்டத் தொழிலாளர் அல்லாதவர்கள் அரசாங்க தோட்டங்களில் வசித்து வரும் மொத்த குடித்தொகையினரில் பெரும்பான்மையினராக இருந்து வருகின்றார்கள். வேறு பயிர்களை சாகுபடி செய்வோருக்கான திட்டம், வீடமைப்பு மற்றும் பொதுச் சுகாதார வசதிகள் போன்ற சமூக நலன்புரித் திட்டங்களை பொறுத்தவரையில், தோட்ட முகாமைத்துவம் அப்பிரிவினரை புறக்கணித்து வருகின்றது. இது மறுபுறத்தில், தோட்ட இளைஞர்கள் அருகில் இருக்கும் நகரங்களுக்கு துரிதமாக குடிபெயர்ந்து வரும் நிலைமையை தோற்றுவித்துள்ளது. அவர்கள் முதன்மையாக கட்டுமான வேலைகள், ஹோட்டல்கள், கடைகள், ஆடைத் தொழிற்சாலைகள், ஏனைய முறைசாராத மற்றும் ஒழுங்கமைக்கப்படாத துறைகள் என்பவற்றில் தொழில் செய்து வருகின்றார்கள். எனினும், பெருந்தொற்று அத்தகைய தோட்டத் தொழிலாளர்கள் அல்லாத பிரிவினரின் அனைத்து வெளி வருமான மார்க்கங்களையும் அடைத்திருக்கின்றது. மேலும், ரூபா 5000 கொடுப்பனவிலும் அவர்களுக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. பெருந்தோட்ட முகாமைத்துவத்தினால் அவர்கள் பராமரிக்கப்பட வேண்டுமென்ற அடிப்படையில் இது இடம்பெறுகின்றது. தோட்டத் துறையில் ஒரு சிலர் மட்டுமே இந்தக் கொடுப்பனவை பெற்றுக் கொள்வதுடன், இந்த நிவாரண நிகழ்ச்சித்திட்டத்தில் பெருந்தோட்ட சமூகத்தினரை இலக்கு வைக்கும் விடயத்தில் அரச அதிகாரிகளும் ஆர்வம் காட்டாதவர்களாகவே இருந்து வருகின்றார்கள். இப்பிரிவினர் தோட்டங்களில் வாழ்ந்து வரும் காரணத்தினால் அவர்களை கவனித்துக் கொள்வது தோட்ட முகாமைத்துவத்தின் பொறுப்பாக இருந்து வருகின்றது என அரசாங்க அதிகாரிகளுக்கு மத்தியில் வலுவான ஒரு எண்ணம் காணப்படும் போக்கும் உள்ளது. அதேபோல பெருந்தோட்டங்களில் வாழ்ந்து வரும் மக்கள், ஏனைய சமூகங்களுடன் ஒப்பிட்டு நோக்கும் பொழுது நிலையான மாத வருமானமொன்றை கொண்டுள்ளார்கள் என்ற விதத்திலும் அரசாங்க அதிகாரிகள் சிந்தித்து வருவது போல் தெரிகிறது. அது தர்க்கத்துக்கு புறம்பான ஒரு சிந்தனையாக இருந்து வருவதுடன், இந்த மக்களின் நாளாந்த வாழ்க்கையையும், அதனோடு சம்பந்தப்பட்ட துன்பங்களையும் உன்னிப்பாக பகுப்பாய்வு செய்வதன் மூலம் இந்த வாதத்தை பொய்ப்பிக்க முடியும். தற்பொழுது பெருந்தோட்ட குடித்தொகையினரின் சுமார் 70 சதவீதத்தினர் தொழிலாளர்கள் அல்லாத வகையைச் சேர்ந்தவர்களாக இருந்து வருவதுடன், அவர்களும் இந்நாட்டின் சமமான பிரஜைகள் ஆவார்கள். சட்ட ரீதியில் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கும் சேவைகள், பொருட்கள் மற்றும் அரசாங்க முகவரகங்களிலிருந்து வழங்கப்படும் பொருள்சார் ஆதாயங்கள் என்பவற்றை பெற்றுக் கொள்வதற்கான உரிமையை அவர்களும் கொண்டுள்ளார்கள். பெருந்தோட்ட முகாமைத்துவம் பெருந்தொற்று காலப் பிரிவின் போது நிரந்தர தொழிலாளர்களுக்கும் கூட உலர் உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி என்பவற்றையும் உள்ளடக்கிய விதத்தில் எத்தகைய உதவிகளையும் வழங்கியிருக்கவில்லை. அரசாங்க முகவரகங்களின் கொவிட்-19 நிவாரணங்களை வழங்கும் விடயத்தில் இந்த மக்கள் பிரிவினர் புறமொதுக்கப்பட்டிருக்கும் நிலையை கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய பிரதேசங்களில் மிகவும் தெளிவாகப் பார்க்க முடிகின்றது. ஏனெனில், கள மட்டத்திலான அதிகாரிகள் முதன்மையாக இனத்துவ பெரும்பான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருந்து வருவதனால் தமது முன்னுரிமைப் பட்டியலில் பெருந்தோட்டத் துறையில் வசித்து வரும் பெருமளவுக்குத் தேவைகளைக் கொண்டிருக்கும் மக்களைச் சேர்த்துக் கொள்ளும் போக்கு மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. நுவரெலியாவை பொறுத்தவரையில் முன்னணி அரச உத்தியோகத்தர்களில் கணிசமான எண்ணிக்கையினர் பெருந்தோட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்து வரும் காரணத்தினால் வறிய மக்கள் ஓரளவுக்கு உதவிகளை பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நிலைமை காணப்படுகின்றது.
எப்படியிருந்தபோதிலும், உயர் அதிகாரிகளை அணுகும் விடயத்தில் இவர்கள் ஓரளவுக்கு வரையறைகளைக் கொண்டுள்ளார்கள். தேவைகளைக் கொண்டிருக்கும் மக்கள் அரசாங்க நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு ஆவணச் சான்றுகளை சமர்ப்பிப்பது அவசியமாகும். அதற்கு மாறான விதத்தில், தோட்டத் தொழிலாளர்கள் அல்லாதவர்கள் தோட்டங்களில் வேலை செய்யாதிருக்கும் காரணத்தினால் அவர்களுக்கு அத்தகைய கடிதங்களை வழங்கும் விடயத்தில் தோட்ட முகாமைத்துவம் பெருமளவுக்கு தயக்கம் காட்டி வருகின்றது. இது நீண்ட தாமதங்களை ஏற்படுத்துவதுடன், சில சந்தர்ப்பங்களில் உள்ளூர் மட்டங்களில் வழங்கப்படும் சேவைகளை அவர்கள் பெற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலைமையையும் ஏற்படுத்துகின்றது. குறிப்பாக, நுவரெலியா மாவட்டத்தில் அரசாங்க நிவாரண சேவைகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு மக்கள் தமது அரசியல் மற்றும் தொழிற்சங்க தொடர்புகளை அல்லது அனுசரணை உறவுமுறையை பயன்படுத்தும் ஒரு போக்கு காணப்படுகின்றது. இரத்தினபுரி, கேகாலை, கண்டி மற்றும் தென் மாகாணம் என்பவற்றை பொறுத்தவரையில் அவர்களது அரசியல் பிரதிநிதித்துவம் பலவீனமாக இருந்து வரும் காரணத்தினால் இத்தகைய ஒரு நிலைமை சாத்தியப்படவில்லை. பெருந்தொற்று பரவல் பின்னணியில், இது ஒரு அபாயகரமான பிரச்சினையாக இருந்து வருவதுடன், இச்சமூகத்தின் புதிர் தன்மையுடன் கூடிய இயல்பை பிரதிபலிக்கின்றது.
அவர்கள் பெருந்தோட்டங்களில் வாழ்ந்து வந்தாலும் கூட, சட்டங்களின் பிரகாரம் இலங்கையின் சமத்துவமான பிரஜைகளாக இருந்து வருகின்றார்கள். ஏனைய பிரஜைகளை போலவே அவர்கள் அரசியல் (வாக்களிப்பு) உரிமைகளை அனுபவித்து வருகின்றார்கள். ஆனால், அரசாங்க நிவாரணங்கள் மற்றும் சேவைகள் என்பவற்றின் விநியோகத்தில் அல்லது பெருந்தொற்று நிவாரணங்களையும் உள்ளடக்கிய பொருட்களின் விநியோகத்தில் அவர்கள் திட்டமிட்ட விதத்தில் புறமொதுக்கப்படுகின்றார்கள் அல்லது தோட்டங்களில் வசித்து வரும் காரணத்தின் அடிப்படையில் அத்தகைய பட்டியல்களிலிருந்து அவர்களுடைய பெயர்கள் நீக்கப்படுகின்றன. தோட்டங்கள் பெருந்தோட்ட கம்பனிகளின் கண்காணிப்பின் கீழ் இருந்து வருகின்றன என்ற அனுமானத்தில் அத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இது அரசாங்க நிறுவனங்களின் தரப்பில் இடம்பெற்று வரும் நிறுவன ரீதியான மற்றும் கட்டமைப்பு ரீதியான பாரபட்சத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. சேவைகள் மற்றும் பொருட்கள் என்பவற்றின் விநியோகத்தில் அரசாங்க உத்தியோகத்தர்கள் தோட்டங்கள் மற்றும் கிராமங்கள் என்பவற்றுக்கிடையில் ஒரு தெளிவான பிரிவுக்கோட்டை போடும் ஒரு போக்கு காணப்படுகின்றது. பெருந்தோட்ட பிரதேசங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் ஒட்டுமொத்தமாக அரசாங்கம் ஆகிய தரப்புக்களை பொறுத்தவரையில், இந்தப் போக்கு குறித்து உயரளவில் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருந்து வருகின்றது. மிக முக்கியமாக இப்போக்கு இவ்விதம் தொடர்ந்து இடம்பெற்று வந்தால் அது உயரளவிலான மன விரக்தி, மிகக் குறைந்த மட்டத்திலான அரசியல் பங்கேற்பு மற்றும் அநாவசியமான முரண்பாடுகள் என்பவற்றுக்கு வழிகோள முடியும். அனைத்துக்கும் மேலாக, அரசுக்குச் சொந்தமான தோட்டங்களில் இருந்து வரும் பெருந்தோட்ட மக்களும், ஒட்டுமொத்த பெருந்தோட்டத் துறையும் எதிர்கொண்டு வரும் மேலே குறிப்பிடப்பட்ட பிரச்சினைகளைக் கவனத்தில் எடுப்பதற்கு நீண்டகால இயல்பிலான தீர்வுகள் மற்றும் சீர்த்திருத்தங்கள் என்பன அவசியமாக இருந்து வருகின்றன என்ற விடயத்தை மேலே உள்ள கலந்துரையாடல் ஊர்ஜிதம் செய்கின்றது.
ஏ.எஸ். சந்திரபோஸ், சமூக கற்கைகள் துறை பேராசிரியர், இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் கலாநிதி ஆர். ரமேஷ், சிரேஷ்ட விரிவுரையாளர் அரசறிவியல் துறை, பேராதனை பல்கலைக்கழகம்